Tamil Christian Website

Tamil Christian Website

Posted On : 02/07/2016

ஆவிக்குரிய வழிகள்

Bro. Edwin Sohar - Oman

 

வேதம் சொல்லுகிறது, ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதாவது யோவான் 6:63 [ முப ]

ஆவிக்குரிய வழிகள்:

1.தேவனுடைய போதகத்தை மறவாதே [ நீதி 3:1 ]

2.கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக [ நீதி 3:3 ]

3.சுயபுத்தியின் மேல் சாயாமல் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து [ நீதி 3:5 ]

4.தீமையை விட்டு விலகு [ நீதி 3:7 ]

5.கர்த்தரை கனம் பண்ணு [ நீதி 3:9 ]

6.கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே [ நீதி 3:1 ]

முன்னுரை:

இன்றைய நாட்களில் நாம் கிறிஸ்தவ உலகத்தில் பார்க்கிற ஒரு காரியம் எந்த ஒரு சபைகளிலும் ஆவிக்குரிய முன்னேற்றத்தை நம்மால் பார்க்கவே முடியவில்லை இதற்குக் காரணம் என்னவென்றால் அவர்கள் தங்கள் விசுவாசிகளை காத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் வழிகள் எல்லாம் அவர்களுடைய மாமிசத்தைச் சார்ந்தே இருக்கிறது இவர்கள் பரிசுத்த ஆவியானவருக்கு இடம் கொடுப்பதே இல்லை இதனால் விசுவாசிகள் எந்த ஒரு பெலனும் இல்லாமல் சீக்கிரமாகவே சோர்ந்து போகிறார்கள். இதனால் சபை போதகர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் தோல்வியிலே முடிகிறது. வேதமும் இத்தகைய காரியத்தையே சொல்லுகிறது எப்படியென்றால்,

மாமிசத்தின் படி நடக்கிறவர்கள் மாமிசத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள் ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள் என்று ரோமர் 8:5 ல் நாம் வாசிக்கிறோம். இதனால் என்ன நடக்கிறது என்று வேதம் சொல்லும் அறிவுரையை பின்வருமாறு பார்க்கலாம்

மாமிசத்தின்படி நடக்கிறவர்களின் வழிகள் மரணத்திற்கு கொண்டு செல்கிறது என்றும்

ஆவியின்படி நடக்கிறவர்களின் வழிகள் ஜீவனும் சமாதானமுமுள்ள இடமாகிய பரலோகத்திற்கு கொண்டு செல்கிறது என்றும் நாம் ரோமர் 8:6ல் பார்க்கிறோம்.

ஆகவே நாம் பரலோகத்திற்கு செல்ல வேண்டுமானால் நம்முடைய வாழ்க்கை ஆவிக்குரிய வழிகளில் நடக்க வேண்டும். அப்பொழுது மாத்திரமே நாம் சோர்வில்லாமல் பயணம் செய்ய முடியும். இத்தகைய வழிகளை நாம் எப்படி அறியலாம் என்றால் வேதத்தை நன்றாக படித்து அதின்படி யாரெல்லாம் வாழ்க்கிறார்களோ அவர்கள் மாத்திரமே இந்த இரகசிய வழிகளை அறிந்து கொள்ள முடிகிறது.

இத்தகைய வழிகளையே நான் பரிசுத்த ஆவியானவரின் உதவி கொண்டு பின்வருமாறு விளக்க விரும்புகிறேன்.

1.  முதல் ஆவிக்குரிய வழி: தேவனுடைய போதகத்தை மறவாதே [ நீதி 3:1]

தேவனுடைய போதகம் அதாவது அவருடைய வார்த்தை யாரிடம் எல்லாம் இருக்கிறதோ அவர்களுக்கு கிடைக்கும் பாக்கியங்கள் என்னவென்றால்,

. நீடித்த நாட்கள்

. தீர்க்காயுசு

. சமாதானம் இவைகள் எல்லாம் வருகிறது என்று வேதம் சொல்லாமல், மாறாக பெருகுகிறது என்று நீதி 3:2ல் சுட்டிக் காட்டப்படுகிறது.

இத்தகைய காரியத்தை நாம் தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் வாழ்க்கையில் அறிந்து கொள்ள முடிகிறது. எப்படியென்றால் வேதம் சொல்லுகிறது அவருடைய 120 வயது வரை அந்த மனுஷனுடைய பெலன் குறிகிப் போக வில்லை ஏனென்றால் அவருடைய வாழ்க்கையில் புதைந்து இருந்த தேவனுடைய வார்த்தையே இந்த பெலத்தின் இரகசியம் என்று சொன்னால் அது மிகையாகாது ஆகவேதான் மோசேயினால் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்து காட்ட முடிந்தது. இத்தகைய இரகசியத்தை நாம் யாத், எண்ணாகமம், உபாகமம் புஸ்தகத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இதன்பிறகு இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்தி செல்வதற்காக அழைக்கப்பட்ட யோசுவாவுடன் தேவன் என்ன சொல்லுகிறார், மோசேயைப் போல ஜெயமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டுமானால் என்னுடைய வார்த்தைகளை எப்பொழுதும் உன்னுடைய வாயிலே வைத்துக் கொள்ள வேண்டும், அதுமட்டுமல்லாமல் அந்த வார்த்தையை இரவும் பகலும் தியானித்துக் கொண்டிருப்பாயாக, அப்பொழுதே இந்த ஜெயம் உனக்கு கிடைக்கும் என்றார் [ யோசுவா 1:8 ]

நாம் இந்த அழிந்து போகிற உலகத்தில் ஆவிக்குரிய ஜீவனோடு வாழவேண்டுமானால் நாம் தேவன் நமக்கு கொடுத்திருக்கிற போதகத்தை நம்முடைய இருதயத்தில் பத்திரமாகக் காத்துக் கொள்ள வேண்டும் [ நீதி 4:4 ]

வேதம் சொல்லுகிறது, நீதிமானின் தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை, சங்கீதம் 37:31

பாருங்கள் நீதிமானின் சமாதானத்திற்குக் காரணம் அவனுடைய இருதயத்தில் இருந்த தேவனுடைய போதகம் அடங்கிய வேதமே ஆகும் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.

2.  இரண்டாவது ஆவிக்குரிய வழி: கிருபையும் சத்தியமும் உன்னை விட்டு விலகாதிருப்பதாக [ நீதி 3:3 ]

இந்த இரண்டு விதமான ஆயுதம் யாரிடம் எல்லாம் காணப்படுகிறதோ அவர்களுக்கெல்லாம்

1.தேவனுடைய பார்வையில் தயவு கிடைக்கிறது

2.மனுஷருடைய பார்வையிலும் தயவு கிடைக்கிறது என்று நாம் அறிகிறோம் [ நீதி 3:4 ]

ஆதாம் செய்த பாவத்தினிமித்தம் ஏற்பட்ட சாபம் அவருக்குப் பின்வந்த ஒவ்வொரு சந்ததியையும் இந்த சாபமாகிய வாழ்க்கைக்குள் அடக்கிப்போட்டது என்பதையும் இதற்கு நாமும் விதிவிலக்கு அல்ல என்றும் அறிந்து கொண்டோம். இதனால் ஜனங்கள் வெளிச்சத்தைப் பார்க்க முடியாத இருளான தேசத்திற்குள் அடிமைகளாக வாழ்ந்து வந்தனர், அதுமட்டுமல்லாமல் இந்த பாவத்தின் நிமித்தம் நமக்கும் பிதாவாகிய தேவனுக்கும் இடையில் ஒரு பெரிய தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டது என்பதும் தெரிய வருகிறது.

ஆனால் இயேசுவாகிய கிருபை இந்த உலகத்தில் வந்த போது நாம் அனைவரும் இவருடைய இரத்தத்தின் மூலம் சுதந்தரமாக அதாவது பாவ வாழ்க்கையில் இருந்து விடுதலையாக்கப்பட்டோம் என்று அறிகிறோம் அதுமட்டுமல்லாமல் இந்த கிருபையின் மூலம் உண்டான சத்தியத்தை யாரெல்லாம் ஏற்றுக் கொண்டு அதை தங்களுடைய வாழ்க்கையில் பின்பற்றினார்களோ அவர்களெல்லாரும் பிதாவின் பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டோம் என்பதையும் நாம் உணர்ந்து கொள்கிறோம் [ யோவான் 1:12 ]

சிலர் தேவனுடைய கிருபையை அதாவது இரக்கத்தை ஏற்றுக் கொள்வார்கள் ஆனால் அவரால் கொடுக்கப்பட்ட சத்தியத்தை ஏற்றுக் கொள்வதில்லை இப்படிப்பட்ட கிறிஸ்தவ வாழ்க்கையானது செல்லாததாக எண்ணப்படுகிறது. எப்படி ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கமும் அவசியமோ இதேபோலத்தான் தேவனாகிய இயேசுவின் கிருபையும் சத்தியமும் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். ஏனென்றால் வேதம் சொல்லுகிறது,

கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும் சங்கீதம் 85:10

3.  மூன்றாவது ஆவிக்குரிய வழி: சுயபுத்தியின் மேல் சாயாமல் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து [ நீதி 3:5 ]

கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவர்களுக்கு வேதம் தரும் பாக்கியம் என்ன?

இப்படிப்பட்ட மனுஷனுடைய வழி செவ்வைப்படுத்தப்படுகிறது [ நீதி 3:6 ]

கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் [ நீதி 34:8 ]

இன்று அனேகர், இப்படியாக தேவனாகிய இயேசு மூலமாய் வருகிற ஆசீர்வாதத்தை பெறாமல் மாறாக தங்களுடைய சுயபுத்தியினால் சிந்தித்து பலவிதமான முயற்சிகளை தங்களுடைய வாழ்க்கையின் வழியாக மாற்றி அதில் நடந்து செல்வதைப் பார்க்க முடிகிறது. எதற்காக இவர்கள் இப்படி நடக்க வேண்டும் சீக்கிரமாய் இந்த உலகத்தில் பெரிய செல்வந்தனாக மாறி விட வேண்டும் என்பதற்காகவே, இத்தகைய இலக்கை இவர்களால் எட்ட முடிகிறதா? என்று பார்ப்பீர்களானால்

1.சிலர் இந்த இலக்கை எட்டுவதோடு சரி அதை அனுபவிப்பதற்கு இவர்களுடைய மரணம் அனுமதிப்பதில்லை [ அதாவது சீக்கிரமாக இந்த உலகத்தை விட்டு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள் ]

2.சிலர் எல்லாம் சம்பாதித்து வைத்திருப்பார்கள் ஆனால் இத்தகைய செல்வத்தை அனுபவிப்பதற்கு இவர்களுடைய நோய் அனுமதிப்பதில்லை

3.சிலர் இத்தகைய இலக்கை எட்ட முடியாமல் விரக்தி அடைந்து பாதி வழியிலே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்

4.சிலர் இந்த இலக்கை எட்டுவதற்காக ஒரு பாவமுள்ள வாழ்க்கைக்கு தங்களை அடிமைப்படுத்திக் கொள்கிறார்கள் என்று பார்க்கிறோம், இப்படிப்பட்ட சிந்தையுள்ளவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது, மனுஷனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு அதின் முடிவோ மரண வழிகள் என்று சுயபுத்தியை நாடுகிறவர்களின் முடிவு எப்படி முடிகிறது என்று நாம் நீதி 16:25 ல் வாசிக்க முடிகிறது

4.  நான்காவது ஆவிக்குரிய வழி: தீமையை விட்டு விலகு [ நீதி 3:7 ]

தீமையை விட்டு விலகி வாழ்கிறவர்களுக்கு கிடைக்கும் பாக்கியங்கள் என்ன?

1.நம்முடைய நாபிக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது

2.நம்முடைய எலும்புகளுக்கு ஊனுமாகிறது என்று நீதி 3:8ல் பார்க்கிறோம் இன்றைய ஜனங்களின் பெலவீனத்திற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் இந்த தீமையே ஆகும் மேலும் வேதம் சொல்லுகிறது நன்மைக்குத் தீமை செய்கிறவன் எவனோ அவன் வீட்டை விட்டுத் தீமை நீங்காது [ நீதி 17:13 ] ஒரு காரியத்தை நாம் நன்றாக புரிந்து கொள்ளமுடிகிறது. அதுஎன்னவென்றால் நம்முடைய வீட்டில் காணப்படுகிற தரித்திரத்திற்கும் சமாதானமின்மைக்கும் காரணம் இந்த தீமையே என்பதை மறக்க வேண்டாம்.

ஆதியாகமம் 4 ஆம் அதிகாரத்தில் கர்த்தர் காயீனின் நன்மைக்குத் தடையாக இருந்த தீமையை சுட்டிக் காட்டினதை நம்மால் பார்க்க முடிகிறது ஆனால் காயீனோ அதை அசட்டை செய்தான் இதனிமித்தம் தீமையாகிய பாவம் அவன் வீட்டிற்குள் நுழைந்தது. தேவனுடைய சந்ததியில் இடம் பெற வேண்டிய காயீனோ சாப சந்ததியில் தன்னை சேர்த்துக் கொண்டதை நாம் வேதத்தில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

இப்படிப்பட்ட தீமையை நம்முடைய வாழ்க்கையில் இருந்து விலக்க வேண்டுமானால் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லும் அறிவுரையை பின்வருமாறு பார்க்கலாம்

1.இயேசு கிறிஸ்து சொல்லுகிறார், தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம் ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு

2.உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக் கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டு விடு

3.ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம்பண்ணினால் அவனோடு இரண்டு மைல் தூரம் போ என்றார் [ மத்தேயு 5:39,40,41 ]

5.  ஐந்தாவது ஆவிக்குரிய வழி: கர்த்தரை கனம்பண்ணு [ நீதி 3:9 ]

நம்முடைய ஐசுவரியம் பெருக வேண்டுமானால் அல்லது ஆசீவாதங்கள் வேண்டும் என்று விரும்புகிறவர்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், உன் பொருளாலும் உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரை கனம் பண்ணு, அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும் உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும் என்று வேதம் நமக்கு நீதி 3:9,10 ல் அழகாக பரிபூரணமான செல்வம் எப்படி வருகிறது என்று விளக்குகிறது. இதற்கு அர்த்தம் என்னவென்றால்

1.நம்முடைய வாழ்க்கையில் காணப்படுகிற முதன்மையானவைகளையும் சிறப்பானவைகளையும் காணிக்கையாக கொடுக்க வேண்டும் [ இத்தகைய தகவல்களை நாம் ஆகமத்தை வாசிக்கும் போது அறிந்து கொள்ள முடிகிறது ]

2.தசமபாகத்தை மாத்திரம் பிரதானமாக கருதாமல் ஏழைகளுக்கும் தரித்திரருக்கும் நம்முடைய செல்வங்களை பங்கிட்டு கொடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு ஆண்டவரே நான் தசமபாகம் ஒழுங்காக கொடுத்தேன் ஆலயத்திற்கு ஒழுங்காக செல்கிறேன் மற்றும் ஜெபம் உபவாசம் பண்ணுகிறேன் என்று சொன்னால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுவார் நீங்கள் எல்லாரும் இடதுபக்கத்திற்கு செல்லுங்கள் என்பார் அதாவது என்னுடைய ராஜ்ஜியத்திற்கு தகுதியில்லாதவர்கள் என்பார்.

ஒரு காரியத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் வேதம் சொல்லுகிறது, தேவன் பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறார் [ ஓசியா 6:6 ] என்பதை மறக்க வேண்டாம்.

பாருங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து காணிக்கை பெட்டியில் காணிக்கைப் போட்டவர்களை குறித்து சொன்ன காரியம் என்னவென்றால் அனேகர் தங்களுக்கு இருக்கிறவைகளில் இருந்து எடுத்துப் போடுகிறார்கள் ஆனால் இந்த ஏழை பெண்ணோ தனக்கு இருந்த எல்லாவற்றையும் கொடுத்து விட்டாள் என்றார். ஆகவே கர்த்தரை கனம்னண்ணுதல் என்பது தன்னை முழுமையாக தேவனுக்கு ஒப்புக் கொடுப்பது ஆகும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மைப் பார்த்து சொல்லுகிற அறிவுரை என்னவென்றால், என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன் என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கன ஈனப்படுவார்கள் [ 1சாமு 2:30 ]

6.  ஆறாவது ஆவிக்குரிய வழி: கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே [ நீதி 3:11 ]

வேதம் சொல்லுகிறது,

கர்த்தர் யாரை அதிகமாக சிட்சிக்கிறார் என்றால் யாரிடத்தில் அதிக அன்புகூருகிறாரோ அவனையே என்பதை மறந்து விடாதீர்கள் [ நீதி 3:11,12]                                                                   எதற்காக இந்த சிட்சை என்றால்,                          1.பிரம்பை கையாளாதவன் தன் மகனைப் பகைக்கிறான் இப்படியாக சிட்சிக்கும் போது மாத்திரமே அவன் துன்மார்க்கனின் பிள்ளையாக மாறிவிடாமல் தேவனுடைய பிள்ளையாக தன்னுடைய முதிர்வயதுவரைக்கும் இருப்பான்

2.இன்னும் அதிகமாக அந்த மனுஷனைப் பரிசுத்தப்படுத்தும்படியாக ஆகவேதான் வேதம் சொல்லுகிறது பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்

3.தம்முடைய பிள்ளை எப்படிப்பட்டவன் என்பதை தம்முடைய சத்துருக்களுக்கு முன்பாக நிரூபிக்கும்படியாக

பாருங்கள் யோபின் சரித்திரம் எல்லாருக்கும் தெரிந்ததே உத்தமனாக இருந்த போதிலும் பிசாசானவன் தேவனோடு விட்ட சவாலின் நிமித்தமும் யோபு தம்முடைய பிள்ளை என்பதை நிரூபிக்கும்படியாகவும் தேவன் சிட்சையை அனுமதித்தார். ஆனால் யோபுடைய சினேகிதர்கள் தேவனுடைய சிட்சையை அற்பமாக எண்ணினார்கள், ஆனால் தாசனாகிய யோபுவோ தேவன் அனுமதித்த சிட்சையை ஏற்றுக் கொண்டு அமைதியாக இருந்தார். தன்னுடைய மனைவியை கூட அவன் ஒரு பொருட்டாக எண்ணாமல் இந்த சிட்சையை அனுபவிப்பதை தம்முடைய பாக்கியமாக கருதினார் இதனால் அவர் மிகவும் புடமிடப்பட்டு பொன்னைக் காட்டிலும் விலையுயர்ந்த ஒரு வஸ்துவாக மாற்றப்பட்டதையும் யோபு சரித்திரத்தின் கடைசி அதிகாரத்தை வாசிக்கும் போது அறிந்து கொள்ள முடிகிறது.

எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே அழிந்து போகிற ஆசீர்வாதத்திற்காக நம்முடைய நேரத்தை வீணடித்தது போதும் அழியாத செல்வங்களை பெற வேண்டும் என்கிற மானப்பான்மையுடம் வாழ கற்றுக் கொள்வோம் அப்பொழுது மாத்திரமே நம்முடைய பேர் ஜீவ புஸ்தகத்தில் எழுதி முத்திரைப் போடப்படும் இப்படிப்பட்ட அழியாத கூடாரத்தை நெருங்குவதற்கு நமக்கு இயேசு தந்த இந்த ஆவிக்குரிய வழிகள் தான் அவசியம் என்பதை அறிந்து இதுவரை நடந்து கொண்டிருந்த மாமிசமான வழிகளை விட்டு ஆவிக்குரிய வழியில் நடக்க ஆரம்பிப்போம்

நான் நிச்சயமாக சொல்லமுடியும் யாரெல்லாம் இந்த அவிக்குரிய வழிகளில் நடக்கிறார்களோ அவர்களுடைய பாதைகள் நெய்யாய் பொழியும் என்பதில் சிறுதும் சந்தேகமேயில்லை.

தேவன் தாமே ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக, ஆமென்.