Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 10/10/2015

விசேஷித்த நதி

 சகோ. எட்வின் (சோஹார் - ஓமான்)

ஒரு நதியுண்டு அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும் உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும் சங்கீதம் 46:4. விசேஷித்த நதியின் சிறப்பு பெயர்கள்: ஜீவ நதி, வற்றாத நதி, அபிஷேக நதி, அற்புத நதி

 முன்னுரை:

 தேவன் இன்றைய மாத மன்னாவில் வேதத்தில் மறைந்து இருக்கிற நதியைப் பற்றி எழுதும்படியாக கிருபை தந்தார் அதற்காக ஆண்டவராகிய இயேசுவை ஸ்தோத்திரிக்கிறேன். நதி என்றவுடனே நமக்கு ஞாபகம் வருவது இந்த உலகத்தில் ஓடிக் கொண்டிருக்கிற நதிகளையே அதுமட்டுமல்லாமல் இந்த நதிகளைக் குறித்து அனேக விவரங்களையும் நம்முடைய கல்வி வாழ்க்கை நமக்கு தந்ததையும் எப்படி மறக்க முடியும். இவைகளுக்கு மனுஷர்கள் தரும் பெயர்கள் ஜீவ நதி வற்றாத நதி, மகா பெரிய நதி என்பதாகும் ஆனால் இவர்களுக்கு ஒரு காரியம் தெரிய வேண்டும் அதுஎன்னவென்றால் சில நேரங்களில் இவைகள் வற்றிப்போம் சில நேரங்களில் நம்முடைய உயிரையும் எடுத்து விடுகிறது அதாவது இப்படிப்பட்ட நதிகளை நம்பி வாழ்கிறவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே காத்திருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

 

இதேபோலத்தான் நம்முடைய வாழ்க்கையிலும் பலவிதமான நதிகள் பாய்வதுண்டு எப்படியென்றால் நமக்கு யாரெல்லாம் உதவி செய்து கொண்டிருக்கிறார்களோ அல்லது நமக்கு உறுதுணையாயிருப்பவர்கள் எல்லாரையும் நான் இங்கு நதியாக குறிப்பிடுகிறேன் எப்படி கோடைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் இந்த உலக நதிகள் காணாமற் போகிறதோ அதேபோல நமக்கு உதவி செய்து கொண்டிருக்கிற அல்லது தற்காலிக செழிப்பைத் தருகிற நதிகளும் காணாமற் போகிறது. இத்தகைய காரியத்தை அனேகருடைய வாழ்க்கையில் நாம் பார்க்க முடிகிறது. உதாரணமாக சிலர் சொல்லுவார்கள் எனக்கு எல்லாமே எங்கள் பெற்றோர் தான் அதாவது எங்களுடைய முதல் தெய்வம் எங்கள் பெற்றோரே என்று பெருமை பாராட்டுவதை நாம் காணலாம் ஆனால் இந்த பெருமை எவ்வளவு நாட்கள் தொடர்கிரது என்பதை பார்ப்பீர்களானால் திடீரென அவர்களுடைய பெற்றோரின் ஆயுசு முடிந்து போகும் போது அவர்கள் படுகிற கஷ்டங்களை நாம் பார்க்க முடிகிறது ஆகவேதான் வேதம் சொல்லுகிறது,  நாசியில் சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டு விடுங்கள் எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம் என்று ஏசாயா 2:22 ல் வாசிக்கிறோம்.

இன்றைக்கு ஒரு விசேஷித்த நதியை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன் அதுமட்டுமல்லாமல் அந்த நதி நம்மை சந்தோஷப்படுத்த வேண்டுமானால் அதாவது நம்முடைய வாழ்க்கையில் பாய வேண்டுமானால் நாம் எப்படிப்பட்டவர்களாக அதாவது நம்முடைய வாசஸ்தலம் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் கடைசியாக நதியின் மகத்துவத்தையும் உங்களுக்கு காண்பித்து தர விரும்புகிறேன்.

 

முதலாவதாக விசேஷித்த நதி யார் என்பதை அறிமுகப்படுத்துகிறேன்; வேத சொல்லுகிறது, வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத் தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப் போகிற ஆவியைக் குறித்து இப்படிச் சொன்னார், இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை [ யோவான் 7:38,39 ] ஆம் இந்த வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியானவரை ஜீவ தண்ணீருள்ள நதி என்று குறிப்பிடுவதை நாம் பார்க்க முடிகிறது இன்னும் தெளிவாக உங்களுக்கு விளக்கப்படுத்த விரும்புகிறேன் எப்படியென்றால் வேதம் சொல்லுகிறது இயேசு கிறிஸ்து இந்த நதியாகிய பரிசுத்த ஆவியானவரை பெற்றுக் கொள்ளாததினால் அவர் இன்னும் மகிமைப்படவில்லை என்று குறிப்பிடுவதை அறிகிறோம்.

 

யார் இந்த பரிசுத்த ஆவியானவர்?

 

இன்று அனேகருடைய வாழ்க்கையில் ஏற்படுகிற ஒரு பெரிய சந்தேகம் யார் இந்த பரிசுத்த ஆவியானவர் இவர் தெய்வமா? அல்லது மூன்றாவது நபரா? அல்லது இவர் தேவனின் ஆவியா? அதுமட்டுமல்லாமல் சிலர் இப்படியாக சொல்லிக் கொடுப்பார்கள் இவர் தேவனுடைய ஆவி, கர்த்தரின் ஆவி ஆனால் அவர் குமாரனின் ஆவி அல்ல என்றெல்லாம் அனேக குழப்பங்களை நம்மால் அனேக இடங்களில் பார்க்கிறோம் இதற்கெல்லாம் இன்றே ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்.

 

வேதம் சொல்லுகிறது, பரிசுத்த ஆவி என்பது தேவனுடைய ஆவி என்றும் கர்த்தரின் ஆவி என்றும் மற்றும் குமாரனின் ஆவி என்று தெளிவாக எழுதி வைத்திருப்பதை நாம் வேதத்தில் பார்க்கிறோம். அதுமட்டுமல்லாமல் வெளிப்படுத்தின விசேஷம் 22:1 ல் அழகாக இத்தகைய காரியம் வெளிப்படுத்தப்படுகிறது. எப்படியென்றால் பின்பு பளிங்கைப் போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறதை எனக்குக் காண்பித்தான். இந்த வசனம் பரிசுத்த ஆவி என்பது யாருடைய ஆவி என்பதை தெளிவாக சொல்லுவதை நம்மால் உணர முடிகிறது.

ஒரு காரியத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் வேதம் என்பது உலகப் புஸ்தகங்களைப் போல் படிக்க வேண்டிய புஸ்தகம் அல்ல எப்படி மனுஷரைக் குறித்து அறிய மனுஷருடைய ஆவி தேவையோ அதேபோல தேவனுடைய காரியங்களை படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் தேவ ஆவியாகிய பரிசுத்த ஆவியானவர் தேவை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். யார் வேண்டுமானாலும் தேவனுடைய வார்த்தையை கொடுக்கலாம் அல்லது யார் வேண்டுமானாலும் தேவனுடைய வார்த்தையை எழுதலாம் ஆனால் அதில் நிச்சயமாக தேவ வெளிப்பாடு இருக்க வேண்டும் அவ்பொழுதுதான் அந்த வார்த்தை மற்றவர்களுக்கு பிரயோஜனமாயிருக்கும் என்பதை மனதில் வைக்க விருப்புகிறேன்.

 

இரண்டாவதாக, நதி நம்மை நனைக்க வேண்டுமானால் நம்முடைய வாசஸ்தலம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும். நதி ஓடிவரும் இடங்கள்;

 

u  துதி இருக்கிறவர்களிடத்தில்

அப்பொழுது மரியாள் என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது, என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது லூக் 1:46,47, இந்த அற்புத நதி மரியாளை சந்தோஷப்படுத்துவதற்கு காரணம் அவள் தேவனை மகிமைப்படுத்துகிறவளாய் காணப்பட்டாள் அதாவது இந்த நதி தன்னிடத்தில் ஓடுவதற்கு துதி என்கிற ஒரு வாய்க்காலை ஏற்படுத்திக் கொடுத்தாள் என்று சொன்னால் மிகையாகாது ஆகவேதான் மரியாளுக்கு தேவனிடத்தில் ஒரு சிறப்பான இடம் ஒதுக்கப்பட்டது.

 

இன்று நாம் எப்படியிருக்கிறோம் சபைக்கு வந்து வெறுமையாக திரும்பி செல்வதற்கும் மற்றும் வந்த நோயை மறுபடியும் சுமந்து செல்வதும் எதினால் நாம் தேவனை நன்றாக துதிக்காததின் நிமித்தமே நாம் எப்பொழுதெல்லாம் ஆடிப்பாடி தேவனை துதிக்கிறோமோ அப்பொழுது மட்டுமே நம்முடைய கட்டுகள் உடைந்து போகும். பாருங்கள் யோசுவாவும் அவனுடைய கூட்டமும் தேவனை துதித்தபோது அவர்களுக்கு விரோதமாய் எழும்பி நின்ற எரிகோ கோட்டை விழுந்து போனது.

 

u  துதிக்காதவர்களை வேதம் என்ன சொல்லுகிறது?

 

சங் 115:17 ஐ வாசிப்பீர்களானால் தெரியும் யார் எல்லாம் தேவனைத் துதிக்கவில்லையோ அவர்கள் எல்லாரும் மரித்து போனவர்கள் ஆகவேதான் வேதம் சொல்லுகிறது

சுவாசமுள்ள யாவும் கர்த்தரை துதிப்பதாக என்று சங் 150:6 ல் எதற்காக தேவன் நமக்கு சுவாசத்தை தந்திருக்கிறார் என்பது நன்றாக புரிய வருகிறது. மேலும் வேதம் சொல்லுகிறது, ஸ்தோத்திரப்பலியிடுகிறவன் தேவனை மகிமைப்படுத்துகிறான் என்று சங் 50:23 ல் வாசிக்கிறோம், ஆம் நாம் தேவனை சந்தோஷப்படுத்த வேண்டுமானால் இந்த துதி என்கிற பாதை வழியாக போனால் மட்டுமே முடியும் என்று உறுதியாகிறது.

 

அடுத்ததாக, ஏன் நாம் தேவனை துதிக்க வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது?

 

1.நம்முடைய தேவன் துதிகளின் மத்தியில் வாசம் செய்கிறவர் என்று சங் 22:3 லும்

2.அவரே துதிக்குப் பாத்திரராய் விளங்குகிறார் என்று சங் 18:3 லும்

3,அவருடைய நாமங்களில் ஒன்று துதி என்று உபாகமம் 10:21 மற்றும் எரேமி 17:14 லும் தேவனை ஏன் துதிக்க வேண்டும் என்கிற காரியம் தெளிவாக விளங்குகிறது.

இந்த துதியை இன்னும் நான் மேன்மைப்படுத்த விரும்புகிறேன், பாருங்கள் சங்கீதக்காரன் சொல்லுகிறார், நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார் அனேகர் அதைக் கண்டு பயந்து கர்த்தரை நம்புவார்கள் [ சங் 40:3 ], இதோ துதியின் மகத்துவம் என்ன என்பதை நன்றாக புரிந்து கொண்டார் எப்படியென்றால் நான் தேவனை துதிக்கும் போது என்னுடைய சத்துருக்கள் நடுங்குவார்கள் ஆகவேதான் அவர் சொல்லுகிறார், நான் உயிரோடிருக்கும் மட்டும் கர்த்தரை துதிப்பேன் என்று சங் 104:33 மற்றும் சங் 146:2 லும் தன்னுடைய வாழ்க்கை இனிமேல் துதியின் அங்கமாகவே இருக்கும் என்று குறிப்பிடுகிறார்.

அடுத்ததாக, நாம் எப்பொழுது எப்படிப்பட்ட சூழ்நிலையில் தேவனை ஆராதிக்க வேண்டும்?

1.நாம் இடைவிடாமல் ஆராதிக்க வேண்டும் [ தனி 6:20 ]

2.நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் மற்றும் குறைகள் வரும் போதும் தேவனை துதிக்க வேண்டும் [ ஆபகூக் 3:17,18 ]

3.ஏழு நாளும், 24 மணிக்கூரும் தேவனை துதிக்க வேண்டும் [ யோசுவா 6:15 ]

ஆகவே நாமும் இந்த துதி என்கிற ஆயுதத்தை எடுத்து கொள்வோம் நம்முடைய வாழ்க்கையில் தடையாக இருக்கிற எல்லாவற்றையும் வெட்டிப் போடுவோம் அப்பொழுது இந்த விசேஷித்த நதி நம்மை நனைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

 

u  இயேசுவை மணவாளனாய் நிச்சயித்து கொண்டவர்களிடத்தில்

வேதம் சொல்லுகிறது, இயேசுவை தனக்கு மணவாளனாய் நியமித்து கொண்டவர்களிடத்தில் சந்தோஷம் உண்டாகிறது. [ யோவான் 3:29 ]  

மேலே சொல்லப்பட்ட வசனம் எதை உறுதிப்படுத்துகிறது என்றால் நம்முடைய மணவாளனாக இயேசு மாத்திரமே இருக்க முடியும் அப்பொழுது மாத்திரமே சந்தோஷம் உண்டாகும். ஆகவேதான் தேவன் சொல்லுகிறார் நித்திய விவாகத்திற்கென்று உங்களை எனக்கு நிச்சயித்துக் கொண்டேன் என்று ஓசியா 2:19ல் நாம் அவருடைய மணவாட்டி என்பதை மேலும் உறுதிப்படுத்துவதை பார்க்க முடிகிறது.


 

 

பாருங்கள் ஏன் இன்று நம்முடைய வாழ்க்கையில் துன்பங்கள் பிரச்சனைகள் வருகிறது என்றால் நாம் அடிக்கடி வோறொரு மணவாளனை தேடி செல்வதினால்தான் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். ஆவிக்குரிய காரியங்களைப் பற்றி பேசுகிறேன். எப்படியென்றால் இந்த உலகத்தின் மணவாளன் காண்பிக்கிற பகட்டும் மற்றும் ஏமாற்றம் ஆன காரியங்களுக்காக நம்மை அவனிடம் விற்றுப் போடுகிறோம் ஆகவேதான் இத்தகைய பெலனில்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்னாளின் வாழ்க்கையை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். நம்மெல்லாருக்கும் தெரிந்த ஒரு சம்பவம் எல்க்கானா என்கிற ஒரு மனுஷன் ராமதாயீம் என்கிற ஊரில் வாழ்ந்துக் கொண்டிருந்தான் அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். ஒருத்தி பெயர் அன்னாள் மற்றவள் பெயர் பென்னின்னாள். பென்னின்னாளுக்கோ அனேக குழந்தைகள் இருந்தனர். ஆனால் அன்னாளின் கர்ப்பமோ அடைக்கப்பட்டிருந்தது இதனிமித்தம் அன்னாள் தன் கணவனின் அன்பில் சமாதனாமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தாள். அவளுடைய புருஷனும் இரட்டிப்பான பங்கை தன் மனைவிக்கு கொடுப்பான் அதுமட்டுமல்லாமல் தன்னையே தன் மனைவிக்கு அர்ப்பணித்ததாக நாம் 1சாமு 1 ம் அதிகாரத்தை வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.

இதோ தேவனின் திட்டமோ இப்படியாக இருக்கவில்லை அதுமட்டுமல்லாமல் அன்னாள் இப்படிப்பட்ட அதாவது உலக சந்தோஷத்தினால் திருப்திப்படுவது தேவனுடைய திட்டம் அல்ல அதாவது அன்னாளை வைத்து தேவன் ஒரு பெரிய திட்டத்தையே தன்னுடைய புஸ்தகத்தில் எழுதி வைத்திருந்தார் ஆகவேதான் அன்னாளின் உலக மணவாளன் கொடுத்த சந்தோஷம் சிலகாலம் வரை நிலைத்திருந்தது. இதனால் அன்னாள் மறுபடியும் துக்கப்பட ஆரம்பித்தாள். ஆகவே அவள் தனக்கு நிலையான சந்தோஷத்தையும் சமாதானத்தையும் வைத்திருக்கிற தன்னுடைய மெய்யான மணவாளனை தேட ஆரம்பித்தாள். அதாவது தேவனைத் தேடிச் சென்றாள். இதன் பிறகே அவள் மணவாளனின் சத்தம் கேட்க ஆரம்பித்தாள் இதனால் அவள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை அதுமட்டுமல்லாமல் அவளுடைய முந்தின மணவாளன் கொடுத்த பங்கை விட அவளுடைய பிந்தின மணவாளனாகிய இயேசு கிறிஸ்து அதிகமாகவும் நிலைத்திருக்கிற பங்கையும் கொடுத்தார் என்பதை 1சாமு 1,2 மற்றும் 3ம் அதிகாரங்களை வாசிக்கும் போது நம்முடைய மணவாளன் எப்படிப்பட்டவராய் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

 

எனக்கு பிரியமான தேவ ஜனங்களே, அன்னாள் தன்னுடைய நிஜ மணவாளன் யார் என்பதை கண்டுபிடித்ததின் விளைவு அங்கு சாமுவேல் என்கிற தீர்க்கதரிசியும் சாமுவேல் என்கிற அதிகாரமும் வேதத்தில் உருவானது ஆகவே நாமும் நம்முடைய சபையும் தேவனுடைய புஸ்தகத்தில் எழுதப்பட வேண்டுமானால் சரியான மனவாளனை தெரிந்து கொள்ளுவோம், ஏனென்றல் வேதம் சொல்லுகிறது, தேவனுக்கும் உலக பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது என்று மத் 6:24 ல் நாம் எந்த மணவாளனுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

u  இயேசுவை தனக்கு முன்பாக வைத்திருக்கிறவர்களிடத்தில்

 

கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் ஆகையால் என் இருதயம் மகிழ்ந்தது என் நாவு களிகூர்ந்தது அப்போஸ்தலர் 2:25,26. மேலே சொல்லப்பட்ட வசனத்தின் விளக்கம் என்னவென்றால் நாம் இயேசுவை நம்முடைய வாழ்க்கையில் மாதிரியாக கொண்டு வாழும் போது நமக்கு சந்தோஷம் உண்டாகிறது. இதே உண்மையை 1 பேது 1:21 மறுபடியும் உறுதிப்படுத்துவதை நாம் வேதத்தில் பார்க்க முடிகிறது.  நம்மெல்லாருக்கும் தெரிந்த ஒரு பாத்திரம் அப்.பவுல் எப்படியென்றால் அவர் தன்னை உலகத்தில் ஒரு காதாநாயனாக நிறுத்தும்படியாக நியாயப்பிரமாணத்தை மாதிரியாக வைத்து வாழ்ந்து வந்தார், இதனால் தேவனுடைய பார்வையில் அவருடைய மதிப்பு பூஜ்ஜியமாக காணப்பட்டது. இதன் பிறகு அவர் தேவனால் சந்திக்கப்பட்டு உண்மையை உணர்ந்து கொண்டார் எப்படியென்றால் தன்னுடைய மாதிரியாக இயேசுவை மாற்றிக் கொண்டார் இதனால் அவருக்கு தேவனுடைய கண்களில் கிடைத்த தயவு எவ்வளவு பெரிதாய்க் காணப்பட்டது என்பதற்கு அவர் தேவன் மூலமாய் எழுதின நிரூபங்கள் பதில் சொல்லும்.

 

இன்று அனேகர் உலகத்தில் தங்களுக்கு பிரியமானவர்களை மாதிரியாக வைத்து வாழ்வதை நாம் பார்க்கலாம் எப்படியென்றால் சிலர் சொல்லுவார்கள் என்னுடைய தந்தைதான் எனக்கு முன்மாதிரி அவரைதான் என்னுடைய வாழ்க்கையின் கதாநாயகனாக வைத்து வாழுகிறேன் இதனால் என்ன நடக்கிறது தங்கள் பெற்றோர் சுமந்த அதே வியாதியை தாங்களும் சுமந்து கொண்டு அவர்கள் சாப்பிட்ட மருந்தையே தாங்களும் சாப்பிடுவதை பார்க்க முடிகிறது.

ஆகவே இப்பொழுதே நம்முடைய எண்ணத்தை மாற்றி கொள்வோம் நாசியில் சுவாசமில்லாத நபர்களை நாம் மாதிரியாக வைத்து வாழும்போது நமக்கு கிடைக்கும் ஆலோசனைகளும் சுவாசமில்லாததாகவே இருக்கும் பாருங்கள் சிலர் தங்கள் பாரம்பரிய சபையை விட மனதில்லாமல் அதேயே பிடித்துக் கொண்டு வாழ்கிறார்கள் இதனால் அவர்கள் செல்லுகிற இடமும் தங்கள் மூதாதையர் சென்ற பாழான நரகமே என்பதை மறந்து விடாதீர் [ சபையில் சத்தியம் இல்லாதபட்சத்தில் ]  அப்.பவுல் சொல்லுகிறார் நாம் கிறிஸ்துவை மாதிரியாக வைத்து வாழவேண்டுமானால் நமக்கு தேவையானது என்னவென்றால் வேதம் சொல்லுகிறது. கிறிஸ்துவின் சிந்தை வேண்டும் என்று பிலி 2:5ல் படிக்கிறோம். அதுமட்டுமல்லாமல் இப்படிப்பட்ட சிந்தை நம்முடைய வாழ்க்கையில் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அப்.பவுல் பின்வருமாறு தெளிவுப்படுத்துகிறார் நமக்கு லாபமாயிருக்கிற எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்றும் குப்பையென்றும் எண்ண வேண்டும் என்பதை பிலிப்பியர் 3:7,8.11 ல் எழுதி வைத்திருப்பதை நாம் படிக்கிறோம். ஆகவே இன்றே முடிவு எடுப்போம் நாசியில் சுவாசமில்லாத மனுஷனையா? அல்லது சுவாசமுள்ள இயேசுவையா?

 

u இயேசுவினால் வரும் உபத்திரவத்தை ஏற்று கொண்டவர்களிடத்தில்

வேதம் சொல்லுகிறது, அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்கும் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால் சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தை விட்டுப் புறப்பட்டுப் போனார்கள் அப்போஸ்தலர் 5:41 இந்த சீஷர்களிடத்தில் காணப்பட்ட சந்தோஷத்திற்கு காரணம் அதாவது இந்த அபிஷே நதி வந்து பாய்வதற்கு காரணம் அவர்கள் இயேசுவின் நிமித்தம் வருகிற உபத்திரவங்களை சந்தோஷமாய் ஏற்று கொண்டதினிமித்தமே என்பதுதான் உண்மை ஆகும். ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையில் இயேசுவினித்தம் உபத்திரவமோ அல்லது நெருக்கடியோ இல்லையென்றால் அவனுடைய வாழ்க்கை சரியான பாதையில் செல்லவில்லை என்பதுதான் அர்த்தம். (அதற்காக எப்பொழுதுமே பாடுகள் என்று சொல்லவில்லை) எப்படி முள்ளிகளின் மத்தியில் ஒரு அழகான ரோஜா பூ பூக்கிறதோ அதேபோலத்தான் பலபாடுகளின் மத்தியில் தான் நாம் தேவனுக்கு கனி கொடுக்க முடியும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உபத்திரவமோ அல்லது தங்களுடைய ஆசீர்வாதத்தில் எந்த நெருக்கடியும் வராது என்று சொல்லுகிறவர்களுக்கு வேதம் சொல்லுகிறது, உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு [ யோவான் 16:31 ], என்னிமித்தம் துன்பப்படுவீர்கள் [ மத் 5:11 ], என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள் [ மத் 24:9 ] இப்படியாக வேதம் எல்லா இடங்களிலும் இயேசுவை நேசிப்பவர்களுக்கு வேதனைகளும் பாடுகளும் சொந்தமாகும் என்றும் அதுமட்டுமல்லாமல் இந்த உபத்திரவங்கள் கடைசி நாளின் அடையாளமாய் இருக்கும் என்றும் தேவன் சொல்லிருப்பதை நாம் அறிய முடிகிறது.  வேதம் சொல்லுகிறது, கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது என்று பிலி 1:29 ல் காண்கிறோம். ஆகவே இன்று முதல் கிறிஸ்துவின் மூலம் வரும் எல்லா உபத்திரவங்களையும் பொறுத்து கொள்வோம் அப்பொழுதுதான் இந்த நதி பாயும் போது அதாவது இந்த அற்புத நதி நம்முடைய வாழ்க்கையில் பாயத்தொடங்கிவிட்டால் நம்மை யாராலும் கிறிஸ்துவிடம் இருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது.

 

கடைசியாக இந்த விசேஷித்த நதியினால் ஏற்படும் நன்மைகளைப் பார்க்கப் போகிறோம் [ எசே 47:8.9,10,11,12 ]

 

1.மரித்தவர்கள் பிழைப்பார்கள் [ அப் 1:8 மற்றும் 2ம் அதிகாரம் ]

இயேசு உயிர்த்தெழுந்து சீஷர்களை விட்டு பரலோகம் சென்ற பின்னர் சீஷர்கள் மரித்தவர்களைப் போல காணப்பட்டார்கள் ஆனால் இந்த நதி அவர்களுடைய வாழ்க்கையில் பாய்ந்த போது மரித்த சரீரங்கள் உயிர்பிழைத்ததை பார்க்க முடிகிறது.

2.ஆரோக்கியம் உண்டாகிறது [ அப் 5:15,16 ]  அப்.பேதுரு நடந்து போகையில் அனேக பிணியாளிகளை அவர் நிழல் படும்படியாக கொண்டு வந்து வைத்தனர் இப்படியாக கொண்டு வைக்கப்பட்டவர்கள் பேதுருவிடம் இருந்து பாய்ந்து வந்த நதியினால் ஒவ்வொருவருவரும் குணமானதை பார்க்கிறோம்.

3.வெகு ஏராளமான மச்சங்கள் உண்டாகிறது [ அப் 4:4 ]

ஒரு மீனைக் கூட பிடிக்கமுடியாமல் கரை திரும்பிய பேதுருவின் வாழ்க்கையில் இந்த ஜீவ நதி பாய்ந்த போது அவருடைய வலையில் சிக்கிய மீன்களின் எண்ணிக்கை 5000 மற்றும் 3000 ஆக இருந்தது

4.சகலவித விருட்சங்கள் வளருகிறது [ ஏசா 51:2 ]

இதோ தனிமரமாக இருந்த ஆபிரகாமின் வாழ்க்கையில் இந்த நதி பாய்ந்த போது அவருடைய வாழ்க்கையில் இக்கரையிலும் அக்கரையிலும் எண்ணிக்கைக்கு அடங்காத விருட்சங்கள் உண்டாயின

5.கனி கெட்டுப் போவதில்லை [ 1தீமோ 4:7,8 ]

இந்த நதி யாருடைய வாழ்க்கையில் எல்லாம் பாய்கிறதோ அவர்களுடைய வாழ்க்கை மட்டும் கடைசிவரை தேவனுக்கு ருசியுள்ள நல்ல கனியைக் கொடுத்து வருகிறது.

6.புதுக்கனிகள் உண்டாகிறது [ 1கொரி 12ம் அதிகாரம் ]

இந்த நதியை அனுமதிப்பவர்களின் வாழ்க்கையில் எல்லாம் 9 வகையான கனிகள் உண்டாகிறது அதாவது ஆவிக்குரிய வரங்கள் பெருகுகிறது.

7.மரத்தின் எல்லா பாகமும் பயன்படுகிறது [ சங் 92:15 ]

சில மரங்களை பார்ப்பீர்களானால் அவைகளில் சில பாகம் மட்டுமே பயன்படுகிறதாய் இருக்கும் மற்றும் சில மரங்களில் அதின் எல்லா பாகமும் பயன்படுகிறதாயிருக்கும் உதாரணமாக பனை மரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் இதில் உள்ள எல்லா பாகத்தையும் நம்மால் பயன்படுத்த முடியும் ஆகவேதான் தேவன் பனைமரத்தை நீதிமானோடு ஒப்பிட்டு சொல்லுகிறார் என்கிற உண்மை வெளிப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையிலும் எல்லா பாகமும் பயன்பட வேண்டுமானால் இந்த நதி பாய்ந்து ஓட வேண்டும்

பிரியமான தேவப் பிள்ளைகளே நம்முடைய வாழ்க்கையில் இந்த நதியினால் ஏற்படுகிற நன்மைகளை அனுபவிக்க வேண்டுமானால் இந்த நதி பாய்ந்து செல்வதற்கு தடையாக இருக்கிற எல்லா தடைகளையும் உடைத்து எறிய வேண்டும் அப்பொழுதுதான் இந்த நதி விசாலமாய் பரந்து செல்லும் வேதம் சொல்லுகிறது

இந்த அற்புதமான நதி ஒவ்வொருவருடைய கதவையும் தட்டிக் கொண்டிருக்கிறது கதவை திறந்தால் அந்த நதி நம்மை செழிப்பாக மாற்றும் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை [ வெளி 3:20 ]

தேவனாகிய இயேசு தாமே நம் ஒவ்வொருவரையும் தம்முடைய நதியின் மூலம் ஆசீர்வதிப்பாராக!