Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 08/10/2016

விதைக்கிறவன் றுப்பான்

 

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான், கலா 6:7

தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாமிசத்தினாலே அழிவை அறுப்பான். ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான், கலா 6:8

இந்த உலகத்தில் ஒரு வெற்றி உள்ள ஆசீர்வாதமான வாழ்க்கை வாழும்படி நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இன்றைக்கு ஆலயத்துக்கு போகும் நாம் தேவனை ஆராதிக்கும் நாம் ஏன் அனேக காரியங்களிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்ளவில்லை, தெரியுமா? நாம் நம்முடைய சுய நலத்துக்காக அனேக காரியங்களை மாமிசத்துக்கென்று விதைத்திருக்கிறோம். அதற்கான பலனையும் அறுத்து கொண்டிருக்கிறோம்.

கொலே 3:25 அநியாயஞ் செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான் பட்சபாதமே இல்லை

நீதி 1:31 அவர்கள் தங்கள் வழியின் பலனை புசிப்பார்கள்

இன்றைக்கு அனேகருடைய வாழ்க்கையிலும் அவர்களுடைய சந்ததிகளுடைய வாழ்க்கையிலும் சாபங்களும் குறைவுகளும் வருவதற்கு காரணம் அவர்கள் செய்த அநியாயத்தின் பலன் அவர்களை பின் தொடர்ந்து வருவதாகும். தேவன் பிதாக்களுடைய பாவத்தை பிள்ளைகளின் மடியில் சரிகட்டுகிறார். ஒருவர் அநியாயமாக சம்பாதித்த பணம் அவருடைய பிள்ளைகளின் தேவையை சந்திக்கிறது போல அந்த பணத்தின் பின்புறம் மறைந்திருக்கிற சாபங்கள் பிற்காலத்தில் அவர்களை சாபத்திற்குள்ளாக்குகிறது.

எனக்குத் தெரிந்த ஒருவர் தன்னுடைய பக்கத்து வீட்டிலிருந்து நிலத்தின் சிறு பகுதியை அபகரித்து கொண்டு இது எனக்கு சொந்தம் மற்றும் போக்குவரத்து வழிபாதை என்று நீதிமன்றம் வரைக்கும் சென்றார். நிலத்தை பறி கொடுத்த அடுத்த வீட்டுகாரர்கள் ரொம்ப வருத்தப்பட்டார்கள். நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டதால் அவர்களுக்கு ஏராளமான பணம் செலவழிந்தது அத்தோடுகூட அலைச்சலும் மனச்சோர்வும் வந்தது. இறுதியில் நிலத்தை அநியாயமாக அபகரித்தவரின் இரண்டு சீறு நீரகமும் பாதிக்கப்பட்டு இன்றைக்கு ஏராளமான பணத்தை ஆஸ்பத்திரியில் செலவு பண்ணி கொண்டிருக்கிறார்.

ஒருமுறை ஒரு ஆசிரியர் தன் பக்கத்து வீட்டில் குடிக்கு அடிமையாயிருந்த ஒருவரிடம் வஞ்சகமாக கையெழுத்தை வாங்கி அவரது சொத்தை அபகரித்து கொண்டார். அந்த குடும்பத்தார் அந்த வீட்டை விட்டு துரத்தப்பட்டனர். அவர்கள் அழுது கொண்டே அந்த வீட்டை விட்டு வெளியேறினார்கள். பல வருடங்களாக நன்றாக இருந்த அந்த ஆசிரியரின் வீட்டில் சாபம் புகுந்து விளையாடியது. அந்த ஆசிரியர் நடந்து சென்ற போது கீழே விழுந்து மரித்து போனார். இவரது மகனின் மனைவி, ஒரு விபத்தில் மரணமடைந்தாள் அதுமட்டுமல்லாமல் இவரது மகள்களின் குடும்பத்திலும் பயங்கர சாபங்கள் கடந்து வந்தது. இவரது மனைவியின் கர்பப்பையில் புற்று நோய் வந்து மரித்தாள். இவரது மற்றொரு மகன் திடீரென்று புத்தி சுவாதீனமாகி யாரும் கவனிக்க முடியாதபடி பரிதாபமான நிலையில் இருக்கிறார்.

ஆண்டவராகிய இயேசு சொன்ன சத்தியத்தை அறிந்திருக்கிறீர்களா? நான் உங்களுக்கு சொல்கிறேன் தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம் ஒருவர் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பி கொடு [ மத் 5:39 ] இன்றைக்கு யாராவது நமக்கு எதிராக எதிர்த்து நிற்கும் போது நாமும் அவர்களுக்கு எதிர்த்து நிற்கிறோம். நமக்கு எதிராக செயல்படுகிறவர்களை பழி வாங்குகிறோம்

ரோமர் 12:19 - பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.

 

மத் 5:43,44 உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

44.
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்ன உயர்ந்த கட்டளைகளுக்கு நாம் கீழ்படிய மறுக்கும் போது தேவனிடம் இருந்து எப்படி ஆசீர்வாதங்களை எதிர்பார்க்க முடியும்? இன்றைக்கு நம் வாழ்க்கை தேவனுடைய ஆசீர்வாதங்களை பெற்று கொள்ளாததற்கு முக்கிய காரணம் நாம் தேவனுடைய சத்தியத்தின் படி நடப்பதில்லை 

யோவான் 15:7 - நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.

 

யோவான் 14:21 - என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.

1தெச 5:15 ல் ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்கு தீமை செய்யாதபடி பாருங்கள். உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுது நன்மை செய்ய நாடுங்கள். என்று பவுல் எழுதுகிறார். நீங்கள் மற்றவர்கள் உங்களுக்கு செய்யும் தீமைக்கு பதிலாக நன்மை செய்தால் நன்மையை சுதந்தரிப்பீர்கள். இதையே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள் [ மத் 5:44 ]. என்று  சொன்னார்.

 

கலா 6:9 - நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

1பேதுரு 3:9 -  தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.

நீதி 20:22 - தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.

உங்களுக்கு எதிராக தீமை செய்கிறவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று வேத வசனம் அறிவுறுத்தும் நிலையில் உங்களுக்கு தீமை செய்யாதவர்களுக்கு எதிராக நீங்கள் தீமை செய்யும் போது அது உங்களுக்கும் உங்கள் சந்ததிக்கும் எதிராக ஒரு சாபத்தின் பின் விளைவுகளை நிச்சயமாக ஏற்படுத்தும்

மத் 5:20 ல் உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்து கொள்ள வேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டு விடு என்று இயேசு சொன்னார்.

எனக்கு தெரிந்த ஒருவர் ராணுவத்தில் வேலை பார்த்து வந்தார். ஒரு தடவை விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த போது அவருடைய பக்கத்து வீட்டுகாரர் தன்னுடைய நிலத்தில் கொஞ்சம் அபகரித்து அதில் மதில் கட்டி வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவரை நன்றாக திட்டினார். வேறு ஏதும் செய்யவில்லை. அவருடைய நண்பர்கள் எல்லாரும் ஏன் காவல் நிலையத்துக்கு போகக் கூடாது அல்லது நீதிமன்றத்துக்கு செல்லக் கூடாது என்று கேட்ட போது அவர் சொன்ன பதில் இந்த அழிந்து போகிற சொத்திற்காக என்னுடைய சமாதானத்தை இழக்க விரும்பவில்லை என்று சொன்னார்.

 

அந்த இடம் நகரின் முக்கிய பகுதியில் இருந்தது. வருடங்கள் பல கடந்தது அந்த நிலத்தை அபகரித்தவர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளும் குறைவுகளும் கடந்து வந்தது. அவருடைய சந்ததியின் வாழ்க்கையில் பல விதமான சாபங்கள் ஆளுகை செய்ய ஆரம்பித்தது, இன்றைக்கு அவரது வீடு பாழடைந்தது போல் இருக்கிறது. ஆனால் அந்த நிலத்தை விட்டு கொடுத்தவரின் பிள்ளைகள் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கின்றார்கள்

லேவி 25:17 - உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயஞ்செய்யக்கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

லேவி 25:14 - ஆகையால், பிறனுக்கு எதையாவது விற்றாலும், அவனிடத்தில் எதையாவது கொண்டாலும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக்கூடாது.

கொலே 3:25 - அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை

அடுத்ததாக தங்களிடம் குறைகளை வைத்து கொண்டு வாழ்க்கையில் பிறரை குற்றவாளிகளாக தீர்க்கிரவர்கள் தங்கள் வாழ்க்கையில் போக போக அவர்களே அதே குற்றத்தை செய்து குற்றவாளிகளாக தீர்க்கப்படுகிறார்கள்

மத் 7:1,2,3,4,5 - 1. நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.

 

2. ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.

 

3. நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?

 

4. இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?

 

5. மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.

ரோமர் 2:1-2 - 1. ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.

 

2. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

பட்டயத்தை எடுக்கிறவன் பட்டயத்தாலே மடிவான் என்று இயேசு கிறிஸ்து சொன்னார். இன்றைக்கு நாவின் வார்த்தை என்ற பட்டயத்தை எடுத்து கொண்டு அனேகரை நியாயம் தீர்க்கிறோம். புறங்கூறி திரிகிறோம் அதுமட்டுமல்லாமல் அடுத்தவர்களுடைய நல்ல பேரை கெடுக்கிறோம். தேவனை துதிக்கிற நாம் அதே நாவினாலே மனிதர்களை சபிக்கிறோம் [ யாக் 3:9 ] மேலும் பிறரை குறித்து தவறாக விமர்சிக்கிறோம். பிரியமானவர்களே உங்கள் நாவை பயன்படுத்துவதில் ஜாக்கிரதையாக இருங்கள். நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின் படி உங்களுக்கு அளக்கப்படும் என்று இயேசு சொன்னார்.

நீதி 13:2 - மனுஷன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான்; துன்மார்க்கனின் ஆத்துமாவோ கொடுமையைப் புசிக்கும்.

இன்றைக்கு அனேகர் தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்று கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் தங்கள் நாவினால் பாவம் செய்வதே. எனக்கு தெரிந்த ஒருவர் எல்லாரையும் தரக்குறைவாக விமர்சித்து கொண்டே இருப்பார். குறிப்பாக அனேக ஊழியக்காரர்களை ஏமாற்றுகிறவர்கள் என்று பலருக்கு முன்பாக கேவலப்படுத்தி பேசுவார். நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்தது. பிறரை நியாயம் தீர்த்த அவரது வாழ்க்கையில் பணப்பிரச்சனைகளின் நிமித்தம் கடன் வாங்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்.

கடன் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் பொய் சொல்ல ஆரம்பித்தார். ஊழியக்காரர்களை ஏமாற்றுகிறவர்கள் என்று தூஷித்து கொண்டிருந்த அவரை இன்றைக்கு எல்லாரும் ஏமாற்றுக்காரன் என்று தூஷிக்கும் படி அவரது சூழ்நிலை மாறிவிட்டது.

உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள் என்று இயேசு சொன்னார் எனவே ஒருவரையும் சபிக்கவும் மற்றும் நியாயந்தீர்க்கவும் கூடாது.

யாக் 3:9-10 - 9. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.

 

10. துதித்தலும் சபித்தலும் ஒரேவாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.

யாக் 4:11,12 - 11. சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.

 

12. நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?

உங்கள் நாவை குறித்து எச்சரிக்கையாக இருங்கள் உங்கள் நாவினால் நீங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் விரோதமாக பேசிய எதிர்மறையான பேச்சுக்கள் உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். நாவினால் பிறருக்கு விரோதமாக அநியாயத்தை விதைப்போமானால் நாம் நிச்சயமாக அநியாயத்தையே அறுப்போம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் நாவே உங்களை தீட்டுபடுத்துகிறது என்றார். நாம் பேசிய வீணான வார்த்தைகள் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. இன்றைக்கு ஊழியத்தை செய்கிறவர்கள் தங்கள் நாவினால் பாவம் செய்வதால் அவர்கள் வாழ்க்கையில் பிசாசின் போராட்டங்கள் கடந்து வருகிறது. அவர்கள் தங்கள் நாவினால் பாவம் செய்து தங்களை தீட்டுப்படுத்தி தங்களை சுற்றி தேவன் வைத்துள்ள பாதுகாப்பின் வேலியை தாங்களே உடைக்கிறார்கள். எனவே சத்துரு உள்ளே வந்து விடுகிறான்.

சங் 39:1 - என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.

நீதி 6:2 - நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்,

எனவே பிரியமானவர்களே நாமும் நம் சந்ததிகளும் இந்த உலகத்தில் நன்மையை அனுபவிக்க நன்மையான காரியங்களை விதையுங்கள். கலா 6:7 ல் மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் என்று வேதம் சொல்லுகிறது. மனுஷன் உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமேயல்லாமல் வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லை என்று பிரசங்கி 3:12ல் வாசிக்கிறோம்.

எனவே பிரியமானவர்களே உங்கள் வாழ்க்கையில் யார் உங்களுக்கு அநியாயம் செய்தாலும் அவர்களுக்கு நன்மையையே செய்யுங்கள். தீமைக்கு எதிர்த்து நிற்காதீர்கள்

 

ரோமர் 12:14,17,21 - 14. உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள், ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.

17. ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.

21. நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.

எனவே இந்த கடைசி நாள்களில் வேத வசனங்களுக்கு கீழ்ப்படிந்து நன்மையை சுதந்தரித்துக் கொள்வோம்.

உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும். யாக்கோபு 1 :26.