Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 06/02/2016

கர்த்தர் நமக்கு ஆதரவாயிருக்கிறார் சங் 18:18

 

இன்றைய நாட்களில் ஜனங்கள் பலகாரியங்களைக் குறித்து புலம்புவதுண்டு, எப்படியென்றால் சென்னை வெள்ளத்தில் தன்னுடையதெல்லாம் இழந்து தனிமையில் இருக்கும் ஜனங்கள் ஐயோ நாங்கள் என்ன செய்வோம் நாங்கள் இழந்து போனதை யார் எங்களுக்குத் திருப்பித் தருவார் என்றும் மற்றும் தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிற ஜனங்கள் எங்களுக்கு யார் பாதுகாப்பு தருவார் என்றும், வளைகுடா தேசத்தில் இருப்பவர்கள் எப்பொழுது தங்களுடைய வேலை பறிபோகுமோ என்றும் மற்றும் சிலர் தேவன் தீர்க்கதரிசிகளைக் கொண்டு சொன்ன அழிவுகள் ஏற்பட்டு விடுமோ என்றும் மற்றும் சிலர் எங்களுடைய கடன் பிரச்சனைகள் எப்பொழுது மாறும் என்றும் புலம்பிக் கொண்டிருப்பதை எல்லா இடத்திலும் ஒரு பொதுவான காரியமாக பார்க்க முடிகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் எனக்கு மறைவான மன்னாவை அலங்கரிக்கும்படியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சங்கீதம் 18 ஐ வாசிக்கும்படியாக உதவி செய்தார். அந்த சங்கீதத்தில் சங்கீதக்காரன் தன்னுடைய சூழ்நிலைகளைக் குறித்து தேவனிடம் புலம்பும் போது கர்த்தர் சொன்னப் பதில் நான் உனக்கு ஆதரவாயிருக்கிறேன். இந்த ஆதரவு எந்த சூழ்நிலைகளில் எல்லாம் ஏற்படுகிறது என்பதை இந்த சங்கீதத்தில் இருந்து எடுத்து நமக்கு செய்தியாய் தந்திருக்கிறார். இந்த ஆதரவை நாம் கர்த்தருடைய உதவி கொண்டு பின்வருமாறு தியானிக்கலாம்

*  முதலாவது, யாருக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆதரவாயிருக்கிறார்?

*  இரண்டாவது, எப்படிபட்ட சூழ்நிலையில் கர்த்தர் நமக்கு ஆதரவாயிருக்கிறார்?

அ.  யாருக்கு ஆதரவு

வேதம் சொல்லுகிறது,

1.கர்த்தராகிய இயேசுவை துதிப்பவர்களுக்கு

2.கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறவர்களுக்கு

3.நீதி செய்பவர்களுக்கு, நியாயம் செய்பவர்களுக்கு

4.கர்த்தருடைய வழிகளில் நடக்கிறவர்களுக்கு

5.இரக்கமுள்ளவர்களுக்கு

6.கர்த்தரை நம்புகிறவர்களுக்கு

7.பரிசுத்தமாய் வாழுகிறவர்களுக்கு

8.அபிஷேகம் பெற்றுக் கொண்டவர்களுக்கு

9.இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு

10.துர்க்குணத்துக்கு விலகி நடக்கிறவர்களுக்கு

இப்படிப்பட்ட குணாதிசயங்களை சங்கீதக்காரன் கடைப்பிடித்து வாழ்ந்து வந்ததினால் அவர் உரிமையாக கர்த்தராகிய இயேசுவை கூப்பிட முடிந்தது. கர்த்தரும் அந்த மனுஷனுக்கு முழு ஆதரவாக மாறினதை நாம் சங்கீதம் 18ம் அதிகாரத்தை வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.

ஆகவே நாமும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்கும் போது நாம் அவருடைய பிள்ளையாக மாறும் பாக்கியம் நமக்கு கிடைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை.

ஆ.அடுத்ததாக, எப்படிப்பட்ட சூழ்நிலையில் எல்லாம் தேவனாகிய கர்த்தர் நமக்கு ஆதரவாயிருக்கிறார்?

1.ஜலப்பிரவாகத்திலிருக்கிறவர்களுக்கு

சங்கீதக்காரனாகிய தாவீது சொல்லுகிறார், நான் சமுத்திரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் போது கர்த்தரோ அதைப் பார்த்து நகைத்துக் கொண்டிருக்காமல் தம்முடைய கையை நீட்டி என்னைத் தூக்கிவிட்டார். அவருக்கு (சங்கீதக்காரன்) நன்றாக தெரிந்திருந்தது, தன்னுடைய பலத்தினாலோ அல்லது தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மூலமாகவோ தனக்கு நிச்சயமாக ஆதரவு கிடைக்காது என்று ஆகவேதான் எல்லாருக்கும் உதவி செய்கிற கர்த்தரை நோக்கி அவர் விண்ணப்பம் செய்வதை நாம் தெளிவாக காணமுடிகிறது. அதுமட்டுமல்லாமல் எல்லா சங்கீதத்திலும் இந்த சங்கீதக்காரன் தனக்கு நேரிடுகிற ஜலப்பிரவாகம் போன்ற பிரச்சனைகளிலிருந்து அதாவது சமுத்திரத்தின் அலைகளைப் போன்று பிரவாகித்து தன்னை மூழ்கடிக்கிற பிரச்சனைகளை ஜெயம் எடுப்பதற்கு கர்த்தரே தனக்கு ஆதரவாய் இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளதை நாம் பார்க்க முடிகிறது.

எனவே அவர் இப்படியாக எழுதுகிறார், நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர் உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் சங் 23:4

இன்று நம்மைப் பார்த்தும் தேவன் இவ்வாறாக சொல்லுகிறார், அதாவது தன்னை சுற்றி நிற்கிற சமுத்திரம் போன்று காணப்படுகிற பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது அல்லது எனக்கு யாரவது உதவி செய்யமாட்டார்களா என்று கலங்கி போய் நிற்கிற தம்முடைய பிள்ளைகளைப் பார்த்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிற காரியம் என்னவென்றால்

அ. என்மேல் பாரத்தை விடு நான் உன்னைக் கைவிடுவதில்லை (சங் 55:22)

ஆ. யார் உன்னைக் கைவிட்டாலும் நான் உன்னைக் கைவிடுவதில்லை (சங் 27:10)

இ. ஸ்திரீயானவள் தன்  பாலகனை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை (ஏசா 49:15)

ஈ. என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன் (யோவான் 14:14)

உ. நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன். உங்களிடத்தில் வருவேன் (யோவான் 14:18)

2.  மரணக் கண்ணியிலிருக்கிறவர்களுக்கு

சங்கீதக்காரன் சொல்லுகிறார், ஆண்டவரே மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக் கொண்டது, மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது (சங் 18:4,5). இந்த வசனம் நமக்கு எதை உணர்த்துகிறது என்றால் தாவீது தன்னுடைய சத்துருக்களின் உபாயத்தில் சிக்கினதுமல்லால் மரணம் அவர்களால் தாவீதுக்கு உறுதிச் செய்யப்பட்டது அதாவது தன்னுடைய காலைத் தூக்கினால் கண்ணி வெடி வெடிப்பது நிச்சயம் என்கிற சூழ்நிலையில் இருந்து தேவனைக் நோக்கி கூப்பிட்டார். ஆனால் கர்த்தர் அவனைப் பார்த்து சொன்ன காரியம் நான் உனக்கு ஆதரவாய் இருக்கிறேன் என்கிற ஒரு ஊட்டச்சத்தை தேவன் ஊட்டி விடுவதை நாம் இந்த சங்கீதத்தில் இருந்து அறிய முடிகிறது.

பாருங்கள், வேதத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கித்தவித்த அனேக பாத்திரங்களை நம்மால் பார்க்க முடிகிறது எப்படியென்றால் பவுல் சொல்லுகிறார்

ஆண்டவரே நான் மரண அவதிபடும்படியாக பிசாசானவன் எனக்குள் ஒரு முள்ளை வைத்திருக்கிறான் ஐயோ அதை எடுத்து மாற்றும் இல்லாவிட்டால் இந்த பெலவீனத்தினால் நான் மரிப்பது உறுதி இதைக் கேட்ட இயேசு கிறிஸ்து பவுலுக்கு கொடுத்த மறுபடி என்னவென்று பாருங்கள்

அதற்கு அவர் என் கிருபை உனக்குப் போதும் அதுமட்டுமல்லாமல் உன் பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார் 2கொரி 12:9

அடுத்ததாக, இயேசு கிறிஸ்து அன்பு கூர்ந்த லாசருவை மரணக்கண்ணி இறுக்கினதால் அவன் மரித்து அடக்கம் பண்ணப்பட்டன் என்பதை நாம் வாசிக்கிறோம் (யோவான் 11) அதுமட்டுமல்லாமல் இயேசு கிறிஸ்துவை நம்பியிருந்த அந்தக் குடும்பத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்று பிசாசு மிகவும் களிகூர்ந்திருப்பான் ஆனால் மரணத்தை ஜெயமாக விழுங்குகிறவர் அந்த இடத்துக்கு வந்த போது அவர் சொன்ன ஒரு காரியம் என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்று யோவான் 11:25 ல் வாசிக்கிறோம்.

நாமும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழுவோமானால் அதாவது என் நோயின் நிமித்தம் மரணம் சம்பவிப்பது உறுதி அல்லது நான் மரணக்கண்ணிகளுக்குள் சிக்கிக் கொண்டேன், இனி நான் தப்பிப் போவதில்லை என்று சொல்வாயானால் தேவன் நம்மைப் பார்த்து சொல்லுகிற காரியம்

நான் எப்படி மரணத்தினால் கட்டப்பட்டிருக்க கூடாதோ அதேபோல என்னுடைய பிள்ளைகளையும் அந்த மரணம் கட்ட நான் அனுமதிப்பதில்லை (அப் 2:24)

3.நெருக்கத்திலிருக்கிறவர்களுக்கு

தாவீது சொல்லுகிறார், எனக்கு உண்டான நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கி கூப்பிட்டு என் தேவனை நோக்கி அபயமிட்டேன் அவர் என் விண்ணப்பத்தைக் கேட்டு எனக்கு விசாலமான ஒரு வழியை ஏற்படுத்தி தந்து நான் விழாமல் நடக்கச் செய்தார் என்று சங் 16:6,19,36 ஐ வாசிக்கும் போது அவருக்கு ஏற்பட்ட நெருக்கத்தையும் அதில் வழிகளை கர்த்தர் ஏற்படுத்திக் கொடுத்ததையும் நம்மால் காண முடிகிறது.

நாமும் இப்படிப்யாக சில நேரங்களில் புலம்பதுண்டு எப்படியென்றால் என்னுடைய வாழ்க்கையில் ஒரு வழி மாத்திரமே காணப்பட்டது அதையும் பிசாசானவன் இப்பொழுது மூடிவிட்டான் நான் எந்த வழியிலும் நடக்கக்கூடாதப்படி எனக்கு மிகுந்த நெருக்கத்தை தந்திருக்கிறானே என்று நம்மில் அனேகர் புலம்புவதுண்டு.

பாருங்கள் யோபுக்கு இருந்த எல்லா வாசல்களும் பூட்டப்பட்டது எல்லா வழிகளும் அடைக்கப்பட்டது, எல்லாப்பக்கத்திலும் நெருக்கமான சூழ்நிலை அந்த நிலைமையில் அவர் மனுஷரை கூப்பிடவில்லை தன் மனைவிடம் உதவிக்கு செல்லவில்லை தன்னுடைய செல்வத்தை நம்பவில்லை ஆனால் அடைக்கப்பட்ட வாசல்களைத் திறக்கிற இயேசுவை நோக்கி கூப்பிட்டார் இதனிமித்தம் என்ன நடந்தது, பிசாசினால் அடைக்கப்பட்ட எல்லா வழிகளும் அவருக்கு நிரந்தரமாகத் திறக்கப்பட்டதை யோபுவின் சரித்திரத்தை வாசிக்கும் போது அறிந்து கொள்ளலாம்.

நாமும் நமக்கு ஏற்படுகிற நெருக்கடியான நிலையைக் குறித்து புலம்ப வேண்டாம் மாறாக பவுலும், சீலாவும் தேவனை துதித்தது போல நாமும் ஆடிப்பாடி தேவனைத் துதிக்க தொடங்குவோம். இதோ சிறைச்சாலை கதவுகள் திறந்தது போல, எரிகோட்டை வீழ்ந்தது போல நம்முடைய நெருக்கடிக்கு காரணமான எல்லா வழிகளும் நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே திறக்கப்படும் என்பதில் சந்தேகமேயில்லை.

வேதம் சொல்லுகிறது, நெருக்கப்படுகிற காலங்களில் அவரே (இயேசுவே) தஞ்சமானவர் சங் 9:9

4. சிறுமைப்பட்டவர்களுக்கு

சங்கீதக்காரன் தான் பல இடங்களில் சிறுமைப்பட்டு அதாவது பெலனில்லாதவனைப் போல் மாறினதை நினைத்து அவர் இப்படியாக எழுதுகிறார், தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர் என்று சங் 18:27ல் வாசிக்கிறோம்.

தாவீது எந்த இடத்தில் சிறுமைப்பட்டு போகிறார் பாருங்கள் தேவ சித்தத்திற்கு தன்னை ஒப்புக் கொடுத்த தாவீது தலைமறைவாக சவுலுக்குப் பயந்து ஓடுகிறார், அதுமட்டுமல்லாமல் பல இடங்களில் விருத்தசேதனமில்லாத ஜனங்களால் அவமானப்படுகிறார். குறிப்பாக ஆகீசு என்கிற ராஜாவுக்கு முன்பாக ஒரு கோழையைப் போல் நடிக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார் ஆனால் இதனால் அவர் ஒருபோதும் சோர்ந்து போனதில்லை. மாறாக

சிறுமைப்பட்டவனுக்கு எப்பொழுதும் அடைக்கலமாய் இருக்கிற கர்த்தரை (சங் 9:9) நோக்கி விண்ணப்பம் செய்கிறார், இதினிமித்தம் தேவன் தாவீதை சகல ஜனங்களுக்கும் முன்பாக தாம் அவனுக்காக உருவாக்கின மகத்தான சிங்காசனத்தில் உட்காரும்படிச் செய்தார் என்று நாம் வேதத்தை தியானிக்கும் போது அறிந்து கொள்கிறோம்.

நாமும் இந்த ஆவிக்குரிய வாழ்க்கையில் பல இடங்களில் நிந்தைகளை சந்திக்க கூடும், அதுமட்டுமல்லாமல் சத்துருக்களுக்கு முன்பாக பரிகாசப் பொருளாய் மாறிவிடும் சூழ்நிலைகள் ஏற்படலாம் சில நேரங்களில் நம்முடைய ஆசீர்வாதங்கள் நம்மைவிட்டு கடந்து செல்லக்கூடும். இதனால் மனம் நொந்து நான் சிறுமையானேன் என்று சொல்லி நம்மை உயர்த்துகிற இயேசு கிறிஸ்துவை மறந்து விடாதீர்கள் ஏனென்றால் நாம் எவ்வளவுக்களவு இந்த உலகத்துக்கு முன்பாக சிறுமைப்படுவோமா அதே அளவு நாம் உயர்த்தப்படுவோம் என்பதை மறந்து விடாதீர்கள் ஆகவேதான் அப்,யோவான் இப்படியாக சொல்லுகிறார் இயேசு கிறிஸ்து பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் (யோவான் 3:30)

5. கடைசியாக, இருளில் இருக்கிறவரக்ளுக்கு

சங்கீதக்காரன் எழுதுகிறார், தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர், என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார் (சங் 18:27). தாவீது தனக்கு அடைக்கலம் தந்த ஆகீசோடே பெலிஸ்தருக்கு யுத்தத்தில் உதவுவதற்காக செல்லுகிறார், ஆனால் அங்கு அவர் பெலிஸ்தரினால் ஏற்றுக் கொள்ளப்படாததின் நிமித்தம் அவர் மறுபடியும் தன்னுடைய குடும்பமும் தன்னோடு வந்த மக்களும் தங்கியிருக்கிற சிக்லாகை நோக்கி வந்தார் ஆனால் அந்த இடத்தில் அவர் பார்த்த காட்சி அவருடைய இருதயத்தை இருளாக்கிவிட்டது அதாவது அமலேக்கியர் வந்து எல்லாவற்றையும் கொள்ளையடித்து தங்களுடைய இடத்துக்கு கொண்டு போய்விட்டனர்.

இதனால் மிகவும் துக்கமடைந்த தாவீது தேவனை நோக்கி மனம் கசந்து அழுகிறார் இதோ தேவன் மறுபடியும் தாவீதுக்கு இறங்கி அவருக்கு ஏற்பட்ட இருளான சூழ்நிலையை வெளிச்சமாக மாற்றினார் என்பதை 1சாமுவேல் 30ம் அதிகாரத்தை வாசிக்கும் போது அறிந்து கொள்ளலாம். சில நேரங்களில் நாமும் இப்படிப்பட்ட இருளில் அமிழ்ந்துபோகும் சூழ்நிலைகள் ஏற்படலாம் அல்லது இருளானது நாம் செல்லக்கூடிய ஆவிக்குரிய பாதையை மறைத்து நம்மை தவறான இடத்துக்கு கொண்டு போகும் சூழ்நிலைகள் உருவாகலாம், ஆனால் அந்த நேரத்தில் தாவீது கதறி அழுது விண்ணப்பம் செய்தது போல நாமும் விண்ணப்பம் செய்வோமானால் உலக இருளானது மறைந்து போகும் என்பதில் சந்தேகமேயில்லை. வேதம் சொல்லுகிறது, ஆதியிலே பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையும் ஆழத்தின் மேல் இருளும் இருந்தது, ஆனால் எப்பொழுது சொர்க்கத்தின் வெளிச்சம் இருளின் மேல் அசைவாட தொடங்கியதோ அப்பொழுதே இருளானது வெளிச்சமாக மாறிற்று என்று ஆதியாகமம் புஸ்தகம் 1ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். இதனால் இந்த இருளுக்குள் மறைந்து இருந்த எல்லாக் வஸ்துகளும் ஆறு நாட்களுக்குள் வெளிப்பட்டது என்று பார்க்கிறோம். இன்று அனேகரிடம் இருக்கிற ஆசீர்வாதங்கள் வெளிப்படாமலும் ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாமலும் இருப்பதற்குக் காரணம் அவர்களை மூடியிருக்கிற உலக இருளே காரனம் ஆகும். வேதம் சொல்லுகிறது, இயேசு ஜனங்களை நோக்கி நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார் யோவான் 8:12

கர்த்தருக்குப் பிரியமான ஜனங்களே இந்த உலகத்தில் நமக்கு ஒருபோதும் ஆதரவு கிடையாது அப்படிக் கிடைத்தாலும் அது கொஞ்ச நேரமே இருக்கும். பாருங்கள் தாவீது ராஜா தனக்கு கொஞ்ச நாட்கள் ஆதரவு தந்த ஆகீசோடு கூட எல்லா இடத்துக்கும் கடந்து செல்லுகிறார் ஆனால் அது கொஞ்ச காலமே நிலைத்திருந்தது அதன்பிறகு தன்னுடைய ஆட்கள் வந்தவுடனே தாவீதை அவன் கழற்றி விடுகிறான். இதனிமித்தமாக தாவீதுக்கு நேரிட்ட இழப்பை பார்க்கிறோம். இதை உணர்ந்த தாவீது மறுபடியும் கர்த்தரிடம் தஞ்சம் அடைவதை பார்க்கிறோம். வேதம் சொல்லுகிறது

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய கூடாது யோவான் 15:5 (பிப), ஆகவே நாமும் எதைக் குறித்தும் கவலைப்படாமல் நம்முடைய விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துவோம். அப்பொழுது எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் நம்முடைய இருதயங்களையும் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும் பிலி 4:6,7கர்த்தராகிய

இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் இந்த செய்தியின் மூலம் மெய்யான ஆதரவை தந்து, நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!

 

- சகோ. எட்வின் (சோஹார் ஓமான்)