Tamil Christian Website

Tamil Christian Website

Posted on: 17/03/2014

               நினிவேயின் மனந்திரும்புதல் [ யோனா 3 ம் அதிகாரம் ]

[ நினிவேயின் மூலம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய ஜனங்களுக்குத் தரும் செய்தி ]

 இதோ தேவனால் அனுப்பப்பட்ட யோனா ,நினிவேயின் கடைசிக்காலத்தைக் குறித்துப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார், இதைக் கேட்ட நினிவே ஜனங்கள், தங்களை தேவனுக்குப் பயப்படும்படி ஒப்புக்கொடுத்தனர், இதினிமித்தம் அவர்கள் அழிவிலிருந்துப் பாதுகாக்கப்பட்டனர் என்று யோனா என்கிற தீர்க்கதரிசனப் புத்தகத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது,

இந்த தேவப் பயத்தைதான் பின்வருமாறு விளக்க ஆசைப்படுகிறேன்,

[ குறிப்பு : யோனா என்பதற்கு மனந்திரும்புதல் என்கிற அர்த்தமும் உண்டு ]

தேவனுடைய எச்சரிப்பைப் பெற்ற ஜனங்கள் தங்களை எவ்வாறு மாற்றிக் கொண்டனர் என்பதை பின்வருமாறு பார்க்கலாம், யோனா அதிகாரம் நமக்குத் தருகிற முதல் படி, 1.நினிவே ஜனங்களின் மனந்திரும்புதல் [ யோனா 3:5 ]

   இந்த மனந்திரும்புதல் இல்லாமல் எந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையும் பூரணமடைவதில்லை, ஆகவேதான் வேதம் நமக்கு தருகிற முதல் கதவின் பெயர் என்னவென்றால், மனந்திரும்புங்கள் அப்பொழுது பிழைப்பீர்கள் என்று நாம் எசே- 18:32 ல் வாசிக்கலாம். மேலும் வேதம் சொல்லுகிறது,  மனந்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று மத்தேயு 3:2 ல் நாம் வாசிக்கலாம். ஆகவேதான் நாம் தேவனுடைய கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமானால் மனந்திரும்பியே ஆக வேண்டும், இதைத்தான் நினிவே செய்தனர்.

மனந்திரும்புதல் என்பது ஒரு மனிதன் தன்னுடைய எண்ணங்களை முழுவதுமாக மாற்றிக்கொள்வது ஆகும். இது பொதுவான கருத்து ஆனால் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் மனந்திரும்புதல் என்பது தன்னை முழுமையாக கிறிஸ்துவுக்குள் அர்ப்பணிப்பதே ஆகும், அப்படி செய்யும் போதுமட்டுமே அந்த மனிதன் தன் பழையவாழ்க்கையை விட்டு புதிய வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று 2 கொரிந்தியர் 5:17 ல் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இன்று அனேக ஜனங்கள் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளாமால் இருப்பதற்கு காரணம் மனந்திரும்புதல் இல்லாத ஜென்ம சுபாவமே, இவர்கள் சுயபுத்தி இல்லாதவர்கள் ஆவார். ஏனென்றால் இவர்கள் மற்றவர்களைச் சார்ந்தே வாழுகிறார்கள் என்பதை இவர்கள் கிரியையின் மூலம் அறிந்துக் கொள்ள முடிகிறது, இவர்கள் ஒருபோதும் தேவனுக்கு செவிக்கொடுப்பதில்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன். ஆகவே இவர்கள் அடிக்கடி விழுவதை நாம் பார்க்க முடிகிறது, இவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமானால் மனந்திரும்புதல் அவசியப்படுகிறது, அப்பொழுதுதான் தேவனுடைய வார்த்தை உள்ளே செல்வதற்கு பாதை உண்டாகும்.

   நினிவே ஜனங்கள் இதைத்தான் செய்தார்கள். தங்கள் ஜென்ம சுபாவத்தை மாற்றி ,தேவனுடைய வார்த்தை செல்வதற்கு மனந்திரும்புதல் என்கிற கருவியை எடுத்துக் கொண்டனர்.

மனந்திரும்புங்கள், ஏன் நாம் சாக வேண்டும்.

2.இந்த மனந்திரும்புதல் இவர்களை கீழ்படிதலுக்குள்ளாக அழைத்துச் சென்றது [ யோனா 3:5 ]

 இந்த மனந்திரும்புதலை நினிவே ஜனங்கள் தங்கள் கிரியையின் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்தனர் எப்படியென்றால்,கீழ்படிதல் என்கிற கருவின் மூலமாய் அப்.பவுல் இப்படியாக தேவனுடைய கீழ்ப்படிதலை நமக்கு சுட்டிக் காட்டுகிறார்.

 தெசலோனிக்கேயர் பட்டணத்தார் என்னுடைய வார்த்தையை ஒரு மனுஷனுடைய வார்த்தையாய் கருதாமல் அதை தேவனுடைய வார்த்தையாய் ஏற்றுக்கொண்டதால் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன் என்கிற ஒரு விளக்கத்தை நாம் 1 தெசலோனிக்கேயர் 2:13 ல் இருந்து வாசிக்க முடிகிறது,

இந்த நினிவே பட்டணத்தாரும் அப்படியே செய்தனர், மேலும் இவர்கள் யோனாவுக்கு கீழ்ப்படியவில்லை, மாறாக கிறிஸ்துவுக்குள் யோனாவுக்குக் கீழ்ப்படிந்தனர் என்றே நாம் சொல்ல வேண்டும்,

 இன்று அனேக ஜனங்களுடைய கீழ்ப்படியாமைக்குக் காரணம் ,அவர்கள் தேவனைப் பார்ப்பதற்குப் பதிலாக, மனுஷரையே பெரும்பாலும் பார்த்துக்கொண்டிருப்பதினால்தான் என்று சொன்னால் மிகையாகாது, மறக்க வேண்டாம் தேவனாகிய இயேசு ஒரு கழுதையும் கொண்டும் பேசுவார்.

 வேதம் சொல்லுகிறது,

  எல்லா கீழ்ப்படிதலும் கிறிஸ்துவுக்குள் இருக்க வேண்டும் எபேசியர் 5:21-33, எபேசியர் 6:1

மறக்க வேண்டாம் ,அனேகர் கீழ்ப்படிதல் இல்லாமையால் தேவ ஆசிர்வாதத்தை இழந்து போனார்கள் என்று வேதத்தில் வாசிக்கலாம்.

3.விசுவாசித்தனர் [ யோனா 3:5 ]

 இந்த கீழ்ப்படிதல் அவர்களை விசுவாசத்துக்குள்ளாக அழைத்துச் சென்றது என்பதை நாம் காணமுடிகிறது, எப்படியென்றால் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்ததின் மூலம், தேவனுடைய வார்த்தை அவர்களுக்குள் சென்றதை மறக்க வேண்டாம், இந்த வார்த்தைதான் இவர்களுக்கு விசுவாசத்தை தந்தது என்று சொன்னால் மிகையாகாது.

 வேதம் நமக்கு இதை தெளிவாக விளக்குவதை அறிய முடிகிறது.

 விசுவாசம் கேள்வினால் வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும் என்று ரோமர் 10:17 ல் வாசிக்கிறோம்.

 மேலும், விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருக்க முடியாது என்பதை மறக்க வேண்டாம் எபிரெயர் 11:6.

 பரலோகத்திருந்து நாம் விரும்புகிற ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை பெற வேண்டுமானால், விசுவாசம் என்கிற பணம் மிகவும் அவசியமாயிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 இந்த விசுவாசம் என்கிற பணம் வேண்டுமானால் நமக்கு தேவைப்படுகிற மிகமுக்கியமான மூலதனம் தேவனுடைய வார்த்தை என்பதை மறக்க வேண்டாம், ஒவ்வொரு நாளும் இதை உங்கள் அத்தியவாசிய உணவாய் எண்ணுங்கள்.

 இந்த விசுவாசமே, நினிவே ஜனங்களை தேவனுடைய இரக்கத்துக்கு அழைத்துச் சென்றது.

விசுவாசிகளே விசுவாசம் முன்னே செல்லட்டும், நாம் பின்னே செல்லுவோம்.

4.உபவாசம் செய்தனர் [ யோனா 3:5 ]

 முதலாவதாக, உபவாசம் என்பது கிறிஸ்துவுக்குள் தன்னை வெறுமையாக்குவதே ஆகும், இன்று அனேகர் 30, 60, நாட்கள் என்றெல்லாம் உபவாசிக்கின்றனர்,ஆனால் இதன் முடுவு என்னவென்று பார்த்தால் ஏமாற்றமே. இதற்கு காரணம் உபவாசத்தைதைப் பற்றிய அறிவு இல்லாததே என்று சொல்லிக்கொள்கிறேன்.

 சில ஜனங்கள் இப்படியாக சொல்வதுண்டு, எதற்கு உபவாசம் ,ஜெபம் மட்டும் செய்தால் போதாதா என்று,

 பாருங்கள், ஒரு ஆயுதத்தைக் கொண்டு ஒரு மரத்தை வெட்டிப்பிளக்க வேண்டுமானால், தினமும் அந்த ஆயுதத்தை இன்னொரு கருவியின் மூலம் கூர்மையாக்க வேண்டும் ,அப்பொழுதுதான் அந்த ஆயுதத்தை சுலபமாக கையாள முடியும்.

அதேபோலத்தான் நம்முடைய ஜெபம் என்கிற ஆயுதத்தை கூர்மையாக்க வேண்டுமானால், நமக்கு அனேக கருவிகள் தேவைப் படுகிறது,அதில் ஒன்று தான் உபவாசம், இதைதான் இயேசு பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

  இவ்வகை பிசாசு ஜெபத்தினாலும், உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப் போகாது என்றார் மாற்கு 9:29

மேலும் பிரசங்கி கூறுகிறார்.

  இருப்பு ஆயுதம் மழுங்கலாய் இருக்க, அதை ஒருவன் தீட்டாதே போனால், அதிக பலத்தைப் பிரயோகம் பண்ண வேண்டியதாகும் பிரசங்கி 10:10

மேலும் இவர்களிடத்தில் காணப்பட்ட வெறுமை என்ன?

 சிறியவர் முதல் பெரியவர் வரை உபவாசித்தனர் என்று யோனா 3:5 ல் நாம் வாசிக்க முடிகிறது, அதாவது அவர்கள் தங்களிடத்தில் காணப்பட்ட வேற்றுமைகளை தூக்கி எறிந்து விட்டு ஒருமனதுடனும் ஒரே ஆவியுடனும் உபவாசம் இருந்தனர். வேதம் சொல்லுகிறது,

  அல்லாமலும் உங்களில் இரண்டு பேர் தாங்கள்வேண்டிக் கொள்ளப்போகிற எந்த காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒரு மனப்பட்டிருந்தால் பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் மத்தேயு 18:19

5.தாழ்மையை ஆடையாக அணிந்து கொண்டனர் [ யோனா 3:6 ]

  தேவ வார்த்தையைக் கேட்ட நினிவேயின் ராஜா, இதுவரைக்கும் யாருக்கும் கீழ்ப்படியாத, யாருக்கு முன்பாக தன்னை தாழ்மைப் படுத்தாதவன், முதன் முதலில் தன்னை தேவனுக்கு முன்பாக தாழ்த்தினான்.

எப்படியென்றால்,

   தன்னுடைய மேட்டிமையின் சிங்காசனத்தையும், பெருமையாகிய ராஜா வஸ்திரத்தையும் உதறி எறிந்து விட்டு ,இரட்டை உடுத்திக் கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான் என்று வேதம் நமக்குச் சொல்லுகிறது.

தாழ்மையைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது.

  கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும் தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார். மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார். சங்கீதம் 138:6

மேலும், பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் யாக்கோபு 4:6 1பேதுரு 5:5.

என் அருமை விசுவாசிகளே தாழ்மையைக் கற்றுக் கொள்வோம்

6.கடைசியாக பாவ அறிக்கை செய்து ஜெபம் செய்தனர் [ யோனா 3:8 ]

 இன்று அனேகருடைய ஜெபங்கள் கேட்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் ,பாவந்தான் என்று வேதம் சொல்லுகிறது அதுமாத்திரமல்லாமல் இந்த பாவத்தை நாம் மறைத்து வைப்பதே என்று சொன்னால் அது மிகையாகாது.

இதைக் குறித்து ஏசாயா தீர்க்கரிசி இவ்வாறாக சொல்லுகிறார்.

   இதோ இரட்சிக்கக் கூடாதப்படிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை, கேட்கக்கூடாதப்படிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.

  உங்கள் அக்கிரமங்களே, உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது, உங்க பாவங்களே அவர் உங்களுக்குச் செவி கொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.- ஏசாயா 59:1,2 ல் நாம் வாசிக்கிலாம்.

  ஆனால் இந்த நினிவே ஜனங்களோ இந்த வெளிப்பாட்டை பெற்றுக் கொண்டனர், ஆகவேதான் தங்கள் அழுக்கான வஸ்திரத்தை தேவனிடத்தில் காண்பித்தனர், இத்தகைய ஒப்புக்கொடுத்தலைப் பார்த்த தேவன், அவர்களுடைய வஸ்திரத்தை வெண்மையாய் மாற்ற தேவையான மன்னிப்பு என்கிற சவுக்காரத்தை அவர்களுக்கு கொடுத்ததை நாம் வேதத்ததின் மூலம் அறிய முடிகிறது.

  ஜனங்களே பாவத்தை மறைக்க வேண்டாம், எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக நிர்வாணமாயும், வெளியரங்கமாயுமிருக்கிறது என்று எபிரெயர் 4:13 ல் வாசிக்கலாம்.

  இத்தகைய மனந்திரும்புதல் மூலமாய் தங்களை தேவனுக்கு உகந்த பலியாக ஒப்புக்கொடுத்தனர். இந்த பலியின் வாசனையை முகர்ந்த இயேசுகிறிஸ்து, தன்னுடைய இரக்கத்தை அவர்களுக்கு வாரி வழங்கினார் என்பதை மறக்க வேண்டாம்,

கவலைப்படவேண்டாம்,எல்லாருக்கும் கொடுக்கும்படியாக இயேசுவிடத்தில் இரக்கங்கள் குவிந்து கிடக்கின்றன,

  வேதம் சொல்லுகிறது, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.- புலம்பல் 3:22

எனக்கு அருமையான சகோதர, சகோதரிகளே

  நம்முடைய உபவாசமும் இப்படித்தான் இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்ப்போம்.

 தூங்கினது போதும்,ஆவியிலே விழித்திருப்போம், யுத்தம் பண்ணுவோம்,

 ஏனென்றால்,

  யுத்தத்தில் ஜெயம் கொள்ளுகிறவர்களுக்கு ஜெய கிரீடத்தை கொடுக்கும் படியாக நம்முடைய இயேசு கிறிஸ்து தம்முடைய சேனையின் ஆரவாரத்தோடு வந்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம்.

  ஆகவே நாம் ஆயத்தப்படுவோம் ,நம்மோடு கூடின எல்லா கூட்டத்தையும் ஆயத்தப்படுத்துவோம் எசேக்கியேல் 38:7

   தேவனாகிய இயேசுகிறிஸ்து நம் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிப்பாராக.