Tamil Christian Website

Tamil Christian Website

Posted on: 30/11/2015

யாருக்கு பெலன் கிடைக்கிறது?

சகோ. எட்வின் (சோஹார்-ஒமான்)

என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு பிலி 4:13

அ.பெலத்தைக் குறித்ததான முன்னுரையை பார்க்கலாம்:

இன்று அனேகர் இந்த உலகத்தில் தங்களைப் பெலப்படுத்துவதற்காக விதவிதமாக காரியங்களைச் செய்வதுண்டு. சில மனிதர்கள் தன்னுடைய சரீரத்தைப் பெலப்படுத்துவதற்காக உடற்பயிற்சி மையத்தை நாடி சென்று அங்குள்ள பயிற்சியாளரின் ஆலோசனைகளை நாடுகிறார்கள், இன்னும் சிலர் இந்த உலகத்தில் தன்னை செல்வத்தில் பெலனுள்ளவர்களாக காண்பிக்கும் பொருட்டு பலவிதங்களில் பணங்களைச் சம்பாதித்து வைப்பதுண்டு, இப்படிப்பட்ட பெலத்திற்காக சிலர் இரவும் பகலும் தங்கள் உடலைக் கெடுத்து வேலை செய்வதுண்டு, சிலர் தங்களை மனுஷர்கள் மத்தியில் பெலன் உள்ளவர்கள் என்று காண்பிப்பதற்காக அனேகரை தங்களோடு சேர்த்து வைத்து பலவிதமான மாயையான காரியங்களை வெலவீனமான மனுஷர்கள் மத்தியில் காண்பிப்பதுண்டு, ஆனால் இவைகள் எல்லாம்  சில நாட்களுக்குள்ளாக மாயையாய் மாறிப் போவதை பார்க்க முடிகிறது. எப்படியென்றால் ஒரு பலமுள்ள மனுஷனுக்கு திடீரென வியாதி வரும் போது அவனுடைய சரீரம் சோர்ந்து போய் ஒரு மூலையில் படுத்து இருப்பதை பார்க்க முடிகிறது. அடுத்ததாக செல்வத்தில் தன்னை பெலனாக காண்பித்து வரும் மனிதனின் வாழ்க்கையில் திடீரென இயற்கையினாலாவது அல்லது வேறு எவ்விதத்திலாவது அழிவு வரும் போது அவன் எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவில் நிற்பதைப் பார்க்க முடிகிறது. இவ்வளவுதான் இந்த உலக பெலனின் ஆயுசு நாட்கள் ஆகவேதான் தேவனுடைய மனிதன் மோசே சொல்லுகிறார் எங்கள் உலக பெலன் எல்லாம் சீக்கிரமாய் கடந்து போகிறது [ சங் 90:10 ]

இத்தகைய காரியத்தை ஒரு உயிருள்ள சம்பவத்தின் மூலம் சொல்ல விரும்புகிறேன், நானும் என்னுடைய சகோதரர்களும் ஜெபம் செய்வதற்காக ஒரு ஸ்தாபனத்தில் வேலை செய்கிற அனேகர் தங்கியிருக்கிற இடத்திற்கு அழைக்கப்பட்டோம். அப்பொழுது நல்ல பதவியில் இருக்கிற ஒரு மனுஷனுக்கு ஜெபம் செய்யும் படி சென்றோம். அப்பொழுது அந்த மனுஷனோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது அவர் சொன்ன ஒரு காரியம் நான் உடற்பயிற்சி செய்து என்னுடைய சரீரத்தை மிகவும் பெலமாக வைத்திருக்கிறன். ஆகவே நான் எதைப்பற்றியும் கவலைப்படுகிறதில்லை என்றும் அதுமட்டுமல்லாமல் அவர் இப்படியாக சொன்னார் என்னுடைய ஒரு காலில் இப்பொழுதுதான் ஆபரேஷன் நடந்தது, நான் மருத்துவரிடம் சொன்ன காரியம் எனக்கு மயக்க மருந்து ஒன்றும் தர வேண்டாம் அப்படியே நான் பார்க்கும்படியாக சிகிச்சை செய்யுங்கள் என்று சொல்லி தான் எப்படிப்பட்ட பலசாலி மற்றும் தைரியசாலி என்பதைக் காண்பித்தார். இப்படியாக இருக்கும் போது நான் அவருக்காக ஜெபிக்க ஆரம்பித்தேன் அப்பொழுது தேவன் அவருக்குள் இருக்கும் பயத்தை எனக்குத் தெரிவித்தார் நான் அவரிடம் சொன்னேன் ஐயா நீங்கள் இயேசுவை விசுவாசித்தால் உங்களுக்கு மறுபடியும் ஆபரேஷன் நடப்பதில்லை என்று அந்த பதிலைக் கேட்ட அவர் சொன்னார், மருத்துவர் சொல்லிருக்கிறார் உங்களுடைய அடுத்த காலுக்கும் ஆபரேஷன் தேவை என்று, நான் இயேசுவை விசுவாசிக்கிறேன் என்னுடைய காலுக்காக ஜெபியுங்கள் என்று பயத்துடன் சொன்ன காரியத்தை எங்களால் உணர முடிந்தது. ஆகவே உலகத்தில் பார்க்கிற பலத்தைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள். ஆகவே நம்முடைய பெலம் எவ்வாறு காணப்பட வேண்டும் என்பதை பின்வருமாறு பார்க்கப் போகிறோம்

ஆ.இரண்டாவதாக, கிறிஸ்தவர்களின் பெலன் என்றால் என்ன?

தீர்க்கதரிசி சொல்லுகிறார், நாம் நிர்மூலமாகாமல் இருப்பது தேவனுடைய கிருபை என்று புலம்பல் 3:22 ல் பெலன் என்பது தேவனுடைய கிருபை என்பது தெளிவாக புரிகிறது, நம்முடைய பெலம் நம்மை பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றுவதில்லை மற்றும் நம்முடைய நீதி நம்மை விடுவிப்பதில்லை மாறாக தேவனுடைய இரக்கமே நம்மை நிர்மூலமாகாமல் பாதுகாக்கிறது என்பதே மேலே சொல்லப்பட்ட வசனத்தின் அர்த்தம் ஆகும்

இ.  யார் அந்த பெலன்? அதாவது அந்த பெலத்தின் அல்லது அந்த கிருபையின் பெயர் என்ன?

கர்த்தரே என்னுடைய பெலன் என்று தாவீதும் மற்றும் மோசேயும் அவனோடு கூடிய இஸ்ரவேல் ஜனங்களும், சங் 27:1 மற்றும் யாத் 15:2 ல் தங்களுடைய பலம் யார் என்பதை நமக்கு தெளிவுப்படுத்தியிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

ஈ.  கடைசியாக, யாருக்கு பெலன் கிடைக்கிறது என்று பின்வருமாறு பார்க்கலாம்

1.கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பவர்களுக்கு [ நெகே 8:10 ]

இந்த உலகத்தில் மகிழ்ச்சியில்லாமல் வாழ்கிறவர்களைப் பார்ப்பீர்களானால் அவர்களிடம் இருந்து ஒரு காரியத்தை புரிந்து கொள்ள முடிகிறது, அதுஎன்னவென்றால் அவர்கள் எதையாவது பறிகொடுத்தவர்கள் போல எப்பொழுதும் சமாதானம் இல்லாமல் இருப்பார்கள். இதையே வேதம் தெளிவுப்படுத்துகிறது எப்படியென்றால், மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம், முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும் என்று நீதி 17:22 மற்றும் சங் 51:8 ல் இருந்து மகிழ்ச்சி என்பது ஒரு நல்ல மருந்தாக ஒரு மனுஷனுடைய வாழ்க்கையில் காணப்படுகிறது, ஆகவேதான் அப்.பவுல் தான் பலவிதமான சோதனைகள் மற்றும் பாடுகளின் வழியாக கடந்து சென்ற போதிலும் அவர் எல்லாவற்றையும் கிறிஸ்துவின் மூலமாய் மகிழ்ச்சியாய் ஏற்றுக் கொண்டதின் நிமித்தம் அவர் இந்த உலகத்தில் வருகிற நோய் கிருமிகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டார். அப்படி இல்லாத பட்சத்தில் அவர் தன்னுடைய ஆவிக்குரிய பயணத்தை துக்கத்தோடு தொடர்ந்திருப்பாரானால் இந்த உலகத்தினால் வருகிற வெள்ளப் பெருக்கினால் அவருடைய படகு கவிழ்ந்து போயிருக்கும் என்பதை எப்படி மறக்க முடியும்.

ஆகவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய போதகத்தில் இப்படியாக அவர் சொல்லுகிறார், நீங்கள் எதைக் குறித்தும் கவலைப்பட வேண்டாம், கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர  அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? என்று மத் 6:27ல் துக்கத்தின் தன்மை எப்படிப்பட்டது என்பதை அழகாக விளக்குகிறார்.

அடுத்ததாக இந்த மகிழ்ச்சி எப்படியிருக்க வேண்டும்?

இன்று அனேகர் உலகத்தினால் வருகிற மகிழ்ச்சியை விரும்புகிறார்கள் ஆகவே தான் சோர்ந்து போகும் போது தன் நண்பர்களைத் தேடிச் செல்லுகிறார்கள் சிலர் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தேடிச் செல்லுகிறார்கள் மற்றும் சிலர் தங்களுக்குப் பிரியமான ஊழியக்காரர்களை தேடியும் இன்னும் சிலர் தங்கள் பெற்றோரையும் தேடி செல்வதைப் பார்க்கிறோம், இதனால் இவர்களுக்கு வருகிற சாமாதானம் சில நேரம் தங்கியிருக்கிறது ஆகவே மறுபடியும் இந்த பிரச்சனைகள் தங்களுடைய வாழ்க்கையில் வரும் போது மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் ஆனால் அப்.பவுல் இந்த மகிழ்ச்சி அதாவது மகிழ்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்று பின்வருமாறு கூறுகிறார்

கர்த்தருக்குள் எப்பொழுது சந்தோஷமாயிருங்கள் என்று பிலி 4:4ல் சொல்லுகிறார். கர்த்தருக்குள் சந்தோஷமாய் இருக்க வேண்டுமானால் நம்முடைய வாழ்க்கையில் எல்லா இடத்தையும் தேவனாகிய இயேசு ஆளுகை செய்யும் படி நம்முடைய வாழ்க்கையின் வாசலைத் திறந்து கொடுக்க வேண்டும். ஏனென்றால் நாம் எந்த காரியத்தையும் தேவனுக்கு முன்பாக மறைக்க முடியாது என்று வேதம் தெளிவாக எபிரெயர் அதிகாரத்தில் வெளிப்படுத்துகிறது அப்படியாக நாம் சில இடங்களை மறைக்க முயற்சி செய்யும் போது அந்த இடங்களில் எல்லாம் வேதனையே மிஞ்சும் என்பதை மறந்து விடாதீர்கள். எந்த ஒரு சிறிய காரியமானாலும் சரி அதை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே தொடங்க வேண்டும் அப்பொழுது மாத்திரமே மகிழ்ச்சி நிலைத்திருக்கும் என்று பிலி 4:4-7 வரை வாசிக்கும் போது புலப்படுகிறது.

2.கர்த்தருக்காக காத்திருக்கிறவர்களுக்கு [ ஏசா 40:31 ]

யாரெல்லாம் கர்த்தராகிய இயேசுவுக்காக காத்திருக்கிறார்களோ அவர்களுக்கு புதுபெலன் உண்டாகிறது என்பதை மேலே சொன்ன வசனத்தின் மூலம் அறிய முடிகிறது. இன்று அனேகர், உலக மனிதர்கள் சொன்ன காரியத்திற்காக அனேக நாட்கள் காத்திருப்பார்கள் இதனிமித்தம் அவர்களுக்கு கிடைக்கும் பதில் ஏமாற்றம். எப்படி சரியாக பாதுகாக்கப்படாத ஒரு இரும்பை பூச்சியானது அரித்து நிர்மூலம் செய்கிறதோ அதேபோலத்தான் கர்த்தருக்குள் தன்னுடைய வாழ்க்கையை அமைத்திராதவர்களின் பெலத்தையும் இந்த உலக அதிபதியாகிய சாத்தன் என்னும் பூச்சி அரித்து விடுகிறது. பாருங்கள் சிறிது நேரம் கர்த்தருடைய மனுஷன் மூலம் வெளிப்பட்ட தேவ கட்டளைக்குக் காத்திருக்க முடியாததின் நிமித்தம் சவுலுக்கு என்ன நடந்தது தன்னுடைய எஞ்சிய நாட்களை கடந்து செல்லவதற்கான எல்லா தேவ பெலத்தையும் இழந்து போனான். இப்படியாக இன்று அனேகருடைய வாழ்க்கையும் அமைந்து போவதை பார்க்க முடிகிறது. எல்லா காரியத்திலும் அவசரப்பட்டு  ஏதாவது ஒரு வழியில் தன்னுடைய சமயத்தை மிச்சப்படுத்தி பணம் சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பி தேவனுக்காக ஓய்வு நாளில் காத்திருப்பதை விட்டு விட்டு அந்த நாளை தன்னுடைய சுய நலத்திற்காக பயன்படுத்துவதையும் அதின் நிமித்தம் அவர்களுக்கு கிடைக்கும் இழப்புகளையும் நம்முடைய கண்ணால் பார்க்க முடிகிறது.

வேதம் சொல்லுகிறது, கர்த்தருக்குக் காத்திரு அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், திடமனதாயிருந்து கர்த்தருக்கே காத்திரு என்று சங் 27:14 நம்முடைய பெலன் எப்படி வருகிறது என்பதை தெளிவுப்படுத்துவதை பார்க்க முடிகிறது.

கர்த்தருக்குக் காத்திருப்பது என்பது என்ன கர்த்தருக்குக் காத்திருப்பது என்பது அவரோடுகூட நடப்பதே அதாவது தேவனுக்கு பிரியமாய் வாழுவது என்று அர்த்தம் ஆகும் எப்படியென்றால் வேதம் சொல்லுகிறது மார்த்தாளோ பலவிதமான காரியங்களைக் குறித்ததான கவலைகளினால் தன்னுடைய பெலத்தை இழந்து கொண்டிருந்தாள் ஆனால் மரியாளோ தேவனுடைய பாதத்தில் காத்திருந்து அவர் தந்த ஜீவனுள்ள வார்த்தைகளினால் தன்னைப் பெலப்படுத்திக் கொண்டிருந்தாள் என்று லூக்கா 10ம் அதிகாரத்தைப் படிக்கும் போது கர்த்தருக்கு காத்திருப்பதால் வரும் பெலனைப் பார்க்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல் சங்கீதக்காரன் கர்த்தருப்பதால் கிடைக்கும் ஆசீர்வாதத்தை பின்வருமாறு விளக்குகிறார்,

கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன் அவர் என்னை பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலிருந்து என்னைத் தூக்கி எடுத்து என் கால்களை கன்மலையின் மேல் நிறுத்தி என் அடிகளை உறுதிப்படுத்தினார் [ சங் 40:1,2 ] ஆகவே ஒரு காரியத்தை நன்றாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள் மனுஷனுக்குக் [உலகம் ] காத்திருப்பதால் நமக்கு கிடைக்கும் பரிசு இந்த உலகத்தின் மரணம் ஆகும் ஆனால் தேவனாகிய இயேசுவுக்கு காத்திருப்பதால் கிடைக்கும் பரிசு நித்திய ஜீவன். ஏனென்றால் வேதம் சொல்லுகிறது, மனுஷனுக்கு செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு அதின் முடிவோ மரண வழிகள் நீதி 16:25

3.கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் இருந்து வருகிற அபிஷேகத்தை பெற்றவர்களுக்கு  [ அப் 1:8 ]

ஆண்டவராகிய இயேசுவோடு நடந்த சீஷர்களுக்கு என்ன நடந்தது, இயேசு கிறிஸ்து தம்மை கள்ளர் கையில் ஒப்புக் கொடுக்க ஆரம்பித்தவுடனே எல்லாரும் சிதறி ஒடினார்கள் அதுமட்டுமல்லாமல் சிலர் இயேசுவை மறுதலித்தனர், இன்னும் சிலர் தலைமறைவானார்கள், ஏன் இப்படி நடந்தது என்றால் அவர்களிடம் ஆவிக்குரிய பெலன் இல்லாததே காரணம் என்று சொன்னால் மிகையாகாது. பாருங்கள் சில சபைகளின் நிலைமையைப் பார்ப்பீர்களானால் உங்களுக்குப் புரிய வரும், அபிஷேக பெற்ற மனிதர் அந்த சபையை நடத்தி வருவார் அவர் பின்போ அந்த சபை படும் பாடுகளை நம்மால் உணரமுடிகிறது. ஏனென்றால் அங்கு அபிஷேகம் பெற்ற மனுஷன் இல்லாததே அந்த சபையின் குறைபாடாக காணப்படுகிறது, வேதம் சொல்லுகிறது ஆவிக்குரிய மனிதனே தேவனுடைய சுபாவங்களை வாசிக்க அறிந்தவன் ஆனால் ஒரு சாதாரண மனிதனால் ஆவிக்குரியக் காரியங்களை புரிந்துக் கொள்ள முடியாது.

இன்னும் பாரம்பரிய சபைகள் வேதத்தை நன்றாகபுரிந்து கொள்ளாமல் மற்றும் ஆவிக்குரிய காரியங்களை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் சரியான அபிஷேகம் அவர்களிடம் இல்லாததே காரணம் ஆகும் [ 1கொரி 2:14,15 மற்றும் 1யோவான் 2:27 ] ஆகவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களைப் பார்த்து சொன்னார், என் பிதா வாக்குத்தம் பண்ணினதை இதோ நான் உங்களுக்கு அனுப்புகிறேன் நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார் [ லூக்கா 24:49 ]  இதோ சீஷர்களும் ஆண்டவராகிய இயேசு சொன்ன வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து எருசலேமில் ஜெபத்தில் காத்திருந்தனர். அங்கு பரிசுத்தாவியானவர் வல்லமையாக ஒவ்வொருவர் மேலும் இறங்குவதைப் பார்க்க முடிந்தது [அப் 1:8] இதனால் என்ன நடந்தது மூன்று முறை இயேசுவை மறுதலித்த பேதுரு எழுந்து இயேசு கிறிஸ்துவைக் குறித்துப் பேசி சாட்சி கொடுத்தார், இந்த போதகத்தை கேட்ட அனேகர் இயேசுவை ஏற்றுக் கொண்டதை பார்க்க முடிந்தது.

அதுமட்டுமல்லாமல் பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தைக் கண்டு அவர்கள் படிப்பறியாதவர்களென்றும், பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்திருந்தபடியினால் ஆச்சரியப்பட்டு அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்களென்று அறிந்து கொண்டார்கள் [அப் 4:13] இத்தகைய காரியம் எப்படி நடந்தது அவர்கள் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்ட பிறகே நடந்தது என்பதை மறக்க வேண்டாம்.

சபைகளில் அனேக ஆத்துமாக்களை கொண்டு வர வேண்டுமானால் இந்த வல்லமையான அபிஷேகம் நமக்குத் தேவை அதுமட்டுமல்லாமல் அபிஷேகம் இல்லாமல் நாம் தேவனுடைய காரியங்களை நேர்த்தியாக செய்ய முடியாது அதுமட்டுமல்லாமல் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கும் செல்ல முடியாது. [ யோவான் 3:3-5 ]

4. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை சொல்லுகிறவர்களுக்கு [அப் 3:6,7]

வேதம் சொல்லுகிறது, என் நாமத்தினாலே[இயேசுவின்] நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன் என்று யோவான் 14:14 ல் இயேசுவின் நாமத்தின் மகிமையை பார்க்கிறோம்.

நாம் இன்னும் தேவனாகிய இயேசு கிறிஸ்துவிடம் இருந்து பெற்றுக் கொள்ளாததற்குக் காரணம் அற்புதங்களை செய்கிற இயேசுவின் நாமத்தை அறியாததும் மற்றும் வாய் திறந்து சொல்லாததுமே ஆகும். இன்று அனேக சபைகளில் மற்றும் அனேக ஊழியக்காரர்கள் நூறு தடவை தேவன் என்றும் ஆண்டவர் என்றும் சொல்லுவார்கள் ஆனால் ஒரு தடவை கூட இயேசுவின் பெயரை சொல்ல மாட்டார்கள். இன்னும் சிலர் தங்களுக்கு விடுதலை தந்த இயேசுவின் நாமத்தை உயர்த்துவதற்குப் பதிலாக இந்த உலக மனுஷர்களின் நாமத்தை மாத்திரம் உயர்த்துவார்கள். ஆகவேதான் இன்றைக்கு அனேக ஊழியக்காரர்களின் மற்றும் விசுவாசிகளின் ஆவிக்குரிய ஜீவயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. வேதத்தில் இருந்து ஒரு சம்பவத்தை உங்களுக்கு சுட்டிக் காட்ட ஆசைப்படுகிறேன், அதாவது இயேசுவின் நாமத்தை சொன்னதால் என்ன நடந்தது. பல நாட்களாக சப்பாணியாய் ஒரு மனுஷன் சபையின் வாசல் அருகே இருந்து பிச்சை எடுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறான் அந்த வழியாக சபைக்குச் செல்லும் விசுவாசிகளும் ஊழியக்காரகளும் அவனுக்கு இரக்கப்பட்டு பண உதவியும் சாப்பாடும் கொடுக்கிறார்களே தவிர ஒருவராலும் அந்த மனுஷனுக்கு சுகத்தை தர முடியவில்லை ஏனென்றால் இவர்களுக்கு இயேசுவின் நாமத்தைப் பற்றியதான சரியான அறிவு இல்லாததே ஆகும். இவர்கள் பழைய ஏற்பாட்டில் அனேக கதாபாத்திரங்களை குறித்து பேசுவார்கள் மாறாக இயேசுவைக் குறித்து சொல்லுவதற்கோ இவர்களுக்கு தேவையான வார்த்தைகள் கிடைப்பதில்லை இதனிமித்தம் சபையின் விசுவாசிகளும் ஒரு மோசேக்காவும் மற்றும் ஆரோனுக்காகவும் காத்திருப்பதை பார்க்க முடிகிறது  ஆனால் யோவானும் பேதுருவும் என்ன செய்தார்கள் வேதம் சொல்லுகிறது அப்பொழுது பேதுரு வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன் நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எழுந்து நட என்று சொன்னார்கள், இப்படியாக அவர்கள் இயேசுவின் நாமத்தை சொன்ன போது அந்த சப்பாணியின் கரடுகளும் கால்களும் புது பெலனைப் பெற்றது என்று அப் 3:1-8 வரை வாசிக்கும் போது இயேசுவின் நாமம் செய்த பெரிய அற்புதத்தை பார்க்க முடிகிறது.

ஆச்சரியமாய் தங்களைப் பார்த்த ஜனங்களை நோக்கி பேதுருவும் யோவானும் சொன்ன பதில், இயேசுவின் நாமமே இந்த அற்புதத்தை செய்தது என்று அப்போஸ்தலர் 3:16ல் வாசிக்கிறோமே.

5.கர்த்தருக்குள் ஜெபம் பண்ணி துதிப்பவர்களுக்கு [ அப் 16:25,26 ]

இன்று அனேக கிறிஸ்தவர்களின் கட்டுகளும், சாபங்களும், பிரச்சனைகளும் மாறாததற்கு மிக முக்கியமான காரணம் அவர்களிடம் இந்த ஜெபமும் துதியும் இல்லாததே ஆகும், இவர்கள் ஒழுங்காக சபையில் நடக்கும் ஆராதனையில் கலந்து கொள்வார்கள், தொலைக்காட்சியில் வருகிற எல்லா ஊழியக்காரர்களின் செய்தியைக் கேட்பார்கள் மற்றும் எந்தந்த இடத்தில் எல்லாம் விசேஷித்த கூட்டங்கள் நடக்கிறதோ அதில் எல்லாமும் கலந்து கொள்வார்கள் ஆனால் இவர்களுடைய வாழ்க்கையிலோ எந்த வித கனியும் இருப்பதில்லை ஏனென்றால் அவர்களிடம் இயேசு கிறிஸ்து சொன்ன ஜெபமும் அவரைத் துதிக்கிற துதி என்கிற இந்த இரண்டு விதமான உரங்களை தன்னுடைய மரம் வளர்வதற்கு பயன்படுத்தாததே ஆகும் என்று சொல்லிக் கொள்கிறேன்.

ஆகவேதான் தன்னோடு கூட நடந்த சீஷர்களால் ஒரு பிசாசைக் கூட துரத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்ட போது தேவன் அவர்களுக்கு ஜெபத்தின் மகிமையை வெளிப்படுத்துவதையும் மற்றும் ஜெபத்தை கற்றுக் கொடுப்பதையும் பல இடங்களில் பார்க்கலாம்.

ஒரு காரியத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், ஜெபமும் துதியும் நிறைந்த மனுஷனை பிசாசினால் ஒருபோதும் ஜெயம் எடுக்க முடியாது என்பதை மறந்து விட வேண்டாம், ஆகவேதான் பவுலும் சீலாவும் தாங்கள் கட்டப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட போது அவர்கள் சிறைச்சாலையை உடைத்து வெளியே வருவதற்கு உலக ஆயுதங்களை தேடாமல் எல்லாவற்றையும் எளிதாக உடைக்கிற ஜெபத்தையும் துதியையும் மாத்திரம் எடுத்துக் கொண்டனர். இதனிமித்தமாக அந்த சிறைச்சாலை கதவுகள் எல்லாம் திறவுண்டது அதுமட்டுமல்லாமல் உலகத்தால் கட்டப்பட்ட கட்டுகளும் கழன்று போயிற்று என்று அப் 16:25-26 வரை வாசிக்கும் போது அறிய முடிகிறது.

ஆகவே நம்முடைய குடும்பத்தை அலைக்கழித்துக் கொண்டிருக்கிற பிசாசு ஓட வேண்டுமா? நம்மை அடிக்கடி பெலவீனப்படுத்துகிற நோய்கள் ஓட வேண்டுமா? நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஏற்படுகிற முன்னேற்றத்தை தடுக்கிற தடைகள் உடைய வேண்டுமா? வேதம் சொல்லுகிறது.

இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள், எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள் 2தெச 5:17,18

6. கடைசியாக, கர்த்தராகிய இயேசுவின் மூலம் வருகிற இரட்சிப்பைப் பெற்று கொள்ளுகிறவர்களுக்கு [ 1கொரி 1:18 ]

வேதம் சொல்லுகிறது, சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாகும் அதுமட்டுமல்லாமல் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் என்று யோவான் 8:32,36ல் தெரிந்து கொள்கிறோம்

நமக்கு விடுதலை வேண்டுமானால் நிச்சயமாக நாம் இயேசு தருகிற இரட்சிப்பைப் பெற்றிருக்க வேண்டும் அப்பொழுதுதான் நமக்கு வாழ்க்கையில் எல்லா இடத்திலும் விடுதலை கிடைக்கும்.

இன்று அனேக கிறிஸ்தவர்களின் வாழ்க்கையைப் பார்ப்பீர்களானால் அவர்களுடைய வாழ்க்கையில் சாபங்களும் பாவங்களும் துன்பமும் நோய்களும் தொடர்ந்து அவர்களை விரட்டிக் கொண்டு வருவதைப் பார்க்க முடிகிறது. இதற்கு காரணம் பாவத்தையும் நோயையும் சாபங்களையும் சிலுவையில் ஆணி அடித்த இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படாமல் இருப்பதே காரணம் ஆகும்.

எப்படியென்றால் வேதம் சொல்லுகிறது நியாயப் பிரமாணம் எல்லாரையும் பாவத்திற்குள்ளாக அடைத்து வைத்திருந்தது. எப்படியென்றால் பழைய ஏற்பாடில் தேவனுடைய கற்பனைகளின் படி நடக்காதவன் சபிக்கப்பட்டவனாக காணப்பட்டான் அதுமட்டுமல்லாமல் அந்த காலத்தில் கொடுக்கப்பட்ட பலிகள் இவர்களுடைய பாவத்தை மன்னிக்கவில்லை மாறாக பாவங்கள் மூடப்பட்டிருந்தது என்று வேதத்தைப் படிக்கும் போது அறிகிறோம். ஆனல் ஒரு மனுஷன், மேலே சொல்லப்பட்ட எல்லாவற்றிலும் இருந்து விடுதலைப் பெறவேண்டுமானல் அவன் கிறிஸ்துவின் சந்ததியாக மாறியிருக்க வேண்டும்.

அது யூதரானலும், இஸ்ரவேலரானாலும் போதகராயிருந்தாலும் எல்லாருக்கும் ஒரே ஒரு நிபந்தனையைத் தான் வேதம் சொல்லுகிறது அது இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவர் நாமத்தினால் தன்ணீரினால் மூழ்கு ஞானஸ்னாமும் ஆவியினால் அபிஷேகமும் பெற்றிருக்க வேண்டும் [ யோவான் 3:3-5, ரோமர் 10:9,10,13 ]

அப்படியில்லாதபட்சத்தில் அவர்களின் வீடு நரகம் தான் என்பதை மறக்க வேண்டாம். இதோ ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேற்றமும் ஆவிக்குரிய வரங்களும் மற்றும் ஆபிரகாமின் ஆசீர்வாதங்களும் வேண்டும் என விருப்புகிறவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் கிறிஸ்துவின் சந்ததி என்கிற பெயரை தன்னுடைய ஆவிக்குரிய சரீரத்தில் தரித்திருக்க வேண்டும். அல்லது நான் யூதர் ,இஸ்ரவேலர் என்று சொல்வீர்களானால் ஒரு ஆசீர்வாதமும் உங்களைத் தேடி வராது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் [ கலா 3:14,16 ]

வேதம் சொல்லுகிறது, இயேசு கிஸ்துவினாலேயன்றி வோறொருவராலும் இரட்சிப்பு இல்லை நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை ஆகவே நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையை பிசாசனவன் குலைத்து விடாமல் இருக்க வேண்டுமானால் நாம் இரட்சணியமென்னும் தலைச்சீராவை அணிந்து கொள்ள வேண்டும். [ எபேசியர் 6:17 ]

எனக்கு பிரியமான ஜனங்களே, நாம் எல்லாரும் இன்று போர்க்களத்தில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம் நாம் யுத்தத்தில் நிற்பதற்கு நமக்கு இவ்வுலக நவீன கருவிகள் வேண்டாம் இவைகள் நிச்சயமாக நமக்கு பெலனை தர முடியாது என்பதை மறந்து விட வேண்டாம் நம்முடைய பெலன் கிறிஸ்துவே ஆகவேதான் வேதம் சொல்லுகிறது, கர்த்தருடைய நாமம் பலத்த துருகம் நீதிமான் அதற்குள் ஓடி சுகமாயிருப்பான் [ நீதி 18:10 ]

ஆகவே  நமக்கு பலத்தை தருகிற கிறிஸ்துவின் நாமத்தை நம்முடைய சரீரத்தில் தரித்துக் கொள்ளும் போது பிசாசானவன் எறிகிற எல்லா குண்டுகளிலும் இருந்து நாம் தப்பித்துக் கொள்ள முடியும் என்பதை ஆணித்தரமாக சொல்லி நம்முடைய பலம் கிறிஸ்துவே என்று முடிக்கிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக!