Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 07/01/2017

ஆவிக்குரிய ஓட்டம்

 

சகோதரி. அனு ஃபெஸ்லின்

 

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகள் யாவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில்   புதிய தீர்மானங்களோடு அடியெடுத்து வைத்திருக்கிற நம் ஒவ்வொருவரையும் நம்முடைய தேவனாகிய இயேசு கிறிஸ்து அபரிதமாய் ஆசீர்வதிப்பாராக. அப்போஸ்தலனாகிய பவுல் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையை ஒரு ஓட்டப்பந்தயத்திற்கு  ஒப்பிடுகிறார். பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள் [1கொரிந்தியர்:9:24]. உலகப்பிரகாரமாக ஓட்டப்பந்தயத்தில் பங்குபெறும் ஒரு வீரனுக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியமானவை. கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஓடிமுடித்து பரிசை வெல்லுவது   தான் வீரனின் குறிக்கோள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் பந்தயசாலையில் ஓடுகிறவர்களாய் இருக்கிறோம். இந்த விசுவாச  ஓட்டத்தை ஆரம்பித்த நாம்  இந்த ஓட்டத்தை வெற்றியாய்  முடிக்க  வேதம் கூறும் ஆலோசனைகளை  தியானிக்கலாம்.

1.                இலக்கை நோக்கி ஓடு

உலகபிரகாரமாக ஓட்டப்பந்தயத்தில் கலந்துக்கொள்ளும் ஒரு வீரனும்  பழைய சாதனையை முறியடித்து சரித்திரம்  படைக்க வேண்டும்  பரிசை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளோடு ஓடுவான். ஆவிக்குரிய ஓட்டத்தை குறித்து பவுல் கூறுகிறார் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன் [பிலிப்பியர்:314].நம்முடைய கிறிஸ்தவ ஓட்டம் நித்திய நித்தியமான ஓட்டம். நாம் நமக்கான இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அநேகமாக ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் நாம் ஒவ்வொருவரும் அந்த ஆண்டுக்கான உலக பிரகாரமான இலக்குகள் நிர்ணயிப்பது உண்டு. கர்த்தருடைய பிளைகளான நாம் ஆவிக்குரிய இலக்குகளை இந்த ஆண்டில் நிர்ணயிப்போம். உலகபிரகாரமான பரிசை வெல்லுவது அல்ல நம்முடைய குறிக்கோள். தேவன் அழைத்த பரம அழைப்பில் உண்மையாயிருந்து; விசுவாசத்துடன் நல்ல போராட்டத்தை போராடி; ஓட்டத்தை முடித்து நித்திய ஜீவனை பற்றிக்கொண்டு; அழியாத நீதியின் கிரீடத்தை பெற்றுக்கொள்ளுவதே நம்முடைய இலக்கு. அப்போஸ்தலராகிய பவுல் கூறுகிறார்  விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய் [1தீமோத்தேயு: 6:12].நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் நமக்காக பலியாகி தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் நமக்கு நித்திய ஜீவனை பெற்றுத் தந்தார். அவருடைய பரம அழைப்பை ஏற்றுக்கொண்டு நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்வதே  நம்முடைய இலக்கு. கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இந்த புதிய ஆண்டில் கிறிஸ்து இயேசுவினால் எதற்காக பிடிக்கப்பட்டோமோ அதை பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய் நம்முடைய இலக்கை நோக்கி ஓடுவோம்.தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தய பொருளை நானும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தோடு ஓடுவோம்.

 

2.                பாவத்தை தள்ளி விட்டு ஓடு

ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு.... நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்[எபிரெயர்:12:1].

 

நாம் முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை களைந்துபோட்டு புதிதான ஆவியுள்ளவர்களாய் நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தை ஓட வேண்டும். நாம்  பாரமான யாவற்றையும் நம்மை சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு புதிய சிந்தையோடும் புதிய இருதயத்தோடு இந்த புதிய ஆண்டில் பிரவேசிப்போம். பாரமான சுமையை முதுகில் சுமந்துகொண்டு நாம் வேகமாக ஓட முடியாது.நம்முடைய பாவங்களையெல்லாம் இயேசு கிறிஸ்து சிலுவையிலே சுமந்து தீர்த்துவிட்டார்.   வேதம் கூறுகிறது பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன் [ரோமர்:6:23]. நாம் இரட்சிக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து பாவ வாழ்கையை வாழ்ந்து கொண்டிருந்தால் நித்திய ஜீவனை பற்றிக்கொள்ள முடியாது. ஏனென்றால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக மனிதனை ஆண்டுக்கொள்ளும். ஆவிக்குரிய ஓட்டத்தை நன்றாக ஆரம்பித்த சவுல் ராஜா, முதல் மனிதன் ஆதாம், நியாதிபதியாகிய சிம்சோன்  ஆகியோர்  வெற்றியாய் முடிக்கவில்லை. வேதம் கூறுகிறது ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்யாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின; எல்லாம் புதிதாயின [2கொரிந்தியர்:5:17]. கிறிஸ்துவுக்குள்ளான ஓட்டத்தை ஆரம்பித்த நாம் வெற்றியாய் முடிக்க வேண்டுமானால் நம்மிடம் உள்ள பழைய மனிதனின் செயல்பாடுகள் தேவ சமூகத்தில் அறிக்கை செய்து விட்டுவிட வேண்டும். இந்த புதிய ஆண்டில் பிரவேசிக்கிற நாம் பழைய பாவத்தை உதறி தள்ளிவிட்டு  தேவனோடுள்ள உறவை புதுப்பித்துக் கொண்டு பரம அழைப்பின் பந்தய பொருளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற புதிய தீர்மானத்தோடு ஆசையாய் தொடருவோம்.

 

3.                இச்சையடக்கத்தோடு ஓடு

பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம் [1கொரிந்தியர்:9:25]. 

இச்சையடக்கம் ஆவியின் கனிகளில் ஒன்று. உலகப்பிரகாரமான ஓட்டபந்தயத்திற்கு ஓடுகிற ஒரு மனிதன் பந்தயத்தை வெல்ல உணவை வெறுத்து, கடும் உடற்பயிற்சி செய்து தன் உடலை  கட்டுகோப்பாக வைத்துக்கொள்ளுவான். அழிந்து போகும் ஒரு கிரீடத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் என்றால் அழிவில்லாத கிரீடத்தை வாஞ்சிக்கும் நாம் எவ்வளவு இச்சையடக்கமுள்ளவர்களாய் (strict discipline or training)  செயல்பட வேண்டும் என்று சிந்தித்து பாருங்கள். கடைசி நாட்களில் மனிதர்கள் சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும் ,இச்சையடக்கமில்லாத வர்களாயும் இருப்பார்கள் என வேதம் நம்மை எச்சரிக்கிறது. ஏனெனில் மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை போன்ற காரியங்கள் பிதாவினால்   உண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினால்  உண்டானவைகள்.  உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம். வேதம் கூறுகிறது கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள் [கலாத்தியர்:5:24]. ஆம் பிரியமானவர்களே நாம் கிறிஸ்துவை தரித்துக்கொண்டு ஆவிக்கேற்றபடி நடந்துக்கொள்ள நம்மை அர்ப்பணிப்போமா?. வேதம் கூறுகிறது எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதை பிடித்துக் கொள்ளுங்கள். பொல்லாங்காய் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள் [1தெசலோனிக்கேயர்: 5:21,22]. நாம் எதை செய்தாலும் தேவனுக்கு பிரியமானதா என்று நம்மை சோதித்து பார்க்க பழக வேண்டும். நம்முடைய ஒவ்வொரு செயலும் தேவனுக்கு  மகிமையையும் கனத்தையும் கொண்டுவர  வேண்டும். இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்கு தப்பி திவ்விய சுபாவத்துக்கு பங்குள்ளவர்களாகும் பொருட்டு அழைக்கப்பட்ட நாம் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சியடக்கத்தோடே பொறுமையையும், தேவபக்தியையும் ,அன்பையும், சகோதரசிநேகத்தையும் கூட்டி வழங்குகிறவர்களாய்  வாழ இந்த புதிய ஆண்டில் முயற்சிப்போம்.

4.                பின்னானவைகளை மறந்து முன்னாவைகளை நோக்கி ஓடு

 

அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார்  பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்[பிலிப்பியர் :3:13,14]. நம்முடைய விசுவாச ஓட்டத்தில் நாம் சோர்ந்து போய் ஒருபோதும் பின்தங்க கூடாது.தேவனுடைய அழைப்பை பெற்றும் பின்னிட்டு பார்த்த லோத்துவின் மனைவி உப்புதூண் ஆனதை நாம் நன்கு அறிவோம். கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்று  வேதம் நம்மை எச்சரிக்கிறது[லூக்கா:9:62]. அன்பானவர்களே வேதம் கூறுகிறது நீங்கள்  கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். [கொலேசெயர்: 3:1-6]. நம்முடைய முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்கள் தாங்கள் விட்டுவந்த தேசத்தைக் நினைக்காமல் தேவன் தங்களுக்காக ஆயத்தம் பண்ணின பரம தேசத்தையே விரும்பினார்கள். தேவன் அவர்களை வெட்கப்படுத்தாமல் அவர்களுக்கு ஒரு நகரத்தையே ஆயத்தம் பண்ணினார்.கிறிஸ்துவோடு ஓட்டத்தை ஆரம்பித்த நாம் ஒருபோதும் உலகத்தின் கவலைகள், ஐசுவரியம்,விக்கிரகராதனையாகிய பொருளாசை போன்ற அசுத்தங்களில்  சிக்கி பின்வாங்கி போகாமல்  மேலானவைகளையே நோக்கி ஓடக்கடவோம்.கடந்த ஆண்டில்  நாம் சந்தித்த தோல்விகள் துன்பங்கள் நிந்தைகள் அவமானங்களை நாம் மறந்து முன்னானவைகளை எதிர்நோக்கி ஓடுவோம். உலகபிரகாரமான வாழ்க்கையிலும் நாம் பின்தாங்கி போயிருந்தாலும் தேவன் தந்த வாக்குதந்தங்களை நோக்கி பார்த்து ஓடுவோம். வேதம் கூறுகிறது  முந்தினவைகளை நினைக்க வேண்டாம்; பூர்வமானவைகளை சிந்திக்க வேண்டாம். இதோ நான் புதிய காரியத்தை செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்[ஏசாயா:43:1819].  தேவன் நமக்கு தந்த வாகுதத்தங்களை உறுதியாய் பற்றிகொண்டு பின்னிட்டு பாராமல் முன்னானவைகளை நோக்கி ஓடுவோம்.

 

 

5.                இயேசுவை நோக்கி ஓடு

 

விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்[எபிரெயர்:12:1].

விசுவாச ஓட்டத்தை துவக்குபவரும் முடிக்கிறவரும் ஆதியும் அந்தமும் அல்பாவும் ஓமெகாவுமான நம்முடைய கர்த்தர். நம்முடைய ஓட்டத்தில் பள்ளங்கள், மேடுகள், பள்ளத்தாக்குகள், கோணலான பாதைகள் இருக்கலாம். எந்த  சூழ்நிலையிலும் நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி பார்த்து ஓடும்  போது அவர் நமக்கு பெலன் தருகிறவராய் நம்மை உற்சாகபடுத்துகிறவராய்  நம்மோடு இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து  மனிதனாக இந்த உலகத்தில் வாழ்ந்த போது பல நிந்தைகளை அவமானங்களை சோதனைகளை துன்பங்களை  சந்தித்தார். அவர் மரணபரியந்தம் தம்மை தாழ்த்தி கீழ்படிந்தவராகி  பிதாவின் சித்தத்தையே செய்து முடித்தார். அவருடைய அடிச்சுவடுகளை நாமும் பின்பற்றும்படி நமக்கு மாதிரியை வைத்து போனார்.

 

ஓட்டப்பந்தயத்தின் விதிமுறைகளை ஒரு வீரன் பின்பற்றவில்லை என்றால் அவன் பந்தயத்திலிருந்து நீக்கப்படுவான். அதுபோல நாமும் நம்முடைய ஓட்டத்தில் வெற்றி பெற வேண்டுமானால் தாழ்மையுடன் பிதாவின் சித்தத்திற்கு  கீழ்படிந்து ஓட வேண்டும்.வேதம் கூறுகிறது என் பிதாவின் சித்தத்தின்படி   செய்கிறவனே பரலோகராஜ்யத்தில்  பிரவேசிப்பானேயல்லாமல்,   என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை [மத்தேயு:7:31]. அவர்  நமக்கு காண்பித்த வழிகளில் ஒன்று அவருடைய சிலுவையை சுமந்து கொண்டு அவருக்கு பின்செல்லுவது. ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் என்று வேதம் கூறுகிறது [மாற்கு:8:34]  அதாவது நம்முடைய சித்தத்தை(விருப்பத்தை) சிலுவையில் அறைந்து விட்டு பரலோக பிதாவின் சித்தத்தை செய்கிறவர்களாய் அவருக்கு பின்செல்ல வேண்டும். கிறிஸ்துவின் சிலுவையை சுமந்து கொண்டு பொறுமையாய் நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தை ஓடுவோம்.

 

6.                நிச்சயத்தோடு ஓடு

     அப்போஸ்தலராகிய பவுல் கூறுகிறார் ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்[1கொரிந்தியர்:9:26]. விசுவாச ஓட்டத்தின் நாயகர் இயேசு கிறிஸ்து.நம்மில் ஓட்டத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவரும் அவரே. எனவே நம்மில் விசுவாச ஓட்டத்தை ஆரம்பித்தவர் முடிவுபரியந்தம் நம்மோடு கூட  இருந்து ஓட்டத்தை முடிக்க உதவி செய்வார் என்ற விசுவாசத்தோடு நாம் ஓட வேண்டும். ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வீரன் நான் பரிசை வென்று வருவேன் என்ற துணிச்சலோடும் நம்பிக்கையோடும் ஓடுவான். தேவனிடமிருந்து பரம அழைப்பை ஏற்றுக்கொண்ட நாமும்  பந்தயபொருளை நிச்சயமாய் பெற்றுக்கொள்ளுவேன் என்ற நம்பிக்கையோடு   ஓட வேண்டும் . பவுல் கூறுகிறார் நான்  ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன் [அப்போஸ்தலர்:20:24]. என்ன அருமையான சாட்சி பாருங்கள். இப்படி தேவனுக்கு சாட்சியாய்  வாழ்ந்த அப்போஸ்தலனாகிய பவுல்  தான் தேகத்தை விட்டுபிரியும் காலம் வந்த போது சொன்ன வார்த்தைகள் நம்மை மெய்சிலிர்க்க செய்கிறது அல்லவா!நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு  மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்[திமோத்தேயு:4:6-8].இந்த நிச்சயம் இன்று நமக்கு இருக்கிறதா? சற்று  சிந்தித்துப் பார்ப்போம் அன்பானவர்களே.அவர் பிரசன்னமாகுதலை விரும்புகிற யாவருக்கும் நீதியின் கிரீடத்தை தருவார் என்ற நம்பிக்கையை பவுலடியார் நமக்கு ஊட்டுகிறார். நம்மில் ஓட்டத்தை துவக்கினவராகிய இயேசு கிறிஸ்து  வழுவாதபடி நம்மை காத்து தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மாசற்றவர்களாய் நம்மை நிறுத்தவும் வல்லவர் என்று விசுவாசிப்போம்[யூதா:1:24].நீதியின் கிரீடத்தை நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தரின் கையிலிருந்து பெற்றுக்கொள்ளவோம் என்ற நிச்சயத்தோடு நம்முடைய ஓட்டத்தை  தொடருவோம்.

 

 

நம்முடைய பிதாவாகிய தேவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களினாலும் நம்மை ஆசீர்வத்திருக்கிறார். கடந்த ஆண்டு முழுவதும் நம்மை கரம்பிடித்து நடத்திய தேவன் இந்த ஆண்டும் நம்மை வழிநடத்த வல்லவர் என்ற விசுவாச உறுதியோடு தேவன் நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் நம்முடைய இலக்கை நோக்கி ஓடுவோம். கடந்த ஆண்டில் நம்மை பாழாக்கின பாவங்களை உதறி தள்ளிவிட்டு இச்சையடக்கத்தோடு, பின்னிட்டு பாராமல், இயேசுவை நோக்கி பார்த்து, நிச்சயத்தோடு ஓடுவோம். தேவன் நமக்கு வைத்திருக்கும் பந்தயபொருளை சுதந்தரித்துக்கொள்ளுவோம். இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற நம்  மீட்பரான கர்த்தர் சொல்லுகிறார்: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே[ஏசாயா:48:17]. இந்த புதிய ஆண்டிலே தேவனே நீரே என்னோடிருந்து ஒரு வெற்றியுள்ள ஆவிக்குரிய வாழ்க்கை வாழ உதவி செய்யும் என அவர் கரத்தில் நம்மை தாழ்த்தி அர்ப்பணிப்போம்.கடந்த ஆண்டை பார்க்கிலும் தேவனுக்காக அநேகம் ஆத்துமாக்களை ஆதாயம் செய்வேன் என்று ஒரு இலக்கை நமக்கு நிர்ணயித்துக்கொள்ளுவோம். இந்த ஓட்டத்தை வெற்றியாய் ஓடி முடிக்க தேவன் நமக்கு துணைசெய்வாராக.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த புதிய ஆண்டிலே நம் ஒவ்வொருவரையும் புதிய கிருபையினாலும் அபிஷேகத்தினாலும் நிறைத்து இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி ஆசீர்வதித்து வழிநடத்துவாராக. ஆமென்.

 

-----------------------------------