Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 06/08/2016

மனசாட்சி

-         சகோதரி. அனு ஃபெஸ்லின் 

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே உங்கள் அனைவரையும் கர்த்தரும் இரட்சகருமாகிய இறைமகன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன். தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதனின் ஆத்துமாவை சிருஷ்டிகராகிய தேவனின் சாயலில் இருக்கிறதா என்று கண்ணாடியை போல படம்பிடித்து காட்டுவது ஒரு மனிதனின் மனசாட்சி. மனசாட்சி என்றால் மனதின் சாட்சி என்று கொள்ளலாம். அதாவது ஒரு மனிதனின் சிந்தைகள் செயல்கள் சரியானதா தவறானதா என்ற விழிப்புணர்வு அல்லது எச்சரிப்பை கொடுக்கும் மனதின் ஒரு பகுதி. தேவன் நம்முடைய உள்ளான மனிதனில் மனசாட்சியின் மூலம் பேசுகிறார். மனிதனுடைய ஒவ்வொரு செயல்களையும் கிரியைகளையும் சிந்தைகளையும் மனிதன் மறந்தாலும் மறக்காது பட்டியலிட்டு காட்டுவது மனசாட்சியின் வேலை. ஒரு மனிதனின் வாழ்க்கையில் இந்த மனசாட்சி மூன்று விதமான செயல்களை செய்கிறது 

           போதிப்பது ஒரு செயலை செய்யும்முன் நம் சிந்தையிலே அதாவது உள்ளான மனிதனில் நாம் செய்யப் போவது சரியா தவறா என்று போதித்து தீமைக்கு விலக நம்மை எச்சரிக்கிறது.

           நியாயப்படுத்துவது ஒரு செயலை நாம் செய்தபின் நாம் செய்தது சரியா தவறா என்பதை நியாயப்படுத்தி காண்பிக்கிறது. தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் தேவனுடைய நிலையை விட்டு மாறும் போது நம்மை உணர்த்துகிறது.

           கண்டிக்கிறது நம்முடைய மனசாட்சிக்கு விரோதமாக நாம் பாவம் செய்யும் போது பயம், குற்ற உணர்வு, வெட்கம், நிம்மதியின்மை, கவலை போன்ற உணர்வுகளால் நம்மை கண்டிக்கிறது.

 நாம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற எட்டு விதமான மனசாட்சியைப் பற்றி தியானிக்கலாம்

தேவனுக்கு பிரியமில்லாத மனசாட்சி (UNGODLY CONSCIENCE)

1.     கெட்ட மனசாட்சி (துர்மனசாட்சி)

 அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது;  அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும் தேவனை அறிந்திருந்தும் கிரியைகளினால் தேவனை மறுதலிக்கிறவர்கள். இவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள் [தீத்து:1:15,16].. அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது[ரோமர்:1:21]. தேவனை அறியும் அறிவை பற்றிக் கொண்டிருக்க மனதில்லாமல் மாம்சத்துக்குரிய கிரியைகளை செய்கிற மனிதனுடைய மனசாட்சி கெட்டதாயிருக்கிறது. தேவன் மனுஷனை செம்மையானவனாக உண்டாக்கினார். ஆனால் மனுஷன் அநேக உபாயதந்த்திரங்களை தங்களுக்கு தேடிக்கொண்டு தேவனுக்கு கீழ்படியாமல் பாவம் செய்த போது அவனுடைய மனசாட்சி கெட்டுபோயிற்று. விக்கிரக ஆராதனைக்காரர், வீணான சிந்தனை காரராய், வேசித்தனம், துரோகம், வஞ்சகம், பொறாமை, கொலை, பொருளாசை, புறங்கூறுதல்,வன்மம் நிறைந்தவர்களாய் மாம்சத்திற்குரிய கிரியைகளை  செய்கிற மனிதர்கள் மரணத்திற்கு பாத்திரவான்கள் என வேதம் எச்சரிக்கிறது [ரோமர்:1:28-32]. தன் காணிக்கையை தேவன் அங்கீகரிக்கவில்லை என சகோதரன் மேல் எரிச்சல் அடைந்த காயீனிடம் தேவன் நீ நன்மை செய்தால்  மேன்மை இல்லையோ என்று  எச்சரித்தும் அவன் தேவனின் குரலுக்கு கீழ்படியாமல் தன் மாம்சத்திற்கு செவிகொடுத்து ஆபேலை கொலை செய்தான். நாமும் கூட உள்ளான மனிதனில் பேசுகின்ற ஆவியானவரின் ஆலோசனைக்கு செவிகொடுக்காமல் மாம்சத்திற்கு முக்கியத்தும் கொடுக்கும்போது நம் மனசாட்சி கெட்டுபோய் தகாதவைகளை செய்கிறோம். வேதம் கூறுகிறது துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் தேவனிடத்தில் சேரக்கடவோம்.

2.     பெலவீன மனசாட்சி

தேவனுடைய வார்த்தையால் நிரப்பப்படாமல் இருக்கும் ஒரு மனிதனின் மனசாட்சி பெலவீனப்படுகிறது. தேவனையும் அவர் கொடுத்த வேதத்தையும் அறியாததால் ஆவிக்குரிய வழியில் பிறரை பின்பற்றி வாழ்ந்து பாவத்தில் விழுந்து போகிறார்கள். கொரிந்து பட்டணத்து ஜனங்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே தேவன் நமக்கு உண்டு அவர் மூலமாய் நாம் உண்டாயிருக்கிறோம் என்ற அறிவில்லாமல் விக்கிரங்களுக்கு படைக்கப்பட்டவைகளை புசித்தார்கள். அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது[1கொரிந்தியர்:8:6-13].அப்போஸ்தலனாகிய   பவுல் கூறுகிறார் ஒரு விசுவாசி விக்கிரகக் கோவிலில் பந்திருக்க ஒருவன் கண்டால் பலவீனமாய் இருக்கிற அவன் மனசாட்சி விக்கிரங்களுக்கு படைக்கப்பட்டவைகளை புசிக்க துணிவுக்கொள்ளும். அதுமட்டுமல்ல பலவீனர் தடுக்கலாகவும் பாவம் செய்யவும் நாம் காரணமாகிறோம் நாமும் கிறிஸ்துவுக்கு விரோதமாய் பாவம் செய்கிறோம். எடுத்துக்காட்டாக விசுவாசி ஒருவன் தன்னுடைய வேலை ஸ்தலத்தில் பதவி உயர்வுக்காக கள்ளத்தனமாய் லஞ்சம் கொடுத்து முயற்சிக்கிறார் என்றால் அதை பார்க்கிற பிற விசுவாசியும் அதே வழியை பின்பற்றலாம். இங்கு இவருடைய மனசாட்சியும் பெலவீனப்பட்டதால் அசுசிப்படுகிறது. பெலவீனப்பட்ட இன்னொரு சகோதரனையும் நாம் பாவம் செய்ய தூண்டுகிறோம்.

இஸ்ரவேலின் முதல் ஆசாரியனாகிய ஆரோன் இஸ்ரவேல் ஜனங்கள் எங்களுக்கு வழிநடத்தும் தெய்வங்களை உண்டுபண்ணும் என்று சொன்ன போது தேவன் சொன்ன கட்டளையை மறந்து பொன் கன்றுக்குட்டியை செய்து பலி செலுத்தினதால் தேவன் அவர்களை உபாதித்தார் [யாத்திராகமம்:32]. பெலவீனப்பட்ட மனசாட்சியுள்ளவர்கள் எளிதில் தேவனை விட்டு பின்வாங்கிபோவார்கள்.  கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும் என வேதம் நமக்கு போதிக்கிறது. விசுவாசிகளாகிய  நாம் வேதத்தை நன்கு தியானித்து அறிந்து கொண்டால் மட்டுமே கிறிஸ்துவை பிரதிபலிக்கிற  வாழ்க்கை வாழ முடியும். நாம் தேவனாலே பெற்ற அபிஷேகம் நம்மில் நிலைத்திருக்கும் போது  மட்டுமே எந்த சூழ்நிலையிலும்  பெலவீனப்பட்டு பாவத்தில் வீழ்ந்து போகாதபடி நம்மை காத்துக்கொண்டு பெலவீனப்பட்ட மற்றவர்களுக்கும் தடுக்கலாகாதபடி கிறிஸ்துவுக்குள் வழிநடத்த முடியும்.

3.   குற்ற மனசாட்சி

நாம் செய்கிற ஒவ்வொரு கிரியைகளையும் நம்முடைய சிந்தனைகளையும் நம்முடைய மனசாட்சி நியாயப்படுத்துகிறது. நாம் ஒரு தவறை செய்யும் போது நம்முடைய மனசாட்சி நம்மை குற்றவாளியாய் தீர்க்கிறது. பவுல் கூறுகிறார் விசுவாசியாயிருந்தாலும் புரஜாதியாய் இருந்தாலும் அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லை

என்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்க்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்[ரோமர்:2:14,15]. இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்த யூதாஸ் தன் மனசாட்சி தன்னை வாதித்ததினால்  குற்றமில்லாத இரத்தத்தை காட்டிக் கொடுத்தேன் என்று சொல்லி மனஸ்தாபப்பட்டு நான்று கொண்டு செத்ததை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். நாம் தேவனுக்கு முன்பாக நம்முடைய பாவத்தை மறைக்க முடியாது. நம்முடைய பாவத்தைக் குறித்து நம் மனசாட்சி குற்ற உணர்வை ஏற்படுத்தும். இயேசு கிறிஸ்துவிடம்  விபசாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்திரியை கூட்டி வந்து மோசேயின் நியாயப்பிரமாணப்படி கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று வேதபாரகர் பரிசேயர் சொன்னார்கள். அதற்கு இயேசு உங்களில் பாவமில்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியகடவன் என்றார். அப்பொழுது அவர்கள் மனசாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு கல்லெறியாமல் ஒவ்வொருவராய் போய்விட்டார்கள்[யோவான்:8:7,9]. கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நம்முடைய மனசாட்சி நம்மை எப்படியாய் தீர்க்கிறது? சற்று ஆராய்ந்து பார்ப்போம். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவத்தினின்றும் நம்மை மீட்க வல்லமையுள்ளது. நம்முடைய பாவங்களை நாம் மறைக்காமல் தேவனிடம் அறிக்கை செய்து விட்டு விடும் போது குற்ற மனசாட்சி நீங்கி சந்தோஷமாய் வாழலாம்.

4.     சூடுண்ட மனசாட்சி

தேவன் மனசாட்சியின் மூலம் உள்ளான மனிதனில் பேசும் போது நாம் கவனித்து கீழ்படியாமல் நாம் செய்தது சரி என்று நம்மை நாமே நியாயப் படுத்தி வாழும் போது நம்முடைய மனசாட்சி சூடுண்ட மனசாட்சியாய் மாறுகிறது. அதாவது நம் சுய சித்தத்திற்கு ஏற்ப மனசாட்சியை நாம் பயிற்றுவிக்கும்  போது  ஒரு சூழலில் தேவன் மனசாட்சியின் மூலம் நம்மை எச்சரித்தாலும் நாம் உணர்ந்து கொள்ள முடியாதபடி சூடுண்ட மனசாட்சியுள்ளவர்களாய் மாறுவோம். வேதம் கூறுகிறது பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள் [1:தீமோத்தேயு 4:1].மோவாபின் ராஜாவாகிய பாலாக் இஸ்ரவேலை சபிக்க பிலேயாம் தீர்க்கத்தரிசியை அழைத்த போது தேவன் நீ அவர்களோடே போக வேண்டாம் என்று  சொன்னார். தேவன் வாக்குமாறாதவர் என பிலேயாம் தீர்க்கத்தரிசி அறிந்திருந்தும் ராஜா அனுப்பின மனுஷரை மீண்டும் எற்றுக்கொண்டான். தேவன் அவன் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். இஸ்ரவேலை சபிக்க புறப்பட்ட போது மூன்று முறை தேவதூதன் வழியில் தடுத்தும் மூன்று முறையும் அவனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை[எண்ணாகமம்:22].பிலேயாமின் இந்த செயலை கூலிக்காக செய்த வஞ்சகம் என யூதா குறிப்பிடுகிறார். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நாமும் கூட தேவ சித்தத்திற்கு கீழ்படியாமல் சுயத்திற்கு கீழ்படிந்து வாழும் போது சூடுண்ட மனசாட்சியுள்ளவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதில் ஐயமில்லை ஒரு கட்டத்திற்கு பின் நாம் தேவ சித்தம் உணர்ந்து கொள்ள முடியாதவர்களாய் விசுவாசத்தை விட்டு வழுவிப்போவோம். பவுல் கூறுகிறார் ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.

தேவனுக்கு ஏற்ற மனசாட்சி (GODLY CONSCIENCE)

1.     சுத்திகரிக்கப்பட்ட மனசாட்சி

வேதம் கூறுகிறது நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக் கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்![எபிரெயர்:9:14]. ஆம் பிரியமானவர்களே பாவ சேற்றில் விழுந்து குற்ற மனசாட்சியோடே வாழ்ந்த நம்மை மீட்டு எடுத்து நம்முடைய மனசாட்சியை சுத்திகரித்தது விலையேறப்பெற்ற இயேசு கிறிஸ்துவின் இரத்தமே. ஏனென்றால் இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு உண்டாகாது. நம் தேவன் பாவத்தை பார்க்காத சுத்த கண்ணர்.  பரலோக தேவனின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட நாம் சுத்திகரிக்கபடவேண்டியது அவசியமாயிருக்கிறது.ஆயக்காரனாகிய சகேயுவின் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து வந்த போது அவன் மனசாட்சி செத்தக்கிரியைகளற சுத்திகரிக்கப்பட்டது. அவன் என் ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்கு கொடுக்கிறேன் நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால் நாலத்தனையாய் திரும்ப செலுத்துகிறேன் என இயேசுவிடம் கூறினான். அதற்கு இயேசு இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது என்றார்[லூக்கா:19:8,9]. பிரியமானவர்களே நாமும் நம் மனசாட்சியை செத்த கிரியைகளற முற்றிலும் சுத்திகரித்து  முடிவுபரியந்தம் அவருடைய இரட்சிப்பில் நிலைத்திருப்போம்.

2.     சுத்த மனசாட்சி

விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளு- கிறவர்களாயும் இருக்கவேண்டும் [1தீமோத்தேயு:3:9]. தாவீது ராஜா தான் பாவம் செய்த போது தேவனே சுத்த இருதயத்தை எனக்கு தாரும் என்று மன்றாடினார். வேதம் கூறுகிறது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிற நாம் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே அவரைத் தரிசிப்பதினால், அவர்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயி- ருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான் [1யோவான்:3:2,3]. தேவன் நம்மை இரட்சித்து பரிசுத்த அழைப்பினாலே அழைத்திருக்கிறார். நாம் எல்லாரும் பரிசுதமுள்ளவர்களாக வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாய் இருக்கிறது. நாம் சுத்த மனசாட்சியோடு வழ வேண்டுமானால் முதலாவது நம்முடைய உட்புறத்தை சுத்தம் செய்ய வேண்டும்.சங்கீதம்:50:4,5 கூறுகிறது தேவன் தம்முடைய ஜனத்தை நியாந்த்தீர்க்க வரும்போது பலியினாலே அவரோடே  உடன்படிக்கை பண்ணின பரிசுத்தவான்களை கூட்டுங்கள் என்பார். போர்த்திபாரின் மனைவி யோசேப்பை பாவத்திற்கு உடன்பட அழைத்த  போது அவன் நான் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்வது எப்படி என்று சொல்லி பரிசுத்தத்திற்கு வைராக்கியம் பாராட்டி விலகி ஓடினான். வேதம் கூறுகிறது பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். நாமும் தேவன் வெளிப்படும் போது பிழையற்ற பரிசுதமுள்ளவர்களாய் காணப்பட சுத்த மனசாட்சியுள்ளவர்களாய் வாழுவோம்.

3.     நல் மனசாட்சி

நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு[1தீமோத்தேயு:1:18]. அப்போஸ்தலனாகிய பவுல் நல்லமனசாட்சியோடே யோக்கியமாய் நடக்க விரும்பினார் என வேதம் கூறுகிறது. அவர் தன் உடன் ஊழியக்காரனாகிய தீமோத்தேயுவுக்கு நீ நல்ல நல்ல போராட்டாம் பண்ணும்படி நல்மனசாட்சியுள்ளவனாயிரு என்று கட்டளையிடுகிறார். நல்ல மனசாட்சி இல்லாதோர் விசுவாசக் கப்பலை சேதப்படுத்த்துகிறார்கள். பவுல் எல்லா விஷயத்திலும் நான் நல்மனசாட்சியோடே தேவனுக்கு முன்பாக நடந்து வந்தேன் என சாட்சி கொடுத்தார்[அப்போஸ்தலர்:23:1].அவர் மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடு நடவாமல் தேவனுடைய கிருபையினால் உலகத்திலேயும் உங்களிடத்திலேயும் கபடமில்லாமல் திவ்விய உண்மையோடு நடந்தேன் என்று தனது மனதை குறித்து சாட்சி கொடுத்தார்[2கொரிந்தியர்:1:12]. வேதம் கூறுகிறது ஞானஸ்நானம் நல்மனசாட்சியின் உடன்படிக்கையாயிருந்து நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது [1பேதுரு:3:21]. தேவனோடு பண்ணின நல்மனசாட்சியின் உடன்படிக்கையில் உண்மையாயிருக்கிறோமா? நம்முடைய வேலை ஸ்தலங்களில் நல்மனசாட்சியோட நடந்து கொள்ளுகிறோமா? சற்று சிந்திபோம் அன்பானவர்களே. நாமும் தேவனுக்காக  நல்ல போராட்டம் பண்ணும்படிக்கு விசுவாசமும் நல்மனசாட்சியும் உடையவர்களாய் வாழுவோம்.

4.     குற்றமற்ற மனசாட்சி

அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று தேவனிடத்தில் தான்  நம்பிக்கைகொண்டிருக்கிறதால்  நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்[அப்போஸ்தலர்:24:15-16].தேவனுக்கு முன்பாக நாம்  அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாய் இருக்கும்படி அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மை தெரிந்துக்கொண்டார். தானியேல் தீர்க்கத்தரிசயிடம் பாபிலோனியர் எந்தவொரு குற்றமும் கண்டுபிடிக்க முடியாதிருந்தது. தானியேல் உண்மையுள்ளவனாய் இருந்தபடியால் அவன் மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை என வேதம் கூறுகிறது [தானியேல்:6:4-6,22].தானியேல் தேவனுக்கு முன்பாக குற்றமற்றவனாக காணப்பட்டதால் தேவன் சிங்கங்களின் வாயை கட்டிபோட்டார். ராஜாவுக்கு முன்பாகவும் நீதிகேடு செய்ததில்லை. நம்முடைய ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும் இயேசு கிறிஸ்து வரும்போது  குற்றமற்றதாய் காக்கப்பட வேண்டும். நாமும் பவுலைப் போல குற்றமற்ற மனசாட்சியுடையவர்களாய் வாழ பிரயாசப்படுவோம்.

     கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நம்முடைய மனசாட்சி நம்மை   குற்றமற்றவன் என்று தீர்க்குமா? நம்மால் பவுலைப் போல நான் எல்லா விஷயத்திலேயும் நல்ல மனசாட்சியோட தேவனுக்கு முன்பாக நடந்து வந்தேன் என்று சாட்சி கூற முடியுமா? நம்மை சற்று ஆராய்ந்து பார்ப்போம். எந்த சூழ்நிலையும் கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மை பிரிக்காதபடி  அவருடைய உயிர்த்தெழுதலின் சாயலில் இணைக்கப்பட்டவர்களாகிய நாம் சுதிக்கரிகப்பட்ட சுத்த மனசாட்சியோடே தேவனுக்கும் மனிதனுக்கும் முன்பாக நல்ல மனசாட்சியோடே குற்றமற்றவர்களாய் வாழ பிரயாசப்போடுவோம். தேவன் மனசாட்சியின் மூலம் நம்முடைய உள்ளான மனிதனில் பேசும் போது அவருக்கு செவிகொடுத்து தீமையை விட்டு விலகுவோம். தேவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து நித்திய வழியில் நடத்துவாராக. ஆமென்.