Tamil Christian Website

Tamil Christian Website

Posted on: 12/04/2014
 
By: Bro. Edwin - Sohar
 

ஆயுதங்கள்

 

நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள்  : எபேசியர் 6:11

முன்னுரை:

ஆயுதங்கள் என்ற தலைப்பில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்,

பாருங்கள், ஆவிக்குரிய வாழ்க்கையை மிகவும் செம்மையாக வாழ்ந்து முடித்து, தேவனாகிய இயேசுவோடு செல்வதற்கு, நமக்கு சில வல்லமையான ஆயுதங்களை தேவன் வேதத்தின் மூலம் நமக்கு கொடுத்திருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது,

இந்த ஆவிக்குரிய ஆயுதங்கள் நமக்கு இலவசமாக கொடுக்கப்படுகிறது என்பதை மறக்க வேண்டாம். இன்று அநேகர் இந்த ஆவிக்குரிய ஆயுதங்களை தங்களுடைய பணத்தின் மூலம் வாங்க முயற்சி செய்து காயப்படுவதை பார்க்க முடிகிறது, ஆகவே குறுக்கு வழியில் முயற்சி செய்ய வேண்டாம்

மாறாக, உலகத்திலுள்ள ஆயுதங்களுக்கோ நாம் பணம் கொடுக்க வேண்டும், அதுமட்டுமல்லாமல் அவைகளினால் நமக்கு நிலையான பாதுகாப்பு இல்லை என்பதையும் மறக்க வேண்டாம்,

இன்று அநேகர் இந்த ஆவிகுரிய ஆயுதங்கள் இல்லாமையால் தங்களுடைய ஆவிக்குரிய யுத்தத்தில் அநேக நேரம், பிசாசிடம் தோல்வியடைந்து கொண்டிருக்கிறதைப் பார்க்க முடிகிறது,

ஆகவேதான், இந்தப் பாகத்தில், உங்களோடு ஆவிக்குரிய ஆயுதங்களைப் பற்றிய தாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினேன்,

முதலாவதாக, மூன்று காரியங்களை உங்களுக்கு முன்பாக வைக்க விரும்புகிறேன், அதுஎன்னவென்றால்,

1.நமக்கு யாருடன் யுத்தம் என்பதை அறிய வேண்டும்

2.தேவன் தருகிற ஆயுதங்களின் வல்லமையை அறிய வேண்டும்

3.ஆயுதங்களின் பயன்கள் என்னவென்று அறிய வேண்டும்.


1.யாருடன் நமக்கு யுத்தம்:

உலக ஜனங்கள், அதாவது மாம்சத்தில் வாழ்கிறவர்கள் எண்ணுகிறது போல நமக்கு இந்த உலகத்தின் ஜனங்களோடு ஒருபோதும் யுத்தம் இல்லை என்பதை அறிய வேண்டும், இத்தகைய காரியத்தைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்பதை கவனிப்போம்,  ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல துரைத்தனங்களோடும், திகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்கு போராட்டம் உண்டு. என்று எபேசியர் 6:12 இருந்து நாம் அறிய முடிகிறது.

பாருங்கள், நமக்கு விரோதமாக ஒரு மனுஷன் தூஷணமாக பேசுகிறான் என்றால், அத்தகைய காரியம் அந்த மனுஷரிடம் இருந்து வருவதில்லை. மாறாக, சாத்தானே அவனுக்குள் இருந்து பேசுகிறான் என்பதை அறிய வேண்டும், எப்படியென்றால், தேவன் காயீனைப்  பார்த்து சொன்னார், காயீனே எரிச்சலை விட்டுவிட்டு அதாவது பிசாசுக்கு உன் இருதயத்தில் இடம் கொடாதிரு அப்பொழுது பிசாசு உனக்குள் வருவதில்லை, அதாவது வாசற்படியில் படுத்திருக்கிற பாவம் உனக்குள் வந்து விடும், ஒரு காரியத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அது என்னவென்றால், பாவம் ஒருபோதும் வாசற்படியில் படுத்திருப்பதில்லை, மாறாக, பாவத்தைத் தூண்டுகிற சாத்தானே படுத்திருக்கிறான் என்பதே இதன் பொருள், ஆனால் காயீனோ பிசாசுக்கு இடம் கொடுத்தான், தன் சகோதரனை கொன்று போட்டான்.

ஆகவே மறக்க வேண்டாம், நம்முடைய யுத்தம் சாத்தானோடு மாத்திரமே.

2.தேவன் தருகிற ஆயுதங்களின் வல்லமை எப்படிப்பட்டது:

உலகத்திலுள்ள எல்லா ஆயுதங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் நிர்ணயிக்கப்படுகிறது, அதுமட்டுமல்லாமல் நாளடைவில் அவைகள் துருப்பிடித்து ஒன்றுக்கும் உதவாமால் போய்விடுகிறது,  ஏனென்றால், அவைகள் மனுஷருடைய யோசனைகளால் உண்டானது, மனுஷன் எப்படி அழிந்து போகிறானோ அப்படியே அவனுடைய யோசனையும் அழிந்து போகிறது என்று வேதம் சொல்லுகிறது, இத்தகைய காரியத்தை யோசாபாத் ராஜா மிகவும் அழகாக தன்னுடைய ஜனங்களுக்குச் சொல்லிக்கொடுப்பதை, நாம் 2 நாளாகமம் 20 ம் அதிகாரத்தை வாசிக்கும் போது அறிய முடிகிறது,


அதுமாத்திரமல்ல, தேவன் அப்.பவுலைக் கொண்டு, தான் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கிற ஆயுதத்தின் பலத்தை விவரித்துச் சொல்வதை பின்வருமாறு காணலாம்,

    எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல். அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.

 அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம், - 2 கொரி 10:4,5.

எனவே, மறக்க வேண்டாம், தேவனுடைய ஆயுதமாத்திரமே பலமானது, மனுஷனுடைய ஆயுதமோ பலவீனமானது, ஆகவேதான் அப்.பவுல் சொல்லுகிறார்,

தேவனுடைய பலத்தினால், அதாவது தேவனுடைய ஆயுதத்தின் மூலம் எல்லாவற்றையும் என்னால் செய்து முடிக்க முடியும் என்று,

   பிலிப்பியர் 4:13 ல் சொல்வதை பார்க்க முடிகிறது.

3.கடைசியாக, தேவன் கொடுக்கிற ஆயுதங்கள் மற்றும் அவைகளின் பயன்களையும் பார்க்கப் போகிறோம்,

வேதம் சொல்லுகிறது,

 அகையால், தீங்கு நாளிலே அவைகளை [ பிசாசை ] நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்,

-      எபேசியர் 6:13

A.நாம் யுத்தம் செய்வதற்கு நமக்குத் தேவைப்படும் முதல் ஆயுதம் : சத்தியம்

     வேதம் சொல்லுகிறது, சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டிக் கொள்ளுங்கள் என்று, எபேசியர் 6:14 ல் வாசிக்கிறோம்.

    எதற்காக இந்த கச்சையைக் கட்ட வேண்டும், இதற்கு ஒரு எளிய உதாரணத்தை தந்து, உங்களுக்கு இந்த சத்தியம் என்கிற கச்சையை உங்களுக்கு கட்டிவிட விரும்புகிறேன்.

பாருங்கள், நாம் ஆடைகளை அணியும்போது, ஏன் இந்த கச்சையை கட்ட வேண்டும், ஏனென்றால் நம்முடைய ஆடைகள் கீழே விழுந்து விடாமல் இருக்கவும், மேலும் நம்மை மிக அழகாக காண்பிக்கவுமே, அதுமட்டுமன்றி சிலர் இந்த கச்சையை தண்டனை வழங்குவதற்கும் பயன்படுத்துவதைக் காணலாம்,


இதேபோலத்தான், நம்முடைய ஆவிக்குரிய ஆயுதமாகிய சத்தியமும் இருக்கிறது, நாம் ஓடிக்கொண்டிருக்கிற இந்த மாம்ச உலகத்தில், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை கறைப்படாதப்படிக்கு, பிசாசு கொண்டுவருகிற சந்தேகங்களை விரட்டுவதற்கும், நமக்குள் இருக்கும் ஆயுதங்கள் விழுந்துவிடாதப்படிக்கும், நாம் சத்திய என்கிற கச்சையை அணிய வேண்டியதாயிருக்கிறது. மேலும், வேதம் சொல்லுகிறது..

சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார், என்று யோவான் 8:32, ல் வாசிக்கிறோம்.

இன்று அநேகருடைய வாழ்க்கையில் விடுதலை இல்லாமல் இருப்பதற்குக் காரணம், இந்த சத்தியம் என்கிற ஆயுதம் இல்லாமல் இருப்பதினால்தான் என்று சொல்லிக்கொள்கிறேன்.

அடுத்ததாக, சத்தியம் என்றால் என்ன? வேதம் சொல்லுகிறது..

தேவனுடைய வசனமே சத்தியம் என்றும் [ யோவான் 17:17 ],

இந்த வசனம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்றும் [ யோவான் 1:1 ]

நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்,

இந்த ரகசியத்தை அறிந்த அப்.பவுல் இவ்வாறாக விளக்குவதைப் பின்வருமாறு காணலாம், எப்படியென்றால்,

நீங்கள் இந்த சத்தியத்தை, அதாவது இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன் என்று, அவர் 1கொரி 2:2 லும், மேலும், அவர் உங்களுடைய வீடு அதாவது ஆவிக்குரிய வீடு பலமாக இருக்க வேண்டுமானால் இயேசுகிறிஸ்துவாகிய அஸ்திபாரத்தின் மேல் கட்டுங்கள் என்று 1கொரி 3:11 ல் விளக்குவதை அறியலாம்.

இதே விளக்கத்தைத்தான் நம்முடைய ஆண்டவராகிய இயேசு முன்னதாக எழுதிவைத்திருக்கிறதை, நாம் மத்தேயு 7: 24-27 வரை வாசிக்கும் போது அறிய முடிகிறது.

எப்படியென்றால், கன்மலைமேல் அதாவது இயேசு கிறிஸ்து மேல் கட்டப்பட்ட வீடு எந்த சூழ்நிலையிலும் விழுந்து போவதில்லை என்பதே மத்தேயு அதிகாரத்திலும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது [ கன்மலை என்பது இயேசுவே என்று, 1 கொரி 10:4 ஐ வாசிக்கும் போது தெரிந்து கொள்ளலாம் ]

இன்று அநேகருடைய வீடு, அதாவது ஆவிகுரிய வீடு பெருமழை மற்றும் காற்று, புயல் அடிக்கும் போது விழுந்துவிடுவதற்குக் காரணம், அவர்களுடைய வீடு சத்தியமாகிய இயேசுவின் மேல் கட்டப்படாமல் இருப்பதே என்பதை நிச்சயமாக சொல்லிக்கொள்ளுகிறேன்.


B.இரண்டாவது ஆயுதம்: நீதி

வேதம் சொல்லுகிறது ,பிசாசை எதிர்த்து நிற்பதற்கு நீதி என்னும் மார்க்கவசத்தை தரித்துக் கொள்ளுங்கள் எபேசி 6:14

பாருங்கள், யுத்தகளத்தில் நிற்கிற போர்வீரன் தன்னுடைய இருதயத்தை எதிரியானவன் தாக்காதபடி தன்னுடைய மார்ப்பகத்தை பாதுகாப்பதற்காக மார்க்கவசத்தை அணிந்து இருப்பதைக் காணலாம், ஏனென்றால் உலகமனுஷன் நன்றாக அறிந்திருந்தான், இருதயம் சேதப்பட்டால் தன்னுடைய உயிரை இழக்க நேரிடும்.

இதே போலத்தான், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நம்முடைய இருதயத்தை பாதுகாக்கவில்லை என்றால், நாம் தேவனோடு சஞ்சரிக்க முடியாது, எப்படியென்றால் தேவன் சொல்லுகிறார், நீங்கள் சுத்தப்படுத்த வேண்டுயது புறத்தையல்ல, அதாவது பாதுகாக்க வேண்டுயது புறத்தையல்ல உங்கள் அகத்தையே என்பதாக, அவர் சுட்டிக்காட்டுவதை, மத்தேயு 15ம் அதிகாரத்தை வாசிக்கும் போது அறிந்து கொள்ளலாம்.

மேலும், இத்தைய காரியத்தைக் குறித்து தேவன் சொல்லுகிறார், ஏன் உங்களால் என்னை மழுமையாக ஆராதிக்கமுடியவில்லை என்றால், உங்கள் இருதயம் பழுதாய் இருப்பதே இதற்குக் காரணம் என்று ஏசா 29:13 ல் நமக்கு வெளிப்படுத்துவதைக் காணலாம்,

இன்று நாம் அநேக ஆவிக்குரிய காரியங்களை இழந்துப் போவதற்குக் காரணம், நம்முடைய இருதயமாகிய பை சரியான பாதுகாப்பு இல்லாமல் பழுதடைந்து கிடப்பதே காரணம், ஆகவே ஆவிக்குரிய இருதயம் நமக்கு வேண்டுமானால். நாம் நீதி என்னும் மார்க்கவசத்தை இனிமேலாவது பயன்படுத்துவோம்.

நீதி என்றால் என்ன?

வேதம் சொல்லுகிறது, ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார், அது அவருக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று கலா 3:6 ல் வாசிக்கிறோம்.

அப்படியென்றால் என்ன அர்த்தம்,

அதாவது தேவன் உண்மையுள்ளவர் என்றும் அவர் பொய் சொல்லாதவர் என்றும் அவர் விசுவாசித்தார். [ தேவனுடைய கற்பனைகளும், கட்டளைகளும் நீதியாகும் என்பதை மறக்க வேண்டாம் ]  அதுமட்டுமல்லாமல், ஒரு மனுஷனுடைய பரிசுத்தம் அவனுடைய நீதியின் மூலமே வெளிப்படுத்தப்படுகிறது என்று வேதம் நமக்கு தெளிவுப்படுத்துவதை. நாம் ஏசாயா 5:16 ல் வாசித்து தெரிந்து கொள்ளலாம்,மேலும் தேவன் நீதி என்னும் ஆயுதத்தை எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கு சில உதாரணங்களை தர விரும்புகிறேன்,

 

தேவன் நீதிமான்களின் வழியை மாத்திரம் அறிந்திருக்கிறார் சங் 1:6

தேவனுடைய தன்னுடைய பேரை நீதி என்று சொல்லுகிறார் மல் 4:2

தேவன் நீதிமானுடைய துன்பங்களை உடனே மாற்றுகிறார் சங் 34:19

தேவன் நீதிமான் கூப்பிடும் போது கேட்கிறார் சங் 34:17

தேவன் நீதிமான் விரும்புகிற காரியத்தை அவனுக்குக் கொடுக்கிறார் நீதி 10:24

C. மூன்றாவது ஆயுதம்: ஆயத்தம்

ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களில் தொடுத்துக் கொள்ளுங்கள் என்று எபேசி 6:15 ல் தேவன் நமக்கு சொல்லுவதை அறியலாம்.

பாருங்கள், நாம் கரடுமுரடான பாதைகளைக் கடக்கும் போது, நம்முடைய பாதங்களுக்கு பாதரட்சைகள் இல்லையென்றால், நாம் எவ்வளவு வேதனையை அனுபவிக்க வேண்டுமென்பதை நினைத்துப்பாருங்கள்.

இன்று அநேகருடைய ஆவிக்குரிய வாழ்க்கையில், மேடு பள்ளங்கள் மற்றும் கரடுமுரடானவைகளை கொண்டு வருகிற பிசாசின் மேல் மிதித்து நடப்பதற்கு ஆயத்தம் என்னும் பாதரட்சை இல்லாத காரணத்தினால், அவர்களால் தங்களுடைய ஊழியத்தை தொடர்ந்து செய்ய முடியவில்லை மற்றும் சிலர் ஆவிக்குரிய வாழ்க்கையை விட்டுவிட்டு பழைய வாழ்க்கைக்கு திரும்பி விடுவதைக் காணலாம், இதனால் தேவனுடைய நாமம் தூஷிக்கப்படுகிறது என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.

ஆகவேதான் வேதம் சொல்லுகிறது,

ஆரோனைப் போல அழைக்கப்பட்டாலொழிய அதாவது தேவ அழைப்பும், தேவ அறிவும் உடைய ஆயத்தம் என்னும் ஆயுதம் உடையவர்கள் மட்டுமே இந்த கனமான ஊழியத்திற்கு தேவை என்பதையே வேதம் நமக்கு தெளிவுப்படுத்துவதை நாம் எபிரெயர் 5:4 ஐ வாசிக்கும் போது புரிந்து கொள்லமுடிகிறது.

மேலும்.

முதலில் உன்னுடைய காலில் ஆயத்தம் என்னும் பாதரட்சையை அணிந்து கொள் பின்பு மற்றவர்களுக்கு அதை கொடுப்பதற்கு முயற்சி செய் என்கிற ஒரு காரியத்தை நாம் எசேக்கியேல் 38:7 ஐ வாசிக்கும் போது அறிய முடிகிறது.

என் அருமை ஜனங்களை விதவிதமான பாதரட்சைகளை காலில் அணிவது முக்கியமல்ல, முதலில் நம்முடைய காலில் ஆயத்தம் என்னும் பாதரட்சை இருக்கிறதா என்று யோசித்துப்பார்ப்போம்.

 

 D.நான்காவது ஆயுதம்:விசுவாசம்

விசுவாசமென்னும் கேடகத்தை பிடித்துக் கொண்டவர்களாய் நில்லுங்கள் எபேசி 6:16 சொல்லுகிறது.

யுத்த களத்தில் போர்செய்கிற ஒரு வீரனுக்கு. எதிரியின் அடிகள் தன்மேல் விழாமல் தடுப்பதற்கு இந்த கேடகம் என்னும் ஆயுதம் மிகவும் முக்கியம் என்று நம்மால் உணரமுடிகிறது.

இன்றைக்கு அநேகர் அதாவது ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் உணரற்ற நிலையில் இருப்பதற்குக் காரணம், பிசாசின் அடிகள் அவர்களுடைய பலபாகங்களில் படுவதால்தான் என்று சொல்லிக்கொள்கிறேன், இதை தடுக்கலாம் என்றால் அவர்களிடத்தில் விசுவாசம் என்னும் கேடகம் இல்லை.

வேதம் சொல்வதைக் கவனிக்கலாம்,

விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம் என்று நாம் எபி 11:6 ல் வாசிக்கலாம்.

பாருங்கள் யாரிடம் இந்த ஆயுதம் இல்லையோ, அவர்களை தேவனால் பயன்படுத்த முடியாது, அதுமட்டுமல்ல அவர்களும் தேவனுக்கு பிரியமாயிருக்க முடியாது என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

பாருங்கள், நம்முடைய பிதா என்று அழைக்கப்படுகிற ஆபிரகாம், எப்படி இத்தனை விதமான  செல்வாக்கைப் கர்த்தரிடத்தில் பெற்றார் என்று பார்ப்பீர்களானால், அவரிடத்தில் காணப்பட்ட ஆயுதமாகிய விசுவாசத்தினால் என்று சொல்லிக்கொள்கிறேன்.

விசுவாசம் என்றால் என்ன?

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது என்று வேதம் நமக்கு எபி 11:1 ல் வெளிப்படுத்துவதை நாம் காண முடிகிறது.

அதாவது  நம்பப்படுவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தேவனையே சார்ந்திருப்பது ஆகும்.

தேவ விசுவாசத்தைத் தரித்துக் கொள்வோம், பிறகு சாத்தானோடு யுத்தம் பண்ணுவோம்.

E.ஐந்தாவது ஆயுதம்: இரட்சணியம்

வேதம் சொல்லுகிறது சாத்தானோடு யுத்தசெய்வதற்கு இரட்சணியம் என்னும் தலைச்சீராவை தரித்துக் கொள்ளுங்கள். எபேசி 6:17

எதற்காக ஒரு மனுஷன் வாகனத்தில் சவாரி செய்யும்போது தலைசீராவை அணிந்து கொள்கிறான், ஒருவேளை விபத்து நேரிட்டால். தன்னுடைய தலைப்பகுதி பாதிக்க வாய்ப்பு இருப்பதினால்தான் என்பதை நாம் அறியமுடிகிறது

இதேபோலத்தான் ஆவிகுரிய வாழ்க்கையிலும், அநேகருக்கு இந்த இரட்சிப்பாகிய தலைச்சீரா இல்லாதநிமித்தமே பல குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள் என்று சொல்லிக்கொள்கிறேன். அதாவது பலவிதமான மனுஷ போதனைக்கு அடிமையாகிவிடுகிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது.

இந்த ஆயுதத்தை குறித்து வேதம் என்ன சொல்லுகிறது?

இந்த இரட்சிப்பு என்கிற ஆயுதம் இல்லாவிட்டால், நாம் ஒருபோதும் தேவனுடைய ராஜ்ஜியத்துக்கு போகமுடியாது என்று யோவான் 3:3-5 ஐ வாசிக்கும் போது மிகவும் தெளிவாக அறிய முடிகிறது.

இரட்சிப்பு என்றால் என்ன?

ஒருவன் மனந்திரும்பி, தேவனாகிய இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டேன் என்பதற்கு அடையாளமாக, ஜலத்தினாலும், ஆவியினாலும் பிறப்பதே இரட்சிப்பு என்று வேதம் நமக்கு சுட்டிக் காட்டுகிறதை நாம் வேதத்தின் மூலம் உணரமுடிகிறது. [ யோவான் 3:3-5 மற்றும் ரோமர் 10:9,10 ]

இந்த ஆயுதம் யாரிடமெல்லாம் இருக்கிறதோ அவர்களுக்கு பைபிள் கிளாஸ் மற்றும் எப்பொழுதும் ஆலோசனைகளெல்லாம் தேவையில்லை என்று வேதம் நமக்கு சொல்லுகிறது 1 யோவான் 2:27

F.கடைசி ஆயுதம்:தேவ வசனம்

வேதம் சொல்லுகிறது, தேவ வசனம் என்கிற ஆயுதத்தைத் தரித்துக் கொள்ளுங்கள் எபேசி 6:17

யுத்தகாலத்தில் தன்னுடைய எதிரியை முழுமையாக அழிக்க வேண்டுமானால், அவனுக்கு தேவை ஒரு பட்டயம் என்பதை மறக்க வேண்டாம்.

இன்று நம்மிடம் இந்த பட்டயம் இல்லாத காரணத்தினால், நம்முடைய எதிரியாகிய பிசாசை முழுமையாக அழிக்க முடியவில்லை, அதாவது, மாம்ச எண்ணங்கள் எல்லாவற்றையும் நம்மால் அழிக்கமுடியவில்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன்,

பாருங்கள் இந்த பட்டயத்தின் வல்லமை எப்படிப்பட்டது என்று வேதம் நமக்கு சொல்லுவதை பின்வருமாரு பார்க்கலாம்,

தேவனுடைய வார்த்தையானது [ வசனம் ] ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும் இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது என்று எபி 4:12 ஐ வாசிக்கும் போது அறிந்து கொள்ளமுடிகிறது.

  

அதுமட்டுமல்லாமல்,

சங்கீதக்காரன் சொல்லுகிறான், பரிசுத்தவான் மிகவும் களிகூரக் காரணம் என்னவென்றால், அவர்கள் தங்கள் பரிசுத்தத்தை கெடுக்க வருகிற சாத்தானை வெட்டுவதற்கு அவர்கள் வாயில் எப்பொழுதும் இருபுறமும் கருக்குள்ள பட்டயமாகிய இந்த தேவ வசனம் இருப்பதே என்று, சங் 149 ஐ வாசிக்க அறிய முடிகிறது,

அதுமட்டுமல்லாமல்,

நெகேமியா, தேவனுடைய அலங்கத்தை கட்டும்போது தன்னுடைய ஜனங்களின் கைகளில் கொடுத்திருக்கிற பட்டயம் இந்த தேவ வசனமே.

எதற்காக இந்த பட்டயம் அவர்களுக்கு தேவைப்பட்டது,

தாங்கள் அலங்கத்தைக் கட்டும் போது, பிசாசானவன் கொண்டுவருகிற மனமடிவைத் தடுக்கவும், மேலும் தாங்கள் கட்டும் அலங்கத்தை இடித்து விடாதப்படுக்கும் அவர்கள் இந்த ஆவியின் பட்டயத்தை பிடித்திருந்தார்கள் என்று சொன்னால் மிகையாகாது.

ஆகவேதான் தேவ அலங்கத்தை 52 நாட்களுக்குள் கட்டி முடிந்ததை நாம் வேதத்தை வாசிக்கும் போது அறிய முடிகிறது.

குறிப்பு: நெகேமியா 1 13 அதிகாரங்களையும் வாசிக்கவும்.

தேவ வசனம் என்கிற பட்டயம் தரும் நன்மைகள் என்னவென்பதை வேதத்தின் மூலம் பார்க்கலாம்:

1.நமக்கு விசுவாசம் உண்டாகிறது ரோமர் 10:17

2.நமக்கு நித்திய மரணம் உண்டாவதில்லை யோவான் 8:51

3.நாம் கேட்டுக்கொள்வது நமக்கு உடனே கிடைக்கிறது யோவான் 15:7

4.நோயிலிருந்து விடுதலைக் கிடைக்கிறது சங் 107:20

இப்படியாக அநேக நன்மைகளை சொல்லிக் கொண்டே போகலாம், ஆனால் அதற்கு நேரம் போதாது, அதுமட்டுமல்லாமல் நமக்கு வாசிக்க பொறுமை இருக்காது என்று சொல்லி முடிக்கிறேன்.

என் அருமை ஜனங்களே,

இப்படிப்பட்ட பலமான ஆயுதங்களை முதலில் தரித்துக் கொள்வோம், பிறகு போர்க்களத்தில் குதிப்போம். அப்பொழுதுதான் நமக்கு ஜெயங் கிடைக்கும் என்பதை மறக்க வேண்டாம். இப்படியாக யாரெல்லாம் ஜெயம் எடுக்கிறார்களோ, அவர்களுக்கு ஜீவக்கிரீடத்தைக் கொடுத்து தம்மோடு அழைத்துச் செல்வதற்கு தேவனாகிய இயேசு வந்துக் கொண்டே இருக்கிறார்.

தேவன் தாமே நம்வொருவரையும் இந்த செய்தியின் மூலம் ஆசீர்வதிப்பாராக.