Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 26/03/2016

தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதன்

 -         சகோதரி. அனு ஃபெஸ்லின்

 

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு இறைமகன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். பரலோகத்தில் வாசம் செய்யும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் பூமியில் தன்னுடைய திட்டங்களை மனிதன் மூலம் நிறைவேற்றுகிறார். அதற்கு தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதனை அவர்  தேடுகிறார். இஸ்ரவேலை ஆண்ட சவுல் ராஜா தேவனுக்கு கீழ்படியாமல் அவருடைய கட்டளைகளை மீறின போது தேவன் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற மனுஷனாகிய தாவீதை தேடி அவனை தம்முடைய ஜனங்கள் மேல் தலைவனாக கட்டளையிட்டு இஸ்ரவேலின் ராஜ்ஜியத்தை பலப்படுத்தினார் [1சாமுவேல்: 13:14]. நம் தேவன் மனுஷர் பார்க்கிறபடி முகத்தை பார்க்கிறவர் அல்ல நம்முடைய இருதயத்தை பார்க்கிறவர். தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதனாய் நாம் வாழ்வதற்கு தேவையான குணாதிசயங்களை தாவீது ராஜாவின்  வாழ்க்கையிலிருந்து வேதத்தின் அடிப்படியில் நாம் சிந்திக்கலாம்.

1.                   உறுதியான விசுவாசம்

ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த இளைஞனான  தாவீது ராஜாவாகிய சவுலிடம் உங்கள் இருதயம் கலங்க வேண்டியதில்லை  நான் போய் இந்த பெலிஸ்தியனாகிய கோலியாத்தோடே யுத்தம் பண்ணுவேன் என எந்தவித பயமுமில்லாமல் தைரியமாய் கூறினான். வேதம் கூறுகிறது தாவீது ஒரு யுத்தவீரன், பராக்கிரமசாலி, காரியசமர்த்தன், கர்த்தர்  அவனோடிருந்தார் [1சாமுவேல்:16: 18] ஆனாலும் தாவீது தன்னுடைய பெலத்தில் கோலியாத்தை எதிர்த்து செல்லவில்லை ஜீவனுள்ள தேவனின் மேல் விசுவாசம் வைத்து என்னை சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்த பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்று உறுதியான அசைக்கமுடியாத விசுவாசம் கொண்டிருந்தான்[சாமுவேல்:17:32-47]. சங்கீதம்:16:8-ல் தாவீது கூறுகிறார் தேவனை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் ; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே கோலியாத்தைப் போல எதிரிகள் நமக்கெதிராய் வரும்போது இந்த உறுதியான விசுவாசம் நம்மில் காணப்படுகிறதா? சிந்திப்போம். சங்கீதங்களில் நாம் வாசிக்கும் போது தாவீது ராஜா தான் நெருக்கப்பட்ட நேரங்களில் எல்லாம் தேவனை தன் கன்மலையாக பெலனாக கோட்டையாக நம்பியிருந்து கர்த்தருக்குள் தன்னை திடப்படுத்திக்கொண்டான். அதனால் சகாயம் பெற்றான் [சங்கீதம்:28:7; 18:2;16:1]. நாமும் கூட மனுஷர்கள் நமக்கு எதிராய் யுத்தம் செய்யும் போது நம் சுயபெலத்தினால் மேற்கொள்ளாமல், இந்த யுத்தம் கர்த்தருடையது என்று சொல்லி தேவன் மேல் விசுவாசம் வைத்து நம் வாழ்கையை தேவஆளுகைக்கு ஒப்புக்கொடுப்போம். அப்போஸ்தலனாகிய  பவுல் கூறுகிறார் என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு [பிலிப்பியர்:4:13]. தாவீதைப் போல தேவனில் உறுதியான விசுவாசம் வைத்து அவருக்கு பிரியமாயிருப்போம், எல்லாவற்றையும் செய்ய வல்ல தேவன் நம்மோடிருந்து நம்மை பெலப்படுத்துவார்.

2.                   உண்மையான அன்பு

 

தாவீது ராஜா தேவனை தன் முழு இருதயத்தோடும் முழு பெலத்தோடும் முழு ஆத்துமாவோடும் நேசித்தான். மானானது நீரோடையை வாஞ்சித்து கதறுவது போல தாவீதின் ஆத்துமா ஜீவனுள்ள தேவன் மேல் தாகம் கொண்டது. அவன் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருந்தது ஆஸ்தியிலும் அந்தஸ்திலும் பதவியிலும் ஐசுவரியத்திலும் மகிமையிலும் கணத்திலும் தாவீது ராஜாவின் இருதயம் களிகூராமல்  தேவனில் களிகூர்ந்து அவருடைய அதிசயங்களையும் மகத்துவங்களையும் ஜனங்களுக்கு விவரித்து அறிவித்தான். அவன் இருதயம் எப்பொழுதும் தேவனை தேடினது. பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன் என்று தாவீது கூறுகிறார் [சங்கீதம்:63:1,2]. வேதம் கூறுகிறது அதிகாலையில் தாவீது தேவனுக்காக ஆயத்தமாகி  காத்திருந்தான் அந்தி சந்தி மத்தியான வேளைகளிலும் பலியிட்டான்.

 

தேவனுடைய பெட்டியை எருசலேமுக்கு கொண்டு வந்த போது தாவீது தன் ராஜமேன்மையை கூட எண்ணாமல் தன்னை தாழ்த்தி தேவனுடைய பெட்டிக்கு முன்பாக முழுபெலத்தொடும் நடனமாடி தேவனை ஸ்தோத்தரித்தான் [2சாமுவேல்:6:13-14]. தாவீது ராஜா தேவன் மேல் கொண்ட அன்பு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. தாவீது  தன்  வீட்டில் வாசமாயிருக்கையில் தேவனுடைய பெட்டி திரையின்கீழ் இருக்கிறது என்று சொல்லி தேவனுக்காய் ஒரு வாசஸ்தலத்தை கட்ட ஆசைப்பட்டான். தேவன் அவன் குமாரன் சாலொமோனை அந்த பணிக்கு தெரிந்தெடுத்தது மட்டுமல்ல,  கர்த்தர் தாவீதின் வீட்டைக்கட்டி நித்திய ராஜாசனத்தையும் அவன் சந்ததிக்கு கொடுத்தார்[1நாளாகமம்:17:1-14]. நம்முடைய இருதயமும் ஆத்துமாவும் எதை வாஞ்சித்து களிகூறுகிறது? சிந்தித்து பார்ப்போம் அன்பானவர்களே! தாவீதின் இருதயம் தேவன் நல்லவர் என்பதை ருசித்து தேவனை பாடும் துதியினாலும் பாட்டினாலும் எப்பொழுதும் களிகூர்ந்து மகிழ்ந்தது [சங்கீதம்:34:1]. சவுலினால் நெருக்கப்பட்ட காலத்திலும் தாவீது என் பெலனாகிய கர்த்தாவே உம்மில் அன்புகூருகிறேன் என்று தேவனை துதித்தான். கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் அவர் துதி எப்பொழுதும் என் வாயிலிருக்கும் என்று நாமும் எல்லா நேரத்திலும் நம்முடைய விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்கு தெரியபடுத்தி தேவனில் களிகூறுவோம்.

 

3.                   உத்தமமும் செம்மையுமான இருதயம்

தாவீதின் இருதயம் தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருந்தது. அவன் தேவனை பூரணமாய் பின்பற்றினான். தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்றுதவிர கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்[1இராஜாக்கள்:11:4,5;15:3-5]. உரியாவின் காரியத்தில் தாவீது தவறு செய்த போது நான் கர்த்தருக்கு விரோதமாய் பாவங்செய்தேன் என்று தன்னை தாழ்த்தி தேவ சமூகத்தில் தன் பாவத்தை அறிக்கையிட்டு சுத்த இருதயதிற்காக அழுது மன்றாடுவதை சங்கீதம் 51-ல் நாம் வாசிக்கலாம். தாவீது இரட்சிப்பின் தேவனால் தன் பாவத்தை மேற்கொண்டு  முழுமனதோடு தேவனுக்கு கீழ்படிந்து உண்மையாய் வாழ ஒப்புக்கொடுத்தான். தாவீது ராஜா தேவனுடைய கட்டளைகள் கற்பனைகள் சாட்சிகள் பிரமாணங்களை தன்  இருதயத்திலே காத்து அதின்படி தேவனுக்கு பிரியமாய் நடந்தான். அவன்  இஸ்ரவேலை ஆண்டு தன் ஜனத்திற்கெல்லாம் நியாயமும் நீதியும் செய்தான். தாவீதிற்கு பின் வந்த நல்ல ராஜாக்களை குறித்து வேதத்தில் சொல்லப்படும் போது, தாவீதை கொண்டு அவர்களை மதிப்பீடு[benchmark] செய்வதை நாம் வேதத்தில் காணலாம். வேதம் கூறுகிறது செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும் அவர்களுடைய கூடாரம் செழிக்கும்[சங்கீதம்:112:2; நீதிமொழிகள்:14:11] அன்பானவர்களே தம்மைப்பற்றி   உத்தம இருதயத்தோடு இருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப் பண்ணும்படி,  கர்த்தருடைய  கண்கள்  பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது[2[நாளாகமம்:16:9]. தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பாக மன உண்மையாயிருந்து அவருடைய வழிகளை காத்து எல்லா துற்குணத்திற்கும் தன்னை விலக்கி காத்துக்கொண்டான். தேவனை உத்தமமாய் பின்பற்றாத இஸ்ரவேலர் பரம கானானுக்குள் பிரவேசிக்கவில்லை. நாமும்  தேவனுடைய வேதத்தின்படி செம்மையும் உத்தமுமாய் நடந்து நீதியை நடப்பித்து மனதார சத்தியத்தை பேசி தேவனுடைய கூடாரத்தில் தங்கி அவருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுகிற பாக்கியத்தை பெற்றுக் கொள்ளுவோம்.

4.                   தேவனுக்கு சித்தமானவைகளை செய்தான்

ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தார்( He will do everything I want him to do)[அப்போஸ்தலர்:13:22]. தாவீது எந்த ஒரு காரியத்தை செய்தாலும் தேவனுடைய பாதத்தில் அமர்ந்து அவருடைய ஆலோசனைகளை கேட்டு நடப்பதை நாம் வேதத்தில் காணலாம். தாவீது சமஸ்த இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டதை கேள்விப்பட்ட பெலிஸ்தர் அவனுக்கு எதிராய் வந்த போது தாவீது தேவனிடம் போய் பெலிஸ்தருக்கு விரோதமாய் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தேவசமூகத்தில் ஆலோசனைப் பெற்று தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதை நாம் காணலாம்[1நாளாகமம்:14:8-17]. இவ்விதமாய் தாவீது தன் வாழ்க்கையில் எல்லா நேரத்திலும் தேவ ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுத்து தேவனுடைய சித்தத்தை அறிந்து செயல்பட்டான். நாமும் பரலோக பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம். வேதம் கூறுகிறது பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லை. ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்[யோவான்:9:31]. நீங்கள் மதியற்றவர்களாயிராமல் கர்த்தருடடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது[எபேசியர்:5:17]. நாமும் தேவன் நம்மை அழைத்த  அழைப்புக்கு பாத்திரவான்களாயிருக்க அவருடைய சித்தத்தை அறிந்து அதின்படி நடப்போம்.

5.        உற்சாக மனதோடு கொடுத்தான்  

 

தேவன் தம்டைய ஆலயத்தை கட்ட தாவீதின் குமாரனாகிய சாலொமோ னை தெரிந்துகொண்டாலும் தாவீது ராஜா தேவனுடைய ஆலயத்தைக் கட்ட உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் மனப்பூர்வமாய் காணிக்கை கொடுத்தான். அவன் தேவனுடைய ஆலயத்தின் மேல் வைத்த வாஞ்சையினால் பரிசுத்த ஆலயத்திற்கு தான் சவதரித்த எல்லாவற்றையும் தவிர தனக்கு சொந்தமான வெள்ளியையும் பொன்னையும் கொடுத்தான் [1நாளாகமம்:29:3-18].ஜனங்களையும் மனப்பூர்வமாய் கொடுக்க உற்சாகப்படுத்தினான். வேதம் கூறுகிறது உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாய் இருக்கிறார்[2 கொரிந்தியர்:9:7]. தாவீது கூறுகிறார் எல்லாம் உம்முடைய கரத்திலிருந்து வந்தது எல்லாம் உம்முடையதுஇவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடே மனப்பூர்வமாய் கொடுத்தேன். பிரியமானவர்களே நாம் தேவனுக்காய் எதை கொடுத்தாலும் செய்தாலும் நம்மை தாழ்த்தி உற்சாகமாய் உத்தம இருதயத்தோடு கொடுக்க வேண்டும். அப்பொழுது தேவன் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே தாவீது ராஜாவை தேவன் தன் இருதயத்திற்கு ஏற்றவனாக தெரிந்துகொண்டு சாட்சி கொடுத்தார். இன்று தேவனுக்கு முன்பாக நம்முடைய சாட்சி எப்படி இருக்கிறது?சற்று சிந்தித்து பார்ப்போம். தாவீது எல்லா காரியத்திலும் தேவனுக்கு முதலிடம் கொடுத்து தேவனை கனப்படுத்தினான். நம்முடைய வாழ்கையை போல தாவீதின் வாழ்க்கையிலும் ஆபத்துக்கள் நெருக்கங்கள் யுத்தங்கள் இருந்தது. ஆனால் தாவீதின் அசைக்கமுடியாத நம்பிக்கை தேவன் மேலிருந்தது எந்த காலத்திலும் எவ்வித சூழ்நிலையிலும் தாவீது முழு இருதயத்தோடும் கர்த்தரை துதித்து அவரில் களிகூர்ந்து மகிழ்ந்தான். தாவீது தேவனில் உண்மையான அன்புக்கொண்டு உத்தமமும் செம்மையுமான இருதயத்தோடு அவருடைய கட்டளைகளுக்கும்  கற்பனைகளுக்கும் கீழ்படிந்து தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றினான். கர்த்தர்  அவன்மேல்  பிரியம் வைத்து  அவனோடிருந்து புத்திமானாய் நடத்தி எல்லா காரியத்திலும் விருத்தியடைய செய்து வெற்றியை கட்டளையிட்டார். பிரியமானவர்களே நாமும் கூட ஆசீர்வாதங்களுக்காய் தேவனை தேடி ஓட வேண்டாம். ஐசுவரியமும் கனமும் அவராலே வருகிறது. நம்மை மேன்மைபடுத்தவும் பலப்படுத்தவும் எல்லவற்றையும் ஆளுகிற தேவனாலே ஆகும். உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் தேவனை சேவிப்போம்.நம்முடைய இருதயத்தை அவருக்கு முழுமையாய் அற்பனிப்போம். நம்முடைய தாலந்துகள், நேரம், செல்வம் ஆகியவற்றை உற்சாகமாய் உத்தம இருதயத்தோடு மனப்பூர்வமாய் தேவனுக்கு கொடுப்போம். தேவன் நம்முடைய வாழ்க்கையிலும் பெரிய காரியங்களை செய்து எல்லாருடைய கண்களுக்கும் முன்பாக ஐசுவரியத்திலும் மகிமையிலும் கனத்திலும் நம்மை சிறந்திருக்க செய்வார். ஆமென்.