Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 23/04/2016

சாத்தானின் வஞ்சனையும் ஏவாளின் வீழ்ச்சியும்  

 

-         சகோதரி. அனு ஃபெஸ்லின்

 

 

மரித்தேன் ஆனாலும் இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சதா காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன் என்ற கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் தமது வார்த்தையால் உண்டாகின தேவன் ஆறாவது நாளில் பூமியின் மண்ணினால் மனிதனை உருவாக்கி தம்முடைய ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதி அவனுக்கு உயிர் கொடுத்தார். தாம் படைத்த மனிதனுக்கு தேவையான ஆகாரத்தையும் கொடுத்து, அவன் தங்கியிருக்க ஏதேன் தோட்டத்தை உண்டாக்கி அதை பண்படுத்தும் வேலையை அவன் கையில் ஒப்புவித்தார். ஒப்புவித்து விட்டுவிடாமல் தன் நீதியை மனிதனுக்கு உணர்த்தும் விதமாக அவன் நடக்க வேண்டிய வழிகளை கட்டளைகளாக கொடுக்கிறார். தேவன் மனிதனிடம் சொன்ன முதல் கட்டளை நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனிகளையும் புசிக்கலாம். ஆனால் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளிலே சாகவே சாவாய். பின்பு  மனுஷன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று சொல்லி தேவன் மனுஷனுக்கு ஏற்ற துணையை உண்டாக்கினார்.

தேவன் ஆதாமுக்கு  கொடுத்த முதல் கட்டளையை ஏவாளும் அறிந்திருந்தாள். ஆதாமும் ஏவாளும் பகலில் குளிர்ச்சியான வேளையில் தோட்டத்தில் உலாவுகிற தேவனுடைய சத்தத்தை கேட்டு தேவனோடு நெருக்கமான உறவு கொண்டிருந்தனர்.  மனிதனுக்கு வாழ தேவையான எல்லாம் தேவன் கொடுத்திருந்தும் மனிதன் தேவனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தேவகட்டளையை மீறி பாவம் செய்தான். ஆனால் தேவன் நம் மேல் அன்பு கூர்ந்து தம்முடைய இரக்கத்தினால் தம் சொந்த குமாரனின் இரத்தத்தை நம் பாவத்திற்கு விலைக்கிரையமாக செலுத்தி பாவத்தின் தண்டனையினின்றும்  சாபத்திலிருந்தும் கிருபையாக நம்மை மீட்டு இரட்சித்தார்.

இன்றைக்கு நமக்கும் உலகப்பிரகாரமாக  நல்ல வீடு, ஆகாரம், உடை, குடும்பம் ஆகிய எல்லாவற்றையும் கொடுத்து தேவன் நம்மை ஆசீர்வத்திருக்கிறார். ஜீவஅப்பமாக  ஜீவத்தண்ணீராக இருந்து நம்மை அனுதினமும் போஷித்து வழிநடத்துகிறார். நமக்கு நித்திய ஜீவனை அளித்து நிலையான  பரலோகமாகிய வீடு, மறைவான மன்னா, ஜீவக்கிரீடம், வெண் வஸ்திரம், ஜீவவிருட்சத்தின் கனி ஆகியவற்றை தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். தேவனை  அறிந்திருந்தும் அவர் கொடுக்கும் எல்லா ஆசீர்வாதங்களை அனுபவித்தும் நாம்  பல சூழ்நிலைகளில் ஆதாம் ஏவாளைப் போல தேவனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பாவத்திற்கு இடம் கொடுத்து நமக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்துகிறோம் அல்லவா? பல சூழ்நிலைகளில் சாத்தான் நம்மை வஞ்சிக்கிறான் என்பதை அறியாமல் சாத்தானின் தந்திரங்களுக்கு இடம் கொடுப்பது உண்டல்லவா? தேவன் நமக்கு வாக்குப் பண்ணினதை சுதந்தரித்து கொள்ள முடியாமல் ஆதாம் ஏவாளை போல காணப்படுகிறோம் அல்லவா? சாத்தான் எப்படியாய் ஏவாளை வஞ்சித்தான் என்பதையும் ஏவாள் எப்படியாய் அந்த தந்திரத்தில் வீழ்ந்து போனாள் என்பதையும் நாம் வேதத்தின் அடிப்படையில் தியானித்து நம்மை அதுபோன்ற சூழ்நிலைகளிலிருந்து பாதுகாத்து கொள்வது சிறந்தது.

சாத்தானின் வஞ்சனை

 

நம்முடைய அனுதின வாழ்க்கையில் தேவனிடமிருந்து நம்மை பிரிக்க எதிராளியாகிய சாத்தான் பல வழிகளில் முயற்சிப்பான். சாத்தான்  நம்மை வஞ்சியாதபடி நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். ஏவாளோடு தந்திரமாய் பேசி தேவனுடைய கற்பனையை மீறி கீழ்படியாமலிருக்க ஏவினவன் சாத்தான். சாத்தான் நேரடியாக நம்மிடம் வந்து பேசுவதில்லை மனிதர்கள் மூலாகவும் நம்முடைய சிந்தனைகள் மூலமாகவும் பேசுவான். அவன் எப்போதும் எல்லா சூழ்நிலைகளிலும் கெர்ச்சிக்கிற சிங்கம்  போல எவனை விழுங்கலாமோ என்று சுற்றி திரிகிறான். கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் விழ தள்ளுவான் என்று வேதம் எச்சரிக்கிறது. எப்படியாய் ஏவாளை வீழ்த்தினான் தெரியுமா?

 

சந்தேகம்  

முதலாவதாக ஒரு சந்தேகத்தை விதைக்கிறான். நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனிகளையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ? என்று சந்தேகத்தை உருவாக்கினான் [ஆதியாகமம்:3:1-5]. இந்த கடைசி காலங்களில் வேதத்திற்கு அப்பாற்பட்ட புதுவிதமான கிறிஸ்தவ போதனைகள் எங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. தேவனுடைய ராஜ்ஜியம் கட்டபடாதபடிக்கு சாத்தான் பல சந்தேகங்களை குழப்பங்களை கிறிஸ்தவர்களுக்குள் ஏற்படுத்தி ஜனங்களை தன் வசப்படுத்த முயற்சிக்கிறான். பல ஆவிக்குரிய காரியங்களில் நாம் ஈடுபடும்போது சாத்தான் இன்றும் நமக்குள் சந்தேகங்களை விதைக்கிறான். இதை செய்ய வேண்டுமா? இப்படி தான் நடக்க வேண்டுமா? என்று பல வித சந்தேகங்கள் நம்மை ஒருவேளை குழப்பலாம். ஆனால் நாம் ஒருபோதும் தேவனை விட்டு பின்வாங்காமல் தேவன் தந்த வேதத்தின்படி வாழ நம்மை அர்ப்பணிக்க வேண்டும். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே வேதம் கூறுகிறது ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். பெரோயா பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வேத வசனத்தை ஏற்றுக்கொண்டு காரியங்கள் இப்படியிருக்கிறாதா என்று தினந்தோறும் ஆராய்ந்து பார்த்ததினால் தெசலோனிக்கேயாவில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள். நாமும் சந்தேகங்களில் வேதத்தின் ஆலோசனையை பரிசுத்த ஆவியானவரின் துணையோடு பெற்றுக்கொள்ளுவோம்.

 

குறையை சுட்டிக்காட்டினான்

 

தேவன் ஆதாமிடம் நீ  தோட்டத்திலுள்ள எல்லா விருட்சங்களின் கனியையும் புசிக்கலாம் ஆனால் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்க வேண்டாம் என்றார்[ஆதியாகமம்:2:16,17]. சாத்தான் தேவன் புசிக்க சொன்ன கனிகளைப் பற்றி பேசவில்லை புசிக்க வேண்டாம் என்று சொன்ன கனியைக் குறித்து தீமையான காரியங்களை ஏவாளிடம் எடுத்துக் கூறினான். தேவன் மனிதனுக்கு கொடுத்த எல்லா ஆசீர்வாதங்களையும் நினைவுபடுத்தாமல்  தேவன் கொடுக்காத (மனிதனுக்கு விலக்கின) ஒன்றை மட்டும் குறையாக சுட்டிகாட்டினான். தேவன் மனிதனுக்கு வைத்திருந்த உன்னதமானன மேன்மையான ஆசீர்வாதங்களை உணர்ந்து கொள்ள முடியாதபடி சாத்தான் ஏவாளின் இருதயத்தை வஞ்சித்தான். இதனால் ஏவாள் தேவன் கொடுத்த ஆசீர்வாதத்தை எண்ணி பார்க்கவில்லை; தேவனுடைய திட்டத்தையும் நினைக்கவில்லை. மாறாக ஏவாளின் இதயமும் அந்த விலக்கப்பட்டதையே நோக்கி பார்க்கிறது. நாமும் கூட பல வேளைகளில் தேவன் நமக்கு தந்த நன்மைகளுக்காய் நன்றி சொல்லாமல் தேவனிடமிருந்து பதில் கிடைக்காத ஒரு காரியத்தை நினைத்து துக்கித்து புலம்பி கொண்டு வாழுவோம். தேவனை துதித்து ஆராதிக்க முடியாதபடி நம்முடைய இருதயம்  சோர்ந்துபோய் ஜெபிக்க கூட முடியாமல் ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்தங்கி போகிற சூழ்நிலைகள் உண்டல்லவா? இப்படியாய் நம்மை சோர்புக்கு உட்படுத்தி தேவன் தந்த ஆசீர்வாதங்களை மறக்க செய்வது சாத்தானின் செயல். பக்தன் யோபுவை போல தேவன் செய்வது எல்லாம் நன்மைக்கே; எனக்கு குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு என்று  சொல்லி   தேவ சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுப்போமா? சாத்தான் நம்மை மோசம்போக்காதபடி நாம் எச்சரிக்கையாய் இருப்போம்.

 

பொய்

தேவன் ஆதாமிடம் நீ அதை புசிக்கும் நாளிலே சாகவே சாவாய் என்று சொல்லியிருந்தார். ஆனால் சாத்தான் நீங்கள் சாகவே சாவதில்லை நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்று பொய் கூறினான்[ஆதியாகமம்:3:5]. பொய்யை உண்மையை போல கூறுகிறான். அதன் விளைவு ஏவாள் தேவனுடைய கட்டளையை மீறி பாவம் செய்தாள். பாவத்தினால் தேவனுக்கும் மனிதனுக்கும் இருந்த உறவு துண்டிக்கப்பட்டு ஆவிக்குரிய மரணத்தை மனிதன் சந்தித்தான். ஆவிக்குரிய கண்கள் இருளடைந்து  உலகப்பிரகாரமான கண்கள் திறந்தன. நன்மையை மட்டுமே அறிந்திருந்த ஆதாம் ஏவாள் தீமையையும் அறிந்து கொண்டனர். தேவனுக்குள் ஒரே சரீரமாய் குற்றமற்றவர்களாயிருந்த இருவரும் பாவத்தினால் மகிமையின் ஆடையை இழந்து தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து   வெட்கப்பட்டனர். வேதம் கூறுகிறது பிசாசானவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும் போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்[யோவான்:8:44]. சாத்தான் விதைக்கும் பொய்கள் ஒருவேளை தற்காலிக இன்பத்தை அளித்தாலும் தேவனை விட்டு நம்மை பிரித்து நித்திய மரணத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. வேதத்துக்கு புறம்பான காரியங்கள், பொய்யான ஜோடிப்பு வசனங்கள், தங்களுக்கு சாதகமான வசனத்தின் கோர்வைகள், கேட்க இனிமையாக பல ஜோடிக்கப்பட்ட  ஆதாரங்களோடு  போதிக்கப்படும்போது, அது தேவனுடைய திட்டத்திற்கு ஏற்றதா என்பதை வேதத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து உண்மையை மட்டும் ஏற்றுக்கொள்ளுவோம்.   

ஏவாளின் வீழ்ச்சிக்கு காரணங்கள்

1.               கீழ்படியாமை

 

உலகத்தின் முதல் பாவம் கீழ்படியாமை. தேவன் நம்முடைய சிருஷ்டிகர் நம்மை உண்டாக்கினவர் என்ற சிந்தை நம்முடைய ஆழ்மனதில் எப்போதும் இருக்க வேண்டும். உலகப்பிரகாரமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு  தீங்கு செய்யாமல் ஆஸ்திகளை சேர்த்து வைக்கும் போது நம்முடைய பரமபிதாவாகிய தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு அவருடைய ராஜ்ஜியத்தை அருளுவது எவ்வளவு நிச்சயம்?  தாயின் கருவில் தோன்றும் முன்னமே அவர் நம்மை தெரிந்து கொண்டார். தகப்பனும் தாயும் நம்மை கைவிட்டாலும் நம்மை சேர்த்துக்கொள்ளுகிறவர். எவ்வளவு அன்பான தேவன் பாருங்கள். நம்மை உண்டாக்கின தேவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவருடைய கட்டளைகளுக்கு நாம் எப்போதும் கீழ்படிவது நம்முடைய கடமையாய் இருக்கிறது. தேவனின் கட்டளைகள் நமக்கு  நன்மையை தரக்கூடியது, ஜீவனை அளிக்க வல்லமையுள்ளது  என்று நாம் விசுவாசித்து கீழ்படிய வேண்டும். வேதம் கூறுகிறது நாம் தேவனுடைய கற்பனைகளை கைக்கொள்ளுவதே அவரிடத்தில்  அன்புகூருவதாம்: அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல [1யோவான்:5:3]. தேவனுடைய கற்பனையை மீறுவதே பாவம். ஏவாள் தன்னை சிருஷ்டித்த தேவனை மறந்து போனாள். உன்னை உண்டாக்கின தேவனை மறக்கிறதர்க்கு நீ யார்? என்று ஏசாயா  தீர்க்கத்தரிசி நம்மை வினவுகிறார். தேவனுக்கு   முக்கியத்துவம் கொடுக்காமல் தேவனுடைய சிருஷ்டியாகிய சர்ப்பத்தின்  மேல் நம்பிக்கையை வைத்தாள். இதனால் தேவனுக்கும் ஏவாளுக்கும் உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டது. ஆதாமும் கூட தேவன் ஏன் புசித்தாய் என்று வினவிய போது ஸ்திரீ கொடுத்தாள் என்று ஏவாளை குற்றம் சாட்டுகிறான். தேவனுக்கும் நமக்கும் உறவு சரியாயில்லை என்றால் மனிதனோடு உள்ள உறவிலும் விரிசல் ஏற்படும். அன்பானவர்களே  கீழ்படியாமையின் பிள்ளைகள் தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லை. பிரசங்கி கூறுகிறார் காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்கு பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர் மேலும் விழுந்த கடமை இதுவே[பிரசங்கி:12:13] . நாம் விழுந்து போகாத படி தேவனுக்கு கீழ்படிந்து வாழ இன்றே நம்மை அற்பணிப்போமா?

 

2.                  சுய ஆலோசனை

 

சர்ப்பம் ஏவாளை வஞ்சித்த போது அவள் தேவனுடைய ஆலோசனை நாடவில்லை. தேவன் ஆதாமிடம் நீ  தோட்டத்திலுள்ள எல்லா விருட்சங்களின் கனியையும் புசிக்கலாம் ஆனால் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்க வேண்டாம் என்றார்[ஆதியாகமம்:2:16,17]. தேவன் மனுஷியை உருவாக்கும் முன்பே ஆதாமுக்கு கொடுக்கப்பட்ட கட்டளையிது. தேவக்கட்டளையை பெற்ற ஆதாமிடம்  ஏவாள் கலந்து பேசவில்லை. தேவ சமூகத்தில போய் இந்த கனியை புசிக்கலாமா என்று கேட்கவுமில்லை. மாறாக தன்னிச்சையாக தானே முடிவு செய்கிறாள். வேதம் கூறுகிறது உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள் [நீதிமொழிகள்:3:5]. நாம் எப்படி வாழ வேண்டும்? நாம் எவைகளை செய்ய வேண்டும்? என்பதை எல்லாம் வேதம் நமக்கு தெளிவாக போதிக்கிறது. உதாரணமாக திரைப்படங்கள் மூலம் நாம் எல்லாம் அறிந்து கொள்ளலாம் என்று சிலர் பேசுவதை கேட்டிருப்போம். திரைப்படம் நன்மையோடு தேவையில்லாத தீமையையும் நமக்குள்  புகுத்தும்.    ஆகையால் நாம் வேதத்தை தள்ளிவிட்டு உலகத்திலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிக்கும் போது ஏவாளைப் போல நன்மையை மட்டுமல்ல தீமையையும் சேர்த்து புசிப்போம் என்பதில் ஐயமில்லை. அன்பானவர்களே அவர் சித்ததின்படி வாழ நாம் ஒப்புக்கொடுக்கும் போது அவர் நம் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நம்முடைய தேவன் ஆலோசனையில் பெரியவர். நான் உனக்கு போதித்து நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன் உன் மேல் என் கண்ணை வைத்து  உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்று நம் மேல் கரிசனையாய் இருக்கிற கர்த்தர் அவர். நம்மை அன்பாய் வழிநடத்தும் தேவனை விட்டு மனிதனுடைய பொல்லாத யோசனைகளுக்கும், சுயஆலோசனைகளும் உட்பட்டு  சிருஷ்டிகரை மறந்து தேவனுடைய சிருஷ்டியாகிய மனிதன் மேல் நம்பிக்கை வைத்து ஏமாற்றப்பட்டு போகிறோம் அல்லவா? தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன் என்று வேதம் கூறுகிறது [நீதிமொழிகள்:28:26]. நாம் தினமும் தேவனுடைய பாதத்தில் அமர்ந்திருந்து அவருடைய ஆலோசனைகளைப் பெற்று அதின்படி வாழ நம்மை அர்ப்பணிப்போம்.

 

3.                  சுய இச்சை

வேதம் கூறுகிறது மனிதன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு சிக்குண்டு சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து பாவத்தை பிறப்பிக்கும்[யாக்கோபு:1:14,15].  ஏவாள் அந்த கனியை கண்ட போது புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு கொண்டாள்[ஆதியாகமம்:3:6].  புசிப்புக்கு இன்பம் என்ற மாமிசத்தின் இச்சையும் பார்வைக்கு இன்பம் என்ற  கண்களின் இச்சையும் புத்தியை தெளிவிக்கும் என்ற ஜீவனத்தின் பெருமையும்   ஏவாளை பாவத்திற்கு இழுத்தது. தேவனால் அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட ஆதாம் ஏவாள் தேவர்களைப் போலாவீர்கள் என்று சாத்தான் சொன்ன பொய்யை நம்பி தான் தேவசாயலில் இருப்பதை மறந்து போயினர். நமக்கு தேவையான எல்லா ஆசீர்வாதங்களையும் தேவன் தந்திருந்தாலும் ஏதோ ஒன்றை நம்முடைய இருதயம் இச்சித்து பாவம் செய்கிறது  அல்லவா? ஒருவேளை நாம் பணத்தை, பதவியை, அந்தஸ்து, பொருளை, கனத்தை, அழகை இச்சிக்கலாம். இச்சை நம்மை பாவம் செய்ய தூண்டும். பாவத்தின் முடிவு மரணம். வேதம் கூறுகிறது உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம். ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும் மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். ஆனால் நீயோ தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு[1தீமோத்தேயு:6:8-11]. கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே சாத்தானின் பொல்லாத ஆலோசனைகள் நம்முடைய கண்களுக்கு இன்பமாய் இருக்கும்; நாம் புசிக்க அதாவது ஏற்றுக்கொள்ள நல்லதாகவும் சுலபமாகவும் இருக்கும்; நம்முடைய புத்தியை தெளிவித்து நம்மை மனிதர் முன்பாக நல்லவர்களாக தேவர்களை போல காட்டலாம். ஆனால் முடிவில் மரணத்தை அளிக்கும் என்பது உறுதி. தேவன் நமக்கு கொடுக்காத எந்த காரியத்திலும் நாம் கைவைக்க கூடாது. மாறாக தேவனுடைய திட்டத்துக்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே சோதிக்கப்படுவது பாவம் அல்ல. ஆனால் சோதனையில் வீழ்ந்தால் பாவம். இயேசுவும் சோதிக்கப்பட்டார். வசனத்தினால் ஜெயித்தார். வேதம் கூறுகிறது சோதனையை சகிக்கிற மனுஷன் பாக்கியவான் அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். நம் திராணிக்கு மேலாக சோதிக்கப்பட தேவன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். எனவே நாம் சோதனையில் அகப்படும் போது இயேசு கிறிஸ்துவை மாதிரியாக கொண்டு  தேவனுடைய வசனத்தின் வாயிலாக சோதனையை மேற்கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து சாத்தானையும் சிலுவையில் முறியடித்து வெற்றியை மேற்கொண்டார்.  தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து விழித்திருங்கள்; நம்முடைய  தேவன் பாவிகளை நேசிக்கிறார்; ஆனால் பாவத்தை வெறுக்கிறார். எனவே அவருடைய பிள்ளைகளாகிய நாம் சாத்தானின் சூழ்ச்சிகளை தேவ பெலத்தால் முறியடித்து பாவத்திற்கு விலகி அவரில் நிலைத்திருப்போம். தேவ கட்டளைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவருக்கு கீழ்ப்படிந்து அவர் நமக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிற தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரித்துக்கொள்ள அவரில் நிலைத்திருப்போம். தேவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக. ஆமென்.