Tamil Christian Website

Tamil Christian Website

Posted on: 22/08/2015

தேவனுடைய ராஜ்ஜியம்

சகோ. எட்வின் (சோஹார் ஓமான்)

வேதம் சொல்லுகிறது,

தேவனுடைய ராஜ்ஜியம் புசிப்பும் குடிப்புமல்ல அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது ரோமர் 14:17

முன்னுரை:

தேவனுடைய ராஜ்ஜியத்தைக் குறித்து எழுதும்படியாக தேவனால் ஏவப்பட்டதால் இந்த தலைப்பையே மறைவான மன்னாவிற்கு செய்தியாக கொடுக்க ஆசைப்படுகிறேன்.

பாருங்கள் நாம் எல்லாரும் இந்த உலகத்தில் போராடுகிற போராட்டம் எல்லாம் எதற்காக? நாம் [அனேக] நல்ல உலக செல்வங்களை பெற்றிருந்த போதிலும் நமக்கு ஏன் இந்த உலகத்தில் போராட்டம் தொடர்கிறது என்று யோசிப்பீர்களானால், வேதம் சொல்லுகிறது நம்முடைய பவனம் அதாவது நம்முடைய குடியிருப்பு இந்த உலகத்தில் இல்லை ஏனென்றால் இந்த உலகத்தில் நம்முடைய எதிரிகளின் வீடும் இருக்கிறது, நமக்கு எதிரிகளே இல்லாத ஒரு உலகம் உண்டு அதாவது ஒரு வீடு உண்டு. அப்படியென்றால் அந்த வீடு அமைந்திருக்கிற இடம் எதுவென்று தேவன் சொல்லுகிறார்,

உங்களுடைய வீடு என்னோடு கூடவே இருக்கும் அதாவது தாம் தங்கியிருக்கிற பரலோகராஜ்ஜியம் என்பதையே தேவன் தேவனுடைய ராஜ்ஜியம் என்கிற பெயரில் பல இடங்களில் உவமைகளாக வெளிப்படுத்திருப்பதை நாம் வேதத்தை வாசிக்கும் போது தெரிய வருகிறது. இந்த தேவனுடைய ராஜ்ஜியத்தை தேவன் சொன்ன உவமையைக் கொண்டு விளக்கி மேலே நமக்கு சொல்லப்பட்ட வசனத்துடன் ஒப்பிட்டுக் காண்பிக்க ஆசைப்படுகிறேன்

பாருங்கள் மத் 13:45,46 ல் ஒரு வியாபாரியைப் பார்க்கிறோம் அவனுடைய வேலை என்னவென்றால் விலையுயர்ந்த முத்துக்களைத் தேடி செல்வதும், பின்பு அவைகளை வாங்குவதுமாக காணப்படுகிறான், இப்படியாக அவனிடத்தில் காணப்படாத முத்துக்களே இல்லை என்று சொல்லலாம். இப்படியாக வாழ்ந்து கொண்டிருந்த அவனுடைய வாழ்க்கையில் என்ன நடந்தது, அந்த மனுஷன் எப்படியோ இயேசு என்கிற முத்தைக் குறித்து கேள்விப்படுகிறான் அது ஒருவேளை விசுவாசி மூலமாகவோ அல்லது ஒரு ஊழியக்காரர் மூலமாகவோ இருக்கலாம். உடனே அவன் என்ன செய்கிறான் அந்த முத்தை வாங்குவதற்காக ஓடுகிறான் அந்த மனுஷனின் சிந்தை எப்படியாயிருந்தது என்றால் தன்னிடத்தில் காணப்படுகிற அழிந்து போகிற பணத்தைக் கொண்டு வாங்கி விடலாம் என்பதாகவே காணப்பட்டது ஆனால் முடிவோ தோல்வியில் முடிந்தது அதன்பிறகுதான் அவன் அறிந்து கொண்டான் இந்த விலை மதிக்கமுடியாத முத்தை வாங்கவேண்டுமானால் தன்னையே விற்க வேண்டும் [ யாரிடம் என்றால் இயேசுவிடம் மறக்காதீர் ] அப்பொழுதுதான் இந்த முத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை அறிந்து கொண்டான்.

இப்பொழுது நாம் செய்திக்குள்ளாக கடந்து செல்வோம் இந்த விலைமதிக்க முடியாத இயேசு என்கிற முத்தை வாங்குவதற்கு அந்த மனுஷன்,

அ.எதை தன்னிடம் இருந்து விற்றுப் போட்டான்

ஆ.  விற்றை பணத்தைக் கொண்டு எவைகளை வாங்கினான்

1.முத்து வியாபாரி எவைகளையெல்லாம் தன்னுடைய வாழ்க்கையில் விற்றுப் போட்டான், வேதம் சொல்லுகிறது,

தேவனுடைய ராஜ்ஜியம் புசிப்பும் குடிப்பும் அல்ல என்று ரோமர் 14:17ன் முதல் பகுதியில் பார்க்கிறோம். இத்தகைய வெளிப்பாட்டை பெற்ற இந்த மனுஷன் முதலில் தன்னுடைய வாழ்க்கையில் காணப்பட்ட உலக புசிப்பையும் குடிப்பையும் விற்றுப் போட்டதை நாம் உணர முடிகிறது. நமக்கு நன்றாக தெரியும் இந்த உலகத்தில் புசிப்பும் குடிப்பும் எதுவாக காணப்பட்டது அதன் நிமித்தம் அவர்களுக்கு நேரிட்ட காரியங்கள் என்னவென்றும் நாம் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை நமக்கு திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டுள்ள இந்த காரியத்தை நாம் வேதத்தை வாசித்து தெரிந்து கொள்ளலாம்.  அப்படியென்றால் நாம் எதை புசிக்கவும் குடிக்கவும் கூடாது, வேதம் சொல்லுகிறது, இச்சை என்கிற போஜனம், அசுத்தம் அதாவது துன்மார்க்கம் என்கிற பானம் என்று சங் 78:18 மற்றும் 75:8 நமக்கு உலக ஜனங்களின் குடிப்பையும் புசிப்பையும் வெளிப்படுத்துவதை அறியலாம், ஆகவேதான் வேதம் சொல்லுகிறது, இப்படிப்பட்ட புசிப்பும் குடிப்பும் உள்ளவர்களுக்கு தேவனிடத்தில் பங்கு இல்லை என்று, 1யோவான் 2:15ல் பார்க்கிறோம்.

இத்தகைய உலக புசிப்பையும் குடிப்பையும் ஒரு வேத உதாரணத்துடன் விளக்க ஆசைப்படுகிறேன், நம் எல்லாருக்கும் தெரிந்த ஒரு சம்பவம் அது என்னவென்றால் தேவனாகிய இயேசு ஊழியத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது, அவர் சமாரியா நாட்டின் வழியாக போக வேண்டியது இருந்தது, அப்படி செல்லும் போது ஒரு சமாரியா ஸ்திரீயுடன் உரையாடுவதை நாம் பார்க்க முடிகிறது அந்த உரையாடல் எப்படியாய் இருந்தது என்றால் தேவன் அவளிடம் தாம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்கிறார், அவள் தவறுதலாக புரிந்து கொண்டு அதாவது அவர் தாகமாயிருக்கிறார் ஆகவே அவருக்கு தண்ணீர் தேவைப்படுகிறது என்று நினைத்தாள். இதை புரிந்து கொண்ட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னார் உன்னிடத்தில் தண்ணீர் கேட்கிறவர் யார் என்று அறிந்திருந்தால் நீ அவரிடம் கேட்டிருப்பாய் அவர் உனக்கு என்றும் உலகத்தின் மேல் தாகம் எடுக்காத தண்ணீரை கொடுத்திருப்பார் என்று சொல்லி தன்னை உலகத்திற்கு வெளிப்படுத்துவதை நாம் பார்க்க முடிகிறது.

அது என்ன உலகதாகம் நீங்கள் யோவான் 4:16,17.18 ஐ வாசிப்பீர்களானால் தெரியும் அவள் செய்கிற அக்கிரமத்தையே அவள் குடித்து கொண்டிருக்கிற தண்ணீர் என்றும் இத்தகைய தண்ணீரை குடிப்பதால் மறுபடியும் தாகம் உண்டாகிறது என்றும் அப்படியென்றால் அவள் எப்படிப்பட்ட தண்ணீரை குடிக்க வேண்டும் என்பதையும் தெளிப்படுத்துவதை நாம் உணரமுடிகிறது.

இந்த தண்ணீரை உலகத்தின் பொருட்களால் வாங்க முடியாது என்று நினைத்து தன்னையே முழுமையாக தேவனிடம் ஒப்புக்கொடுத்ததையும் பார்க்க முடிகிறது. இதையேதான் இந்த மனுஷனும் செய்கிறான் என்பதில் சந்தேகமேயில்லை. அடுத்ததாக, நாம் எப்படிப்பட்ட தண்ணீரையும் , போஜனத்தையும் பெற வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது, யோவான் 6:35,55 ல் இயேசு சொல்லுகிறார், நானே ஜீவ அப்பம் என்றும் என் மாமிசம் மெய்யான போஜனமாயிருக்கிறது அதுமட்டுமல்லாமல் இந்த போஜனத்தையும் பானத்தையும் ருசிப்பார்ப்பவர்களுக்கு மட்டுமே இயேசு என்கிற முத்து சொந்தமாகிறது என்பதையும் மறக்க வேண்டாம்.

இப்பொழுது நமக்கு புரிந்து இருக்கும் அந்த மனுஷன் எப்படிப்பட்ட புசிப்பையும் குடிப்பையும் விற்று போட்டிருப்பான். எனவே நாமும் இந்த உலகத்தோடு இருக்கிற புசிப்பையும் குடிப்பையும் மறந்து விட்டு தேவனோடு புசிப்பதற்கும் குடிப்பதற்கும் ஆயத்தமாகுவோம் அப்பொழுதுதான் நாம் நித்திய ஜீவன் வரைக்கும் உயிரோடு இருக்க முடியும் என்பதை மறக்க வேண்டாம்.

2.இரண்டாவது அந்த மனுஷன் வாங்கின பொருட்கள் என்னவென்று தியானிப்போம்.

தேவனுடைய ராஜ்ஜியம் நீதியும் சமாதனாமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது என்று ரோமர் 14:17ன் பின்பகுதி சொல்லுகிறது.

1.முதல் பொருள்: நீதி

வேதம் நீதியைக் குறித்து அதாவது இந்தப் பொருளைக் குறித்து என்ன சொல்லுகிறது என்பதை பின்வருமாறு பார்க்கலாம்,

அ.நீதி என்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாய் நில்லுங்கள் என்று எபே 6:14லும்

ஆ.நீதி தேவன் உட்கார்ந்திருக்கிற நாற்காலியின் ஆதாரமாய் இருக்கிறது என்று சங் 89:14 லும் கடைசியாக

இ.நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் திருப்தியடைவார்கள் என்று மத் 5:6 லும் நீதியின் அவசியம் எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் உணரமுடிகிறது. இன்று அனேகருடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் தடுமாற்றத்துக்கான காரணம் இந்த நீதி என்கிற ஆயுதம் நம்மிடம் இல்லாததே காரணமாகும் என்பதை எப்படி மறுக்க முடியும் ? உதாரணமாக நம்முடைய வேலையில் நீதி இல்லாமல் இருப்போமானால் பிசாசானவன் லஞ்சம் என்கிற வழியாய் நமக்குள்ளாக நுழைந்து விடுகிறான். இதனிமித்தம் நாம் சாத்தானுக்கு அடிமையாக மாறிவிடுகிறோம் என்பதை நாம் வேதத்தில் பிலேயாம் என்கிற தீக்கதரிசியின் மூலமாக நீதி என்கிற ஆயுதம் எவ்வளவு முக்கியமாயிருக்கிறது என்பதையும், இந்த நீதி என்கிற ஆயுதம் அவனிடம் இல்லாத நிமித்தம் அவன் பாவத்துக்குள்ளாக கட்டப்பட்டதையும் நாம் வேதத்தில் பார்க்க முடிகிறது.

எதற்காக நீதி தேவைப்படுகிறது ஒரு மனுஷன் பரிசுத்தனாய் இருக்கிறானா அல்லது துன்மார்க்கனா என்பதை நாம் எப்படி அறிய முடிகிறது, வேதம் சொல்லுகிறது, பரிசுத்தமுள்ள தேவன் நீதியினால் பரிசுத்தராய் விளங்குவார் என்று ஏசாயா 5:16ல் வாசிக்கிறோம். நீதியை வைத்துதான் ஒரு மனுஷனுடைய பரிசுத்தம் எப்படியாயிருக்கிறது என்பதை அறியமுடியும் என்று மேலே சொல்லப்பட்ட வசனத்தின் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது.

அடுத்ததாக, எத்தனை விதமான நீதி வேதத்தில் காணப்படுகிறது என்பதை பார்க்கலாம், இரண்டு விதமான நீதியைக் குறித்து வேதத்தில் நாம் அறிந்து கொள்ளமுடிகிறது அது என்னவென்றால் வேதம் சொல்லுகிறது, வேதப்பாரகர் பரிசேர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால் பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று மத் 5:20ல் தேவன் இரண்டு விதமான நீதியாகிய மனுஷ நீதி மற்றும் தேவ நீதியை வெளிப்படுத்துவதை நாம் உணரமுடிகிறது, அடுத்ததாக மனுஷ நீதி எப்படியாயிருக்கிறது பாருங்கள்

பரிசேயன் நின்று தேவனே நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப் போலவும், இந்த ஆயக்காரனைப் போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டு தரம் உபவாசிக்கிறேன், என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று தன்னுடைய சுயநீதியை வெளிப்படுத்துவதை லூக் 18:11,12ல் நாம் பார்க்கிறோம். இந்த வசனங்கள் மூலம் நாம் கற்றுக் கொள்ளும் காரியம் என்னவென்றால் தேவன் பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறார் ஆகவேதான் அவர் சொல்லுகிறார் இவர்கள் நீதியை விட அதிகமான நீதியை காட்டவேண்டும், ஏனென்றால் இப்படியாக உபவாசித்து ஜெபித்த இவர்கள் ஒரு வேசியை கல்லெறியும்படி துரத்தி வருகிறார்கள் அவள் ஆண்டவரின் முன்பாக போய் விழுகிறாள் இதைப் பார்த்த நபர்கள் இயேசுவைப் பார்த்து சொன்ன காரியம், இவள் பாவம் செய்திருக்கிறாள் ஆகவே இவளை கல்லெறிய வேண்டும். ஆனால் இவர்கள் பதிலைக் கேட்ட இயேசு என்ன சொன்னார் உங்களில் பாவம் செய்யாதவன் இவளை முதலில் கல்லெறியக்கடவன், இந்த பதிலை எதிர்ப்பார்க்காத நபர்கள் திரும்பி சென்றதை நாம் யோவான் 8ம் அதிகாரத்தில் பார்க்கலாம்.

மறக்க வேண்டாம். தேவன் பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறார் என்று ஓசியா 6:6ல் வாசித்து தெரிந்து கொள்ளலாம்.

நீதி என்கிற ஆயுதம் நமக்கு தரும் நன்மைகள் என்ன?

அ.நீதி 12:12 ல், ஒரு மனுஷன் கனி கொடுப்பதற்கு நீதி என்கிற வேர் அவசியம் என்றும்,

ஆ.நீதி 12:28 ல், நாம் தேவனை உயிருள்ளவர்களாய் துதிப்பதற்கு இந்த நீதியே நமக்கு ஜீவனைத் தருகிறது என்றும்

இ.நீதி 10:25 ல், நம்முடைய வீடு நிலையாக நிற்கும்படியாக இந்த நீதியே நமக்கு அஸ்திபாரமாகிறது என்றும் அறிகிறோம்.

நமக்கெல்லாம் தெரிந்த சம்பவம் தேவன் கனிகொடாத மரத்தை சபித்து போட்டத்தை நாம் எப்படி மறக்க முடியும், நாமும் தேவனால் சபிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் நம்முடைய ஜீவ நாளெல்லாம் தேவனுக்குக் கனி கொடுத்து கொண்டேயிருக்க வேண்டும். அப்படியாக வாழ வேண்டுமானால் நமக்கு நீதி என்கிற வேர் மிகவும் அவசியம் என்பதை மறந்துவிடாதீர்.

கடைசியாக, நீதி யாரிடம் இருக்கிறது நீதியை பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

வேதம் சொல்லுகிறது, நீதி இயேசுவாகவும் , இயேசு கிறிஸ்துவிடமும் இருக்கிறது என்று 1கொரி 1:31 மற்றும் நீதி 8:18 லும் வாசிக்கிறோம். இந்த நீதியாகிய இயேசுவைப் பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை வேத வசனத்தின் மூலம் பின்வருமாறு பார்க்கலாம், ரோமர் 10:10 சொல்லுகிறது, நீதியுண்டாக இருதயத்தில் விசுவாசிக்க வேண்டும் என்றும் மேலும், ரோமர் 3:22 சொல்லுகிறது, அது இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே வருகிறது என்றும் பார்க்கிறோம்

ஒரு காரியத்தை கிறிஸ்தவர்கள் நன்றாக அறிய வேண்டியம் அது என்னவென்றால், தேவ நீதியானது ஒருபோதும் நியாயப்பிரமாணம் மூலமாகவோ அல்லது சுயநீதினாலோ வெளிப்படுவதில்லை. ஏனென்றால் வேதம் சொல்லுகிறது நம்முடைய நீதியெல்லாம் அழுக்கான கந்தையாய் இருக்கிறது. இந்த நீதியை இயேசுகிறிஸ்து மாத்திரமே தர முடியும் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்.

2.இரண்டாவது பொருள்: சமாதானம்

வேதம் இந்த சமாதானத்தைக் குறித்து என்ன சொல்லுகிறது,

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் என்று மத் 5:9 ல் வாசிக்கிறோம்

ஆம் சமாதானம் யாரிடம் எல்லாம் இருக்கிறதோ அவர்கள் எல்லாரும் தேவனுடைய புத்திரர் ஆவர், அதாவது தேவ சமாதானம் என்பதை மறந்து விடாதீர், மேலும் வேதம் சொல்லுகிறது, தேவன் கலகக்காரர்களுக்கு தேவனாயிராமல் சமாதானத்துக்கே தேவனாயிருக்கிறார் என்று 1கொரி 14:33ல் பார்க்கிறோம்.

இந்த சமாதானத்தை நாம் ஒருபோதும் உலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ள முடியாது, பாருங்கள் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை வாசிக்கும் போது எத்தனை தேவ மனுஷர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளைப் பார்க்கிறோம், இவர்கள் பிறந்த போதோ அல்லது இவர்களுடைய காலத்திலோ உங்களுக்கு சமாதானம் உண்டாகும் என்று வேதத்தில் எங்கேயாவது எழுதியிருக்கிறதா? இல்லவே இல்லை ஆனால் லூக்கா 2:14 ஐ வாசித்து பாருங்கள் நம்முடைய இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்த போது நமக்கு சமாதானம் உண்டானது என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது.  மறந்து விடாதீர் இந்த பொல்லாத உலகத்தில் எங்கு சென்றாலும் சமாதானம் கிடைக்காது ஆனால் நம்முடைய இயேசுகிறிஸ்துவிடம் செல்கிறவர்களுக்கோ எப்பொழுதும் சமாதானம் உண்டாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆகவேதான் சீஷர்களைப் பார்த்து தேவன் இவ்வாறாக சொன்னார்,

உலகம் கொடுக்கிறது போலல்ல, என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு வைத்து போகிறேன் என்று யோவான் 14:27ல் நிலையான சமாதானத்தை காண்பிப்பதை நாம் பார்க்க முடிகிறது. இதுவே தேவ சாமாதானம் ஆகும்.

அடுத்ததாக யாருக்கு சமாதானம், வேதம் சொல்லுகிறது

வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு என்று சங் 119:165 ல் பார்க்கிறோம் ஆகவேதான் சங்கீதக்காரன் சொல்லுகிறார், உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால் என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன் என்று சங் 119:92 ல் சமாதானம் யாருக்கு கிடைக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

3.கடைசியாக: பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷம்

ஒரு மனுஷனுக்கு நிலையான சந்தோஷம் எப்பொழுது உண்டாகிறது என்றால் அவன் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ளும் போது மட்டுமே ஆகும். அபிஷேகம் என்பது பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வது ஆகும், இதற்கு அடையாளமாக அதாவது பரிசுத்த ஆவி அல்லது அபிஷேகம் ஒரு மனுஷனுக்கு கிடைத்து விட்டது என்பதற்கான சான்றிதழ் என்னவென்றால் அது அன்னியபாஷையாகும், ஏனென்றால் வேதத்தில் அப்போதஸ்தலர் அதிகாரத்தில் அனேக இடங்கலில் பரிசுத்த ஆவியைப் பெற்ற ஜனங்கள் அன்னிய பாஷையில் பேசுவதை நம்மால் பார்க்க முடிகிறது. நீங்கள் அப்போஸ்தலர் அதிகாரத்தை வாசிப்பீர்களானால் உங்களுக்கு புரிய வரும் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷம் என்னவென்று ஒரு சில வசனங்களை உங்களுக்கு எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

முதலாவது

நாம் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு செல்லும் தகுதியை பெறுகிறோம் என்று யோவான் 3:5 நமக்கு சொல்லுகிறது.

இரண்டாவது

உண்மை, களங்கமில்லாத இயேசுவின் அன்பு பரிசுத்த ஆவியின் மூலமாய் ஊற்றப்படுகிறது என்று ரோமர் 5:5 நமக்கு சொல்லுகிறது

மூன்றாவது

பரிசுத்த ஆவியின் மூலம் உலகத்தின் இருதயம் மாற்றப்பட்டு அதாவது மாமிச இருதயம் மாற்றப்பட்டு மெய்யான ஆவிக்குரிய இருதயம் உருவாக்கப்படுகிறது இதன் மூலம் நாம் கர்த்தராகிய இயேசுவின் பிள்ளைகள் என்றும் அவர் நம்முடைய தகப்பன் என்றும் அழைக்கப்படுகிறோம் எசே 36:24-28

நான்காவது

நாம் தேவனுடைய சுவிசேஷத்தை அறிவிக்கும் பணியில் வெற்றியைப் பெறவும் அதுமட்டுமல்லாமல் இந்த உலகத்தில் ஜெயம் எடுக்கவும் நமக்கு தேவையான கருவிகளை அதாவது வரங்களை பரிசுத்த ஆவியின் மூலமாகவே பெற்றுக் கொள்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் 1கொரி 12ம் அதிகாரத்தை வாசிக்கவும்

ஐந்தாவது

பெலன் இல்லாதவர்களுக்கு அதாவது பயத்துடன் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒவ்வொருவருக்கும் புதிய பெலனைத் தருகிறது. இத்தகைய காரியத்தை நாம் வேதத்தை நன்றாக தியானிக்கும் போது பலவிதமான கதாபாத்திரங்களில் இந்த பெலன் வெளிப்படுத்துவதை நாம் பார்க்க முடிகிறது அப் 1:8, 2ம் அதிகாரம், 2தீமோ 1:7, பிலி 1:21

ஆறாவது

தேவ அறிவு வெளிப்படுத்தப்படுகிறது எப்படியென்றால் அன்று பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தைப் பார்த்த ஜனங்கள் இவர்கள் படிப்பறியாதவர்களென்றும், பேதைமை உள்ளவர்களென்றும் அறிந்திருந்தபடியால் ஆச்சரியப்பட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்குள்ளாக பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்தார் என்பதை மறக்க வேண்டாம் அப் 4:13

கடைசியாக

நாம் சரியாக போதிக்கப்படுகிறோம் என்பதில் சந்தேகமேயில்லை நாம் ஒரு மனுஷன் மூலமாகவோ அல்லது பைபிள் கல்லூரியிலோ அல்லது ஊழியக்காரர்களிடத்திலோ இருந்து மட்டும் போதிக்கப்படுவோமானால் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாது அதாவது வெளிப்பாட்டை குறித்து பேசுகிறேன். நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும் போது மட்டுமே ஆவிக்குரிய போதனையை பெற்றுக் கொள்ள முடியும் அதாவது ஆவிக்குரிய வளர்ச்சி நமக்குள் உண்டாகும் என்பதில் சந்தேகமேயில்லை 1யோவான் 2:27. இப்படியாக இந்த மனுஷன் உலகத்தில் அனேக அழிவுள்ள முத்துக்களை தேடிக் கொண்டிருந்தான், இப்பொழுதோ அழியாத முத்தாகிய இயேசுவை கண்டு பிடித்தான் இந்த முத்திற்கு நிகரான முத்து இந்த உலகத்தில் இல்லை என்பதை புரிந்து கொண்டான். ஆகவே தன்னிடம் இருந்த எல்லா முத்துக்களையும் இழக்க முன் வந்தான், ஏனென்றால் அந்த மனுஷனுக்கு நன்றாக தெரிந்திருந்தது எல்லா முத்துக்களுக்கும் சொந்தக்காரர் இயேசு கிறிஸ்துவே.

நாமும் இந்த விலையேறப் பெற்ற முத்தை தேடிச் செல்வோம் இந்த முத்து இருந்தால் மாத்திரமே நாம் தேவனுடைய ராஜ்ஜியம் செல்ல முடியும் என்று வேதம் நமக்கு தெளிவுப்படுத்துகிறது.

ஆகவே இப்பொழுதே முடிவு செய்யுங்கள் அழிவுள்ள ராஜ்ஜியமா? அல்லது அழியவில்லாத ராஜ்ஜியமா? எது வேண்டும் உங்களுக்கும் எனக்கும், சிந்திப்போம் பயணம் செய்வோம்.

தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் இந்த இயேசு என்கிற விலையேறப் பெற்ற முத்து மூலமாக ஆசிர்வதிப்பாராக.