Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 05/01/2016

தேவ பக்தி

வேதம் சொல்லுகிறது, கொர்நேலியு தேவ பக்தியுள்ளவனாயிருந்தான் என்று அப் 10:2 ல் பார்க்கிறோம்.

 முன்னுரை:

 இந்த தேவபக்தியைக் குறித்துதான் நாம் பின்வருமாறு பார்க்கப் போகிறோம். வேதம் சொல்லுகிறது, உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல் தன் இருதயத்தை வஞ்சித்து தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும் யாக் 1:26. அப்படியென்றால் உண்மையான தேவபக்தி என்னவென்று அறிய விரும்புவீர்களானால் என்னோடு கூட பின்வருமாறு வர ஆசைப்படுகிறேன். எப்படியென்றால் வேதம் சொல்லுகிறது

திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும் உலகத்தால் கறைபடாதப்படிக்குத் தன்னைக் காத்துக் கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது என்பதாக நாம் யாக் 1:27ல் வாசிக்க முடிகிறது.

 மேலே சொல்லப்பட்ட வசனத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளுகிற காரியம் என்னவென்றால் நாம் ஒவ்வொருவரும் எப்பொழுதும் தேவனோடு கூட நடக்க வேண்டும் அதாவது கிறிஸ்துவுக்குள் வாழுகிற ஒரு வாழ்க்கையை மாத்திரம் தேவன் விரும்புவதாக நாம் அறிய முடிகிறது. இத்தகைய ஒரு ஆழமான நட்பைத்தான் தேவன் தேவபக்தி என்று சொல்லியிருப்பதை நாம் யாக்கோபு என்னும் அதிகாரத்தில் பார்க்கிறோம். நம்முடைய வேதத்தில் அனேக தேவ மனுஷர்களை அதாவது தேவபக்தியுள்ள மனுஷர்களை நம்மால் பார்க்க முடிகிறது. அவர்கள் எல்லாரையும் பற்றி எழுத வேண்டுமானால் நாம் இதைப் போல ஆயிர புஸ்தகங்களை உண்டுபண்ண வேண்டும், ஆகவே இந்த மாதத்தை தேவ பக்தியால் அலங்கரிப்பதற்காக தேவனால் உணர்த்தப்பட்ட ஒரு பாத்திரம் கொர்நேலியு என்னும் மனுஷன் ஆவான். இவனிடத்தில் காணப்பட்ட தேவ பக்திக்கு காரணம் என்ன என்பதை பின்வருமாறு தியானிக்கப் போகிறோம்.

 இந்த மனுஷனைக் குறித்து சில உண்மைகளை சொல்ல வேண்டுமானால் இவன் ஒரு புறஜாதியான மனுஷன் மற்றும் இந்த மனுஷன் தேவனை இன்னும் ஆழமாக அறிந்திருக்கவில்லை என்பதையும் நம்மால் அப்போஸ்தலர் அதிகாரத்தை வாசிக்கும் போது நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. இப்பொழுது செய்திக்குள்ளாக உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.

 2.கொர்நேலியு தன்னுடைய வாழ்க்கையில் தேவபக்தி என்கிற மரம் வளர அந்த மனுஷன் பயன்படுத்திய உரங்களின் பெயர்கள் என்ன?

அ.தெய்வபயம் [ அப் 10:2 ]

ஆ.எப்பொழுதும் ஜெபம் [ அப் 10:2 ]

இ.நன்மைகளை செய்தல் [ அப் 10:2 ]

ஈ.நீதியாய் நடத்தல் [ அப் 10:22 ]

உ.காத்திருக்குதல் [ அப் 10:24 ]

ஊ.பிறரையும் நேசித்தல் [தெய்வ அன்பு] [ அப் 10:24 ]

எ.தேவனைக் கனம்பண்ணுதல் [ அப் 10:25 ]

அ.முதல் உரம்: தெய்வ பயம்

வேதம் பயத்தை எவ்வாறு விளக்குகிறது என்பதைப் பார்க்கலாம். வேதத்தை நன்றாக வாசிப்பவர்களுக்கு இரண்டு விதமான பயத்தைக் குறித்து வேதம் விளக்கியிருப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

முதல் பயம்: கர்த்தருக்குப் பயப்படும் பயம்

இரண்டாவது பயம்: மனுஷனுக்குப் பயப்படும் பயம், இந்த இரண்டு விதமான பயத்தைக் குறித்து நாம் பர்க்கலாம், முதலாவதாக நான் மனுஷனுக்குப் பயப்படும் பயத்தைக் குறித்து விளக்க ஆசைப்படுகிறேன். வேதம் சொல்லுகிறது மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும் என்று நீதி 29:25ன் முதல் பகுதியில் வாசிக்கிறோம். இன்று அனேகர் இந்த வசனத்தின்படியே வாழ்வதை நாம் பார்க்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல் நாமும் கூட சில நேரங்களில் மனுஷனுக்கு பயப்படுகிற சூழ்நிலைக்குத் தள்ளப்படுவதை பார்க்கிறோம். இது எதினால் என்றால் நமக்கு இன்னும் தேவனாகிய இயேசுவைப் பற்றியதான வெளிப்பாடும் நம்பிக்கையும் இல்லாததே காரணம் ஆகும். இல்லாவிட்டால் நாம் ஏன் வேதம் சொல்லுகிற வசனங்களை மறந்து போகிறோம் பாருங்கள் நாம் அடிக்கடி வாசிக்கிற மற்றும் சொல்லுகிற

வசனம் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் என்று 1யோவான் 4:4 ஐ அடிக்கடி மனப்பாடம் செய்து சொல்வதுண்டு ஆனால் நம்மிடத்திலோ அந்த வசனத்தின் அர்த்தம் முழுமையாக வெளிப்படுவதில்லை ஆகவேதான் நாம் மனுஷனுக்கு பயந்து போகிறோம் அதாவது நமக்குள் வாசம் செய்கிற தேவனை நாம் இன்னும் முழுமையாக பார்க்க வில்லை என்றுதான் அர்த்தம் ஆகும்.

 ஆகவேதான் தேவனால் தெரிந்து கொண்டு ராஜாவாக்கப்பட்ட சவுல், மேலும் தேவனால் அவனுடைய மகத்துவம் விவரிக்கப்பட்ட போதிலும் அதுமட்டுமல்லாமல் தான் நினைத்துப் பார்க்காத ஒரு உயரத்தை சீக்கிரமாய் தேவன் எட்டச்செய்த போதிலும் அவன் சீக்கிரமாய் அதையெல்லாம் மறந்து தனக்கு முன்பாக வருகிற நாசியில் சுவாசமில்லாத பெரிய பெலிஸ்தரின் கூட்டத்தைப் பார்த்து பயந்து போனான். இதனால் என்ன நடந்தது வேதம் சொல்லுகிறது அவனுடைய குடும்பமே மனுஷரால் விரிக்கப்பட்ட கண்ணியில் சிக்கி பரிதாபமாக மரித்தது என்பதாக, எத்தனை வேதனைக்குரிய ஒரு காரியம். நீங்களும் மனுஷருக்குப் பயப்படுவீர்களானால் இப்படிதான் நம்முடைய வாழ்க்கையும் முடியும்.

அடுத்ததாக, கர்த்தருக்குப் பயப்படும் பயம், வேதம் சொல்லுகிறது, கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவ ஊற்று அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம் என்று நீதி 14:27ல் வேதம் சொல்லும் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தை அறிகிறோம். ஆம் இந்த புறஜாதியான கொர்நேலியு தான் ஒரு நல்ல மனுஷனாக இருந்த போதிலும் அவன் இன்னும் சொர்க்கம் செல்லும் வழியை அறியாதவனாக காணப்பட்டிருக்க கூடும். ஆனால் அவன் கர்த்தருக்கு பயப்பட்டவனாய் வாழ்ந்த வந்ததினால் அவனுக்கு நரகம் என்னும் கண்ணியில் இருந்து தப்பித்து கொள்ளும்படியாக சரியான சத்தியம் அவனுக்குத் தரப்பட்டது. ஆகவே வேதம் சொல்லுகிறது போல சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று யோவான் 8:32ல் சொல்லப்பட்டது போல இந்த மனுஷனுக்கு மரண கண்ணியை அறியும் வாய்ப்பு தரப்பட்டது என்பதை மறந்து விடக்கூடாது.

 நாமும் இதேபோல தேவனாகிய இயேசுவுக்குப் பயந்து நடப்போம் அப்பொழுது நாமும் நரகம் என்னும் கண்ணியில் இருந்து தப்பித்து சொர்க்கம் என்னும் இடத்துக்கு செல்ல முடியும்.

அப்படியில்லாத பட்சத்தில் நான் இன்னும் மனுஷனுக்குப் பயந்து நடப்பேன் என்று சொல்வீர்களானால் பாதி வழியிலே இந்த கண்ணியில் மாட்டி உங்கள் உயிரை விடுவது நிச்சயமாகும். எவைகள் எல்லாம் இந்த உலக வாழ்க்கையில் கண்ணிகள் என்று அறிய வேண்டுமானால் நாம் முதலாவது தேவனுக்குப் பயந்து நடக்க வேண்டும். வேதம் சொல்லுகிறது, கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திட நம்பிக்கை உண்டு அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும் நீதி 14:26.

 ஆ.இரண்டாவது உரம்: எப்பொழுதும் ஜெபம் [ அப் 10:2 ]

 இன்று உலகத்தில் பார்க்கிற ஒரு காரியம் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இதற்காக மனுஷர்கள் என்ன செய்கிரார்கள் எப்பொழுதும் தங்களுடைய பாதுகாப்பிற்காக ஒரு மனுஷனை வேலைக்கு அமர்த்துகிறார்கள் அதுமட்டுமல்லாமல் பலவிதமான பிராணிகளை எப்பொழுதும் தங்களோடு வைத்துக் கொள்கிறார்கள் எதற்காக அப்பொழுதுதான் தாங்களும் தங்களுடைய விலைமதிக்கமுடியாத செல்வங்களும் பாதுகாக்கப்படும் என்கிற ஒரு நினைப்பு அவர்களுடைய இருதயத்தில் நிறைந்து காணப்படுவதினால்தான், அதேபோலத்தான், வேதம் சொல்லுகிறது, ஆகையால் இனி சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள் என்றார் [ லூக் 21:36 ] இந்த வசனத்தின் அர்த்தம் என்னவென்றால் பிசாசானவன் நம்மை வஞ்சித்து விடாதப்படிக்கு அதாவது அவன் எந்த நேரத்திலும் நம்முடைய ஆத்துமாவை திருட வருவான் என்பதை அறியாதிருப்பதினால் நாம் எப்பொழுதும் விழித்திருந்து நம்முடைய ஆத்துமாவை பிசாசுக்கு இடம் கொடாதப்படிக்கு பாதுகாக்க வேண்டும். ஆகவேதான் வேதம் எல்லா இடத்திலும் ஜெபம் என்கிற ஜாமக்காரனை நம்முடைய ஆவிக்குரிய வீட்டிற்கு பாதுகாப்பாக நியமிக்க சொல்லுகிறது. பாருங்கள் இந்த கொர்நேலியு ஒரு புறஜாதியான மனுஷன் அதாவது தெளிவான சத்தியத்தை அவன் இன்னும் அறிந்திருக்க வில்லை ஆனால் அவனிடத்தில் காணப்பட்ட ஜெபந்தான் அவனை தவறான வழிக்கு செல்லாமலும் அதுமட்டுமல்லாமல் எப்பொழுதும் தேவனுடைய மனப்பான்மையை அவனுக்குக் கொடுத்து கொண்டு இருந்ததையும் நாம் அப், அதிகாரத்தில் பார்க்க முடிகிறது.

 இன்று ஏன் நம்மால் இந்த உலகத்தில் ஜெயம் எடுக்க முடியவில்லை அடிக்கடி சோர்வுகள் தடுமாற்றம் மறுதலித்தல் அன்பு இல்லாமை அசுத்தத்தை செய்தல் இப்படிப்பட்ட தேவனுக்கு பிரியமில்லாத காரியங்கள் நம்முடத்தில் வருவதற்கு காரணம் நம்முடைய வீட்டைப் பாதுகாக்கும்படியாக தேவன் அனுப்பின ஜாமக்காரன் இல்லாததே ஆகும். எப்படி ஒரு மனுஷனால் காற்று இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாதோ இதேபோலத்தான் ஜெபமும் ஆகும். ஆகவேதான் வேதம் இப்படியாக அறிவுரை சொல்லுகிறது, இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் 1தெச 5:17

 இ.மூன்றாவது உரம்: நன்மைகளை செய்தல் [ அப் 10:2 ]

வேதம் சொல்லுகிறது, உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும் எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும் அதுமட்டுமல்லாமல்

தானியத்தைக் கட்டி வைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள் விற்கிறவனுடைய தலையின் மேல் ஆசீர்வாதம் தங்கும் [ நீதி 11:25,26 ]

 இன்று கிறிஸ்தவ வாழ்க்கையில் அனேகர் தாங்களும் தங்களுடைய குடும்பமும் மட்டுமே நன்றாக இருந்தால் போதும் என்கிற மனப்பான்மையுடன் வாழுவதைப் பார்க்க முடிகிறது இதனால் இவர்கள் ஒருவேளை இந்த உலகத்தில் நன்றாக வாழலாம் ஆனால் இவர்கள் தேவன் சொன்ன கற்பனைக்கு கீழ்ப்படியாதவர்களாகவே காணப்படுகின்றனர் எப்படியென்றால் வேதம் சொல்லுகிறது உன்னை நேசிக்கிறது போல பிறனையும் நேசி என்பதை இரண்டாவது கற்பனையாக எழுதிவைத்திருப்பதை நாம் மத்தேயு 22:39ல் வாசிக்கலாம் அதுமட்டுமல்லாமல் இந்த கற்பனையை மீறுவதினால் இவர்கள் குடும்பங்கள் மேல் சாபங்கள் சேருகிறது என்பதை மறந்து போகிறார்கள்.

 ஆனால் இந்த கொர்நேலியு என்ன செய்கிறான் தன்னிடம் வருபவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் இல்லை என்று சொல்லாமல் அதாவது அவர்களுடைய சூழ்நிலையை அறிந்து உதவி செய்வதை நாம் வேதத்தில் புரிந்து கொள்ளமுடிகிறது. ஏனென்றால் வேதம்

சொல்லுகிறது யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தேவன் அளவில்லாமல் கொடுக்கிறார் என்று பார்க்கிறோம், இதேபோல இந்த கொர்நேலியு செய்த தருமங்கள் இந்த மனுஷனை தேவனிடத்திற்கு மிக அருகில் இழுத்து சென்றதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது ஆகவே நாமும் இந்த கொர்நேலியு போல கொடுப்போம். தேவனிடம் பெற்றுக் கொள்ளுவோம்.

வேதம் சொல்லுகிறது, ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான் அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார் நீதி 19:17

 ஈ. நான்காவது உரம்: நீதியாய் நடத்தல் [ அப் 10:22 ]

 ஒரு காரியத்தை நாம் எப்பொழுதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் அதுஎன்னவென்றால் நாம் ஒருவேளை அதிகமாக வேதம் வாசிக்கலாம், எப்பொழுதும் ஜெபிக்கலாம் மற்றும் எல்லா ஆராதனைகளிலும் கலந்து கொள்ளலாம் ஆனால் நம்மிடம் தேவன் விரும்புகிற நீதி இல்லாவிட்டால் நாம் தேவனுக்குப் பிரியமாய் இருக்க முடியாது ஏனென்றால் அவரில் சிறிது அளவு கூட தீமை இல்லை என்பதை மறந்து விடக்கூடாது ஆகவேதான் வேதம் கர்த்தராகிய இயேசுவை தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக் கண்ணனே என்று அழைக்கிறது [ ஆபகூக் 1:13 ] இன்று அனேகர் தங்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய நீதியை பின்பற்றாதக் காரணத்தினால்தான் அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு திருப்தி இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நீதி இல்லாததின் நிமித்தம் தங்களுடைய வாழ்க்கையில் என்ன நடக்குமோ என்கிற ஒருவித பயம் தொற்றிக் கொள்கிறது. இன்னும் சிலர் கிறிஸ்தவ வாழ்க்கையை விட்டே விலகிப் போய்விடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆகவே எப்பொழுது எல்லாம் இந்த நீதி என்கிற மார்க்கவசத்தை தரித்திருப்போமோ அப்பொழுது எல்லாம் சத்துருவானவன் நமக்கு விரோதமாய் வீசுகிற எல்லா ஆயுதங்களில் இருந்து அதாவது உலக ஆசை இச்சை, பாவம் போன்ற ஆயுதங்கள் நம்முடைய இருதயத்தை தாக்காமல் பாதுகாக்க முடிகிறது. கொர்நேலியும் நீதி என்கிற மார்க்கவசத்தைத் தரித்திருந்ததினால் அதாவது கையாண்டதினால் அவனுடைய வேலைக்காரர்கள் தேவனுக்கு முன்பாக சாட்சி சொல்ல முடிந்தது. ஆகவே நாமும் இந்த நீதி என்கிற மார்க்கவசத்தைத் தரித்துக் கொள்வோம் இந்த உலக அதிபதியின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொண்டு தேவனுக்கு முன்பாக சாட்சியாக நிற்போம்.  வேதம் சொல்லுகிறது, நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் திருப்தியடைவார்கள் மத் 5:5

 உ.ஐந்தாவது உரம்: காத்திருக்குதல் [ அப் 10:24 ]

இந்த மனுஷனுக்கு தேவனுடைய பார்வையில் தயவு கிடைப்பதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று காத்திருக்குதல் ஆகும் பாருங்கள் அவன் அனேக நாட்களாக தேவ சமுகத்தில் காத்திருந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறான் அதுமட்டுமல்லாமல் தேவனுடைய மனுஷன் வருவதற்காகவும் அவன் தன் கூட்டாளிகளுடனும் காத்திருப்பதை நம்மால் காண முடிகிறது ஏனென்றால் அவன் தேவனுக்காக காத்திருப்பதால் கிடைக்கும் சுகம் எவ்வளவு மேன்மையானது என்பதை நன்றாக புரிந்து கொண்டவனாக காணப்பட்டான்.

நாம் என்ன செய்கிறோம் சிறிது நேரம் கூட நம்மால் காத்திருக்க முடியவில்லை எப்படியென்றால் தேவன் தம்முடைய ஊழியக்காரர்களைக் கொண்டு சொல்லும் வாக்குத்தத்தங்கள் உடனே நிறவேற வேண்டும் இல்லாவிட்டால் அவர் தேவ மனுஷர் இல்லை என்றும் தேவனுக்கு நம்மேல் இரக்கமே கிடையாது என்றும் நாம் புலம்புவதை நாம் இன்றையக் காலக்கட்டத்தில் பார்க்க முடிகிறது. வேதம் தேவனுக்குக் காத்திருக்கிறவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை பின்வருமாறு சொல்லுவதைப் பார்க்கலாம்

 1.கர்த்தருக்காக காத்திருக்கிறவர்கள்  தேவனிடம் இருந்து பெற்றுக் கொள்ளும்படியாக அவர்கள் இருதயம் ஸ்திரப்படுத்தப்படுகிறது [ சங் 27:14 ]

2.ஒரு நன்மையும் அதாவது தேவன் அவர்களுக்காக வைத்திருக்கிற எல்லா ஆசீர்வாதங்களும் கிடைக்கிறது [ சங் 34:10 ]

3.அவர்கள் தங்களுடைய வீடு கட்டப்பட்டிருக்கிற சொர்க்கத்தை நோக்கி ஓடும்படியாக புதிய பெலன் கொடுக்கப்படுகிறது [ ஏசாயா 40:31 ]

ஊ.ஆறாவது உரம்: பிறரையும் நேசித்தல் [ அப் 10:24 ]

கொர்நேலியுவின் தெய்வீக மனப்பான்மை இந்த வசனத்தில் வெளிப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. எப்படியென்றால் தான் மட்டும் சத்தியத்தை கேட்பதையோ அல்லது தன்னுடைய குடும்பம் மட்டும் கேட்டால் போதும் என்றோ நினையாமல் எல்லாரும் இரட்சிக்கப்பட வேண்டும் அதேபோல எல்லாரும் நீதிமானாய் இருக்க வேண்டும் என்று விரும்பினான். பாருங்கள் தான் மட்டும் கர்த்தரிடம் இருந்து பிரத்தியட்சயமான அழைப்பைப் பெற்றுக் கொண்ட போதிலும் அதை மற்றவருக்கும் உரியதாக்கி கொள்ளவேண்டும் என்கிற மனப்பான்மை அதாவது தன்னை எப்படி நேசித்தானோ அந்த அளவு பிறரையும் நேசிப்பதை இந்த வசனத்தின் ஆழம் நமக்கு வெளிப்படுத்துவதை நம்மால் பார்க்க முடிகிறது. இன்று அனேகர் கிறிஸ்தவ மக்கள் அதாவது ஆவிக்குரிய ஜனங்கள் சொல்லுகிற ஒரு காரியம் நாங்கள் இரட்சிக்கப்பட்டவர்கள், சத்தியத்தை அறிந்தவர்கள் சரியான ஞானஸ்நானத்தை பெற்றுக் கொண்டவர்கள் ஆகவே நாங்கள் மட்டுமே பரலோக செல்லமுடியும் மற்றவர்கள் நரகம் தான் செல்லுவார்கள் என்பதாக பெருமையாக பேசுவதை பார்க்க முடிகிறது. நாம் இரட்சிக்கப்பட்டதின் அவசியம் மற்றவர்களை இரட்சிப்பிற்குள்ளாக நடத்த வேண்டும் நாம் நீதிமானாக்கப்பட்டதின் குறிக்கோள் மற்றவர்களை நீதிமானாக மாற்ற வேண்டும் என்பதுதான் தேவனுடைய திட்டமாக இருக்கிறது நாமோ தேவனுடைய திட்டத்தை தெரியாமல் அவருடைய அன்பை உதாசினப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

 ஒரு காரியத்தை மறக்க வேண்டாம் நம்முடைய ஒருநாள் ஞானஸ்நானமோ அல்லது ஜெபமோ அல்லது அபிஷேகமோ அல்லது சுயநீதியோ நம்மை பரலோகத்திற்கு கொண்டு செல்லாது. மாறாக நம்முடைய இயேசு கிறிஸ்துவின் அன்பே நம்மை பரலோகம் கொண்டு செல்லும்.

ஒரு போதகர் இப்படியாக ஒரு கதையை சொன்னார், ஒரு போதகர் மரித்து பரலோகம் சென்றார் அவர் பரலோகம் செல்லுவதற்கு முன்பாக யார் எல்லாம் பரலோகம் செல்லுவார்கள் மர்றும் யார் எல்லாம் நரகம் செல்லுவார்கள் என்கிற ஒரு பட்டியலை ஆயத்தமாகி வைத்திருந்தாராம் ஒருநாள் அவரும் மரித்து பரலோகம் சென்றார் அவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது அதுஎன்னவென்றால் யாரை எல்லாம் பரலோகத்தில் எதிர்ப்பார்த்தாரோ அவர்களில் யாருமே அங்கில்லை ஆனால் யார் எல்லாம் நரகம் செல்லுவார்கள் என்று குறித்து வைத்திருந்தாரோ அவர்கள் எல்லாரும் பரலோகத்தில் இருந்தனர்.

 எனக்கு அருமையான ஜனங்களே நாம் எப்பொழும் ஆவிக்குரிய மனுஷனையும் நல்ல போதகரையும் தேடிக் கொண்டிருக்கிறோமே

தவிர நம்மை சுற்றி வாழுகிற இரட்சிப்பில்லாத நபர்களைக் குறித்து கவலைப்படுவதேயில்லை. ஆகவே இனிமேல் அப்படியிராமல் இந்த கொர்நேலியு போல் எல்லாரையும் தேவனுடைய பந்திக்கு ஆயத்தப்படுத்துவோம்

 எ.ஏழாவது உரம்: தேவனைக் கனம்பண்ணுதல் [ அப் 10:25 ]

தேவன் சொல்லுகிறார், என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன் என்னை அசட்டைபண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் 1சாமுவேல் 2:30. பாருங்கள் வேதத்தில் அனேக பாத்திரங்கள் அதாவது தேவனுடைய ஊழியத்தையோ அல்லது தேவனுடைய ராஜ்ஜியத்தையோ ஆளும்படியாக அழைக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட புருஷர்கள் தேவனால் புறக்கணிக்கப்பட்டதை நம்மால் பார்க்க முடிகிறது. உதாரணமாக ஆசாரிய அழைப்பைப் பெற்ற ஏலியின் பிள்ளைகள் தங்களுக்கு மேன்மையான அழைப்பைக் கொடுத்த தேவனுடைய பலியை அசட்டைப்பண்ணினதால் அவர்கள் தேவனால் ஆசாரிய ஊழியம் செய்யாதப்படிக்குத் தள்ளப்பட்டார்கள். இதேபோல தேவனுடைய ராஜ்ஜியத்தை ஆளும்படியாக அழைக்கப்பட்ட சவுல் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் அவரை அசட்டை பண்ணினான் ஆகவே சவுலின் அழைப்பு தாவீதுக்கு மாற்றப்பட்டது

இதேபோலத்தான் தேவனுடைய அழைப்பைப் பெற்ற இஸ்ரவேல் சந்ததியினர் இந்த மாபெரும் அழைப்பைக் கொடுத்த இயேசுவை ஏற்றுக் கொள்ளாததின் நிமித்தம் அந்த அழைப்பு புறஜாதியினரான கொர்நேலியுவின் வீட்டாருக்கு கொடுக்கப்பட்டது. எப்படியென்றால் தேவனுடைய பிள்ளையாகிய பேதுரு பேசின வார்த்தைகளை அவர்கள் தேவன் பேசின வார்த்தைகளாக கனம்பண்ணினதால் அவர்கள் மேல் பரிசுத்த ஆவி அளவில்லாமல் ஊற்றப்பட்டது என்று பார்க்கிறோம்.

 தேவனுக்கு பிரியமான பிள்ளைகளே, உண்மையான தேவபக்தி எப்படி வருகிறது என்பதை நாம் கொர்நேலியு என்கிற கதாப்பாத்திரத்தின் மூலம் நன்றாக புரிந்து கொள்ள தேவன் உதவி செய்தார் ஆகவே இனி வருகிற நாட்களில் நாமும் இப்படிப்பட்ட ஒரு ஆவிக்குரிய வாழ்க்கையை வாழுவோமானால் நாம் நிச்சயமாக தேவனுடைய வருகையின் போது அவரோடுகூட ஏனோக்கு எலியா சென்றது போல நாமும் செல்லுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை என்பதை மறக்க வேண்டாம்.

 வேதம் சொல்லுகிறது, தேவ பக்தியுள்ள ஜனங்களை தேவன் தமக்காகத் தெரிந்து கொண்டார்

கர்த்தராகிய இயேசு தாமே நம்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக.

 

சகோ. எட்வின் சோஹார் - ஓமான்