Tamil Christian Website

Tamil Christian Website

வாலிபர் பகுதி: அஷோர்

 

Posted on: 15/09/2016

இப்படியிருக்க ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான், பழையவைகள் ஒழிந்து போயின எல்லாம் புதிதாயின – 2கொரி 5:17

கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் உண்டாவதாக!

கர்த்தருக்குள் எனக்கு பிரியமான சகோதர சகோதரிகளே!

இப்போது தான் இந்த வருடம் தொடங்கினதை போல தெரிந்தது ஆனால் அதற்குள்ளாக ஒன்பதாவது மாதத்தை காண தேவன் கிருபைச் செய்தார் நாட்கள் மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் இரட்சிக்கப்பட்டு பல வருடங்கள் அல்லது பல நாட்கள் ஆகின்றது. ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் எப்படிபட்டவர்களாகயிருக்கிறோம் வாரத்தில் சில நாட்கள் மட்டுமே தேவனுக்கு பிடித்த விதமாக வாழ்ந்து விட்டு பல நாட்கள் உலகத்தில் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தேவன் நம்மிடத்தில் காணப்படும் சில நல்ல காரியங்களையும் சில நல்ல செய்கைகள் இவற்றைக் கொண்டு வாழ்கின்ற வாழ்க்கையை விரும்பவில்லை.

மாறாக நம்முடைய தேவன் நம்மை முற்றிலும் மாற்ற விரும்புகிறார். வேதம் இப்படியாக சொல்கிறது தம்முடைய குமாரன் அனேக சகோதருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு தேவன் எவர்களை முன்னறிந்தாரா அவர்களைத் தமது தேவனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். ரோமர் 8:29, நம்மில் சிலர் நினைக்க கூடும் நான் யாரிடமும் சண்டை போடவில்லை யாருக்கும் கெடுதல் செய்வதில்லை, பெரியவர்களை மதித்து நடக்கின்றோம். நம் சக்திக்கு மீறி மற்றவர்களுக்கு உதவிச் செய்கிறோம் என்றெல்லாம் நினைக்க கூடும்.

இதையெல்லாம் தேவன் கண்டு என்னை பாராட்டி பரலோகத்தில் சேர்த்துக் கொள்வார் என்றெல்லாம் நினைப்பதுண்டு ஆனால் வேதம் சொல்லுகிறது, தேவன் மனிதர்கள் இரட்சிக்கப்படுவதற்கு என்று தம்முடைய ஒரே பேறான குமாரனை அனுப்பி அவருடைய இரத்தத்தினாலே மனுக்குலத்திற்கு இரட்சிப்பு என்று நியமித்திருக்க, மாறாக அவர் நம்முடைய நடக்கைகளும் எந்த செய்கைகளும் நம்மை இரட்சிக்காது. பரலோகத்திற்கும் நம்மை கொண்டுச் செல்லாது, இப்படியிருக்க ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் அவன் புதுசிருஷ்டியாயிருக்கிறான் பழையவைகள் ஒழிந்து போயின எல்லாம் புதிதாயின என்று வேதம் என்று சொல்லுகிறது.

நாம் இப்படி வைத்துக் கொள்வோம் ஒரு மனிதன் எல்லாருக்கும் அனேக உதவிகளைச் செய்கிறான் மற்றவர்களுடைய தேவைகளைச் சந்திக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அவன் ஒரே ஒரு பாவத்தை மட்டும்தான் செய்தான். அப்படியிருக்க அந்த ஒரே ஒரு பாவத்தின் நிமித்தம் அவன் பரிசுத்த தேவனை தரிசிக்க முடியாது ஏனென்றால் நம் தேவன் பாவத்தை பார்க்காத சுத்த கண்ணராயிருக்கிறார் என்று வேதத்தில் திட்டமும் தெளிவுமாக சொல்லுகிறது பரிசுத்தமில்லாமல் ஒருவரும் தேவனை தரிசிக்க முடியாது அப்படியென்றால் நமக்கு தோன்றும் நாம் நிச்சயமாக அவரை தரிசிக்க முடியாது.

இதற்காக தான் தேவன் ஒரு அருமையான வழியை வைத்திருக்கிறார் அது எந்த வழி என்றால் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று அவர்தான் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. இயேசுவின் இரத்தத்தினால் நமக்கு பாவமன்னிப்பு அவருடைய இரத்தத்தினால் நித்திய ஜீவன் நமக்கு இலவசமாக அருளப்பட்டிருக்கிறது அதை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் ஒவ்வொரு மனிதனுடைய சுய விருப்பத்திற்கு அருளப்பட்டிருக்கிறது.

இதை ஏற்றுக் கொண்டால் நித்திய ஜீவன் ஏற்றுக் கொள்ளாவிட்டால் நித்திய அழிவு. இதற்கு மேலே தேவனிடத்தில் சேர்வதற்கு வேறே எந்த வழியும் இல்லை கர்த்தர் உங்களை நேசிப்பதினால் இந்த வார்த்தையைக் கொண்டு வேசிக் கொண்டிருக்கிறார். இதை படித்துக் கொண்டிருக்கிற சகோதர சகோதரிகளே இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வந்த நோக்கம் கிறிஸ்தவர்களுக்காக மட்டுமே என்று எண்ணிவிடாதிருங்கள். மாறாக இந்த உலகத்தில் ஒருவரும் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதே நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாஞ்சையாக இருக்கிறது.

எனவே சகோதர சகோதரிகளே தேவன் அளிக்கும் பெரிதான கிருபையைப் பெற்றுக் கொண்டு அவருடைய நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளுவோம். பாவத்தின் சம்பளம் மரணம் தேவனுடைய கிருபை வரமோ என்றென்றும் அழியாத நித்திய ஜீவன் என்பதை மறந்து விட வேண்டாம்.

தேவன் தாமே இந்த வார்த்தையின் மூலம் நம்மோடு இடைப்படுவாராக. ஆமென்.

 


Posted on : 3/08/2016

மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் மத்தேயு 7:12

கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் உண்டாவதாக

கத்தருக்குள் எனக்கு மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே நாம் அனேக நேரங்களில் பிறரிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வாழ்கின்றவர்களாகவே காணப்படுகின்றோம்.

நாம் வாழ்கின்ற இந்த காலகட்டத்தில் நம்மைப் பற்றி மட்டுமே அனேக நேரம் சிந்திப்பது உண்டு நமக்கு ஏதேனும் உடல் நிலை சரியில்லையென்றால் நம் குடும்பத்தினரோ அல்லது உறவினரோ நம்மை விசாரிக்கவும் கவனிக்கவும் வேண்டுமென்று விரும்புகிறோம். அதேபோல் ஒரு திருமணத்திற்கோ அல்லது விசேஷத்திற்கோ செல்லும் போது மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டுமென்று நினைக்கிறோம். நம்மில் சிலரை பார்த்தோமானால் இப்படியாக எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பதுண்டு.

நம் சகோதர சகோதரிகளோ உறவினர்களோ நண்பர்களோ யாரும் என்னை விசாரிப்பதில்லை. ஒரு போன் கூட பண்ணிக் கேட்பதில்லை என்று நினைப்பார்கள். அவர்களை ஏன் முதலில் நாம் போனில் தொடர்பு கொண்டு விசாரிக்க கூடாது. பிறரிடமிருந்து இவற்றையெல்லாம் எதிர்பார்க்கும் நாம் ஏன் இதை முதலில் நாம் செய்ய முயற்சிப்பதில்லை யோசிப்போம்.

குறிப்பாக கணவனிடம் மனைவி எதிர்பார்க்கும் காரியம் ஏராளமுண்டு எப்போதும் தன்னை பற்றியே பேச வேண்டும் தன்மேல் அதிக அன்பு வைராக்கியமுள்ளவர்களாய் காணப்பட வேண்டும் தன்னுடைய உறவினர்களிடம் அதிக அன்பு வைக்க வேண்டும் என்றெல்லாம் நினைப்பார்கள். இதனிமித்தமே வாக்குவாதம் அதிகரித்து சண்டையில் போய் முடிகிறது.

மாறாக மனைவி கணவனிடம் எதையெல்லாம் எதிர்பார்க்கிறாளோ அவை அனைத்தையும் மனைவி கணவனுக்கு செய்ய முற்படும் போது அந்த குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இப்படியாக மனைவி கணவனுக்குச் செய்யும் போது கணவன் மனைவியின் மேல் அன்பு வைக்காமல் இருக்க முடியுமா...... யோசிப்போம்?

எனவே எனக்கு பிரியமானவர்களே தாய் தந்தை சகோதர சகோதரிகள் கணவன் மனைவி உறவினர்கள் நண்பர்களே, எதை மற்றவர்கள் உங்களுக்கு செய்ய விரும்புகிறீர்களோ அதை முதலில் அவர்களுக்கு செய்ய முந்திக் கொள்ளுங்கள். அப்படிச் செய்வதின் மூலம் நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி அளவில்லாமல் பெருகத் துவங்கும்.

 மேலே சொல்லப்பட்ட எல்லா காரியத்திற்கும் அடிப்படையான காரியம் என்னவென்றால் அன்பு என்று வேதம் நமக்கு சொல்லுகிறது. ஏனென்றால் அன்பே சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் செய்ய ஊக்குவிக்கும், ஆகவே மனுஷன் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ அவைகள் எல்லாவற்றையும் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும் என்கிற கர்த்தருடைய வேத வாக்குக்குக் கீழ்ப்படிந்து வாழ்வோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

 


Posted on : 08/07/2016

படுக்கையின் மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார் அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப் போடுவீர் – சங் 41:3

பலவருடங்களாக நோயினாலும் பலவிதமான சம்பவங்களினாலும் நோய்க் கொண்டு படுத்தப்படுக்கையாய் கிடக்கிற மனுஷனைப் பார்த்து தேவன் சொன்ன ஒரு காரியம் நான் உன் வியாதியை குணமாக்குவேன் அதுமட்டுமல்லாமல் நான் உனக்கு இந்த மரணப்படுக்கையை மாற்றி ஜீவனுள்ள ஒரு படுக்கையை தருவேன்

இப்படிப்பட்ட வாக்குத்தத்திற்கு நாம் சொந்தமாக வேண்டுமானால் நாம் செய்ய வேண்டிய காரியங்களை எசேக்கியா ராஜாவின் சரித்திரத்தைக் கொண்டு பின்வருமாறு பார்க்கலாம்.

எசேக்கியா ராஜா வியாதிப்பட்டு மரணத்திற்கு ஏதுவாயிருந்தான் அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து அவனை நோக்கி நீர் உமது வீட்டுக் காரியத்தை ஒழுங்குப்படுத்தும் நீர் பிழைக்கமாட்டீர் மரித்துப் போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான் [ ஏசாயா 38:1 ]

இத்தகைய மரண செய்தியைக் கேட்ட எசேக்கியா ராஜா என்ன செய்தார்

1.ஜெபம் செய்தார் [ ஏசாயா 38:2 ]

தன்னுடைய நோயை குணமாக்குவதற்காக அவர் மருத்துவர்களையும் பறிகாரர்களையும் நோக்கி ஓடாமல் தேவனுக்கு முன்பாக தன்னை தாழ்த்தி விண்ணப்பம் செய்யத் தொடங்கினார். ஏனென்றால் தேவன் தன்னுடைய பிதாக்கன்மார்க்களுக்கு எப்படிப்பட்ட தேவனாய் இருந்தார் என்பதை அவர் நன்றாக அறிந்திருந்தார்.

எப்படியென்றால் வேதம் சொல்லுகிறது, அவர் உன் பரிகாரியாகிய கர்த்தர் என்று யாத்திராகமம் 15:26 ல் நம்முடைய நோய்களுக்காக நாம் செல்ல வேண்டிய இடம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்பதாகும்

இன்று அனேகர் தங்களுடைய நோய்களை குணமாக்கும்படியாக பிரபலமான மருத்துவமனைகளையும் மருந்துகளையும் தேடி, ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய வாழ்க்கையை நாம் ஒவ்வொருவரிடமும் இன்றைய நாட்களில் பார்க்கிறோம்.

அதுமட்டுமல்லாமல் இதன் நிமித்தம் இவர்களுக்கு வரும் இழப்பையும் பார்க்கிறோம். எப்படியென்றால் சில நேரங்களில் இவர்களுக்குக் கொடுக்கப்படும் சிகிச்சை பலன் அளிக்காமல் மரித்து போகிறார்கள் சிலர் தங்களுடைய அவயங்களை இழந்து போகிறார்கள், சிலர் தங்களுடைய பணத்தையெல்லாம் இழந்து நடுத்தெருவிற்கு வந்து விடுகின்றனர். ஆனால் இந்த ராஜாவைப் பாருங்கள் தனக்கு வந்திருக்கிற நோயை தேவனால் மாத்திரமே குணமாக்க முடியும் என்பதை அறிந்து அவரிடமே செல்கிறார்.

எப்படியென்றால் தன்னுடைய ஜெவ வாழ்க்கையின் மூலமாக என்பதை மறந்து விடாதீர்கள். ஜெபம் இல்லாவிட்டால் நிச்சயமாக குணம் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நாம் தேவனிடம் செல்ல வேண்டுமானால் நம் ஒவ்வொருவரிடமும் ஜெபம் என்கிற வாகனம் இருக்க வேண்டும். பலவிதமான வாகனங்களைப் பற்றி அறிந்து வைத்திருக்கிற உங்களுக்கு ஜெபம் என்கிற வாகனத்தைப் பற்றி தெரியுமா?

குறிப்பு: ஜெபம் என்பது தேவன் பிசாசை வீழ்த்துவதற்கு நமக்குக் கொடுத்திருக்கும் மிகவும் முக்கியமான ஆயுதம் ஆகும்.

2.உண்மையும் உத்தமுமாய் நடக்க வேண்டும் [ ஏசாயா 38:3 ]

இன்று சிலருடைய வாழ்க்கையைப் பார்க்கும் போது அவர்கள் பல மணி நேரம் ஜெபம் பண்ணுவார்கள் பல நாட்கள் உபவாசம் இருப்பார்கள் ஆனால் அவர்களுடைய வாழ்க்கையிலும் ஊழியத்திலும் எந்தவித அற்புதங்களும் நடப்பதில்லை இதற்கு காரணம் என்னவென்றால் அவர்களிடம் தேவன் எதிர்ப்பார்க்கிற உண்மையும் உத்தமும் குறைவாய் இருப்பதே காரணம் ஆகும்.ஏனென்றால் பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் தேவனை தரிசிக்க முடியாது என்று எபிரெயர் 12:14 ல் வாசிக்கிறோம்.

இத்தகைய காரியத்தை அதாவது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய ஜனங்களை குணமாக்குவதற்கு அவர் சொன்ன நிபந்தனையைப் பாருங்கள் நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால் நான் எகிப்தியிருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்னேன், நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் [ யாத் 15:26 ]

இன்று அனேக நோய்களின் முக்கிய நோய்க்கிருமி என்னவென்றால் பாவமாகும் ஆகவே நாம் மனந்திரும்பி பாவத்தை விட்டு வெளியேறி நம்மை பரிசுத்தமாக வைத்துக் கொள்வோம். அப்பொழுது மாத்திரமே நம்முடைய ஜெபம் தேவனிடம் இலகுவாக செல்ல முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

3.கதறி அழுதார் [ ஏசாயா 38:3 ]

அழுது ஜெபித்தல் என்பது தேவனிடம் தன்னுடைய முழு இருதயத்தை திறந்து காண்பிப்பதாகும் ஏனென்றால் வேதம் சொல்லுகிறது,

முழு இருதயத்தோடு தேவனைத் தேடுவீர்களானால் அவரை தேடும் போது கண்டடைவீர்கள் என்பதாகும். இன்று அனேகர் தங்களுடைய வாயினால் மாத்திரம் விண்ணப்பம் செய்கிறார்கள் ஆனால் அவர்களுடைய இருதயமோ தேவனை விட்டு பல அடி தொலைவில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆகவேதான் இவர்களுடைய ஜெபத்திற்கு எந்தவிதமான பதிலும் சொர்க்கத்திலிருந்து வருவதில்லை என்று பார்க்கிறோம். ஆனால் தேவனுக்குப் பிரியமான காரியங்களைச் செய்து வந்த இந்த எசேக்கியா தன்னுடைய இருதயத்தை முழுமையாக தேவன் சஞ்சரிக்கும் படியாக கொடுத்தார்.

இத்தகைய தாகத்தையும் தம்மேல் எசேக்கியா கொண்ட பிரியத்தையும் பார்த்த தேவன் எசேக்கியாவின் வாழ்க்கையில் வந்திருந்த நோயை குணமாக்கி அவருடைய மரண படுக்கையை மாற்றி அவருக்கு ஒரு சந்தோஷப் படுக்கையை கொடுத்தார் என்பதை நாம் ஏசாயா தீர்க்கதரிசனப் புத்தகத்தை வாசிக்கும் போது அறிந்து கொள்ள முடிகிறது.

நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை எப்படியிருக்கிறது, எசேக்கியா ராஜாவின் வாழ்க்கையில் காணப்பட்ட ஜெபமும் உன்மையும் தாகமும் நம்மிடத்தில் காணப்படுகிறதா என்பதை தேவன் அறிய விரும்புகிறார்.

தேவன் தாமே ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்

 


Posted On : 10/05/2015

என் குமாரனாகிய சாலொமோனே நீ உன் பிதாவின் தேவனை அறிந்து அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடு சேவி .........1 நாளா 28:9

கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் உண்டாவதாக!

எனக்கு பிரியமான சகோதர சகோதரிகளே நாம் கர்த்தரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடு சேவிக்க வேண்டும். ஏதாகிலும் ஒரு ஆசிவாதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டும் தேவனை சேவிக்க கூடாது நாம் வேதத்தில் தேவனை உத்தமத்தோடும் உற்சாகத்தோடும் சேவித்தவர்களைப் பற்றிப் பார்போம்.

1.உத்தமமாய்க் கர்த்தரைச் சேவித்த யோசுவா, காலேப்

மோசேயின் காலத்திலே எகிப்திலிருந்து வெளியேறி வரும்போது கோத்திரத்திற்கு ஒருவராக 12 கோத்திரத்திலிருந்து 12 நபர்களை தெரிந்தெடுத்து மோசே அவர்களை கானான் தேசத்தைச் சுற்றிப்பார்த்து வரும்படியாக அனுப்பினார். பாருங்கள் அனுப்பிய 12 பேரில் 10 பேர் கானான் தேசத்தை நாம் சுதந்தரிக்க முடியாது அதில் உள்ளவர்களெல்லாம் பெரிய இராட்சதர்களாக இருக்கிறார்கள் ஆகவே அவர்களிடம் நாம் சண்டையிட்டு தேசத்தைச் சுதந்தரிக்க முடியாது என்றார்கள்.

ஆனால் காலேப்பும் யோசுவாவும் ஜனங்களிடம் விசுவாசத்தோடு நமக்கு கர்த்தர் கொடுத்த கானான் தேசத்தை நம்மால் சுதந்தரிக்க முடியும் என்று விசுவாசத்தோடு கூறினார்கள் அதினால் கர்த்தர் தம்மை ஜனங்கள் விசுவாசிக்காததினால் அந்நாளிலே கோபமூண்டவராகி தம்மை விசுவாசித்த யோசுவாவும் காலேப்பும் தவிர மற்றவர்கள் யாரும் அதில் நுழையவதில்லை என்று கூறினார். [ எண்ணாகமம் 32: 10-12 ]

2.உத்தமத்தில் உறுதியாக நின்ற யோபு

யோபு உத்தம இருதயத்தோடு கூட கர்த்தரை சேவித்திருந்தார், வேதம் என்ன சொல்லுகிறது, உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனை போல பூமியிலே ஒருவனும் இல்லை என்றார் – யோபு 1:8

அதை சாத்தான் அறிந்து கொண்டு தேவனிடம் சென்று நீர் அதிகமாக யோபுவை ஆசீர்வதித்திருக்கிறீர் அவனை சுற்றி வேலியடைத்து வைத்திருக்கிறீர் அவனுக்கு ஒரு குறைவும் இல்லை ஆகவே அவன் உத்தமமாய் உம்மைப் பின்பற்றுகிறான் என்று கூறினான். அப்போது கர்த்தர் யோபுவை சோதிக்கும்படியாக சாத்தானுக்கு அனுமதிக் கொடுத்தார் பின்பு யோபு தன் 10 பிள்ளைகளையும் ஆஸ்திகளையும் ஒரு நாளில் இழந்து விடுகிறார் அதுமட்டுமல்லாமல் தன்னுடைய சரீரம் முழுவதும் பருக்கள் அப்படிப்பட்ட சூழ்னிலையிலும் யோபு கர்த்தரை தேடுவதில் உள்ள உத்தம இருதயத்தை அவர் ஒருபோதும் இழந்து போகவில்லை [ யோபு 2:3 ] இப்படியாக யோபுவின் உத்தமம் சோதிக்கப்பட்டதை நம்மால் பார்க்க முடிகிறது.

3.தாவீது கர்த்தரை உற்சாகமாக சேவித்தார்

தாவீது கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்ற நபராக வாழ்ந்தார். உற்சாகமனதோடும் உத்தம இருதயத்தோடும் கர்த்தரை சேவித்தார் தாவீது ஆண்டவரை பாடல்கள் மூலம் துதித்துப்பாடுகிறவராய் இருந்தார் ஆகவே தாவீதை தம்முடைய இருதயத்திற்கு ஏற்றவனாய் கண்டேன் என்று கர்த்தரே சாட்சி கொடுத்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது [ அப் 13:22 ]

எப்படி அவர் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாய் மாறினார் பாருங்கள் தன்னை ராஜாவாக ஏற்படுத்தினவுடனே அவர் தேவனுடைய பெட்டியை தாவீதின் நகரத்திற்குக் கொண்டு வர வேண்டுமென்று விரும்பினார் எனவே அந்த பெட்டியை கொண்டு வருவதற்கான சகல ஆயத்தத்தையும் மேற்கொண்டார். அந்த பெட்டியை கொண்டுவரும் போது ஊசா துணிகரமாய் தேவனுடைய பெட்டியை தொட்ட போது தேவனுடைய கோபம் மூண்டது எனவே கர்த்தர் அவனை அடித்தார். அதின் நிமித்தம் அவன் மரித்து போனான். இதையெல்லாம் பார்த்த ஜனங்கள் பயந்தார்கள். தாவீதுக்கு மிகுந்த வேதனை உண்டானது ஆகவே தாவீது பெட்டியை நகரத்திற்கு கொண்டு வராதபடிக்கு அதை ஓபேத் ஏதோமின் வீட்டில் 3 மாதங்கள் வைத்தார். பின்னர் எல்லா குறைபாடுகளையும் உணர்ந்து கொண்ட தாவீது லேவியரைப் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளும்படி செய்து அவர்கள் மூலமாய் தேவனுடைய பெட்டியை இசைக்கருவிகள் மற்றும் துதியின் பாடல்கள் முழங்க மிகவும் உற்சாகத்தோடு அதை கொண்டு சென்றதை நம்மால் லேவியராகமம் 15:13ல் பார்க்க முடிகிறது.

எனக்கு பிரியமானவர்களே கர்த்தரை உத்தம இருதயத்தோடும் உற்சாகத்தோடும் நாம் கர்த்தரை சேவிக்க வேண்டும் மற்றவர்கள் நம்மை பார்த்து நகைப்பார்கள் கேலி செய்வார்கள் என்றெல்லாம் பார்க்க கூடாது. தேவனுடைய சமுகத்தில் எப்பொழுதும் உற்சாகத்தோடு காணப்படுவோம் அப்பொழுது கர்த்தரும் நம்முடைய விஷயத்தில் உற்சாகத்தோடு காணப்படுவார் என்பதில் சிறுதும் சந்தேகமேயில்லை.

தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

 


Posted on 05/04/2016

எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன் உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள் உங்களைப் பகைகிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள் – லூக்கா 6:27

கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் உண்டாவதாக!

எனக்கு மிகவும் அன்பான சகோதர சகோதரிகளே நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த கால கட்டத்தில் தன்னுடைய சீஷர்களிடத்தில் எப்படி தேவனுக்குப் பிரியமாய் இருப்பது என்பதை கற்றுக் கொடுக்கும் போது அதில் ஒரு பகுதி உங்கள் சத்துருக்களை சினேகியுங்கள் உங்களைப் பகைகிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள் என்று கற்பிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இது எப்படி முடியும் நமக்குள் ஒரு எண்ணம் தோன்றுகிறதல்லவா! ஆனால் தேவன் நம்மோடிருந்தால் நம்மை கொலைச் செய்ய நினைக்கிறவர்களைக் கூட மன்னிக்க முடியும் அதாவது அவர்களிடத்தில் அன்பு செலுத்த முடியும்.

எப்படியெனில் ஆதியாகமம் 37 ஆம் அதிகாரத்திலிருந்து தொடர்ந்து பார்த்தோமானால் யோசேப்பு என்கிற இளைஞன் தன் தகப்பனாகிய யாக்கோபுக்கு முதிர் வயதில் பிறந்ததின் நிமித்தம் அவன் மேல் அதிகபடியான அன்பை வைத்திருக்கிறார். அதனால் அவனுடைய சகோதரர்கள் அவனைக் கொலைச் செய்யும் படி வகைத் தேடினார்கள் அவர்கள் எதிர்பார்த்திருந்த நேரமும் அவர்களுக்கு கைக்கூடி வந்தது. ஆனால் அவனுடைய சகோதர்களில் ஒருவனாகிய ரூபன் என்பவன் யோசேப்பை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று எண்ணி அவனை ஒரு குழியில் போட்டு விடலாம் என்று சொன்னான். பின்பு அவனை குழியிலிருந்து எடுத்து எகிப்து தேசத்திற்கு விற்றுப் போட்டார்கள். அவர்கள் யோசேப்பை அடிமையாக வாங்கிச் சென்றார்கள்.

யோசேப்பு அந்த தேசத்தில் தேவனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்கிறவனாக காணப்பட்டான். ஓர் காலக்கட்டம் வந்தது தேவன் யோசேப்பை உயர்த்தினார். அவர் எகிப்து தேசத்திற்கு அதிபதியானான். சில காலம் சென்ற பின்பு எகிப்து தேசத்திலும் அதைச் சுற்றிலும் உள்ள தேசத்திற்கும் பஞ்சம் வந்தது அதில் யோசேப்பின் சகோதர்கள் வாழ்ந்த இடத்திலும் அந்த பஞ்சம் இருந்தது ஆகவே அவர்கள் எகிப்து தேசத்தை தேடி வந்தனர் எதற்காகவென்றால் தானியத்தை கொள்ளும்படியாக. என்ன நடந்தது, யோசேப்பு அவர்களை கண்டான் அவர்களைப் பார்ததும் இவர்கள் என்னை கொலைச் செய்ய திட்டம் போட்டவர்கள் ஆகவே இவர்களை தான் கொலை செய்ய வேண்டும் என்று எண்ணாமல் மாறாக அவர்கள் மேல் அன்பு வைத்தான். அதுமட்டுமல்லாமல் அவர்கள் செய்த தீமைக்குப் பதிலாக நன்மை செய்தான் என்று வேதத்தில் வாசிக்க முடிகிறது.

எனக்கு அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இந்த அதிகாரத்தைப் படிக்கும் போது என் கண்கள் கலங்கியது தேவன் அவர் கூட இருந்ததின் நிமித்தம் அவர் எப்படிப்பட்ட மனிதனையும் மன்னிக்க முடிகிறது என்பதை அறிகிறோம். நமக்குள் ஏன் இந்த குணாதிசயம் வர வில்லை அதாவது ஏன் மன்னிக்கிற சுபாவம் வரவில்லை நம்முடைய வாழ்க்கை யோசேப்பு போல காணப்படவில்லை. பாருங்கள் யோசேப்பு எவ்வளவு பெரிய காரியத்தை செய்திருக்கிறார். ஆனால் நாமோ ஒரு சிறிய தவறைக் கூட மன்னிக்க முடியவில்லையே, வேதம் சொல்லுகிறது

மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால் உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் – மத்தேயு 6:15, ஆகவே நாம் இனி வருகிற நாட்களில் இந்த மன்னிக்கிற சுபாவத்தை மற்றவர்களுக்கு காண்பித்து தேவ அன்பை இதன் மூலம் வெளிப்படுத்துவோம்.

கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.


Posted on : 06/02/2016

“இது இந்த வருஷமும் இருக்கட்டும் நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன், கனி கொடுத்தால் சரி கொடாவிட்டால் இனிமேல் இதை வெட்டிப் போடலாம்” என்று சொன்னான் – லூக்கா 13:8,9

கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் என்றென்றும் உண்டாவதாக!

எனக்குப் பிரியமான சகோதர, சகோதரிகளே மிகுந்த சந்தோஷத்தோடும் அதிக எதிர்பார்போடும் இந்த 2016 ஆம் வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ள உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துதலை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டிலும் சரி, இந்த ஆண்டின் தொடக்கத்திலும் சரி நாம் அநேகருக்கு பிரயோஜனமுள்ளவர்களாய் காணப்பட்டோம் உதாரணத்திற்கு தாய் தந்தைக்கு நல்ல மகனாய், மகளாய் அவர்கள் தேவைகளை நிறைவேற்றினோம், பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோர்களாயிருந்து அவர்கள் தேவைகளைச் சந்தித்தோம், சகோதர சகோதரிகளின் தேவைகளையும் பூர்த்திச் செய்தோம் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் யாவருக்கு தேவைகளை நிறைவேற்றினோம், இந்த உலகத்தில் வாழ்கின்ற நம்மை சுற்றிலும் உள்ளவர்களுடைய தேவைகளை சந்திக்கின்ற நாம் அதாவது பிறருக்கு கனி கொடுக்கிறவர்களாய் காணப்படுகிற நாம், இந்த உலகத்தையும், நம்மையும் படைத்து நமக்காக இந்த உலகத்தில் வந்து பாடுகளை அனுபவித்து, அத்துடன் நம்முடைய வேதனைகளையும் சகித்து நம்முடைய பாவங்களைச் சுமந்து மரணப்பரியந்தமும் நமக்காக பரிந்து பேசி கல்லறைக்கு சென்று சாத்தானை வென்று சாவில் வெற்றிச் சிறந்து பரலோகத்திற்குச் சென்று பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்திருந்து இன்னமும் நமக்காக பரிந்துப் பேசிக் கொண்டிருக்கும் கர்த்தருக்கு நாம் எப்படிப்பட்டவர்களாக காணப்படுகிறோம்.

ஒவ்வொரு ஆண்டையும் நமக்கு ஈவாக கொடுத்துக் கொண்டிருக்கும் நம் தேவன் நம்மிடத்தில் எதிர்ப்பார்க்கின்ற காரியம் நாம் அவருக்கு கனிக் கொடுக்கிறவர்களாய் காணப்படவேண்டுமென்று விரும்புகிறார். இதை தான் அவர் உவமைகளாக சொன்னார். அதுமட்டுமல்லாமல் தான் சொன்ன உவமைகள் ஒருநாள் நிச்சயமாக நிறைவேறும் என்பதற்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாஞ்சையும் இந்த வருடமாவது என் மகன் மகள் கனிக்கொடுக்கிறவர்களாய் மாறுவார்கள் என்பதுதான், நாமும் வருடத்தின் தொடக்கத்தில் தேவனை நோக்கிச் சொல்லுகிறோம் அதுமட்டுமல்லாமல் உமக்கென்று எதையாகிலும் செய்ய வேண்டும், மேலும் உமக்கு பயனுள்ள பாத்திரமாக மாற வேண்டும், சகலவற்றிலும் கனி கொடுக்கிறவர்களாக காணப்பட வேண்டும் என்றெல்லாம் ஜெபிக்கிறோம்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல நாம் ஜெபித்ததை எல்லாம் மறந்து விட்டு தேவன் நமக்கு கொடுக்கும் நன்மைகளை மாத்திரம் வாங்கிக் கொண்டு அவருக்கு கனிக்கொடுக்காதப்படிக்கு மாறிவிடுகிறோம். வேதம் சொல்லுகிறது “இனி காலம் செல்லாது” உலகத்தில் உள்ள காரியங்களைச் செய்வது தவறென்று சொல்லவில்லை ஆனால் தேவனுக்கென்று உள்ள நேரத்தை தேவனுக்கென்று சரியாக பயன்படுத்துகின்றோமா, நம்மை அவருடைய பிள்ளை என்று சொல்லும் பாக்கியத்தைத் தந்த தேவனுக்கு நாம் செய்ய வேண்டிய ஒரு காரியம் என்னவென்றால் இந்த உலகத்தை விட்டு போவதற்குள் எதையாகிலும் தேவனுடைய நாமம் மகிமைப்படும்படியாக அதாவது அவர் ருசிப்பார்க்கும்படியான கனிகளை நாம் எப்படியாவது கொடுத்துவிட வேண்டும் இதைத்தான் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விரும்புகிறார்.

எனக்குப் பிரியமான சகோதர சகோதரிகளே கடந்த நாட்களையும், நடந்த காரியங்களையும் மறந்துவிடுவோம் இனி வருகிற நாட்களில் தேவனுக்கென்று எழும்பிப் பிரகாசிப்போம் தேவன் நமக்குத் தந்த ஊழியத்தைக் கொண்டு அவருக்கு கனிக்கொடுக்கிறவர்களாக காணப்படுவோம்.

தேவனாகிய கர்த்தர் தாமே இந்த செய்தி மூலம் நம் ஒவ்வொருவருடனும் இடைப்படுவாராக! ஆமென்.

 


Posted on: 15/10/2015

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், சீஷனும் உரையாடுதல்

 

இயேசு கிறிஸ்து: ஏன் மகனே கவலையாக இருக்கிறாய்

சீஷன்: ஒன்றுமில்லை ஆண்டவரே

இயேசு கிறிஸ்து: மகனே என் பின்னே வா உன்னை மனுஷரை பிடிக்கிறவனாய் மாற்றுகிறேன்

சீஷன்: ஆண்டவரே என்னால் ஒரு மீனைக் கூட பிடிக்க முடியவில்லை எப்படி என்னை மனுரைப் பிடிக்கிறவனாய் மாற்றுவீர்

இயேசு கிறிஸ்து: உனக்கு ஒன்று தெரிய வேண்டும். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை

சீஷன்: அப்படியென்றால் ஐயா முதலில் என்னை அதிக மீன்களை பிடிக்கிறவனாய் மாற்றுங்கள், அப்பொழுது உமக்கு பின்பாக வருகிறேன்.

இயேசு கிறிஸ்து: மகனே நான் உன்னுடைய படகில் சவாரி செய்ய முடியுமா?

சீஷன்: ஆண்டவரே வாருங்கள் என் படகில் ஏறி கொள்ளுங்கள்

இயேசு கிறிஸ்து: மகனே வலது பக்கத்தில் உன் வலையை வீசு

சீஷன்: ஆண்டவரே அந்த இடம் ஆழமானது அல்ல, அதுமட்டுமல்லாமல் மீன்கள் அங்கு இருப்பதில்லை

இயேசு கிறிஸ்து: முதலில் என்னை விசுவாசிக்க வேண்டும் அப்பொழுதுதான் நீ மனுஷரை பிடிக்கிறவனாய் மாற முடியும் அதுமட்டுமல்லாமல் நான் இல்லாதவைகளை இருக்கிறவைகள் போல் அழைக்கிறவர் என்பதையும் மறந்து விடாதே மகனே.

சீஷன்: ஆண்டவரே அப்படியே செய்கிறேன்

இயேசு கிறிஸ்து: நல்லது கீழ்ப்படிதல் மிகவும் அவசியம்

சீஷன்: ஆண்டவரே நீர் சொன்னது போல அனேக மீன்கள் கிடைத்திருக்கிறதே அப்பா நான் பாவியான மனுஷன் என்னை விட்டு போய் விட்டு போய் விடுங்கள்

இயேசு கிறிஸ்து: பயப்படாதே பாவிகளை இரட்சிக்கவே இந்த உலகத்திற்கு வந்தேன்

சீஷன்: ஆண்டவரே அப்படியென்றால் என்னையும் உம்முடைய பிள்ளையாக ஏற்றுக் கொள்வீரோ?

இயேசு கிறிஸ்து: உன்னை மாத்திரமல்ல என்னை விசுவாசிக்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய பிள்ளை என்கிற அதிகாரத்தை தருகிறேன் என்பதை மனதில் வைத்துக் கொள். [யோவான் 1:12]

சீஷன்: அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்

இயேசு கிறிஸ்து: ஒருவன் விசுவாசமுள்ளவனாய், பரிசுத்த ஆவியினாலும் தண்ணீரினாலும் மூழ்கு ஞானஸ்நானத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

சீஷன்: அதற்கு என்னை ஒப்புக் கொடுக்கிறேன் தகப்பனே

இயேசு கிறிஸ்து: ஒரு காரியத்தை மறந்து விடக்கூடாது நீ எனக்கு பிள்ளையான பிறகு இந்த உலகத்திற்கு திரும்பி செல்லக் கூடாது

சீஷன்: எனக்கு புரிய வில்லை தகப்பனே

இயேசு கிறிஸ்து: நீ என் பின்னே வர விரும்பினால் இந்த உலகத்தில் உள்ள தேவையில்லாத அதாவது என்னோடு நடப்பதற்கு தடையாக இருக்கிற எல்லாவற்றையும் விட்டு விட வேண்டும் ஏனென்றால் ஒரு மனுஷனால் உலகப்பொருளுக்கும் தேவனுக்கும் ஊழியம் செய்ய முடியாது

சீஷன்: ஐயா, அதற்கு நான் தயாராயிருக்கிறேன்

இயேசு கிறிஸ்து: இன்று முதல் நீ கேபா என்னப்படுவாய், ஏனென்றால் இந்த கல்லை என்னுடைய ஆலயத்தைக் கட்டுவதற்காக எடுத்துக் கொண்டேன்.

சீஷன்: ஐயா அப்படியே ஆகட்டும் உம்முடைய இஷ்டம் போல இந்த கல்லுக்குச் செய்யும். இப்பொழுதே இந்த கல்லின் மேல் உம்முடைய ஆலயத்தைக் கட்டும்

இயேசு கிறிஸ்து: மகனே அவசரப்படாதே முதலில் இந்த கல் பரிசோதிக்கப்பட வேண்டும்.

சீஷன்: எப்படி என்னை பரிசோதிக்க போகிறீர்?

இயேசு கிறிஸ்து: முதலில் உன்னை அக்கினியின் வழியாக அனுப்புவேன் அவைகள் உன்னுடைய வளைவுகள் நெளிவுகள் எல்லாவற்றையும் சரி செய்து ஒரு அழகான வளையமாக என்னிடம் கொடுக்கும், அந்த வளையத்தையே நான் என்னுடைய விரலில் தரித்துக் கொள்வேன்.

சீஷன்: தகப்பனே அப்படியே ஆகட்டும் நீர் என்னோடு இருக்கும் போது இந்த அக்கினி பரீட்சை ஒரு பொருட்டே இல்லை.

இயேசு கிறிஸ்து: மகனே இத்தகைய விசுவாசம் என்மேல் வந்ததற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.

சீஷன்: அப்பா உம்முடைய சந்தோஷம் இனிமேல் என்னுடைய சந்தோஷமாகும்

இயேசு கிறிஸ்து: இனிமேல் நீ உலகத்திற்குரியவன் அல்ல எனக்கே சொந்தமானவன். மகனே ஆயத்தப்படு உன்னோடு கூடின எல்லா கூட்டத்தையும் [ அதாவது நான் உனக்காக வைத்திருக்கிற கூட்டத்தை ] ஆயத்தப்படுத்து இதுவே உன்னுடைய இலட்சியமாக இருக்கட்டும்.

சீஷன்: அப்படியே செய்கிறேன் தகப்பனே

இயேசு கிறிஸ்து: இன்று உன்னிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டானது

சீஷன்: அப்பா எனக்கு இவ்வளவு பெரிய பாக்கியத்தை தந்ததற்காக உமக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன்

குறிப்பு: இன்னும் விசுவாசியாய் சபைக்கு வந்து கொண்டு போகிறோமா? அல்லது ஆண்டவராகிய இயேசுவுக்கு சீஷனாக மாறிவிட்டீர்களா? சிந்தியுங்கள், செயல்படுங்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக காத்திருக்கிறார்.


Posted On: 29/08/2015

குறைவுகளை நிறைவாக்குகிறவர்

வேதம் சொல்லுகிறது, நிறைவானது வரும் போது குறைவானது ஒழிந்துபோம் என்று 1கொரி 13:10 ல் வாசிக்கிறோம்

தன்னுடைய வாழ்க்கையில் உள்ள குறைவுகள் ஆண்டவராகிய இயேசுவால் நிறைவானது என்று அறிந்த பவுல் இவ்வாறாக சொல்லுகிறார், இயேசுவால் மாத்திரமே ஒரு மனிதனின் குறைவுகள் மாறும் வேறு எங்கும் சென்றாலும் இந்த குறைகள் மாறாது என்பதையும் நாம் அப்.பவுலின் அதிகாரத்தை நன்றாக தியானிக்கும் போது புரிய வருகிறது.

யாருடைய குறைவுகளை தேவன் நிறைவாய் மாற்றுகிறார் என்று வேதம் சொல்லுகிறது, கர்த்தரை தேடுகிறவர்களுக்கும், அவருக்குப் பயந்தவர்களுக்கும் என்று சங் 34:9,10 ல் அறிய முடிகிறது இத்தகைய காரியத்தை நாம் வேதத்தில் எழுதப்பட்ட ஒரு சம்பவத்தை வாசிக்கும் போது நன்றாக புரிந்து கொள்ளலாம் எப்படியென்றால் யோவான் 2ம் அதிகாரத்தில், கானா ஊர் கலியாண சம்பவத்தை வாசிக்கிறோம், அங்கு என்ன நடக்கிறது, நன்றாக சென்று கொண்டிருந்த கலியாண வீட்டில் திடீரென திராட்சரசம் குறையைத் தொடங்கினது இதனிமித்தம் அந்த திருமண வீட்டின் தலைவருக்கு ஒரு குறைவு வரத் தொடங்கியது இதை அறிந்த தலைவர் இயேசுவைத் தேடி சென்றார் இதனிமித்தம் அந்த வீட்டின் குறைவுகள் நிறைவாக மாற்றப்பட்டது என்பது எல்லாரும் அறிந்த ஒன்றாகும்.

ஆகவேதான், சங்கீதக்காரனாகிய தாவீது சொல்லுகிறார்,

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் நான் தாழ்ச்சியடையேன் என்று சங் 23:1 ல் தான் ஒருபோதும் குறைவு அடைவதில்லை ஏனென்றால் குறைவுகளை மாற்றுகிற நிறைவாகிய கர்த்தராகிய இயேசு என்னோடு உண்டு என்று சொல்லுவதை நாம் தாவீதின் வாழ்க்கையில் இருந்து அறிந்து கொள்ளமுடிகிறது.

ஒருகாரியத்தை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது அதுஎன்னவென்றால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளின் தேவைகளை சந்திக்கும் போது, எல்லாவற்றையும் படைத்த பரமபிதாவானவர் உங்கள் தேவைகளின் குறைவுகளை நிறைவாய் மாற்றுவது அதிக நிச்சம் அல்லவா [ மத் 5:18 ] 


Posted On: 20/06/2015

சீட்டு மடியிலே போடப்படும் காரிய சித்தியோ கர்த்தரால் வரும் நீதி:16:33

 கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் உண்டாவதாக:

எனக்கு பிரியமான சகோதர சகோதரிகளே, ஒரு காரியம் ஜெயமாய் நடக்க வேண்டுமா?  அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? நாம் முயற்சிகளை எடுக்கலாம்,செயல்படலாம். ஆனால் அது கர்த்தராலே தான் வாய்க்கும் என்று அறிந்து கோள்ள வேண்டும்.

 ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்று எண்ணி எவ்வளவோ முயற்சிகள் நாம் எடுத்தாலும் அதை வாய்க்கபண்ணுவது கர்த்தர்.

 “கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா சங்கிதம் : 127:1

1)   ஒரு காரியம் எப்பொழுது ஆசிர்வாதமாகயிருக்கும்:

A)தேவசித்தம்

B)தேவனுடைய வேளை வரவேண்டும்

C)தேவனுடைய வழியிலே செயல்படவேண்டும்

இவைகள் இருந்தால் தான் ஆசிர்வாதமாகயிருக்கமுடியும்.

) தேவ சித்தமாக இருக்கவேண்டும்:

 

ஒரு காரியம் தேவசித்தமுள்ளதாயிருந்தால்அது அழகாக கூடி வரும்.

“நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார் நமக்கு சித்தமான யாவையும் செய்கிறார்  சங்கிதம்:115:3

கர்த்தர் தமது சித்தத்தை நம்முடைய வாழ்க்கையிலே நிறைவேற்றுவதற்காகவே ராஜரிகம் பண்ணுகிறார்.அவருக்குள் தாம் நாம் பிழைக்கிறோம் அசைகிறோம், இருக்கிறோம்[அப்:17:28] ஆகவே தான் இயேசு “ உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யபடுகிறது போல பூமியிலேயும் செய்யபடுவதாக” [மத்:6-10] என்று சீடர்க்ளூக்கு ஜெபம் பண்ண கற்றுகொடுத்தார்.

இயேசு கெத்சமனே தோட்டத்தில் ஜெபம் பண்ணிய பொழுது

“அப்பா பிதாவே எல்லாம் உம்மாலே கூடும்: இந்த பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்து போடும்.ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்றார். [மாற்:14:36]

 

) தேவனுடைய வேளை வரவேண்டும்:

“நீதியை செய்ய கர்த்தருக்கு வேளை வந்த்து---[சங்:119:126]

தேவனுடைய வேளையிலே காரியங்கள் கைகூடி வரும்.இயேசுகிறிஸ்துவின் முதல் அற்புதத்தை நாம் அறிந்திருக்கிறோம்.

கானாவூரில் நடைபெற்ற ஒரு திருமண வீட்டிற்கு இயேசு அழைக்கப்பட்டிருந்தார்.அந்த திருமண வீட்டிலே திராட்சைரசம் குறைவுபட்டது. அப்போது மரியாளோ, இயேசுவிடம் திரட்சைரசம் குறைவுப்பட்டது என்றார். அதற்கு இயேசு

“ இன்னும் என் வேளை வரவில்லை” என்றார், பின்பு இயேசு அற்புதத்தை செய்தார். அந்த திருமண வீட்டில் தண்ணிரைத் திராட்சைரசமாக மாற்றி அங்கே பரிமாறச் செய்தார்[யோவான்:2-1-11]

 

) தேவனுடைய வழியிலே செயல்படவேண்டும்:

 கடவுளூடைய கட்டளைகளைக் கடைபிடிப்பதின் மூலமும், அவருடைய நியமங்களை பின்பற்றுவதன் மூலமும் கடவுள் மீது நமக்குள்ள உண்மையான அன்பை காண்பிக்கிறோம். 1 யோவான் 5:3 நாம் எப்பொழுதும் ஜெபிக்கவேண்டும். நம்முடைய ஜெபத்தை விசுவாசமாகவும், மனத்தாழ்மையாகவும், உள்ளபூர்வமாகவும் இருக்கவேண்டும்.  [மாற்:11]

“சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும்” லூக்:18:1 கடவுளுக்கு பிரியமில்லாத பழக்கவழக்கங்களை நாம் அறவே ஒதுக்கித்தள்ள வேண்டும்; 1 கொரி:6:9,10

தேவன் வெறுக்கிற காரியங்களை வெறுத்து அவர் விரும்புகிற காரியங்களை செய்யும் பொழுது அவருக்கு பிரியமாக நாம் வாழலாம் –ரோமர்: 12:9

ஒரு வேளை மனுஷ ஞானத்தினால் அல்லது பணபலத்தினால் சில காரியங்களை உலகத்தார் சாதித்து கொண்டிருக்கலாம் ஆனால் அது மாயமானது. ஆனால் தேவனால் கைகூடிவருகிற காரியம் ஆசிர்வாதம்  நிறைந்த்தாய்க் காணப்படும்,சரியான வேளையிலே அவர் நமக்கு கட்டளையிடுவார்…

 

 ஆமென்


 Posted On: 09/05/2015

 நீங்கள் என்னை தெரிந்து கொள்ளவில்லை நான் உங்களை தெரிந்து கொண்டேன்:நீங்கள் என்  நாமத்தினாலே பிதாவை கேட்டுக் கொள்வது எதுவோ அதை உங்களுக்கு கொடுக்கதக்கதாக நீங்கள் போய் கனி கொடுக்கும் படிக்கும் உங்கள் கனி நிலைத்து இருக்கும் படிக்கும்  நான் உங்களை ஏற்படுத்தினேன்   [யோவான் 15:16]

எனக்கு அன்பான சகோதர சகோதரிகளே!

      எப்படியோ வாழந்து கொண்டிருந்த நம்மை தேவன் தெரிந்து கொண்டு அவரோடு நம்மை இணைத்து இருக்கிறார் என்று நினைத்தோமானால் தேவனுக்கு நாம் நன்றி சொல்லாமல் இருக்க முடியாது.

       நம்மை அவர் தெரிந்து கொண்டதுமின்றி நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுகொள்வது எதுவோ அதை அவர் உங்களுக்கு கொடுப்பார் என்று நம் தேவன் சொல்லியிருக்கிறார். ஆனால் அதை அவர் எப்போது கொடுப்பார் நாம் கனி கொடுக்கிறவர்களாகய் இருக்கும் போது அதை பெற்று கொள்ளமுடியும். நாம் தனித்து இருந்தோமானால் கனி கொடுக்கமுடியாது.

நாம் தேவனோடு இணைந்திருந்தால் மாத்திரமே கனி கொடுக்கமுடியும் இதை தான் வேதாகமத்தில் பார்க்கிறோம் “என்னில் நிலைத்திருங்கள் நானும் உங்களில் நிலைத்திருப்பேன் கொடியானது திராட்சை செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாக கனி கொடுக்கமுடியாது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் கனி கொடுக்கமாட்டீர்கள்.[யோவான் 15-4]

   ஆகையால் நாம் எப்போதும் இயேசுவோடு இணைந்திருக்க வேண்டும் நாம் தேவனோடு இணைந்திருந்தோமானால் தேவன் முதலில் நமக்கு சில கனிகளைக் கொடுப்பார் அது என்னவெனில் :ஆவியின் கனியோ அன்பு,சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்[கலா 6:22]இப்படிபட்ட கனிகள் பெற்றுக் கொண்ட நாம் எப்படிபட்டவர்களாக காணப்படவேண்டும்? பிறருடைய பாரங்களை சுமக்கிறவர் ஆக, பிறருக்காக ஜெபிக்கிறவர்களாக, தேவனுக்கு எதையாவது செய்கிறவர்களாகவும்,  ஒருவரில் ஒருவர் அன்பாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக தேசத்திற்காகவும், மக்களுக்காவும் ஜெபிக்க வேண்டும்.

   இப்படிபட்ட கனிகள் பெற்ற நாம் எப்படிபட்டவர்களாக இருக்க வேண்டும் என நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கூறுகிறதாவது “நான் உங்களில் அன்பாயிருப்பது போல  நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாயிருக்கவேண்டும் என்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது [யோவான் 15:12] நம் சகோதரரில் சிலர் சோர்ந்து காணப்படும்போது நம் சமயத்தை ஒதுக்கி அவர்களிடதில் சென்று அன்பான வார்த்தைகளை கொண்டு அவர்களிடத்தில் பேசுகிறோமா?! தேவனுடய அன்பை குறித்து சொல்லி அவர்களை தேற்றுகிறோமா சற்று யோசிப்போம்! நாம் இரட்சிக்கபட்ட காலத்தில் ஒவ்வொன்றுக்காக ஜெபித்தது உண்டு? நம் தேசத்திற்காக எவ்வளவு நேரம் ஜெபித்ததுண்டு? ஆனால் இப்பொழுது நம்முடைய ஜெபம் எப்படி இருக்கிறது? . நம் தேசத்தில் எங்கு பார்த்தாலும் பஞ்சம், நோய்கள், கொள்ளை, கொலை, விபத்து, என்று அனேக காரியங்களை பார்க்கிறோம். இதற்காக நேரத்தை ஒதுக்கி ஜெபிக்கிறோமா? நீங்கள் நினைக்கலாம் இவையெல்லாம் கேட்கும் போது தேவனுடய வருகையின் அடையாளம் என்று! ஆம் அது உண்மை தான், ஆனாலும்  நாம் தேசத்திற்காகவும், தேசத்தின் மக்களுக்காகவும் ஜெபிக்க வேண்டும். அவர்களும் தேவனை ஏற்றுகொள்ள வேண்டும்.தேவன் நமக்கு கனிகளை கொடுத்து இருப்பது நமக்காக மட்டுமன்றி அதை கொண்டு பிறருக்கும் உதவுகிறாதாய் இருக்க வேண்டும். தேவன் நமக்கு ஒன்று கொடுத்தால் அதை  நாம் வர்த்திக்க பண்ண வேண்டும் அதை வாங்கி நமக்குள்ளே வைத்துக் கொள்வோமானால் அது நமக்கும் பிரயோஜனமாயிருக்காது பிறருக்கும் பிரயோஜனமாயிருக்காது. உதாரணத்திற்காக தாலந்தின் உவமை நினைத்து கொள்வோம். உள்ளவனுக்கு கொடுக்கப்படும் இல்லாதவனுக்கு உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும். ஆகவே சகோதர,சகோதரிகளே, தேவனிடத்தில் கனிகளை பெற்றுக் கொண்ட நாம் இன்றிலிருந்து ஒர் தீர்மானம் எடுப்போம் தேவன் நமக்கு கொடுத்த கனிகளை பெருகச் செய்து தேவனுக்கென்று கனி கொடுக்கிறவர்களாய் மாறுவோம்.

 

    நீங்கள் மிகுந்த கனிகளை கொடுப்பதனால் என் பிதா மகிமைப்படுவார் எனக்கும் சீஷராயிருப்பீர்கள்[யோவான்:15:8] –ஆமென்.


Posted on: 23/02/2015

என்னத்தை உண்போம் என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும் என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப் படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் – மத் 6:25

கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் உண்டாவதாக! கர்த்தருக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிற நாம் அனேக காரியங்களை குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அன்றாட தேவைகளை குறித்தும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதே சமயத்தில் ஆவிக்குரிய காரியங்களைப் பற்றிய கவலையும் பாரமும் காணப்படுகிறவர்களாகிய நமக்கு கவலையை மேற்கொள்ள பரிசுத்த வேதாகமம் சில வழிகளைக் காண்பிக்கிறது. இத்தகைய காரியத்தை நாம் வேதத்தைக் கொண்டு பார்ப்போம்.

1.முதலாவது தேவன் மேல் வைத்த விசுவாசத்தினால் கவலையை மேற்கொள்ள முடியும் என்பதை பார்க்கலாம்.

கர்த்தராகிய இயேசுவை நம் உள்ளத்தில் ஏற்றுக் கொண்ட பிறகு நாம் தேவனுடைய பிள்ளைகளாய் மாறிவிடுகின்றோம், நாம் தேவனுடைய பிள்ளைகளாய் மாறின பின்பு நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு தேவைக்காகவும் நம்மைக் காட்டிலும் தேவன் நமக்காக கவலைப்படுகிறவராயிருக்கிறார் என்பதை விசுவாசிக்க வேண்டும். தேவன் மேல் வைக்கும் விசுவாசம் கவலைகள் அனைத்தையும் நம்மை விட்டு விலக்கிவிடும், அதுமட்டுமல்லாமல் இயேசு கிறிஸ்து நம் பாவத்திற்காக மட்டும் சிலுவையில் அறையப்பட்டார் என்று விசுவாசிப்பது மாத்திரமல்லாமல் அத்துடன் என்னுடைய தேவைகளையும் சந்திக்க வல்லவர் என்கிற விசுவாசமும் நமக்குத் தேவை. தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் கவலையை மறந்து விட்டு விசுவாசத்தை நோக்கி ஓட வேண்டாம் என்பதுதான் நம்மைக் குறித்து தேவனுடைய வாஞ்சையாயிருக்கிறது.

ஆகவேதான் வேதம் சொல்லுகிறது, அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள் – 1 பேதுரு 5:7, எனவே கவலைகளை ஒழித்து விட்டு ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர தேவனாகிய இயேசுவைப் பிடித்துக் கொள்வோம்.

2.இரண்டாவது ஜெபத்தைக் கொண்டு கவலைகளை எடுத்துப் போடுவோம்.

வேதம் இப்படியாக சொல்லுகிறது, ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் – பிலி 4:6

நாம் தேவனை நோக்கி ஜெபிக்கிறோம், விண்ணப்பம் செய்கிறோம் ஆனாலும் திரும்பவும் எந்தக் காரியத்துக்காக ஜெபித்தோமோ அதே காரியத்தைக் குறித்து கவலைப்பட்டு, பாரப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். ஏனென்றால் நம்முடைய வாழ்க்கையில் காணப்படுகிற அவிசுவாசமே நம்முடைய கவலைக்கும் பாரத்துக்கும் காரணமாய் அமைந்து விடுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. வேதம் சொல்லுகிறது,

கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு அவர் உன்னை ஆதரிப்பார் – சங் 55:22

ஆகவே கவலைப்பட வேண்டாம், கலங்க வேண்டாம் கர்த்தரே சொல்லி விட்டார் நான் உங்கள் பாரங்களை சுமந்து கொள்கிறேன். நீங்கள் சும்மா இருங்கள் என்று சொல்வதை நாம் மேலே உள்ள வசனத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

3.மூன்றாவதாக, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் கவலைகளை எடுத்துப் போடுவோம்

பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் என்பது ஜீவனுக்கும் தேவபக்திக்கும் தேவையான எல்லாவற்றையும் நமக்குத் தருகிறதாயிருக்கின்றது. அபிஷேகம் என்றதும் அனேகர் நினைப்பதுண்டு சத்தமிடுவதும் கைகளை தட்டுவதும், அன்னிய பாஷைகளைப் பேசுவதும் மட்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் அனால் ஒரு தேவபிள்ளை பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தால் நிறைந்து உன்னதமான ஆவிக்குரிய வாழ்க்கையை வாழும் போது மட்டுமே அந்த அபிஷேகத்தால் நம்முடைய கவலைகள் பாரங்கள் எல்லாம் மாறிப் போகும். அதுமட்டுமல்லாமல் தேவனோடு கூடிய சந்தோஷமும் நிலைத்திருக்கும். இப்படியாக இருக்கும் போது மட்டுமே நம்முடைய உள்ளான மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்கப்பட்டுக் கொண்டேயிருப்பான். அதுமட்டுமல்லாமல் தேவனை நாம் முழுமனதோடு துதிக்க முடியும், மற்றவரை பெலப்படுத்த முடியும் என்பதாக அனேக காரியங்களை நாம் வேதத்தில் இருந்து பார்க்க முடிகிறது,

எனக்கு அருமையான சகோதர சகோதரிகளே கவலைப் படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தை கூட்டுவான் [ மத் 6:27 ] ஆகவே கவலைப் படுவதை விட்டுவிட்டு கவலையிலிருந்து விடுதலையாக தேவன் நமக்கு தந்த வேதாகமத்தை கொண்டு ஜெயம் எடுப்போம்.

எப்பொழுது மேலே சொல்லப்பட்ட காரியம் நடக்குமென்றால், வேதம் சொல்லுகிறது,

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார் – சங்கீதம் 37:4. ஆமென்


வாலிபர் பகுதி: அஷோர்

Posted on: 12/01/2015

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன் – பிலி 4:4

கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் என்றென்றும் உண்டாவதாக, எனக்கு பிரியமான சகோதர சகோதரிகளே தேவனுடைய பிறப்பின் நாளை கொண்டாடி விட்டு, புது வருஷத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ள உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புதுவருடத்தில் தேவனிடத்திலிருந்து மாறாத வாக்குத்தத்தங்களையும், அவருடைய பரிசுத்த அன்பையும் பெற்றிருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறேன். அடுத்ததாக எப்பொழுது இந்த வாக்குத்தத்தம் நிறைவேறும் என்று காத்திருக்கிறவர்களுக்கு தேவன் சொல்லுகிற அறிவுரை என்னவெனில், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்ககடவோம். வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறார் [ எபி 10:23 ]

ஒருகாரியத்தை மறக்க வேண்டாம், நாம் தேவனுடைய பிள்ளைகள் ஆகவே தேவன் நிச்சயமாக நம்முடைய வாக்குத்தத்தை நிறைவேற்றுவார் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் சில வேளைகளில் சிறிது தாமதமாகும் சூழ்நிலை உண்டாகிறது ஏனென்றால் நாம் அவருடைய வழிகளை விட்டு இந்த உலகத்தேவைக்காக மாத்திரம் தேவனை தேடும் போது அவர் நமக்கு சில காரியங்களைக் கற்றுக் கொடுக்கும்படியாக இப்படி செய்கிறார் என்பதுதான் உண்மை. மறக்க வேண்டாம் நாம் இந்த உலகத்தின் செல்வத்தில் செழிப்பாக இருப்பதினால் மட்டும் நாம் பாக்கியவான்கள் என்று அழைக்கப்பட மாட்டோம். மாறாக வேதம் சொல்லுகிறது கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். [ சங் 1:2 ]

இரட்சிக்கப்பட்ட போது நாம் எவ்வாறு தேவன் மேல் தாகமாய் இருந்தோமோ அதே தாகத்தை ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்க்கையில் கொண்டு வர வேண்டும், அப்பொழுதுதான் நாம் பிசாசின் தந்திரங்களைக் கண்டு பிடிப்பதுடன் மாத்திரமல்ல நம்முடைய விலையேறப் பெற்ற வாக்குத்தத்தையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே நம்முடைய நோக்கம் எல்லாம் எப்பொழுதும் இயேசு இயேசு என்று கடைசி மூச்சு வரை சொல்லிக் கொண்டே நடப்போம். வேதம் சொல்லுகிறது,

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார் – சங் 37:4

தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்!


நீங்கள் ஜெபம் பண்ணும் போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்போது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன் – மாற்கு 11:24

கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் உண்டாவதாக, எனக்கு பிரியமான சகோதர சகோதரிகளே நீங்கள் ஜெபிக்கும் போது நான் ஜெபித்தக் காரியங்கள் எல்லாம் பெற்றுக் கொள்வேன் என்று விசுவாசியுங்கள் அப்போது அவைகள் உங்களுக்கு உண்டாகும். இவைகள் எப்போது நடக்கும் என்றால் நீங்கள் கர்த்தருக்குள் இருக்கும்போது மட்டுமே நடக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

வேதத்தில் இப்படியாக பார்க்கிறோம், வானமும் பூமியும் ஒழிந்துபோம் என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை [ மத்தேயு 24:35 ] இயேசு கிறிஸ்து வாழ்ந்த நாட்களில் அவர் இப்படியாக தன்னை தேடி வருகிறவர்கள் தன்னை விசுவாசிக்கும் படியாக இந்த வசனத்தை சொல்வதை பார்க்க முடிகிறது, இப்படி விசுவாசிக்கிறவர்கள் அற்புதங்களைப் பெற்றுக் கொண்டதை நாம் பார்க்க முடிகிறது உதாரணமாக பன்னிரண்டு வருஷமாய் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக் கொண்டு அவர் பின்னாலே வந்து அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள் [மத் 9:20,21]

அந்த ஸ்திரீயின் விசுவாசத்தை பாருங்கள் தேவனின் உடையில் இருந்து வல்லமை புறப்படும் என்பதை அவள் விசுவாசித்ததால் அதன்படியே அவள் அற்புதத்தை பெற்றுக் கொண்டாள் அதுமட்டுமன்றி அவள் தெரிந்து கொண்டதை பிறருக்கும் கற்றுக் கொடுத்தாள் என்பதையும், மேலும் நாம் மத் 14:36 அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாக வேண்டுமென்று அவரை வேண்டிக் கொண்டார்கள் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள். அனேகருடைய விசுவாசத்தை வர்த்திக்கப் பண்ணினாள்.

இரண்டாவதாக நூற்றுக்கு அதிபதியை எடுத்துக் கொள்வோம் தேவனுடைய வார்த்தையில் விசுவாசம் வைத்தான் எப்படியெனில் அவனுடைய வேலைக்காரன் கொடிய நோய்யினால் வேதனைப்படுகிறான். இதன் நிமித்தம் இயேசுவை வேண்டிக் கொண்டான் அதற்கு இயேசுவும் நான் வந்து அவனைச் சுகமாக்குவேன் என்றார். ஆனால் அவன் விசுவாசத்தைப் பாருங்கள் ஆண்டவரே நீர் என் வீட்டிற்கு பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்போது என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்றான். ஆம் எனக்கு பிரியமான சகோதர சகோதரிகளே நாம் தேவனிடத்தில் எவைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோமோ அவைகளை பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசிக்க வேண்டும் விசுவாசம் என்பது ஜெபத்தில் ஆணிவேர் என்பதை மறக்க கூடாது. வேதம் இப்படியாக சொல்லுகிறது

விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம் ஏனென்றால் தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும் அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர் என்றும் விசுவாசிக்க வேண்டும் [ எபிரெயர் 11:6 ] ஆகவே விசுவாசத்தோடு ஜெபிப்போம், ஒருவருக்கொருவர் பாரப்பட்டு ஜெபிப்போம் ஜெயத்தைப் பெற்றுக் கொள்வோம். கர்த்தர் தாமே இந்த வார்த்தையைக் கொண்டு உங்கள் இருதயங்களில் இடைப்படுவாராக. ஆமென்.


Posted on: 15/11/2014

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப் படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான் – மத் 16:26

கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் என்றென்றும் உண்டாவதாக. எனக்கு மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொள்வது மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலே சொல்லப்பட்ட வசனத்தை நாம் இரண்டு விதத்தில் நாம் பார்க்க போகிறோம்

1.உலகப் பிரகாரம்

2.ஆவிக்குரிய பிரகாரம்

1.உலகப் பிரகாரம்

இந்த உலகத்தில் வாழ்கின்ற காலக் கட்டத்தில் பணத்திற்காகவும் பொருளுக்காகவும் ஓடி வேலை செய்து இந்த உலகத்தை ஆதாயப் படுத்திக் கொண்டாலும் தேவனுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தை கொடுக்காமல் தன் ஜீவனை நஷ்டப் படுத்தினால் நியாயத்தீர்ப்பு நாளில் தேவ சமுகத்தில் நிற்கும் போது பணத்தையோ அல்லது பொருளையோ கொடுத்து பரலோகத்தில் பிரவேசிக்க முடியாது, அநேகர் நினைப்பதுண்டு வேலை செய்து அதிகமாக சம்பாதித்து சேர்த்து வைத்துக் கொண்டோமானால் நன்றாக இருக்கலாம் என எண்ணி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் பணமும் பொருட்களும் தேவை தான். அது தவறில்லை ஆனால் அதை மட்டுமே சார்ந்து வாழ்ந்துக் கொண்டு தேவ சமுகத்தை விட்டு விலகும் போது தன் ஜீவனை நஷ்டப் படுத்திக் கொள்கிறான். தேவன் நம்மை இதற்காக மட்டும் படைக்கவில்லை.

2.ஆவிக்குரிய பிரகாரம்

மனுஷன் இந்த உலகத்தில் ஊழியம் செய்து அநேக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொண்டாலும் அவன் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு அதன் நிமித்தம் ஒரு லாபமும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சென்னையிலிருக்கும் போது சபையிலே ஒரு சிலரைப் பார்த்தேன் அவர்கள் சபைக்குரிய காரியங்களில் நன்கு வளர்ந்தவராக காணப்பட்டார்கள் அதுமட்டுமன்றி சபைக்கு ஆத்துமாக்களைச் சேர்க்கிறவர்களாகவும், தெருக்களில் சென்று ட்ராக்ஸ் கொடுக்கிறவர்களாகவும் காணப்படுகிறார்கள் ஆனால் அவர்கள் வாழ்கின்ற இடத்தில் சென்றுப் பார்க்கும் போது அவர்கள் சிலரை அவதூறாக பேசுகிறவர்களாகவும் காணப்பட்டனர். அனேகரை தேவ சமுகத்தில் சேர்க்கிறவர்களாக காணப்படுகிற அவர்கள் முதலில் தான் சரியான நிலையில் தான் இருக்கிறோமா என்பதை அறிய வேண்டும். ஏனென்றால் வேதம் சொல்லுகிறது ஒரே ஊற்றிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? அதுமட்டுமல்லாமல் துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது, என் சகோதரரே இப்படியிருக்கலாகாது [ யாக் 3:11,10 ]

ஆம் எனக்கு பிரியமான சகோதர சகோதரிகளே,

தேவனுக்கென்று கொடுக்க வேண்டிய நேரத்தை தேவனுக்கென்று கொடுக்க ஆயத்தப் படுவோம். வேதத்தில் பார்க்கிறோம் இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் [ லூக் 20:25 ] என்று தேவன் இந்த உலகத்தில் வாழ்ந்த காலக் கட்டத்தில் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். தன் ஜீவனை காக்க தேவனுக்கென்று நேரத்தை ஒதுக்கவும் ஊழியத்திலிருக்கும் சகோதர சகோதரிகளும் சற்று தன்னைத் தான் நிதானித்து அறிய வேண்டும். முதலில் நம்மை பரலோகத்திற்கு தகுதி படுத்திக் கொண்டு பிறகு மற்றவரையும் ஆயத்தப் படுத்த பழகிக் கொள்ள வேண்டும். கர்த்தர் தாமே இந்த வார்த்தையை கொண்டு நம்முடன் பேசுவாராக ஆமென்.


Posted on: 09/10/2014

அவரோ அவர்களை அழிக்காமல் இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார், அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல் அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார் จC சங் 78:38

குறிப்பு: நாம் எப்பொழுதும் தேவனுடைய கோபத்தை தனிக்கிறவர்களாக காணப்பட வேண்டும்.

கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் உண்டாவதாக

எனக்கு மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே தேவன் ஒரு நபரையோ அல்லது தேசத்தையோ நேசிக்கிறார் என்றால், அவர்கள் சிறிய தவறு செய்தால் கூட தேவன் உடனே சரி செய்வார். ஏனென்றால் ஒரு மனுஷனிடம் துன்மார்க்கமான காரியங்கள் வரும் போது நாம் அவருடன் உலாவ முடியாது என்று வேதம் சொல்லுகிறது, ஏனென்றால் அவர் தீமையைப் பார்க்கமாட்டாத சுத்த கண்ணராய் இருக்கிறார் என்பதை ஒரு போது மறக்க வேண்டாம். இத்தகயை காரியத்தைத் தான் பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன்.

யோனா அதிகாரத்தை பார்ப்பீர்களால் தெரியும் அவர் நினிவேயை எவ்வாறாக நேசித்தார், ஆகவேதான் நினிவே தவறு செய்த போது, அவர் ஒரு யோனாவை தெரிந்து கொண்டு அங்கே அனுப்புகிறார். ஆனால் யோனாவோ கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி தர்ஷீசுக்கு ஓடிப் போகும்படி எழுந்து யோப்பாவுக்குப் போய் தர்ஷீசுக்கு போகிற ஒரு கப்பலைக் கண்டு கூலி கொடுத்து தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி அவர்களோடே தர்ஷீசுக்குப் போக கப்பல் ஏறினான் [யோனฎ-3]

கர்த்தர் நினிவேயை நேசித்ததின் நிமித்தம் யோனாவை சிட்சித்தார் என்பதை அதே அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம், எப்படியென்றால் கடலில் பெருங்காற்றை வரவழைத்து கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமன்றி யோனாவை மீனின் வயிற்றிலே இராப்பகல் மூன்று நாள் இருக்க வைத்தார், அப்பொழுது யோனா தேவனை நோக்கி விண்ணப்பம் செய்தார். தேவன் யோனாவின் விண்ணப்பத்தை கேட்டு , மீனுக்கு கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது, யோனாவும் தேவனுக்குக் கீழ்ப்படிந்தான். யோனாவுக்கு தேவனுடைய வார்த்தை இரண்டாம் தரம் உண்டாகி நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய் நான் உனக்கு கற்பிக்கும் வர்த்தையை அதற்கு விரோதமாய் பிரசங்கி என்றார். அவனும் பிரசங்கித்தான், அப்போது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து ஏற்றுக் கொண்டு அக்கிரமத்தை விட்டு விலகி தேவனை ஏற்றுக் கொண்டார்கள்.

அவர்கள் தங்கள் பொல்லாத வழியை விட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்கள் கிரியைகளைப் பார்த்து தெரிந்து கொண்டார், ஆகவே தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு அதைச் செய்யாதிருந்தார். [ யோனா 3:10 ] ஆனால் யோனாவிற்கோ தேவன் செய்தது பிரியமில்லாமல் இருந்தது. ஆனால் இந்த தவறை ஒரு செடியைக் கொண்டு உணர்த்தினார் என்பதை நாம் யோனா புஸ்தகத்தில் கடைசி அதிகாரத்தைப் பார்க்கும் போது அறிய முடிகிறது.

ஆம் பிரியமானவர்களே, தேவன் நம்மையும் இந்த தேசத்திற்கு கொண்டுவந்ததற்கு ஒரு நோக்கம் உண்டு. முதலாவது நாம் தேவனுடைய குறிக்கோளை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். நாம் இந்த நோக்கத்தை அறியாமல் நடப்பதினால் தான் தேவன் நம்மை சிட்சிக்கிறார் என்பதை ஒருபோது மறக்க கூடாது. சிலர் இதை அறியாமல் தேவன் என்னை ஏன் தண்டிக்கிறார் என்று தேவனையே குறை சொல்வதுண்டு. தேவனுடைய ஒவ்வொரு சிட்சைக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும். வேதம் சொல்லுகிறது

என் மகனே நீ கர்ததருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே அவர் கடிந்து கொள்ளும் போது சோர்ந்து போகாதே.

தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறது போல கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூறுகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார். நீதிமொழிகள் 3:10,11

 கர்த்தராகிய இயேசு தாமே இந்த வார்த்தையின் மூலம் நம் ஒவ்வொருவருடனும் இடைப்படுவாராக. ஆமென்.

 


Posted on: 07/09/2014

என் வாக்குக்குச் செவிகொடுங்கள் அப்போது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள் จC எரேமியா 7:23

கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் உண்டாவதாக!

எனக்கு மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே,

தேவனுடைய வார்ததைக்கு நாம் செவிக் கொடுக்கும் போது தேவன் நம் மேல் பிரியமாயிருக்கிறார். அதுமட்டுமன்றி அவர் நம்மை தமக்கு தாசனாகவும், சிநேகிதனாகவும் தெரிந்துக் கொள்கிறார் வேதத்தில் தேவன் இப்படியாக சொல்லுகிறார். என் தாசனாகிய இஸ்ரவேலே நான் தெரிந்துக் கொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து அதின் எல்லைகளிலிருந்து அழைத்து வந்து: நீ என் தாசன் நான் உன்னை தெரிந்து கொண்டேன் நான் உன்னை வெறித்துவிடவில்லை என்று சொன்னேன். நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன் திகையாதே நான் உன் தேவன் என்று தமக்குச் செவிக் கொடுக்கிறவர்களைப் பார்த்து தேவன் ஏசாயா 41:8-10ல் இவ்வாறாக சொல்லுகிறார்,

மேலே சொன்ன வசனத்தை உங்களுக்கு விளக்க ஆசைப்படுகிறேன்.

வேதத்தில் தேவனுக்கு பிரியமாகயிருந்தவர்களை தேவன் எவ்வாறு அழைக்கிறார் என்று சற்று பார்ப்போம்.

1.ஆபிரகாம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து தேவனை விசுவாசித்ததின் நிமித்தம் ஆபிரகாமை தேவன் ஆசீர்வதித்தார் மேலும் அவர் மூலமாய் உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று நாம் ஆதியாகமம் 22:18ல் வாசிக்கிறோம், அதுமட்டுமன்றி அவர் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான் என்பதை நாம் யாக்கோபு 2:23ல் பார்க்க முடிகிறது.

2.தாவீதை எடுத்துக் கொள்வோம் தேவன் மேல் நம்பிக்கையுள்ளவனாக காணப்பட்டான் அதுமட்டுமல்லாமல் வைராக்கியம் நிறைந்தவனாகவும் தேவனை தனக்கு முன்பாக வைத்து எல்லாவற்றையும் செய்ததினிமித்தம் நாற்பது வருஷகாலமாய் ராஜாவாக இருந்த சவுலை தேவன் தள்ளி தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தினார். பின்னும் அவனை குறித்து என் இருதயத்திற்கு ஏற்றவன் என்று சாட்சியும் சொன்னார் என்பதை நாம் அப் 13:22ல் பார்க்க முடிகிறது.

3.யோபுவை எடுத்துக் கொள்வோம் நாம் யோபுவின் புஸ்தகம் முதலாம் அதிகாரம் முதல் வசனத்தை திருப்பும் போது, அந்த வசனம் இப்படியாக சொல்லுகிறது, யோபு என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் இருந்தான். அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும் மற்றும் தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான் என்று அவரைப் பற்றி தேவன் சாட்சிக் கொடுக்கிறார். பாருங்கள் வசனம் என்ன சொல்லுகிறது, என் தாசனாகிய யோபின் மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவரைப் போல பூமியில் ஒருவனும் இல்லை என்பதை யோபு 1:8ல் பார்க்க முடிகிறது.

4.கடைசியாக, தானியேலை எடுத்துக் கொள்வோம் இவர் மிகவும் வைராக்கியம் நிறைந்த மனிதன் எப்படியெனில் ராஜா உண்ணும் போஜனத்தினாலும், திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுபடுத்தலாகாதென்று தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டான் என்பதை தானியேல் 1:8ல் நாம் வாசிக்க முடிகிறது.ஆகவே தேவன் தானியேலைக் குறித்து இவ்வாறாக சாட்சிக் கொடுக்கிறார், நீ எனக்கு மிகவும் பிரியமானவன் என்று தானியேல்  9:23ல் வாசித்து அறிந்து கொள்ள முடிகிறது.

ஆம் பிரியமானவர்களே, முதலாவது தேவனுக்கு பிரியமாக வாழ்வதற்கு முயற்சி செய்வது அவசியம். இப்படியாக நாம் வாழும் போது மட்டுமே வாழ்க்கையில் அதிக பலன்களை பெறமுடியும். பாருங்கள் மேலே குறிப்பிடப்பட்ட தாசர்கள் தேவனுக்கு பிரியமாய் வாழ்ந்ததால், தேவன் அவர்களை இவ்வாறாக அழைக்கிறார், ஆபிரகாமை, தேவன் சிநேகிதன் என்றும், தாவீதை என் இருதயத்திற்கு ஏற்றவன் என்றும், யோபுவை என் தாசனாகிய யோபு என்றும், தானியேலை மிகவும் பிரியமானவன் என்றும் அழைக்கிறார். இவர்களை மட்டுமன்றி இந்த உலகத்தில் படைத்த அனைவரையும் தேவன் பெயர்ச் சொல்லி அழைக்க விரும்புகிறார். தேவன் நம்மை அன்பாக பெயர்ச் சொல்லி அழைக்க வேண்டுமானால். நாம் சில அர்ப்பணிப்புகளை செய்வது அவசியமாயிருக்கிறது.

1.முதலாவது அதிகாலையிலே தேவனை துதிக்க வேண்டும்.

2.தேவன் நமக்கு கொடுத்த புதைப் பொருளான வேதத்தை நன்றாக வாசிக்க வேண்டும்.

3.தேவனின் பாதத்தில் அனுதினமும் நீண்ட நேரம் அமர்ந்திருக்க வேண்டும்

4.எந்த காரியத்திலும் தேவனை முன்பாக நிறுத்த வேண்டும

5.எப்பொழுதும் தேவனை மட்டுமே சார்ந்து வாழ வேண்டும்.

6.கடைசியாக, அவருடைய கற்பனைகளை தன்னுடைய வாழ்க்கையில் கைக்கொள்ள வேண்டும்.

இப்படியாக நாம் வாழ்வோமானால், தேவன் நம்மை என் பிரியமே என் ரூபவதியே என்று அன்புடன் அழைப்பார்.

கர்ததராகிய இயேசு தாமே இந்த வார்த்தையின் மூலம் நம் ஒவ்வொருவருடனும் இடைப்படுவாராக. ஆமென்.

 


Posted on: 16/08/2014

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதனத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் จC ஏசா 53:5

கர்த்தருடைய பெரிதான நாமத்திற்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் உண்டாவதாக.

தாயின் அன்பிலும் மேலான அன்பு நம் தேவனின் அன்பு என்று சொன்னால் அது மிகையாகாது, இந்த உலகத்தில் தாயின் அன்பு என்பது மிகவும் ஆழமானது என்று நாம் அறிந்திருக்கிறோம் அதை நினைக்கும் போது எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது அதை உங்களிடத்தில் பகிர்ந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஓர் ஊரில் சிறிய கிராமம் இருந்தது, அதன் அருகாமையில் ஓர் வனப்பகுதி இருந்தது, அது பசுமையும் செழிப்புமாக காணப்பட்டது. அங்கு அனேக மிருக ஜீவன்களும், பறவைகளும் வாழ்ந்து வந்தன, ஒரு நாள் திடீர் என அந்த வனப்பகுதியில் தீ பிடித்துக் கொண்டது, அந்த பகுதியில் உள்ள மக்கள் தீயணைப்புத்துறைக்கு போன் செய்தனர், காற்று அதிகமாகயிருந்தபடியினால் தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் தீ அந்த வனப்பகுதி முழுவதும் எரியத் தொடங்கியது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயர்ச்சித்தனர், அதே சமயத்தில் அனேகர் அவர்களுடன் உதவிச்செய்தனர். இப்படியாக சில மணிநேரம் போராடி தீயை அணைத்தனர், அப்படியிருந்தும் அந்த வனப்பகுதி முழுவதும் அழிந்துவிட்டது, ஆங்காங்கே சிறு சிறு இடத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது, ஆனால் அவர்களில் ஒரு தீயணைப்பு வீரர் புதரின் உள்ளே சென்று தீயை அணைத்துக் கொண்டிருந்தார், அப்பொழுது திடீரென அங்குள்ள ஓர் புதரில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. அவர் அங்குச் சென்று அந்த புதரை விலக்கினார், அப்போது அதிலிருந்து சில கோழிக்குஞ்சுகள் வெளியே வந்தன, அங்கி நின்றுக் கொண்டிருந்த அனைவருக்கும் ஒரே ஆச்சரியம் இந்த பகுதி முழுவதும் எரிந்துவிட்டன, ஆனால் இந்தக் கோழிக்குஞ்சுகள் ஒரு சேதமுமின்றி வெளியே வருகின்றதே என்று அவர்கள் அப்படிச் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த தீயணைப்பு வீரன் அந்த புதரிலிருந்து கருகி இறந்த நிலையில் ஒரு கோழியை வெளியே எடுத்தார். அனைவரின் கண்களிலும் கண்ணீர் வடிந்தது. ஆம் அந்த கோழியானாது தீமுழுவதையும் அது ஏற்றுக் கொண்டு தன் குஞ்சுகளுக்கு ஒரு சேதமும் வராதப்படிக் காப்பாற்றியது.

நம் பாவங்களுக்காக தம் ஒரே பேரான குமாரனையே தந்தார் பரமபிதா, ஒரு குற்றமும் காணாத பரிசுத்தராகவே இருந்த நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காகவே இந்த உலகத்தில் மனுஷகுமாரனாக வந்து நம்முடைய பாவம் என்கிற நெருப்பை அவர் மேல் ஏற்றுக் கொண்டு காயப்பட்டு, அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு சிலுவையில் தம்மை முழுமையாக ஒப்புக் கொடுத்துவிட்டு, நமக்கு ஒரு சேதமுமின்றி காப்பாற்றினார்.

இந்த கோழி சிறிது காலம் தன் குஞ்சுகள் வாழ்வதற்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தது.

ஆனால் நம்முடைய தேவனாகிய இயேசுவோ நம்முடைய இம்மை வாழ்விற்காக மாத்திரமல்ல, நம்முடைய மறுமையின் வாழ்வாகிய நித்திய ஜீவனுக்காக இப்படியாக தம்மை அர்ப்பணித்தார்.

ஆகவே எனக்கு மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே நாமும் இப்படிப்பட்ட அன்பைத் தரித்துக் கொள்வோம், அப்பொழுதுதான் நம்மை நித்திய ஜீவனுக்குப் பாத்திரராக மாற்ற முடியும் என்பதை மறக்க வேண்டாம்.

கர்த்தர்தாமே இந்த அழியாத அன்பினாலே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக!   ஆமென்..