Tamil Christian Website

Tamil Christian Website

Posted on: 14/05/2016

அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம்

ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்கள் ஒருவருக்குள்ளும் இராதப்படிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள் எபி 3:12

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஊழியம் செய்யும் போது அவர் அனேகருடைய விசுவாசத்தைக் குறித்து மேன்மை படுத்தினார். பல சந்தர்பங்களில் அவிசுவாசமாக காணப்பட்ட சீஷர்களை கடிந்து கொண்டார். கொந்தளிக்கும் அலையில் படகில் அவிசுவாசத்தினால் பயந்து போன சீஷர்களிடமும் இன்னொருமுறை பிசாசை விரட்ட முடியாத சீஷர்களிடமும் அவர்களிடம் காணப்பட்ட அவிசுவாசத்தின் நிமித்தம் அவர்கள் மேல் கோபப்பட்டார். எப்படியென்றால் அவிசுவாசமுள்ள மாறுபாடான சந்ததியே என்று அவர்களை பார்த்து கோபத்துடன் வினவினார்.

பரிசுத்த வேதாகமம் இருதயத்தின் எண்ணங்கள் கூட நியாயம் தீர்க்கப்படும் என்று சொல்கிறது. புதிய ஏற்பாடு கற்பனைகளில் அதாவது சிந்தனைகளில் கூட பாவம் செய்ய கூடாது என்று நம்மை எச்சரிக்கிறது. உதாரணமாக இயேசு கிறிஸ்து ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிறவன் அவளோடு விபச்சாரம் செய்ததாயிற்று என்றார்.

இருதயத்தின் நினைவினால் வாய் பேசும் என்று வேத வசனம் தெளிவுபடுத்துகிறது. இரட்சிப்பின் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கும் போது கூட நீதியுண்டாக இருதயத்தினால் விசுவாசிக்கப்படும். இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும் [ரோமர் 10:10] என்று இருதயத்தில் விசுவாசித்து ஆசீர்வாதத்தை பெற்று கொள்ளும்படி வேதம் நமக்கு போதிக்கிறது.

இன்றைக்கு ஏன் நாம் தேவன் அருளிய மேலான ஆசீர்வாதங்களை பெற்று கொள்ளவில்லை தெரியுமா? நம்மிடம் காணப்படும் அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம், எப்படியெனில் மத் 15:8ல் இயேசு கிறிஸ்து சொன்னபடி தங்கள் உதடுகளினால் கனம் பண்ணுகிறார்கள் அவர்கள் இருதயமோ எனக்கு தூரமாய் விலகியிருக்கிறது என்று சொன்னது போல இன்றைக்கு நம்முடைய இருதயம் பலவிதமான சூழ்நிலைகளினாலும் பிரச்சனைகளினாலும் உலக கவலைகளினாலும் அவிசுவாசத்தினாலே நிறைந்திருக்கிறது. ஆனால் வெறும் உதடுகளினாலே விசுவாசத்தை பேசுகிறார்கள். பலருடைய இருதயம் அவிசுவாசத்தினாலே வரும் பயத்தினாலே ஆளுகை செய்யப்பட்டு காணப்படுகிறது.

யோபு 3:25 நான் பயந்தகாரியம் எனக்கு நேரிட்டது நான் அஞ்சினது எனக்கு வந்தது. இன்றைக்கு நாம் அனேக காரியங்களை விரும்பி ஆண்டவரிடம் கேட்டும் பெற்று கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் நம் இருதயத்தில் காணப்படும் அவிசுவாசமே. மத் 15ம் அதிகாரத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் தன் மகளை பிசாசின் பிடியிலிருந்து குணமாக்கும்படி வேண்டிக் கொண்ட கானானிய ஸ்திரீயை நோக்கி

மத் 15:28: இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக ஸ்திரீயே உன் விசுவாசம் பெரிது நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.

மத் 9ம் அதிகாரத்தில் 12 வருஷமாய் பெரும்பாடுள்ள ஒரு பெண் நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக் கொண்டு அவர் பின்னாலே வந்து அவருடைய  வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டாள், இயேசு திரும்பி அவளைப் பார்த்து மகளே திடன் கொள் உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரமே அந்த ஸ்திரீ சொஸ்தமானாள் மேற் சொல்லப்பட்ட இந்த சம்பவத்தில் இந்த பெண்ணின் எண்ணங்கள் அதாவது இருதயத்தில் காணப்பட்ட விசுவாசம் அவளுக்கு சுகத்தை கொடுத்தது. திரள் கூட்டமான ஜனங்கள் இயேசு கிறிஸ்துவை உரசியும் இடித்தும் சென்ற போது இந்த பெண் தன்னிடம் இருந்த விசுவாசத்தினாலே தேவ வல்லமையை பெற்று சுகமானாள். அல்லேலூயா!

அப்போஸ்தலர் 14ம் அதிகாரத்தில் லிஸ்திரா என்ற பகுதியில் தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் ஒரு போதும் நடவாத சப்பாணியை பவுல் உற்று பார்த்து இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னவுடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.

பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தை விசுவாசத்தை பேசின யோசுவாவும் காலேப்பும் மாத்திரமே சுதந்தரித்தார்கள். அவிசுவாசத்தினால் நிறைந்து அவிசுவாசத்தை பேசி ஜனங்களுக்குள் அவிசுவாசத்தையும் பயத்தையும் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதில் பிரவேசிக்கவில்லை. எனவே பிரியமானவர்களே உங்கள் அவிசுவாசத்தை குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் எப்பொழுதெல்லாம் உங்களுக்கு எதிராக வரும் சூழ்நிலைகளுக்கு ஒத்த வேஷம் தரித்து உங்கள் ஆசீர்வாதத்துக்கு விரோதமாக எதிர்மறையான வார்த்தைகளை பேசுனீர்களால் அப்படியே உங்களுக்கு நடக்க கூடும். நீங்கள் எதிர்மறையாக பேசும் போது நீங்கள் அவிசுவாசத்தினால் நிறைந்து இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவிசுவாசமுள்ளவர்கள் தேவனிடமிருந்து எதையும் பெற்று கொள்ளமாட்டார்கள் என்பதில் எச்சரிக்கையாக இருங்கள்

யாக்கோபு 1:6,7: ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன். சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.

அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.

எனக்கு ஒரு சகோதரியை தெரியும் பல வருடங்களாக பெரும்பாடுள்ள பெண்ணாக இருந்தாள் அவள் கர்ப்பம் செத்து விட்டது என்றே சொல்ல கூடிய ஒரு நிலை. மருத்துவர்கள் எல்லாரும் கர்ப்பப்பையை அகற்றிவிடும் படி ஆலோசனை சொன்னார்கள். இவளோ கத்தர் எனக்கு குழந்தையை தர வல்லவராயிருக்கிறார் என்று சொல்லி கொண்டிருந்தாள். ஆனால் மருத்துவ அறிவியல் படி அவளுக்கு குழந்தை பிறக்காது அது அவளுக்கே தெரியும் ஆனால் தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை. எனக்கு அற்புதம் செய்வார் அவர் என் நோயை குணமாக்குவார் என்று சொல்லிக் கொண்டேயிருப்பாள்.

பல வருடங்களுக்கு பிறகு தேவன் அவளுடைய விசுவாச அறிக்கையின்படி அவளை சுகமாக்கி அவளுக்கு ஒரு குழந்தையும் கொடுத்தார், இன்றைக்கு அந்த நோயின் வடு கூட, மருத்துவர்கள் எல்லாம் ஆச்சரியப்படும் படி அவளை விட்டு மறைந்து விட்டது.

ஆண்டவர் அழைத்தவர்களிலே விசுவாசத்தினாலே அளவிடமுடியாத ஆசீர்வாதங்களை சுதந்தரித்து கொண்டவர் ஆபிரகாம்

ரோமர் 4: 18 -22: உன் சந்ததி இவ்வளவுவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே தான் அனேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புவதற்கு ஏதுவாயிருந்தும் அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.

அவன் விசுவாசித்திலே பலவீனமாயிக்கவில்லை அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும் போது தன் சரீரம் செத்துப் போனதையும் சாராளுடைய கர்ப்பம் செத்துப் போனதையும் எண்ணாதிருந்தான்.

தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல்

தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி தேவனை மகிமைப்படுத்தி விசுவாசித்தில் வல்லவனானான்

ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

19 ஆம் வசனத்தில் அவர் ஏறக்குறைய நூறு வயதான போது தன் சரீரம் செத்து போனதையும் சாராளுடைய கர்ப்பம் செத்து போனதையும் எண்ணாதிருந்தான். ஆசீர்வாதத்தின் வழி இங்கு தான் காணப்படுகிறது.  சூழ்நிலைகளை எண்ணி கொண்டிருப்போமானால் நாம் சோர்ந்து போய் விடுவோம் அது நமக்கு பயத்தை கொடுத்து அவிசுவாசமுள்ளவர்களாக நம்மை மாற்றி விடும். அவிசுவாசமுள்ளவர்கள் தான் மனிதனை நம்பி தங்கள் காரியங்களை செயல்படுத்துவார்கள். கர்த்தரை நம்புகிறவனே செழிப்பான். இயேசு சொன்ன முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தை தேடுங்கள் அப்பொழுது இவைகளெல்லாம் கூட கொடுக்கப்படும் என்ற வாக்குத்தத்தத்தின் நிறைவான ஆசீர்வாதத்தை தேவனை விசுவாசிக்கிறவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

எரேமியா 17:7-8: கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்

அவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாய்த் தன் வேர்களை விடுகிறதும் உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும் மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றி தப்பாமல் கனி கொடுக்கிறதுமான மரத்தைப் போலிருப்பான்.

எரேமியா 17:5: மனுஷன் மேல் நம்பிக்கைவைத்து மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக் கொண்டு கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இஸ்ரவேல் ஜனங்கள் தேவனால் வழிநடத்தப்பட்டு செங்கடலை அடைந்த போது இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலின் பொங்கி வரும் அலைகளையும் தங்களை துரத்தி கொண்டு வரும் எகிப்திய இராணுவத்தையும் பார்த்து சோர்ந்து போய் அவிசுவாசமுள்ளவர்களாய் எதிர்மறையான வார்த்தைகளை முறுமுறுத்தார்கள்

எகிப்தில் பிரேதக் குழிகள் இல்லையென்றா வனாந்திரத்தில் சாகும்படி எங்களை கொண்டு வந்தீர்கள் என்று முறுமுறுக்க ஆரபித்தார்கள். எகிப்தின் இரானுவத்தினர் நம்மை பிடித்து சென்று விடுவார்கள் எனவே செத்து விடுவோம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். மோசேயோ [யாத் 14:13] பயப்படாதிருங்கள் நீங்கள் நின்று கொண்டு இன்றைக்கு கர்த்தர் உங்களுக்கு செய்யும் இரட்சிப்பை பாருங்கள் இன்றைக்கு நீங்கள் காணும் எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள் என்று விசுவாச வார்த்தைகளை கூறினார். அவன் சொன்னது போல கானவே இல்லை. எப்படியென்றால் எந்த செங்கடல் தங்களை அழித்துப் போடு என்று நினைத்தார்களோ அந்த செங்கடலால் அவர்கள் மூழ்க அடிக்கப்பட்டனர்.

பிரியமானவர்களே உங்களுக்கு எதிராக வரும் சூழ்நிலைகளிலும் பிரச்சனைகளிலும் விசுவாசமுள்ள காரியங்களை இருதயத்தின் நிறைவினால் பேச ஆரம்பியுங்கள் அப்பொழுது அற்புதங்களை காண்பீர்கள். அல்லேலூயா

2கொரி 4:13: விசுவாசித்தேன் ஆகையால் பேசினேன் என்று எழுதிருக்கிறபடி நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்.

எப்பொழுதும் நேர்மறையான காரியங்களை நினையுங்கள் இந்த ஆசீர்வாதமான காரியங்கள் எனக்கு நடக்க போகிறது என்று நினையுங்கள் பிறகு அதை அறிக்கையிட ஆரம்பியுங்கள் தேவன் அதை எனக்கு செய்ய வல்லவராயிருக்கிறார் மேலும் அதை எனக்கு செய்ய போகிறார் என்று விசுவாசத்தில் நிறைந்து பேசுங்கள் அந்த காரியத்துக்கு எதிரான சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும் என்ற காரணத்தை கொண்டு அவிசுவாசமான வார்த்தைகளை பேசாதிருங்கள் அப்பொழுது மாத்திரமே தேவனுடைய அற்புதங்களை உங்கள் வாழ்க்கையில் பார்ப்பீர்கள். இயேசு சொன்னது போல விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் என்ற வார்த்தையின் படி உங்கள் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் ஜெயத்தை பெற்று கொள்ள ஆரம்பியுங்கள். ஆனால் அவிசுவாசமுள்ளவர்களோ தேவனிடத்திலிருந்து எந்த ஒரு அற்புதத்தையும் பெற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

மத் 13:58: அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அனேக அற்புதங்களைச் செய்யவில்லை.

இயேசு கிறிஸ்து சொந்த ஊரில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் காணப்பட்ட அவ்விசுவாசத்தினாலே இயேசு கிறிஸ்து அங்கு அனேக அற்புதங்களை செய்யவில்லை. மாற்கு 9 ஆம் அதிகாரத்தில் பிசாசின் பிடியிலிருந்து தன் மகனை விடுவிக்கும் படி வேண்டிக் கொண்ட அந்த தகப்பனை நோக்கி இயேசு கிறிஸ்து நீ விசுவாசிக்க கூடுமானால் ஆகும் விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் ஆகும் என்றார் [ மாற்கு 9:23 ] உடனே பிள்ளையின் தகப்பன் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே ஆனாலும் என் அவிசுவாசம் நீங்கும் படி உதவி செய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டு சொன்னான்.

உடனே தேவன் அவன் வேண்டுதல் கேட்டு அவன் அவிசுவாசத்தை நீக்கும்படியாக அந்த பிசாசின் பிடியிலிருந்து அந்த வாலிபனை விடுவித்தார். ஒரு வேளை உங்களிடம் அவிசுவாசம் இருக்குமானால் ஆண்டவரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள் அவர் பாதத்தில் காத்திருங்கள் அவர் உங்களை அவர் வல்லமையால் விசுவாசம் என்ற ஆவியின் வரத்தை இரட்டிப்பாக உங்களுக்கு தருவார்.

அப் 6:8: ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.

இன்றைக்கு ஊழியத்திற்காக் அழைக்கப்பட்ட ஊழியக்காரர்கள் ஆரம்பத்தில் உண்மையும் உத்தமுமாக ஊழியம் செய்த போதிலும் போக போக பண விஷயங்களில் தேவன் மேல் நம்பிக்கை இழந்து மனிதர்களையும் மற்றும் தேவனுடைய சித்தத்துக்கு விரோதமாக வருமானங்கள் வரும்படியாக தங்கள் சுய ஞானத்தினாலே பல காரியங்களை பண்ணி கொண்டிருக்கின்றனர். அற்புதங்களுக்காக தேவ வல்லமையை நம்பி கொண்டிருக்கிற இவர்கள் பண விஷயங்களில் பூமியையும் அதின் நிறைவையும் உடைய தேவனை நம்பாமல் மனிதர்களிடம் கைகுலுக்கி தாழ்ந்து போகக் கூடிய நிலைக்கு விலகி சென்று விடுகின்றனர். இறுதியில் தங்கள் ஊழிய அழைப்பை இழந்து விடுகின்றனர்.

பிரியமானவர்களே ஒருவேளை நீங்கள் ஊழியம் செய்து கொண்டிருந்தாலும் தேவன் கொடுக்கிற நெருக்கமான சூழ்நிலைகளை கண்டு பயப்படாமல் எப்பொழுதும் தேவன் மேல் விசுவாசத்தை வைக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் தேவன் மேல் உள்ள விசுவாசத்தை விட்டு விலகி அவருடைய சித்தத்திற்கும் திட்டத்திற்கும் விரோதமாக தீர்மானம் எடுத்து அவர் உங்களுக்கு கொடுத்த ஊழிய அழைப்பின் அபிஷேகத்தை இழந்து விடாதீர்கள்.

இன்றைக்கு அனேக ஊழியக்காரர்கள் தங்கள் கட்டும் கட்டிட பணிக்கான உத்தரவுக்காக அரசாங்க அலுவலங்களில் லஞ்சம் கொடுத்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தூசிப்பதற்கு இடம் கொடுக்கிறார்கள். இப்படியாக மக்கள் கொடுத்த காணிக்கையை லஞ்சமாக கொடுக்கிறார்கள். இப்படிச் செய்வதை விட்டு விட்டு உண்மையில் தேவன் சொன்ன ஒரு திட்டத்திற்காக தேவ சமுகத்தில் காத்திருந்து விசுவாசத்தோடே தேவனை பார்த்து ஆண்டவரே இந்த திட்டத்தை நீர் ஆரம்பிக்க சொன்னதால் தான் நான் செல்கிறேன் எனவே நான் இந்த திட்டத்திற்கான உத்தரவை வாங்க செல்லும் போது நீர் அந்த இடத்தில் அற்புதம் செய்ய வேண்டும் ஏனென்றால் இது நீர் செய்ய சொன்ன திட்டம் என்று விசுவாசத்தோடு ஜெபித்து விட்டு செல்லும் போது அந்த அரசாங்க அதிகாரி கண்களை மூடி கொண்டு அனுமதி கொடுப்பார். ஏனென்றால் தேவன் எல்லா அதிகாரங்களுக்கும் மேலான பரம அதிகாரங்கள் உடையவர். வானத்தையும் பூமியையும் படைத்த தேவனுடைய ஊழியக்காரர் எதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். கர்த்தருடைய காரியத்திற்காக நாம் செல்லும் போது கண்டிப்பாக தேவன் அற்புதம் செய்வார். இன்றைக்கு அரசாங்க அலுவலங்களில் லஞ்சம் கொடுக்கும் ஊழியக்காரர்கள் தேவன் மேல் விசுவாசமில்லாத மாறுபாடான அவிசுவாசமுள்ள இருதயத்தை உடையவர்கள்.

ஒருமுறை ஒரு ஊழியக்காரரிடம் கர்த்தர் ஊழியத்திற்காக ஒரு இடத்தை தருவதாக வாக்கு கொடுத்தார். உடனே இவரும் இடத்தை வாங்குவதற்காக பிரயாசம் எடுத்த போது ஆவியானவர் அவரிடம் நான் தானே உனக்கு இடத்தை தருவதாக வாக்கு கொடுத்தேன் நீ வாங்க வேண்டும் என்று சொல்லவில்லை. நீ ஏன் அதற்காக பிரயாசம் எடுக்கிறாய். என்றார். உடனே அவரும் ஆம் ஆண்டவரே நீர் வாக்கு கொடுத்திருக்கிறீர் நீர் அதை நிச்சயமாக செய்வீர் என்று சொல்லி ஜெபிக்க ஆரம்பித்துவிட்டார். பல மாதங்கள் கழித்து ஒரு தொழிலதிபர் இவரை தேடி வந்து தேவன் குறிப்பிட்ட அந்த இடத்தை வாங்கி அந்த ஊழியக்காரர் பேரில் பதிவு செய்து விட்டு போனார்.

இவருக்கு ஒரு காசு செலவில்லாமல் அந்த இடம் கிடைத்தது. பிரியமானவர்களே உங்களிடம் இருக்கும் அவிசுவாசித்தினால் தேவனுடைய முழுமையான ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள முடியாது. பாருங்கள் அவிசுவாசத்தினால் இஸ்ரவேல் ஜனங்கள் கானான் தேசத்துக்குப் பிரவேசிக்க முடியாமல் போனார்கள். எனவே எந்த சூழ்நிலையிலும் தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் இல்லாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள், ஏனென்றால் லூக்கா 18:8ல் மனுஷகுமாரன் வரும் போது பூமியில் விசுவாசத்தை காண்பாரோ என்று இயேசு சொன்னார்.

கடைசி காலத்தில் அனேகர் தேவன் பேரில் உள்ள விசுவாசத்தை இழந்து உலகத்தின் பேரிலும் மனிதர்கள் பேரிலும் விசுவாசம் வைப்பார்கள். விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம் என்று வேதம் சொல்லுகிறது. எனவே விசுவாசிகளை சோர்வுக்குட்படுத்தி தேவன் மேல் அவிசுவாசத்தை உண்டு பண்ணும்படியாக சாத்தானின் வல்லமைகள் தீவிரித்து வருகிறது. எனவே பிரியமானவர்களே ஒரு கடுகளவு கூட அவிசுவாசம் நம் இருதயத்தில் தோன்றாதபடி மிகவும் எச்சரிக்கையாக இருப்போம். ஆமென்.