Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 11/09/2016

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்

சகோ. எட்வின் (சோஹார் ஒமான்)

முன்னுரை:

அனேக வருடங்களாக எகிப்து தேசத்திலே பார்வோன் ராஜாவுக்கு கீழே அடிமையாக இருந்த வந்த இஸ்ரவேலரை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து விடுதலை செய்து அவர்களை தம்முடைய ஊழியக்காரர்களைக் கொண்டு நியாயம் விசாரித்தும் சரியான பாதைகளில் வழிநடத்தியும் வந்து கொண்டிருந்த கர்த்தரிடம் இந்த இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய ஜனங்களுக்கு ராஜா இருப்பதுப் போல தங்களுக்கும் ராஜா வேண்டும் என்று சொல்லி கலகம் பண்ணினார்கள் அதாவது இவ்வளவு நாட்களாக தங்களை நடத்தி வந்த உண்மையான மேய்ப்ப்பரைத் தள்ளிவிட்டு ஆதாயத்திற்காக தங்களை மேய்க்கிற மேய்ப்பர்களை வைத்துக் கொண்டார்கள். இதனால் இவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் இழப்புகள் எத்தனை என்பதை நாம் வேதத்தை வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.

இன்றைய கிறிஸ்தவர்களும் இந்த இஸ்ரவேல் ஜனங்களைப் போலவே காணப்படுகிறார்கள், எப்படியென்றால் இவர்கள் கூட்டம் கூட்டமாக சேர்ந்து கொண்டு தங்களுக்கு தற்காலிகமாக கிடைக்கப் போகிற நன்மைகளை நினைவில் கொண்டு தங்களுடைய இஷ்டப்படி மேய்ப்பர்களை நியமித்துக் கொள்கிறார்கள். இதனால் என்ன நடக்கிறது என்று வேதம் சொல்லுகிறது

எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல்

மேய்ப்பனாயிராதவனும் ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான், அப்பொழுது ஓநாய் ஆடுகளைப் பீறி அவைகளைச் சிதறடிக்கும்.

கூலியாள் கூலிக்காக வேலை செய்கிறவனாகையால் ஓடிப்போகிறான் ஆடுகளுக்காக அவன் கவலைப்படான் என்று யோவான் 10:8,12,13ல் கூலிக்காக வேலை செய்கிற மேய்ப்பர்களின் நிலைமை எப்படியாய் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.

அடுத்ததாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தங்களுடைய மேய்ப்பராக நியமித்துக் கொள்கிறவர்களுக்கு வேதம் என்ன சொல்லுகிறது,

நானே நல்ல மேய்ப்பன் நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் மேலும்

நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தேன் என்று யோவான் 10:11,10ல் நல்ல மேய்ப்பனின் கரிசணை எப்படியிருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

யாரெல்லாம் இயேசு கிறிஸ்து தங்கள் மேய்ப்பராக நியமித்துக் கொள்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் நன்மைகளை சங்கீதக்காரனாகிய தாவீது எழுதிய 23 ஆம் சங்கீதத்தைக் கொண்டு பின்வருமாறு பார்க்கப் போகிறோம்

கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் மேய்ப்பராய் வரும் போது

1.  குறைவுகள் நீங்குகிறது

2.  அப்பமும் தண்ணீரும் கிடைக்கிறது

3.  ஆறுதல் உண்டாகிறது

4.  மரணம் ஓடிப்போகிறது

5.  தலை உயர்த்தப்படுகிறது

6.  நிரந்தர அடைக்கலம் உருவாகிறது சங்கீதம் 23: 1-6

இத்தகைய நன்மைகள் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய மேய்ப்பராய் இருக்கும் போது வருகிறது.

1.முதல் நன்மை: குறைவுகள் நீங்குகிறது

வேதம் சொல்லுகிறது, கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் நான் தாழ்ச்சியடையேன் சங்கீதம் 23:1

சங்கீதக்காரனாகிய தாவீது இவ்வாறாக எழுதக் காரணம் என்னவென்று யோசிப்பீர்களானால் ஒரு காரியம் நம்முடைய சிந்தையில் தோன்றும் அதுஎன்னவென்றால் யாரெல்லாம் அவனை உயர்த்தினார்களோ யாரெல்லாம் அவனைப் பாராட்டினார்களோ அவர்கள் எல்லாராலும் கைவிடப்பட்டு ஒரு வனாந்தரமான வாழ்க்கைக்குள்ளாக கடந்து போக நேரிடுகிறது, எதற்காக தேவன் இத்தகைய பாடுகளை அனுமதித்தார் என்றால், கர்த்தரே நல்ல மேய்ப்பன் என்பதை அவர் கற்றுக் கொள்வதற்காக, அவர் கற்றுக் கொண்டாரா? ஆம் சவுலின் ராஜ்யபாரம் நிலைப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டு சவுலுக்காக தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் யுத்தக் களத்திற்கு சென்று கோலியாத்தோடு போரிட்டு அவனை வென்று வந்த தாவீதை சவுல் பொறாமை கொண்டு தாவீதுக்கு ஒன்றும் கொடுக்காமல் வெறுமையாக அனுப்பிவிட்டான்.

அடுத்ததாக ஆகீத் ராஜாவிடம் தஞ்சம் புகுந்த தாவீது ராஜாவிற்கு ஒரு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. ஆகீத்திற்காக உண்மையாக உழைத்த தாவீதோ சந்தர்ப்பம் வாய்த்த போது ஆகீதினால் துரத்திவிடப்படுகிறான், இதனால் என்ன நடந்தது அதாவது இதன் விளைவு என்னவாக காணப்பட்டது என்றால் தாவீது தன்னுடைய குடும்பம் முழுவதையும் வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் ஆடுமாடுகளையும் இழந்து நடுத்தெரிவில் நின்றுக் கொண்டிருந்தான். இதோ மனுஷர்களால் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை அறிந்து கொண்ட தாவீது தன்னுடைய நல்ல மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்து கதறினான்.

நல்ல மேய்ப்பனாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ அவன் இழந்த எல்லாவற்றையும் திரும்பக் கொடுத்து தாவீதை தம்முடைய சிங்காசனத்தில் வைத்து அழகுப் பார்த்ததை நம்மால் எப்படி மறக்க முடியும். ஆகவேதான் தாவீது ராஜா எழுதுகிறார் சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும் கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது என்று சங்கீதம் 34:10 ல் வாசிக்கிறோமே.

இந்த உலகத்தில் உள்ள எந்த மனுஷனாலும் நம்முடைய குறைவுகளை மாற்ற முடியாது ஏனென்றால் அவர்களெல்லாரும் ஏதாவது ஒரு காரியத்தில் குறைவுப்பட்டவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் ஆனால் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ குறைவுகள் ஒன்றும் இல்லாத பரிபூரணமானவர் என்பதை மறந்து விட வேண்டாம், எப்படியென்றால்,

நிறைவானது வரும் போது குறைவானது ஒழிந்து போம் 1கொரி 13:10

2.இரண்டாவது நன்மை: அப்பமும் தண்ணீரும் கிடைக்கிறது

அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டு போய் விடுகிறார் சங்கீதம் 23:2

செழிப்புள்ள வாக்குத்தத்தமுள்ள கானான் தேசத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுப்பேன் என்று ஆணையிட்டுக் கொடுத்த கர்த்தர் தம்முடைய ஜனங்களை 40 வருடங்களாக வனாந்திரத்திலே பயணம் செய்யும்படியாக அனுமதித்தார். எதற்காக தம்மைப் பற்றி அவர்கள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் எந்த சூழ்நிலையிலும் கர்த்தரேயே அவர்கள் சார்ந்து வாழ வேண்டும் என்பதற்காவும் அவர் அப்படி ஒரு பயணத்தை அனுமதித்தார்.

வனாந்திர பயணத்தில் என்ன நடந்தது, ஆரம்பத்தில் தங்களை விடுதலை செய்துக் கொண்டு அடிமை தேசத்திலிருந்து வழி நடத்திய தேவனைக் குறித்து ஆர்ப்பரித்து நடந்த ஜனங்கள் தங்களுடைய வாழ்க்கையில் வனாந்திரம் வந்த போது அதாவது பசியும் தாகமும் வனாந்திரத்தில் தங்களைத் தாக்கிய போது எரிச்சலைடைந்தார்கள் அதுமட்டுமல்லாமல் தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள் அவர்களை நடத்தி வந்த மோசேயினாலோ அல்லது ஆரோனாலோ எந்த ஒரு உதவியும் செய்ய முடியவில்லை ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ வானத்தின் மதகைத் திறந்து அப்பத்தை அவர்களுக்கு ஆகாரமாக பொழியச் செய்தார். அதுமட்டுமல்லாமல் அவர்கள் தாகத்தைத் தீர்ப்பதற்காக கன்மலையை பிளக்கச் செய்து தண்ணீரை அளவில்லாமல் அவர்களுக்குக் கொடுத்தார்.

எப்படிப்பட்ட பஞ்சம் வந்தாலும் நாம் பயப்பட வேண்டாம் ஏனென்றால் நம்முடைய மேய்ப்பன் நமக்கு ஜீவ அப்பமாகவும் ஜீவ தண்ணீராகவும் இருக்கிறார் பாருங்கள் கொடிய பஞ்சம் இஸ்ரவேல் ஜனங்களிடத்தில் உருவான போதும் தம்முடைய ஊழியக்காரனாகிய எலியாவை கர்த்தர் எப்படியாக போஷித்தா என்பது நாம் எல்லாரும் நன்றாக அறிந்திருக்கிறோம்.

ஆகவே பஞ்சம் வந்து விட்டது என்று அறிந்து தேவன் தந்த இடத்தை விட்டு தற்காலிகமான செழிப்பை வைத்திருக்கும் எகிப்தைத் தேடி செல்ல வேண்டாம் அப்படியாகத் தேடி சென்ற நகோமியின் வாழ்க்கையில் ஏற்பட்ட சாபத்தை நாம் எல்லாரும் ரூத் என்கிற புஸ்தகத்தில் படித்திருக்கிறோம் என்று விசுவாசிக்கிறேன்.

வேதம் சொல்லுகிறது, தாகமாயிருக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள் பணமில்லாதவர்களே நீங்கள் வந்து வாங்கிச் சாப்பிடுங்கள் நீங்கள் வந்து பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள் ஏசாயா 55:1

இப்படிப்பட்ட மேய்ப்பனிடம் மாத்திரமே நம்மை நித்திய ஜீவன் வரைக்கும் நடக்கச் செய்ய வைக்கிற ஜீவ அப்பமும் தண்ணீரும் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

3.மூன்றாவது நன்மை: ஆறுதல் உண்டாகிறது

அவர் என் ஆத்துமாவைத் தேற்றி தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார் சங்கீதம் 23:3

இன்றைய உலகம் சமாதானத்துக்காக செய்யும் காரியங்களைப் பார்ப்பீர்களானால் பரிதாபமாக இருக்கிறது. ஏனென்றால் பலவருடங்களாக அவர்கள் பலவிதங்களில் முயற்சி செய்தும் இறுதியில் தோல்வியையே அவர்கள் சந்திப்பதை நாம் பார்க்க முடிகிறது இதற்குக் காரணம் மெய்யான நிலையான ஆறுதலைக் கொடுக்கிற இயேசு கிறிஸ்துவை இவர்கள் தேடாததே ஆகும்.

வேதம் சொல்லுகிறது, அவர் உலகம் கொடுக்கிற சமாதானத்தை அதாவது ஆறுதலைக் கொடுக்காமல் தம்முடைய சமாதானத்தையே வைத்துப் போகிறார் என்று யோவான் 14:27 ல் வாசிக்கிறோம்.

பாருங்கள் யோபு என்கிற மனுஷருடைய வாழ்க்கையில் நீதியினிமித்தம் ஒரு சோதனை அவருக்கு நேரிட்டது அதுமட்டுமல்லாமல் இந்த சோதனையின் மூலம் அவருக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு அளவேயில்லை யாரிடம் இருந்து எல்லாம் ஆறுதல் வரவேண்டுமா அவர்கள் எல்லாரும் இன்னும் அவருடைய வேதனையை அதிகரித்தனர், எப்படியென்றால் அவருடைய மனைவி தேவனை தூஷித்து விட்டு மரணத்தை ஏற்றுக் கொள்ளும்படி சொன்னாள். அவருடைய நண்பர்கள் அவருடைய நீதி சரியில்லையென்று சொல்லி அவரை வேதனைக்குள்ளாக நடத்தினார்கள். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஆறுதல் அவரை தேவனுக்கு முன்பாகவும் உலகத்திலும் சாட்சியாக நிறுத்தினது என்று சொன்னால் அதுமிகையாகாது ஆகவேதான் சங்கீதக்காரன் எழுதும் போதும்

உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால் என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன் [சங்கீதம் 119:92] என்று மெய்யான ஆறுதல் வரும் இடத்தை இங்கு சுட்டிக் காட்டுகிறார்.

4. நான்காவது நன்மை: மரணம் ஓடிப்போகிறது

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன் தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர் உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் சங்கீதம் 23:4

எல்லா ஜனங்களும் பயப்படுகிற ஒரு பொதுவான காரியம் இருக்குமென்றால் அது மரணமாகும் எவ்வளவு பெரிய பலசாலியானாலும் சரி தனக்கு பலவீனமான காரியங்கள் நேரிடும் போது உடனே மருத்துவரக்ளைத் தேடி செல்வார்கள் எதற்காக அவர்களிடத்தில் காணப்படும் மரணப்பயமே ஆகும் ஆனால் இத்தகைய பயம் யாருக்கு இல்லையென்றால் வேதம் சொல்லுகிறது

கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ,

இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே ரோமர் 8:36,37

ஆம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தன்னுடைய நம்பிக்கையாக வைத்திருப்பவர்களுக்கு எந்த ஒரு காரியமும் அவர்களை பயமுறுத்த முடியாது என்பதை மறந்து விட வேண்டாம்.

வேதம் சொல்லுகிறது,

தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார் என்று ரோமர் 8:31ல் கர்த்தரை மேய்ப்பராக கொண்டவர்களை உலகத்தின் மரணம் ஒருபோதும் நெருங்காது என்கிற ஒரு காரியத்தை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

5.ஐந்தாவது நன்மை: தலை உயர்த்தப்படுகிறது

என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர் என் பாத்திரம் நிரம்பி வழிகிறது சங்கீதம் 23:5

சாமுவேல் மூலம் அபிஷேகத் தைலத்தைக் கொண்டு ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட தாவீதால் உடனே அந்தப் பதவியை பெற்றுக் கொள்ள முடிந்ததா? வேதம் சொல்லுகிறது

அதன் பிறகு அவருக்கு எல்லா இடத்திலும் தலைகுனிவுதான் ஏற்பட்டது சவுலினால் ஒரு நாயைப் போல விரட்டப்பட்டான் ஆகீத் ராஜாவிற்கு முன்பாக ஒரு கோழையாக நின்றார். தன் சொந்த மகனால் கொலைச் செய்யும்படியாக திட்டமிடப்பட்டார். அனேகருக்கு முன்பாக பல அவமானங்களைப் பெற்றார் என்கிற உண்மையை அறிய முடிகிறது.

இதனிமித்தம் அவர் சோர்ந்து போனாரா இல்லவே இல்லை அவருக்கு ஒரு உண்மை நன்றாக தெரிந்திருந்தது, அதுஎன்னவென்றால் வாக்குத்தத்தம் ஒரு மனுஷனிடம் இருந்து வரவில்லை மாறாக வானத்துக்கும் பூமிக்கும் சொந்தக்காரராகிய ஆண்டவரே அத்தகைய வாக்குறுதியை தந்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டார்.

ஆகவே அவர் தன்னுடைய வெட்கத்தை நினைத்து கவலைப்படாமல் அத்தகைய சூழ்நிலையிலும் தேவனுடைய நாமத்தை உயர்த்துகிற ஒரு மனுஷனாக காணப்பட்டார் இதனால் தேவனும் தம்முடைய நேரம் வந்த போது, வேதம் சொல்லுகிறது

அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கப்பண்ணுவேன் நான் அபிஷேகம்பண்ணுவித்தவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்பண்ணினேன்

அவன் சத்துருக்களுக்கு வெட்கத்தை உடுத்துவேன் அவன் மீதிலோ அவன் கீரிடம் பூக்கும் என்றார் சங்கீதம் 132:17,18

பாருங்கள் ஆண்டவர் தம்மை கனம்பண்ணுகிறவர்களை அவர் ஒருபோதும் கனம்பண்ணாமல் விட்டதேயில்லை என்பதை மறந்து விடாதீர்கள்.

6.ஆறாவது நன்மை: நிரந்திர அடைக்கலம் உருவாகிறது

என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன் சங்கீதம் 23:6

இதோ இந்த உலகத்தில் தனக்கு ஒரு இடம் மற்றவர்களுக்கு முன்பாக உண்டாக வேண்டும் என்று விரும்பிய தாவீதை நித்திய ஜீவனுக்குரிய காரியத்தை தேவன் வெளிப்படுத்த ஆரம்பித்தார். ஆகவே அவர் இந்த உலகம் தனக்கு தற்காலிகமான அடைக்கலம் என்பதை புரிந்து கொண்டார்.

இப்பொழுதெல்லாம் அவர் இந்த உலகத்தில் தனக்கு கிடைக்கப் போகிற நன்மைகளுக்காக ஜெபிக்காமல் தனக்கு முன்பாக வைத்திருக்கிற நித்திய வீட்டிற்காக ஜெபிக்க ஆரம்பித்துவிட்டார்.

வேதம் சொல்லுகிறது, கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன் நான் கர்த்தருடைய மகிமையை பார்க்கும்படியாகவும் அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும் நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கிருப்பதையே நாடுவேன் எங்கிற தாவீதின் பரலோக வாஞ்சையை சங்கீதம் 27:4ல் நாம் வாசிக்க முடிகிறது, மேலும் அவர் சொல்லுகிறார்,

கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்ன போது மகிழ்ச்சியாயிருந்தேன் சங்கீதம் 122:1

பாருங்கள் உண்மையான மேய்ப்பன் மாத்திரமே தன்னுடைய ஆடுகளுக்கு நிரந்திர இடத்தைக் காண்பித்துக் கொடுக்க முடியும் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களோ தங்களுக்கே அந்த இடம் தெரியாத காரணத்தினால் இவர்கள் தங்கள் கீழ் இருக்கிறவர்களுக்கு அழிவுள்ள ஒரு வாழ்க்கையையே கற்றுக் கொடுக்கிறார்கள் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை.

நல்ல மேய்ப்பன் நம்மைப் பார்த்து சொல்லுகிற ஒரு காரியம் என்னவென்றால்,

நானே நல்ல மேய்ப்பன் என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால் அவன் இரட்சிக்கப்படுவான் அவன் உள்ளும் புறமும் சென்று மேய்ச்சலைக் கண்டடைவான் யோவான் 10:9

எனக்குப் பிரியமான ஆடுகளே உங்களுக்கு எப்படிப்பட்ட மேய்ப்பன் வேண்டும் உங்களை பரலோகம் கொண்டு சேர்க்கிற மேய்ப்பனோ அல்லது அழிந்து போகிற அதாவது போனால் திரும்பி வராத நரகத்துக்கு கொண்டு செல்லுகிற போலியான மேய்ப்பனோ நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்!