Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 25/06/2016

 

மனந்திரும்புதல்

அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார் இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார் அப் 17:30

இன்றைக்கு தேவனுடைய முழுமையான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் நம்முடைய வாழ்க்கையில் பல காரியங்களில் மெய்யான மனந்திரும்புதல் இல்லாமல் இருப்பதே ஆகும்

மனந்திரும்புதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை என்று வேதம் சொல்லுகிறது, புதிய ஏற்பாட்டின் துவக்கத்தில் யோவான் ஸ்நானன் தன் ஊழியத்தை ஆரம்பித்த பொழுது மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாக இருக்கிறது என்றான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் தன் ஊழியத்தை ஆரம்பித்த பொழுது சொன்ன வார்த்தை மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாக இருக்கிறது என்பதாகும்.

லூக்கா 24ல் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் சகல தேசத்தாரிலும் பிரசங்கிக்கப்பட வேண்டியது என்று இயேசு சொன்ன சத்தியம் நிறைவேற்றப்படாமல் நாம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம்.

பழைய ஏற்பாட்டில் மனந்திரும்புதல் என்றால் திரும்புதல் அதாவது திரும்பி வருதல் திரும்பி போகுதல் என்பதாகும். புதிய ஏற்பாட்டில் புதிய தீர்மானம் மற்றும் மனதில் உள்ளான மாற்றம் ஏற்பட்டு தேவனிடம் திரும்புதல் என்பதாகும்.

2 நாளா 7:14 என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி ஜெபம் பண்ணி என் முகத்தைத் தேடி தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால் அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு அவர்கள் பாவத்தை மன்னித்து அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன்

எரேமியா 15:19 இதனிமித்தம் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன் என் முகத்துக்கு முன்பாக நிலைத்துமிருப்பாய் நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால் என் வாய்போலிருப்பாய் நீ அவர்களிடத்தில் திரும்பாமல் அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.

யோபு 22:23 நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால் திரும்பக் கட்டப்படுவீர் அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத் தூரமாக்குவீர்.

புதிய ஏற்பாட்டிலே, லூக்கா 3 ஆம் அதிகாரத்தில் யோவான் ஸ்னானன் மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளை கொடுங்கள், நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்று சொன்னதைக் கேட்ட ஜனங்களும், ஆயக்காரரும், போர் சேவகரும், போதகரும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட போது, அதற்கு பரிதானம் வாங்காதீர்கள் ஏழைகளுக்கு கொடுங்கள், யாருக்கும் இடுக்கண் செய்யாதீர்கள் என்று பல தீர்மானங்கள் எடுக்கும் படி யோவான் ஸ்னானன் வற்புறுத்துகிறான்.

லூக்கா 15 ஆம் அதிகாரத்தில் கெட்ட குமாரன் தன்னுடைய ஆஸ்திகளை எடுத்து கொண்டு தகப்பனையும் வீட்டையும் விட்டு தூர தேசத்துக்கு போய் தனக்குள்ள எல்லாவற்றையும் பாவத்திலும் ஒழுக்க கேட்டிலும் செலவிட்டான் இறுதியாக எல்லாவற்றையும் இழந்த அந்த குமாரன் பசியினால் மிகவும் கஷ்டப்பட்டான் எப்படியென்றால் பன்றி சாப்பிடும் தவிடு கூட கிடைக்காமல் ஒரு முடிவுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டான் எப்படியென்றால் நான் எழுந்து என் தகப்பன் வீட்டிற்கு போவேன். அதுமட்டுமல்லாமல் தான் எடுத்த தீர்மானத்தை உடனே நிறவேற்றினான். அவன் எழுந்து தன்னுடைய தகப்பனிடத்திற்கு வந்தான். இது தான் உண்மையான மனந்திரும்புதல் ஆகும்.

மனந்திரும்பிய அவனுக்கு உயர்ந்த வஸ்திரமும், பொன் மோதிரமும் தரிப்பிக்கப்பட்டது. கொழுத்த கன்று அடிக்கப்பட்டது. இறுதியில் பரலோக வீட்டிற்குள் பிரவேசித்தான். இதுதான் மனந்திரும்பி இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு கிடைக்கும் உலக நன்மைகளும் பரலோக ஆசீர்வாதங்களும் ஆகும். இன்றைக்கு உண்மையான மனந்திரும்புதல் பெறாமல் இன்னும் தேவனுக்கு பிரியமில்லாத பாவங்களில் நாம் இருப்பதால் எல்லா ஆசீர்வாதங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.

விபச்சாரத்தை செய்த பெண்ணிடம் இயேசு ஒரு மனமாற்றத்தை கண்டிருக்கக் கூடும். ஆகவேதான் இயேசு அவளை நோக்கி நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாக தீர்ப்பதில்லை நீ போ இனி பாவம் செய்யாதே என்றார் [ யோவான் 8:11 ]

இயேசு கிறிஸ்துவால் பார்வடைந்த குருடனை தேவாலயத்தில் கண்ட இயேசு இதோ நீ சொஸ்தமானாய். அதிக கேடானதொன்றும் உனக்கு வராதப்படி இனி பாவம் செய்யாதே என்றார் [ யோவான் 5:14 ]

இன்றைக்கு தேவன் நம்மை எச்சரிக்கும் வார்த்தை இனி பாவம் செய்யாதே என்பதாகும் ஆனால் இன்றைக்கு ஜனங்கள் மெய்யாக மனம் திரும்பி தேவனுக்கு பிரியமில்லாத பாவ வழிகளை விட்டு விட்டு தேவனிடம் திரும்புவதில்லை. மனம் திரும்பினேன் என்றும் சொல்லும் விசுவாசிகளிடம் இன்னும் பழைய பாவக்காரியங்களும் முரட்டாட்டங்களும் இருப்பதால் அவர்கள் இன்னும் பழைய சாபத்தின் பிடியிலும் பிரட்ச்சனைகளின் மத்தியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் பலர் தாங்கள் செய்த பாவத்தைக் குறித்து மனஸ்தாபம் கொள்கிறார்கள் வருந்துகிறார்கள் ஆனால் அதை விட்டு விட்டு தேவனிடம் திரும்புவதில்லை.

யூதாஸ் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை காட்டி கொடுத்தான். அதற்காக மனம் வருந்தினான் ஆனால் அவன் மனம் திரும்பவில்லை. மத் 27 ஆம் அதிகாரம் 3,4 வசனங்களில் இயேசு மரண ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டதை கண்ட யூதாஸ் பணத்துக்காக கிறிஸ்துவை காட்டி கொடுத்ததினால் மனஸ்தாபப்பட்டான். கடுமையாக மன சாட்சியில் உறுத்தப்பட்டான். வேதனையையும் அனுபவித்தான். உண்மையான மனந்திரும்புதலை பெறவில்லை. அவன் தன் மனதை மாற்றிக் கொள்ளவில்லை. அவன் புறப்பட்டு போய் நான்று கொண்டு செத்தான்.

இன்றைக்கு நாம் செய்த பாவங்களுக்காகவும், மீறுதலுக்காகவும் வருத்தப்படுகிறோம். ஆனால் உண்மையில் மனமாறுதல் அடைவதில்லை.

எபி 12: 16-17 : ஒருவனும் வேசிக்கள்ளனாகவும் ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப் போல் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்

ஏனென்றால் பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள், அவன் கண்ணீர் விட்டு கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.

ஏசா சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் செய்ததின் மூலம் சேஷ்ட புத்திர பாகத்தோடு சம்பந்தப்பட்ட தேவனுடைய எல்லா ஆசீர்வாதங்களையும் வாக்குத்தத்தங்களையும் அலட்சியம் செய்தான். மீண்டும் பெற்று கொள்ள முயன்றான் அழுதான் கண்ணீர் சிந்தினான் ஆனால் மனம் திரும்புவதற்கு எந்த முயற்சியும் எடுக்க வில்லை இன்றைக்கு அனேகர் ஏசாவைப் போல் சரீரத்துக்கு மகிழ்ச்சியைத் தரும் சில நிமிட இன்பத்திற்காக தேவ ஆசீர்வாதங்களை இழக்கிறார்கள் ஆனால் மனதை மாற்றி கொள்ள எந்த ஒரு முயற்சியும் எடுப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் உண்மையான மனம் திரும்புதலின் உணர்வு சிறிது கூட இல்லை ஏனென்றால் ஒரு பாவத்தை ஒரு முறை செய்யும் போது அதற்காக வருத்தப்படும் இவர்கள் அதே பாவ உணர்வு மற்றும் தேவ பயத்தை இழந்து இருதயத்தை கடினப்படுத்துகிறார்கள்.

மத் 13:15 இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும் காதுகளினால் கேளாமலும் இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும் நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது. காதால் மந்தமாய்க் கேட்டு தங்கள் கண்களை மூடிக் கொண்டார்கள் என்பதே

மேலும் மாற்கு 8:17 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன் சீஷர்களைப் பார்த்து இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிரீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடுமையாயிருக்கிறதா என்று சொல்லுகிறார்

மத் 18:3 ல் நீங்கள் மனந்திரும்பி பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டார்கள் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்கிறேன் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை எச்சரிக்கிறார். உண்மையான மனந்திரும்புதலின் அடையாளம் என்பது சிறுபிள்ளைகளைப் போல் மாறுவது. இப்படிப்பட்டவர்கள்தான் பரலோக ராஜ்ஜியத்திலே பிரவேசிக்கப்பார்கள் என்று இயேசு கிறிஸ்து சொன்னார்.

1தெச 1:9 ஏனெனில் அவர்கள் தாமே எங்களைக் குறித்து உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும் ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு நீங்கள் விக்கிரகங்களைவிட்டுத் தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும்

விக்கிர ஆராதனை எந்த ரூபத்திலிருந்தாலும் அதை தேவன் வெறுக்கிறார் இன்றைக்கு நம்மிடம் காணப்பட கூடிய பாவம் பொருளாசை என்ற விக்கிர ஆராதனை [ கொலே 3:5 ]. சிருஷ்டிக்கப்பட்ட ஒன்றை சிருஷ்டிக்கு மேலாக உயர்த்துவது விக்கிரக ஆராதனை. தங்கள் ஊழியங்களில் தங்களை தேவனுக்கு மேலாக உயர்த்துவது இந்த காரியத்தில் உண்மையான  மனம் திரும்புதல் என்பது சிருஷ்டிக்கப்பட்ட மற்றும் தேவன் உங்களுக்கு கொடுத்த பணம் எல்லாவற்றையும் விட்டு விட்டு தேவனிடத்தில் திரும்பி சர்வ வல்லமையுள்ள தேவனே நீர் ஒருவரே தொழுகைக்கும், ஆராதனைக்கும் பாத்திரர் என்று தேவனை உயர்த்துவது ஆகும்

பணம் சம்பாதிப்பது பாவமல்ல தேவனைக் காட்டிலும் பணத்தை நேசிப்பது பாவம் இன்றைய நாகரிகம் நமக்கு தந்துள்ள பொருள்களையும் சொகுசுகளையும் உபயோகிப்பது பாவமல்ல தேவனை காட்டிலும் இது போன்ற சொகுசுகளையும் பொருளையும் அதிகமாக நேசித்து அதன் விளைவாக தேவனை விட்டு விட்டு செல்வது பாவம்.

அடுத்ததாக உண்மையான மனம் திரும்புதல் என்பது நம் உள்ளான மனிதனில் ஒரு உயிர்ப்பிக்கிற அனுபவத்தை கொண்டு வர வேண்டும். பாவம் செய்கிற ஆத்துமா சாகும் என்று வேதம் சொல்லுகிறது. உண்மையான மனம் திரும்புகிற அனுபவம் ஒவ்வொருவருடைய ஆத்துமாக்களையும் உயிர்ப்பிக்கிற அனுபவமாக இருக்க வேண்டும். லூக்கா 15:32 ல் தகப்பன் மனம் திரும்பி வந்த இளைய குமாரனை பற்றி சொல்லும் போது உன் சகோதரனாகிய இவனோ மரித்தான் திரும்பவும் உயிர்பிக்கப்பட்டான். காணாமல் போனான் திரும்பவும் காணப்பட்டார் ஆனப்படியால் நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டும் என்றான் அல்லவா.

லூக்கா 15:7 அதேபோல மன்ந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

பிரியமானவர்களே ஒருவன் மனம் திரும்பும் போது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும் என்று இயேசு சொன்னார். சிறுபிள்ளையை போல மனம் திரும்புகிறவன் எவனோ அவன் மாத்திரம் மட்டுமே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும் என்று இயேசு கிறிஸ்து எச்சரித்ததை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.

இன்றைக்கு உங்களை நிதானித்து அறியுங்கள் நாம் தேவனுக்கு செய்யும் பிரியமில்லாத பொல்லாத வழிகளிலிருந்தும் நாம் உண்மையிலே மனம் திரும்பியிருக்கிறோமா? எபிரேயர் 6:1 ல் மனந்திரும்புதல் என்பது செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனம் திரும்புதல் அப் 20:21 ல் இது தேவனிடத்திற்கு மனந்திரும்புதல் என்று விளக்கப்படுகிறது. அதாவது நாம் செத்த கிரியைகளிலிருந்து விலகி தேவனிடத்திற்கு திரும்பி தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய ஆயத்தமாக இருக்கும் என்பதே.

எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தையை போல் இருக்கிறது ஏசாயா 64:6, மதப்பாரம்பரியத்தின் பேரிலும் ஒழுக்கத்தின் சார்பிலும் செய்யப்படுகிற ஆனால் மனந்திரும்புதல் மற்றும் விசுவாசத்தின் ஆதாரம் இல்லாத காரியங்கள் அனைத்தும் தேவனுக்கு ஏற்புடையது அல்ல. தான தர்மம், ஜெபங்கள் சபையில் பங்கேற்றல் இது போன்ற மத பாரம்பரியங்கள் மற்றும் சடங்குகள் அனைத்தும் மனம் திரும்புதல் மற்றும் விசுவாசத்தை சார்ந்து இராமல் இருத்தல் இது அனைத்தும் செத்த கிரியைகளாகவும் அழுக்கான கந்தையாகவும் இருக்கிறது.

உண்மையான மனந்திரும்புதல் தேவனுடைய இலவசமான மிக உயர்ந்த கிருபையிலிருந்தே ஆரம்பமாகிறது. தேவனுடைய கிரியையின் கிருபையில்லாமல் தேவனுடைய ஆவியின் அசைவாடுதல் இல்லாமல் உண்மையான மனந்திரும்புதல் மனிதனிடம் ஏற்படுவதற்கு சாத்தியமில்லை. தாவீது தேவனே எங்களை திருப்பி கொண்டு வாரும் அப்பொழுது இரட்சிக்கப்படுவோம், [சங் 80:3,7] என்கிறார். எரேமியா, புலம்பல் 5:21 ல் கர்த்தாவே எங்களை உம்மிடத்தில் திருப்பி கொள்ளும் அப்பொழுது திரும்புவோம் என்கிறார். மாற்கு 1:14 ல் இயேசு கிறிஸ்து, காலம் நிறைவேறிற்று தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாயிற்று மனம் திரும்பி சுவிஷேத்தை விசுவாசியுங்கள் என்றார்.

முதலில் மனம் திரும்புங்கள் பின்பு விசுவாசியுங்கள் என்றார்

அப் 2:38 பேதுரு அவர்களை நோக்கி நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்னானம் பெற்றுக் கொள்ளுங்கள் அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்

லூக்கா 24:46-47 எழுதியிருக்கிறபடி கிறிஸ்து பாடுபடவும் மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது.

அன்றியும் மனந்திரும்புதலுக்கும், பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.

 

இங்கேயும் முதலில் மனம் திரும்புதலும் அதன் பிறகு ஞானஸ்னானமும் பாவங்களிலிருந்து மன்னிப்பும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எவ்வளவு பெரிய கொடிய பாவமானாலும் எல்லா பாவங்களையும் மீறுதல்களையும் தேவன் மன்னிக்க முடியும் ஆனால் முதலாவது அவைகளிலிருந்து மனம் திரும்பி இருக்க வேண்டும் தேவனிடம் திரும்ப தீர்மானம் எடுத்து அதை நடைமுறை படுத்த வேண்டும். பழைய பாவ வழிகளை விட்டு விட மெய்யான விருப்பம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

எனவே பிரியமானவர்களே இயேசு கிறிஸ்துவின் ரகசிய வருகை வரப் போகும் இந்த கடைசி நாட்களில் நாம் பொல்லாத வழிகளை விட்டு தேவனிடத்தில் திரும்புவோம். இயேசுவை விசுவாசிப்போம், பாவங்களை அறிக்கையிட்டு அவரிடம் மன்னிப்பு கேட்போம். கிருபையினால் தேவன் நம்மை இரட்சித்து ஜீவ பாதையில் நடத்தும்படிக்கு நம்மை ஒப்புக் கொடுப்போம். ஆமென்.