Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 28/05/2016

 

மார்க்கபேதங்களும் பிரிவினைகளும்

1கொரி 11:18: முதலாவது நீங்கள் சபையில் கூடி வந்திருக்கும் போது உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன், அதில் சிலவற்றை நம்புகிறேன்

 

1கொரி 1:10: சகோதரரே நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும் பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்

 

கலாத்தியர் 5ம் அதிகாரம் 19,20,21 ல் மாம்சத்தின் கிரியைகளை பவுல் வரிசைபடுத்தி சொல்லிவிட்டு இப்படிப்பட்டவைகளை செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் உங்களுக்கு சொன்னது போல இப்பொழுதும் உங்களுக்கு சொல்லுகிறேன் என்றார் இதில் சொல்லப்பட்ட பிரிவினைகள் மற்றும் மார்க்க பேதங்கள் அன்றைக்கு ஆதி திருச்சபைகளில் காணப்பட்டது போல இன்றைக்கும் பல சபைகளில் காணப்படுவது மிகவும் வருத்தத்திற்குரியது.

 

இன்றைக்கு சபைகளில் காணப்படும் முக்கியமான பிரிவினை ஏழை பணக்காரன் என்ற பிரிவினை ஆகும். இன்றைக்கு பல சபைகளில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்கள் விசாரிக்கபடுவதில்லை. கனப்படுத்தபடுவதில்லை, சபைகளில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதில்லை இதற்கு ஊழியக்காரர்களே துணை போகிறார்கள்.

 

யாக் 2:2,3,4,5,6,8,9: ஏனெனில் பொன் மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் திரித்திருக்கிற ஒரு மனுஷனும் கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும் போது மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும் தரித்திரனைப் பார்த்து நீ அங்கே நில்லு அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால் உங்களுக்குள்ளே பேதகம்பண்ணி தகாத சிந்தனைகளோடே நிதானிக்கிறவர்களாயிருப்பீர்களல்லவா?

 

என் பிரியமான சகோதரரே கேளுங்கள் தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் பண்ணின ராஜ்ஜியத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?

நீங்கள் தரித்திரரைக் கனவீனம்பண்ணுகிறீர்கள் ஐசுவரியவான்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள் அவர்களல்லவோ உங்களை நியாயாசனங்களுக்கு முன்பாக இழுக்கிறார்கள்?

உங்களுக்குத் தரிக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ தூஷிக்கிறார்கள்?

உன்னிடத்தில் நீ அன்புகூருகிறது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேத வாக்கியம் சொல்லுகிற ராஜரிகப் பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள்

பட்சபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால் பாவஞ்செய்து மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள்

 

ஒரு முறை ஒரு புதுவருட ஆராதனைக்கு சென்ற போது அங்குள்ள சபை ஆராதனைக்கு எல்லாரும் நல்ல புத்தாடைகளை அணிந்து கொண்டு வந்திருந்தார்கள். அந்த சபையில் ஐந்து சகோதர்கள் மாத்திரம் கசங்கிய உடைகளுடன் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தனர். அவர்களைப் பார்த்தால் அவர்கள் கூலி வேலை செய்கிறவர்கள் போல இருந்தார்கள். சபை முடிந்தவுடன் எல்லாரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். சபையின் போதகரும் எல்லாருக்கும் தங்கள் அன்பை பரிமாறி கொண்டார். ஆனால் இவர்களை யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்த சகோதரர்கள் கூனி குறுகியப்படி அந்த இடத்தை விட்டு கடந்து சென்றனர்.

 

அந்த இடத்தில் நான் உண்ர்ந்து கொண்ட காரியம் என்னவென்றால் புறக்கணிக்கப்பட்ட அந்த சகோதர்களிடத்தின் அருகிலே இயேசு கிறிஸ்து உட்கார்ந்திருப்பார் என்பதாக. இன்றைக்கு சபைகளில் கூட்டம் முடிந்தவுடன் குழுக்களாக நின்று நலம் விசாரித்து பேசிக் கொண்டிருப்பதை காணலாம். ஆவிக்குரியவர்கள் என்று தங்களை சொல்லுக் கொள்ளும் இவர்கள் பிறரிடம் அதாவது தங்களை விட தாழ்ந்தவர்களிடம் கைக்குலுக்குவதில்லை. சபைக்கு தேவைகளோடு புதிதாக வரும் ஏழை ஜனங்களை இவர்கள் போய் பார்ப்பதில்லை. நம்முடைய ஆடம்பரங்களினாலும் நம்முடைய அந்தஸ்தையும் சபைகளில் காட்டும் நம்முடைய காரியங்களினால் சபைகளுக்கு வரும் அனேக ஏழை மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

 

ஊழியக்காரர்களும் சபைக்கு வரும் அந்தஸ்தில் உயர்ந்தவர்களையே கனப்படுத்துகிறார்கள் இன்றைக்கு அனேக ஊழியக்காரர்கள் வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் செய்வது போல ஊழியத்துக்கு வருகிறார்கள். அவர்கள் சபைகளுக்கு செல்லும் போது அந்த சபைகளில் உள்ள பணக்காரர்களிடமே ஐக்கியம் வைத்து கொள்கிறார்கள். அவர்களிடம் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்று ஜெபிப்பதும், தங்கள் தேவைக்காக அவர்களை அணுகுவது போன்ற காரியங்களை செய்கிறார்கள். இப்படி செய்யும் இத்தகைய ஊழியக்காரர்கள் அந்த சபைகளில் பிரச்சனைகளில் போராட்டங்களில் இருக்கும் சாதாரண விசுவாசிகளை கண்டு கொள்வதில்லை.

 

தங்களுடைய பட்டியலில் இத்தகைய சாதாரண ஏழை விசுவாசிகளை வைப்பதில்லை. இத்தகைய ஊழியக்காரர்கள் மறுபடியும் அடுத்த தடவை வெளிநாடு வரும் போது கடந்த முறை தங்களுக்கு காணிக்கை கொடுத்த பணக்கார விசுவாசிகளை நினைவில் வைத்து கொண்டு வீடு தேடி சென்று ஜெபிக்க செல்லும் இவர்கள் நினைவுகளில் கடந்த முறை வந்த போது பிரச்சனைகளில் இருந்த சாதாரணமானவர்கள் ஒருவரும் இல்லை என்பதை பார்க்க முடிகிறது. பிரியமானவர்களே சுயலாப நோக்கத்திற்காக மனிதர்களை பிரியப்படுத்தி ஊழியங்களை ஏற்படுத்தினால் நாம் பரலோகராஜ்ஜியத்திலே ஒரு பலனையும் பெற்றுக் கொள்வதில்லை. யாக்கோபு 2:9ல் சொல்லப்பட்டது போல பட்சபாதமுள்ளவர்களாக இருப்பதால் நாம் நியாயம் தீர்க்கப்படுவோம்.

 

உபா 10:17: உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும் கர்த்தாதி கர்த்தரும் மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார் அவர் பட்சபாதம்பண்ணுகிறவரும் அல்ல பரிதானம் வாங்குகிறவரும் அல்ல

யாக் 2:9: பட்சபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால் பாவஞ்செய்து மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள்

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ கானாவூர் கல்யாண வீட்டில் வேலைக்காரருடனே நின்றிருந்தார் அங்கே தாம் அவர்கள் மூலாமாக தான் அற்புதம் செய்தார். பிரியமானவர்களே இயேசுவின் சிந்தை உள்ளவர்களாக நாம் காணப்படுவோம். லண்டனில் ஒரு சபையில் அழுக்கு படிந்த உடையுடன் ஒருவர் வந்து முன்வரிசையில் உட்கார்ந்திருந்தார். அன்றைக்கு சபைக்கு வந்த பலரும் அவர் அழுக்கு உடையில் இருந்ததால் அவர் அருகே உட்காரவில்லை. அவரைப் பார்த்து முகம் சுளித்து அடுத்த வரிசையில் உட்கார்ந்தார்கள். சபை முடிந்தவுடன் யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை. ஆனால் ஒரு சிறு பெண் மாத்திரம் அவரிடம் சென்று அங்கிள் நீங்க என் வீட்டிற்கு சாப்பிட வருவீர்களா என்று அழைத்த போது அவர் அவளின் தலையில் கைவைத்து அவளை ஆசீர்வதித்தார். உடனே அந்த பெண் அவரிடம் இருந்து வந்த தேவ பிரச்சன்னத்தை பார்த்து அதிர்ச்சியுடன் நீங்கள் யார்? என்று கேட்ட போது அதற்கு அவர் நான் உன் மணவாளன் என்று பதிலளித்தாராம்.

 

உடனே அவள் ஒன்றும் புரியாமல் தன் பெற்றோரிடம் ஓடி போய் அவரை பற்றி சொன்னவுடன் அவர்கள் அவரை தேடும் படி வந்த போது அவர் அந்த இடத்தை விட்டு மறைந்து விட்டார். அதன் பின் அவர் ஒரு இடத்திலும் தென்படவில்லை சபையில் உள்ளவர்களெல்லாரும் அவர் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று அறிந்து கொண்டார்கள். அவரை உதாசினப்படுத்தியதை அவர்கள் உணர்ந்து வருத்தப்பட்டதுடன் மாத்திரம் அல்ல உடனே அழுது மன்னிப்பு கேட்டார்கள்.

எபி 13:2: அன்னியரை உபசரிக்க மறவாதிருங்கள் அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.

மத் 25:45: அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களா அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்

 

இன்றைக்கு ஏழை மக்களை புறக்கணிக்கும் ஊழியக்காரர்கள் மற்றும் விசுவாசிகள் சந்திப்பின் நாளிலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நான் உங்களிடம் வந்த போது என்னை புறக்கணித்தீர்கள் ஆகவே சபிக்கப்பட்டவர்களாகிய இவர்களை பிசாசுகளுக்காக ஆயத்தம்பண்ணின நித்திய அக்கினியிலே போடுங்கள் என்று சொல்லுவார். மத்தேயு 25 ஆம் அதிகாரம் 34 45 வரை உள்ள வசன்ங்களில் இயேசு கிறிஸ்து இதை பற்றி எச்சரிப்பதை குறித்து ஜாக்கிரதை உள்ளவர்களாய் இருங்கள்.

 

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் முழங்கினார். ஜாதி பார்ப்பது கீழ்த்தரமானது என்று எல்லாருமே அறிவர். ஆனால் இன்றைக்கு ஜாதி என்ற பிரிவினை ஆவிக்குரிய சபைகளையும் விட்டு வைக்கவில்லை. ஜாதி பார்ப்பது பாவம். ஜாதி பார்க்கிறவர்கள் பரலோகத்தில் பிரவேசிப்பதில்லை என்று முழங்கும் ஊழியக்காரர்கள் தங்கள் பிள்ளைகளின் திருமண காரியங்களிலும், ஊழியங்களில் பொருப்பாளர்களை நியமிப்பதிலும் ஜாதி பார்த்து செயல்படுகிறார்கள்.

 

ஜாதி பார்ப்பது கர்த்தருடைய பார்வைக்கு பிரியமில்லாதது என்று வாயிலே முழக்கமிடுகிற நாம் கிரியைகளில் அதாவது நாம் முன் உதாரணமாக செயல்படுத்தியிருந்தால் இன்றைக்கு சபைகளில் ஜாதி ஒழிக்கப்பட்டிருக்கும். கோயம்பத்தூரில் உள்ள ஒரு பாரம்பரிய சபையில் இரண்டு ஜாதியை சேர்ந்தவர்களுக்காக இரண்டு கல்லறை பகுதிகள் தனித்தனியாக இருக்கிறது. அனேக சபைகளில் பொருப்பாளர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றால் அவர்களுடைய ஜாதியின் அடிப்படையில் என்பதை நாம் பார்க்கிறோம். இது மிகவும் வருத்தத்திற்குரியது. அம்பேத்கார் கிறிஸ்தவ உபதேசத்தினால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்தவ மத்த்தை சார்ந்து கொள்ள சபைக்கு வந்த போது அங்கு காணப்பட்ட ஜாதி வேறுபாட்டினால் அங்கிருந்து விலகி புத்தமத்தை சார்ந்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஆலயத்துக்கு சென்ற போது அங்கு காணப்பட்ட நிறவெறி மற்றும் ஏழை பணக்கார பேதத்தினால் ஆலயத்துக்கு செல்வதை நிறுத்தினார்.

 

தமிழ் நாட்டில் ஒரு நகரத்தில் அனேக இந்துக்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்கள் அவர்களிடம் ஏன் நீங்கள் கிறிஸ்தவ மதத்துக்கு வரவில்லை என்று கேட்ட போது அவர்கள் சொன்னார்கள் நாங்கள் ஜாதி என்ற அடிமை தனத்தினால் பாதிக்கப்பட்டு மதம் மாறுகிறோம். எங்களுக்கு இயேசுவை பிடிக்கும். ஆனால் கிறிஸ்தவ ஆலயங்களில் கூட ஜாதி பார்க்கிறார்கள் ஏழைகளை புறக்கணிக்கிறார்கள் எனவே தான் நாங்கள் கிறிஸ்தவ மதத்துக்கு வரவில்லை என்றார்கள். இயேசு கிறிஸ்து சொன்னார்

லூக்கா 17:1-2: பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம் ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ அவனுக்கு ஐயோ!

அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும் அவனுடைய கழுத்தில் எந்திரக்கல் கட்டப்பட்டு அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்

1கொரி 6:3ல் இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல் எவ்விதத்தினாலேயும் எங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம் என்று பவுல் சொல்கிறார்.

 

பிரியமானவர்களே உங்களிடம் ஜாதி உணர்வு இருக்கிறதா? நீங்கள் இன்னும் பரலோக ராஜ்ஜியத்திற்கு தகுதியடையவில்லை ஏனென்றால் பரலோகத்தில் கொள்வனையும் இல்லை மற்றும் கொடுப்பினையும் இல்லை அங்கு செல்கிற யாவரும் தேவ தூதர்கள் போல இருப்பார்கள் என்று இயேசு சொன்னார். தன்னுடைய வாழ்க்கையின் இலக்கு பரலோகம் என்ற பயணத்தை நோக்கி போகிற எந்த ஊழியக்காரனும் விசுவாசியும் ஜாதி பார்க்க மாட்டார்கள். இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு உண்மையிலே பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுகிற எவரும் மற்றவர்களையும் தன்னை போல நேசிப்பார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்களிடத்தில் ஜாதி என்கிற உணர்வு மரித்து போயிருக்கும்.

 

உங்களிடம் இன்னும் ஜாதி உணர்வு இருந்தால் நீங்கள் இன்னும் இரட்சிப்பை பெற்றுக் கொள்ளவில்லை என்பதே அர்த்தம். ஒரு வேளை நீங்கள் ஒரு ஊழியக்காரனாக இருக்கலாம் ஆனால் ஜாதியை பார்ப்பீர்களானால் நீங்கள் உலகத்துக்கு ஒத்த வேஷம் தரித்து கொண்டிருக்கிறீர்கள் என்றே அர்த்தமாகும் அதோடுமாத்திரமல்ல உங்கள் இலக்கு இந்த பூமியோடு முடிந்து போய்விடுகிறது.

1கொரி 12:13: நாம் யூதராயினும் கிரேக்கராயினும் அடிமைகளாயினும் சுயாதீனராயினும் எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்

கொலோ 1:20: அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதனத்தை உண்டாக்கி பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று

எபேசி 2:13: முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்

எபேசி 2:17-20: அல்லாமலும் அவர் வந்து தூரமாயிருந்த உங்களுக்கும் சமீபமாயிருந்த அவர்களுக்கும் சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார். அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் மூலமாய்ப் பெற்றிருக்கிறோம் ஆகையால் நீங்கள் இனி அந்னியரும் பரதேசிகளுமாயிராமல் பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள் அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்கு ஒளியாக வந்தார் இதோ உலகத்தில் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்று யோவான் அவரை பார்த்து சொன்னார். அவர் கிறிஸ்தவர்களின் தேவனல்ல அதுமட்டுமல்லாமல் கிறிஸ்தவர்களுக்காக வரவில்லை கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபிக்க வரவில்லை எல்லா மனிதர்களும் இரட்சிக்கப் பட வேண்டும் என்பதே அவரின் சித்தமாக இருந்தது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஒரு மதத்துக்குள் அடக்கி வைத்து மத வைராக்கியம் கொள்ளாதீர்கள். அவருடைய கட்டளைகளின் படி கீழ்ப்படிந்து அவரை போல வாழ்வதில் வைராக்கியம் காட்டுங்கள். அவர் எல்லாருக்கும் தம்முடைய நேசத்தை பட்சபாதமில்லாதவராய் காட்டுகிறார் என்பதில் சிறுதும் சந்தேகமேயில்லை.

தேவன், நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே என்பதாக லூக்கா 6:35 ல் இயேசு சொன்னது ஒவ்வொருக்கும் நினைவிருக்கட்டும். எனவே இயேசு கிறிஸ்து ஒரு மதத்துக்கு சொந்தக்காரரல்ல பிலி 2:10 ல் இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும். அல்லேலூயா.

 

கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்பட்டு தேவனுடை புத்திரராய் இருக்கிற நீங்கள் அப்பா பிதாவே என்று கூப்பிட கூடிய புத்திர சுவிகாரத்தின் ஆவியை பெற்ற நீங்கள் உங்கள் சகோதரர்களை மற்றும் உங்களுக்கு அடுத்தவர்களை ஜாதி மற்றும் பணக்காரர், ஏழை ,மொழி போன்ற பலவித பிரிவினைகளால் பிரித்து பார்ப்பது சரியா? இப்படிபட்ட பிரிவினைகள் மற்றும் மார்க்க பேதங்களை உடையவர்கள் பரலோக ராஜ்ஜியத்துக்குள் பிரவேசிக்கமாட்டார்கள் என்று வசனம் சொல்லுகிறது.

எனவே இந்த கடைசி காலத்தில் கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நாம் எல்லாவித பிரிவினைகளிலிருந்து நம்மை விடுவித்து நாம் இந்த உலகத்திற்குரியவர்கள் அல்ல மாறாக நாம் எல்லாரும் பரலோகத்தை சார்ந்தவர்கள் என்கிற ஒரு குறிக்கோளுடன் நம்மை முழுமையாக கிறிஸ்துவுக்குள் அர்ப்பணிப்போம் அதுமட்டுமல்லாமல் வேதாகமம் முழுவதும் முழுதொகையாய் அடங்கியிருக்கிற ராஜரிக பிரமாணமான நீ உன்னை நேசிப்பது போல பிறனையும் நேசி என்ற கற்பனையை உண்மையாக பின்பற்றி வாழ ஆரம்பிப்போம். இதுவே நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு செய்யும் சிறப்பான தொண்டாகும். ஆமென்.