Tamil Christian Website

Tamil Christian Website

Posted on: 15/11/2014

போர் செய்வோம் வாருங்கள்

உலகத்தில் நடக்கப் போகிற பாவிகளின் ஆட்சியில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமானால் நாம் எப்படிப்பட்ட கிறிஸ்தவ ஜீவியத்தை மேற்கொள்ள வேண்டும். என்பதை அதாவது நம்முடைய ஆவிக்குரிய போராட்டத்தை நான் பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் எஸ்தர் புஸ்தகத்தைக் கொண்டு விளக்க ஆசைப்படுகிறேன்.

எஸ்தர் எப்படியாக தன்னையும் தன்னுடைய கூட்டத்தையும் ஒரு பெரிய அழிவிலிருந்து பாதுகாத்தாள் என்பதைக் கொண்டு, ஒவ்வொருவருடைய போராட்டத்தையும் திடப்படுத்த விரும்புகிறேன்.

முன்னுரை:

எஸ்தரும் அவளுடைய கூட்டமும் இப்பொழுது ஒரு அடிமை வாழ்க்கைக்குள்ளாக இருக்கிறார்கள். [ இருந்தனர் ] என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எப்படியென்றால் மொர்தெகாயும் எஸ்தரும் அவர்களுடைய கூட்டமும் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பாபிலோனுக்கு ராஜாவாகிய நேபுக்காத்நேச்சார் பிடித்துக் கொண்டு செல்லும் போது இவர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர் என்று எஸ்தர் அதிகாரம் நமக்கு சொல்லுகிறது. [ எஸ்தர் 2:6,7 ] இப்படிப்பட்ட கூட்டத்தில் இருந்த எஸ்தர், தாயும் தகப்பனும் இல்லாத சூழ்நிலையில் தன்னுடைய தகப்பனுடைய சகோதரனால் வளர்க்கப்பட்டாள் என்பதையும் நாம் வேதத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த எஸ்தர் தன்னை தேவனுக்கு உண்மையாக அர்ப்பணித்ததின் விளைவு அவள் இந்த பொல்லாத உலகிலே ஜெயங்கொள்ள முடிந்தது அதாவது அழியாத நிலைத்திருக்கிற அணிகலன்களால் தன்னை அலங்கரித்தாள் ஆகவே தேவனும் இந்த அலங்கரிப்பில் மயங்கி அவளையும் அவளுடைய கூட்டத்தையும் விடுவித்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.

இப்படியாக எஸ்தர் தன்னை மட்டும் ஆயத்தப்படுத்தாமல் தன்னுடைய கூட்டத்தையும் ஆயத்தப்படுத்தினாள். இதினிமித்தம் 127 தேசத்துக்கு இராஜாத்தியாக மாறினது மாத்திரமல்ல, அத்துடன் தேவனுடைய மணவாட்டியாகவும் தன்னை அலங்கரித்துக் கொண்டதை நாம் எப்படி மறக்க முடியும்.

எப்படிப்பட்ட அணிகலன்களால் தன்னை அலங்கரித்தாள் என்பதை நாம் பின்வருமாறு பார்க்கப் போகிறோம். இப்பொழுது உங்களை நகைக்கடைக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன், அதுமட்டுமல்லாமல் எப்படிப்பட்ட நகைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் எஸ்தர் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறேன்.

1.முதல் அணிகலன்: தேவனுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் [எஸ்தர் 2:10, 2:20]

தேவனுடைய கட்டுப்பாட்டிற்குள் இருத்தல் என்பது தேவன் சொன்ன எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிதல் என்பதே பொருளாகும். எஸ்தர் எப்படி தேவனுக்குக் கீழ்ப்படிந்தாள், வேதம் சொல்லுகிறது,

மொர்தெகாய் தனக்குக் கற்பித்திருந்தபடியெல்லாம் செய்தாள் அதாவது மொர்தெகாயின் சொற்படியே தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டாள் என்று நாம் எஸ்தர் 2:10 மற்றும் 20ம் வசனத்தில் பார்க்கிறோம். அப்படியென்றால் அவள் ஒரு மனுஷனுடைய சொற்படியே நடந்தாள் என்று நாம் நினைக்கலாம், வேதம் சொல்லுகிறது எல்லா மனுஷருக்கும் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், அதாவது அந்த மனுஷன் தேவனுடைய திட்டத்தின் படி வாழ்கிறவனாய் இருக்கும் போது மட்டுமே நாம் அதற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதே பொருளாகும். ஆம் இந்த மொர்தெகாய் தேவனுடைய ஜனங்களுக்காகத் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என்பதை எஸ்தர் அதிகாரத்தில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம். இதோ எஸ்தரும் தன்னை வளர்த்து வந்த மொர்தெகாய்க்கு கீழ்ப்படிந்தாள் அதாவது கீழ்ப்படிதல் என்கிற அணிகலனை அணிந்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இந்த கீழ்ப்படிதலே ஒரு ஆவிக்குரிய மனுஷனின் வெற்றிக்கு முதற்படியாகும் என்பதை மறக்க வேண்டாம். நாமும் தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். பாருங்கள் சில நபர்களைப் பார்ப்பீர்களானால் உலக வாழ்க்கையில் எல்லா மனுஷருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்கள் ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கையில் எந்த ஒரு கீழ்ப்படிதலும் இல்லாமல் வாழ்வதை நாம் பார்க்க முடிகிறது. எப்படியென்றால் இவர்கள் சத்தியத்திற்கு கீழ்ப்படியாமல் தன்னுடைய சமுதாயத்துக்கும் தன்னுடைய சபை ஊழியக்காரர்களுக்கும் மாத்திரம் கீழ்ப்படிவதை நாம் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட அணிகலன்கள் நம்முடைய வாழ்க்கையை சிதறடித்து விடும் என்பதை மறக்க வேண்டாம். [ ஊழியக்காரர்களுக்கு நிச்சயமாக கீழ்ப்படிய வேண்டும், ஆனால் இந்த கீழ்ப்படிதல் தேவனுக்குள் இருக்க வேண்டும் ]

2.இரண்டாவது அணிகலன்: தாழ்மை [ எஸ்தர் 2:20 ]

மேலே சொல்லப்பட்ட கீழ்ப்படிதல் எஸ்தரின் வாழ்க்கையில் ஒரு பணிவை அதாவது தாழ்மையைக் கற்றுக் கொடுத்தது என்று சொன்னால் மிகையாகாது, ஏனென்றால் எஸ்தரின் ஆரம்பமே மிகச் சரியாக இருந்ததை நாம் பார்க்க முடிகிறது. இப்படியாக ஜனங்கள் ஒரு பழமொழியை சொல்லுவார்கள், அதாவது ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது. என்பதாக ஆனால் எஸ்தரைப் பார்ப்பீர்களானால் தன்னுடைய சிறு பருவத்திலே தன்னை தேவனுக்கு வளைத்துக் கொடுத்தாள் ஆகவேதான் உலகத்தின் பொய்யான அதிபதியால் அவளை ஏமாற்ற முடியவில்லை, எப்படியென்றால், வேதம் சொல்லுகிறது,

எஸ்தர் வளரும் போதும் அவன் [ மொர்தெகாய் ] சொற்கேட்டு நடந்தது போல இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்து வந்தாள். [எஸ்தர் 2:20] பாருங்கள் ராஜ அரமனைக்கு சென்றுவிட்டோம் அல்லது தன்னுடைய பின்னிலைமை முன்னிலைமையை விட உயந்து விட்டது என்று அறிந்து அவள் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. தன்னுடைய எளிமையான வாழ்க்கையே ராஜ அரமனையிலும் மேற்கொண்டாள். ஆகவேதான் தன்னுடைய பெயரையும் தேவனுடைய வேதாகமத்தில் முத்திரையாக பதித்துக் கொண்டாள். என்று சொன்னால் மிகையாகாது.

நாம் எப்படி இருக்கிறோம் நம்முடைய அணிகலனில் இந்த தாழ்மை இருக்கிறதா என்பதை சோதித்துப்பாருங்கள். இன்று அநேகரைப் பார்க்கிறோம் தான் ஒரு நல்ல நிலைக்கு வந்துவிட்டால் உடனே பழைய வாழ்க்கையை மறந்து விடுகின்றனர். வேலையில்லாத போது ஆண்டவருடன் இருந்த அன்பை மறந்து விடுகின்றனர். இதனிமித்தம் வாழ்க்கையில் பாதியிலே காணாமல் போய் விடுவதை நாம் பார்க்க முடிகிறது.

பாருங்கள் யோபு தான் உயத்தப்பட்ட போதிலும், சோதிக்கப்பட்டப்போதிலும் அவருக்கு தேவன் மேல் இருந்த அன்பு குறையவேயில்லை ஏனென்றால் அவரிடம் இருந்த இந்த தாழ்மை என்கிற அணிகலனே என்பதை மறக்க வேண்டாம். இதனிமித்தம் அவர் அபரிதமாக தன்னுடைய வாழ்க்கையில் தேவனால் உயர்த்தப்பட்டதை நாம் பார்க்க முடிகிறது.

வேதமும் அப்படியே சொல்லுகிறது,

கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள் அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார் யாக் 4:10

3.மூன்றாவது அணிகலன்: இரக்கம்

வேதம் சொல்லுகிறது,

இரக்கம் என்கிற அணிகலனை தன்னுடைய சரீரத்தில் எஸ்தர் அணிந்திருந்தாள். எப்படியென்றால் தான் சந்தோஷமாக ராஜ அரமனையில் ஒரு குறையும் இல்லாமல் இருக்கிற வேளையில் அவள் மொர்தெகாயின் துக்கத்தைப் பற்றிக் கேள்விப்படுகிறாள். உடனே தானும் அதற்காக பரிதாபப்பட்டு அவனுக்கு உடுத்துவிப்பதற்காக வஸ்திரங்களை அனுப்பினாள் என்று எஸ்தர் 4:4 நமக்கு சொல்லுகிறது.

மேலே சொல்லப்பட்ட வசனம் நமக்கு எதை வெளிப்படுத்துகிறது என்றால் தன்னை மாத்திரம் பற்றி சிந்திக்காமல் தன்னை சுற்றி வாழுகிற ஒவ்வொருவரையும் பற்றி கவலைப்படுகிற ஒரு ஸ்திரீயாக காணப்பட்டாள் என்பதையே இந்த இரக்க குணம் என்கிற அணிகலன் வெளிப்படுத்துகிறது.

ஆம் இந்த ஆவிக்குரிய வாழ்க்கையில் நம்மிடம் இரக்க குணம் இல்லாவிட்டால் நிச்சயமாக நாம் உலக வாழ்க்கையில் ஜெயம் எடுக்க முடியாது, ஏனென்றால் வேதம் சொல்லுகிறது,

இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம் பெறுவார்கள் என்று மத் 5:7ல் வாசிக்கிறோம். ஆகவே இரக்கத்தின் மேன்மையை அணிகலனாக அணிந்து கொண்ட எஸ்தர் சென்ற எல்லா இடத்திலும் ஜெயம் என்கிற பரிசைப் பெற்றுக் கொண்டாள் என்று வேதம் நமக்கு காட்டுகிறது, ஏனென்றால் வேதம் சொல்லுகிறது,

இரக்கஞ் செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத் தீர்ப்புக் கிடைக்கும், நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்க மேன்மை பாராட்டும் யாக் 2:13

4.நான்காவது அணிகலன்: உபவாசம் இருந்தாள் [எஸ்தர் 4:16]

வேதம் சொல்லுகிறது, அவள் இந்த உலகத்தின் பொய்யான அதிபதியோடே போராடுவதற்காக தன்னுடைய பெலம் மட்டும் போதாது, தேவனுடைய பெலத்தால் நிரம்புவது மிகவும் அவசியம் என உணர்ந்த எஸ்தர் தானும் உபவாசத்தை மேற்கொண்டாள் என்று எஸ்தர் 4:16ல் வாசிக்கிறோம்.

வேதமும் இப்படியே சொல்லுகிறது,

நீங்கள் மாமிச பெலத்தினால் இந்த பிசாசை எதிர்த்து நிற்க முடியாது ஆகவே உபவாசத்துடன் ஜெபம் செய்யுங்கள் அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான் என்று மாற்கு 9:23ல் தேவன் கோடிட்டு காண்பித்திருக்கிறதை நாம் காணலாம். அதுமட்டுமல்லாமல், தேவனிடம் இருந்து வல்லமையை நாம் பெற்றுக் கொண்டால் மாத்திரமே நம்முடைய ஊழியத்தில் நிலை நிற்க முடியும், பாருங்கள் மோசேயும் தேவனிடம் இருந்து வல்லமையைப் பெற்றுக் கொள்வதற்காக இரவும் பகலும் 40 நாள் உபவாசம் இருந்தார்.

இதேபோல நம்முடைய ஆண்டவராகிய இயேசு [ கிறிஸ்துவும் ] பிசாசுடன் போராடுவதற்கு 40 நாள் உபவாசம் இருந்தார் என்பதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம் அதன் பிறகே அவர்கள் வல்லமையோடு இந்த உலகத்தில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற முடிந்தது.

இதை அறிந்த எஸ்தரும் இப்பொழுது தன்னையும் தன்னைச் சார்ந்த கூட்டத்தையும் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் காணப்பட்டாள், அதற்காக அவள் சூசான் அரமனையில் குறிப்பாக ராஜாவாகிய அகாஸ்வேருவின் இடத்திற்கு போக வேண்டும். அப்படிபோக வேண்டுமானால் ராஜா தன் கையில் இருக்கிற பொற் செங்கோலை நீட்ட வேண்டும் இதற்காக அவள் அதாவது அந்த பொற்செங்கோலை தொடுவதற்காக உபவாசம் இருந்தாள், அதாவது உபவாசம் என்கிற அணிகலனை தன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் எடுத்துக் கொண்டாள் இதற்கு முன்பாக பிசாசினால் குறுக்காக நிற்க முடியாமல் அவன் ஓடிப் போனான், இதன் நிமித்தம் எஸ்தர் உள்ளே நுழைந்தாள் அதாவது சாத்தானின் கோட்டையை தகர்த்துப் போட்டாள் என்பதை பார்க்கிறோம்.

5.ஐந்தாவது அணிகலன்: தன் உயிரையும் கொடுக்க முன் வந்தாள் [எஸ்தர் 4:16]

எஸ்தர் தன்னையும் தன்னை வளர்த்த மொர்தெகாயைக் குறித்து மாத்திரம் கவலைப்படாமல் அவர்களோடு இருந்த கூட்டத்தையும் குறித்துக் கவலைப்பட்டாள், இதனிமித்தம் தன்னுடைய உயிரையும் துச்சமாக நினைத்தாள் அதாவது ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. அதாவது அவருடைய அன்பு சுயநலமில்லாததாக அதாவது இயேசு கிறிஸ்துவின் அன்பைப் போல காணப்பட்டது என்று வேதம் சொல்லுகிறது எப்படியென்றால் நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச் சொன்னாள் என்று எஸ்தர் 4:16 ல் வாசித்து எஸ்தரின் அர்ப்பணிப்பை புரிந்து கொள்ள முடிகிறது, ஏனென்றால், அவளுடைய எண்ணமெல்லாம் எப்படியாவது தன்னுடைய ஜனங்களை காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரே ஒரு குறிக்கோள் தான் அவளுடைய மனதில் ஓடிக் கொண்டிருந்தது அதாவது கிறிஸ்துவின் சிந்தை உடையவளாய் காணப்பட்டாள் எப்படியென்றால் நம்முடைய ஆண்டவரும் நாம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக தன்னுடைய உயிரைக் குறித்து அவர் சிறிதும் கவலைப்படவேயில்லை இப்படியாக தம்முடைய உயிரை தந்து நம்முடைய உயிரை காப்பாற்றினார். இதேபோலத்தான் எஸ்தர் ராஜாத்தியும் தன்னுடைய வாழ்க்கையை தன்னுடைய ஜனங்களுக்காக கொடுக்க முன்வந்தாள். அவள் நினைத்திருந்தால் சுகபோகமாய் இந்த உலகத்தில் ஒரு இராஜாத்தியாக வாழ்ந்திருக்க முடியும் ஆனால் அவளோ நிலையான வாழ்க்கைக்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டாள் ஆகவேதான் தனக்கு இந்த உலகத்தில் கொடுக்கப்பட்ட நாட்களை மிகவும் பிரயோஜனப்படுத்திக் கொண்டாள். வேதம் சொல்லுகிறது

சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள் 1தீமோ 5:6

6.கடைசி அணிகலன்: உலகத்தின் மேல் ஆசையில்லை

ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதி மட்டும் கேட்டாலும் உனக்குக் கொடுக்கப்படும் என்றான் எஸ்தர் 5:3

பிசாசானவன் எஸ்தர் ராஜாத்தியின் கவனத்தை உலகத்தின் மேல் திருப்புவதற்காக இப்படி ஒரு பதிலை ராஜாவின் வாயிலிருந்து வரவழைத்தான், ஆனால் தன்னை நிதானப்படுத்திக் கொண்ட எஸ்தரோ அழிந்து போகிற உலகத்தின் மேல் தன்னுடைய கவனத்தை வைக்காமல், கொலோசெயர் 3:2ல் சொல்லப்பட்டது போல, பூமியிலுள்ளவைகளையல்ல மேலானவைகளே நாடுங்கள் ஆம் எஸ்தரும் மேலானவைகளே அதாவது தானும் தன்னுடைய ஜனங்களும் போகப் போகிற பரலோக ராஜ்ஜியத்தையே நோக்கிப் பார்த்தாள், இதனிமித்தம் அவளுடைய சிந்தை மாறாமல் காணப்பட்டது ஏனென்றால் அவள் நன்றாக அறிந்திருந்தாள் இந்த உலகமும் உலகத்தில் உள்ளவைகளும் ஒருநாள் வெயில்பட்ட பனியைப் போல உருகிப் போய்விடும் என்பதை தன் இருதயத்தில் பதித்து வைத்திருந்தாள். ஆகவேதான் பிசாசு கொண்டுவந்த தந்திரத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தொடர்ந்து ஜெயத்தை நோக்கி ஜெய வீராங்கணையாக நடந்து சென்றாள்.

பிசாசும் இதை நன்றாக உணர்ந்து கொண்டான் இதற்கு மேல் தன்னால் எஸ்தருடன் போராட முடியாது ஏனென்றால் அவளுடன் இருந்து யுத்தம் செய்கிறவர் தன்னை விடப் பெரியவர் என்பதை உணர்ந்து கொண்டான், இதனிமித்தம் அவளை விட்டு ஓடிப் போனான்.

வேதமும் அப்படியே சொல்லுகிறது,

பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான் எபேசியர் 4:7

ஆம் எஸ்தரின் வெற்றியை தடுத்து நிறித்துவதற்காக பலவிதமான தடைக்கற்களை பிசாசானவன் போட்டான் ஆனால் எஸ்தரோ அவைகள் எல்லாவற்றையும் தேவ பெலத்துடன் உடைத்துப் போட்டாள், வேதம் சொல்லுகிறது, எந்த நாளில் பிசாசானவன் தேவ பிள்ளைகள் மேல் ஜெயம் எடுக்க நிர்ணயித்தானோ அதே நாளில் எஸ்தரும் அவளுடைய கூட்டத்தாரும் ஜெயம் எடுத்தனர் என்று எஸ்தர் புஸ்தகத்தை வாசிக்கும் போது நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.

எனக்கு அருமையான ஜனங்களே, நாமும் இப்படிப்பட்ட அணிகலங்களை தேவனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோமா? நாம் ஏன் ஒரு ஆமானின் திட்டத்தை உடைக்க முடியவில்லை, ஏன் அந்த தூக்குமரத்தில் அவனை தொங்க வைக்க முடியவில்லை ஏனென்றால் நாம் அழியாத அணிகலன்களை தேவனிடம் கேட்பதற்குப் பதிலாக அழிந்து போகிற அணிகலன்களையே கேட்டுக் கொண்டிருப்பதுதான் இந்த தோல்விக்குக் காரணம்.

ஆகவே எஸ்தரைப் போல் உலகத்தை வெறுப்போம் நாம் இந்த உலகத்திற்கு வரும் போது ஒன்றும் கொண்டு வந்தது இல்லை அதேபோல போகும் போதும் நாம் ஒன்றும் கொண்டு போவதும் இல்லை என்பதை மறக்க வேண்டாம்.

ஆகவே இப்பொழுது மேலே சொல்லப்பட்ட அணிகலன்களை நாமும் பரலோக ராஜாவிடம் இருந்து பெற்றுக் கொள்வோம், பெற்றுக் கொள்வதுடன் மாத்திரமல்ல அதை தறித்துக் கொண்டு போர்க்களத்தில் இறங்குவோம் ஆமான் திட்டமிட்ட அந்த நாளுக்குள்ளாக நாமும் நம்முடைய ஜனங்களும் தேவனோடு செல்வோம் என்று சொல்லி இந்த அணிகலன்களை முடிக்கிறேன். தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் இந்த அணிகலன்களை அணிவாராக. ஆமென். 

-    சகோ. எட்வின் (சோஹார் ஓமான்)