Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 17/09/2016

பாவமன்னிப்பும், ஞானஸ்நானமும்

 

லூக்கா 24 ல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வேதவாக்கியங்களை அறிந்து கொள்ளும்படி சீஷர்களின் மனதை திறந்து

லூக்கா 24:47,48,49 அன்றியும் மனந்திரும்புதலும் பாவ மன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.

நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்.. என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை இதோ நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிபிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்படிந்த சீஷர்களும் அப்போஸ்தலர்களும் எருசலேமில் மேல் வீட்டிறையில் பரிசுத்த ஆவியானவரால் இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையை பெற்று கொண்ட பிறகு பேதுரு ஜனங்களை நோக்கி நீங்கள் மனம் திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். அதை கேட்டு அனேகர் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார்கள். பாவ மன்னிப்பும், மனந்திரும்புதலும் சகல தேசத்தாருக்கும் அறிவிக்கப்பட வேண்டியது என்று இயேசு கிறிஸ்து கட்டளையிட்டார். ஆனால் இரட்சிப்பை குறித்த இந்த கட்டளைகள் இன்றைய சபைகளில் புறக்கணிக்கப்படுவது வருத்தமான விஷயம்.

எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார் [ 1தீமோ 2:4 ] என்று வேதம் சொல்லுகிறது. பூமியிலும் வானத்துக்கு கீழேயும் இரட்சிக்கப்படுவதற்கு இயேசுவின் நாமத்தை தவிர வேறு நாமம் இல்லை என்று வேதம் சொல்லுகிறது. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று இயேசு சொன்னார். அதுமட்டுமல்லாமல் என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்றார். மேலும் நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் [ யோவான் 9:5 ]

இன்றைக்கு சபைகளும் ஜனங்களும் ஏன் மெய்யான மனந்திரும்புதலுக்கும் பாவமன்னிப்புக்கும் தங்களை ஒப்புக் கொடுப்பதில்லை. யோவான் 3:20 ல் இதற்கான பதிலை நாம் பார்க்கலாம், எப்படியென்றால் பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியை பகைக்கிறான் தன் கிரியைகள் கண்டிக்கபடாதபடிக்கு ஒளியினிடத்திற்கு வராதிருக்கிறான். சத்தியத்தின்படி செய்கிறவனோ தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய் செய்யபடுகிறதென்று வெளியாகும்படிக்கு ஒளியினிடத்திற்கு வருகிறான். அல்லேலூயா!

பாவம் செய்கிறவன் பாவத்துக்கு அடிமையாகிறான் என்று வேதம் சொல்லுகிறது, வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே [ பாவத்தின் பெலன் ] என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன். என்னை நோக்கி வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்று இயேசு கிறிஸ்து சொன்னார்.

பாவத்துக்கு தப்ப தேவனிடத்தில் வா என்று வேதம் சொல்லுகிறது. பருந்தை கண்ட கோழி குஞ்சுகள் கோழியின் கீழ் அடைக்கலம் புகும்.

மத் 23:27 மாயக்காரராகிய வேதபாரகரே பரிசேயரே உங்களுக்கு ஐயோ வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள் அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும் உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும் என்று இயேசு சொன்னார்.

1.பாவத்துக்கு தப்ப தேவனை விட்டு ஓடுகிறவனை பாவம் பிடிக்கும்

2.மரணத்துக்கு தப்ப மரணத்தை விட்டு ஓடுகிறவனை மரணம் பிடிக்கும்

திபெத் சிறைச்சாலையில் ஒருவனுக்கு மர தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவன் சுவரில் துளையிட்டு தப்பி ஓடி காட்டு பகுதிக்கு சென்று விட்டான். அங்கு காணப்பட்ட கடுங்குளிரினால் அவன் மரித்து போய் விட்டான். ஆகவே பாவம் உன்னை ஆளுகை செய்து கொண்டிருக்கிறதா? நீ தேவனிடம் வா அவரை நோக்கி கூப்பிடு. விபச்சாரத்தில் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட அந்த பெண்ணை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். நியாயப் பிரமாண சட்டதிட்டத்தின்படி அவள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.

அவளை பிடித்தவர்கள் இயேசுவிடம் கொண்டு வந்து இவளை கையும் களவுமாக பிடித்தோம். இவளை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு இயேசு உங்களில் பாவம் இல்லாதவன் இவளை கல்லெறியக் கடவன் என்றார். எல்லாரும் மனச்சாட்சியினால் குத்தப்பட்டவர்களாய் கற்களை கீழே போட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்கள். இயேசு அந்த பெண்மணியைப் பார்த்து உன் பாவம் உனக்கு மன்னிக்கப்பட்டது இனி பாவம் செய்யாதே என்றார்.

தன் ஆஸ்தியை வேசிகளிடம் அழித்து போட்ட இளைய குமாரன் மனம் திரும்பி தந்தையிடம் [ தேவன் ] வந்தான். தந்தையின் வீட்டிற்கு [ பரலோகத்துக்கு ] பிரவேசித்தான். இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை என்று வேதம் சொல்லுகிறது. கல்வாரி சிலுவையில் நம் பாவத்துக்காக இரத்தம் சிந்தி நம் பாவங்கள் சாபங்கள் எல்லாவற்றையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சுமந்து தீர்த்தார், பின்னர் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்து பிதாவின் வலது பாரிசத்திலே நமக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

இதுதான் தேவன் நமக்கு அருளிய மிகப்பெரிய ஈவான இரட்சிப்பு. தேவன் தமது ஒரே பேறான குமாரனை நமக்காக தந்து நம் மேல் அன்பு கூர்ந்தார் என்று வேதம் சொல்லுகிறது. இந்த மகாபெரிய இரட்சிப்பை நாம் விசுவாசத்தாலும், தேவனுடைய கிருபையினாலும் சுதந்தரித்து கொள்ள வேண்டும். நாம் செய்த பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு அதை அறிக்கையிட்டு மனம் திரும்பி தேவன் சிலுவையில் செய்த இரட்சிப்பை உள்ளத்தின் ஆழத்திலிருந்து விசுவாசித்து அறிக்கையிடும் போது பாவமன்னிப்பின் நிச்சயத்தின் உணர்வினை தெய்வீக சமாதானத்தோடும் சந்தோஷத்தோடும் சுதந்தரித்துக் கொள்ள முடியும்.

பாவத்தை விட்டு மனந்திரும்புகிறவன் தன் வழியை விட்டு விட்டு தேவனுடைய வழிக்கு திரும்புவான். மீண்டும் அந்த பாவத்தை செய்யமாட்டான். இதுவே மெய்யான மன்ந்திரும்புதல் ஆகும். இரண்டு வாலிபர்கள் சூதாட்டம் ஆடி கொண்டிருந்த போது காவல்காரர்கள் அவர்களை பிடித்து விட்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாதம் சிறை தண்டனை என்பதாக தீர்ப்பு சொல்லப்பட்டது.

இருவரில் ஒருவன் பணக்கார வீட்டு பிள்ளை. ஆகவே அவனுடைய தந்தை தம்முடைய மகனுக்காக ரூபாய் 5000 செலுத்தினதினால் அவன் சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்படான். ஏழையின் மகனோ 5000 ரூபாய் கொடுக்க முடியாததினாலே சிறைச்சாலையிலேயே அடைக்கப்படான். ஆனால் இவனது தாயோ தன் பிள்ளையை அங்கிருந்து விடுவிக்க பணம் சேர்க்கும் பொருட்டு காலை முதல் மாலை வரை மிகுந்த பிரயாசம் எடுத்துக் கொண்டிருந்தாள் எப்படியென்றால் ஒவ்வொருநாளும் கல் சுமந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள். இப்படியாக கடும் பிரயாசத்துக்கு பிறகு 5000 ரூபாய் சேர்த்து தன் மகனை விடுவித்தாள். தன் தாயின் கையில் கட்டு போட்டிருப்பதை கண்ட அந்த மகன் அம்மா உங்கள் கையில் ஏன் காயம், விரலில் ஏன் இரத்தம் என்று கேட்டான். தாயோ உன்னை விடுவிப்பதற்காக வேலை செய்த பொழுது என் கையின் மேல் கல் விழுந்து விரல் சிதைந்து விட்டது என்று வருத்தத்தோடு சொன்னாள்.

பிறகு சிலநாள்கள் கழித்து அந்த பணக்காரனின் மகன் இவனைப் பார்த்து சூதாட கூப்பிட்டான் அவனோ இது ஒரு போதும் முடியாது. உனக்கு விடுதலை எளிதாக கிடைத்தது. நானோ என் தாயின் கடும் பிரயாசம், கூலி வேலை, உடம்பின் காயம் மற்றும் இரத்தம் இவற்றால் மீட்கப்பட்டேன் எனவே என் தாயை இத்தனை பாடுகளுக்குள்ளாக்கின சூதாட்டத்தை இனி செய்ய மாட்டேன் என்றான்.

இன்றைக்கு பாவத்திலிருந்து மீட்பு சுலபமாக கிடைத்து விடும் என்று நினைக்கும் கிறிஸ்தவர்கள் அந்த பணக்காரனின் மகனைப் போல பாவத்தை விட முடியாதவர்களாக இருக்கின்றனர். ஆனால் நம்மை பாவத்திலிருந்து மீட்க இயேசு கிறிஸ்து பரலோகத்தை விட்டு இவ்வுலகத்துக்கு மானுட அவதாரம் எடுத்து வந்து தமது விலையேறப் பெற்ற இரத்தம் சிந்தினார் என்று உணரும் கிறிஸ்தவன் தன் தேவனுக்கு இத்தனை வருத்தத்தை கொடுத்த பாவத்தை மீண்டும் செய்ய மாட்டான்.

இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட சிறைசாலை தலைவனை பார்த்து பவுல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் அப் 16:31 என்றான். அத்தோடுமட்டுமல்லாமல் அவர்களை இரட்சிப்புக்குள்ளாக நடத்தி அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதையும் பார்க்கலாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான். விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாக தீக்கப்படுவான் [மாற்கு 16:16] என்றார்.

லூக்கா 7:30 பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்

ஞானஸ்நானம் என்பது தேவ ஆலோசனை அது ஒரு சடங்கு அல்ல பாவ மன்னிப்புக்கு பிறகு தேவனோடு பண்ணும் நல் மனசாட்சியின் உடன்படிக்கை [1பேதுரு 3:21] சகல ஜனங்களையும் சீஷராக்கி பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுங்கள் என்று சொன்ன இயேசு கிறிஸ்து இதை கட்டளையாக கொடுத்துள்ளார். [மத் 28:19] கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் எடுப்பது என்பது உள்ளான மாற்றம் ஏற்பட்டு கிறிஸ்துவை தரித்துக் கொள்ளும் அனுபவம் [கலா 3;27] பாவத்துக்கு மரித்து நீதிக்கு பிழைத்திருக்கும்படி கிறிஸ்துவுக்குள்ளாய் அடக்கம்பண்ணப்பட்டு அவருடைய உயிர்த்தெழுதலின் சாயலில் புதிய சிருஷ்டியாய் புதிதாக பிறக்கும் அனுபவம் [ரோமர் 6:4-11]

கொலோ 2:12 ஞானஸ்நானத்திலே அவரோடே கூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும் அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடே கூட எழுந்தவர்களாவும் இருக்கிறீர்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவர் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் பரலோகராஜ்ஜியத்திலே பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன் என்று எச்சரிக்கிறார்.

யோவான் 14:15,24 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்

என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான் நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது

1யோவான் 2:4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பெய்யானாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.

பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்று வேதம் சொல்லுகிறது

யோவான் 12:48 என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது நான் சொன்ன வசனமே அவனைக் கடைசி நாளில் நியாயந்தீர்க்கும்

பாவ மன்னிப்பை பெற்று கொண்டவர்கள் தண்ணீரில் முழுக்கு ஞானஸ்நானம் பெற்று கொள்ள வேண்டும். இன்றைக்கு சில சபைகளில் பலர் ஞானஸ்நானம் என்ற தேவ கட்டளைக்கு கீழ்ப்படிவதில்லை. அதோடு நின்றுவிடாமல் தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள். லூக்கா 7:30ல் பரிசேயரும் நியாய சாஸ்திரிகளும் அவனால் ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்கு கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையை தள்ளிவிட்டார்கள். எனவே உங்களுக்கு கேடு வராமலிருக்க மேலும் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படாதப்படிக்கு ஞானஸ்நானம் என்ற தேவ கட்டளைக்கு கீழ்ப்படிந்து தேவனோடு உடன்படிக்கை பண்ணி கொள்ளுங்கள்.

நீங்கள் பின்பற்றி வரும்படியாக ஒரு மாதிரியை அடிச்சுவடாக இயேசு கிறிஸ்து காண்பித்துவிட்டு சென்றிருக்கிறார். வானத்தையும் பூமியையும் படைத்த அவரே ஞானஸ்நானம் பெறும் போது சிருஷ்டியான நீ அதற்கு கீழ்ப்படியாமல் இருப்பது சரியா?

ஆகவே மனிதன் உருவாக்கி வைத்துள்ள சபை சட்டதிட்டங்களை விட்டுவிட்டு தேவ கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்

1பேதுரு 2:21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள் ஏனெனில் கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார்

குயவன் களிமண்ணினாலே ஒரு பாத்திரம் செய்கிறான் அது கெட்டு போனாலும், அது ஈராமயிருக்கும் வரையில் அதை மாற்றி சரிபடுத்த கூடும். அதை சுட்டப் பிறகு அதை மாற்ற இயலாது. அதுபோல இவ்வுலகத்தில் இருக்கும் இக்காலத்திலே பாவத்தை விட்டு மனஸ்தாபப்பட்டு மனந்திரும்ப வேண்டும். இல்லையென்றால் மரணத்துக்கு பிறகு வேறு தருணம் கிடையாது. ஒரு நகரத்தில் ஒரு நீதிபதியின் மகன் குற்றம் செய்து குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டான். குற்றம் நிரூபிக்கப்பட்டது. நீதிபதி தீர்ப்பை கூறுவதற்கு முன்பு மகன் நீதிபதியை நோக்கி அப்பா என்னை மன்னித்து விடுங்கள். நான் தெரியாமல் செய்து விட்டேன், இனி மறுபடியுமாய் அந்த தவறை நான் செய்ய மாட்டேன் என்று கதறி அழுதான்.

நீதிபதியோ தன் தீர்ப்பை வாசித்தான் 5 ஆண்டு கடுங்காவல் அல்லது 10 லட்சம் ரூபாய் அபராதம் தண்டனையாக விதிக்கப்பட்டது. அந்த வாலிபரோ 10 லட்சம் ரூபாய்க்கு நான் எங்கே போவேன் என்று கூறி அழுதான். நீதிபதியோ தீர்ப்பை வாசித்த பிறகு ஆசனத்திலிருந்து இறங்கி தன் சீருடையை கழற்றி வைத்து விட்டு குற்றவாளி கூண்டுக்கு முன்பாக வந்து தன் சூட்கேஸை திறந்து தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து சேர்த்து வைத்த 10 லட்சம் ரூபாயை உனக்காக கிரயம் செலுத்தி விட்டேன் இனி குற்றம் செய்யாதே என்று சொல்லி அவனை விடுவித்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் எடுக்க வந்த போது இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்று யோவான் ஸ்நானன் அவரைப் பார்த்து சொன்னான். அவர் நம்முடைய பாவத்தை சுமந்து தீர்த்து விட்டார், நம் பாவத்துக்கு கிரயம் செலுத்தி விட்டார். இரட்சிப்பை சுதந்தரிப்பது நம்முடைய கைகளில் இருக்கிறது.

1யோவான் 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இரத்தம் சிந்தி தன் ஜீவனையே தந்து கிரயம் செலுத்தி விட்டார். இன்றும் நாம் இரட்சிப்பை சுதந்தரிக்காமல் இருந்தால் எல்லா மனுஷர்களைக் காட்டிலும் பரிதபிக்கப்பட்டவர்களாக இருப்போம்.

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். அல்லேலூயா!

ஒருமுறை கேரளாவைச் சேர்ந்த ஒரு ஊழியக்காரர் தம் மகனைப் பற்றி கண்ணீரோடு சாட்சி சொன்னார். தன் மகன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானான் நாங்கள் எவ்வளவோ சொல்லி பார்த்தோம் கீழ்ப்படியவில்லை. சபையார் எல்லாரும் அவனுக்காக ஜெபித்தோம் ஒரு நாள் இரவு டெல்லியிலிருந்து ஒரு ஊழியக்காரர் எங்க வீட்டிற்கு வந்தார். அவர் சொன்ன காரியம் கர்த்தர் என்னோடு பேசினபடியால் உங்க மகனைப் பார்க்க வந்ததாக சொன்னார்.

நான் அவரை என் மகன் இருந்த அறைக்குள் அழைத்துச் சென்றேன். நண்பர்களோடு குடித்து கொண்டிருந்த அவன் அந்த ஊழியக்காரர் சொன்ன எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் வாயிலிருந்த மதுபானத்தை அவர் மேல் உமிழ்ந்தான். அவரோ ஒன்றுமே பேசாமல் அந்த இடத்தை விட்டு வருத்தத்தோடு போய் விட்டார்.

சில நாள்கள் கழித்து அவனுக்கு தொண்டையில் வேதனை ஏற்பட்டது மருத்துவர்கள் அவனை பரிசோதித்து விட்டு புற்று நோய் என்று உறுதிப்படுத்தினார்கள். மேலும் அந்த நோயை குணப்படுத்த முடியாது, சில நாட்களில் மரித்து விடுவான் என்று சொல்லி விட்டார்கள். மருத்துவர்கள் சொன்னபடியே சில நாட்களில் அவன் மரித்துவிட்டான். அவனுக்கு தேவன் அனேக தருணங்களை கொடுத்தும் அவன் அதை உதாசினப்படுத்தினதையும் மேலும் அவனை இரட்சிப்புக்குள்ளாக நடத்த முடியாததையும் நினைத்து அவருடைய தந்தை கதறி அழுதார்.

இன்றைக்கு நீங்கள் மரித்தால் உங்க ஆத்துமா எங்கே போகும்? பிரியமானவர்களே உங்களை நிதானித்து பாருங்கள், பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்று கொண்டீர்களா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் இலவசமாக உங்களுக்காக பெற்று தந்த இரட்சிப்பை பெற்று கொண்டீர்களா?

மனந்திரும்புங்கள் பரலோகராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது என்று இயேசு தன் ஊழியத்தை ஆரம்பித்த போது சொன்ன வார்த்தைகள்.

இன்றைக்கு மனந்திரும்புங்கள் இனி காலம் செல்லாது என்று பரிசுத்த ஆவியானவர் பாவத்தை குறித்தும் நீதியைக் குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துகிறார்.

1கொரி 7:23 நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள் மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்

1கொரி 6:20 கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்

நீதி 28:13 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான் அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்

வெளி 22:11,12 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும் அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும் நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும் பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்

இதோ சீக்கிரமாய் வருகிறேன் அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

இன்றைக்கு இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் பெற்று தந்த விலையேறப்பெற்ற இரட்சிப்பை அனேகர் மறுக்கின்றனர். ஆனால் மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும் நாம் எங்கே கொண்டு செல்லப்படுவோம் என்பதை பற்றி யோசிப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை. உலக கவலையும், இச்சைகளும், ஐசுவரியமும் வசனத்துக்கு கீழ்ப்படியாதபடிக்கு நெருக்கி போடுகிறது. பாதாளத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ஐசுவரியவான் வேதனை தாங்க முடியாமல் கதறுவதை நாம் வேதத்தில் பார்க்கலாம்.

மேலும் அவன் தனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு அவர்கள் இந்த இடத்திற்கு வரக் கூடாது என்று சொல்வதை பார்க்கலாம். பிரியமானவர்களே கடைசி நாட்களில் இருக்கிறோம். காலத்தை பிரயோசனப்படுத்திக் கொள்ளுங்கள் இன்றைக்கு இந்த உலகத்தில் நீங்கள் நினைத்தப்படி வாழலாம். ஆனால் மரணத்துக்கு பிறகு உங்கள் ஆத்துமா, நீங்கள் இரட்சிக்கப்படவில்லையென்றால் நரகத்துக்கு கொண்டு செல்லப்படும் எனவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் இரத்தம் சிந்தி உங்களுக்காக பெற்று தந்த இரட்சிப்பை குறித்து நிர்விசாரமாக இருக்கிறீர்களா? மனந்திரும்புங்கள் பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொள்ளுங்கள். ஆமென்.