Tamil Christian Website

Tamil Christian Website

Poste on : 19/06/2016

 

பயப்படாதேயுங்கள்

-         சகோதரி. அனு ஃபெஸ்லின் 

     

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே இறைமகன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். உலகத்தில் பயமில்லாத மனிதனை பார்ப்பது மிக அரிது. குடும்பத்தை, வேலையை, எதிர்காலத்தை, பிள்ளைகளை குறித்ததான பலவிதமான பயங்கள் அனுதினமும் நம்மை ஆட்கொள்ளுகிறது. நம்பிகையற்ற சூழ்நிலைகள் நம்மை நெருக்கும் போது நாம் தேவன் நம்மோடிருக்கிறதை மறந்து போய் சூழ்நிலைகளை பார்த்து பயப்படுகிறோம். வேதம் கூறுகிறது பயமானது வேதனையுள்ளது. [1யோவான்:4:18].பயம் நமக்கு வேதனையைக் கொடுத்து நம் சரீரத்தையும் நம் தூக்கத்தையும் பாதிக்கும். பயப்படுகிற நமக்கு தேவன் கொடுக்கும் வாக்குத்தத்தம்  சமாதானத்தை வைத்துப் போகிறேன்; என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்கு கொடுக்கிறதில்லை; உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக [யோவான்:14:27]. இயேசு கிறிஸ்து பிறந்த போது கொடுக்கப்பட்ட முதல் செய்தி பயப்படாதேயுங்கள். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த போதும் சொல்லப்பட்ட முதல் செய்தி பயப்படாதிருங்கள். இன்று நம்முடைய அருமை நாதர் இயேசு கிறிஸ்து நம்மோடு சொல்லும் வார்த்தையும் பயப்படாதேயுங்கள். நம் தேவன் நமக்கு பயமுள்ள ஆவியை கொடாமல் பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்[1தீமோத்தேயு:1:7]. நம்முடைய வேத புத்தகத்தில் நம்மை தேற்றும்படி அதிகமாக சொல்லப்பட்ட வார்த்தைகளில் ஒன்று பயப்படாதே. தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் ஏன் பயப்படக்கூடாது, பயத்தை எப்படியாய் மேற்கொள்ள வேண்டும் என்பதனை  வேதத்தின் அடிப்படையில் நாம் தியானிக்கலாம்.

நாம் ஏன் பயப்படக்கூடாது?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நம் அன்பின் ஆண்டவர் நம்மை பார்த்துக் கூறுகிறார் பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன். அன்று இஸ்ரவேல் ஜனங்ககளோடு இருந்து அவர்களை வழிநடத்திய தேவன் இன்றும் நம்மோடும் கூட இருக்கிறார். அவர் நமக்கு முன்பாக கடந்து போகிறவர். வேதம் கூறுகிறது

இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன் [ஏசாயா:43:1].

எந்த சூழ்நிலையிலும் நாம் பயப்படாமல் இருக்க வேண்டுமானால் நம்முடைய தேவன் எப்படிப்பட்டவர் என்பதை நாம் முதலாவது  தெரிந்துக்கொள்ள வேண்டும்.

v நம்மை சிருஷ்டித்தவர்

வேதம் கூறுகிறது உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்[ஏசாயா:44:24]. சங்கீதக்காரனாகிய தாவீது கூறுகிறார் நம்முடைய கருவை அவருடைய கண்கள் கண்டது. நம் தாயின் கர்ப்பத்தில் நம்மை காப்பாற்றினவர் அவரே. நம்முடைய கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாவறையும் அறிந்தவர் நம் தேவன் ஒருவரே, எனவே நாம் பயப்பட அவசியமில்லை.

v நம்மை  மீட்டுக்கொண்டவர்

பிரியமானவர்களே நாம்  அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்பட்டவர்கள் அல்ல,குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டவர்கள்[1பேதுரு:1:18,19].

 

v நம்மை பேர்சொல்லி அழைத்தவர்

உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்பு முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்[ஏசாயா:45:3,4]. நம்முடைய தேவன் எவ்வளவு பெரியவர் பாருங்கள்.

 

v நீ என்னுடையவன் என்று சொந்தம் பாராட்டியவர்

நாம் தேவனுக்கு மிகவும் விசேஷமானவர்கள் ஏனென்றால்  பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் நம்  தேவனாகிய கர்த்தர் நம்மை தமக்கு சொந்தமாய் இருக்கும்படி தெரிந்துக்கொண்டார் [உபாகமம்:7:6]

 

v நம்மை  சிநேகிக்கிறவர்

தேவன் கூறுகிறார் நீ என் பார்வைக்கு அருமையானபடியால் கனம் பெற்றாய்; நானும் உன்னை சிநேகித்தேன். நாம் அவருடைய அன்பிற்கு தகுதியானவர்கள் அல்ல ஆனாலும் தேவன் தம்முடைய சொந்த குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இவ்வுலகத்தில் அனுப்பி இவ்வளவாய் நம்மேல் அன்புகூர்ந்தார்[ஏசாயா:43:4].

v நமக்கு தம்முடைய நாமத்தை தரித்தவர்  

நம்முடைய தேவன் நம்மை பெயர் சொல்லி அழைத்து நாம் அவரை அறியாதிருந்தும் நமக்கு அவருடைய நாமத்தை தரித்தார்[ஏசாயா:45:4;43:7].

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நம் தேவன் கூறுகிறார் யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை [ஏசாயா:44:21]. இவ்வளவு மகத்துவமான தேவனை நம்முடைய தெய்வமாக கொண்ட நாம் பாக்கியவான்கள். நம்மை உறங்காமல் தூங்காமல் பாதுகாத்து நம்மேல் கண்நோக்கமாயிருந்து விசாரிக்கிற நம் தேவன் நம்மோடிருக்க நாம் பயப்படத் தேவையில்லை.

 

போராட்டமான துன்பமான நேரங்களில் சாத்தான் உலகப்பிரகாரமாக சூழ்நிலைகளை மிகைப்படுத்தி நம்மை பயத்தில் தள்ளுவான். நாம் பயப்படும் போது தேவனை மறந்து சாத்தானை முன்னிறுத்துகிறோம் என்பதில் ஐயமில்லை. தேவனை நமக்கு முன்னிறுத்தி  எப்படியாய் பயத்தை மேற்கொள்ளலாம் என்பதை வேதத்தின் அடிப்படையில் தியானிக்கலாம்

 

1.       உறுதியான விசுவாசத்தினால்

 

இயேசுவின் சீஷனாகிய பேதுரு கடலின் மேல் நடக்கையில் காற்று பலமாயிருக்கிறதை கண்டு பயந்த போது இயேசு அற்பவிசுவாசியே என கடிந்து கொண்டதை நாம் காணலாம். நாம் சூழ்நிலைகளை பார்த்து பயப்படக்கூடாது. அவிசுவாசம் பயத்தை உண்டாக்கும். நாம் விசுவாச தந்தையாகிய ஆபிரகாமைப் போல எதற்கும் பயப்படாமல் உறுதியான விசுவாசமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். தேவன் ஆபிரகாமிடம் ஈசாக்கை பலியிட சொன்ன போது ஆபிரகாம் உறுதியான விசுவாசத்தோடு தேவனுக்கு கீழ்ப்படிந்தான். ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று ஆபிரகாமோடே வாக்குத்தத்தம் பண்ணியிருந்தும் மரித்தோரிடத்திலிருந்து எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறார் என்றெண்ணி ஒப்புக்கொடுத்தான், மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகப் பெற்றுக் கொண்டான்[எபிரெயர்:11:18,19]. ஜெப ஆலய தலைவனாகிய யவீருவின் மகள் மரித்த போதும் கூட இயேசு கிறிஸ்து பயப்படாதே விசுவாசமுள்ளவனாயிரு என்று தேற்றுவதை  நாம் காணலாம்.  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ஒருவேளை நம்முடைய வாழ்க்கை மரித்துப் போய் காணப்படலாம் ஆனாலும்  நாம் பயப்படவேண்டாம். ஏனென்றால் அவர் நம்மை உயிர்பிக்கிற தேவனாய் இருக்கிறார். வேதம் கூறுகிறது நாம் வேண்டிக்கொள்ளுகிதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே நமக்கு அவர் செய்ய வல்லவர்[எபேசியர்:3:20]. நம்முடைய  தேவன் தாயின் கர்ப்பத்திலிருந்து நம்மை தெரிந்துக் கொண்டு இம்மட்டும் நம்மை நடந்தி வந்துள்ளார். அழைத்தவர் உண்மையுள்ளவர் மரணபரியந்தம் நம்மை நடத்துவார் என்பதை நாம் உறுதியாக விசுவாசிக்க வேண்டும். நம்முடைய தேவன் உலகத்தை ஜெயித்தவர் அவரில் நாம் வைக்கும் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.

 

2.       தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவரை நோக்கிப் பார்க்க வேண்டும்

 

அன்பிலே பயமில்லை. பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்[1யோவான்:4:18]. கிறிஸ்துவின் அன்பு நம்மை நெருக்கி ஏவும் போது நாம் எல்லா சூழலிலும் தேவன் மேல் நம்பிக்கை வைத்து தைரியத்தோடு காணப்படலாம். ஏனென்றால் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு எதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்[ரோமர்:8:20]. இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திய தலைவனாகிய மோசேயின் வாழ்க்கையை நாம் பார்க்கும் போது பல போராட்டமான சூழ்நிலைகளை நாம் காணலாம். மோசே பிறந்த போது ராஜாவின் கட்டளையால் மூன்று மாதம் தன் சொந்த வீட்டிலே ஒளித்து வைக்கப்பட்டான்.தன் சொந்த தாயே அவனுக்கு வளர்ப்பு தாயாக இருந்த சூழல். பார்வோனுக்கு பயந்து மீதியானில் ஆசாரியன் வீட்டில் தங்கினான். தன் சொந்த ஜனத்தைப் பிரிந்து நாற்பது வருட வனாந்திர வாழ்க்கை. உலகபிரகாரமாக பார்த்தால் ஆசீர்வாதமற்ற சூழ்நிலை. ஆனால் தேவனின் திட்டம் வேறு. மோசேயை  மேய்ப்பனை போல இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தும் தலைவனாக்கவும் யுத்தத்தில் வல்லவனாக்கவும் பல்வேறு சூழ்நிலைகளால் தேவன் உருவாக்கினார். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே தேவன் தம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளை கண் காணவுமில்லை; காது கேட்கவுமில்லை; அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை [1கொரிந்தியர்:2:9]. எனவே எந்த சூழ்நிலையும் கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மை பிரிக்காதபடி பின்வாங்கி போகாமல்  அவருடைய அன்பில் நிலைத்திருப்போம்.

 

3.       மேலானவைகளை நாட வேண்டும்

 

பவுல் கொலோசெயர் சபைக்கு நாம் பூமியிலுள்ளவைகளை  அல்ல மேலானவைகளை நாட வேண்டும் என்று கூறுகிறார்[கொலோசெயர்:3:1,2]. மோசேயின் தாயார் பிற தாயாரைப் போல பூமியை ஆளுகிற ராஜாவாகிய பார்வோனுக்கு பயப்படாமல் விசுவாசத்தினாலே பரலோக ராஜாவாகிய தேவன் மேல் விசுவாசம் வைத்து ராஜாவின் கட்டளையை மீறி தன் குழந்தையை வீட்டிலே ஒளித்து வைப்பதை நாம் காணலாம். அன்பானவர்களே வேதம் கூறுகிறது நாம் ஆத்துமாவை கொல்ல வல்லவர்களயிராமல் சரீரத்தை மாத்திரம் கொல்ல வல்லமையுள்ள மனிதனுக்கு பயப்படாமல் ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்தில் கொல்ல வல்லவருக்கு மாத்திரம் பயப்பட வேண்டும். எபிரேயர்:13:5,6 வசனங்கள் கூறுகிறது நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை என்று சொல்லியிருக்கிறாரே, அதினாலே நாம் தைரியங்கொண்டு; கர்த்தர் எனக்கு சகாயர்; நான் பயப்படேன் மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே. உலகத்தில் இருக்கிறவனை பார்க்கிலும் நம்மில் இருக்கிற தேவன் பெரியவர் என்பதனை உணர்ந்து கொள்ளுவோம். சாத்ராக் மேஷாக் ஆபத்நேகோ எரிகிற அக்கினி சூளைக்கும் ராஜாவுக்கும் பயப்படாமல் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவர் என்று மேலான தேவனை நோக்கின போது தேவன் தம்முடைய தூதனை அனுப்பி தப்புவித்தார்.

 

4.       தேவ சித்தத்துக்கு ஒப்புக்கொடுத்து ஜெபிக்க வேண்டும்

 

வேதம் கூறுகிறது நாம் எதை குறித்தும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து நம்  விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்பொழுது எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் நம் இருதயத்தை ஆண்டுக்கொள்ளும். நாம் நெருக்கப்படும் நேரங்களில் நாம் மனிதர்கள் மூலம் உள்ளான சமாதானத்தை பெற்றுக் கொள்ள முடியாது. பயத்தை புறம்பே தள்ளி தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து நாம் ஜெபிக்க வேண்டும். எரேமியா தீர்க்கர் கூறுகிறார் என்னை நோக்கி கூப்பிடு அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்[எரேமியா:33:3]. இயேசுவின் தாயாகிய மரியாளைப் போல நாமும் எந்த சூழலிலும் அவருடைய சித்தத்துக்கு ஒப்புக்கொடுத்து வாழுவோம் தேவன் நமக்கு பெரிய காரியங்களை செய்வார்.

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நம் சூழ்நிலைகளை நன்கு அறிந்தவர் நம் தேவன் ஒருவரே. தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் நம்மை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் நம்மை தாங்கினவர் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார் [ஏசாயா:46:3,4]. மரணமோ, வியாதியோ உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, வறுமையோ   எதுவும் நம்மை மேற்கொள்ள முடியாது. நம்மில் அன்புகூருகிற நம் தேவனாலே நாம் முற்றிலும் ஜெயத்தை பெற்றுக் கொள்ளுவோம்.  வேதம் கூறுகிறது நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.நம் தேவன் எப்போதும் நம்மோடு இருக்கிறார். எனவே நம்முடைய வாழ்க்கை ஆழ்கடலில் அலைகளினால் அசையும் போது ஆத்துமா நங்கூரமாகிய தேவனையே பற்றி பிடித்துக் கொள்ளுவோம். உலகத்தை ஜெயிப்போம். தேவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

---------------------------------------