Tamil Christian Website

Tamil Christian Website

Posted On: 16/08/2014

தேவ தரிசனம் நிறைவேற வேண்டுமானால் நாம் எப்படிப்பட்டவர்களாய் இருக்க வேண்டும்?

1.தேவனைப் பற்றி நன்றாக அறிந்தவர்களாய் இருக்க வேண்டும்.

2.விசுவாசமாயிருக்க வேண்டும்

3.நிர்விசாரம் இருக்க கூடாது

4,காத்திருக்க வேண்டும்

தேவன் சொல்லுகிறார்,

குறித்த காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது, முடிவிலே அது விளங்கும். அதுபொய் சொல்லாது, அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு, அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை, என்று ஆபகூக் 2:3 ல் எழுதிவைத்திருப்பதை நாம் அறிய முடிகிறது,

தேவ தரிசனமோ அல்லது வாக்குத்தத்தமோ நிறைவேற வேண்டுமானால், நாம் எப்படிப்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்பதை வேதத்தின் அடிப்படையில் பார்க்கப் போகிறோம்.

அதற்கு முன்பாக, சில காரியங்களை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன், நம்முடைய தரிசனமோ அல்லது வாக்குத்தத்தமோ நிறைவேறுவதற்கு தடையாக இருப்பவன் பிசாசு என்பதை மறக்க கூடாது, எதற்காக இந்த தடைகளை அவன் கொண்டுவரவேண்டும் என்றால், நமக்கு மனமடிவை தருவதற்காகவும் மற்றும் நம்முடைய தரிசனத்திலிருந்து பின்வாங்குவதற்காகவும் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். ஆனால் ஒருகாரியத்தை நாம் மறக்க வேண்டாம், அதுஎன்னவென்றால், வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர் [ எபி 10:23 ]. அவர் மனுஷர் அல்ல, அதை மறப்பதற்கு, அவர் தேவாதிதேவன், அவர் ஒருபோதும் பொய் சொல்லுவதில்லை [ எண் 23:19 ] என்பதை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும், அப்பொழுதுதான் இந்த தேவ தரிசனம் நம்முடைய வாழ்க்கையில் கிரியைச் செய்யத் தொடங்கும், இதை நன்றாக அறிந்த நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன்னுடைய மகனையும் பலி கொடுக்க சென்றதை நாம் எப்படி மறக்க முடியும். அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது, தன்னுடைய மகன் ஈசாக்கின் மூலமே தன்னுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறும், ஒருவேளை அவன் மரித்தாலும், தேவன் அவனை உயிரோடு எழுப்பி தன் வாக்குத்தத்தை நிறைவேற்றுவார் என்கிற உறுதியான விசுவாசம் அவரிடம் காணப்பட்டதை நாம் ஆதி 22 ம் அதிகாரம் மற்றும் எபி 11:17-19 ஐ வாசிக்கும் போது அறிந்து கொள்ளலாம்.

வாருங்கள் தேவ தரிசனத்துக்குள்ளாக உங்களை அழைத்துச் செல்கிறேன்.

1.முதல் எல்லைக்கல்: தேவனைப் பற்றி நன்றாக அறிந்தவர்களாய் இருக்க வேண்டும்:

வேதம் சொல்லுகிறது,

சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் என்று ஆபகூக் 2:14 ல் வாசிக்கிறோம்.

எப்பொழுது ஒரு இடத்துக்கு சமுத்திரம் என்று பெயரிடுகிறோம், அது ஜலத்தினால் நிறைந்திருக்கும் போது மட்டுமே, இந்த ஜலம் இல்லாதபட்சத்தில் இதற்கு வறண்ட நிலம் என்று சமுதாயம் பெயரிட்டு அழைப்பதை நாம் பார்க்க முடிகிறது, இப்படியாகதான் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் போது மட்டுமே நம்மை கிறிஸ்திவின் ஆலயம் என்று சொல்லிக்கொள்ள முடியும், அப்படியில்லாதபட்சத்தில், நாம் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறப்பதாலோ அல்லது வேதத்தை சுமப்பதினாலோ மற்றும் சபைகளில் வந்து பிற வேலைகளை செய்வதினாலோ நாம் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியாது, இவர்களுக்கு வழங்கும் பெயர் வறண்ட நிலம் என்பதை மறக்க வேண்டாம், இன்று அனேகர் தேவனைக் குறித்ததான அறிவு இல்லாததின் நிமித்தமாகவே தங்கள் தேவ தரிசனத்தை இழந்து போவதை நாம் பார்க்க முடிகிறது.

நம்முடைய வீட்டைக் கட்டுவதற்கு எப்படி முதலில் ஒரு வரைபடத்தை தயார் பண்ணுகிறோம் அதுபோலத்தான், முதலாவது, நம்முடைய தேவன் யார்? அவர் எப்படிப்பட்டவர் அதாவது அவருடைய குணநலன்கள் என்ன? நாம் அவருக்குள் யார்? என்கிற அறிவு நமக்கு வேண்டும், அப்பொழுதுதான் நம்முடைய தரிசனம் அல்லது வாக்குத்தத்தம் வெளிச்சமாகும். இத்தகைய காரியத்தை நான் தாவீது ராஜாவின் வாழ்க்கையின் மூலம் விளக்க ஆசைப்படுகிறேன்.

பாருங்கள், தேவன் தாவீதை சாமுவேல் தீக்கதரிசியைக் கொண்டு அபிஷேகம் செய்து, அதோடு கூட தெய்வீக வாக்குத்தத்தத்தையும் அவருக்கு கொடுத்ததை நாம் 1 சாமு 16 ம் அதிகாரத்தை வாசிக்கும் போது அறிந்து கொள்ளலாம்.

ஆனால் இந்த வாக்குத்தத்தம் உடனே நிறைவேறினதா? அவர் இந்த வாக்குத்தத்தத்திற்கு எப்பொழுது சொந்தமானார்.

முதலாவது அவருடைய வாக்குத்தத்தம் என்னவென்று பார்ப்போம்.

அவன் குமாரரில் ஒருவனை [ தாவீதை ] நான் ராஜாவாகத் தெரிந்து கொண்டேன் 1 சாமு 16:1

மேலும்,

தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்து கொண்டு, ஆட்டுத் தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்.

கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும், தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக் கொண்டு வந்தார் என்று சங் 78:70,71 லிருந்து, தாவீதிற்கு கொடுக்கப்பட்ட தெய்வீக வாக்குத்தத்ததை அறிந்து கொள்ள முடிகிறது, அதுமட்டுமல்லாமல், உன் கர்ப்பத்தின் கனியை உன் சிங்காசனத்தின் மேல் வைப்பேன் என்றும்,

உன் குமாரர் என் உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என் சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் குமாரரும் என்றென்றைக்கும் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்கள் என்றும், கர்த்தர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டார், அவர் தவறமாட்டார் [ சங் 132:11,12 ] என்று கர்த்தர் தாவீதுக்கு கொடுத்த வாக்குத்தத்தங்களை நாம் உணரமுடிகிறது. ஆனால் இந்த வாக்குத்தத்தங்களைப் பெற்றுக் கொள்ளுவதற்கு தாவீது தம்மையே தேவனுக்கு ஒப்புக்கொடுத்ததை நாம் வேதத்தின் மூலம் பார்க்கலாம். ஆகவேதான் அவர் தேவன் அனுமதித்த எல்லா சோதனைகளையும் கடக்க தன்னை தேவனுக்குக் கீழ்ப்படித்தினார், எதற்காக இதன் மூலமாய் தேவனைப் பற்றி அதாவது தேவனுடைய குணநலன்களைக் கற்றுக் கொள்வதற்காக என்பதை மறக்க வேண்டாம், பாருங்கள், சாமுவேல், ராஜாக்கள் புஸ்தகத்தை படிக்கும் போது தாவீது கடந்து போன தாங்கமுடியாத துயரங்களை நாம் அறிந்து கொள்ளலாம்,

முதலாவதாக

அவர் உதவி செய்த சவுல் தன் வாழ்நாளெல்லாம் தாவீதுக்கு எதிரியாகக் காணப்பட்டார். [ 1 சாமு 20:33 ]

இரண்டாவதாக

பலம் வாய்ந்த தாவீது, காத் ராஜாவாகிய ஆகித்திற்கு முன்பாக கோழையாக மாறவேண்டிய அவசியம் ஏற்பட்டது, அதாவது தன் எதிரி தன்னை ஏளனம் செய்யும் படி அனுமதித்தார். [ 1 சாமு 21:13 ]

மூன்றாவதாக

தன் குடும்பங்களை அமலேக்கியரிடம் பறிகொடுக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். [ 1 சாமு 30:1 ]

நான்காவதாக

சீமேயினால் தூஷிக்கப்பட்டார். [ 2 சாமு 16:7 ]

ஐந்தாவதாக

தன் மகன் அப்சலோமால் காட்டிற்குத் துரத்தப்பட்டார். இப்படியாக அனேக காரியங்களை கூறிக் கொண்டே செல்ல முடியும். [ 1 சாமு 17:1 ]

எப்படி இத்தனை காரியத்தை ராஜாவாகிய தாவீதால் சகிக்க முடிந்தது, ஏன் அவர் இத்தனை சம்பங்கள் நடந்த போதும் அசைக்கப்படவில்லை, ஏனென்றால் அவர் சொன்ன ஒரு காரியம்,

கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை என்று சொன்னதாக, நாம் சங் 16:8 ல் வாசிக்கிறோம், தேவனை அறிவேன் என்று சொல்லுகிற மனுஷன் இப்படியாகத்தான் தேவனைக் குறித்தே மேன்மைப்பாராட்டுவான், அதுமட்டுமல்லாமல் அவர் எப்பொழுதும் தேவனுடைய ஆலோசனையின் படி நடக்கிறவர், ஆகவேதான் அவர் ஒவ்வொரு சமயமும் தனக்கு நெருக்கடிகள் வந்த போது, அதாவது எதிரிகள் தனக்கு விரோதமாக வந்த போது தேவனிடம் விசாரிக்கிறவராய், அதாவது தெய்வ ஆலோசனையை நாடுகிறவராய் காணப்பட்டார் என்று சொன்னால் அது மிகையாகாது, ஆகவேதான் சங்கீதக்காரனாகிய தாவீது சொல்வதைப் பார்க்கலாம்,

நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும் சங் 144:8 [ பி.ப ]

மேலும், அவர்

தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர், என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார் என்று சங் 18:28 லும் தேவனை அவர் எவ்வளவு அதிகமாய் அறிந்திருப்பதை நாம் அவருடைய கிரியைகளின் மூலம் அறிய முடிகிறது.

ஆகவேதான் தாவீது நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு முன் அடையாளமாக மாறினதை நாம் மறக்க முடியாது, அதுமட்டுமல்லாமல், தேவனே தாவீதைக் குறித்துச் சாட்சிக் கொடுக்கும் அளவுக்கு தாவீது தேவனால் நேசிக்கப்பட்டார் என்று சொன்னால் மிகையாகாது,

பாருங்கள் வேதம் சொல்லுகிறது,

ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக் குறித்துச் சாட்சியும் கொடுத்தார் என்று அப் 13:22 ஐ வாசிக்கும் போது தாவீது தேவனால் எவ்வளவு அதிகமாக நேசிக்கப்பட்டார் என்பதை அறிய முடிகிறது. இதற்கு காரணம் என்ன,

தாவீது தேவனை அறிய வேண்டிய விதத்தில் நன்றாக அறிந்திருந்தார், ஆகவேதான் தான் சில நேரங்களில் சறுக்கி விழுந்த போதும், அவர் மறுபடியும் தன்னை தேவனுக்குள் திடப்படுத்திக் கொண்டு எழுந்ததையும், தனக்கு நியமிக்கப்பட்ட வாக்குத்தத்தையும் சுதந்தரித்துக் கொண்டதையும் நாம் எப்படி மறக்க முடியும்.

2.இரண்டாவது எல்லைக்கல்: விசுவாசம்

வேதம் சொல்லுகிறது,

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம் என்று எபிரெயர் 11:6 ல் வாசிக்கலாம்.

அதாவது சொர்க்கத்தில் இருந்து எதையாகிலும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இந்த விசுவாசம் என்கிற பணத்தை தன்னோடு வைத்திருக்க வேண்டும். இன்று அனேகர் இப்படியாக சிந்திப்பதுண்டு, நம்மிடம் இருக்கிற பணத்தினால் எதையும் வாங்கி விட முடியும் என்று, ஜனங்களே அப்படிப்பட்ட எண்ணம் இருக்குமானால் அதை இப்பொழுதே மாற்றிக் கொள்ளுங்கள், இந்த பணத்தின் மேலுள்ள ஆசையின் நிமித்தமாக, இன்று அனேகர் தேவன் மேல் விசுவாசம் வைப்பதற்குப் பதிலாக, மனுஷர் மேல் நம்பிக்கை வைப்பதை பார்க்கமுடிகிறது. இதன் நிமித்தம் அவர்களுடைய வாக்குத்தத்தம் நிறைவேறாமல் போவதை நாம் பார்க்க முடிகிறது. ஒரு காரியத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும், அதுஎன்னவெனில், அழியாத வாக்குத்தத்தை அழியாத[ என்றும் ஜீவிக்கிற] தேவனிடம் இருந்து, அழியாத பணமாகிய விசுவாசத்தின் மூலமே பெறமுடியும் என்பதை மறக்க வேண்டாம்.

நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் எப்படி விசுவாசிகளின் தகப்பன் என்கிற பட்டத்தை சொர்க்கத்திலிருந்து பெற முடிந்தது, அவருடைய செல்வத்தினாலோ இல்லவே இல்லை, மாறாக அவரிடம் இருந்த அழியாத விசுவாசமே அதை வாங்கிக் கொடுத்தது என்று நாம் வேதத்தின் மூலம் அறிகிறோம்.

அடுத்ததாக, நம்முடைய விசுவாசம் எப்படியாக இருக்க வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது,

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது எபி 11:1

இப்படிப்பட்ட விசுவாசம் யாருக்கு வரும், பாருங்கள் எந்த மனுஷனும் ஒரு காரியம் நடப்பதற்கு முன்னதாக ஏதாவது ஒரு அடையாளத்தைப் பார்த்தால், அதாவது நம்புவதற்கு ஏதுவான காரியம் நடந்தால் மாத்திரமே, அவனிடத்தில் விசுவாசம் வருகிறதை நாம் பார்க்கமுடிகிறது, இத்தகைய காரியத்தை, மாமிசத்தில் வாழுகிற ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பார்க்க முடிகிறது. இதற்கு வேதம் கொடுக்கிற பெயர் அவிசுவாசம் என்பதை மறக்க வேண்டாம். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தங்களுடைய சரீரம் பிள்ளை பெறுவதற்கு தகுதியில்லாமல் இருந்த சமயத்தில் அல்லவா அவர் தேவன் மேல் விசுவாசம் வைத்தார், இதற்கு பெயர்தான் விசுவாசம் என்று சொல்ல வேண்டும். [ எபி 11 மற்றும் ஆதியாகமம் ]

நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இத்தகைய விசுவாசத்தை மிகவும் அழகாக யோவான் அதிகாரத்தில் விளக்கியிருப்பதை நாம் பின்வறுமாறு பார்க்கலாம்.

எப்படியென்றால்,

மற்ற சீஷர்கள், நாங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பார்த்தோம் என்று சொன்னபோது, அதற்கு அவன் [ தோமா ] அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலை விட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான், ஆனால் இதைக் கேட்ட நம்முடைய கர்த்தராகிய இயேசு என்ன சொன்னார்,

அதற்கு இயேசு: தோமாவே நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார் யோவான் 20:24-28  ஏன் தோமாவிற்கு இந்த விசுவாசம் வரவில்லை, அவர் இயேசுவை அறிய வேண்டிய விதத்தில் அறியவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இந்த விசுவாசம் நமக்கு வரவேண்டுமானால், நாம் மெய்யான ஆவிக்குரிய மனுஷனாக மாற வேண்டும். எப்படியென்றால்,

1.இரட்சிப்பின் அடையாளத்தைப் பெற்றிருக்க வேண்டும்

2.ஜெபிக்கிறவர்களாக இருக்க வேண்டும்

3.வேதத்தை இரவும் பகலும் தியானிக்கிறவர்களாக இருக்க வேண்டும்

4.அபிஷேகத்தைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும்

5.பரிசுத்தமாய் தன்னைப் பாதுகாக்க வேண்டும்

6.சாட்சியுள்ள வாழ்க்கை வாழவேண்டும், அதாவது கனிகொடுக்கிற மரமாய் இருக்க வேண்டும்.

7.ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவை நம்முடைய வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும்.

இப்படிப்பட்டவர்களுக்கு மாத்திரமே இந்த மேலே சொல்லப்பட்ட விசுவாசம் காணப்படும் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

நாம் தேவனுடைய மகிமையை கடைசி நாட்களில் பார்க்க வேண்டுமானால், நமக்கு விசுவாசம் வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது யோவான் 11:40

இன்று நம்மால் இந்த உலக வாழ்க்கையில் ஏற்படுகிற போராட்டத்தில் ஏன் சோர்ந்து போகிறோம், நமக்கு இப்படிப்பட்ட அதாவது ஆவிக்குரிய விசுவாசம் இல்லாததே என்று சொல்லி, விசுவாசம் என்கிற அனுதின உணவு மிகவும் அவசியம் என்பதை மறுபடியும் ஞாபகப்படுத்துகிறேன்.

3.மூன்றாவது எல்லைக்கல்: நிர்விசாரம் இருக்க கூடாது

வேதம் சொல்லுகிறது, என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன், என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கன ஈனப்படுவார்கள் என்று 1சாமு 2:30 ல் பார்க்கிறோம்.

நிர்விசாரம் என்பது ஒரு அசட்டை செய்கிற குணத்தையே குறிக்கிறது என்பதை மறக்க வேண்டாம். யாருக்கு இந்த நிர்விசாரம் உண்டாகிறது என்று வேதம் சொல்லுகிறது?

தேவனுடைய ஞானமும், அறிவும், அன்பும் இல்லாமல் வாழ்கிறவர்களுக்கே என்று வேதம் நமக்குச் சொல்லுகிறது வேதத்தைப் பாருங்கள் அப்பொழுது நமக்கு புரியும், எப்படியென்றால்,

பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும் என்று நீதி 1:32 ல் வாசிக்கிறோம்.

இன்று அனேகருக்கு இந்த நிர்விசாரம் உண்டாவதற்கு காரணம், அவர்கள் தேவனாகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து அறிவதற்குப் பதிலாக, உலகத்தை அறிவதில் அதிக கவனம் செலுத்துவதால் என்று சொல்லிக் கொள்கிறேன். ஆகவேதான் இந்த உலகம் சிநேகம் நம்மை நிர்விசாரத்துக்குள்ளே அழைத்துச் சென்றுவிடும் என்று அறிந்த தேவன் இவ்விதமாக சொல்லுகிறார்,

உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பு இல்லை என்று 1யோவான் 2:15 ல் எழுதிவைத்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்த நிர்விசாரம் ஜனங்களை எப்படி தேவனுக்குக் கீழ்ப்படியாதப்படிக்கு அவர்களை கொண்டு செல்வதை நாம் பின்வருமாறு காணலாம்,

இதோ தேவன் நோவாவைக் கொண்டு, ஜனங்கள் தங்கள் பாவத்தினின்று மனந்திரும்பும்படி பிரசங்கித்தார். ஆனால் இந்த ஜனங்களோ நோவாவின் வார்த்தைகளை அசட்டை செய்கிறவர்களாய் காணப்பட்டனர். அதாவது அவர்களுக்குள் காணப்பட்ட உலக சிநேகம் அவர்களை நிர்விசாரத்துக்குள் கொண்டு சென்றதை நாம் மறக்க வேண்டாம், ஏன் அவர்களிடத்தில் இந்த நிர்விசாரம் காணப்பட்டது,

1.அவர்களுக்கு தேவனைப் பற்றிய அறிவு இல்லை

2.அவர்கள் தங்களை உலகத்துக்கு ஒப்புக் கொடுத்திருந்தனர்.

3.பாவம் அதாவது சாத்தான் அவர்களை ஆளுகை செய்து கொண்டிருந்தான்.

4.அவர்களின் கையில் வேதம் இல்லை

5.அவர்கள் தேவ மனுஷன் பேசின வார்த்தைகளை, தெய்வ வசனமாக எடுத்துக் கொள்ளாமல், அதை மனுஷர் பேசின வார்த்தையாக எண்ணினார்கள்.

6.அவர்களில் காணப்பட்ட முரட்டாட்டமான இருதயம்,  இவைகள் அவர்களை மூடத்தனத்துக்குள்ளே வைத்திருந்தன.இந்த மூடத்தனமே அவர்களை நிர்விசாரத்துக்குள்ளாக கொண்டுசென்றது என்பதை மறக்க வேண்டாம். [ ஆதியாகமம் 6 ம் அதிகாரத்தை வாசிக்கவும் ]

ஏன் இன்று தேவன் அநேகரின் ஜெபத்திற்குப் பதில் கொடுப்பதில்லை, வேதம் சொல்லுகிறது.

அவர்கள் அறிவை [ தேவனைப் பற்றி அறியும் ] வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்து கொள்ளாமற் போனார்கள்.

அதுமட்டுமல்லாமல்,

என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை, என் கடிந்து கொள்ளுதலையெல்லாம் அசட்டை பண்ணினார்கள் என்று தேவன் நீதி 1:29,30 ன் மூலம் நம்முடைய நிர்விசாரத்திற்கான பதிலைத் தந்திருப்பதை நாம் நன்றாக அறிய முடிகிறது.

நாம் நம்முடைய வேலையில் நிர்விசாரம் காண்பிக்கிறோமா? நம்முடைய ஆசீர்வாதத்தில் நிர்விசாரம் காண்பிக்கிறோமா? எல்லாமே வேண்டும் எண்று விரும்புகிற நாம் ஏன் தேவனுடைய காரியத்தில் நிர்விசாரமாய் காணப்படுகிறோம், சிந்தியுங்கள் நம்முடைய வாக்குத்தத்தமோ அல்லது தேவ தரிசனமோ நிறைவேற வேண்டுமானால், இந்த நிர்விசாரம் நமக்கு வேண்டாம். இந்த நிர்விசாரத்தினால் அனேகர் தேவ அன்பை இழந்து போனதை நாம் வேதத்தில் பார்க்கமுடிகிறது, இவைகள் எதற்காக வேதத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது, நாமும் இவர்கள் செய்த தவறை திரும்பச் செய்யக் கூடாது என்பதற்காகவே என்பதை மறக்க வேண்டாம்.

4.நான்காவது எல்லைக்கல்: காத்திருக்க வேண்டும்

வேதம் சொல்லுகிறது,

கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு சங் 27:14

இன்று அனேகர் தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்வாங்கிப் போவதற்குக் காரணம் அவர்களிடம் காணப்படும் பலவீனமான இருதயமே என்று சொல்லுகிறேன். ஆகவேதான் வேதம் சொல்லுகிறது நம்முடைய இருதயம் பலப்படவேண்டுமானால் நாம் கர்த்தருக்குக் காத்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய உலகத்தைப் பார்ப்பீர்களானால், உலகக் காரியங்களுக்காக எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டுமானால் நாம் அதற்குத் தாயாராக இருக்கிறோம், எப்படியென்றால் நம்முடைய மேல் அதிகாரி நம்மிடம் வந்து இன்று நீ காலதாமதமாக சென்றால் போதும் என்று சொல்வார் என்றால், நாம் உடனே அதற்குக் கீழ்ப்படிகிறோம், இல்லாவிட்டால் நம்முடைய வேலையை இழக்க நேரிடுமே. இந்த பயத்திற்கு காரணம் நாம் தேவனுக்காக காத்திருக்காததினால் தான் என்று சொல்லுகிறேன்.

வேதம் சொல்லுகிறது, முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தைத் தேடுங்கள் மத் 6:33, அதாவது தேவனுடைய காரியங்களுக்கு முதலாவது முக்கியத்துவம் கொடுங்கள் என்பதே இதன் வசனத்தின் அர்த்தமாகும்.

தேவனுக்குக் காத்திருப்பதினால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

1.நம்முடைய இருதயம் பலப்படுகிறது சங் 27:14

2.புதுப்பெலன் உண்டாகிறது ஏசா 40:31

3.ஆசீர்வாதம் வருகிறது ஏசா 30:18

4.பூமியைச் சுதந்தரிக்கும் சந்ததியாய் மாறிகிறோம் சங் 37:9,34

இப்படியாக அனேக நன்மைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம், இவாறாக நாம் பெறும் ஆசீர்வாதங்கள் மாத்திரமே நம்முடைய வாழ்க்கையில் நிலைத்திருக்கும் என்பதை மறக்க வேண்டாம். ஒரு சிறிய உதாரணத்தை வேதத்தின் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பாருங்கள் அன்னாள் என்கிற ஒரு தீர்க்கதரிசி ஏழுவருஷமே தன்னுடைய கணவருடன் வாழ்ந்தவள், அதன் பிறகு தன் கணவனை இழந்து, விதவையாக வாழ்ந்து கொண்டிருந்தவள். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அந்த ஸ்திரீயானவள் உலகத்தின் காரியத்தைத் தேடாமல், இரவும் பகலும் உபவாசித்து ஜெபம் செய்து, தேவனோடு சஞ்சரித்துக் கொண்டே இருந்தாள் அதாவது தேவாலயத்தில் தேவனுடைய ராஜ்ஜியத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தாள். அந்நேரங்களில் அவள் அனேகரை தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு பலப்படுத்தினதையும் நம்மால் பார்க்க முடிகிறது, இதுதான் ஆவிக்குரிய காத்திருக்குதல் ஆகும். இந்த தெய்வீக காத்திருக்குதல், அன்னாளை தேவனுடைய ராஜ்ஜியத்தை காணும்படி செய்தது என்பதை மறக்க வேண்டாம். இன்று தேவனுக்காக காத்திருக்கிறோம் என்று சொல்லுகிற நீங்களும், நானும் இப்படியாகத்தான் காத்திருக்கிறோமா? என்று சிந்தித்துப் பாருங்கள். வேதம் சொல்லுகிறது,

நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும், விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம் போல் இருக்கும். என்று நீதி 13:12ல் வாசிக்கலாம். ஒருவேளை இந்த காத்திருக்குதல் நமக்கு சோர்வுகளை கொண்டு வரலாம், ஆனால் நம்முடைய காத்திருக்குதலின் ஜீவவிருட்சம் அதாவது தேவனுடைய வருகையின் போது நாம் எடுத்துக் கொள்ளப்படும் போது, எவ்வளவு சந்தோஷமாய் இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

நம்முடைய தேவதரிசனம் அல்லது நம்முடைய வாக்குத்தத்தங்கள் வாழ்க்கையில் நிறைவேற வேண்டுமானால் இந்த நான்கு எல்லைக் கற்களும் நமக்கு தேவை என்பதை மறக்க வேண்டாம்.

இந்த எல்லைக் கற்களை நாம் நம்முடைய வாழ்க்கையில் நாட்டும் போது, தேவ தரிசனம் என்கிற கோபுரம் மிகவும் நேர்த்தியாக எழுப்பப்படும் என்பதில் சந்தேகமே இல்லை என்று சொல்லி இந்த தெய்வ செய்தியை முடிக்கிறேன்.

தேவனாகிய இயேசு தாமே நம்மை இந்த செய்தியை வாசித்து உட்கொள்வதின் மூலமாக ஆசீர்வதிப்பாராக.

- சகோ. எட்வின் (சோஹார்)