Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 20/02/2016

உன் விசுவாசம் எப்படிப்பட்டது ?

சகோதரி. அனு ஃபெஸ்லின்

 

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு அன்பில் வாழ்த்துக்கள். விசுவாசம் என்பது கிறிஸ்தவ வாழ்க்கையின் உயிர்நாடி. ஒரு மனிதன் மூச்சில்லாமல் எப்படி வாழமுடியாதோ அதுபோல விசுவாசமில்லாமல் நாம் தேவனுக்கு பிரியமாயிருக்க முடியாது. விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாய் இருக்கிறது [எபிரேயர்:11:6]. தேவக்கிருபையினாலே  விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்பட்ட நாம் தரிசித்து நடவாமல் தேவனை விசுவாசித்து நடக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். பவுல் கூறுகிறார் விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே [ரோமர்:14:23]. அதே விசுவாசம் கிரியையினால் பூரணப்படும் என்று வேதம் நமக்கு கற்று தருகிறது, விசுவாசமும் கிரியையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. ஒரு பக்கம் இல்லாமல் அல்லது மங்கி போனால் அது பயனற்றதாய் போய்விடும். யாக்கோபு எழுதின நிருபத்தில் சொல்லப்பட்டிருக்கிற மூன்று விதமான விசுவாசத்தையும் எவ்வாறு அந்த விசுவாசங்கள் கிரியைகள் மூலமாய் வெளிப்படுகிறது என்பதையும் தியானிக்கலாம்.

1.     செத்த விசுவாசம்

அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலே தானே செத்ததாயிருக்கும் [யாக்கோபு:2:17]. செத்த விசுவாசம் உள்ளவர்கள் வேதத்தை முழுமையாக அறிந்திருப்பர்,அழகாக ஜெபிப்பார்கள். ஆனால் விசுவாசம் பேச்சில் மட்டுமே இருக்கும் வாழ்க்கையிலோ செயலிலோ நாம் காண முடியாது. இவர்கள் தேவனிடம் எந்த உறவும் இல்லாத நிலையில் வாழ்வார்கள். இயேசு நன்மை செய்கிறவராய் இவ்வுலகில் சுற்றி திரிந்தார். அதுபோல நாமும் ஏழை எளியவர்களுக்கு இரங்கி நன்மை செய்யாமல் விசுவாச வார்த்தைகள் மட்டுமே பேசி வாழ்ந்து கொண்டிருந்தோமானால் நம்முடைய விசுவாசம் செத்ததாய் இருக்கும். இயேசு கிறிஸ்து கூறுகிறார் இந்த சிறியரில் ஒருவனுக்கு எதை செய்யாதிருந்தீர்களோ அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் [மத்தேயு:25:42].

தேவனுக்கு தங்களை முழுமையாக அர்ப்பணம் செய்யாமல் பழைய மனிதனின் செத்த கிரியைகளுள்ள வாழ்க்கை வாழும் மனிதர்களும் செத்த விசுவாசிகள். இவர்கள் தேவனை விசுவாசித்தாலும் எந்த ஒரு மனமாற்றமும் இல்லாமல் தேவன் தம்மை மீட்டெடுத்த இரட்சிப்பின் நோக்கத்தை நிறைவேற்றாமல் வாழ்வார்கள். பாவத்தினாலும் அக்கிரமத்தினாலும் மரித்து போயிருந்த நம்மை தேவன் உயிர்ப்பித்து ஜீவன் தந்தார். அந்த  ஜீவனில் பிரவேசியாமல் இரட்சிக்கப்படுமுன் வாழ்ந்த பழைய பாவ மனிதனின்   செத்த கிரியைகளை செய்யும் இவ்விசுவாசிகளை யாக்கோபு வீணான (ஆண்டவருடைய இராஜ்யத்துக்கு உபயோகமற்ற) மனுஷனே என்று குறிப்பிடுகிறார். அப்படியே ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறது போல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது [யாக்கோபு:2:20,26]. ஆவியானவர் சர்தை சபையின் தூதனுக்கு எழுதும் போது உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய். உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை என எச்சரிக்கிறார்[வெளி:3:1,2]. இயேசு கிறிஸ்துவின்  காலத்தில் வாழ்ந்த வேதபாரகர் பரிசேயர்  தங்கள் வாயினால் தேவனிடத்தில் சேர்ந்து உதடுகளினால் கணம் பண்ணினார்கள். ஆனால் அவர்கள் இருதயமோ அவருக்கு தூரமாய் விலகியிருந்தது. அன்பானவர்களே நம்முடைய இருதயம் தேவனுக்கு முன்பாக எப்படி இருக்கிறது? சிந்திப்போம். ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று வேதம் எச்சரிக்கிறது[யோவான்:3:3]. செத்த விசுவாசம் நம்மை ஒருநாளும் இரட்சிக்காது. விசுவாசத்தால் இரட்சிக்கப்பட்ட நாம் கொண்டிருக்கும் விசுவாசத்தை உயிருள்ள விசுவாச கிரியைகளில் காண்பிப்போம்.

2.     மாய்மாலமான விசுவாசம்

தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படி செய்கிறது நல்லது தான்; பிசாசுகளும் விசுவாசித்து நடுங்குகின்றன [யாக்கோபு:2:19]. பிசாசுகள் தேவனை விசுவாசித்தாலும், வேத வசனங்கள், பாதாளம், நியாயத்தீர்ப்பு பற்றிய அறிவிருந்தாலும் அவைகள் இருளை விட்டு ஒளியாகிய தேவனிடம் வருவதில்லை. எடுத்துக்காட்டாக லேகியோன் என்ற பிசாசு இயேசுவைக் கண்ட போது கூக்குரலிட்டு அவருக்கு முன்பாக விழுந்து இயேசுவே தேவனுடைய குமாரனே என்று கூப்பிட்டு தங்கள் கூட்டத்தை பாதாளத்துக்கு போக கட்டளையிடாதபடி வேண்டிகொண்டன [லூக்கா:2:28-31]. இத்தகைய விசுவாசத்தை கொண்ட விசுவாசிகள்  தேவனுடைய வார்த்தையை நன்றாக அறிந்திருப்பர்; ஆராதனையில் பக்திவிருத்தியை காண்பிப்பார்கள். அதாவது தேவனை விசுவாசிப்பார்கள், மாய்மாலமான  கிரியை செய்வார்கள். தேவனுடைய இராஜியத்தை குறித்தும், அவருடைய மேன்மையை குறித்தும், அவருடைய வல்லமையை குறித்தும் நன்கு அறிந்து மற்றவர்களுக்கு முன் தேவனை மகிமைப்படுத்துவார்கள். ஆனால்  உள்ளான மனுஷனில் மாற்றம், உண்மையான அர்ப்பணம் இருக்காது. தங்கள் கிரியைகள் பொல்லாதவைகளாய் இருப்பதால் ஒளியைப் பகைத்து அதை பார்க்கிலும் இருளையே விரும்புவர். ஆலயத்திலே தேவனுடைய சந்நிதானத்தில் வரும்போது தேவனை துதித்து ஆராதித்து மகிழுவார்கள். ஆலயத்திற்கு வெளியே சென்று மனிதனையும், உலக காரியங்களையும் சிற்றின்பங்களையும் விரும்பி மனிதனை பிரியப்படுத்தி மகிழுவார்கள். இப்படி தேவனுக்கும் உலகத்துக்கும் ஊழியம் செய்வார்கள்.  தேவனிடம் சாதாரண ஒரு உறவு நிலை மட்டும் வைக்கும் விசுவாசிகளாகிய இவர்கள் தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தி நியாப்பிரமாணக்  கிரியைகளினால் தங்களை நீதிமான்களாய் உலகத்திற்கு காண்பிக்கிற கூட்டம்.

இயேசு கிறிஸ்து இவர்களை வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பிடுகிறார். இவர்கள் மனுஷருக்கு முன்பாக நீதிமான்களாக புறம்பே காணப்படுவார்கள். ஆனால் உள்ளமோ  மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கும். வேதம் கூறுகிறது வேதபாரகர் பரிசேயர் நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை [மத்தேயு:5:20] மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ நீங்கள் ஒற்றைதலாமிலும், வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி நியாயப்பிரமாணத்தில் கற்ப்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள் என்று கண்டிக்கிறார். அதாவது நமக்கு கொடுக்கப்பட்ட உலகப்பிரகாரமான வேலையை உண்மையும் உத்தமமுமாய் நீதியுமாய் செய்யாமல், ஏழைகளுக்கு இரங்காமல், சகோதரர் சகோதரியோடு நல்லுறவு இல்லாமல், தேவனைப் பற்றும் விசுவாசமில்லாமல் போதகருக்கும் சபை மக்களுக்கும்  முன்பாக கணத்தைப் பெற்றுக் கொள்ள தசமபாகம் செலுத்தி நம்மை நீதிமான்களாய் காட்டும் போது தேவனுக்கு முன்பாக அது அருவருப்பாய் இருக்கிறது [மத்தேயு:23:23-28]. நம்முடைய நியாயப்பிரமாண கிரியைகள் நம்மை தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாக்காது. இந்த மாய்மாலமான விசுவாசம் நம்மை இரட்சிக்காது. வேதம் கூறுகிறது மனுஷன் நியாயப்பிரமாண கிரியைகளில்லாமல் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுகிறான் [ரோமர்:3:28]. அந்த ஒரே விசுவாசம் கொண்ட நாம் அந்த ஒரே விசுவாசத்தினை நம் கிரியைகளில் காண்பிக்க வேண்டும். கடைசிக்காலங்களில் கொடிய காலங்கள் வரும்மென்று நாம் அறிய வேண்டும். மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,......,தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள் [1தீமோத்தேயு:3:1-5]. இப்படிப்பட்டவர்களை விட்டு நாம் விலக வேதம் நம்மை அறிவுறுத்துகிறது.

 

3.     கிரியைகளுள்ள விசுவாசம்

 

கிரியைகளினால் விசுவாசம் பூரணப்படுகிறது. பவுல் கூறுகிறார் அன்பினாலே கிரியை செய்கிற விசுவாசமே உதவும்[கலாத்தியர்:5:6]. நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே [யாக்கோபு:2:21,22]. கிரியைகளுள்ள இந்த விசுவாசத்தை நாம் உயிருள்ள விசுவாசம் என்றும் கூறலாம். இவர்கள் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் தேவனில் அன்புகூர்ந்து ஆவியோடும் கருத்தோடும் உண்மையோடும் தேவனை ஆராதித்து தேவனுடைய சித்தத்தின்படி  பரிசுத்தமான வாழ்க்கை வாழுவார்கள். தேவன் தம்மை பாவத்தினின்று விடுவித்து மீட்ட நோக்கத்தை உணர்ந்தவர்களாய் பழைய பாவவாழ்க்கையை விட்டு விலகி ஜீவனுள்ள தேவனிடத்தில் நெருக்கமான உறவில் நிலைத்திருப்பார்கள். இவர்கள் உலகத்தோடு ஒத்து ஓடாமல் தேவனுக்காய் வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழும் விசுவாசிகள். கிரியையுள்ள விசுவாசம் நம் இரட்சிப்பின் கனி கொடுக்கிற வாழ்க்கையை வெளிப்படுத்தும். கிரியையுள்ள விசுவாசம் இரட்சிக்கப்பட்ட வாழ்க்கையின் அத்தாட்சியாயிருக்கிறது. வேதம் கூறுகிறது நாம் நம் கிரியைகளினால் மட்டும் நீதிமானாக முடியாது; நாம் தேவனை பற்றும் விசுவாசத்தினால் நீதிமானாகிறோம். ஒரு கொலை செய்து தீர்ப்புக்காக  நீதிபதிமுன் நிற்கும் ஒருவன் தான் செய்த நற்கிரியைகளை சொல்லி  தண்டனையினின்று தப்புவிக்கப்பட்டு நிராபராதியாக முடியாது. அதுபோல தேவனுடைய சிங்காசன நியாயத்தீர்ப்பின் முன்பாக நம்முடைய கிரியைகளினால் நாம் நம்மை நீதிமானாக காண்பிக்க முடியாது. அப்படியிருக்க கிரியையுள்ள விசுவாசம் நமக்கு எதற்கு தேவை?

        கிரியைகளினால் விசுவாசம் பூரணப்படும் [யாக்கோபு:2:22]

        நாம் நற்கிரியைகள் செய்கிறதற்கு இரட்சிக்கப்பட்டோம்[எபேசியர்:2:10]

        மனுஷர் நம் நற்கிரியைகளை கண்டு பரலோகத்திலிருக்கிற பிதாவை மகிமைப்படுத்தும்படி[மத்தேயு:5:16]

        கர்த்தருக்குள் மரித்தவர்களோடு அவர்களுடைய கிரியைகளும் கூடப்போம்[வெளி:14:13]

        நம்முடைய கிரியைகளுக்குதக்கதாய் நாம் நியாயம் தீர்க்கப்பட்டு பலனைப் பெற்றுக் கொள்ளுவோம்[வெளி:20:13-15; வெளி:22:12; ரோமர்:2:5]

இயேசு கிறிஸ்து பூமியிலே வாழ்ந்த நாட்களில் பிதா தனக்கு செய்யும்படி நியமித்த கிரியையை செய்து முடித்து பிதாவை மகிமைப்படுத்தினார்[யோவான்:3:3]. நாம் அவரை விசுவாசிக்கும் போது அவர் செய்த கிரியைகளை நாமும் செய்வோம். ஆபிரகாமும் ராகாப் என்னும் வேசியும் கிரியையுள்ள விசுவாசத்தினால் நீதியுள்ளவர்களானார்கள் என்று வேதாகமம் சான்றளிக்கிறது[யாக்கோபு:2:23-25]. ஆபிரகாம் ஒரு ஆண், விசுவாசி, தேவனுடைய சிநேகிதன், நீதிமான். ராகாப் ஒரு பெண், புறஜாதி, தேவனுடைய எதிரிகளின் கூட்டத்தை சேர்ந்தவள், வேசியான ஸ்திரீ. இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் எந்த பட்சபாதமும் இல்லாமல் இயேசு கிறிஸ்துவால் இரட்சிப்பு எல்லாருக்கும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. ஒருவன் அவர் மேல் விசுவாசம் வைத்து நீதியாகிய அவரை தரித்துக்கொள்ளும் போது இரட்சிப்பு அவனுக்கு சொந்தமாகிறது. இப்படி வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழ்ந்த ஆபிரகாம் ராகாப் எப்படிபட்ட கிரியைகளினால் நீதிமான்களானார்கள் என்பதை நாம் சிந்திக்கலாம்.

 

        ஜீவனுள்ள தேவன் மேல் விசுவாசம் வைத்தனர்(இரட்சிப்பு)  

ஆபிரகாம் தன் தகப்பனின் அந்நிய தேவர்களை விட்டு ஜீவனுள்ள தேவன் மேல் விசுவாசம் வைத்தான்.ஆபிரகாம் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார் [ஆதியாகமம்:14:6]. எபிரெயர் 11-ம் அதிகாரத்தில் விசுவாசிகளின் பட்டியலில் இடம் பெற்ற ஒரே புறஜாதி பெண் ராகாப். இந்த ராகாப் புறஜாதியாயிருந்தும் தேவன் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் செய்த மகத்துவான கிரியைகளை கேள்விப்பட்டு ஜீவனுள்ள தேவன் மேல் விசுவாசம் வைத்து யோசுவா அனுப்பின வேவுக்காரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர் என்று அறிக்கையிடுகிறாள் [யோசுவா:2:10,11]. இருவரும் ஜீவனுள்ள தேவன் மேல் விசுவாசம் வைத்து இரட்சிப்புக்குள் கடந்து வந்தனர். வேதம் கூறுகிறது நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும் [ரோமர்:10:9,10].

        பாவ வாழ்க்கையை விட்டு விட்டனர் (சுத்திகரிப்பு)

கர்த்தர் ஆபிரகாமிடம் நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டு புறப்பட்டு நான் உனக்கு காண்பிக்கும் தேசத்திற்கு போ என்று கட்டளையிட்ட போது ஆபிரகாம் எந்த கேள்வியும் கேட்காமல் கர்த்தர் சொன்னபடி எல்லவற்றையும் விட்டு புறப்பட்டான் [ஆதியாகமம்:12:4]. ராகாப் வேவுக்காரர் கொடுத்த சிவப்பு நூல் கயிற்றை ஜன்னலில் கட்டி அழிவிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் மீட்டுக் கொண்டாள். வேவுக்காரர் ராகாப் குடும்பத்தை அழைத்துக்கொண்டு வந்து இஸ்ரவேல் பாளையத்திற்கு புறம்பே இருக்கும்படி பண்ணினார்கள் [யோசுவா:2:17-21;6:22-23]. இருவரும் தன் தேசம், இனம், ஜனம் ஆகியவற்றின்  தேவர்கள், விக்கிரகங்கள், பண்பாடு, கலாச்சாரம், பாவங்கள், அக்கிரமங்கள், ஜென்ம சுபாவங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு தங்களை சுத்திகரித்துக் கொண்டனர். நாம் பழைய மனிதனின் பொல்லாத அந்தகார கிரியைகள், பாவ இச்சைகள், மாம்சகிரியைகள் மற்றும் தேவனுக்கும் நமக்கும் இடையே விக்கிரமாய் காணப்படும் புகழ் செல்வம் வேலை அந்தஸ்த்து படிப்பு சுயம் ஆகிய எல்லவற்றையும் விட்டுவிட வேண்டும். தேவனிடம் நெருக்கமான உறவை ஏற்படுத்த தடையாயிருக்கிற எல்லவற்றையும் விட்டு தேவனுக்கு முதலிடம் கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

        கீழ்படிந்து புறப்பட்டனர்(வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கை)

விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்திரமாக பெறப்போகிற இடத்திற்கு போகும்படி அழைக்கப்பட்ட போது, கீழ்படிந்து தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டு போனான்[எபிரெயர்:11:8]. ராகாப் எரிகோவிலிருந்து கானான் தேசம் புறப்பட்டாள்[யோசுவா:6:22,23]. இருவரும் பாவவாழ்க்கையை விட்டு புறப்பட்டு தேவன் வாக்குத்தத்தம் பண்ணின கானான் தேசத்திற்குள் கடந்து வந்தனர். அதாவது தன் தேசம் ஜனம் இனத்திலிருந்து அவர்கள் புறப்பட்டு ஜீவனில் பிரவேசித்தனர். விசுவாச வாழ்வின் ஒரு புதிய ஓட்டத்தை தொடங்கினர்.

நாமும் நம் தேசத்தார் இனத்தார் ஜனத்தார் முன்பாக தேவனுக்கு சாட்சியாய் வாழுவோம் என்று ஞானஸ்நானம் எடுத்தோம். தேவனுக்காய் வேறுபிரிக்கப்பட்ட  வாழ்க்கை வாழுகிறோமா இல்லை உலகத்தோடு ஒத்த வேஷம் தரித்துக்கொண்டு வாழுகிறோமா? வேதம் கூறுகிறது அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது?ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும்  பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? [2கொரிந்தியர்:6:14,15]. நாமும் உள்ள்ளதிலே புதிதான ஆவியுள்ளவர்களாகி மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனை தரித்துக் கொண்டு நமது விசுவாச ஓட்டத்தை பொறுமையோடு ஓடக்கடவோம்.

                    விசுவாசத்தில் நிலைத்திருந்து கனிகொடுத்தனர் 

ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்குக்கு பெண் பார்க்க தன் ஊழியக்காரனை அனுப்பும் போது என் குமாரனை அழைத்துக் கொண்டு போக வேண்டாம் என்று கட்டளையிடுகிறார். ராகாப் யூதா கோத்திரத்து நகசோனின் குமாரன்  சல்மோனை விவாகம் பண்ணி இஸ்ரவேலின் காணியாட்சிகுள் நிலைத்திருந்தாள். தாவீதின் சந்ததி ராகப்பின் வழியாய் தோன்றிற்று. வேதம் கூறுகிறது  தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே. அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே[எபிரேயர்:11:15,16]. ஆபிரகாம் ராகாப் இருவரும் தாங்கள் விட்டு வந்த சொந்த தேசத்திற்கு மீண்டும் செல்லாமல் கானானில் தங்கினர். அதாவது பழைய பாவவாழ்க்கைக்கு மீண்டும் செல்லாமல் விசுவாசத்தில் நிலைத்திருந்து நல்ல கனிகளை கொடுத்தனர். அவர்களால் ஒரு தேவ பக்தியுள்ள சந்ததி உருவானது. பவுலைப் போல நாமும் விசுவாசத்துடன் நல்ல போராட்டத்தை போராடுவோம்; நித்திய ஜீவனை பற்றிக்கொள்ளுவோம். அதற்காகவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே செத்த விசுவாசம் கற்பாறை நிலத்தில் விழுந்த விதை போன்றது அது வேரில்லாததால் பலனற்றுப் போகும். மாய்மாலமான விசுவாசம் முட்களில் விழுந்த விதைக்கு ஒப்பானது. உலகக் கவலை ஐசுவரியத்தின் மயக்கம் அதனை பலனற்று போக செய்யும். உயிருள்ள விசுவாசம் நல்ல நிலத்தில் விழுந்த விதை போன்றது பல மடங்காக பலன் தரும். நம்முடைய கிரியைகளுக்கு தக்க பலனை அளிக்கும்படி கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இதோ சீக்கிரமாய் வருகிறார். பரலோகத்தில் இருக்கிற பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான் என்று வேதம் திட்டவட்டமாக கூறுகிறது. எனவே நாம் துர்கிரியைகளை விட்டு விலகி நற்கிரியைகளினால் நம்மை அலங்கரித்து  நம் விசுவாசத்தை காத்துக்கொள்ளுவோம். காட்டு ஒலிவமரக்கிளைகளாகிய நாம் விசுவாசத்தினால் இயேசு கிறிஸ்துவில் இணைக்கப்பட்டிருக்கிறோம்,  அவரில் நிலைத்திருந்து நல்ல கனிகளைக் கொடுப்போம். விசுவாச வாழ்க்கையில் உபத்திரவம் துன்பம் உண்டு ஆனாலும் அவற்றில் ஜெயம் பெற்று பவுலைப் போல நல்ல போராட்த்தை போராடி நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ளுவோம். நம் கிரியைகளுக்குத்தக்க பலன் அளிக்கிற கர்த்தரிடமிருந்து நீதியின் கிரீடத்தை பெற்றுக்கொள்ள வாஞ்சிப்போம். தேவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக. ஆமென்.

 

--------------------------------------