Tamil Christian Website

Tamil Christian Website

Posted on: 16/07/2014

இயேசு கிறிஸ்துவின் ஜெபம்

வேதம் சொல்லுகிறது

எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் லூக் 21:36

மேலும், நீங்கள் ஜெபம்பண்ண வேண்டிய விதமாவது மத் 6:9

இந்த இரண்டு வசனங்களை செய்தியின் கருத்தாக நான் பரிசுத்த ஆவியின் மூலமாய் எடுத்துக் கொண்டேன்.

முன்னுரை:

ஒரு தகப்பனும், மகனும் உரையாடும் போது அவர்கள் இடையில் ஒருபோதும் நிபந்தனைகள், கட்டுப்பாடு, தயக்கம், பயம் இருப்பதில்லை, இதேபோலத்தான் இதற்கும் மேலான ஆவிக்குரிய தகப்பனாகிய நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுடன் உரையாடுவதுதான் ஜெபம் ஆகும், மிகவும் சரியாக சொல்ல வேண்டுமானால் ஜெபம் என்பது ஒரு மொழியாகும்.எப்படி இரண்டு பேசுவதற்கு ஒரு மொழி தேவைப்படுகிறதோ,இதே போலத்தான் ஜெபமும் இருக்கிறது.

இன்று அநேகர் ஜெபம் என்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் ஜெபிக்க வேண்டும், அதற்காக வார்த்தைகளை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும், என்றெல்லாம் சிந்திப்பது உண்டு. நம்முடைய பெற்றோர்களுடன் பேசும் போது நாம் ஒரு குறிப்பிட்ட இடத்தை நிர்ணயம் செய்கிறோமா அல்லது வார்த்தைகளை தயார் செய்து வைக்கிறோமா என்று சிந்தித்துப் பாருங்கள்.

இன்னும் ஒரு முக்கியமான காரியத்தை சொல்ல ஆசைப்படுகிறேன், அது என்னவென்றால் நமக்கு ஜெபம் இந்த உலகில் இருக்கும் வரைதான், ஏனென்றால் வேதம் சொல்லுகிறது, பரலோகத்தில் துன்பம், வேதனை, நோய்கள் இல்லை. துதிமாத்திரமே உன்டு என்பதை மறக்க வேண்டாம், இத்தகைய காரியத்தை வேதத்தின் மூலம் சொல்லுகிறேன்.

அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும் அப்பொழுது உபவாசிப்பார்கள். மத் 9:15

குறிப்பு: ஏன் இயேசுகிறிஸ்துவின் ஜெபத்தை முன் உதாரணமாக எடுத்தேன் என்றால், வேதம் சொல்லுகிறது, அவர் தம்மை பின்பற்ற வேண்டும் என்பதறகாக, அவர் உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார் என்று 1பேதுரு 2:21 ல் நாம் வாசித்து இந்த ஜெபத்தின் முக்கியதுவத்தை அறிந்து கொள்ளலாம்.

அடுத்ததாக, நாம் எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்,

1.முதல் ஜெபம்: தனிமையில் ஜெபித்தல்

வேதம் சொல்லுகிறது,

அவரோ [ இயேசு கிறிஸ்து ] வனாந்தரத்தில் தனித்துப் போய் ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தார் லூக் 5:16

அவர் அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டு சென்றார் மாற்கு 1:35

பாருங்கள், நம்முடைய ஆண்டவர் தனிமை ஜெபத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை மேலே சொல்லப்பட்ட இரண்டு வசனங்களின் மூலம் அறிய முடிகிறது. எதற்காக இந்த தனிமை ஜெபம் என்றால், முதலாவது நம்மை பெலப்படுத்திக் கொள்ள வேண்டும், என்பதற்காகவே, என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனுஷகுமாரனாய், தம்முடைய பிள்ளைகளை பாதுகாக்கும் படி வந்த போது, அவர் முதலாவது தன்னைத் திடப்படுத்திக் கொண்டார். எப்படியென்றால் வேதம் சொல்லுகிறது, அவர் 40 நாள் இரவும் பகலும் உபவாசம் இருந்தார், இதன் மூலமாய் அவர் அதிகமான பெலத்தை பிதாவிடம் இருந்து பெற்றுக் கொண்டதை பார்க்க முடிகிறது, எப்படியென்றால் ஆவியானவர் மூலமாக, அதாவது அபிஷேகம் மூலம் என்பதை மறக்க வேண்டாம், அதன் பிறகே அவர் அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்யத் தொடங்கினார் என்று வேதத்தின் மூலம் அறியலாம். [ ஏசா 61:1,2 ]

இதே பாடத்தைதான் தேவன் தம்முடைய பிரதான சீஷனாகிய பேதுருவுக்கும் கற்றுக் கொடுப்பதைப் பார்க்கலாம், எப்படியென்றால்,

பேதுருவே முதலில் நீ குணப்படு பின்பு மற்றவர்களை குணப்படுத்தும்படி செல் என்று சொன்னதாக லூக்கா 22:32 பின்பகுதியில் வாசிக்கலாம்,

இன்று அநேக ஊழியங்கள் மற்றும் விசுவாசிகளின் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஏற்படும் தோல்விக்குக் காரணம் இந்த தனி ஜெபம் இல்லாததே காரணம் என்று சொல்லிக் கொள்கிறேன்.

ஒரு தேவ மனுஷர் இப்படியாக சொல்வதுண்டு, அவர் பிரசங்கமேடைக்கு செல்வதற்கு முன் குறைந்தது ஐந்து மணிநேரம் தேவனோடு சஞ்சரிப்பார், பிறகே அவர் தேவனுடைய வார்த்தையை ஜனங்களுக்கு பகிர்ந்து கொடுப்பார் என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அதுமட்டுமல்லாமல் அவர் சொன்ன இந்த கூற்றை நான் அனேக கூட்டத்தில் நடந்த அற்புதம் மற்றும் அடையாளங்கள் மூலம் உறுதி செய்திருக்கிறேன் என்னவென்றால், அவர் சொன்னது மெய்யே.

என் அருமை விசுவாசிகளே, நம்முடைய சபையில் வல்லமையை பார்க்க வேண்டுமானால், நாம் நிச்சயமாக தனி ஜெபத்தில் நேரத்தை செலவிட்டே ஆக வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் சபையில் வெறும் சப்தமும், வெறும் வார்த்தைகளையும் மாத்திரமே பார்க்க முடியும் என்பதை மறக்க வேண்டாம்.

தேவன் சொல்லுகிறார்,

[முதலில்] நீ ஆயத்தப்படு, [பின்பு] உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து என்று எசேக்கியேல் 38:7 ல் அவர் அழகாக வடிவமைத்து உள்ளார்.

மேலும், ஒரு மணிநேரமாவது விழித்திருந்து ஜெபியுங்கள் மத் 26:42 [பின்பகுதி]

2.இரண்டாவது ஜெபம்: விசுவாசமுடன் ஜெபித்தல்

வேதம் இப்படியாக சொல்லுகிறது,

மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார் மத் 21:22

இன்று அநேகருடைய ஜெபத்திற்கு பரலோகத்திலிருந்து பதில் வராததற்கு காரணம் என்னவென்றால், அவர்களுடைய அவிசுவாசமே என்று வேதம் சொல்லுகிறது, ஏனென்றால் விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் என்பதை மறக்க வேண்டாம், அதாவது விசுவாசம் நம்முடைய ஜெபத்தில் காணப்பட்டால் நிச்சயமாக நமக்கு பதில் கிடைக்கும் என்பதே இதன் அர்த்தம். ஆகவேதான் தேவன் தம்முடைய சீஷர்களை அவிசுவாசத்தின் நிமித்தம் கடிந்து கொண்டதை நாம் மறக்க வேண்டாம்.

பாருங்கள், ஒரு சிறிய சம்பவத்தை உங்களுக்கு சொல்லுகிறேன், ஒரு மனுஷன் ஊமையான ஆவி பிடித்த தன் மகனை இயேசுவின் சீஷர்களிடம் கொண்டுவந்து காண்பிக்கிறார், எதற்காகவென்றால், அவர்கள் இயேசுவோடு கூட இருப்பவர்கள், அவர்களும் இயேசுவைப் போல அற்புதங்களை செய்வார்கள் என்கிற விசுவாசமுடன் அவர் முதலில் சீஷரிடம் செல்கிறார், ஆனால் சீஷர்களுக்கோ அந்த பிசாசை விரட்ட முடியவில்லை, அவர் இயேசுவிடம் சென்று இந்த காரியத்தை அறிவிக்கிறார், இதை அறிந்த தேவன் இப்படியாக கடிந்து கொள்கிறார்,

அவர் [இயேசு] பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார் மாற்கு 9:19

உடனே, இயேசு முதலில் அந்த மனுஷனைப் பார்த்து சொன்ன ஒரு காரியம் என்னவென்றால்,

நீ விசுவாசிக்ககூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார் மாற்கு 9:23, பாருங்கள், அடுத்ததாக என்ன நடந்தது,

இயேசுவின் வார்த்தையைக் கேட்ட அந்த மனுஷன் சொன்ன பதில்

உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே [ஆனாலும்], என் அவிசுவாசம் நீங்கும்படி உதவி செய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான் மாற்கு 9:24

இத்தகைய ஜெபத்தை கேட்ட இயேசு, அவனுக்கு விசுவாசத்தைக் கொடுத்தார், இதன் மூலம் அதாவது இந்த விசுவாசத்தின் மூலம் அவனுடைய மகன் குணப்பட்டதைப் பார்க்கமுடிகிறது.

என் அன்புள்ள விசுவாசிகளே, நாமும் இப்படியாக இருப்போமானால் தேவனிடம் விசுவாசத்திற்காக ஜெபம் செய்வோம், ஏனென்றால் வேதம் சொல்லுகிறது,

கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான் என்று மத் 7:8 ல் நாம் வாசிக்கலாம்.

3.மூன்றாவது ஜெபம்: பிதாவின் சித்தத்தின்படி ஜெபித்தல்

வேதம் சொல்லுகிறது, இயேசு கிறிஸ்து பிதாவின் சித்தத்தின் படி ஜெபிக்கிறவராய் காணப்பட்டார், இதை பின்வருமாறு அறியலாம்.

சற்று அப்புறம் போய், முகங்குப்புற விழுந்து, என் பிதாவே இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும் ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். மத் 26:39

எப்பொழுது ஒரு உலகதகப்பன் தன் மகனைக் குறித்து சந்தோஷப்படுவான், தன் மகன் தன்னுடைய சொற்படி கேட்கும்போது, அதாவது தன்னுடைய சித்தத்தின்படி செய்யும் போது மட்டுமே என்பதை இந்த உலக வாழக்கையில் இருக்கிற நாம் அறிந்து கொள்கிறோம், இப்படியாக ஒரு உலக தகப்பனே தன்னுடைய மகன் தன்னுடைய அறிவுரைப்படிதான் நடக்க வேண்டும் என்பதாக சிந்திக்கும் போது நம்முடைய நிஜ தகப்பன் எவ்வளவு அதிகமாக நம்மிடம் எதிர்பார்க்கமாட்டார்.

ஆகவேதான் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு இவ்விதமாக ஜெபத்தைக் கற்றுக் கொடுக்கிறார், எப்படியென்றால், நீங்கள் ஜெபம் செய்யும் போது பிதாவின் சித்தமே, எங்களுக்குள்ளும் இந்த உலகத்திலும் செயல்பட வேண்டும் என்று மத் 6:9-13 வரை வாசிக்கும் போது இந்த ஜெபத்தை புரிந்து கொள்ளலாம்.

ஆகவேதான், அப்.பவுல் தான் தேவனால் சந்திக்கப்பட்ட போது முதலாவது அவர் செய்த ஜெபம், ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்பதாக, இதை நாம் அப் 9:1-6 வரை வாசிக்கும் போது அறியமுடிகிறது. ஆகவேதான் அவருடைய பின்பகுதி ஜெயமாக மாறினதை நாம் அறியலாம். இன்று நாமும் இப்படியாகத்தான் ஜெபிக்கிறோமா என்று சிந்தித்து பாருங்கள், ஏனென்றால் இன்று அனேக ஜனங்கள் தேவனுடைய வரங்களையோ அல்லது வல்லமைகளையோ பெற்றுக் கொண்டவுடன் அவர்கள் சொல்லுகிற ஒரு காரியம், ஆண்டவரே நாங்கள் இப்பொழுதே உம்முடைய ஊழியத்தை செய்யப்போகிறோம், ஜனங்களை விடுவிக்கப் போகிறோம் என்றெல்லாம் சொல்லி தேவனை முந்திக் கொள்வதை நாம் காணமுடிகிறது.

ஆனால் தேவனுடைய ஒன்பது கிருபா வரங்களைப் பெற்றுக் கொண்ட அப்.பவுல் சொல்லுகிறார், நான் சபைகளுக்கு முகம் அறியாதா ஒரு நபராக காணப்பட்டேன் என்று [ அதாவது தேவனுடைய சித்தத்திற்காக காத்திருப்பதையே இந்த வாக்கியம் நமக்கு சொல்லுகிறது. ] எத்தனை தாழ்மை பாருங்கள், ஆகவேதான் அவரை தேவன் வல்லமையாகப் பயன்படுத்த முடிந்தது, அதுமட்டுமல்லாமல் கடைசிவரை தேவனுக்காக ஓட முடிந்தது.

என் அருமை ஜனங்களே,

முதலாவது தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ளுங்கள், அதற்காக ஜெபியுங்கள், பின்பு தேவனுடைய வேலைக்காக செல்லலாம்.


 

பாருங்கள் வயலில் விதைக்கிறதற்கு முன்பாக விவசாயி செய்கிற காரியம், அந்த நிலத்தை விதைப்பதற்கு ஏற்ற பகுதியாக மாற்றுவதுதான், அவனுடைய முதல் வேலை என்பதை மறக்க வேண்டாம்.

வேதம் சொல்லுகிறது,

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிப்பான் மத் 7:21

4.நான்காவது ஜெபம்: கதறி அழுது ஜெபித்தல்

பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக் கொண்டு போய் துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார். அதுமட்டுமல்லாமல். அவர் மிகுந்த சத்தமிட்டு ஜெபித்தார் என்று நாம் மத் 26:37 , மாற் 15:34, மற்றும் லூக் 19:41 ல் வாசிக்கலாம்.

பாருங்கள் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எதற்காக இப்படியெல்லாம் ஜெபிக்க வேண்டும், ஏனென்றால் அவருடைய இருதயத்தில் காணப்பட்ட ஆத்துமா பாரமே, அந்த பாரம்தான் அவரை இப்படியாக சொல்லச் செய்தது, ஏன் இத்தனை சீக்கிரமாக நான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிற ஒருவேதனையின் நிமித்தமாகத்தான் அவர் இப்படியாகக் கதறுகிறார். அவருக்கு மாமிசத்தில் வேதனைகள் இருந்தாலும், இவைகள் எல்லாம் அவருக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை, என்பதை மறக்க வேண்டாம், அவர் மனுஷகுமாரனாக இருந்தாலும், முதலில் அவர் தேவன் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.

கதறி அழுது ஜெபித்தல் என்பது நம்முடைய இருதயம் உடைவதையே குறிக்கிறது, அதாவது முழுஇருதயத்தோடு, முழுபலத்தோடும், முழுஆத்துமாவோடும் ஜெபித்தல் ஆகும், ஏனென்றால் இன்று அநேகருடைய ஜெபத்தைப் பார்ப்பீர்களானால், வாய்கள் அசைவதும் மற்றும் சில நேரங்களில் சப்தத்தையும் மாத்திரமே கேட்கமுடிகிறது. ஆனால் அவர்கள் இருதயமோ தூரமாய் இருப்பதை மத��:8,9 நமக்கு சொல்லுகிறது.

ஆகவேதான் நம்மால் ஒரு ஆத்துமாவை கூட ஆதாயம் செய்ய முடியவில்லை, ஆத்துமா ஆதாயம் செய்ய வேண்டுமானால், வெறுமையாக தேவனைப் பற்றி கூறுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை,

 

 

 

 

 

 

 

 

முதலில் நம்மை அவர்களைப் போல மாற்றிக் கொள்ள வேண்டும், அதாவது அவர்களுடைய துன்பத்தை நம்முடைய துன்பமாய் மாற்றிக் கொள்ள வேண்டும், என்னுடைய வாழ்க்கையில் இந்த ஆத்துமா பாரத்தை  ஒரு சகோதரனிடம் பார்த்திருக்கிறேன். ஏனென்றால் அவர் உண்மையாக கதறி அழுது ஜெபிக்கிறவர் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

சிந்தியுங்கள் நாமும் இப்படியாக கதறி அழுது ஜெபிக்கிறோமா?

5.ஐந்தாவது ஜெபம்: பிறருக்காக ஜெபித்தல்

வேதம் சொல்லுகிறது,

[இயேசு] நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன் உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல் நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன், அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே. யோவான் 17:9, ஒரு உண்மையான கிறிஸ்தவனின் ஜெபம் இந்த வசனத்தின்படித்தான் இருக்க வேண்டும்,

ஒருவேளை நாம் நினைக்கலாம் நமக்காக நம்முடைய குடும்பத்துக்காக ஜெபிக்க வேண்டாமா என்று, ஆனால் உங்களுக்கு ஒரு இரகசியத்தைச் சொல்லுகிறேன், இன்று அநேகருடைய கட்டுகள் மாறாமல் இருப்பதற்குக் காரணம் இந்த சுயநலமான ஜெபம்தான் காரணம், பாருங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, யோபுவிடம் இவ்வாறு சொல்லுகிறார், என் தாசனே, நீ உன் சிநேகிதருக்காக ஜெபிக்க வேண்டும் என்று சொன்னபோது உடனே அதற்குக் கீழ்ப்படிந்து அவர் ஜெபித்தார்,

என்ன ஆச்சரியம், அநேக நாள் தன்னை வாட்டி வந்த [கஷ்டம்] சிறையிருப்பு உடனே மாறினதை யோபுவால் உணரமுடிந்தது, இதை யோபு 42:10ஐ வாசித்து அறிந்து கொள்ளலாம்.

மேலும், தேவன் சாமுவேலைக் கொண்டு இவ்வாறாக சொல்லுகிறார், நாம் பிறருக்காக ஜெபம் செய்யாமல் இருப்போமானால் அது பாவம் என்று 1சாமு 12:23 லும்,

நாம் சொஸ்தமடைய வேண்டுமானால் ஒருவருக்கொருவர் ஜெபிக்க வேண்டும் என்று யாக் 5:16 லும் பிறருக்காக ஜெபிக்கும் பாரத்தை நமக்கு தருவதை நாம் பார்க்க முடிகிறது.

அதுமட்டுமல்லாமல், வேதம் சொல்லுகிறது

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள் கலா 6:2


 

6.கடைசி ஜெபம்: ஸ்தோத்திரத்துடன் ஜெபித்தல்

அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். மத்தேயு 11:25, யோவான் 11:41.

மேலும் சங்கீதக்காரன் சொல்லுகிறது,

ஸ்தோத்திரப்பலியிடுகிறவன் என்னை மகிமைப் படுத்துகிறான் என்று சங் 50:23 லும் ஸ்தோத்திரத்தின் மகிமையை வெளிப்படுத்துவதை நாம் அறியலாம்.

பாருங்கள், புகழ்ச்சிக்கு மயங்காதவர் இந்த உலகத்தில் யார் உண்டு? ஒரு உலகராஜாவை, ஒரு மனுஷன் புகழும்போது அந்த ராஜா அவனுக்கு வெகுமதிகளை கொடுப்பதை பார்க்கிறோம், இப்படியாகத்தான், நாமும் நம்முடைய ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவை புகழும்போது அவர் நிச்சயமாக நித்திய ஜீவனைத் தருவார் என்பதில் சந்தேகமேயில்லை.

 அதுமட்டுமல்லாமல், வேதம் சொல்லுகிறது

அவருக்கு இருக்கும் நாமங்களில் ஒன்று இந்த துதியாகும், என்று உபா 10:21 மற்றும் எரேமியா 17:14 லும் பார்க்க முடிகிறது,

இப்படியாக துதி என்கிற பெயரை உடைய தேவனுக்கு தொடர்ந்து துதிகளை கொடுக்கும் போது அவர் எப்படி சந்தோஷப்படாமல் இருப்பார். பாருங்கள் அநேகர் இந்த துதியை தேவனுக்கு கொடுத்ததால் அவர்கள் ஜெயத்தை இலகுவாக பெற முடிந்தது என்று வேதம் சொல்லுகிறது, உதாரணமாக

1.எரிகோகோட்டை துதியினால் இடிந்து விழுந்தது.

2.கிதியோனுக்கு விரோதமாக வந்த மீதியானியர் முறிந்து விழுந்தனர்.

3.யோசபாத் ராஜாவிற்கு விரோதமாக வந்த சத்துருக்கள் துதியினால் விழுந்தனர்.

4.பவுலும், சீலாவும் துதித்த போது சிறைச்சாலை கதவுகள் உடைந்து போயின, இன்னும் அதிகம்.

ஒரு சம்பவத்தை சொல்லி துதியின் மகிமையை முடிக்கிறேன், ஒரு சமயம் எனக்கு சிக்கன்பாக்ஸ் வந்ததால், என் கண்கள் பாதிப்படைந்தது, உடனே என்னோடு வேலை செய்கிற ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள், விசுவாசிகள், என்னுடைய மனைவி எல்லாரும் என்னை இப்படியாக பயமுறுத்தினர், என்னவென்றால், நல்ல கண் மருத்துவரை பார்க்காவிட்டால் உன்னுடைய கண்கள் பார்வையை இழந்துவிடும்,


 

நானோ இதையெல்லாம் பொருட்படுத்தாமல் என்னுடைய வேலை ஸ்தலத்தில் தேவனோடு பொருத்தனை செய்தேன், எப்படியென்றால் இந்த மாதத்தில் ஒரு லட்சம் ஸ்தோத்திரப்பலிகளை உமக்கு செலுத்துவேன், இதோ சில[ஒரு] நாட்களில் 6000 ஸ்தோத்திரப்பலிகளை செலுத்தினேன், ஐந்து நாட்களுக்குள் என்னுடைய கண் பிரச்சனை சரியானது, எல்லாரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்,

என் அருமை ஜனங்களே ஸ்தோத்திரத்தின் பலத்தை அறிய வேண்டுமானால், நீங்களும் இப்படி செய்துப்பாருங்கள்,

அப்.பவுல் சொல்லுகிறார், எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள் 1தெச 5:18 ல் எழுதிவைத்திருப்பதை நாம் வாசிக்கலாம்.

தேவனுக்கு பிரியமான விசுவாசிகளே

நம்முடைய ஜெபமும் இப்படியாகத்தான் செல்கிறதா என்பதை சோதித்துப் பாருங்கள், 100 என்று எழுதவேண்டுமானால் நமக்கு 1,0,0 என்கிற மூன்று எண்களும் தேவைப்படுகிறது, இவற்றில் ஒரு எண் குறைந்தால் கூட அதன் மதிப்பு மாறிவிடும், இப்படியாகத்தான் நம்முடைய ஜெபத்திலும் தேவன் சொன்ன வாக்கியங்கள் தவறுமானால் அதின் பலன் மாறி போய்விடும் என்பதை மறக்க வேண்டாம்,

தேவனாகிய இயேசு கிறிஸ்து இந்த ஜெபம் என்கிற செய்தியின் மூலம் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

-    சகோ. எட்வின் (சோஹார்)