Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 02/10/2016

 

தானியேலின் ஜெயம்

-         சகோதரி. அனு ஃபெஸ்லின் 

 

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே உங்கள் அனைவரையும் கர்த்தரும் இரட்சகருமாகிய இறைமகன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன். பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமை முற்றுகை போட்ட போது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜாகுலத்தாரில் அழகானவர்களும் யாதொரு மாசும் இல்லாதவர்களும் ஞானத்திலும் அறிவிலும் சிறந்தவர்களும் கல்வியில் நிபுணரும் ராஜா அரமனையில் சேவிக்க திறமையுள்ளவர்களாக தெரிந்தெடுக்கப்பட்ட சில வாலிபர்களில் ஒருவன் தானியேல். பாபிலோனுக்கு அடிமையாக கொண்டுவரப்பட்ட தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது என வேதம் கூறுகிறது[தானியேல்:6:28]. தானியேலின் காரியம் ஜெயமாயிருந்ததற்கான காரணத்தை  வேதத்தின் வாயிலாக தியானிப்போம்.

 

         தரிசனமுள்ள வாழ்க்கை (A man of Vision)

         இடைவிடாத ஜெபமும் ஆராதனையும் (A powerful Prayer warrior)

         தேவனுடைய விசேஷித்த ஆவியை பெற்றிருந்தான் (A spirit-filled man)

         தேவன் பேரில் வைத்த விசுவாசம் (Faithful man)

         தூய்மையான வாழ்க்கை (Perfect Lifestyle)

 

 

1.     தரிசனமுள்ள வாழ்க்கை

தேவன் தனக்கென வைத்திருந்த நோக்கத்தை சித்தத்தை இலக்கை  புரிந்துக்கொண்ட தரிசனமுள்ள வாலிபன் தானியேல். தானியேலுக்கு ராஜாவின் போஜனமும் திராட்சரசமும் பரிமாறப்பட்ட போது வாலிபனான தானியேல் ராஜாவின் போஜனத்தால் தன்னைக் தீட்டுப்படுத்தாமல் காத்துக்கொண்டான்.  எபிரேயர்கள் மாமிசமும் திராட்சரசமும் உண்ணும் பழக்கமுடையவர்கள். அவனுக்கு கொடுக்கப்பட்ட உணவு விக்கிரகத்திற்கு படைக்கப்பட்டதாக அல்லது நியாயப்பிரமான  முறைப்படி தன்னை தீட்டுப்படுத்துகிற  உணவாக இருந்திருக்கலாம்.

 

உணவு கூட தன்னை தீட்டுப்படுத்தாதபடி  தன் இருதயத்தில் பண்ணிக் கொண்ட தீர்மானத்தில் உறுதியாய் செயல்பட்டான் [தானியேல்:1:8-17]. எவ்வளவு உண்மையான அர்பணிப்பு பாருங்கள். தானியேலின் வாழ்க்கை உலகப்பிரகாரமான ராஜாவை அல்ல பரலோக ராஜாவை நோக்கியதாய் இருந்தது. தானியேல் தேவனுடைய பிரமாணங்கள் கற்பனைகளை காத்து நடப்பதில் உறுதியாய் செயல்பட்டான். அதனால் தேவன் அவனுக்கு சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாகினார். வேதம் கூறுகிறது வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள் [கொலோசெயர்:3:17]. நாமும் இரட்சிக்கபட்ட போது நாம் பல தீர்மானங்கள்  எடுத்திருப்போம் ஆனால் நிலைத்திருப்பதில்லை. தானியேலைப் போல நம்முடைய தீர்மானங்களில் உறுதியாயிருந்து  நம்முடைய கிரியைகளினால்  இயேசு ராஜாவை மகிமைப்படுத்துவோம்.

 

2.     தூய்மையான வாழ்க்கை (Perfect man)

பாபிலோனின் பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜ்யத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்; ஆனாலும் ஒரு முகாந்தரத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் கூடாதிருந்தது; அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை[தானியேல்:6:2].எவ்வளவு அருமையான சாட்சி பாருங்கள்.வேதம் கூறுகிறது அவன் தேவனுக்கு முன்பாக குற்றமற்றவனாய் காணப்பட்டதால் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி சிங்கங்களின் வாயை கட்டிப் போட்டார்[தானியேல்:6:22]. தானியேலின் தூய்மையான வாழ்க்கை ராஜாவையே சிங்க கெபிக்கு அழைத்து வந்தது. தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களு- மாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டார்[எபேசியர்:1:4]. நாம் கிறிஸ்தவர்கள் என்று சொல்லுவதில் பெருமை இல்லை. நம்மை பார்க்கிற ஜனங்கள் கிறிஸ்துவின் சாயலை நம்மில் காண வேண்டும்.

 

இவன் உண்மையுள்ளவன், குற்றமற்றவன் என நம் வாழ்க்கையை குறித்து சாட்சி சொல்ல வேண்டும். வேதம் கூறுகிறது தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும் உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவான்[சங்கீதம்:101:6; நீதிமொழிகள்:28:20]; நம்முடைய இருதயத்தில் உண்மையிருக்க தேவன் விருமபுகிறார். நம்முடைய ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காத்துக்கொள்ளுவோம்.

 

3.     வைராக்கியமான  ஜெப வாழ்க்கை  (Prayer warrior)

 

தானியேல் மிகவும் வல்லமையுள்ள ஜெப வீரனாகவும் ஆராதனை வீரனாகவும் காணப்பட்டான். தரியு ராஜா தன்னை  தவிர வேறெந்த தேவனையும் நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறவனை சிங்கங்களின் கெபியில் போட வேண்டுமென்று என்று கட்டளை பிறப்பித்த போதும் தானியேல் ஜீவனுள்ள தேவனையே நோக்கி விண்ணப்பம் பண்ணுவதில் வைராக்கியமாய் இருந்தான். எந்த சூழ்நிலையும் தானியேலின் ஜெப வாழ்க்கையில் பின்னடைவை கொண்டுவரவில்லை. ராஜாவும் பிரதானிகளும் தானியேலிடம் குற்றம் பிடிக்க முகாந்தரம் தேடியும் அவன், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான் [தானியேல்:6:10]. இந்த அனுபவம் சிங்க கெபியில் போடப்பட்ட தானியேலிடம் நீ இடைவிடாமல் ஆராதிக்கிற தேவன் உன்னை தப்புவிக்க வல்லவர் என்று தரியு ராஜாவையே சொல்ல வைத்தது.

 

தானியேலின் ஜெபம் பரலோகத்தையே அசைத்தது.வேதம் கூறுகிறது அவன் கர்த்தருக்கு பிரியமானவன்; அவன் வேண்டிகொள்ளத் தொடங்கின போதே கட்டளை வெளிப்பட்டது[தானியேல்:9:23].தானியேலின் ஜெபம் தேவனுடைய வல்லமையையும் மகத்துவத்தையும் பாபிலோன் தேசத்தில் வெளிப்படுத்தியது. உலகப்பிரகாரமாகவும் அடிமையான தானியேலை பாபிலோன் மாகாணம் முழுவதுக்கும் அதிபதியாகவும் உயர்த்தியது[தானியேல்:2]. கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நம்முடைய ஜெப வாழ்க்கை எப்படியாய் இருக்கிறது. கடமைக்காக ஜெபிக்கிறோமா?

 

இல்லை தேவைகள் சந்திக்கப்பட மட்டும் தேவனை நோக்கி பார்க்கிறோமா? வேதம் கூறுகிறது இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்; ஸ்தோத்திரத்துடனே ஜெபத்தில் விழித்திருங்கள் [கொலோசெயர்:4:2]. ஜெபமே நமக்கு ஜீவன்; ஜெபமில்லையேல் ஜெயமில்லை.  நம் முழங்கால்கள் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருக்கும் பொழுது உலகமோ சாத்தானோ நம்மை ஜெயிக்க முடியாது. தானியேலை போல நாமும் வைராக்கியமான ஜெபவீரர்களாய் மாறுவோம் தேசத்தையே கலக்குவோம்.

 

4.     விசேஷித்த ஆவியையுடைய  வாழ்க்கை (Holy spirit)

 

 தானியேலுக்குள் விசேஷித்த ஆவியாகிய பரிசுத்த ஆவி இருந்தது என்று வேதம் கூறுகிறது[தானியேல்:5:11;6:3].தானியேல் தேவனின் ஆவியை பெற்றிருந்தபடியால் பாபிலோனின் எந்த ராஜாவும் அவனை மேற்கொள்ள முடியவில்லை. தானியேலிடம் இருந்த பரிசுத்த ஆவியின் பெலத்தினால் நேபுகாத்நேச்சார், பெல்ஷாத்சார், தரியு ஆகிய மூன்று ராஜாக்களுக்கும் சொப்பனங்களையும் மறைபொருள்களையும் வெளிப்படுத்தினான். நம்முடைய பரலோக பிதா எல்லவற்றையும் நமக்கு போதிக்க பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனைக்  கொடுத்திருக்கிறார். வேதம் கூறுகிறது பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் [லூக்கா:11:13]. அப்போஸ்தலர்கள் தேவனுடைய பரிசுத்த ஆவியானானவரின் துணையோடு இயற்கைக்கு அப்பாற்பட்ட அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்தனர். தேவனுடைய ஆவி வாசம் செய்யும் ஆலயங்களாய் நம்மை தேவனுக்கு ஒப்புக்கொடுப்போமா? நமக்குள்ளே வாசமாயிருந்து கிரியை செய்கிற ஆவியானவர் நம்மோடு இருக்கும் போது மட்டுமே நாம் பெலனடைந்து முடிவுபரியந்தம் அவருக்கு சாட்சியாய் பரிசுத்தமாய் வாழ முடியும். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய பெலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் தேவ சமூகத்தில் காத்திருந்து பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றுக்  கொள்ளுவோம். பரிசுத்த ஆவியானவரின் துணையோடு பலத்த காரியங்களை செய்கிறவர்களாய் மாறுவோம்.

 

5.     உறுதியான விசுவாச வாழ்க்கை (Faithful life)

 

தானியேலின் விசுவாசம் சிங்கத்தையே  சிருஷ்டித்த பராக்கிரமசாலியான தேவன் மேல் இருந்தது.  அதனால் அவன் சிங்க கெபிக்கு பயப்படவில்லை. சிங்க கெபியில் போடப்பட்ட தானியேலிடம் நீ இடைவிடாமல் ஆராதிக்கிற தேவன் உன்னை தப்புவிக்க வல்லவர் என்று தரியு ராஜாவையே சொல்ல வைத்தது அவனுடைய விசுவாச வாழ்க்கை. தானியேல் தேவன் பேரில் வைத்த விசுவாசித்திருந்ததினால் அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை என வேதம் கூறுகிறது[தானியேல்:6:23]. நான் நன்றாக ஜெபிக்கிறேன்; தேவனுடைய ஊழியங்களை செய்கிறேன் எனக்கு ஏன் இவ்வளவு பிரச்சினைகள்? நம்மில் பலர் புலம்புவதுண்டு. கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே சிங்க கெபியின் அனுபவம் தானியேலுக்கு ஜெயத்தை  கொடுத்தது. வேதம் கூறுகிறது நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். கிரியையில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது.  சிங்ககெபிக்கு அனுப்பாமல் தானியேலை தப்புவிக்க வல்லவர் நம் தேவன். ஆனால் தேவனுடைய வல்லமையையும் மகத்துவத்தையும் தரியு ராஜாவும் பாபிலோனின் ஜனங்களும் அறிய முடிந்திருக்காது. தரியு ராஜா அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; தானியேலைச் சிங்கங்களின் கைக்குத் தப்புவித்த அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாய்  இருக்கிறார் என்று தேவனை மகிமைபடுத்தினான்[தானியேல்:6:26,27]. வேதம் கூறுகிறது விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்; பின்வாங்கிப்  போவானானால் அவனிடத்தில் என் ஆத்துமா பிரியமாயிராது[எபிரெயர்:10:38]. தானியேலின் விசுவாசம்  கிரியையில் வெளிப்பட்டது.நாமும் கூட கஷ்டங்கள் வேதனைகள் நம்மை சூழும் போது பூரண விசுவாசமுள்ளவர்காளாய் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துவோம்.

தானியேலின் வைராக்கியமான ஜெப வாழ்க்கை, உறுதியான விசுவாசம், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல் அவனை  தூய்மையாய் தரிசனமுள்ள வாழ்க்கைக்கு வழிநடத்தியது. அதுவே தானியேலின்  காரியங்ககளை ஜெயமாய் மாற்றியது. வேதம் கூறுகிறது அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார் [1சாமுவேல்:2:8].தானியேலின் வாழ்க்கையிலும் எதிரிகள் இருந்தார்கள்.  சொப்பனைத்தையும் அர்த்தத்தையும் சொல்லாவிட்டால் தேசத்திலுள்ள ஞானிகளை கொலை செய்ய கட்டளையிட்ட நேபுகாத்நேச்சார், தேவனை தொழுததால் சிங்க கெபியில் போட்ட தரியு ராஜா. தானியேல் அவர்களை பரலோக தேவனின் உதவியால் தோற்கடித்தான். அடிமையாய் பாபிலோனுக்கு வந்த வாலிபன் தானியேலை தேவன் பாபிலோன் முழுவதுக்கும் பிரதான அதிகாரியாக உயர்த்தினார். ஒவ்வொரு போராட்டங்களிலும் தானியேலின் மூலமாக தேவனுடைய நாமம் மகிமைப்பட்டது.  சற்று சிந்திபோமா? என்னுடைய வாழ்க்கையின் போராட்டங்கள் தேனுடைய நாமத்தை மகிமைபடுத்துகிறதா? தூஷிக்கிறதா?

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே பரலோக தேவன் நம்மோடிருந்தால் எந்த சூழ்நிலையும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. நம்முடைய அவிசுவாசத்தினால் சூழ்நிலைகளை பார்த்து பயப்படுகிறோம். தானியேலை போல பயப்படாமல் ஜெபத்தினாலும் உறுதியான விசுவாசத்தினாலும் பரிசுத்த ஆவியின் துணையோடும் எந்த சூழ்நிலைகளையும் மேற்கொள்ள கற்றுக்கொள் ளுவோம். தேவனுக்கு நம்மை முழுமையாய் அர்பணிக்கும் போது   நம்முடைய காரியங்களும் ஜெயமாய் மாறும் என்பதில் சந்தேகமில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவரையும் ஆவிக்குரிய மற்றும் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களினால் நிரம்பி வழிய செய்வாராக. ஆமென்.