Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 14/08/2016

 

யார் பெரியவன்??!

 

இன்றைக்கு உலகத்தில் எல்லாருக்குமே பெரியவனாக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என்பது மறக்க முடியாது. ஊழியத்தில் கூட பெரிய ஆளாக வர வேண்டும். பிரபலமாக வேண்டும் என்ற சுய இச்சையினால் தன்னை உயர்த்துகிற அனேகர் தங்களை முன் நிறுத்தும் படியாக சுய ஞானத்தினாலும் சுய பெலத்தினாலும் தேவ சித்தத்திற்கு விரோதமாக அனேக காரியங்களை செய்து பிறகு பரலோகத்தில் ஒரு பலனும் இல்லாமல் போய் விடுகிறார்கள். இன்னும் சிலர் தாங்கள் செய்த ஊழியங்களின் மூலம் தேவன் செய்த அற்புதங்களை தங்கள் சுய மகிமைக்காக வெளிப்படுத்தி தேவ மகிமையை அபகரிக்கிறார்கள்.

இயேசு கிறிஸ்துவின் வருகையை முன்னறிவித்த யோவானிடம் சிலர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி கேட்ட பொழுது யோவான் தன்னை மிகவும் தாழ்த்தி அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து பூமிக்கடுத்தவைகளை பேசுகிறான். பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர் [ யோவான் 3:30,31 ] என்று தன்னை தாழ்த்துகிறான்.

ஊழியத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக தன்னை தாழ்த்தின யோவான் ஸ்நானனைக் குறித்து இயேசு ஸ்திரீகளில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனும் இல்லை [லூக்கா 7:23] என்று சாட்சி கொடுத்தார்.. இன்றைக்கு அனேகர் மனுஷர் காண வேணடும் என்ற நோக்கத்தில் தங்களுடைய ஊழியங்களையும் மற்ற காரியங்களையும் பிரஸ்தாபப் படுத்தி மனித புகழ்ச்சியை நாடுகிறார்கள். மத் 6:1ல் மனுஷர் காண வேண்டும் என்று நாம் எதை செய்தாலும் பிதாவினிடத்தில் அவர்களுக்குப் பங்கில்லை என்று இயேசு சொல்வதை கவனியுங்கள் மேலும் அவர் லூக்கா 16:15ல் மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுவது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது என்றார்.

அடுத்ததாக மத் 18 ஆம் அதிகாரத்தில் சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து பரலோகராஜ்ஜியத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்ட பொழுது 4 ஆம் வசனத்தில் இந்த சிறு பிள்ளையைப் போல தன்னை தாழ்த்துகிறவன் எவனோ அவனே பரலோகராஜ்ஜியத்தில் பெரியவனாயிருப்பான் என்றார். அதாவது சிறு பிள்ளையைப் போல கள்ளம் கபடு இல்லாமல் நான் என்கிற சுய நீதி இல்லாமல் இருக்கும் உயர்ந்த தன்மை உள்ளவனே பரலோக ராஜ்ஜியத்தில் பெரியவனாயிருப்பான். அல்லேலூயா

மாற்கு 10 ஆம் அதிகாரத்தில் யாக்கோபும் யோவானும் இயேசு கிறிஸ்துவிடம் வந்து உமது மகிமையிலே எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும் படி எங்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்று சொன்ன பொழுது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து

மாற்கு 10:43,44,45 - 43. உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.

44.
உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.

45.
அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்.

என்று சொன்னார். இன்றைக்கு நம்மில் எத்தனை பேர் இயேசு சொன்னபடி ஒரு பணிவிடைக்காரனாக நம்மை தாழ்த்துகிறோம்? கொஞ்சம் பணமும் அஸ்தஸ்தும் வந்து விட்டாலே குடும்பத்தில் பெரியவனாக காட்ட ஆரம்பித்து விடுகிறோம். நம்மை நாமே உயர்த்தி கொள்கிறோம். ஊழியத்திலும் தேவன் நமக்கு கிருபையையும் வரங்களும் கொடுக்க ஆரம்பிக்கும் போது நம்மை பெரியவனாக காட்டி கொள்கிறோம். எனக்கு தெரிந்த ஒரு ஊழியக்காரர் அவர் இந்து மதத்தில் வைராக்கியமாக இருந்தவர். வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டு, தேவன் தன்னை ஊழியத்துக்கு அழைத்ததால் தன் வேலையை விட்டு விட்டு ஒரு சபையில் சேர்ந்து ஊழியம் செய்ய ஆரம்பித்தார். தன் ஆரம்ப கட்ட ஊழியத்தில் அவருக்கு அந்த சபையில் தண்ணீர் கப் கழுவும் வேலையை பெற்றிருந்தார். அவரும் அதை சந்தோஷமாக செய்து கொண்டு வந்தார். ஒரு நாள் அந்த வங்கியில் அவரோடு பணி புரிந்த உயர் அதிகாரி இவரது ஊழியத்தைப் பார்ப்பதற்கு அந்த சபைக்கு வந்தார், அங்கு அவர் தண்ணீர் கப் கழுவுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். புறமதத்தை சார்ந்த அவர் இவரைப் பார்த்து ஐயா நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பிரசங்கம் பண்ணுவீர்கள் என்று நினைத்தேன்.

இந்த கப் கழுவும் வேலைக்காகவா நீங்கள் வங்கி வேலையை உதறிவிட்டு வந்தீர்கள் என்று வருத்தப்பட்டார். இவரோ எதற்கும் கவலைப்படாமல் இந்த வேலையை நான் இயேசுவுக்கு செய்யும் ஊழியமாக பெரிதாக நினைத்து செய்கிறேன், இதை செய்வது நான் செய்த வங்கி பணியை விட பெரிய பணி என்று சந்தோஷத்தோடே சொல்ல அந்த அதிகாரி துக்க முகத்தோடே போய் விட்டார்.

நாட்கள் சென்றது. தேவன் அவரை வல்லமையாகப் பயன்படுத்த ஆரம்பித்தார். இன்றைக்கு உலகம் முழுவதும் வல்லமையாக பயன்படுத்தப் படுகிறார். அவர் தான் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் உலகம் முழுவதும் சென்று ஊழியம் செய்யும் சகோ.அப்பாதுரை அவர்கள். மாற்கு 10 ஆம் அதிகாரத்தில் இயேசுவின் சீஷர்கள் தங்களுக்குள்ளே யார் பெரியவர் என்று தர்க்கம் பண்ணின போது 35 ஆம் வசனத்திலே இயேசு கிறிஸ்து அவர்களை அழைத்து எவனாகிலும் முதல்வனாக இருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக் கடவன் என்றார்.

மேலும் லூக்கா 14:11 ல் தன்னை தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான். தன்னை தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்று இயேசு சொன்ன வசனம் எவ்வளவு உண்மையுள்ளது. எனவே தான் தேவ சமுகத்தில் தன்னை தாழ்த்தின ஆயக்காரன் நீதிமானாய் உயர்த்தப்பட்டான். [லூக்கா: 18:14]

பாருங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்கு சம்மாயிருப்பதை கொள்ளையாடின பெருளாக எண்ணாமல் தம்மை தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார். அவர் சிலுவையின் மரண பரியந்தமும் தம்மைத் தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார். அதுமட்டுமல்லாமல் எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தை அவருக்கு தந்தார் [ பிலி 2: 3-10 ] ஆகவேதான் பவுல் சொல்லுகிறார் இப்படிப்பட்ட கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களில் இருப்பதாக என்று பிலி 2:5 ல் எழுதியிருக்கிறார்.

இன்றைக்கு நம்முடைய சிந்தை எப்படியிருக்கிறது? இயேசு எடுத்த அடிமையின் ரூபத்தை நாம் எடுக்க விரும்புவதில்லை அது நமக்கு பிடிப்பதில்லை ஏனென்றால் நாம் தலைவனாக இருக்க விரும்புகிறோம். மற்றவர்களின் அங்கீகாரத்தையும் மனிதர்களின் மகிமையையும் நாடுகிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிதாவின் வேலை வரும் வரும் வரை காத்திருத்தார். ஆனால்  நாமோ அரைக் குறையாக வேதத்தைக் கற்றவுடன் போதகரையே விமர்சிக்க ஆரம்பித்து விடுகிறோம்.. அவர் அடிக்கப்பட்டார், நிந்திக்கப்பட்டார் ஆனாலும் அவர் ஒன்றும் எதிர் பேசவில்லை. நாம் சிலுவையின் பாடுகளுக்குள் கடந்து செல்ல விரும்பவில்லை. அவர் நமக்கு மாதிரியாக வைத்து விட்டு போன அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதில்லை. எனவே நாம் உயர்த்தப்படுவதில்லை.

யோவான் 13 ஆம் அதிகாரம் 3 ஆம் வசனத்தில் தம்முடைய கைகளில் பிதா எல்லா அதிகாரத்தையும் ஒப்பு கொடுத்தாரென்று இயேசு கிறிஸ்து அறிந்தவுடன் சீஷர்களின் கால்களை கழுவி தான் கட்டியிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். ஆண்டவரும் போதகருமாகிய நான் உங்களுக்கு பணிவிடை செய்தது போல நீங்களும் ஒருவருக்கொருவர் இப்படியே செய்யுங்கள் என்கிற மாதிரியைக் காண்பித்தார்.

லூக்கா 22: 24-26 ல் சீஷர்களுக்குள் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்ற வாக்குவாதம் உண்டான போது இயேசு கிறிஸ்து உங்களில் பெரியவன் சிறியவனைப் போலவும் தலைவன் பணிவிடைக் காரனைப் போலவும் இருக்கக் கடவன் என்று சொல்லி அதின்படி மாதிரியையும் செய்துக் காட்டினார்.

மத் 11:29 - நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

பிரியமானவர்களே நீங்கள் தேவனால் உயர்த்தப்பட வேண்டுமானால் அதாவது பெரியவனாக வேண்டுமானால் இயேசுவின் சிந்தை நம்மில் காணப்பட வேண்டும் அவர் செய்து காட்டிய மாதிரியின் படி வாழ்க்கையிலும் ஊழியத்திலும் நாம் நடந்து காட்ட வேண்டும்

அடுத்ததாக, பரலோக ராஜ்ஜியத்தில் யார் பெரியவனாயிருப்பான் என்று இயேசு கிறிஸ்து கூறினார்

மத் 5:19 - ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.

 

இன்றைக்கு நாம் தேவ வசனங்களை மனிதர்களுக்கு போதிக்கிறோம். ஆனால் அனேக காரியங்களுக்கு நாமே கீழ்ப்படிவதில்லை. மாயக்காரனே மற்றவர்களுக்கு போதிக்கிற நீ உனக்கே போதியாமல் இருக்கலாமா என்று இயேசு கிறிஸ்து கேட்டார். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காவும் ஜெபம் பண்ணுங்கள் என்று சொன்ன இயேசு கிறிஸ்து தன்னை அவமானப்படுத்தி அடித்து சிலுவையில் அறைந்த போது, ஆண்டவராகிய இயேசு ஜெபித்த ஜெபம், பிதாவே இவர்களுக்கு மன்னியும் இவர்கள் ஒன்றும் அறியாதிருக்கிறார்கள் என்றார். அதாவது தான் எதை சொன்னாரோ அதற்கு அவரும் கீழ்ப்படிந்திருந்தார்.

1 தீமோ 4:15 - நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திருபெரியவனாகும் படி, இயேசு சொன்ன காரியம் நாம் போதிக்கும் தேவ வசனங்களுக்கு முதலாவதாக நாம் கீழ்ப்படியும் போது நம்முடைய உபதேசங்களை கேட்கிறவர்களும் இரட்சிக்கப்படுவார்கள். அதன் மூலம் பரலோகத்தில் மிகுந்த பலன் உண்டாகும். அல்லேலூயா. அப்படி நாம் கீழ்ப்படியவில்லையென்றால் மாயக்காரன் அதாவது மாயமாலக்காரனே என்று தேவனே நம்மைப் பார்த்து அழைக்கும் நிலைக்கு ஆளாவோம்.

இயேசுவை நோக்கி வந்த நூற்றுக்கு அதிபதி நீர் என் வீட்டிற்கு வர  நான் பாத்திரனல்ல என்று தன்னை தாழ்த்தினான். அற்புதங்களை பெற்று கொண்டான். ஜெபம் பண்ண போன ஆயக்காரன் தேவ சமுகத்தில் பாவியாகிய என் மேல் கிருபையாயிரும் என்று தன்னைத் தாழ்த்தினான். ஆகவே நீதிமானாய் திரும்பிப் போனான். தேவன் தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையளிக்கிறார் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார். பவுல் ரோமர் 12:16 ல் ஒருவருக்கொருவர் ஏக சிந்தையுள்ளவர்களாக இருங்கள் மேட்டிமையானவைகளை சிந்தியாமல் தாழ்மையுள்ளவர்களுக்கு இணங்குங்கள். உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள் என்று எழுதுகிறார்.

இன்றைக்கு இந்த உலகில் பெரியவனாகும் படி அனேகர் பல காரியங்களை தங்கள் சுய ஞானத்தால் செய்து இறுதியில் எல்லாவற்றையும் இழந்து போய் விடுகிறார்கள். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ சகல அதிகாரங்களையும் பெற்றிருந்த போதிலும்  இந்த உலகத்தில் வந்த போது தம்மை வெறுமையாக்கினார் என்று பார்க்கிறோம். எப்படியென்றால் கானவூர் கல்யாண வீட்டிலே வேலைக்காரரோடு காணப்பட்டார். வேலைக்காரர்களைக் கொண்டு அற்புதம் செய்தார். சீஷர்களின் கால்களைக் கழுவி பணிவிடைச் செய்தார். தலைவனாக இருக்க விரும்புகிறவர்கள் பணிவிடைக்காரனாக இருக்கக் கடவன் என்றார். இயேசு சொன்ன சத்தியத்தின்படி அவர் விட்டு விட்டு சென்ற அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடப்போம். ஜெயத்தை பெற்று கொள்வோம் ஆமென்.

வெளி 3:21 - நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.