Tamil Christian Website

Tamil Christian Website

பழையவைகள் புதிதாகின

 

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின.எல்லாம் புதிதாயின. II கொரிந்தியர் 5:17.

 

பிரியமானவர்களே! கடந்த 2016ம் ஆண்டு முழுவதும் நம்மை வழிநடத்தின ஆண்டவருக்கு நாம் நன்றி செலுத்துவோம். பழைய 2016 ம் வருஷம் கடந்து போகிறது, புதிய வருஷத்துக்குள் நாம் கடந்து போக போகிறோம். ஒரு புதிய வீட்டுக்கு நாம் குடிபோகும் போது அந்த வீட்டை கழுவி சுத்தம் செய்து விட்டு அதன் பின்பு தான் அந்த வீட்டிற்கு குடி போகிறோம். அதே மாதிரி இந்த புதிய வருடத்திற்குள் நாம் கடந்து போகும் போது தேவனுக்கு பிரியமில்லாத நம்முடைய பழைய சுபாவங்கள், மற்றும் வேண்டாத காரியங்களை களைந்து விட்டு புதிய சிருஷ்டியாக இந்த புதிய வருஷத்திற்க்குள் நாம் பிரவேசிப்போம்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை பார்த்து நீங்கள் இந்த உலகத்திற்க்கு உப்பாய் இருக்கிறீர்கள் மேலும் இந்த உலகத்துக்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள் என்று சொன்னார். நம்மில் எத்தனைபேர் உப்பு உணவுக்கு சுவையை கொடுப்பதுபோல பிறருக்கு பிரயோஜனமுள்ளவர்களாயிருந்தோம்??. நம்மில் எத்தனைபேர் தெய்வீக சுபாவத்தை அதாவது கிறிஸ்துவின் வெளிச்சத்தை பிறருக்கு வெளிப்படுத்தியிருக்கிறோம்?நம்மில் எத்தனை பேர் கிறிஸ்துவின் அன்பை கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு காட்டியிருக்கிறோம்.

 

எபேசியர் 4-:22,23 அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, 
உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். என்று பவுல் சொன்னது போல இந்த புதிய வருஷத்துக்குள் பிரவேசிப்பதற்கு முன்பாக மோசம்போக்கும் உலக இச்சைகளாலே ஆளுகை செய்யப்பட்டிருக்கிற பழைய மனிதனின் சுபாவங்களை நாம் களைந்துபோட வேண்டும். மேலும், பரிசுத்த ஆவியால் நாம் ஆளுகை செய்யப்பட்டு கர்த்தராகிய இயேசுவின் சாயலை தரித்துக் கொள்ளவேண்டும்.அதாவது சாட்சியுள்ள கனி கொடுக்கும் வாழ்க்கை வாழ நம்மை ஒப்பு கொடுப்போம்.நாம் கனிகொடுக்கக் கூடிய வாழ்க்கையை வாழவேண்டுமானால் நமக்கு தேவ வல்லமை தேவை. அப். 1:8 ல் பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்துக்கு எடுத்து கொள்ளபடுவதற்க்கு முன்பு சொன்னார்.

 

மேல் வீட்டறையில் பிதாவின் வாக்குத்தத்தமாகிய பரிசுத்த ஆவியானவரை பெற்றுகொண்ட இயேசுவின் சீஷர்கள் மற்றும் அப்போஸ்தலர்களுடைய வாழ்க்கை வித்தியாசமாக மாறினது. எசேக்கியேல் 36:27- உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.என்று தேவன் முன்னறிவித்த காரியம் நிறைவேறியது.

இதை தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அப் 1:5 ல் பிதாவின் வாக்குதத்தம் நிறைவேற காத்திருங்கள் என்றார்.யோவான்-14:26, என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். என்று இயேசு கிறிஸ்து சொன்ன காரியம் நடந்தது.பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை பெற்ற சீஷர்கள் உயிருள்ள சாட்சியாய் வாழ்ந்தார்கள்.இயேசுவுக்காக தங்கள் வாழ்க்கையை ஒப்பு கொடுத்தார்கள்.அவர்கள் சரீரத்திலிருந்து தேவ வல்லமை புறப்பட்டு சென்று அநேகரை சுகப்படுத்தியது.பிசாசின் பிடியிலிருந்து அநேகர் விடுவிக்கப்பட்டார்கள்.இறுதியில் ஒவ்வொருவரும் இயேசுவுக்காக இரத்த சாட்சியாக மரித்தார்கள்.ஊழியம் செய்வதற்க்கும் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்வதற்க்கும் நமக்கு தேவ வல்லமை தேவை.இன்றைக்கு பரிசுத்த ஆவியானவருக்கு நம் பிதாக்களை போல நாமும் எதிர்த்து நிற்கிறோம்.

இன்றைக்கு நம்மில் அநேகர் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையையும் அவர் வழிகாடுதலையும் வாஞ்சிப்பதில்லை. அநேக சபைகள் கூட பரிசுத்த ஆவியானவரை புறக்கணிக்கின்றன. அவரே நம்மை சகல சத்தியத்துக்குள் நட்த்துவார் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னார். இந்த கடைசிகாலத்தில் நாம் தாகத்தோடு பரிசுத்த ஆவியானவரை வாஞ்சிப்போமென்றால் அவரை பெற்றுகொள்வேம். அவர் தான் நம்மை கிறிஸ்துவின் சாயலாக மாற்ற முடியும். அல்லேலூயா....

 

அடுத்ததாக, 1 பேதுரு 1-15ம் வசனத்தில் உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள் என்று வேதம் சொல்லுகிறது. எபி 12-14 ல் பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரை தரிசிப்பதில்லையே என்று பவுல் எழுதுகிறார்.2 கொரி 6:16ல் நான் அவர்களுக்குள்ளே வாசம் பண்ணி அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன். அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று தேவன் சொல்லியிருக்கிறார்.

 

இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.( II கொரிந்தியர் 7:1)என்று பவுல் எழுதுகிறார்.பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் என்று வேதம் சொல்கிறது.இந்த புதிய வருடத்தில் கர்த்தருக்கு பிரியமில்லாத காரியங்களை விட்டு விலகி பரிசுத்தமாக வாழ நம்மை ஒப்பு கொடுப்போம்.அதாவது, தேவன் நம்மோடு இருக்கும்படி நம் இருதயத்தையும், நாம் தங்கும் வீட்டையும் நாம் ஆராதிக்கும் ஆலயத்தையும் சுத்திகரித்துக் கொண்டு பரிசுத்தமாதலின் பூரணத்தைப் பெற்று கொள்வோம்.

வேதாகமத்தில் கடைசி நாட்களில் நடக்கும் காரியங்களை பற்றி முன்னறிவிக்கப்பட்டுள்ளது.


2 தீமோத்தேயு 3 :1-5 மேலும் கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக.எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,

சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,

துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,

தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்;

லூக்கா 21 9-11அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும்,ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.

பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும், வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.

மத்தேயு 24 6-14 அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள், என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.

அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.

அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.

முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். லூக்கா 21 25-27
சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும், பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும், சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும், ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.

அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.

 

எனவே பிரியமானவர்களே!, வேதத்தில் சொல்லப்பட்ட எல்லா தீர்க்கதரிசனங்களும் நிறைவேறிவிட்டது. இனி காலம் செல்லாது. ஆகையால் நீங்கள் ஆண்டவராகிய இயேசுவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படும்படி இந்த புதிய வருஷத்துக்குள் மாம்சத்திலும், ஆவியிலும் உள்ள எல்லா அசுசியும் நீங்க நம்மை சுத்திகரித்துக் கொண்டு இந்த புதிய வருடத்துக்குள் பிரவேசிப்போம்.

I பேதுரு 2:21. இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.

I யோவான்-2:6. அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.

 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாம் வாழும்படியான மாதிரியை அதாவது நாம் எப்படி வாழ வேண்டும் என்ற மாதிரியை காண்பித்து விட்டு சென்றிருக்கிறார்.அவர் காட்டிய அடிச்சுவடு மத்தேயு 5,6,7 ம் அதிகாரங்களில் இருக்கிறது. அவர் காட்டிய வார்த்தையின் வெளிச்சத்திலே நாம் நடக்கும்போது தான் அனேகருக்கு நாம் வெளிச்சமாக இருக்க முடியும். வார்த்தையின் வெளிச்சத்தில் நாம் நடக்கும்படியாக அதாவது சகல சத்தியத்திற்குள் நாம் நடத்தப்படும்படியாக இந்த கடைசி நாட்களில் பரிசுத்த ஆவியானவரை வாஞ்சிப்போம்.

 

யோவான்-16:13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னதை நடைமுறைப்படுத்துவோம்,

சாலமோன் ஜெபித்த போது அவன் கட்டிய ஆலயத்தில் தேவ மகிமை இறங்கினதை ஜனங்கள் கண்டார்கள். அதேபோல இந்த நாட்களில் தேவ மகிமை உங்கள் மேலும் வீடுகளிலும், சபைகளிலும் வெளிப்படப் போகிறது. மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று ஆண்டவர் சொல்லிய வாக்குதத்தம் நிறைவேறும் காலத்தில் இருக்கிறோம்.எனவே இனிவரும் நாட்களில் அதிக நேரம் தேவ சமூகத்தில் தரித்திருந்து தேவ வல்லமையை பெற்றுக் கொண்டு உலகத்துக்கு வெளிச்சமாக இருப்போம்.

 

உங்கள் வாழ்க்கையில் தேவன் கொடுத்த நேரத்தை தேவனுக்காக கொடுங்கள்.2017 ம் ஆண்டில் ஆண்டவருக்காக அதிக நேரத்தை அவர் சமூகத்தில் செலவிட தீர்மானம் எடுப்போம்.மீகா 3-8நானோ கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன். ஏசாயா 32-15,16 உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும், அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும், செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.

 

வனாந்தரத்திலே நியாயம் வாசமாயிருக்கும், செழிப்பான வயல்வெளியிலே நீதி தங்கித்தரிக்கும். நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்..அல்லேலூயா.இந்த 2017 ம் ஆண்டு பாலைவனம் போன்ற உலர்ந்து போன காரியங்களை கர்த்தர் செழிப்பாக மாற்றப் போகிறார்.,

 

கர்த்தர் 2017 ம் ஆண்டு உங்களை ஆசீர்வதிப்பாராக.ஆமென்.