Tamil Christian Website

Tamil Christian Website

Posted on: 06/10/2015

 

எச்சரிக்கை ! ! !    எச்சரிக்கை ! ! !

உங்கள் ஆத்துமாவைக்குறித்து எச்சரிக்கை ! ! !

 

அன்பான சகோதரனே, சகோதரியே

உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

*      நீங்கள் கடவுள்மேல் நம்பிக்கை உடையவரா?

*      நிலையில்லாத இந்த உலக வாழ்க்கை முடிந்தபின்பு, உங்கள் ஆத்துமா சொர்க்கத்திற்கு போகவேண்டும் என்ற விருப்பம் உடையவரா?

*      உங்கள் ஆத்துமா சொர்க்கத்திற்கு போவதற்கான உண்மையான வழியை தெரிந்துகொள்ள விருப்பம் உடையவரா?

*      இந்த உலக வாழ்க்கையில், பாரம்பரிய சாபங்களை வேரறுத்து, சமாதானம், சந்தோஷம் இவற்றோடு ஆசீர்வாதங்கள் நிறைந்த, பரிசுத்த வாழ்க்கை வாழ விருப்பம் உடையவரா?

மேலே உள்ள கேள்விகளுக்கு உங்கள் பதில் ஆம் என்று இருக்குமானால், கீழே உள்ள பகுதிகளை கவனமாக படிக்குமாறு உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முகவுரை:- இந்த உலகத்தையும் அதில் உள்ள எல்லாவற்றையும் உண்டாக்கிய கடவுள், அவைகளை ஆளுகை செய்யவும், சுதந்தரித்துக்கொள்ளவும், அனுபவிக்கவும் மனிதர்களையும் உண்டாக்கினார். அந்த மனிதர்கள் கடவுளுக்கு கீழ்ப்படிந்து, பரிசுத்தமான வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காக ஒருசில நிபந்தனைகளையும், கட்டளைகளையும் வகுத்து கொடுத்தார். ஆனால் ஆதி மனிதன் கடவுளுடைய நிபந்தனையையும், கட்டளையையும் மீறி கீழ்ப்படியாமல் போனதினாலே, இந்த உலகத்தில் பாவம் பிறந்தது. அவர்கள் செய்த பாவத்தின் விளைவாக இந்த உலகத்திலே சாபமும், பாவமும் வந்தது. ஆகவே, இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போதே பாவத்தில்தான் பிறக்கிறோம். அந்த பாவ குணங்கள் நமக்குள் இருப்பதால், பாவத்திலேயே வளர்கிறோம், பாவத்திலேயே வாழ்கிறோம். அப்படி பாவத்தில் வாழ்கிற நாம், பாவத்தோடே மரித்துவிட்டால், நம்முடைய ஆத்துமா நரக அக்கினிக்கு போகும். ஆனால், அப்படி ஒரு நிலைமை நமக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான், நம்முடைய ஆத்துமாவைக்குறித்து நாம் எப்படி எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கைப்பிரதி தயாரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படியுங்கள், உங்கள் ஆத்துமாவைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். 

எச்சரிக்கை:- ஒருவேளை நீங்கள் உங்கள் மனதில், நான் மது அருந்துவது இல்லை, புகை பிடிப்பது இல்லை, திருடுவது இல்லை, யாரையும் ஏமாற்றியது இல்லை, யாருக்கும் எந்த தீங்கும் செய்தது இல்லை, வேறு எந்த கெட்ட பழக்கமும் என்னிடத்தில் இல்லை, நான் உண்டு என் குடும்பம் உண்டு என்று நல்ல வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறேன், நான் எந்த பாவமும் செய்வது இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கலாம்.

நீங்கள் இப்படி ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்காக உங்களை பாராட்டுகிறேன். அதேசமயம், இவைகள் மட்டும்தான் பாவ பழக்கங்கள் என்று இல்லை. நம்முடைய ஆத்துமா நித்திய சொர்க்கத்தில் இளைப்பாறவேண்டுமானால், கடவுள் மனிதனிடம் எதிற்பார்க்கின்ற ஒருசில முக்கியமான கட்டளைகளை அல்லது வாழ்க்கை நடைமுறைகளை கீழே குறிப்பிட்டுக்காட்ட விரும்புகின்றேன்.

*      வானத்தையும், பூமியையும், அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கிய கடவுளைத்தவிர வேறு எந்த கடவுளையும் வணங்கக்கூடாது.

*      எந்த ஒரு விக்கிரகத்தையும் உண்டாக்கவோ, அதை வணங்கவோ கூடாது.

*      நம்மைப்பெற்ற நம்முடைய பெற்றோரை எப்போதும் கனப்படுத்தவேண்டும்.

*      கடவுளின் பெயரில் வீணாக சத்தியம் செய்யக்கூடாது.

*      கொலை மற்றும் களவு செய்யக்கூடாது.

*      பொய்சாட்சி சொல்லக்கூடாது.

*      சொந்த மனைவியைத்தவிர, வேறுயாரையும் இச்சையுள்ள எண்ணத்தோடு பார்க்கக்கூடாது. அப்படி பார்த்தால், அதுவே விபச்சார பாவமாகும்.

*      பிறருடைய எந்த பொருளையும் இச்சிக்கக்கூடாது.

*      நம்மிடத்தில் நாம் அன்பாயிருப்பதுபோல, எல்லோரிடத்திலும் அன்பாக இருக்கவேண்டும்.

*      ஓய்வுநாளில் கடவுளை கட்டாயம் ஆராதிக்கவேண்டும்.

*      சகோதர, சகோதரிகளின் மனதை  வேதனைப்படுத்தும் வீண் வார்த்தைகளை பேசுவதும், காரணமில்லாமல் அவர்களிடம் கோபப்படுவதும் பாவமாகும்.

*      இது மட்டுமல்ல, கீழே கொடுக்கப்பட்டுள்ள குணங்களை கொண்டவர்கள் அல்லது அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடும் அனைவரும் பாவம் செய்தவர்கள் என்றே கடவுள் சொல்லுகிறார்.

v  பொல்லாத சிந்தனை உடையவர்கள், பொருளாசை கொண்டவர்கள், துஷ்டத்தனம், கபடு செய்பவர்கள், வன்கண் உடையவர்கள், தூஷணம் சொல்லுபவர்கள், பெருமை கொள்ளுபவர்கள், துரோகம் செய்பவர்கள், பொறாமை உள்ளவர்கள், வாக்குவாதம் பண்ணுதல், வஞ்சகம் செய்வது, புறங்கூறுவது, அவதூறு பண்ணுதல், பிறரை மதிக்காதவர், அகந்தை கொண்டிருத்தல், வீம்புக்காரராய் இருப்பது, பொல்லாதவைகளை யோசித்து பிணைக்கும் குணம் உள்ளவர்கள், பெற்றோருக்கு கீழ்ப்படியாமை, ஒருவரை ஒருவர்  புரிந்துகொள்ளும் தன்மை இல்லாதவர்கள், சுபாவ அன்பு இல்லாதவர்கள், இரக்கமில்லாதவர்கள், சுத்தமில்லாமல் இருப்பவர்கள், பில்லிசூனியம் செய்பவர்கள், மனதில் பகை, விரோதம், வைராக்கியம், கோபம், சண்டை மற்றும் பிரிவினையின் எண்ணம் கொண்டவர்கள், குடித்து வெறிப்பவர், களியாட்டுகளில் ஈடுபடுவோர், சுயபுணர்ச்சிக்காரர், ஆண் புணர்ச்சிக்காரர், உதாசீன குணம் உடையவர்கள், சத்தியத்தை விசுவாசியாதவர்கள், சூனியக்காரர், பொய்யை விரும்பி அதன்படி செய்கிறவர்கள்.

பிரியமானவர்களே, இப்போது சிந்தித்து சொல்லுங்கள்.

மேலே பட்டியலிட்டு கூறப்பட்டுள்ளதில் ஏதாவது ஒரு காரியமாவது உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது வந்தது உண்டா?

அது ஒருவேளை உங்களது கடந்தகால வாழ்க்கையாக இருக்கலாம் அல்லது தற்போதைய நிகழ்கால வாழ்க்கையாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் சரி, உங்கள் பதில் ஆம் என்று இருக்குமேயானால், நீங்கள் கடவுளின் கட்டளையை அல்லது சட்டத்தை மீறி பாவம் செய்தவர்கள் என்றுதான் அர்த்தம்.

இந்த உலகத்தில் எந்த ஒரு சட்டத்தை மீறினாலும், அந்த சட்டத்தின் தன்மைக்கு ஏற்ப தண்டனை இருப்பதுபோல, கடவுளின் சட்டத்தை மீறி பாவம் செய்பவர்களுக்கும் ஒரு தணடனையை கடவுள் வைத்திருக்கின்றார். அதுதான் மரணம். இங்கே, மரணம் என்று கூறப்படுவது சரீர மரணத்தை குறிப்பிடுவது அல்ல. ஆத்தும மரணத்தை குறிப்பிடுகின்றது. பாவம் செய்கிற ஆத்துமா சாகும். அதாவது, பாவம் செய்கிறவர்களின் ஆத்துமா நரகத்தில் சென்று வேதனை அனுபவிக்கும். நரகம் என்பது அக்கினியும், கந்தகமும் எரிகிற கடல். அந்த கடலில் உள்ள அக்கினி ஒருபோதும் அவியாத நித்திய அக்கினியாக இருக்கும். ஆனாலும், அந்தக்கடலிலே தள்ளப்படுகின்ற ஆத்துமா அக்கினியினால் வெந்து சாகாமல், அக்கினியின் வேதனையை அனுபவித்துக் கொண்டே இருக்கும். தேளானது கொட்டும்போது உண்டாகும் வேதனை போன்ற வேதனை எப்போதும் அங்கு இருக்கும். அங்கேயுள்ள புழுக்கள் சாகாமல், அதே சமயம் அக்கினியின் வேதனையை தாங்கமுடியாமல், நரகத்தில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் மனிதனின் உடலுக்குள் நுழைந்து வேதனையும் அருவருப்பையும் கொடுத்துக்கொண்டே இருக்கும். நரகம் என்பது, சிந்தித்துக்கூட பார்க்க முடியாத மிகப்பெரிய கொடுமையிலும் கொடுமையும், வேதனையிலும் வேதனையும் நிறைந்தது ஆகும்.

அன்பான சகோதரனே, சகோதரியே, நீங்கள் எந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் வாழ்ந்து மரித்தால், உங்கள் ஆத்துமா எங்கே போகும்?

உங்கள் ஆத்துமாவை நீங்களே நரகத்தில் தள்ளிவிடப்போகிறீர்களா? சிந்திக்கவேண்டிய நேரமிது......

இது உங்களுக்கு ஓர் எச்சரிப்பு !!!எச்சரிப்பு !!!! உங்கள் ஆத்துமாவிற்கு ஓர் எச்சரிப்பு !!! 

நற்செய்தி:- தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, பாவம் செய்த அல்லது பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற உங்கள் பாவங்களை மன்னித்து, உங்கள் ஆத்துமாவை நித்திய வேதனையாகிய நரகத்தில் இருந்து காப்பாற்ற கடவுள் ஒரு வழியையும் வைத்திருக்கிறார். அந்த வழியைப்பற்றி உங்களுக்கு அறிவிப்பதே எங்கள் நோக்கமாகும். இதுதான் உங்கள் வாழ்க்கையிலே உங்களுக்கு கிடைக்கும் மாபெரும் நற்செய்தி என்பதை மறக்கவேண்டாம். தொடர்ந்து படியுங்கள் அந்த நற்செய்தியை............

பிரியமானவர்களே, நாம் புண்ணிய ஸ்தலங்களில் போய் குளிப்பதாலோ, நேர்த்திக்கடன் செய்வதாலோ, தலை முடியை கொடுப்பதாலோ, பரிகாரங்கள் செய்வதாலோ, காடு மலையெல்லாம் ஏறிச்செல்வதாலோ, நம்முடைய உடலை நாமே கிளித்துக்கொள்வதாலோ, கடவுள் படைத்த மனிதர்களிடம் நம்முடைய பாவங்களை அறிக்கை செய்வதாலோ நமக்கு பாவ மன்னிப்பு ஒருபோதும் கிடைப்பது இல்லை. உண்மையிலேயே நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படவேண்டுமென்றால், நாம் யாருக்கு விரோதமாக பாவம் செய்தோமோ, அவர் நம்மை மன்னித்து, அவரே அதற்கான விலைக்கிரயத்தையும் கொடுக்கவேண்டும். உதாரணமாக, நாம் நம்முடைய உறவினர் வீட்டுக்கு போகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கே, மேஜையின்மீது வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த பொருளொன்று உங்கள் கை தட்டுப்பட்டு கீழே விழுந்து உடைந்துவிட்டது. அப்போது உங்கள் உறவினர் வந்து, பரவாயில்லை, நீங்கள் வருத்தப்படவேண்டாம், நான் உங்களை மன்னித்துவிட்டேன் ஆனால் அந்த பொருளுக்குரிய விலையை மட்டும் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னால், அது உண்மையான மன்னிப்பு ஆகுமா? இல்லை. ஏனென்றால் தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் செய்த தவறுதலுக்காக, அதற்கான கிரயத்தையும் நீங்களே செலுத்துகிறீர்கள். அதேசமயம், அந்த உறவினர் உங்களிடம் வந்து, பரவாயில்லை, நீங்கள் வருத்தப்படவேண்டாம், நான் உங்களை மன்னித்துவிட்டேன். நானே விலை கொடுத்து புதிய பொருளை வாங்கிவைக்கிறேன் என்று சொல்லுவார்களேயானால், அதுதான் உண்மையான மன்னிப்பு ஆகும். அதைப்போன்று, நாம் கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்யும் போது, எந்த கடவுள் மனிதனுடைய பாவங்களுக்காக விலைக்கிரயம் செலுத்தினாரோ, எந்த கடவுள் மனிதனுடைய பாவங்களுக்காக தன்னையே தியாகம் செய்தாரோ, எந்த கடவுள் மனிதனுடைய பாவங்களுக்காக வேதனைகளையும், சோதனைகளையும், பாடுகளையும் சகித்தாரோ, அந்த கடவுளால் மட்டுமே மனிதனுக்கு உண்மையான பாவ மன்னிப்பை வழங்க முடியும்.

அப்படி ஒரு கடவுள் உண்டா?

அப்படி ஒரு கடவுளைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த உண்மையான கடவுளைத்தான் நீங்கள் பின்பற்றுகிறீர்களா? இல்லை என்றால், நான் உங்களுக்கு ஒரு மாபெரும் உண்மையை சொல்லுகிறேன், மனிதனுடைய பாவங்களுக்காக விலைக்கிரயம் கொடுத்த ஒரு கடவுள் உண்டு. அவர்தான், இந்த உலகத்தையும் அதில் உள்ள எல்லாவற்றையும் உண்டாக்கிய ஒரே உண்மையான கடவுள். அந்த உண்மையான கடவுள், தான் உருவாக்கிய மனிதகுலம் கீழ்ப்படியாமையினாலே பாவம் செய்து, கடவுளைவிட்டு வழிவிலகி சென்றபோது, அவர்களுடைய ஆத்துமாவை மரணம் என்கிற நரக அக்கினிக்கு ஒப்புக்கொடுக்க விருப்பம் இல்லாமல், நம்மேல் வைத்த மேலான அன்பினாலே, அவரே மனித உருவெடுத்து இந்த உலகத்திற்கு இறங்கி வந்து தன்னுடைய உயிரையே விலைக்கிரயமாக கொடுத்து, தன்னுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தையே சிந்தி மனிதகுலத்திற்கு பாவமன்னிப்பை அருளினார். அவர்தான் உலக இரட்சகராகிய இயேசு கிறிஸ்து.

ஆம் சகோதரனே, சகோதரியே, தீய சிந்தனைகளினாலே நாம் செய்த பாவத்திற்காக, அவருடைய தலையில் முள்முடி சூட்டப்பட்டது. நம்முடைய கைகள் செய்த பாவத்திற்காக அவருடைய கரங்களில் ஆணி அறையப்பட்டது. நம்முடைய கால்கள் செய்த பாவத்திற்காக அவருடைய கால்களில் ஆணி அறையப்பட்டது. நம்முடைய இருதயம் பொல்லாத சிந்தனைகளினாலே செய்த பாவத்திற்காக அவருடைய இருதயம் ஈட்டியால் குத்தப்பட்டது. நம்முடைய சரீரத்தால் நாம் செய்த பாவத்திற்காக அவருடைய சரீரம் முழுவதும் வாரினால் அடித்து கிழிக்கப்பட்டது.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையுள்ள உறுப்புகளினாலே நாம் செய்த பாவங்களுக்காக, அவருடைய உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையுள்ள உறுப்புகள் அனைத்தும் பாடு அனுபவித்து, தன்னுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தி, சிலுவையிலே தன்னுடைய ஜீவனை விலைக்கிரயமாக கொடுத்ததினாலே, சர்வ லோகத்தின் பாவங்களையும் மன்னிக்க தகுதியுள்ள ஒரே கடவுளாக விளங்குபவர் இயேசு கிறிஸ்து மாத்திரமே. வானத்தின் கீழே பூமியின் மேலே, ஆத்துமா இரட்சிப்பு பெற, இயேசு கிறிஸ்துவின் நாமம் தவிர வேறொரு நாமம் கொடுக்கப்படவில்லை.

இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை. அதேசமயம், ஒன்றும் அறியாத மிருகங்களின் இரத்தத்தினாலே முழுமையான நிரந்தரமான பாவ மன்னிப்பு உண்டாவது இல்லை.

மிருகங்களை கொன்று அதன் இரத்தத்தினால் பாவங்களை தற்காலிகமாக மூடுவது பழைய உடன்படிக்கை. ஆனால், நிரந்தரமான பாவ மன்னிப்பை அருள, இயேசு கிறிஸ்து தன்னுடைய இரத்தத்தையே சிந்தி ஒரு புதிய உடன்படிக்கையை உருவாக்கினார். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்க வல்லமையுள்ளது. இதுதான் சர்வ லோகத்திற்கும் தேவன் அருளிய நற்செய்தி ஆகும். மரித்த அவர் மண்ணோடு மண்ணாக மட்கிப்போகவில்லை. நமக்கு நித்திய ஜீவனை தருவதன் அடையாளமாக மூன்றாவது நாள் உயிரோடு எழுந்தார். உலக சரித்திரத்திலே, இன்றைக்கும் திறந்து வைக்கப்பட்டுள்ள ஒரே ஒரு கல்லறை இருக்கிறதென்றால், அது இயேசு கிறிஸ்துவின் கல்லறை மட்டுமே என்பது உலகறிந்த உண்மை.  

அழைப்பு:- அன்புள்ள சகோதரனே, சகோதரியே, பாவங்களை மன்னித்து, நித்திய ஜீவனை தருவதற்கு, இயேசு கிறிஸ்துவால் மாத்திரமே முடியும் என்பதை புரிந்துகொண்ட நீங்கள், உங்கள் ஆத்துமாவை நரக அக்கினியிலிருந்து காப்பாற்றிக்கொள்ள செய்யவேண்டியதெல்லாம், மேலே கூறப்பட்டுள்ள நற்செய்தியை விசுவாசித்து, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு, மனந்திரும்பி, உங்கள் உள்ளத்தில் அவருக்கு இடம் கொடுப்பீர்களேயானால் நீங்கள் பாக்கியவான்கள். காலம் கடைசியாக இருக்கிறபடியினாலே, இனியும் காலம் கடத்தாமல் உங்கள் ஆத்துமாவை காப்பாற்றிக்கொள்ள இந்த நற்செய்தியை ஏற்றுக்கொள்வீர்களேயானால், பாவ வாழ்க்கையை புதைத்துவிட்டு, கிறிஸ்துவுக்குள் புது வாழ்க்கை வாழ்வது எப்படி என்றும், கடைசிவரை ஆத்துமா இரட்சிப்பை காப்பற்றிக்கொள்வது எப்படி என்றும், இவ்வுலக வாழ்க்கைக்கு தேவன் வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வது எப்படி என்றும் உங்களுக்கு சொல்லித்தந்து உங்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த நாங்கள் காத்திருக்கின்றோம்.

தேவ கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்,

உங்கள் அன்பு சகோதரன்

இராஜசேகர் செல்லத்துரை