Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 12/03/2016

புது பெலன்

நாங்கள் சோர்ந்து  போகிறதில்லை

ஏசாயா 40:31ல், கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் புது பெலனடைந்து கழுகுகளை போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள்

இதற்கு முந்தின வசனங்களில் அநாதி தேவன் சோர்ந்து போகிறதில்லை மாறாக சோர்ந்து போகிறவர்களுக்கு அவர் பெலன் கொடுத்து சத்துவமில்லாதவனுக்கு அவர் சத்துவத்தை பெருகப் பண்ணுகிறார். இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்து போவார்கள், வாலிபரும் இடறி விழுவார்கள் என்று வேதம் சொல்லுகிறது. இன்றைய உலகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு பெரிய மனிதர்களானாலும் சரி அவர்கள் சோர்ந்து போய் விடுகிறார்கள். ஆனால் கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள் நடந்தாலும் சோர்ந்து போகார்கள்.

எப்படியென்றால் வானத்தையும் பூமியையும் படைத்த தேவன் என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன் நீங்கள் உயிரடைவீர்கள் என்று எசே 34:14 ல் சொல்லுகிறார். இன்றைக்கு அனேகர் உலகத்துக்கு அடிமையாகி பரலோகத்திலிருந்து அருளப்பட்ட பரிசுத்த ஆவியினால் வருகிற வல்லமையை பெற்று கொள்ளாததினால் சோர்ந்து போகிறார்கள். எனவே தான் பவுல், கொலே 3:1ல் பூமியிலுள்ளவைகளையல்ல மேலானவைகளையே நாடுங்கள் என்று கூறுகிறார்.

2கொரி 4:16: ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து  போகிறதில்லை எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது.

யோவான் 14:16-17 நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன் அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்கு தந்தருளுவார்

உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ள மாட்டாது. அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால் நீங்கள் அவரை அறிவீர்கள்

இந்த உலகத்தில் இருப்பவர்களுக்கும் இந்த உலகத்தை நேசிப்பவர்களுக்கும் எல்லாம் கிடைப்பதால் அவர்கள் கர்த்தருக்குக் காத்திருப்பதில்லை

மாற்கு 4:18 ல் சொன்னபடி வசனத்தை கேட்டும் உலக கவலைகளும் ஐசுவரியத்தின் மயக்கமும் மற்றவைகளைப் பற்றி உண்டாகிற  இச்சைகளும் வசனத்தை நெருக்கி போட அதினால் பயனற்று போகிறார்கள்

ஒரு முறை ஒரு விவசாயி தனக்கு கிடைத்த கழுகு முட்டையை அடைக்காக்கும் கோழி முட்டைகளோடு கொண்டு போய் வைத்தான், சில நாட்களுக்கு பிறகு எல்லா முட்டையும் குஞ்சு பொறித்தது. கழுகு குஞ்சும் கோழி குஞ்சுகளோடு சுற்றி திரிந்தது. கோழி குஞ்சானது மண்ணை கிழறி மேய்ந்து கொண்டிருந்தது. ஆனால் கழுகு குஞ்சுயோ வானத்தையே பார்த்து கொண்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் அது நான் இவர்களை சார்ந்தவன் இல்லை, நான் வித்தியாசமானவன் மேலும் நான் பூமிக்குரியவன் அல்ல என்று தனக்குள் எண்ணி கொண்டிருந்தது. பிறகு பறக்கும் பிராயம் வந்த போது திடீரென்று வானத்தில் ஒரு கழுகு செட்டைகளை அடித்து பறப்பதைப் பார்த்தது.உடனே இதுவும் பறக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றது. அப்படியே செட்டைகளை அடித்து அடித்து உயர எழும்பி பறந்து சென்றது. பிரியமானவர்களே நாமும் இந்த கழுகு குஞ்சை போல வானத்தை அதாவது பரலோகத்தை பார்க்கிறவர்களாக இருக்க வேண்டும். நாம் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், முன் குறிக்கப்பட்டவர்கள், அழைக்கப்பட்டவர்கள், நீதிமான்களாக்கப்பட்டவர்கள் ஆகவே தேவன் நம்மை மகிமைப்படுத்தும்படியாக மேலான காரியங்களை தேட வேண்டும். ஆகவே காணப்படாத நித்தியமானவைகளை தேட வேண்டும். மாறாக காணப்படுகிற அநித்தியமானவைகள் மேல் ஆசை வைக்கும் போது அவைகள் நம்மை சோர்வுக்குள் கொண்டு போய் விடும்.

2கொரி 4:16ல், ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்து எங்கள் உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது.

2கொரி 4:17 மேலும் காணப்படுகிறவைகளையல்ல காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.என்று பவுல் எழுதுகிறார் அடுத்ததாக எபேசி 3:15,16 ல் பவுல் இதை தெளிவுப் படுத்துகிறார் எப்படியெனில்

எபேசி 3:15-16, நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு

நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும். மேலும் என்று இயேசு கிறிஸ்து சொன்னார். இன்றைக்கு உலகத்துக்கு ஒத்த வேஷம் தரியாமல் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று அறிந்து மனம் புதிதாகிறதினால் வரும் வல்லமையால் மறுரூபத்தை அனேகர் பெற்றுக் கொள்கிறார்கள்.

மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்திற்கு எடுத்து கொள்ளப்படுவதற்கு முன் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேற காத்திருங்கள் என்று சொன்னார் [அப் 1:5] இதற்குக் கீழ்ப்படிந்து இயேசு கிறிஸ்துவின் சீஷர்களும் அப்போஸ்தலர்களும் ஒரு மனதோடு ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள் [அப் 1:14], மேல் வீட்டறையில் அவர்கள் தேவ சமுகத்தில் காத்திருந்த போது பரிசுத்த ஆவியானவர் பலமாக அவர்கள் மேல் இறங்கினார். அங்கிருந்தவர்களுடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டு அக்கினிமயமான நாவுகள் அவர்கள் மேல் இறங்கினதை கண்டார்கள்.தேவ வல்லமையால் அவர்கள் நிரப்பப்பட்ட பொழுது நவமான பாஷையில் பேச ஆரம்பித்தார்கள் இதைப் பார்த்த, கேட்ட அனேக உலக ஜனங்கள் பயந்து போனார்கள் இதோ தேவ வல்லமையை பெற்று கொண்ட அப்போஸ்தலர்களின் ஊழியங்கள் வித்தியாசமாக மாறியது. ஆலயத்தில் நுழைந்த பேதுருவும் யோவானும் பிச்சை எடுத்து கொண்டிருந்த சப்பாணியை நடக்க செய்தார்கள். பேதுரு பேசின போது முதல் பிரசங்கத்தில் மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்கள். பேதுருவிடம் இருந்த தேவ வல்லமையினால் அவன் நிழல் பட்டு அனேகர் சுகமடைந்தார்கள்.

எப்படியெனில், அப் 1:8ல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார், பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்ற வாக்குத்தத்தம் ஒவ்வொருவருவருடைய வாழ்க்கையிலும் நிறைவேறியது இயற்கைக்கு அப்பாற்பட்டு மகிமையாக ஊழியம் செய்த பேதுருவை சிலுவையில் தலைகீழாக அறைந்து கொன்றார்கள். இயேசு கிறிஸ்துவை பிடிக்க வந்த ஒருவனின் காதை வெட்டிய பேதுரு தன்னை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தான்.ஸ்தேவான் தன்னை கல்லெறிந்தவர்களை மன்னித்தான் எப்படியென்றால் ஆண்டவரே இந்த பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதிரும் என்றான். இப்படியாக ஒவ்வொரு அப்போஸ்தலர்களும் கர்த்தராகிய இயேசுவின் சுபாவத்தை தங்கள் வாழ்விலும் சாவிலும் வெளிப்படுத்தினார்கள்.

இன்றைக்கு நாம் தேவ சமுகத்தில் காத்திருக்க வேண்டும், பரிசுத்த ஆவியினால் நிரப்ப பட வேண்டும். குடும்பங்கள் காத்திருக்க வேண்டும், சபைகள் காத்திருக்க வேண்டும் நிரப்ப பட வேண்டும். இன்றைக்கு இந்த உன்னத அனுபவங்களை பெற்றுக் கொள்ளாதபடிக்கு அனேக சபைகள் மற்றும் விசுவாசிகள், ஊழியக்காரர்கள் பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் தேவனுக்கு காத்திருக்காதபடிக்கும், தேவ வல்லைமையை பெற்று கொள்ளாதபடி அவர்களுடைய ஆத்துமா மண்ணோடு ஒட்டி கொண்டிருக்கிறது [சங் 119:25]

இன்றைக்கு பல சபைகள் தாங்கள் உருவாக்கின உபதேசங்களுக்கும் சட்ட திட்டங்களுக்கும் முக்கியம் கொடுத்து அதற்கு கட்டுப்பட்டு இருப்பதால் தேவ வல்லமையை பெற்றுக் கொள்வதில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவரோ எதற்கும் கட்டுபடாதவர் அவர் செங்கடலை இரண்டாக பிளந்தவர், எரிகோ கோட்டயை தகர்த்தவர். அவரது வல்லமையை பெற்று கொள்ளாமல் இன்றைக்கு அனேகர் ஊழியம் செய்வதால் சோர்ந்து போய் விடுகிறார்கள். இறுதியில் உலகத்துக்கு ஒத்தவேஷம் தரித்து அதற்கு அடிமையாகிறார்கள்.ஆனால் அப்போஸ்தலர்களோ தேவ வல்லமையை மேல் வீட்டில் பெற்றுக் கொண்டு திடமனதாக இருந்தார்கள்.

 சபையே தேவ வல்லமையை பெற்றுக் கொள்ள ஆயத்தப்படு. கர்த்தர் சொல்கிறார் எழும்பு சீயோனே உன் வல்லமையை தரித்து கொள் பரிசுத்த நகரமே உன் ராஜா வருகிறார். இன்றைக்கு அனேக தேசங்களில் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக அருளப்படும் பின்மாரியின் மழை ஊற்றப்படுகிறது. சபையே எழுந்திரு தேவ வல்லமையை பெற்றுக் கொள்ள ஆயத்தப்படு. தேவன் உன்னை அவர் வல்லமையால் நிரப்ப விரும்புகிறார். தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்று சொல்கிறார். தேவன் மேல் எந்த அளவு தாகத்தோடு வருகிறீர்களோ அந்த அளவு நீங்கள் தேவ வல்லமையை பெற்று கொள்வீர்கள். மான்கள் நீரோடைகளை வாஞ்சிப்பது போல உங்கள் ஆத்துமா தேவனை வாஞ்சிக்கிறதா?பிரியமானவர்களே இது கடைசி காலம், வறண்ட நிலத்தின் மேல் தண்ணீரும் அவாந்திர வெளியில் ஆறுகளும் ஊற்றப்படும் காலம் இது. அப் 2:17 ல், சொல்லப்பட்ட அதாவது கடைசி நாட்களில் நான் மாமிசமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள் உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள் உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள் என்கிற வாக்குத்தத்தம் அனேக தேசங்களில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. பாலைவனம் வயல் வெளியாய் மாறும். வயல்வெளி செழிப்பான காடாய் மாறும் காலம் இது, ஜீவத்தண்ணீர் நதிகள் புறப்பட்டு ஓடும் காலம். பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கும் போது பரம பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறவர்களுக்கு பரிசுத்த ஆவியை கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? நீ எங்கே இருக்கிறாய்? எங்கே ஓடுகிறாய்? தேவ சமுகத்தில் தரித்திரு. தேவன் உன்னை அக்கினி ஜீவாலையாய் மாற்றுவார்.

லூக்கா 10:19, இதோ சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமைகளையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன். ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.

மேலும், சங் 104:4, தம்முடைய தூதர்களை காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜீவாலைகளாகவும் செய்கிறார்.

பிரியமானவர்களே தேவ வல்லமை இல்லாமல் ஊழியம் செய்ய போகாதீர்கள். என்னிடத்தில் கேள்விப் பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேற காத்திருங்கள் என்று இன்றைக்கும் இயேசுவின் குரல் கேட்கிறது. கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் மாத்திரமே கழுகுகளை போல புது பெலனைடைந்து உயரே எழும்புவார்கள். அவர்கள் பரலோகத்தை பார்ப்பார்கள். ஆனால் காத்திருக்காதவர்களோ அதாவது பூமிக்குரிய காரியங்களுக்காக காத்திருந்து சோர்ந்து போய் விடுகிறார்கள்.

இன்றைக்கு பிரபலமாக இருக்கும் ஒரு ஊழியக்காரர் தன் ஆரம்ப நாள்களில் ஒரு கிராமத்துக்கு ஊழியம் செய்ய சென்றார் அங்கு ஒரு கிறிஸ்தவ ஸ்தாபனத்தில் தங்கி ஊழியம் செய்ய வேண்டும். அங்கு ஏற்கனவே இரண்டு முதிர்ந்த ஊழியக்காரர்கள் அந்த ஸ்தாபனத்தில் தங்கிருந்து ஊழியம் செய்து வந்தார்கள். இவர் வாலிபனானதால் அவர்கள் இவரைப் பார்த்து தம்பி இந்த ஊரில் பிசாசிகளின் தொல்லை நிறைய உண்டு. எனவே தனியாக வெளியே போக வேண்டாம் என்று சொன்னார்கள்.இவரோ அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தேவ சமுகத்தில் தரித்திருந்து  எப்பொழுதும் ஜெபம் பண்ணி கொண்டிருந்தார் ஒரு நாள் அந்த இரண்டு பேரில் ஒருவர் வேகமாக ஓடி வந்தார் அவர் மிகவும் பதட்டத்தோடு இருந்தார். அவர் நடுக்கத்தோடு இவரைப்பார்த்து தம்பி என் நண்பரை பிசாசு பிடித்து வைத்திருக்கிறது. தயவு செய்து நீ வந்து ஏதாவது செய்து அவரை விடுவிக்க வேண்டும் என்றார். இவரும் அந்த இடத்துக்கு சென்ற பொழுது ஒரு பிசாசு பிடித்த பெண் அவரை பிடித்து வைத்திருந்தது. அவரது சட்டையெல்லாம் கிழிக்கப்பட்டு பரிதாபமான நிலையில் அந்த பெண்மணியிடம் மாட்டிக் கொண்டிருந்தார். தேவ வல்லமையால் நிறைந்திருந்த இவரைப் பாத்தவுடன் அந்த பிசாசு பிடித்த பெண் என் கிட்ட நெருங்காதே என்று சத்தமிட ஆரம்பித்தது. இவர் தன் கரத்தை நீட்டி இயேசுவின் நாமத்தை சொல்லி அந்த பிசாசை அதட்ட அது அந்த ஊழியக்காரரை விட்டு விட்டது. அடுத்து தான் ஆளுகை செய்த பெண்மணியையும் விட்டு விட்டு ஓடி போய்விட்டது.இத்தகைய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அனேகர் அன்றைய தினமே இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டனர்.

ஆதி 41:38ல் எகிப்தின் ராஜா பார்வோன் தன் ஊழியக்காரரைப் பார்த்து தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷரைப் போல வேறொருவர் உண்டா என்று கேட்கிறான். இன்றைக்கு ஆவியிலே நிரம்புகிறோம் என்று சொல்லுகிற நம்மைப் பார்த்து புறஜாதி ஜனங்கள் இப்படி சாட்சி சொல்ல முடியுமா? ரோமர் 8:14ல் எவர்கள் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறார்களா அவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள். இன்றைக்கு விசுவாசிகள் சபைக்குள்ளே மாத்திரம் நிரம்புகிறவர்களாகவே இருக்கிறார்கள் பிரியமானவர்களே நாம் தேவ வல்லமையை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்லும்படியாக நம் பாத்திரம் நிரம்பி வழிய வேண்டும். எசேக்கியேல் 37ல் அதிகாரத்தில் எசேக்கியேல் தீர்க்கதரிசி பள்ளத்தாக்கில் நடந்த போது உலர்ந்த எலும்புகள் தான் இருந்தது. ஆனால் ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி இதோ நான் உங்களுக்குள் ஆவியை பிரவேசிக்கப் பண்ணுவேன் அப்பொழுது உயிரடைவீர்கள் என்றார் [எசே 37:5], அடுத்ததாக எசே 37:14 என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன் நீங்கள் உயிரடைவீர்கள் நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள்.

பிரியமானவர்களே இன்றைக்கு அனேக சபைகள் உலகத்துக்கு அடிமையாகி ஆவிக்குரிய வாழ்க்கையில் உலர்ந்த எலும்புகளைப் போல இருக்கிறது. இந்த நாட்களில் தேவன் அவர்களை உயிர்பிக்க போகிறார். கடைசிகால பின் மாரியின் மழை, ஆவிக்குரிய உன்னத வல்லமை ஜனங்களின் மேல் பொழிந்தருள கூடிய கடைசி நாட்கள். இதைப் பெற்றுக் கொள்ள தேவ சமுகத்தில் காத்திருங்கள். சாலமோன் கட்டிய ஆலயத்தில் தேவ மகிமை இறங்கினது போல நீங்கள் தேவ மகிமையின் பிரசனத்தினால் நிறைந்திருக்கும் எழுப்புதலின் காலம். உங்களில் இருந்து வல்லமை புறப்பட்டு போய் அனேகர் சுகமடையும் காலம். அனேகர் உங்களிடம் இருக்கும் தேவ பிரசனத்தினால் பாவ உணர்வடைந்து மனந்திரும்பும் காலம் இது. உங்கள் மேல் இருக்கும் பரிசுத்த ஆவியைப் பார்த்து பிசாசுகள் ஓடும் காலம்.பிரியமானவர்களே கடைசி கால யுத்த வீரர்களாக ஜெப வீரர்களாக தீர்க்கதரிசிகளாக தேவன் உங்களை மாற்ற விரும்புகிறார். தேவ சமுகத்தில் தரித்திருங்கள் தேவ வல்லமையை பெற்று கொள்ளுங்கள். நாம் பரலோகவாசிகள் அதுமட்டுமல்லாமல் நாம் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள். நம்முடைய இலக்கு பரலோகமாகத்தான் எப்பொழுதும் இருக்க வேண்டும் நாம் உலகத்திற்குரியவர்கள் அல்ல.

அப் 7:55, அவன் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய் வானத்தை அண்ணாந்து பார்த்து தேவனுடைய மகிமையையும் தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு. இந்த வசனத்தின் மூலம் நீங்கள் ஒரு காரியத்தை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது அதுஎன்னவென்றால், தேவன் உங்களை இயற்கைக்கு அப்பாற்பட்ட அனுபவங்களுக்குள் நடத்த விரும்புகிறார் உங்கள் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படும், உங்கள் ஆவிக்குரிய செவிகள் கேட்கும் அப்பொழுது உங்கள் இருதயம் தேவனுடைய அசைவாடுதலை உணரும். அதுமட்டுமல்லாமல் பரலோகத்தின் சுகந்த வாசனையை கூட நீங்கள் உணருவீர்கள், ஆகவே பிரியமானவர்களே நீங்கள் உலகத்திலிருந்து வெளியே வாருங்கள் யோவான் 17:16ல் நான் உலகத்தானல்லாதது போல அவர்களும் உலகத்தாரல்ல என்று இயேசு தம்முடைய சீஷர்களைக் குறித்து பிதாவினிடத்தில் பேசினார்.

1கொரி 2:12, நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல் தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்

, பிரியமானவர்களே தேவ சமுகத்தில் காத்திருங்கள் அவரை நோக்கி கூப்பிடுங்கள்.

வேதம் சொல்லுகிறது

என்னை நோக்கிக் கூப்பிடு அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் எரேமியா 33:3.                        அல்லேலூயா!