Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 19/03/2016

வேறு மனுஷனாய் மாறுதல்

Bro. Edwin Corter (Sohar - Oman)

 

வேதம் சொல்லுகிறது., அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார், நீ அவர்களோடே கூடத் தீர்க்கதரிசனம் சொல்லி வேறு மனுஷனாவாய் 1சாமு 10:6

எப்படி அவன் வேறு மனுஷனானான்?

வேதம் சொல்லுகிறது, அவன் [சவுல்] சாமுவேலை விட்டுப் போகும்படி திரும்பினபோது தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார், அந்த அடையாளங்கள் எல்லாம் அன்றைய தினமே நேரிட்டது 1சாமு 10:9

இன்று தேவன் நாம் தியானிக்கும்படி தந்த வேதப் பகுதி எப்படி நாம் வேறு மனுஷனாய் அதாவது தேவ ஆவியைப் பெற்றுக் கொள்வது எப்படி என்று பார்க்க போகிறோம். இத்தகைய காரியத்தை நாம் சவுலின் வாழ்க்கையைக் கொண்டு தியானிக்கப் போகிறோம்.

முன்னுரை:

இதோ சவுல் தன்னுடைய தகப்பனுடைய கழுதையைத் தேடி தன் வேலைக்காரனுடன் செல்கிறார் ஆனால் இஸ்ரவேலரோ தங்களுடைய ராஜாவை தேடிக் கொண்டிருக்கிறார்கள், இப்படியாக உலகத்தின் பொருளை தேடிச் சென்ற சவுல் அழியாத மகிமையைக் கொடுக்கிற தேவனிடத்திற்கு அழைக்கப்பட்ட 30 பேர்களில் ஒருவனாக மாறுகிறான், என்ன நடந்தது அழைக்கப்பட்டவர்கள் அனேக பேராய் இருந்தாலும் சவுல் மாத்திரமே தெரிந்து கொள்ளப்பட்ட மனுஷனாக மாறுகிறான்.

எதற்காக சவுல் தெரிந்து கொள்ளப்பட்டார் தேவனுடைய மந்தையை மேய்க்கும் உத்தியோகத்துக்கு என்பதை மறக்க வேண்டாம், அதாவது ஆடுகளை மேய்க்கிற மேய்ப்பனாக தெரிந்து கொள்ளப்பட்டான். இது ஒரு சாதாரண ஆட்டுக்கூட்டம் அல்ல, மாறாக இவர்கள் தேவனுடைய சேனைகளாகும். இவர்களை மேய்க்க வேண்டுமானால் அந்த மேய்ப்பன் சாதாரணமான ஒரு மேய்ப்பனாக இருந்தால் போதாது அப்படியென்றால் அவன் தேவமகிமையால் நிரப்பப்பட்ட ஒரு மனுஷனாக மாற வேண்டும்.

ஆகவே இந்த மகிமையான பதவிக்கு சவுல் எவ்வாறு தெரிந்து எடுக்கப்படுகிறார் என்பதை பின்வருமாறு பாக்கப் போகிறோம்.

ஒரு சாதாரணமான வாழ்க்கையை அதாவது இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிய கோத்திரம் அதுமட்டுமல்லாமல் அந்த கோத்திரங்களிலே அற்பமான குடும்பத்தைச் சார்ந்த சவுல் ஒரு மகிமையான இடத்திற்கு எப்படி சென்றார். என்னோடு கூட வாருங்கள் நாமும் சவுலோடு கூட பிரயாணம் செய்வோம் அப்பொழுது நாம் புது மனுஷனாக மாறுவோம் என்பதில் சிறுதும் சந்தேகமேயில்லை.

சவுல் சென்ற ஐந்து இடங்கள்

1.ராகேல் கல்லறையண்டைக்கு செல்லுதல்

2.பெத்தேலுக்கு செல்லுதல்

3.தேவனுடைய மலைக்கு செல்லுதல்

4.கில்காலுக்கு கடந்து செல்லுதல்

5.தேவனிடத்திற்குச் செல்லுதல்

ஒவ்வொரு இடத்தின் மகிமையை பின்வருமாறு பார்க்கலாம்

1.சவுல், செல்சாகில் இருக்கிற ராகேல் கல்லறையண்டைக்கு அனுப்பப்பட்டான் [ 1சாமு 10:2 ]

ராகேலின் கல்லறைக்கு ஒரு மகிமையுண்டு அதுஎன்னவென்றால் உலகமகிமையானது புதைக்கப்பட்ட இடம் ஆகும். இந்த மகிமையின் நிமித்தம் யாக்கோபுக்கும் தேவனுக்கும் இடையில் இருந்த நட்பு தாமதமானதை நம்மால் பார்க்க முடிகிறது, எப்படியென்றால் தனிமையில் வந்த யாக்கோபு தேவனால் சந்திக்கப்பட்டு உடன்படிக்கை செய்து கொள்கிறார்கள், எப்படியெனில் நான் மறுபடியும் திரும்பி வரும்போது என் தேவனை இந்த இடத்தில் வந்து தொழுது கொள்வேன். ஆனால் என்ன நடந்தது, தன்னுடைய மாமன் வீட்டில் பார்த்த ராகேலின் அழகில் மயங்கி அவளுக்காக 14 வருடம் வேலை பார்த்தார். தேவனுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தை உலகத்திற்கு கொடுத்தான் இதனால் அவன் பலவிதங்களில் ஏமாற்றப்பட்டான். அதுமட்டுமல்லாமல் தன் சொந்த மாமனால் அனேக துன்பங்களை அனுபவித்தார். இவ்வளவுக்கு காரணம் உலக அழகே என்பதை மறந்து விட வேண்டாம். ஆகவே தான் சவுல் தன்னுடைய மாமிச வாழ்க்கையை அதாவது உலகத்தை மறக்கும்படியாக அவன் அந்த கல்லறையண்டைக்கு அனுப்பப்பட்டான், என்ன நடந்தது தன்னுடைய பழைய வாழ்க்கையை மறந்து போனான். பாருங்கள் அவன் தேடிப்போன கழுதைகள் உடனே அகப்பட்டது.

எனக்கு அருமையான தேவனுடைய ஜனங்களே நாமும் அனேக நேரங்களில் தேவனை மறந்து விட்டு உலகத்தோடு அவ்வப்போது நட்பு வைக்கிறோம் இதனால் நமக்கு வரவேண்டிய அனேக காரியங்கள் கிடைக்காமல் ஒளிந்து இருக்கிறது, இவைகளை நாம் கண்டுபிடிக்க வேண்டுமானால் நாமும் ராகேல் கல்லறையண்டைக்கு செல்ல வேண்டும், அதாவது உலக பொருளுக்கு மரித்தே ஆக வேண்டும் அப்பொழுதுதான் நாம் தேவனுடைய ஊழியத்தை செய்ய முடியும்.

2.சவுல் பெத்தேலுக்கு அனுப்பப்பட்டான் [ 1சாமு 10:3 ]

பெத்தேல் என்பதற்கு தேவனுடைய வீடு மற்றும் வானத்தின் வாசல் ஆகும்.

பலமில்லாத சவுல் பலப்படும்படியாக பெத்தேலுக்கு அனுப்பப்பட்டான். அதாவது உலகத்தின் அப்பத்தையும் திராட்சரசத்தையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த சவுல் தேவனுடைய அப்பத்தையும் திராட்சரசத்தையும் சாப்பிட்டு தேவனுடைய பிள்ளையாக மாறும்படியாக அந்த இடத்திற்கு தேவனால் அழைத்துச் செல்லப்பட்டான், இன்று அனேகருடைய ஆவிக்குரிய வாகனம் போக வேண்டிய இடத்துக்குப் போக முடியாமல் பாதி வழியிலே நின்றுப் போவதற்குக் காரணம் அவர்கள் பெத்தேலுக்கு செல்லுவதில்லை ஆகவேதான் அவர்களுடைய வாகனம் எரிபொருள் இல்லாமல் பாதி வழியில் நின்று தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

ஆவிக்குரிய வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றி பயணத்தை மேற்கொள்ள வேண்டுமானால் நமக்கு ஜெபம் என்கிற எரிபொருள் தேவைப்படுகிறது. அப்பொழுதுதான் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை ஒவ்வொரு இடத்துக்கு அதாவது வெவ்வேறு நிலைக்கு கடந்து செல்ல முடியும் அப்படியில்லாத பட்சத்தில் இன்னும் நாம் ஒரு ஊனமுள்ள மனுஷனைப் போல ஒரே நிலைமையில் இருக்கக் கூடும் என்பதை மறக்க வேண்டாம்.

பாருங்கள்  யாக்கோபுடைய  ஜெபவாழ்க்கையை  அவர்  ஜெபித்தார் வானம் அவருக்காக திறக்கப்பட்டது அதுமட்டுமல்லாமல் அவர் சொர்க்கத்திற்கு ஏறிச் செல்லும்படியாக ஏணி கொடுக்கப்பட்டது. எதற்காக அவரும் அவருடைய கூட்டமும் பரலோகம் செல்ல வேண்டும் என்பதற்காக.

பாருங்கள் ஏன் உடனே அவருடைய ஜெபம் கேட்கப்பட்டது, எப்பொழுது அவர் தேவனை சந்தித்தாரோ அப்பொழுதே தன்னை முழுமையாக தேவனுக்கு அர்ப்பணித்தார் அதுமட்டுமல்லாமல் தேவன் தன்னை அழைத்து வந்ததின் நோக்கத்தையும் அறிந்து கொண்டார். எப்படியென்றால் தன்னை கொண்டு தேவனுக்கென்று ஒரு பெரிய கூட்டத்தை எழுப்பவேண்டுமென்கிற தேவ சித்தத்தை அறிந்து கொண்டார்.

இன்று நம்மிலும் அனேக பேரை தேவன் தம்முடைய வீட்டைக் கட்டும்படியாக அழைத்து வந்திருக்கிறார் தேவனுடைய திட்டத்தை நம்மால் ஏன்   அறிந்து கொள்ள முடியவில்லையென்றால் நம்முடைய வாழ்க்கையில் இந்த பெத்தேல் அதாவது சரியான ஜெப ஜீவியம் இல்லாததே காரணம் ஆகும்.

3.சவுல், தேவனுடைய மலைக்கு அனுப்பப்பட்டான் [ 1சாமு 10:5 ]

பின்பு சவுல் பெலிஸ்தரின் தாணையம் இருக்கிற தேவனுடைய மலைக்கு அனுப்பப்பட்டார், எதற்காகவென்றால் உன்னதமான ஆவிக்குரிய வாழ்க்கைக்குள் நுழையும்படியாக ஏனென்றால் தேவனுடைய பிள்ளைகளை ஒரு சாதாரண இடத்திலிருந்து ஆட்சி செய்ய முடியாது அடிக்கடி பலவிதமான பிரச்சனைகளும் துன்பங்களும் பிசாசிடம் இருந்து வரும் இத்தகைய காரியத்தை உலக வாழ்க்கையிலிருந்து சமாளிக்க முடியாது.

ஆகவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய பிள்ளைகளைப் பார்த்து சொன்னார் யாருடைய வீடு கன்மலையில் கட்டப்பட்டிருக்கிறதோ அவர்களுடைய வீடு மாத்திரமே நிலைத்திருக்கும் [ மத் 7:27 ]

ஆகவே சவுல் தன்னுடைய வீட்டை மாற்றி அதாவது இந்த உலகத்தில் இருப்பது எனக்குப் பாதுகாப்பு அல்ல அதுமட்டுமல்லாமல் இந்த இடத்தில் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை என்பதை அறிந்து கொண்டு தன்னுடைய வீட்டை தேவன் வாசம் செய்கிற இடத்துக்கு மாற்றினார் அப்படியென்றால் கீழ்மட்டத்திலிருந்த தேவனோடு கூடிய உறவு மலையளவு உயர்ந்தது இதனால் அவன் மேலும் பெலப்பட்டதை பார்க்க முடிகிறது.

இன்று அனேகர் தங்களுடைய கூடாரத்தை விட்டு வெளியேற மனம் இல்லாததால் தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் ஒரு தரைமட்டமான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்ந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இவர்களுக்கு ஒரு காரியம் தெரிவதில்லை என்னவென்றால் இந்த உலகத்தில் உள்ள கூடாரம் எல்லாம் ஒருநாள் காணாமல் போகிறது.

இந்த கூடாரம் எப்படி காணாமல் போகிறதோ இதேபோல இவர்களுடைய வாழ்க்கையும் வெயில் ஏறினவுடனே புல்லின் பூவானாது பட்டுப் போவது போல இவர்களுடைய வாழ்க்கையும் பட்டுப் போவதை நம்மால் அனேக இடங்களில் பார்க்க முடிகிறது

இத்தகைய வீட்டைக் குறித்து அப்.பவுல் தம்முடைய விசுவாசிகளுக்கு இப்படியாக எழுதுகிறார், பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்து போனாலும் தேவனால் கட்டப்பட்ட கைவேலையில்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம் 1கொரி 5:1

ஆகவே நாம் ஒரு காரியத்தை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் இந்த உலகம் நமக்கு நிரந்தரமானது அல்ல தேவன் தரப்போகிற நித்திய வீடு அதாவது தேவனுடையில் மலையில் இருக்கிற வீடே நிரந்தரமானது என்பதை மறந்து விடாதீர்

உதாரணமாக நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தேவனோடு சஞ்சரித்த வந்த நாட்களில் தேவன் ஆபிரகாமுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை உயர்த்தும்படி விரும்புகிறார் ஆகவே அவர் தம்முடைய இடத்துக்கு ஆபிரகாமை வரும்படியாகவும் அதுமட்டுமல்லாமல் தனக்கு பலியாக ஆபிரகாமுடைய சொந்த குமாரனையும் கொடுக்கும்படியாகவும் ஆபிரகாம் கேட்டு கொள்ளப்படுகிறார். என்ன நடந்தது தான் இதுவரை பார்த்திராத தேவனுடைய புதிய நாமத்தை பார்க்கிறார் அதாவது தேவன் யோகோவாயீரேயாக இருப்பதை அறிந்து கொள்கிறார் [ ஆதியாகமம் 22ம் அதிகாரம் ]

அடுத்ததாக மோசே என்கிற தேவ மனுஷனைப் பார்ப்பீர்களானால் அவரும் தன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கை உயரும்படியாக தேவனுடைய மலைக்கு கடந்து செல்கிறார். இதனால் என்ன நடந்தது இதுவரை இல்லாத தேவ மகிமையால் அவர் நிரப்பப்பட்டு கீழே இறங்கி வருவதை நம்மால் யாத்திராகமம் புஸ்தகத்தில் வாசிக்க முடிகிறது.

அதுமட்டுமல்லாமல் இப்படிப்பட்ட தேவமகிமையை கீழே இருந்த அதாவது உலக ஜனங்களால் பார்க்க முடியாத அளவு, அவ்வளவு பிரகாசமாய் இருந்தது என்பதையும் நம்மால் உணரமுடிகிறது. இதன்பிறகு அவருடைய வாழ்க்கையிலும் ஊழியத்திலும் பெரிய மாற்றம் உண்டானதை நம்மால் பார்க்க முடிகிறது.

நம்முடைய வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட தேவமகிமைக்குள்ளாக நாமும் நம்முடைய சபையும் பிரகாசிக்க வேண்டுமானால் தேவ மலைக்கு நாம் கடந்து செல்ல வேண்டும் என்பதை மறந்து விடாதீர்.

4.சவுல் கில்காலுக்கு அனுப்பப்பட்டான் [ 1சாமு 10:8 ]

கில்கால் என்பதற்கு விருத்தசேதனம் பண்ணப்படுதல் என்பது அர்த்தமாகும் அதாவது பாவத்திலிருந்து நம்மை பிரித்தெடுக்கும்படியாக செய்யப்படுகிற ஒரு பரிகாரம் ஆகும் [ யோசுவா 5ஆம் அதிகாரம் ]

ஏனென்றால் ஒரு மனுஷன் பாவத்தோடு தேவனை தரிசிக்க முடியாது என்று எபிரெயர் 12:14ல் நாம் வாசிக்க முடிகிறது. எதற்காக இந்த பரிசுத்தம் தேவையென்றால் வேதம் சொல்லுகிறது நம்முடைய தேவன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று வெளி 4:8ல் வாசிக்கிறோம். இந்த பரிசுத்தம் இல்லாததின் நிமித்தம் அனேகர் வெற்றியை இழந்திருக்கிறார்கள் மற்றும் சிலர் மரணத்தை ருசிப்பார்த்திருக்கிறார்கள் மற்றும் சிலர் நோயினால் வாதிக்கப்பட்டனர் என்பதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

ஒரு உதாரணத்தை நான் வேதத்திலிருந்து உங்களுக்கு காண்பிக்க ஆசைப்படுகிறேன்

பாருங்கள் யோசுவா என்கிற தேவ மனுஷன் தன்னுடைய கூட்டத்தோடு ஒவ்வொரு தேசங்களையும் ஜெயம் எடுத்து வந்துக் கொண்டிருக்கிறார். இந்த ஜெயம் எல்லாம் தேவனால் வந்தது என்பதையும் நம்மால் அறிய முடிகிறது. எப்படியென்றால் தேவன் அவர்களுக்கு ஒரு வாக்குத்தத்தம் செய்து கொடுத்தார் அதுஎன்னவெனில்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார் நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்று யாத் 14:14ல் வாசிக்கிறோம். இப்படியாக வெற்றிக் கனியை ருசிப்பார்த்து வந்த இந்த இஸ்ரவேல் ஜனங்கள் தீடீரென ஆயி பட்டணத்திற்கு விரோதமாக யுத்தம் பண்ணும் போது முறிந்து ஓடுவதை நம்மால் யோசுவா அதிகாரத்தில் பார்க்க முடிகிறது இதனால் குழம்பிப்போன யோசுவா மிகவும் சோர்ந்து போகிறார் அதுமட்டுமல்லாமல் இதற்குக் காரணம் என்னவென்று அவன் கர்த்தரை விசாரித்த போது கர்த்தர் சொன்ன பதில் இஸ்ரவேலர் பாவஞ்செய்தார்கள் நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள் [ யோசுவா 7:11 ]

இத்தகைய காரியத்தை அறிந்த யோசுவா தம்முடைய ஜனங்களை விசாரிக்கத் தொடங்கினார். அப்பொழுது யூதா கோத்திரத்துச் சேராகுடைய குமாரனாகிய சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன் சாபத் தீடானதிலே சிலதை எடுத்துக் கொண்டான் ஆகவே கர்த்தருடைய கோபம் தங்கள் மேல் இறங்கிற்று என்பதை அறிந்து கொள்கிறான்.

ஆகவேதான் இத்தகைய இழப்பு தம்முடைய ஜனங்களை ஆளப்போகிற ராஜாவுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக, சவுலும் விருத்தசேதனம் பண்ணும்படியாக அதாவது உலக வாழ்க்கையில் இருக்கும் போது செய்த பாவத்திற்கு பிராயசித்தமாக கில்காலுக்கு அனுப்பப்பட்டு அங்கு தனக்காக தகன பலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தினான் என பார்க்கிறோம்.

எனக்கு பிரியமான ஜனங்களே ஒரு காரியத்தை மறக்க வேண்டாம் அதுஎன்னவென்றால்

உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள் 1பேதுரு 1:15

5.கடைசியாக சவுல், தேவனிடத்திற்கு அனுப்பப்பட்டான் [ 1சாமு 10:6,10 ]

சவுல் கடைசியாக செல்ல வேண்டிய இடத்திற்கு அதாவது தேவனிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான், எதற்காக தேவ அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ளும்படியாக ஏனென்றால் அபிஷேக இல்லாத மனுஷனால் தேவனுடைய சிங்காசனத்தில் இருந்து ஆட்சி செய்ய முடியாது அதுமட்டுமல்லாமல் ஒரு நல்ல ராஜாவாக அதாவது சாட்சியுள்ள ராஜாவாக வாழ முடியாது என்பது சாமுவேலுக்கு நன்றாக தெரிந்திருந்தது.

வேதமும் இத்தகைய காரியத்தை நன்றாக விளக்குகிறது எப்படியென்றால் பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதாயா முழுவதிலும், சமாரியாவிலும் பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார் என்று அப்போதலர் 1:8ல் அபிஷேகத்தின் தேவையை அறிந்து கொள்ள முடிகிறது.

அதுமட்டுமல்லாமல் தேவனுடைய சபையை விசாரிக்க வேண்டுமானால் அந்த மனுஷனுக்கு தேவனுடைய அறிவும் ஞானமும் அவசியம் ஆகவேதான் சாலமோன் தேவனிடம் இவ்வாறாக வேண்டிக்கொண்டார் ஆண்டவரே உம்முடைய பிள்ளைகளை நீதியாய் ஆட்சி செய்ய வேண்டுமானால் எனக்கு உம்முடைய ஞானம் வேண்டும்.

மேலும் அப்.பவுல் எழுதுகிறார் தேவனுடைய ஆவியேயன்றி ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான் 1கொரி 2:11

ஆகவே தேவனுடைய இருதயத்தை பெறுவதற்காக சவுல் தேவனால் அபிஷேகம் பெறும்படியாக அவருடைய இடத்திற்கு அனுப்பப்பட்டான். வேதம் சொல்லுகிறது இந்த மகத்தான அபிஷேகம் இறங்கினபோது சவுல் வேறொரு இருதயமுடைய மனுஷனாக மாறினான் என்பதை வாசிக்கிறோம்.

தேவனுடைய பிள்ளைகளே தேவ அபிஷேகம் இல்லாமல் நாம் ஒருபோதும் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு செல்ல முடியாது அதுமாத்திரமல்ல நம்மால் தேவனுடைய ஊழியத்தையும் சரியாக செய்ய முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்.

வேதம் சொல்லுகிறது, நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது ஒருவரும் உங்களுக்குப் போதிக்க வேண்டுவதில்லை அந்த அபிஷேகம் சகலத்தையுங் குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது பொய்யல்ல அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக 1யோவான் 2:27.