Tamil Christian Website

Tamil Christian Website

Posted On : 21/05/2016

ஆவிக்குரிய பலிகள்

-         சகோதரி. அனு ஃபெஸ்லின்

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. பழைய ஏற்பாட்டின் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் மிருகங்களின் இரத்தத்தை தேவனுக்கு பலியாக செலுத்தினர். ஆனால் காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யவில்லை. ஆகையால் தேவன் தம்முடைய சொந்த குமாரானாகிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய பாவத்தை போக்கும் கிருபாதார பலியாக இவ்வுலகத்திற்கு அனுப்பினார். ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்து சகல உலகத்தின் பாவத்திற்காக தம்முடைய விலையேறபெற்ற இரத்தத்தை சிந்தி சிலுவையில் மரித்து பாவத்தினின்று நம்மை முற்றிலும் விடுதலையாக்கி நமக்கு நித்திய மீட்பை பெற்று தந்தார். இப்படியாக அவருடைய சொந்த இரத்தத்தினால் மீட்கப்பட்டவர்களாகிய நாம் இனி இரத்தத்தினால் ஆன பலி செலுத்தத் தேவையில்லாதிருந்தாலும் அதற்க்கு ஒப்பனையான ஆவிக்குரிய பலிகளை செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம். வேதம் கூறுகிறது ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும் படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டு வருகிறீர்கள்[1பேதுரு:2:5]. தேவன் பிரியப்படுகிற ஆவிக்குரிய பலிகள் சிலவற்றைக்  குறித்து நாம் வேதத்தின் அடிப்படையில் தியானிக்கலாம்.

1.              ஜீவ பலி

சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை [ரோமர்:12:1].

 

தேவன் தம்முடைய சொந்த இரத்தத்தை சிந்தி நம்மை மீட்டுக்கொண்டதின் நோக்கம் நாம் அவருக்கேற்ற பரிசுத்தவான்களாய் மாறி தேவனுடையவர்களாய் வாழ்வதற்கு [லேவியராகமம்:17:11;21:26]. நம்முடைய ஆத்துமாவிற்காக பாவநிவிர்த்தி செய்வது இயேசுகிறிஸ்துவின் இரத்தமே. அனுதின வாழ்க்கையில் அறிந்தும் அறியாமலும் நாம் பாவம் செய்யும் போது  நம்முடைய பாவத்தை மறைக்காமல் தேவசமூகத்தில் அறிக்கை செய்து விட்டுவிட்டு தேவனுக்கு கீழ்படிந்து பரிசுத்தமான வாழ்க்கை வாழ  ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும். ஜீவ பலி என்பது பாவத்திற்கு செத்து நீதிக்கு பிழைக்கிற வாழ்க்கை. சவுல் ராஜா தேவனுக்கு கீழ்படியாமல்  ஆடுகளை பலி செலுத்தும் போது தேவன் சாமுவேல் தீர்க்கத்தரிசியின்  வாயிலாக கூறுகிறார் பலியைப் பார்க்கிலும் கீழ்படிதலும் ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்[1சாமுவேல்:15:22]. நாம் பாவத்திற்கு அடிமைப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்போமானால் இன்றைக்கே  நம்முடைய முழு சரீரத்தையும் தேவனுக்கு உகந்த ஜீவபலியாய் பரிசுத்தமாய் வாழ ஒப்புக்கொடுப்போம். பவுல் கூறுகிறார் கிறிஸ்து எனக்கு ஜீவன்; சாவு எனக்கு ஆதாயம். இனி ஜீவிப்பது நான் அல்ல இயேசுவே என்னில் ஜீவிக்கிறார். எவ்வளவு ஆழமான ஆவிக்குரிய அனுபவம் பாருங்கள் [பிலிப்பியர்:1:21]. நாமும் பல நேரங்களில் முயற்சிக்கிறோம் ஆனால் உலகத்தின் பிடியில் விழுந்து தோற்று போய்விடுகிறோம். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நம்மிலுள்ள நான் சாக வேண்டும். நாம் உலகத்திற்காய் ஓடுவதை விட்டு எனது எல்லாம் இயேசுவுக்கே என்று சொல்லி தேவனுக்காய் ஓடுவோம். பவுலைப் போல கிறிஸ்துவின் அச்சடையாளங்களை நம்முடைய சரீரத்தில் தரித்தவர்களாய் உயிருள்ள திருப்பலியாய் நம்மை தேவனுக்கு ஒப்புக்கொடுப்போம்.

 

2.              ஸ்தோத்திர பலி

 

ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான் [சங்கீதம்:50:23].

நம்முடைய ஸ்தோத்திர பலிகளின் மேல் தேவன் மிகவும் பிரியமாய் இருக்கிறார். வேதம் கூறுகிறது அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்[எபிரெயர்:13:15]. தாவீது ராஜா கூறுகிறார் சுவாசமுள்ள யாவும் அவரை துதிப்பதாக. தேவனை இரவும் பகலும் எந்நேரமும் தன்  பாட்டினால் துதித்த தாவீது ராஜா கூறுகிறார் தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன். கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப் பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும் [சங்கீதம்:69:30-31]. கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே நம்முடைய சந்தோஷமான சூழ்நிலைகளில் மட்டுமல்ல பாடுகளிலும் வேதனைகளிலும் எல்லா நேரங்களிலும் எப்போதும் தாவீது ராஜாவை போல அவரை துதிக்கும் துதி ஸ்தோத்திரங்களினால் நம் உதடுகள் நிரம்பிவழிய  வேண்டும். வெளிபடுத்தின விசேஷம் நான்காம் அதிகாரத்தில் நாம் பார்க்கும் போது பரலோகத்தில் நான்கு ஜீவன்களும் இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டு சதாகாலமும் உயிரோடிருக்கிறவருக்கு மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்துவதை காணலாம். பவுலடியார் கூறுகிறார் நாம் ஒன்றுக்கும் கவலைபடாமல் நம் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்கு தெரியப்படுத்துவோம் அப்பொழுது எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் நம் இருதயங்களையும் சிந்தைகளையும் காத்துக்கொள்ளும்.

 

3.              காணிக்கை பலி

நாம் தேவனுக்கு கொடுக்கும் காணிக்கை சுகந்தவாசனையும் தேவனுக்குப் பிரியமான சுகந்த பலியுமாக இருக்கிறது என்று பவுல் கூறுகிறார்[பிலிப்பியர்:4:18].

பழைய ஏற்பாட்டில் முதலாவது தேவனுக்கு காணிக்கை கொடுத்தவர்கள்  காயீன் ஆபேல். காயீன் தன் நிலத்தின் கனிகளை காணிக்கையாக கொண்டு வந்தான். ஆபேல் தன் மந்தையின் தலையீற்றுகளில் கொழுமையானவைகளில் சிலவற்றைக் கொண்டுவந்தான். கர்த்தர் ஆபேலின் காணிக்கையை அங்கீகரித்தார் ஆனால் காயீனின் காணிக்கையை நிராகரித்தார். ஏனென்றால்  வேதம் கூறுகிறது ஆபேலின் பலி நீதியுள்ளதாயிருந்தது. விசுவாசத்தினாலே ஆபேல் காயீனைப் பார்க்கிலும் மேன்மையான பலியை செலுத்தினான். அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக்குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; ஆனால் காயீனின் கிரியைகள் பொல்லதவைகளாய் இருந்ததால் தேவன் அங்கீகரிக்கவில்லை[1யோவான்:3:12; எபிரெயர்:11:4].  

புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்[லூக்கா:21:3]. அன்று ஏழை விதவையின் காணிக்கையை பாராட்டியவர் இன்றும் நாம் காணிக்கை கொடுக்கும் போது நம் இருதயத்தை பார்க்கிறார். இயேசு கிறிஸ்து மலை பிரசங்கத்தில் நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. வேதம் கூறுகிறது உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாய் இருக்கிறார்[1கொரிந்தியர்:9:7]. நாமும் நம்முடைய காணிக்கைகளை தேவன் சுகந்த வாசனையான பிரியமான பலியாக ஏற்றுக்கொள்ள  பொல்லாத கிரியைகளை விட்டு நீதியாய் நியாயமாய் வாழ்ந்து, நாம் பகைக்கிறவர்களிடம்  ஒப்புரவாகி, தேவன் நமக்கு கொடுத்த ஆசீர்வாதத்தில் மேன்மையானவற்றை உற்சாகமாய் தேவனுக்கு கொடுப்போம்.

4.              தானதர்ம பலி

அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்[எபிரெயர்:13:16].

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் நன்மை செய்கிறவராக சுற்றித்திரிந்தார். இத்தாலிய பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்ற மனிதன் தேவபக்தியுள்ளவனும், தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்.ஒரு நாள் தேவதூதன் அவனிடத்தில் தோன்றி உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது என்றான்[அப்போஸ்தலர்:10:1-4].

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நம்முடைய ஜெபங்களைப் போலவே நாம் செய்யும் தான தருமங்களும் தேவனுடைய சந்நிதியில் எட்டுகிறது. வேதம் கூறுகிறது  நன்மை செய்ய உனக்கு  திராணியிருக்கும் போது அதை செய்யத்தக்கவர்களுக்கு செய்யாமலிராதே . ஏனென்றால் வேதம் கூறுகிறது கர்த்தருடைய வருகையில் நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்[யோவான்:5:29]. இயேசு கிறிஸ்து கூறுகிறார்  நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக.அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும்[லூக்கா:14:12-14]. பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்று இயேசுகிறிஸ்து கூறினார். ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான். தேவன் நமக்கு கொடுத்த கொடுத்த ஆசீர்வாதங்களில் ஒரு பகுதியை ஊழியம் செய்கிற பரிசுத்தவான்களுக்கும், ஏழைகளுக்கும், திக்கற்றவர்களுக்கும் நாம் உதாரத்துவமாய் கொடுத்து நன்மை செய்வோம். பிரசங்கி கூறுகிறார்  மகிழ்ச்சியாயிருப்பதும் உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமேயல்லாமல் வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். நன்மை செய்வதில் சோர்ந்து போகாமலிருப்போம்.

5.              புறஜாதியாராகிய பலி

பவுல் கூறுகிறார் புறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு, நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து.[ரோமர் :15:15]. நம்மை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் நாம் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறோம்[1பேதுரு:2:9].எனவே புறஜாதியாருக்கு சுவிசேஷம் அறிவிப்பது நம்முடைய கடமையாயிருக்கிறது. பவுல் கூறுகிறார் நாம் சகல மனுஷராலும் அறிந்தும் வாசிக்கப்பட்டும் இருக்கிற கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறோம். எனவே நாம் ஒவ்வொருவரும் தேவனை அறியாதவர்கள் மத்தியில் நம்முடைய சாட்சியினால் தேவனை பிரதிபலிப்போம். இரட்சிப்பின் நற்செய்தியை கூறுவோம். தேவன் தெரிந்துகொண்ட புதுஉடன்படிக்கையின் ஊழியக்காரராகிய நாம் ஆத்துமா ஆதாயம் செய்ய அழைக்கப்பட்டிருகிறோம். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நமக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் நாம் தேவனுக்காக ஆதாயம் பண்ணின ஆத்துமாக்கள் [1தெசலோனிக்கேயர்:19-20].

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே பாவத்தினாலும் அக்கிரமத்தினாலும் மரித்து போயிருந்த நமக்கு ஜீவனை அளித்து அவருடைய சொந்த பிள்ளைகளாகவும் சுதந்தரராகவும் தெரிந்துக்கொண்டார். நாம் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டு வருகிறோம். எனவே நாம் ஒவ்வொரு நாளும் தேவன் விரும்புகிற  ஆவிக்குரிய பலிகளை செலுத்தி தேவனை ஆராதிக்க கடமைப்பட்டிருக்கிறோம். வேதம் கூறுகிறது தேவன் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க வரும் போது பலியினால் என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை கூட்டுங்கள் என்பார்[சங்கீதம்:50:4,5]. நாமும் ஆவிக்குரிய பலிகளினால் தேவனோடு உடன்படிக்கை செய்து அவருடைய வருகையில் அவரை சந்திக்கவும் அவர் சமூகத்தில் கறைதிரையற்றவர்களாய் பரிசுத்தத்தோடும் சமாதானத்தோடும் காணப்படும்படி  ஆயத்தமாவோம். தேவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து நித்திய வழியில் நடத்துவாராக. ஆமென்.