Tamil Christian Website

Tamil Christian Website

Posted on: 07/05/2016

 

சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான கனி உபாகமம் 34:14

கனி இல்லாத ஒரு மரத்தை யாருமே விரும்புவதில்லை தாங்கள் வைக்கிற மரம் எப்படியாவது கனி கொடுத்து விட வேண்டும் என்று மரத்தை வைக்கிற மனுஷன் விரும்புவதுண்டு அவன் எதிர்ப்பாத்திருக்கிற நாளில் கனி கொடுக்கவில்லையென்றால் அந்த மனிதன் எவ்வளவு கஷ்டப்படுவான். ஏன் இவ்வளவு கஷ்டம் அந்த மனிதனுக்கு வருகிறது என்றால்,

தன் மரம் ஒரு பக்குவமான அதாவது மிகவும் சுவை நிறைந்த கனியை தர வேண்டும் என்பதற்காக அவன் செலவிட்ட நேரங்கள் கொஞ்சம் அல்ல அதுமட்டுமல்லாமல் அவன் காத்திருந்த நாட்களுக்கு அளவேயில்லை ஆகவேதான் இத்தனை கஷ்டம் என புரிந்து கொள்ள முடிகிறது.

இதே போலத்தான் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான் வைக்கிற மரம் மிகுந்த பக்குவமான கனிகளைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல

வேதம் சொல்லுகிறது, கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப் பாய்ச்சி ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும் பகலும் காத்துக் கொள்வேன் [ ஏசாயா 27: 2,3 ]

பாருங்கள் தேவன் தன்னுடைய மரம் நல்ல கனிகளைத் தர வேண்டும் அதாவது புளிப்பில்லாத கனிகளைத் தர வேண்டும் என்கிற விஷயத்தில் எவ்வளவு கவனமாய் இருக்கிறார். இன்னும் அவர் தன்னுடைய மரங்களுக்காகப் பட்ட கஷ்டங்களை பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமானால் ஏசாயா 53 ஆம் அதிகாரத்தை முழுமையாக வாசித்துப் பாருங்கள் இப்படியாகத் தான் அவர் பக்குவமுள்ள அருமையான கனிகளை தயார் படுத்துகிறார் என்பதை மறக்க வேண்டாம்.

ஆகவே எனக்கு அருமையான ஜனங்களே நம்முடைய குடும்பத்தில் மற்றும் சபைகளில் உள்ள மரங்கள் நல்ல பக்குவமுள்ள கனிகளைக் கொடுக்க வேண்டுமானால் உலகத்தோடு ஒட்டியிருக்கிற கிளைகளை வெட்டி, நீதியின் சூரியனாகிய இயேசு கிறிஸ்துவின் வெளிச்சம் படுகிற இடத்தில் வைப்போம் அப்பொழுது அந்த மரம் மிகுந்த கனிகளைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை

ஏனென்றால் வேதம் சொல்லுகிறது,

[நானே திராட்சச் செடி நீங்கள் கொடிகள்] ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால் அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான் என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக் கூடாது யோவான் 15:5