Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 12/11/2016

உன் ஆலயத்தைக் கட்டு

சகோதரி. அனு ஃபெஸ்லின்

 

நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இணையற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இஸ்ரவேல் ஜனங்களை தம்முடைய சொந்த ஜனமாக தெரிந்தெடுத்த தேவனை விட்டு விலகி அந்நிய தேவர்களை பின்பற்றி தேவனுடைய ஸ்தானாதிபதிகளை பரியாசம் பண்ணி தேவனுடைய வார்த்தைகளை அசட்டை செய்து அவருடைய தீர்க்கத்தரிசிகளை நிந்தித்தபடியால் கர்த்தருடைய உக்கிரமம் அவருடைய ஜனத்தின் மேல் மூண்டது.  அப்பொழுது தேவன் அவர்களை பாபிலோன் தேசத்தில் அடிமைகளாய்  ஒப்புக்கொடுத்தார்.

 

பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து  கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜாவின் அரமனையையும் எருசலேமின் சகல கட்டடங்களையும் அக்கினியால் சுட்டெரித்து எருசலேமின் அலங்கங்களை இடித்து கர்த்தருடைய ஆலயத்தின் வெண்கலத்தையும் பணிமூட்டுகளையும் எடுத்துக் கொண்டு மீந்த ஜனங்களையும் சிறையாக பாபிலோனுக்கு கொண்டு சென்றான். பெர்சிய ராஜ்யபாரம் ஸ்தாபிக்கப்படுமட்டும் அங்கே அவர்கள் எழுபது வருஷமட்டும் அடிமைகளாய் இருந்தனர். கர்த்தர் பெர்சிய ராஜாவாகிய கோரேசுடைய ஆவியை ஏவினதினால் அவன், யூதர்கள் யூதாவிலுள்ள எருசலேமுக்கு போய் பரலோகத்தின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்ட கட்டளையிட்டான்.

 

அப்பொழுது செருபாபேல், யெசுவா தலைமையில் யூதாவின் ஜனங்கள் ஒரு கூட்டத்தார் எருசலேமுக்கு வந்தனர். இவர்கள் அத்தேசத்தின் ஜனங்களுக்கு பயந்ததினால் முதலாவது பலிபீடத்தை அதின் ஆதாரங்கள் மேல் ஸ்தாபித்து கர்த்தருக்கு பலி செலுத்தினார்கள். பின்பு தேவாலயத்தை கட்ட அஸ்திபாரம் போட்டனர். இதை கேள்விப்பட்ட சத்துருக்ககள் எதிர்த்ததால் அவர்கள் ஆலயம் கட்டுவதை விட்டு தங்கள் சொந்த வேலைகளை கவனித்தார்கள். அப்பொழுது கர்த்தர் ஆகாய் சகரியா போன்ற தீர்க்கத்தரிசிகளின் மூலம் ஆலயத்தை கட்டும்படி அவர்களோடு பேசினார். நம்மில் அனேகர் ஆவிக்குரிய வாழ்க்கையில் அஸ்திபாரம் போட்டவர்களாய் ஆலயத்தை கட்டாமல் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம் அல்லவா. ஆகாய் தீர்க்கத்தரிசியின் மூலம் தேவன் தன்னுடைய ஆலயத்தை கட்ட சோர்ந்து போயிருந்த அந்த யூதர்களுக்கு சொன்ன நான்கு செய்திகள் இன்று நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை கட்ட நம்மை வழிநடத்தும்; உற்சாகப்படுத்தும்; தட்டி எழுப்பும் என்பது உறுதி.

 

1.   ஆலயத்தை கட்டு

 

கோரேஸ் ராஜாவின் முதலாம் வருஷம் அவர்கள் ஆலயத்தை கட்டும்படி எருசலேம் வந்தனர், ஆனால் தரியு ராஜாவின் இரண்டாம் வருடம் வரை (சுமார் பதினெட்டு வருடங்கள் ஆகியும்) ஆலயம் கட்டப்படவில்லை. இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் முதலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் உண்டாகி, அவர் சொன்னது என்னவென்றால்: இந்த ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை என்கிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்[ஆகாய்:1:1,2].

யூதாவின் ஜனங்கள் எதிர்ப்புகளை கண்டு பயந்து தங்கள் கைகளை தளரப்பண்ணி ஆலயத்தைக்  கட்டாமல், ஏற்றவேளை இன்னும் வரவில்லை என்று சாக்குபோக்கு சொல்லி கொண்டு தங்களுக்கு வீடுகளை கட்டிக்கொண்டு குடியிருந்தனர். தேவன் ஆலயத்தை கட்டும்படி அவர்களை அழைத்து வந்தார் ஆனால் ஜனங்களோ தங்களுக்கு வீடுகளை கட்டி கொண்டு தங்கள் சொந்த காரியங்களை முக்கியப்படுத்தி வாழ்ந்து வந்தனர். தேவனுடைய வீட்டை கட்டாமல் தங்களுக்கு வீட்டை கட்டினதால் அவர்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்தார்கள், தங்கள் கூலியை பொத்தலான பையில் சம்பாதித்தார்கள். தேவன் நிலம், மனுஷன், மிருகம்,திராட்சை ரசம், தானியம்,  கைபாடு ஆகிய அனைத்தின் மேலும் வறட்சியை வருவித்தார். தேவன் ஆகாய்  தீர்க்கத்தரிசியை கொண்டு உங்கள் வழிகளை சிந்தித்து பாருங்கள் என்று அவர்களை எச்சரித்தார்.மேலும் நீங்கள் ஆலயத்தை கட்டுங்கள்; அதின் பேரில் நான் பிரியமாயிருப்பேன்; அதினால் என் மகிமை விளங்கும் என்று விளம்பினார்[ஆகாய்:1:5-11].

தேவன் பழைய ஏற்பாட்டு காலத்தில் தாம் வாசமாயிருக்க ஆசாரிப்பு கூடாரத்தையும்  பின்பு ஆலயத்தையும்  கட்ட சொன்னார். இன்று தேவன் வாசமாய் இருக்கும்  ஆலயம் நம் சரீரமே. வேதம் கூறுகிறது உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாய் இருக்கிறீர்கள்[1கொரிந்தியர்:6:19]. இன்று விசுவாசிகளாகிய நமக்கு பரிசுத்த ஆவியானவர் வாசமாயிருக்கிற தம்முடைய ஆலயமாகிய நம் சரீரத்தை கட்டும்படி விரும்புகிறார். நம் சரீரம் ஆவிக்குரிய வளர்ச்சியடைய வேண்டும் என்று விரும்புகிறார்.  இயேசுகிறிஸ்துவில் அஸ்திபாரம் போட்டுக் கொண்ட நாம் ஆவிக்குரிய வாழ்க்கையை கட்டாதபடி  உலகப் பிரகாரமான வாழ்க்கையை முக்கியப்படுத்தி நம் சொந்த வழிகளில் நடந்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா? ஆவிக்குரிய ஆலயத்தை கட்ட இன்னும் ஏற்ற நேரம் வரவில்லை என்று சாக்குபோக்கு சொல்லிக்கொண்டு நம்முடைய வேலை, குடும்பம், கல்வி போன்ற உலகக் காரியங்களில் அதிக  கவனம் செலுத்துகிறோம் அல்லவா?  உங்கள் வழிகளை சிந்தித்து பாருங்கள் என்று தேவன் இன்று நம்மை எச்சரிக்கிறார்.

இதை வாசிக்கும் அன்பு சகோதரனே சகோதரியே! நாளை நாளை என்று சொல்லி காலம்  தாமதிக்க வேண்டாம் தேவனுடைய  வருகை வெகு சமீபம். இன்றே உன் ஆலயத்தை கட்டு,  தேவனுடைய மகிமை விளங்கும் படியாக  கட்டு. மற்ற  ஜனங்களை, சத்துருக்களை, பிரச்சினைகளை, தடைகளை பார்த்து பின்வாங்காதே; உலகத்தார் நண்பர்கள் குடும்பத்தார் உன்னை ஒதுக்கலாம். ஆனால் நீ தேவனுக்காய்  கட்டும் போது தேவன் உன்னோடிருக்கிறார்; அவர் உன்னில்  பிரியமாய் இருக்கிறார் என்பதை மறந்து போகாதே.  பரிசுத்த ஆவியானவர் தங்கும் ஆவிக்குரிய ஆலயத்தை தேவ மகிமை விளங்கும்படியாக நாம் கட்டும் போது உலகப்பிரகாரமான நன்மைகளினாலும் ஆசீர்வாதங்களினாலும் முடிசூட்டுவார் என்பதில் சந்தேகமில்லை.

2.   சோர்ந்து போகாமல் உற்சாகமாய் கட்டு

சாலோமோன் ராஜா தேவனுக்காக கட்டின பிரம்மாண்டமான ஆலயத்தை கண்டவர்களின் பார்வைக்கு இந்த புதிய ஆலயம் ஒன்றும் இல்லாதது போல இருந்தது. ஜனங்கள் சாலோமோன் ராஜா கட்டின  ஆலயத்தின் பிரமாண்டத்தை கண்டதால் இந்த ஆலயத்தில் தேவனுடைய மகிமை இருக்குமா என சந்தேக்கித்தனர். சேனைகளின் தேவனாகிய கர்த்தர் மீண்டும் ஏழாம் மாதம் இருபத்தோராம் தேதியிலே மீண்டும் செருபாபேல் யோசுவா என்னும் தலைவர்களிடம் நீ திடன்கொள்; தேசத்தின் ஜனங்களே திடன்கொள்ளுங்கள்; நான் உங்களுடனே இருக்கிறேன் என்று பேசினார். தேவன் கூறுகிறார் நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகையில் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின்படியே என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார். பயப்படாதேயுங்கள் என்று யூதாவின் ஜனங்களை தேற்றுகிறார்[ஆகாய்:2:1-8].

உலகப்பிரகாரமாக நாம் என்னுடைய பழைய வேலை  நன்றாக இருந்தது நான் சந்தோசமாய் இருந்தேன்; ஆனால் இந்த புதிய வேலை திருப்தியாக இல்லை என முறுமுறுத்து அற்பமாய் எண்ணி சலித்து போவது உண்டு. ஆவிக்குரிய வாழ்க்கையிலும் விசுவாசிகள் ஐயோ நான் இரட்சிக்கப்பட்ட ஆரம்பத்தில் நன்றாக ஜெபித்தேன் தேவனுக்காக பல உழியங்களை செய்தேன் இப்பொழுதோ என்னால் ஜெபிக்க கூட முடியவில்லை போன்ற பல பழைய காரியங்களை சொல்லி  சோர்ந்து போய் புலம்புகிற தருணங்கள் உண்டு. மற்றவர்களை போல எனக்கு தாலந்துகள் இல்லை பெலனில்லை என நாம் சாக்குபோக்குகள்  சொல்லுவதும் உண்டு.

அன்பானவர்களே தேவன் நம்மை பார்த்து கூறுகிறார் முந்தின காரியங்களை நினைத்து நீ சோர்ந்து போக வேண்டாம், திடன்கொள்; அன்பானவர்களே இஸ்ரவேல் ஜனங்கள்  எகிப்திலிருந்து  புறப்பட்ட போது எப்படி தேவன் அவர்களோடு கூட இருந்து அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்து மகிமையாய்  வழிநடத்தி வந்தாரோ அதே வல்லமையோடு இன்று நம் நடுவிலும் இருக்கிறார். எனவே நாம் நம்முடைய முந்திய வாழ்க்கையை எண்ணி அசைபோடுவதை விட்டுவிட்டு நாம் நிஜமான நிகழ் கால வாழ்வை சந்தோசமாய் ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நாம் தேவன் தரும் பெலத்தோடு திடன்கொண்டு உற்சாகமாய் நம் ஆவிக்குரிய வாழ்க்கையாகிய ஆலயத்தை கட்ட வேண்டும். நமது தேவன் பிரமாண்டத்தை பார்க்கிறவர் அல்ல. நமக்கிருக்கிற பெலத்தோடு உற்சாகமாய் உண்மையாய்  நமது  ஆலயத்தை கட்டும் படி தேவன் அழைக்கிறார். சாலொமோன் கட்டின ஆலயம் மகிமையுள்ளது என எண்ணிய யூதாவின் ஜனங்களை பார்த்து சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் முந்தின ஆலயத்தின் மகிமையை பார்க்கிலும் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாய் இருக்கும். எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் பாருங்கள். உற்ச்சாகமாய் கட்டுவோமா?

3.   பரிசுத்தமாய் கட்டு  

மூன்றாவதாக நாம் நம்முடைய ஆலயத்தை கட்டும் போது பரிசுத்தமாய் கட்ட வேண்டும் என தேவன் விரும்புகிறார். ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய்க்  கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று; அவர்: ஒருவன் தன் வஸ்திரத்தின் தொங்கலிலே பரிசுத்த மாம்சத்தைக் கொண்டு போகையில் தன் வஸ்திரத்தின் தொங்கல் அப்பத்தையாகிலும் சாதத்தையாகிலும், திராட்சரசத்தையாகிலும், எண்ணெயையாகிலும், மற்றெந்த போஜன பதார்த்தத்தையாகிலும் தொட்டால் அது பரிசுத்தமாகுமோ என்று நீ ஆசாரியரிடத்தில் வேத நியாயத்தைப்பற்றிக் கேள் என்று சேனைகளின்  கர்த்தர் சொல்லுகிறார் என்றார். பிணத்தால் தீட்டுப்பட்டவன் அவைகளில் எதையாகிலும் தொட்டால், அது தீட்டுப்படும் அப்படியே இந்த ஜனங்களும் இந்த ஜாதியாரும் என் சமுகத்தில் இருக்கிறார்கள் என்று  கர்த்தர்  சொல்லுகிறார்; அவர்களுடைய கைகளின் எல்லாக் கிரியைகளும் அப்படியே இருக்கிறது; அவர்கள் அங்கே கொண்டுவந்து படைக்கிறதும் தீட்டுப்பட்டிருக்கிறது. கருக்காயினாலும் விஷப்பனியினாலும் கல்மழையினாலும் உங்களை உங்கள் கைகளின் வேலையிலெல்லாம் அடித்தேன்; ஆனாலும் நீங்கள் என்னிடத்தில் மனதைத் திருப்பாமல் போனீர்களென்று  கர்த்தர்  சொல்லுகிறார்[ஆகாய்:2:10-19].

 பழைய ஏற்பாட்டின் காலத்தில் ஒருவன் தீட்டுப்பட்ட எந்த வஸ்துக்களையாகிலும் தொட்டால் தீட்டு நீங்க சுத்திகரிக்கப் பட வேண்டும். அதுபோல பொல்லாங்கும் அசுத்தமும் நிறைந்த இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் அன்றாட வாழ்க்கையில் நம்மை கறைப்படுத்துகிற எல்லா செயல்களிருந்தும் விலகி நம்மை சுத்திகரித்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக நாம் சேற்றிலே காலை போட்டாலும் அசுத்தமாவோம். சேறு நம் மீது பட்டாலும் நாம் அசுத்தமாவோம். வேதம் கூறுகிறது நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்[1கொரிந்தியர்:3:16-17].

 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நாம் தேவனுடைய ஆலயத்தில் வருகிறதாலோ திருவிருந்தில் பங்கு கொள்ளுவதாலோ பரிசுத்தமடைய முடியாது. தேவன் தங்கும் நம்முடைய ஆலயம் சுத்தமாயிருக்க முதலாவது  நம்முடைய இருதயத்தின் உட்புறம் சுத்தமாய் இருக்க வேண்டும்.வேதம் கூறுகிறது குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு[மத்தேயு:23:26].யூதாவின் ஜனங்கள் தேவனுக்கு ஆலயத்தை கட்டிக்கொண்டு இருந்தனர்; ஆனால் அவர்கள் இருதயமாகிய ஆலயம் தேவன் வாசம் செய்ய முடியாதபடி அசுத்தமாய் காணப்பட்டது. எனவே அவர்கள் வாழ்க்கை ஆசீர்வாதமற்றதாய் மாறியது. நாம் வெளியே பரிசுத்தமாய் நம்மை காண்பித்தாலும்  இருதயத்தை ஆராய்கிற நம் தேவனுக்கு முன்பாக நம் இருதயத்தின் அக்கிரமங்களையும்  அசுத்தங்களையும் மறைக்க முடியாது. இயேசு கிறிஸ்துவில் அஸ்திபாரம் போட்ட விசுவாசிகளாகிய நாம் மனதிலே நம் பரிசுத்தத்தைக் குறித்து  சிந்தித்து பாருங்கள் என தேவன் கூறுகிறார். நாம் தேவனிடத்தில் நம்மை ஒப்புக்கொடுத்து நம்  மனதை  திரும்பும் பட்சத்தில் இன்று முதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று தேவன் வாக்குரைத்திருக்கிறார். இன்றே ஒப்புக்கொடுப்போம் தேவ ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுவோம்.

4.   பயமின்றி கட்டு

இருபத்துநாலாந்தேதியாகிய அந்நாளிலே கர்த்தருடைய வார்த்தை இரண்டாம் விசை ஆகாய் என்பவனுக்கு உண்டாகி, அவர்:நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், ...ராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்; குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள்  [ஆகாய்:221-23]. செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

பிரியமானவர்களே கர்த்தர் சொல்லுகிறார் நீ உன் ஆலயத்தை கட்டும் போது உனக்கெதிராக எழும்பும் எந்த மனுஷரையும்  பலவான்களையும் குறித்து நீ பயப்பட வேண்டாம். நம்முடைய வேலை தேவன் தங்கும் பரிசுத்த ஆவியானவரின் ஆலயத்தை கட்டுவதே. நாம் தேவனுக்கு ஊழியம் செய்யும் போது நமக்கெதிராய் எத்தனை பேர் எழும்பினாலும் தேவன் அவர்களை சங்கரித்து நம்மை பாதுகாப்பார். எனவே  நம்மை தெரிந்துக்கொண்ட தேவனையே பற்றிக்கொண்டு எந்த பயமுமின்றி உற்சாகமாய் ஆலயத்தை கட்டுவோம். தேவன் நம்மையும் முத்திரை மோதிரமாக வைப்பார். ஒரு அரசனின் முத்திரை மோதிரம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. ஏனென்றால் அரசனின் மோதிரத்தால் முத்திரை பதிக்கப்பட்ட நகலுக்கு தேசத்து ஜனங்கள் எல்லாரும் கீழ்படிய வேண்டும். அதற்கு மறுபேச்சு இல்லை. அதே போல செருபாபேலின் சொல்லை தட்ட கூடிய மனுஷர் இல்லாதவாறு தேவன் அவனை முத்திரை மோதிரமாக உயர்த்தினார். நாமும் தேவனைப்  உண்மையாய் பற்றிக்கொண்டு  தேவன் வாசம் செய்யும் நம் ஆலயத்தை கட்டும் போது நம்மையும் முத்திரை மோதிரமாக உயர்த்துவார்.

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாய் இருக்கிறது. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் தேவன் அவனைக் கெடுப்பார். நாம் அஸ்திபாரம் மாத்திரம் போட்டு விட்டு ஆலயத்தை கட்டாமல் இருக்கும் போது தேவன் நமக்கு வைத்திருக்கும் உன்னதமான ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க முடியாது. மாறாக நாம் வேறு அஸ்திபாரத்தின் மேல் கட்டுகிறவர்களாய் இருப்போம். ஞான கன்மலையாகிய கிறிஸ்துவில் அஸ்திபாரம் போட்ட நாம்  தேவன் வாசம் செய்யும் ஆலயத்தை உற்சாகத்தோடும் பரிசுத்தத்தோடும் திடன்கொண்டு அனுதினமும் கட்டுவோம். ஆவிக்குரிய வாழ்க்கையிலும் அனுதினமும் அடுத்த நிலைக்கு உயர பிரயாசப்படுவோம். அப்பொழுது தேவன் நம்மில் பிரியமாய் இருந்து நம்மில் மகிமைப்படுவார். நம்மையும் தேவன் தெரிந்துக்கொண்டு முத்திரை மோதிரமாக உயர்த்துவார். பரலோகத்தின் தேவன் தாமே நம்மோடிருந்து நம் ஒவ்வொருவரையும் இன்று முதல் ஆசீர்வதித்து உயர்த்துவாராக. ஆமென்.