Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 24/08/2012

Download this article in PDF

Download Font

தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்

ரோமர் 8: 33 தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.

தேவன் தெரிந்து கொண்டவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? என்ற கேள்வியை வேதாகமம் கேட்டு, வெளி 12:10 ல் அதற்கு பதிலையும் தருகிறது.

வெளி 12:10 அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான்.

வேதாகமம் சாத்தானுக்கு கொடுத்திருக்கிற பல பெயர்களில் ஒன்று குற்றஞ்சாட்டுகிறவன்  தேவனுடைய மக்கள் மேல் குற்றஞ்சாட்டுவது சாத்தானுடைய வேலைகளில் ஒன்று. ஆகையினால் எவ்விதத்திலும் இந்த பட்டப்பெயரை விசுவாசிகள் யாரும் பெற்றுக்கொள்ளாமல் இருப்பது மிக அவசியம்.

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் பல நல்ல பத்திரிகைகள் இருந்தன. ஆபாசம், மற்றவர்களை தாக்கி எழுதுதல், மற்றவர்களது ரகசிய வாழ்க்கையை துப்பறிதல், குற்றஞ்சாட்டுதல், தவறுகளை வெளியிடுதல், போன்ற பல காரியங்கள் இல்லாத பத்திரிகைகள் வெளிவந்தன. பத்திரிகை நீதி, எழுத்தில் ஒழுக்கம், நேர்மை பொன்ற பலவற்றை எழுத்தாளர்கள் கடை பிடித்து வந்தனர். ஆனால் பிற்காலத்தில் சில "மஞ்சள் பத்திரிகைகள், குற்றபுலனாய்வு பத்திரிகைகள், தவறுகளை வெளிப்படுத்தும் பத்திரிகைகள்" வெளிவரத்தொடங்கின. இவை பல நல்ல பத்திரிகைகள் மூடப்படும்படும்படியாக செய்தன. இப்பத்திரி கைகளில் சில நல்ல காரியங்களும், உபயோகங்களும் இருக்கலாம். நான் தனிப்பட்ட முறையில் அவற்றின் மேல் குற்றஞ்சாட்டவில்லை. இது போலவே இன்றைய விசுவாச உலகத்திலும் பல " மஞ்சள் பத்திரிகைகளை போன்ற எழுத்துக்கள், பேச்சுக்கள் வெளிவரத்தொடங்கியிருக்கின்றன. இதைப்பார்த்து மற்ற பத்திரிகைகளும், மீடியாக்களும் ஊழியக்காரர்களை பற்றியும், ஊழியங்களை பற்றியும், விசுவாசிகளைப் பற்றியும் தாக்கி எழுத தொடங்கி இருக்கின்றன. இயேசுகிறிஸ்துவின் அன்பு பாய்ந்து செல்ல வேண்டிய மேடைகள் பல, ஏளனமும், கோபமும், பொறாமையும், அவதூறுகளும், தாக்குதல்களும் பாய்ந்து செல்கிற மேடைகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. சில விசிலடிச்சான் குஞ்சுகளின் கைத்தட்டலுக்காகவும், விசிலுக்காகவும் பலர், கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை தத்துவங்களான அன்பு, நம்பிக்கை, விசுவாசம், சமாதானம், நீடிய பொறுமை போன்றவற்றை காற்றில் பறக்க விட்டுக்கொண்டிருக்கின்றனர். மாத்திரமல்ல, விசுவாசிகள் அல்லாத பலரும் இப்போது ஊழியக்காரர்களை, ஊழியங்களை தாக்கி எழுதுவதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி எழுதுகிறார்கள் என்றால், அதை படிக்க ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். கிறிஸ்தவர்களே ஒருவரை பற்றி ஒருவர் தாக்கி பேசும்போது, எழுதும்போது அது மற்றவர்களுக்கும் தைரியம் கொடுக்கிற விதமாக அமைந்து விடுகிறது.

சங்; 2:1. ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?

2.கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:

3. அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.

4. பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.

5. அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார்.

வேதாகமத்தின் தொடக்கம் முதல் கடைசி வரை, தன் மக்கள், முக்கியமாக தன் "ஊழியக்காரர்கள்" மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களை, தேவன் ஆதரித்தது இல்லை, குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதும் இல்லை.

சில இடங்களில் அப்படி குற்றஞ்சாட்டியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள். வேதாகமத்தின்படி ஒரு ஊழியக்காரன் மேல் பகீரங்கமாக குற்றம் சொல்லும் உரிமை யாருக்கும் கொடுக்கப்படவில்லை.

எத்தியோப்பிய பெண்ணை திருமணம் செய்ததால்,மோசேயின் மேல் குற்றஞ்சாட்டிய மிரியாம் மேல் தேவனுடைய கோபம் மூண்டது. அவள் குஷ்டரோகத்தால் தண்டிக்கப்பட்டாள். எண்ணாகமம் 12 ம் அதிகாரம்.

அழுக்கு வஸ்திரத்தோடு தேவ சந்நதியில் நின்றதால், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை தடுத்த சாத்தானை, தேவன் கடிந்து கொண்டார். சகரியா 3 ம் அதிகாரம்.

ஆதியாகமம் 12, 20 அதிகாரங்களில் இரண்டு முறை ஆபிரகாம் சாராவை தன் சகோதரி என்று கூறியதால் பார்வோனும், அபிமலேக்கும் சாராவை தங்கள் மனைவியாக்க முயற்சிக்கிறார்கள். இங்கே தவறு செய்தது ஆபிரகாம். ஆனாலும் தேவன் ஆபிரகாமை தண்டிப்பதற்கு பதிலாக பார்வோனையும், அபிமலேக்கையும் தண்டிக்கிறார்.

1சாமு 26:9 தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமல்போகிறவன் யார்? என்று சொன்னான்.

சவுல் தாவீதுக்கு எவ்வளவோ கெடுதல்கள் செய்தார். தேவனுக்கு கீழ்ப்படியாமல் போனார், குறி சொல்லுகிறவர்களிடம் போனார், பல சமயங்களில் தேவன் அபிஷேகம் பண்ணின தாவீதை கொல்ல பார்த்தார். ஆயினும் அவருக்கு விரோதமாக தன் கையை நீட்ட தாவீது துணியவில்லை.

தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சவுல், தன்னை கொல்ல சொன்னதால் அவரை கொன்ற அமலேக்கியனை நோக்கி தாவீது இவ்விதமாக சொல்லுகிறார்

"2 சாமு 1:14 தாவீது அவனை நோக்கி: கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரைக் கொன்றுபோடும்படி நீ உன் கையை நீட்டப் பயப்படாமற்போனது என்ன என்று சொல்லி,"

15 வாலிபரில் ஒருவனைக் கூப்பிட்டு, நீ கிட்டப்போய் அவன்மேல் விழுந்து, அவனை வெட்டு என்றான்; அவன் அவனை வெட்டினான்; அவன் செத்தான்.

ஒரு ஊழியக்காரர் வல்லமையாக ஊழியம் செய்தால், ஒரு விசுவாசி ஆவிக்குரிய வாழ்க்கையில் நன்றாக வளர முயற்சித்தால் அவருக்கு மனிதர்களால் இடறல்கள் வருவது இயற்கை. அதை இயேசுவே சொல்லுகிறார். ஆனாலும் "அவர்களது தவறுகளை தட்டிக்கேட்கிறோம்" என்று சொல்லி அவர்களை பற்றி அவதூறு பேசி, எழுதி நல்ல ஊழியங்களுக்கு இடறல் உண்டு பண்ணுபவர்கள் கவனிக்க வேண்டும்; "உங்களுக்கு ஐயோ! என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

மத் 18: 7 இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!

பவுல் விசுவாசிகளுக்கு கொடுக்கும் அறிவுரைகளில் முக்கியமான ஒரு அறிவுரை "ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணவேண்டும்".

பிலி 2:3 ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.

அப்படி எண்ணுவோமானால் இன்று விசுவாச உலகத்தில் காணப்படும் பலவிதமான அவதூறுகளை தடுக்கலாமே.

இன்று சபைகளில் காணப்படும் பிரிவினைகள், பணப்பிரச்சினைகள், அதிகாரப்பிரச்சினைகள், உபதேசப்பிரச்சினைகள், தேர்தல் பிரச்சினைகள், போன்ற பல பிரச்சினைகளுக்கு காரணம், "கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படையான "தேவ அன்பு" இல்லாததே". இதனால் நம் தேவனுடைய நாமம் மற்றவர்களால் எந்த அளவுக்கு தூஷிக்கப்படும் என்பதை நாம் ஒரு கணம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தேவனுக்கு மிகவும் பிடிக்காத ஒரு காரியம், அவரது நாமம் மற்றவர்களால் தூஷிக்கப்படும்படியாக நாம் காரியங்களை செய்வது.

2 சாமு 12:14 ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப் போய் விட்டான்.

கலா 5: 15 நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

கிறிஸ்தவ ஜீவிதம் என்பது, அன்பு என்னும் அஸ்திபாரத்தின் மேல், நீதி, மன்னிப்பு, விசுவாசம், சமர்ப்பணம், சமாதானம், சாந்தகுணம், நீடிய பொறுமை, உதவி, விட்டுக்கொடுத்தல், புத்தி சொல்லுதல், ஒருவரை ஒருவர் தாங்குதல், ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துதல் ccc போன்ற கற்களால் கட்டப்பட்டு உறுதியாக எழுந்து நிற்க வேண்டிய கோட்டை.

"கிறிஸ்தவனை நான் பார்க்காமல் இருந்திருந்தால் கிறிஸ்தவனாகி இருப்பேன்" என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்ட மகாத்மா காந்தியின் அறிக்கை ஒவ்வொரு கிறிஸ்தவனும் மறக்காமல் மனதில் பதித்திருக்க வேண்டிய வாசகம். வேதாகமத்தை படித்த மகாத்மா காந்தி, வேதாகமத்தின் கோட்பாடுகளால், இயேசுவின் வாழ்க்கையினால் மிகவும் கவரப்பட்டார். தானும் ஒரு கிறிஸ்தவனாக ஆக நினைத்தார். ஆனால் இயேசுவின் சீடர்கள், eசிறிய கிறிஸ்துf என்று தங்களை சொல்லிக்கொள்ளும் eகிறிஸ்தவர்களுடைய பேச்சுக்கள், நடத்தை, வாழ்க்கை முறைகளை பார்த்தபின்f தான் கிறிஸ்தவனாக மாறும் எண்ணத்தை கைவிட்டார். ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள்; மகாத்மா காந்தி மாத்திரம் தான் முதலில் நினைத்தவாறு கிறிஸ்தவர்களை பார்க்காமல், ஒரு கிறிஸ்தவனாக மாறி இருந்தால் இந்தியா இப்போது எப்படி இருந்திருக்கும்? இதில் யார் குற்றவாளி?.

கிறிஸ்தவ ஜீவிதம் என்பது உணர்ச்சிகளால் உந்தப்பட்டு, நம் முயற்சிகளால், நம்மால் வாழுவது அல்ல ; அது "இயேசு நம்மில் வாழ்வது".

கலா 2:20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

குற்றம் சாட்டும் அன்பு சகோதரா! சகோதரி! ஒரு ஊழியக்காரன் மேல், விசுவாசியின் மேல் குற்றஞ்சாட்டுமுன்பு ஒரு கணம் உன்னை நீ உற்றுப்பார். உனக்கு தேவனோடு ஒரு நல்ல உறவு இருக்கிறதா? உன் நண்பர்கள், குடும்பத்தார், உறவினரோடு ஒரு நல்ல உறவு இருக்கிறதா? உன் வாழ்க்கையில் ஆவியின் கனி இருக்கிறதா? ஊழியம் செய்பவர்களை குறை சொல்லுவதற்கு சமயம் செலவழிக்கும் நீ தேவனோடு, தேவனுக்கென்று எவ்வளவு சமயம் செலவழிக்கிறாய்? இதுவரை நீ எத்தனை பேரை இரட்சிப்புக்குள் வழி நடத்தியிருக்கிறாய்? உனக்கு இரட்சிப்பை சொல்லிக்கொடுக்க தெரியுமா? உன் வாழ்க்கையில் பாவம் இல்லாமல் ஜீவிக்கிறாயா? சமாதானமாக இருக்கிறாயா? உன் மனசாட்சி குற்றமற்றதாக இருக்கிறதா?

ஒரு கம்பியூட்டரின் முன் குளிரூட்டப்பட்ட அறையினுள் உட்கார்ந்து கொண்டு நீ எழுதும் எழுத்துக்களால், வெயில், மழை, வெப்பம், குளிர், அவமானம், வறுமை என்று பாராமல் தேவனுக்கு ஊழியம் செய்யும் எத்தனை ஊழியக்காரர்களின் மனம் புண்படும்?. ஒரு பக்கம் மற்ற மதத்தினரின் தொந்தரவு, மிரட்டல், மறுபக்கம் வேதாகமம் "சகோதரர்கள்" என்று அழைக்கும் விசுவாசிகளின் குற்றச்சாட்டுக்கள், இவைகளினால் ஒரு இளம் ஊழியக்காரனின் மனது எவ்வளவு சோர்ந்து போகும்?. ஒரு ஊழியக்காரன் செய்திருக்கும் 100 நல்ல காரியங்களை விட்டு விட்டு, அவர் தவறுதலாக செய்த ஏதோ 2 காரியங்களை மாத்திரம் எடுத்து உலகமெங்கும் பார்க்கிற இணைய தளங்களில், பத்திரிக்கைகளில் வெளியிடுகிற உன் எழுத்துக்களால், பேச்சுக்களால், சொற்களால் எத்தனை ஊழியக்காரர்கள் மனதுடைந்து போக நேரிடும்?. புள்ளி விபரம் காண்பித்து ஊழியக்காரர்களை அவமானப்படுத்தும் உன் வார்த்தைகளால் எத்தனை நல்ல ஊழியக்காரர்கள் செய்யும் கர்த்தரின் ஊழியம் பாதிக்கப்படும்?. உன் பேச்சுக்களால் எழுத்துக்களால் எத்தனை ஊழியக்காரர்களின் பண வருமானம் குறைந்து அவர்களும் அவர்கள் குடும்பமும் வறுமையிலும் துன்பத்திலும் வாட நேரிடும்? உன் சிறிய குற்றச்சாட்டுக்களை சாத்தான் எடுத்து அவற்றை மிகவும் மிகைப்படுத்தி பல மக்களின் உள்ளத்தில் போடும்போது, எத்தனை நல்ல ஊழியங்கள் நின்று போக நேரிடும்?. ஏளனப்படுத்தி, குற்றப்படுத்தி, கிண்டல் செய்து, அதைரியப்படுத்தி நீ எழுதும், சொல்லும் வார்த்தைகளால் எத்தனை வருங்கால ஊழியக்காரர்கள் இப்படி அவமானப்பட வேண்டிய தேவனுடைய ஊழியம் எனக்கு வேண்டாம் " என்று தீர்மானம் எடுப்பார்கள் ?.

கலங்கிய கண்களோடு ஒரு ஊழியக்காரரின் வாலிபனான ஒரு மகன் என்னிடம் சொன்ன வார்த்தைகள் என் இதயத்தில் ஆழப்பதிந்த வாக்கியங்களில் ஒன்று "பிரதர் !இந்த கிறிஸ்தவர்களின் ஏளனப்பேச்சுக்களை என்னால் தாங்க முடியவில்லை, இதன் காரணமாக பல முறை இந்த ஊழியம் உங்களுக்கு எதற்கு, விட்டு விடுங்கள்  என்று என் தகப்பனாரிடம் சொல்லுகிறேன்". இது போல எத்தனை இளம் வாலிப சகோதர சகோதரிகளின் மனம் வெந்து கொண்டிருக்கும்?. ஒரு சாதாரண கபட அரசியல்வாதியை விட என் தகப்பனாரை கேவலமாக பேசுகிறார்களே, என்று எத்தனை பிள்ளைகள் மனதுக்குள் அழுவார்கள்? என் தகப்பனார் ஒரு டாக்டராக, என்ஜினியராக, வெளிநாட்டில் உயர்ந்த வேலையில் இருப்பவராக, அரசியல் வாதியாக, பிஸினஸ் செய்பவராக இருந்திருந்தால் நான் இம்மாதிரியான ஏளனப்பேச்சுக்களை குற்றச்சாட்டுக்களை எல்லாம் கேட்க வேண்டியது வந்திருக்குமா என்று எத்தனை வாலிபர்களின் மனதில் கேள்வி எழும்? அதன் காரணமாக எத்தனை வாலிபர்களுக்கு கிறிஸ்தவத்தின் மேல், கிறிஸ்தவர்களின் மேல், ஆவிக்குரிய வாழ்க்கையின் மேல் வெறுப்பு வர நேரிடும்.

ஊழியக்காரர்களின் பிள்ளைகளே! உங்களுக்கு என் சல்யூட்! உங்களை நான் வாழ்த்துகிறேன். உங்கள் தகப்பனார் சாதாரண ஊழியக்காரன் அல்ல. வீணர்களின் வீண் வார்த்தைகளினால் சோர்ந்து போகாதீர்கள். உங்கள் தகப்பனாரை பற்றி ஏளனமாக நினைக்காதீர்கள். அவர் ராஜாதி ராஜாவுக்கு ஊழியம் செய்கிறார். நீங்கள் தேவனால் விசேஷித்த முறையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஒரு முறை பில்லி கிரகாமிடம், அமேரிக்க நாட்டின் அதிபர் ஆகுவதற்காக கேட்ட போது அவர் திருப்பி இந்த மாதிரி அர்த்தத்தில் ஒரு பதில் கேட்டார் " என்னுடைய நிலையில் இருந்து தாழ்ந்து போக சொல்லுகிறீர்களா " என்று. உங்கள் தகப்பனார், இந்த சிறுவர்கள் சொல்லுகிறது போல சாதாரண ஆள் அல்ல, சர்வ வல்ல தேவனுடைய ஊழியக்காரர். தலை நிமிர்ந்து நில்லுங்கள், பெருமையோடு வாய் திறந்து சொல்லுங்கள் "என் தகப்பனார் மகிமையான தேவனுடைய ஊழியக்காரர்: நான் என் தகப்பனாரின் ஊழியத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்". என்று.

நான் அனுபவப்பூர்வமாக பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு காரியம், யாரெல்லாம் ஊழியக்காரர்களை பரிவுடன் நடத்தியிருக்கிறார்களோ அவர்களும் அவர்கள் சந்ததியும், குடும்பமும் மிக நல்ல நிலையில் என்றும் இருக்கிறார்கள். என் இளம் வயதில், சில சபைகளில் நடந்த பல சண்டைகளை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். அதில், ஊழியக்காரர்களை அடித்த, பிடித்து தள்ளிய, அவதூறாக பேசிய, மோசமாக நடத்திய பலர் இன்று இல்லைc. அவர்களில் எஞ்சி இருப்போரின் நிலமையும் அவர்களது குடும்பத்தின் நிலமையும் இன்றும் வருந்தத்தக்க விதத்திலேயே இருக்கிறது. அதே சமயம் ஊழியக்கார்களை பரிவுடன் நடத்திய பல குடும்பங்களும் அவர்களது சந்ததியும் இன்றும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது.

மத் 10:40 உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.

41. தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.

42.சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத் 7: 1-5 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.

2 ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.

3 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?

4 இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?

5 மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.

இங்கே "தீர்க்காதிருங்கள்" என்ற வார்த்தைக்கான ஆங்கில வார்த்தை "Judge not" என்பதாகும். ஆனால் வேதாகமத்தின் மற்ற இடங்களில் " we have to judge " என்ற அர்த்தத்தில் பல வசனங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு: லூக்கா 12:57: "தீர்மானியாமலிருப்பதென்ன" ( Judge ), யோவான் 7:24 "தீர்ப்புசெய்யுங்கள்" ( Judge ), அப் 4:19 "நிதானித்துப்பாருங்கள்" ( Judge ), ரோமர் 14:12 "தீர்மானித்துக்கொள்ளுங்கள்" ( Judge ), 1 யோவான் 4:1 "சோதித்தறியுங்கள்" ( Try ), 1 கொரி 11:13 நிதானித்துக்கொள்ளுங்கள் ( Judge ).

( 1 கொரி 6:2; 14;29; லூக்கா 12:56-57;

இந்த வசனங்களில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம், " வேதாகமத்தின் படி, ஒரு காரியத்தை நாம் தீர்மானிக்க வேண்டும், சோதிக்க வேண்டும், நிதானிக்க வேண்டும், புரிய வேண்டும், தீர்ப்பு செய்ய வேண்டும்," ஆனால் "மற்றவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பு கொடுக்க கூடாது". இதைத்தான் வேதாகமம் பல இடங்களிலும் உறுதியாக சொல்லுகிறது ( ரோமர் 14:4,10,13; யாக் 4:11 ). இதில் இருக்கும் அபாயம் என்னவென்றால், " நாம் எப்படி நியாயத்தீர்ப்பு செய்கிறோமோ, அதேவிதத்திலேயே நாம் நியாயம் தீர்க்கப்படுவோம் ( மத் 7:2; ரோமர் 2:1-3; யாக் 2:12-13 ).

சில குறிப்பிட்ட விஷயங்களில், முக்கியமாகக சபை விஷயங்களில், சிலரை குற்றவாளிகள் என்று தீர்க்க வேண்டியது வரலாம் ( 1 கொரி 5:3-5; 1 திமோ 1:20; 5:20; வெளி 2:12 - 16, 18-20 ). இப்படிப்பட்ட காரியங்கள் மிகவும் கவனமாக சபைத்தலைவர்களாலும், மூப்பர்களாலும் செய்யப்பட வேண்டும். தேவனிடம் இவ்விஷயங்களுக்கான பதிலை கேட்டு அதன்படி முடிவு செய்ய வேண்டும்.

ஒரு ஊழியக்கார், சபைத்தலைவர், மூப்பர், விசுவாசி தவறு செய்கிறார் என்றால், வேதாகமத்தின்படி அதற்கு என்ன செய்ய வேண்டும்?

வெளி 2:5 ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.

கிறிஸ்தவ ஜீவிதம் என்பது ஒரு "ஜனநாயக ஆட்சி (democracy) அல்ல. அது ஒரு "அரசாட்சி (Kingdom)". இங்கே தேவனுடைய சட்டதிட்டங்கள் மாத்திரமே தீர்மானமானவை. வேதாகமம் ஒரு காரியத்தை சொன்னால், அது நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ அதை அப்படியே பின்பற்ற வேண்டும். வேதாகமம், சபைகளில் அதிகாரம் எப்படி இருக்க வேண்டும் என்று மிகத்தெளிவாக விளக்கியிருக்கிறது. அந்த அதிகாரத்துக்கு முழுமையாக கீழ்ப்படிந்து நடக்க வேண்டியது ஒவ்வொரு விசுவாசியின் கடமை. அப்போதுதான் தேவனுடைய ராஜ்யம் கட்டப்பட்டு வளர முடியும். பல சமயங்களிலும் நாம் பார்க்கும் சில காரியங்கள் சகிக்க முடியாமல் இருக்கலாம். உடனடியாக அதற்கு எதாவது செய்ய வேண்டும், அதை சரிப்படுத்த வேண்டும், இப்படி விட்டால் சரி இல்லை, என்று நமக்கு தோன்றலாம். ஆனாலும் சபை காரியங்களில், ஊழிய காரியங்களில் தீர்மானம் எடுக்கும்போது அது ஒரு "ஆவிக்குரிய தீர்மானமாக" அதாவது பரிசுத்த ஆவியானவர் சொல்கிறபடி தீர்மானம் எடுக்க வேண்டும். நமக்கு தோன்றுகிற விதத்தில் தீர்மானங்கள் எடுக்கக்கூடாது. நமக்கு தோன்றுகிற விதத்தில் எடுக்கும் தீர்மானங்கள் சில வேளைகளில் பயனுள்ளது போல தோன்றலாம் என்றாலும் அது தேவனுடைய சித்தத்தின்படி இல்லாமல் இருந்தால் அதன் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்.

யாக் 1:20 மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.

மூப்பர்கள் தவறு செய்யும்போதுcc..

1 தீமோ 5:19 மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.

20.மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.

21மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.

இதற்கு முன்பதான 17 வது வசனம் மூப்பர்களுக்கு இரட்டிப்பான கனம் கொடுக்கப்படவேண்டும் என்று சொல்லுகிறது. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் காரியங்களை செய்யும்போது அது மத் 18:17 போன்ற மற்ற வசனங்களுக்கும் ஒத்துப்போகிற விதத்தில் செய்ய வேண்டும். மூப்பர்களை கடிந்து கொள்கிற உரிமை தலைமை பாஸ்டருக்கே உண்டு. மூப்பர்களை எல்லோருக்கும் முன்பதாக கடிந்து கொள்வதற்கு முன்பு தனியாக அவரிடம் பேச வேண்டும். அவர் மனந்திரும்பாத பட்சத்தில் மாத்திரமே மற்றவர்களுக்கு முன்பதாக கடிந்து கொள்ள வேண்டும். இது இந்த இடத்தில் தெளிவாக சொல்லப்படவில்லை என்றாலும் மற்ற வசனங்களையும் சேர்த்து பார்க்கும்போது அவ்வாறு செய்வதே நல்லது. மூப்பர் மனந்திரும்பும் பட்சத்தில் அவரை எல்லோருக்கும் முன்பதாக கடிந்து கொள்ள வேண்டாம். மேலும் ஒரு மூப்பர் ஏதாவது தவறு செய்யும் பட்சத்தில் உடனடியாக அவரை அவரது பொறுப்பில் இருந்து விலக்கவேண்டும் என்று இவ்வசனங்கள் சொல்ல வில்லை. ஒரு மூப்பருக்கு விரோதமாக ஒருவர் மாத்திரம் சொல்லும் சாட்சியை வைத்து தீர்மானங்கள் எடுக்கக்கூடாது. இரண்டு மூன்று சாட்சிகள் இருக்க வேண்டும்.

விசுவாசிகள் தவறு செய்யும்போது..

விசுவாசிகள் தவறு செய்யும்போது அதை சபை எவ்வாறு திருத்த வேண்டும் என்று வேதாகமம் தெளிவாக சொல்லுகிறது. இதன் முக்கிய குறிக்கோள், தவறு செய்யும் விசுவாசியை குற்றப்படுத்தி தண்டிப்பது அல்ல:மாறாக அவரை திருத்தி மீண்டும் விசுவாச நன்னடத்தைக்குள் கொண்டு வருவது.

பொதுவாக விசுவாசிகளுடைய தவறையும் அவற்றை திருத்தும் முறைகளையும் வேதாகமத்தில் பார்க்கும்போது அவற்றை மூன்று விதமாக பிரிக்கலாம்.

1. ஒழுங்கின்மை.

மத் 18:15 உன் சகோதரன் உனக்கு. விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.

16 அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.

17 அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.

2 தெச 3: 6-15. 1 கொரி 6 1-18. போன்ற இடங்களிலும் இத்தகைய காரியங்களை எவ்வாறு திருத்த வேண்டும் என்று வேதாகமம் சொல்லுகிறது.

2. வேதாகம போதனைகளுக்கு எதிராக செயல்படுபவர்கள்.

இப்படி செய்பவர்களோடு எப்படி நடந்து அவர்களை திருத்த வேண்டும் என்று வேதாகமம், 1 தீமோ 1:19-20, 2 தீமோ 2:17-18; வெளி 2:18-29; தீத்து 3:10. போன்ற இடங்களில் சொல்லுகிறது.

3. நெறியற்ற முறையில் நடப்பவர்கள்.

விபச்சாரம் போன்ற பாவச்செயல்களில் ஈடுபடுபவர்களை எப்படி திருத்த வேண்டும், அவர்களோடு சபை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று வேதாகமம் 1 கொரி 5: 1-13 ல் சொல்லுகிறது.

இவை அனைத்தும் சபைத்தலைவர்களால், மூப்பர்களால் மிகவும் கவனமாக பரிசுத்த ஆவியானவரின் வழி காட்டுதலின்படி செய்ய வேண்டும். சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக எதையும் செய்யக்கூடாது.

ஒரு ஊழியக்காரர், பாஸ்டர், சபைத்தலைவர் தவறு செய்யும்போது

ஒரு விசுவாசிக்கு தனது பாஸ்டர் தவறு செய்கிறார் என்று ஒரு தகவல் கிடைத்தால் அதை முதலில் நன்றாக உறுதி செய்து கொள்ள வேண்டும். முதலில் அதை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்வதற்கு முன், பரிசுத்த ஆவியானவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். முதலாவது அதை யாருடனும் அவசியமில்லாமல் பேசுவது நல்லதல்ல. அது காட்டுத்தீ போல பரவ நேரிடும். பின் மேற்கண்ட வசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றபடி, பாஸ்டரை தனியாக சந்தித்து சொல்லலாம். அதன் பிறகு அக்காரியத்தை தேவனுடைய கரங்களில் விட்டு விட வேண்டும்.

ஒருவேளை அந்த விசுவாசி சொல்வதை கேட்டு பாஸ்டர் தன்னை திருத்திக்கொள்ள வில்லை என்றால், அந்த விசுவாசி கடைசியாக செய்ய வேண்டியது "அந்த சபையை விட்டு விலகி விடுவது".

இதுதான் தேவனுடைய சித்தம். இதைத்தான் வேதாகமம் வெளி 2:5 ல் சொல்லுகிறது.

வெளி 2:5.ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.

வெளிப்பாடு முதலாம் அதிகாரத்தில் விளக்குத்தண்டு என்பது சபையை குறிப்பிடுவதாக இயேசு விளக்கியிருக்கிறார் ( வெளி 1:20 ). இங்கே மனந்திரும்பாத ஒரு பாஸ்டரை தேவன் எப்படி திருத்துகிறார் என்பதை நாம் காணலாம். ஒரு பாஸ்டர் தன் தவறுகளை ஏற்றுக்கொண்டு மனந்திரும்பாத பட்சத்தில் தேவன் செய்வது " அவரது சபையை அந்த பாஸ்டரிடம் இருந்து எடுத்து விடுவது ". இதுதான் தேவன் பாஸ்டர்களை திருத்துகிற வழி. இதைத்தான் நாமும் கடைபிடிக்கவேண்டும். தவறுகளை எடுத்து சொல்லும்போது அதை மீண்டும் மீண்டும் கேட்காத பாஸ்டரை விட்டு, அந்த சபையை விட்டு விலகிப்போய்விட வேண்டும். வேறு எதையும் மனிதப்பிரகாரமாக செய்ய முயற்சிக்கக்கூடாது.

குறை சொல்லும் ஊழியம்

விசுவாசத்துக்காக சாகும்வரை ஜெயிலில் இருந்து கடும் துன்பங்களை அனுபவித்த வேத பண்டிதரான "வாட்ச் மேன் நீ" தன்னுடைய "மிக நல்ல உடன்படிக்கை" என்ற புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் "Today in helping other people, do not legislate or hand down ten commandments to them, nor instruct them with our subjective dofs and donfts. We should not act like Old Testament seers, telling individuals what Godfs will is for each of them". ( இன்று மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது, அவர்களுக்கு பத்து கட்டளைகளை சட்டங்களாக இயற்றி கொடுக்காதீர்கள்;நம் மனதில் தோன்றுகிற செய் அல்லது செய்யக்கூடாது என்பவற்றை அவர்களுக்கு கற்பிக்ககூடாது. நாம் பழைய ஏற்பாடு தீர்க்க தரிசிகளைப்போல ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் தேவனுடைய சித்தத்தை சொல்கிறவர்களாக நடந்து கொள்ள கூடாது ).

வேதபாட கட்டுரைகள் வெறும் கதைகளை வைத்து வேதாகமத்தை வியாக்யானிக்கின்றனவாக இருக்கக்கூடாது. மஞ்சள் பத்திரிகைகளைப்போல, குற்றப்புலனாய்வு பத்திரிகைகளை போல, கிசுகிசு பத்திரிகைகளை போல, மற்றவர்களின் தவறுகளை மாத்திரம் சுட்டிக்காட்டும் பத்திரிகைகளை போல வேதபாட கட்டுரைகள் இருக்கக்கூடாது. வேதபாட கட்டுரைகள் என்றால் அது முழுக்க முழுக்க வேதவசனங்களை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும். படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக வேதத்தின் தரத்தை தாழ்த்தக்கூடாது. வேதத்தை புரிந்து கொள்ளுமளவுக்கு விசுவாசிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். வேத பாட கட்டுரைகளை படிக்கும்போது வேத வசனங்களை விட்டு விட்டு அங்காங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் கதைகளை விருப்பமாக படிப்பது ஆவிக்குரிய விசுவாசிகளின் அடையாளம் அல்ல. மற்றவர்களின் தவறுகளை, குற்றங்களை விமர்சிக்கும்போது அதை பிரியமாக படிப்பதும் ஒரு நல்ல விசுவாசியின் அடையாளம் அல்ல. "குறை சொல்லும் ஊழியம்" என்ற ஒரு ஊழியத்தை தேவன் யாருக்கும் கொடுக்க வில்லை.

தேவன் கொடுத்திருக்கும் ஊழியம் "ஒப்புரவாக்குதலின் ஊழியம் 2 கொரி 5:18".

விசுவாசிகளின் மத்தியில் இருக்கும் ஒரு தவறை திருத்த நாம் விரும்பினால், வேத வசனங்களை மேற்கோள் காட்டி அன்புடன் பொதுவாக புத்திமதி சொல்லலாமே. அதை விட்டு ஒரு குறிப்பிட்ட நபரை, அவரது செய்கையை எழுதி, மேடைகளில் பேசி யாரையும் காயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இதனால் அந்த நபர் தன் தவறை திருத்துவதற்கு பதிலாக கோபப்பட்டு, காயப்பட்டு, மன வேதனைப்பட்டு எல்லோர் மேலும் வெறுப்படையக்கூடும். இதனால் அவர் இடறலடையக்கூடும். அவர் இப்படி இடறலடைய நாம் காரணமாக இருக்கலாமா ?

மத் 18:7. இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!

ஒரு மனுஷனுக்கு நாம் இடறல் வருத்தினால் நமக்கு ஐயோ! என்று அல்லவா இயேசு சொல்லுகிறார்.

People do not care how much you know, they want to know how much you care. John maxell.

(உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்பதில் யாரும் அக்கறை கொள்வதில்லை: ஆனால் அவர்களைப்பற்றி நீங்கள் எவ்வளவு அக்கறை கொள்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளவே அவர்கள் விரும்புகிறார்கள்)

ஊழியக்காரர்களை, மூப்பர்களை, மற்ற விசுவாசிகளை குற்றப்படுத்தி எழுதும் சகோதரா! சகோதரி! நீ முதலில் இரட்சிக்கப்பட்டிருக்கிறாயா? உனக்கு சரியாக முறையாக இரட்சிப்பை பிரசங்கிக்க தெரியுமா? நீ இது வரை யாருக்காவது தனியாக சுவிசேஷம் சொல்லி அவர்களை இரட்சிப்புக்குள் நடத்தியிருக்கிறாயா? யாராவது ஒருவர் வெளிப்படையாக நீதான் அவரை இரட்சிப்புக்குள் நடத்தினாய் என்று உன்னைக்குறித்து சாட்சி கொடுப்பார்களா? நீ வேலை செய்யும் இடத்தில் வந்து கேட்டால் உன்னை ஒரு நல்ல விசுவாசி என்று சொல்வார்களா? உன் பேச்சு, நடத்தை, சிந்தனை எல்லாம் தேவனுக்கு பிரியமாக இருக்கிறதா?

ரோமர் 14:10. இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.

11ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.

12 இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

ஊழியக்காரர்களை, சபைத்தலைவர்களை, மூப்பர்களை, விசுவாசிகளை குற்றப்படுத்தி எழுதுவதை, பேசுவதை, அதை கேட்பதை படிப்பதை உடனடியாக நிறுத்துவோம். அது தேவனுக்கு பிரியமற்ற காரியம். அப்படி பேசுபவர்களை, எழுதுபவர்களை ஆதரிப்பதை உடனடியாக நிறுத்துவோம். நம்முடைய வார்த்தைகளால் தேவனுடைய நாமம் தூஷிக்கப்படுவதற்கு இடம் கொடுக்காமல் இருப்போம்.

அன்பு, சமாதானம், சந்தோஷம், சாந்த குணம்ccc ஆவியின் கனி நம் பேச்சில், எழுத்தில்,

வாழ்க்கையில் காய்த்துக் குலுங்கட்டும்.

அது பலரும் இயேசுவை நம்மில், நம் வாழ்க்கையில், நம் சபையில் காண வழி

செய்யட்டும்.

ஆமென்.

Download this article in PDF

You are a blessing,

Be blessed.

Bro D.Vergin Kumar.

If you have any doubts, observations or if you need any clarifications kindly contact me in deeveekumar@yahoo.com

------------------------------------------