Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 13/02/2016

ஆவிக்குரிய ஜெபம்

 

எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். எபேசியர் 06:18

 

  ஆவியோடு விண்ணப்பம் பண்ணுதல்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தேவன் ஆவியாயிருக்கிறார் அவரை தொழுது கொள்கிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரை தொழுது கொள்ள வேண்டும் என்றார் [ யோவான் 4:24 ]

அதே போல அப்.பவுல், என் பேச்சும் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனிப்புள்ளதாயிராமல் ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்பட்டதாயிருக்கிறது என்று 1கொரி 2:5 ல் குறிப்பிட்டுள்ளார்.

இதே காரியத்தை, அப்.பேதுரு, 1பேதுரு 1:12ல் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டவர்களாய் சுவிஷேம் பிரசங்கிக்கப்பட வேண்டும், மேலும் 2பேதுரு 1:21ல் தீர்க்கதரிசினங்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசப்பட வேண்டும் என்பதை தெளிவுப்படுத்துவதை நாம் வாசித்து தெரிந்து கொள்ள முடிகிறது.

அடுத்ததாக பரிசுத்த ஆவியானவரே சகலத்தையும் போதிக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. எனவே மேல் வீட்டறையில் பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்பட்டதற்கு பிறகு கர்த்தருடைய அப்போஸ்தலர்கள் எல்லா காரியங்களையும் பரிசுத்த ஆவியானவரின் ஆலோசனையின் படியாகவும் அவர் வழிநடத்துதலின் படியாகவும் செய்தார்கள்.

எனவே நம்முடைய ஜெபங்களும் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குட்பட்டு இருக்குமானால் அது மிகுந்த பெலன் கொடுக்கும். இத்தகைய பெலனை நன்றாக அறிந்த பவுல் எபேசியர் 6:18ல் ஆவியினால் ஜெபம் பண்ணும்படி எபேசியர் பட்டணத்துக்கு அறிவுரை சொல்லுகிறார்.

இன்றைய சூழ்நிலைகளில் நம்முடைய ஜெபமும் இப்படியாகத்தான் இருக்க வேண்டும் அப்பொழுதே நமக்கு ஜெயம் கிடைக்கும்

1. ஆவியானவர் எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று கற்று தருகிறார் [ரோமர் 8:26,28]

அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்யகிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னவென்று அறியாமலிருக்கிறப்படியால் ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடே நமக்காக வேண்டுதல் செய்கிறார்.

ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால் இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.

இங்கு பவுல் ஒருவிதமான பெலவீனத்தை சுட்டி காண்பிக்கிறார், அது சரீர பெலவீனமல்ல, அப்படியென்றால் அது மனதிலும், புரிந்து கொள்ளுதலிலும் உள்ள பெலவீனம் அதாவது பல காரியங்களுக்காக நாம் ஜெபிக்கும் போது எதற்காக ஜெபிக்க வேண்டும், எப்படி ஜெபிக்க வேண்டும் என்று அறியாதிருக்கிறோம். சில வேளைகளில் எதற்காக ஜெபிக்க வேண்டும் என்பதை தெரிந்திருந்தாலும், எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதை அறியாதிருக்கிறோம். இதை தான் பவுல் பெலவீனம் என்கிறார். இத்தகைய பெலவீனமான நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் எப்படி ஜெபிக்க வேண்டும் எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று கற்று தருகிறார்.

2.தேவனுடைய சித்தத்தின்படி ஜெபித்தல்[ரோமர் 12:2]

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்

எபேசியர் 4:23

உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி

நாம் ஜெபிக்கும் போது நம்முடைய மனது புதுபிக்கப்படுகிறது அதாவது பரிசுத்த ஆவியானவர் நம்மை ஆளுகை செய்யும் போது நம் மனது புதுபிக்கப்பட்டு தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்கிறோம் அடுத்ததாக தேவனுடைய சித்தத்தின்படி ஜெபிப்பது எப்படி என்பதையும் அறிந்து கொள்கிறோம். இப்படி ஜெபிக்கிறவர்கள் மாத்திரமே வெளிப்பாடுகளையும், தேவ சித்தத்தையும் அறிந்து கொண்டு ஜெபித்து வெற்றி பெறுகிறார்கள்.

ஒருமுறை ஒரு ஊழியக்காரர் யாராலும் குணப்படுத்த முடியாத நோயினால் அவதிப்பட்ட ஒரு தொழிலதிபருக்காக ஜெபிக்கும் போது ஆவியினார் அந்த ஊழியக்காரரிடம் அந்த மனுஷருக்காக ஜெபிக்க வேண்டாம் என்றார் ஏனென்றால் அவர் செய்த கொடிய பாவத்தினிமித்தம் அவர் மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பு கட்டளையிடப்பட்டிருக்கிறது என்றார்

அடுத்ததாக, தமிழ் நாட்டிலுள்ள ஒரு பிரபல ஊழியக்காரரிடம் ஒரு வாலிபனை கொண்டு வந்தார்கள். அவனோடு வந்தவர்கள் அந்த ஊழியக்காரரிடம் ஐயா இந்த வாலிபன் பொது இடத்தில் உங்களை தூசித்ததினால் திடீரென்று பேச முடியாமல் ஊமையாகி போனான் என்றனர். அந்த ஊழியக்காரரும் அந்த வாலிபனுக்காக ஜெபிக்க முற்படும் போது ஆவியானவர் அந்த ஊழியக்காரரிடம் கண்டிப்புடன் இவனுக்காக ஜெபிக்காதே என்று எச்சரித்தார்.

உடனே அந்த ஊழியக்காரர் அந்த வாலிபனிடம் தம்பி நான் உன்னை மன்னித்து விட்டேன். ஆனால் நீ போய் ஆண்டவரிடம் மன்னிப்பு கேள் என்று சொல்லி அனுப்பி விட்டார்.

இன்றைக்கு பலருடைய வாழ்க்கையில் துன்பங்கள் அனுமதிக்கப்படுவதற்கு காரணம் அவர்கள் செய்யும் துணிகரமான பாவங்களின் விளைவுகளே ஆகும். இதை அறிந்து கொள்ளாமல் அங்கு செல்லும் ஊழியக்காரர்கள் மற்றும் விசுவாசிகள் இயேசுவின் நாமத்தை கொண்டு யுத்தம் பண்ணி ஜெபிக்க ஆரம்பிக்கின்றனர். தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்காக நீங்கள் யுத்தம் பண்ணி ஜெபிக்கும் போது அதன் விளைவுகள் உங்களை பாதிக்கும். இப்படிப்பட்ட நபருக்காக ஒருவேளை ஆவியானவர் தேவனிடம் மன்றாடி இரக்கத்திற்காக ஜெபிக்கத் தூண்டுவார். மற்றும் பில்லி சூனிய கட்டுகளினாலும் பிசாசுகளினாலும் கட்டப்பட்ட ஒருவருக்காக நீங்கள் யுத்தம் பண்ணி ஜெபிக்கும்படி ஆவியானவர் ஏவுவார். மேலும் தேசத்தின் மக்கள் செய்த பாவங்களுக்காக கண்ணீரோடு மன்றாடி ஜெபிக்கும்படி தூண்டுவார்.

3. தேவ வல்லமையோடு ஜெபித்தல்

விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். விசுவாசத்தில் உறுதியாய் இருந்து பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் என்று வேதம் சொல்லுகிறது. விசுவாசம் என்பது பரிசுத்த ஆவியானவரால் அருளப்படுகிற ஆவியின் வரம் [ 1கொரி 12 ], விசுவாசம் என்பது பரிசுத்த ஆவியானவரால் உருவாக்கப்படுகிற ஆவியின் கனி [ கலா 5:22,23 ], ஆவியில் நிறைந்து  நாம் ஜெபிக்கும் போது பரிசுத்த ஆவியானவர் விசுவாசம் என்கிற வரத்தினால் நம்மை வர்த்திக்கப் பண்ணுகிறார். அதுமட்டுமல்லாமல் பரிசுத்த ஆவியானவரால் அருளப்படும் விசுவாசத்தைக் கொண்டு ஏறெடுக்கும் ஜெபம் நம் வாழ்க்கையில் ஒரு எழுப்புதலை ஏற்படுத்துகிறது. இத்தகைய ஜெபம் தேவன் நமக்கு கொடுத்த அதிகாரங்கள் மற்றும் ஆவிக்குரிய ஆயுதங்களை உறுதியோடு பயன்படுத்தி சத்துருவின் சகல வல்லமைகளையும் மேற்கொள்ள பெலன் அளிக்கிறது.

அதற்கு அவர் இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப் போகாது என்றார்[மாற்கு 9:29]

விடுதலையின் ஊழியத்தை செய்யும் போது அங்கு ஜெபிப்பதற்கு முன் பரிசுத்த ஆவியானவரின் ஆலோசனைகள் ரொம்ப முக்கியம், சில சமயம் அந்தகார வல்லமைகள் நிறைந்த இடத்தில் ஜெபிக்க செல்லும் போது ஆவியானவர் நம்மை உபவாசம் இருந்து தேவ வல்லமையோடு ஜெபிக்கும்படி தூண்டுவார். சில இடங்களில் ஜெபிப்பதற்காகவோ அல்லது ஊழியத்திற்காகவோ செல்லும் போது அந்த இடத்தில் ஆளுகை செய்யும் குறிப்பிட்ட பிசாசின் ஆவியின் பெயரை சொல்லி அதை விரட்டும்படியாக ஆவியானவர் ஏவுவார்.

பரிசுத்த ஆவியானவர் அனுமதி மறுக்கும் இடங்களுக்கு சென்று ஜெபிப்பது நல்லதல்ல. நம்மிடம் பரிசுத்தமில்லாமல் குறைகள் வைத்து கொண்டு அந்தகார வல்லமைகளுக்கு விரோதமாக நாம் யுத்த பண்ணி ஜெபிக்க கூடாது. பாருங்கள் யோசுவா 7:13ல் சாபத்தீட்டானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்கும் வரை நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்க கூடாது என்று கர்த்தர் சொல்லுகிறார்

நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன் கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன் என்று பவுல் சொல்லுகிறார். ஒரு தேசத்துக்காகவோ, ஒரு இடத்துக்காகவோ ஜெபிக்கும் போது ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக புள்ளி விவரங்களை சேகரித்து அதற்காக கருத்தோடு ஜெபிப்பது, அடுத்ததாக அந்த தேசத்துக்கு ஏற்பட்ட குறிப்பிட்ட காரியத்துக்காக ஜெபிக்கும் போது அந்த தேசத்தைப் பற்றிய வெளிப்பாடுகளையும் தீர்க்கதரிசனங்களை பெற்றுக் கொண்டு பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு ஆவியோடு ஜெபிக்க வேண்டும்.

4.அன்னிய பாஷையில் ஜெபித்தல்[1கொரி 14:2]

அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ ஏனெனில் அந்நியபாஷையில் பேசுகிறவன் ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும் அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே அவன் மனுஷரிடத்தில் பேசாமல் தேவனிடத்தில் பேசுகிறான்

1கொரி 14:4

சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்

இந்த இடத்தில் மூன்று முக்கிய காரியங்கள் சொல்லப்படுகிறது. நவமான பாஷையில் பேசும் போது நாம் மனிதனிடத்தில் பேசாமல் தேவனிடத்தில் பேசுகிறோம், இரண்டாவதாக நமது மனங்களில் புரிந்து கொள்ள முடியாதவாறு பேசுகிறோம், மூன்றாவதாக பக்திவிருத்தி உண்டாகும்படி நம்மை நாமே கட்டி எழுப்புகிறோம்

1கொரி 14:14

என்னத்தினாலெனில் நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால் என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி என் கருத்து பயனற்றதாயிருக்கும்

இந்த இடத்தில் நம் மனதை பரிசுத்த ஆவியானவர் பிரகாசிக்கவைப்பதில்லை ஆனால் நமக்கு ஒரு புதிய மொழியை கொடுத்து அதன் மூலம் ஜெபிக்க வைக்கிறார். இது மிகவும் வல்லமையான ஜெபம் ஆகும். இத்தகைய ஜெபம் சாத்தானின் அந்தகார வல்லமைகளை தகர்க்கும் ஜெபம். அதுமட்டுமல்லாமல் தேவனிடம் இருந்து ஜெபிக்கிற காரியத்தை குறித்ததான வெளிப்பாடுகளையும் வரபோகும் காரியங்களை குறித்த தீர்க்கதரிசனங்களையும் பெற்று கொள்ள செய்யும் தீர்க்கதரிசன வல்லமையுள்ள ஜெபம்.

இப்படிப்பட்ட ஆயுதங்களை கொண்டு ஜெபிக்கும்போது என்ன நடக்கிறது என்பதை பின்வரும் வசனத்தை வாசிக்கும் போது தெரிய வரும்

2கொரி 10:4, சொல்லுகிறது

எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல் அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.

பரிசுத்த ஆவியானவரால் அருளச் செய்யப்பட்ட ஜெபம் உங்களுக்கு அதிகாரங்களை கொடுத்து பிசாசின் ராஜ்ஜியங்களை தகர்த்தெரிய செய்கிறது. அல்லேலூயா

எனவே பிரியமானவர்களே பரிசுத்த ஆவியானவரை அனுமதித்து அவருக்கு நம்மை ஒப்பு கொடுத்து வேதத்தில் கூறியுள்ளது போல அவர் நம்மில் செயல்பட அனுமதிப்போம் நம் ஜெபவாழ்க்கையில் வெற்றி பெறுவோம். ஆமென்.