Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 05/11/2016

ஒப்புரவாகுதல்

 

கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒப்புரவாகுதல் மிகவும் முக்கியம். இன்றைக்கு சபைகளிலும், குடும்பங்களிலும் ஒப்புரவாகுதல் இல்லாததால் ஒரு உண்மையான ஐக்கியம் காணப்படுவதில்லை. இன்றைக்கு எழுப்புதலுக்கு தடையாக இருப்பது குடும்பங்களிலும் சபைகளிலும் ஒரு மனம் இல்லாத காரணமே ஆகும். இன்றைக்கு சபைகளில் ஒன்று கூடி ஆராதித்தாலும் ஜெபித்தாலும் அனேகர் ஒருவருக்கொருவர் குறைகளை வைத்து கொண்டே இருக்கிறார்கள். அத்தகைய குறைகளை ஒருபோதும் களைந்து போட முன்வருவதில்லை, ஏனென்றால் யார் முதலாவது ஒப்புரவாகுவது என்கிற சுயமே அவர்களை தடுக்கிறது.

தன் சுயத்தை சிலுவையில் அறையாத அதாவது சுயத்துக்கு மரிக்காத யாருமே ஒப்புரவாகுதலுக்கு முன்வருவதில்லை. அவர்கள் கேட்கிற முதல் கேள்வி நான் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் . நான் எதற்கு ஒப்புரவாக வேண்டும் என்கிற அகங்காரமே.

இன்றைக்கு சபைகளில் பலர் தங்கள் சொந்த சகோதர சகோதரிகளுடனும் கூட வருடக்கணக்காக பேசுவதே இல்லை. ஏன் ஊழியம் செய்கிறவர்கள் கூட பலவித பிரச்சனைகள் மற்றும் பிரிவினையின் நிமித்தமோ பகைமையின் நிமித்தமோ பேசுவதில்லை. சிலர் மனதில் கசப்பையும் வைராக்கியத்தையும் வைத்து விட்டு பேச வேண்டும் என்ற எண்ணத்தில் பேசினா லும் அவர்களுக்கிடையான குறைகள் மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்

உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள். யாக் 3:14

 

மேலும் சங் 66:18ல் என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால் ஆண்டவர் எனக்கு செவிக் கொடார் என்று தாவீது சொல்லுகிறான். இன்றைக்கு நாம் வெளிப்புறமாக ஒப்புரவு ஆகுகிறோம் ஆனால் இருதயத்தின் ஆழத்தில் இன்னும் அந்த குறைகள் அப்படியே இருக்குமானால் அது நம்மை முழுமையாக பரிசுத்தத்திற்கு செல்வதை தடை செய்கிறது. இன்றைக்கு ஊழியம் செய்கிற நீங்கள் பிறரிடம் உள்ள குறைகளை சரி செய்து ஒப்புரவாகாமல் ஊழியம் செய்யாதீர்கள்.

மற்றவர்களுக்கு போதிக்கிற நீ உனக்கு தானே போதியாமலிருக்கலாமா [ ரோமர் 2:21 ] என்று வசனம் சொல்லுகிறது. எனவே முதலாவதாக உங்களைத் தாழ்த்தி பிறரிடம் உங்களுக்கு உள்ள குறைகளை சரி செய்து விட்டு பின்பு ஊழியம் செய்யுங்கள். ஏனென்றால்

1யோவான் 2:4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.  என்று வசனம் சொல்லுகிறது.

அடுத்ததாக காணிக்கை போடுவதற்கு முன்பு கூட சகோதரனிடம் உள்ள குறைகளை சரி செய்து ஒப்புரவாக வேண்டும் என்று இயேசு கிறிஸ்து கூறினார்

ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில்,

அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. மத் 5:23-24.

 

இன்றைக்கு நீங்கள் பலருடன் உள்ள குறைகளை சரி செய்யாமல் ஒப்புரவாகாமல் சமாதானமடையாமல் பல வருடங்களாக கொடுக்கும் காணிக்கை எப்படி அங்கிகரிக்கப்படும்? பலியும் காணிக்கையும் எனக்கு பிரியமானதல்ல என்று சொன்ன ஆண்டவர் காணிக்கை போடுவதற்கு முன்பு பிறரிடம் நமக்கு உள்ள குறைகளை சரி செய்ய சொல்லும் போது வானத்தையும் பூமியையும் படைத்த தேவனுக்கு அதாவது நமது எஜமானுக்கு ஊழியம் செய்கிற நாம் குறையற்றவர்களாகவும், கறையற்றவர்களாகவும் இருக்க வேண்டும் மேலும் தேவன் பரலோகராஜ்யத்தை சுதந்தரிப்பதற்கு கூட இந்த தகுதியை தேவன் எதிர்பார்க்கிறார்,

2பேதுரு 3:12,14 - தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்.

ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.

 

அடுத்ததாக நாம் ஜெபம் பண்ணும் போது கூட ஒருவருக்கொருவர் குறைப்பாடு உண்டு என்றால் தேவன் நம் தப்பிதங்களை மன்னித்தது போல நாமும் பிறர் நமக்கு செய்த தப்பிதங்களை மன்னித்து ஒப்புரவாக வேண்டும் என்று இயேசு சொன்னார்.

மாற்கு 11:25-26 - நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.

நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார்.

 

தேவன் நாம் செய்த மலை போன்ற பாவங்களை நமக்கு மன்னித்திருக்கிறார். ஆனால் பிறர் நமக்கு எதிராக செய்த சிறு துளியளவு காரியங்களை நாம் மன்னிப்பது இல்லை, மேலும் அவர்கள் நமக்கு செய்த காரியங்களையே ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் பிறர் நமக்கு செய்த துன்பங்களை முழு மனதோடு மன்னிக்கும் போது தான் நம்முடைய வாழ்க்கையில் ஒரு முழுமையான விடுதலையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அடுத்ததாக பலருடைய குடும்பங்களில் காணப்படும் நோய்களும் பெலவீனங்களும், எவ்வளவு அதிகமாக ஜெபித்தும் குணமடையாமல் இருப்பதற்கு காரணம் நம்முடைய குறைகளை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு சரி செய்யாமல் இருப்பதே ஆகும். இன்றைக்கு அனேகர் பிறருக்கு விரோதமாக செய்த குற்றங்களுக்காக ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்கிறார்கள் ஆனால் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் போய் மன்னிப்பு கேட்பதில்லை.

யாக் 5:16 -  நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

தெய்வீக சுகத்துக்காக பல வருடங்களாக ஜெபித்தும் அந்த ஜெபம் கேட்கபடாமல் இருப்பதற்கு உள்ள தடை என்ன தெரியுமா நமக்கு பிறரிடம் உள்ள குறையை சரி செய்யாமல் இருப்பதே ஆகும். எனவே பிரியமானவர்களே இனியும் தாமதிக்காமல் பிறரிடம் குறைகள் இருக்குமானால் அதை உடனடியாக சரி பண்ணி ஒப்புரவாகுங்கள், அப்பொழுது தெய்வீக விடுதலையை அதாவது பரிபூரணமான சுகத்தைப் பெற்று கொள்வீர்கள்.

கொலோ 3:12,13 - ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;

 ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

 

நான் இஸ்லாமியர்களை பார்த்திருக்கிறேன் அவர்கள் தங்களுடைய புனித பயணத்துக்கு முன்பாக அவர்கள் வேலை ஸ்தலத்திற்கு வந்து தான் யாரையாவது மனஸ்தாபப்படுத்திருந்தால் அவர்களிடம் சென்று மன்னிப்பு கேட்பதுண்டு. ஒரு முறை இந்திய எல்லை பகுதிக்கு பாதுகாப்புக்காக செல்லும் இந்திய வீரர் தன் சகோதரரோடு வாட்சப்பில் பேசி அனுப்பிய சம்பாஷணைகளை நான் கேட்டேன். அவர் சொன்னார் தம்பி நாம் ஒரே வயிற்றில் பிறந்தவர்கள் மனிதர்கள் தான், ஆகவே என்னிடம் உனக்கு ஏதாவது குறை உண்டானால் என்னை மன்னித்து கொள். . நீங்கள் சந்தோஷமாய் இருங்கள் நான் யுத்த களத்துக்கு போகிறேன்.

நான் திரும்பி வந்தால் சந்தோஷம் ஆனால் ஒருவேளை நான் யுத்த களத்தில் மரித்தாலும் சந்தோஷப்படுங்கள் என்று சொன்னார். ஒரு புறஜாதி மனிதன் யுத்த களத்துக்கு போவதற்கு முன்பு தன் சகோதரனிடம் குறையை சரி செய்து ஒப்புரவாகி செல்கிறான். ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கிற நாம் ஒருவருக்கொருவர் செய்த தப்பிதங்களை அறிக்கையிடாததற்கு நம்முடைய இருதக் கடினமும் சுயத்துக்கு மரிக்காத நிலையுமே காரணமாகும். சமுகத்தில் சாதாரணமானவர்கள் அதாவது சத்தியமே அறியாதவர்கள் தேவன் செய்ய சொன்ன சத்தியத்துக்கும், கட்டளைக்கும் கீழ்ப்படியும் போது இன்றைக்கு பரலோகத்துக்கு போகிறோம் என்று சொல்லும் நாமும் தேவ ஆவியால் நிரப்படுகிறோம் என்று சொல்லுகிற நாம் சத்தியத்துக்கு கீழ்ப்படியாமல் இருப்பது மிகவும் வருத்தமான விஷயம். எனவே இந்த கடைசி நாள்களில் சகல சத்தியத்துக்குள்ளும் நம்மை நடத்துகிற பரிசுத்த ஆவியானவரிடம் இந்த கற்பனைகளுக்கு கீழ்ப்படியும் படி நம்மை தாழ்த்தி அற்பணிப்போம்.

பிரியமானவர்களே இந்த கடைசி நாள்களில் நாம் பிறருக்கு விரோதமாக செய்த தப்பிதங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு மன்னிப்பை பெற்றுக் கொண்டு குறையை சரி செய்ய முயற்சி எடுப்போம். நீங்கள் மற்றவர்களுக்கு செய்த குறையை சரி செய்தால் தான் தேவன் உங்கள் குறைகளை சரி செய்வார்.

பிலி 4:19- என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.

தேவன் இந்த உலகத்தில் மிக பெரிய ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார் இந்த ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக் கொள்ளாததற்கு முக்கிய காரணம் நாம் பலரும் குறையை சரி செய்து ஒப்புரவாகாமல் இருப்பதே ஆகும். ஒருவன் என்னை பின்பற்றி வர விரும்பினால் அவன் தன்னை தானே வெறுத்து தன் சிலுவையை எடுத்து கொண்டு என்னை பின்பற்றி வரக் கடவன் என்று இயேசு சொன்னார். நான் என்ற சுயத்துக்கு மரிக்காதவன் பிறரிடம் உள்ள குறையை சரி செய்ய முன்வரமாட்டான். அவன் இயேசுவுக்கு சீஷனாக மாற மாட்டான்.

ஒரு பாவமும் செய்யாத இயேசு கிறிஸ்து தன்னை சிலுவையில் அறைந்து அவமானப்படுத்த ஆரம்பித்தவுடன் பிதாவை நோக்கி பிதாவே இவர்களை மன்னியுங்கள் இவர்கள் செய்கிறதை அறியாதிருக்கிறார்கள் அதாவது தெரியாமல் செய்கிறார்கள் என்றார்

மத் 11:29 - நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

என்று இயேசு சொன்ன அவருடைய நுகத்தை இந்த கடைசி நாள்களில் ஏற்று கொள்வோம். இயேசு கிறிஸ்துவின் சிந்தையே உங்களிடம் இருப்பதாக.

 யோசப்பை அவனது சகோதரர்கள் அடிமையாக விற்றுப் போட்டார்கள். அவர் தன் சகோதர்களால் பெற்றோர்களின் அரவணைப்பையும் அன்பையும் இழந்து போனான். தன் சகோதரர்களால் வாலிப நாள்களில் தனிமைப்படுத்தப்பட்ட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டான். ஆனால் எகிப்து தேசத்தில் சகல அதிகாரங்களை உடையவராய் உயர்த்தப்பட்ட யோசேப்பு தன் சகோதரர்களை மீண்டும் சந்தித்த போது அவரிடம் வெளிப்பட்டது அன்பு மாத்திரமே.

அவன் அவர்களுடைய தப்பிதங்களை சொல்லி அவர்களை வருத்தப்படுத்தி மன நோக செய்து அவர்களை பழி வாங்கவில்லை. மாறாக அவர்களை கட்டி தழுவி அரவணைத்துக் கொண்டான். அவர்கள் ஒருவருக்கொருவர் ஒப்புரவாகி கொண்டார்கள். மேலும் அவர்கள் யோசேப்பினால் ஆசீர்வதிக்கப்பட்டனர். ஏனென்றால் தேவ ஆவியானவர் நம்மோடு இருப்பார் என்றால் தேவனை நேசிக்கிறேன் என்று சொல்லுகிற நாம் யோசேப்பைப் போல நம் சகோதரரோடும் அன்பு கூறுவோம். குறைகளை வைத்துக் கொண்டிருக்க மாட்டோம்.

1 யோவான் 4-20 - தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?

 

எனவே  அவர் சொன்ன சத்தியத்துக்கு கீழ்ப்படிந்து இயேசு உங்களுக்கு விட்டு விட்டு போன புத்திக்கெட்டாத அந்த தேவ சமாதானத்தை பெற்றுக் கொள்ளும்படியாக நாமும் ஒருவருக்கொருவர் மன்னித்து இயேசுவோடு கூட ஒப்புரவாகிக் கொள்வோம்.

எபேசியர் 4:1,2,3 - ஆதலால், கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து,

 மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி,

சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.