Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 16/01/2016

புதிய கானான் தேசம்

தேவனுக்குப் பிரியமான ஜனங்களே இவ்வளவு நாட்கள் அல்லது வருஷங்கள் இந்த நிலையில்லாத உலகத்தில் அதாவது பழைய கானான் தேசத்தில் ஆசீர்வாதமாய் வாழ்வதற்காக பலவிதமான வாக்குத்தத்தங்களை தேவனிடம் இருந்து காத்திருந்து பெற்றுக் கொண்ட நாம் ஒரு காரியத்தை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது அதுஎன்னவென்றால் இந்த உலகத்திற்காக நாம் அதை பயன்படுத்த முயற்சி செய்வதினால் இந்த அழியாத வாக்குத்தத்தங்களும் உலக அழிவோடு காணாமல் போகிறது.

 ஆகவே ஒரு தீர்மானம் எடுங்கள் வருகிற 2016ம் வருடத்தில் நான் கேட்கப் போகிற வாக்குத்தத்தம் புதிய கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்கு ஏதுவாக மாற வேண்டும் என்பதே

இன்றைய புதிய வருஷத்தின் செய்தி என்னவென்றால் நம்முடைய வாக்குத்தத்தம் புதிய கானான் தேசத்தை எட்டவேண்டுமானால் நாம் உலகத்தில் கடக்க வேண்டிய எல்லைகள் என்னவென்பதை பின்வருமாறு சுருக்கமாக பார்க்கப் போகிறோம்

1.முதலாவது எல்லை: பார்வோனின் கலாச்சாரத்தை விட்டு விலக வேண்டும் [ யாத்திராகமம் 3:18 ]

வேதம் சொல்லுகிறது, பரிசுத்தமில்லாமல் கர்த்தரை ஒருவனும் தரிசிப்பதில்லையே எபி 12:14, ஏன் நம்முடைய வாழ்க்கையில் புதிய கானான் தேசத்தை குறித்து கனவு கூட காணமுடியவில்லை, ஏனென்றால் நாம் இன்னும் மாமிசத்திற்குரிய காரியங்களுக்கும், சுபாவ பிரமாணங்களுக்கும் அடிமைப்பட்டு கிடப்பதினால்தான், பாருங்கள் இஸ்ரவேலைக் குறித்ததான ஒரு பெரிய வாக்குத்தத்தம் அதாவது திட்டம் தேவனிடம் உண்டு ஆனால் தேவனால் அதை நிறைவேற்ற முடியவில்லை இதற்குக் காரணம் இஸ்ரவேல் ஜனங்கள் பார்வோனின் கலாச்சாரத்தை தங்களுடைய கலாச்சாரமாகவும், அதுமட்டுமல்லாமல் தேவனுக்கு அடிமைகளாக இருக்க வேண்டியவர்கள் பார்வோனுக்கு அடிமைகளாக மாறிவிட்டதினாலும் தேவன் அவர்களுக்காக வைத்திருந்த மேலான ஆசீர்வாதங்கள் தேவனுடைய இடத்தில் தூங்கிக் கொண்டிருந்தன என பார்க்கிறோம்.


ஆகவேதான் கர்த்தர் இவர்களை அவனுடைய கையின் கீழ் இருந்த வெளியே கொண்டு வர விரும்பினார். இத்தகைய காரியத்தை நாம் யாத்திராகமம் புஸ்தகத்தில் இருந்து தெளிவாக அறிய முடிகிறது.

 இதே போன்று நாமும் அனேக நேரங்களில் இந்த உலகத்திற்கு பிரியமாய் வாழுகிறபடியால் தேவன் தருகிற மகத்தான வாக்குத்தத்தங்கள் நிறைவேறாமலும் மற்றும் வாக்குத்தத்தத்தின் ஆவிக்குரிய நன்மைகள் என்னவென்று புரிந்து கொள்ளாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆகவேதான் தேவன் நம்மைப் பார்த்து இவ்வாறாக சொல்லுகிறார், இந்த பார்வோனை விட்டு வெளியே வா நான் உனக்கு புதிய கானான் தேசத்துக்கு செல்லும் வழியை வாக்குத்தத்தமாக தருகிறேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார், வேதம் சொல்லுகிறது வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார் எபிரெயர் 10:23 [பின்பகுதி]

 

Fஇரண்டாது எல்லைக்கல்: செங்கடல் வழியாக நடந்து செல்ல வேண்டும் [ யாத்திராகமம் ]

இன்றைய விசுவாசிகளின் மதிகேடு என்னவென்றால் தங்களுடைய வாழ்க்கை என்கிற படகை ஓட்டிச்செல்லும் மாலுமியாகிய இயேசுவை அடிக்கடி மறந்து விடுவதுதான். இதற்குக் காரணம் என்னவென்று பார்ப்பீர்களானால் அவர்களுடைய மாமிச வாழ்க்கை அதாவது மாமிச சிந்தை ஆகும். இந்த மாமிச சிந்தையைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது? மாமிச சிந்தை மரணம் ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம் ரோமர் 8:6

இதோ ஆவியினால் நடத்தப்பட்டு வருகிற இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஏன் இந்த மாமிச சிந்தை வந்தது பாருங்கள் கொடூரமான பார்வோனின் இருட்டில் இருந்து இஸ்ரவேல் ஜனங்கள் விடுவிக்கப்பட்டு சந்தோஷமாக பயணத்தை தொடருகிறார்கள் ஆனால் வழியில் என்ன நடந்தது செங்கடல் சீறிவருகிறதை தங்களுடைய கண்களினால் ஆதாவது மாமிச கண்களினால் பார்க்கிறார்கள் அதாவது இவர்கள் ஆவியினால் நடத்தப்பட்டு வந்தாலும் இவர்களுக்குள் இன்னும் இந்த ஆவியின் சிந்தை வரவில்லை ஆகவே வேதம் சொல்லுகிறது இந்த மாமிசம் இவர்களுடைய ஆவியின் வெளிப்பாட்டை மறைத்தது இதனால் பயம் இவர்களைப் பிடித்துக் கொண்டது என்று பார்க்கிறோம். ஆனால் ஆவியின் சிந்தையால் ஆட்கொள்ளப்பட்ட மோசேயோ தன்னிடத்தில் இருக்கிற ஆவியின் பலத்தினால் செங்கடலை பிளக்கச் செய்து அதின் வழியாக நடந்து செல்லுகின்றார். இத்தகைய காரியத்தை நாம் யாத்திராகமம் என்னும் ஆகமத்தை நன்றாக வாசிக்கும் போது ஆவியின் வெளிப்பாடு நமக்கு புரிய வரும். வேதம் சொல்லுகிறது, இது பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல தேவனுடைய ஆவியினாலேயே ஆகும் சகரியா 4:6

 

Fமூன்றாவது எல்லை: எரிகோ இடிந்து விழ வேண்டும் [யோசுவா 6:1]

வேதம் சொல்லுகிறது, தங்களுடைய வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்கக் கூடாதப்படி இந்த எரிகோவானது இவர்களுக்குத் தடையாக நின்றது. ஆகவே இந்த எரிகோ கோட்டையை இவர்கள் உடைத்தால் ஒழிய இவர்கள் கானான் தேசத்துக்கு கடந்து செல்ல முடியும் என்பதை அறிகிறோம். எனவே இந்த எரிகோ கோட்டையை உடைப்பதற்கு ஆயத்தமாகிறார்கள் எப்படியென்றால் இதை உடைப்பதற்கு அவர்கள் கடப்பாறையோ, துப்பாக்கியோ அல்லது வில்லை மற்றும் ஈட்டியையோ எடுக்காமல் மாறாக தேவனுடைய மகத்தான ஆயுதமாகிய துதியை எடுத்துக் கொண்டனர் இதனால் இவர்கள் பெற்ற வெற்றியையும் நாம் வேதத்தில் படிக்கிறோம்.

 

ஆகவே நாமும் முதலில் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு விரோதமாக நிற்கிற உலக எரிகோ கோட்டைகளை உடைத்து எறிய வேண்டும் அப்பொழுதுதான் நம்முடைய வாக்குத்தத்தம் புதிய கானான் தேசத்தை சுதந்தரிக்கும். இன்று ஏன் இந்த எரிகோ கோட்டைகள் அனேகருடைய வாக்கையில் உடையாமல் இருக்கிறது என்றால் இவர்களிடத்தில் இருக்கிற ஆயுதங்கள் தேவனுக்குரிய ஆயுதங்கள் இல்லை என்பதை முதலில் உணர வேண்டும். இதை பின்வருமாறு வேதம் விளக்குகிறது  மனுஷனுடைய யோசனைகள் வீண் என்று அப்படியென்றால் அவனுடைய பலமில்லாத இந்த யோசனையினால் பிறக்கும் ஆயுதங்களும் பலமில்லாததாகவே இருக்கும் என்பதை மறக்க வேண்டாம். ஆகவே மறக்காதீர் அவர்கள்  துதிசெய்யத் தொடங்கின போது அவர்களுடைய எதிரிகள் விழுந்தார்கள் 11 நாளாகமம் 20:22.

 

Fநான்காவது எல்லை: யோர்தான் பின்னிட்டு போக வேண்டும் [ யோசுவா 3ம் அதிகாரம் ]

வேதம் சொல்லுகிறது, மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் மத் 4:4, நாம் புதிய கானான் தேசத்திற்கு செல்ல வேண்டுமானால் நம்முடைய ஆத்துமா உயிரோடிருக்க வேண்டும் அதாவது உலகத்திலுள்ள யோர்தான் நதியினால் வரும் சாவை நாம் மேற்கொள்ளாதப்படி நம்மை பாதுகாக்க வேண்டும். இன்று மனுஷன் உலகத்தில் உள்ள யோர்தான் நதியைக் கடப்பதற்கு அவன் சாப்பிடும் வெவ்வேறு அப்பங்களை நாம் விசுவாசிகளிடத்தில் பார்க்க முடிகிறது.

 

இஸ்ரவேல் ஜனங்களும் ஒருவேளை இப்படி நினைத்திருக்கலாம் நாம் இந்த யோர்தானை கடந்து செல்வதற்கு நமக்கு ஒரு படகு இருந்தால் போதும் அல்லது ஒரு பாலம் இருந்தால் போதும் என்று, ஆனால் என்ன நடந்தது அந்த யோர்தானின் சப்தத்தை கேட்டவுடனே பயந்து நின்றார்கள் அதாவது நம்முடைய யோசனைகள் இந்த நதிக்கு முன்பாக நிற்பதில்லை என்பதை அறிந்து கொண்டனர் அப்பொழுது தேவன் தம்முடைய வார்த்தையை அவர்கள் சுமந்து நடக்கும்படி சொல்லுகிறார். அவர்களும் அப்படியே செய்கிறார்கள் என்ன ஒரு அதிசயம் தேவனுடைய வார்த்தை நதியைத் தொட்டவுடனே அவைகளுடைய இரைச்சல் நின்று போனது, இதே போலத்தான் நம்முடைய வாழ்க்கையில் அனேகத் தடவை இந்த புதிய கானான் தேசத்தை சுதந்தரிக்கச் செய்யும் கனவை உடைத்தெறிந்த பிசாசாகிய யோர்தானை வெட்டி வீழ்த்த வேண்டுமானால் நமக்கு தேவனுடைய வார்த்தை என்கிற ஆவியின் பட்டயம் வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள் வேதம் சொல்லுகிறது, வானமும் பூமியும் ஒழிந்துபோம் என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை மாற்கு 13:31

ஆகவே இந்த 2016 ஆம் வருடத்தில் கவலையில்லாமல் அதாவது பயம் இல்லாமல் கானான் தேசத்தை நோக்கி பயணம் செய்யவேண்டுமானால் நம்முடைய படகில் பரிசுத்தம், துதி, ஆவியின் சிந்தை, தேவனுடைய வார்த்தை என்கிற நான்கு துடுப்புகளை நாம் எடுத்துக் கொண்டு பயணம் செய்வோம் அப்பொழுது நாம் மேலே சொல்லப்பட்ட எந்த ஒரு கடலிலும் மூழ்கிவிடாமல் நாம் அடைய வேண்டிய புதிய கானான் தேசத்தை இலகுவாக எட்டிவிடலாம் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.

 

தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் புதிய ஆசீர்வாதங்கள் மூலம் ஆசீர்வதிப்பாராக.

 

-         சகோ. எட்வின் (சோஹார் ஓமான்)