Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 16/04/2016

தீர்க்க தரிசன தேவ ஆலோசனை

 

தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ மனுஷருக்குப் பக்திவிருத்தியும் புத்தியும் ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான். 1கொரி 14:3

தீர்க்கதரிசனம் இல்லாத இடத்தில் ஜனங்கள் சீர் கெட்டு போவார்கள் என்று வேதம் சொல்கிறது, . பரிசுத்த ஆவியானவர் தீர்க்கதரிசன வரத்தை பகிர்ந்து கொடுக்கிறார் என்று 1கொரி 12. ல் பார்க்கிறோம். 1கொரி 12:28ல் தேவனால் ஏற்படுத்தப்பட்ட இரண்டாவது ஊழியம் தீர்க்கதரிசன ஊழியம் என்று சொல்லப்படுகிறது.

உபா 18:18

உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன் நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.

அப்பொழுது அவர் என் வார்த்தைகளைக் கேளுங்கள் உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால் கர்த்தராகிய நான் தரிசினத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி சொப்பனத்தில் அவனோடே பேசுவேன் - எண் 12:6

ஆமோஸ் 3:7 ல் கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்கு தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தை செய்யார். என்று சொல்லப்படுகிறது. தீர்க்கதரிசிகள் தேவ ஆவியால் நிறைந்து தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள் என்று வேதாகமத்தில் பார்க்கிறோம். உண்மையாக தேவனிடம் இருந்து பெறப்பட்ட தீர்க்கதரிசனம் மனுஷருக்கு புத்தியும் பக்திவிருத்தியையும் ஆறுதலையும் உண்டாக்க வேண்டும்.

வேதாகமத்திலிருந்து அனேக தீர்க்கதரிசிகளின் வாழ்க்கையில் தேவன் இடைப்பட்டதையும் அவர்கள் எப்படி பயன்படுத்தபட்டார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்கும் போது தேவனால் அழைக்கப்பட்ட உண்மையான தீர்க்கதரிசிகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

வேதாகமத்தில் விசுவாசத்தினால் நிறைந்து தீர்க்கதரிசினம் உரைப்பதை பார்க்கலாம்

விசுவாசத்தினாலே ஈசாக்கு வருங்காரியங்களைக் குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான் - எபி 11:20

விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தை விட்டுப் புறப்படுவார்கள்ளென்பதைப் பற்றித் தன் அந்நியகாலத்தில் பேசி தன் எலும்புகளைக் குறித்து கட்டளை கொடுத்தான். எபி 11:22

அடுத்ததாக கர்த்தருடைய ஆவியானவர் ஒரு மனிதன் மேல் இறங்கி அவன் தீர்க்கதரிசனம் உரைப்பதை காணலாம்

அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார் நீ அவர்களோடே கூடத் தீர்க்கதரிசனம் சொல்லி வேறு மனுஷனாவாய் - 1சாமு 10:6

அவர்கள் அந்த மலைக்கு வந்த போது இதோ தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது அப்பொழுது தேவனுடைய ஆவி அவன் மேல் இறங்கினதினால் அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசினம் சொன்னான். - 1சாமு 10:10

அடுத்ததாக தீர்க்கதரிசினம் பரிசுத்த ஆவியானவர் அருளும் ஆவியின் வரம் பார்க்க 1கொரி 12:10.

11ம் வசனத்தில் ஒரே ஆவியானவர் நடப்பித்து தமது சித்தத்தின் படியே அவனவனுக்கு பகிர்ந்து கொடுக்கிறார் என்று எழுதப்பட்டிருக்கிறது. - 1கொரி 13:2

நான் தீர்க்கதரிசின வரத்தை உடையவனாயிருந்து சகல இரகசியங்களையும் சகல அறிவையும் அறிந்தாலும் மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும் அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.

பரிசுத்த ஆவியானவரின் வரமாகிய தீர்க்கதரிசன வரத்தினால் சகல ரகசியங்களையும் சகல அறிவையும் அறிந்து கொள்ள முடியும்.

அடுத்ததாக ஒருவனுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டாகி அதாவது நடக்க போகும் காரியங்களை அல்லது வெளிப்பாடுகளையோ உணர்ந்து கொள்வது அல்லது செவியில் கேட்பது 2சாமு 24ம் அதிகாரம், 11,12ம் வசனத்தில் தாவீதின் ஞான திருஷ்டிகாரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டாகி அவர் தாவீது ராஜாவிடம் தேவன் சொல்ல சொன்ன மூன்று நியாயத்தீர்ப்புகள் பற்றி சொல்கிறான்.

அடுத்ததாக தரிசனங்கள் மூலம் சொப்பனங்கள் மூலமும் மேலும் ஆவி எடுத்து கொள்ளப்பட்டு வர போகிற காரியங்களை அறிந்து கொள்வது

வேதாகமத்தில் தீர்க்கதரிசனம் மற்றும் வெளிப்பாடுகளை பேசியவர்களை பற்றி அனேக சம்பவங்கள் எழுதப்பட்டிருக்கிறது

.

இயேசு கிறிஸ்து தன் சீஷர்களிடம் ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார் என்று கேட்ட போது பேதுரு இயேசுவிடம் நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சொன்ன போது இயேசு அவனை நோக்கி மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார் என்றார். சிறிது நேரம் கழித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தனக்கு நேரிட கூடிய சிலுவையின் பாடுகளை தன் சீஷர்களிடம் கூறிய போது பேதுரு அவரை தனியே அழைத்து சென்று இது உமக்கு நேரிட கூடாது என்று சொல்லி அவரை கடிந்து கொள்ள தொடங்கினார்.

உடனே இயேசு அவனை நோக்கி எனக்கு பின்னாக போ சாத்தானே எனக்கு இடறலாயிருக்கிறாய். தேவனுக்கு ஏற்றவைகளை சிந்தியாமல் மனுஷனுக்கு ஏற்றவைகளை சிந்திக்கிறாய் என்றார். இந்த சம்பவத்தில் பேதுரு சில நேர இடைவெளியில் ஆவியானவராலும் தன் சுய மாம்ச ஞானத்தினாலும், பிசாசினாலும் ஆளுகை செய்யப்பட்டதையும் காணலாம். எனவே உண்மையான கர்த்தருடைய பிள்ளைகள் தேவனால் வெளிப்படுத்தபடுகிற காரியங்களை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு அனேக மதங்களில் குறி சொல்லக்கூடிய அசுத்த ஆவிகளை வைத்து குறி சொல்லி பணம் சம்பாதிக்கிறார்கள். சில ஊழியக்காரர்கள் கூட குறி சொல்லும் ஆவிகளால் ஆளுகை செய்யப்பட்டு பணத்துக்காக தீர்க்கதரிசனம் என்ற பேரில் பணம் சம்பாதிக்கிறார்கள். பிலேயாம் என்ற தீர்க்கதரிசி ராஜாவிடம் வெள்ளியும் பொன்னும் வாங்கிக் கொண்டு இஸ்ரவேல் ஜனத்துக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் உரைக்க வந்தான். தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசிகள் பணத்துக்காக அதாவது இழிவான ஆதாயத்துக்காக யாருக்கும் தீர்க்கதரிசனம் சொல்லமாட்டார்கள். ஏனென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இலவசமாக பெற்றீர்கள் இலவசமாக கொடுங்கள் என்றார்.

தேவனுடைய வரத்தை பணத்துக்காக பயன்படுத்தும் ஊழியக்காரர்கள் விழுந்து போவார்கள். நாகமான் என்ற சீரிய படை தளபதி தன் குஷ்டரோகம் குணமானவுடன் அவர் தீர்க்கதரிசியாகிய எலிசாவிடம் காணிக்கை கொடுத்த போது எலிசா அதை வாங்க மறுத்தான். ஆனால் கேயாசி வெள்ளியையும் பொன்னையையும் இச்சித்து அதை பெற்றுக் கொண்டதால் குஷ்டரோகத்தை சாபமாக பெற்றான். தேவனுடைய அழைப்பை இழந்து போனான். தேவனுடைய தீர்க்கதரிசிகள் தேவ சித்தத்துக்கு விரோதமாக காணிக்கை கூட வாங்க மாட்டார்கள் மேலும் இவர்கள் தேவ சித்தம் இல்லாமல் எந்த இடத்திற்கும் ஊழியத்துக்காகவோ ஜெபத்திற்காகவோ செல்ல மாட்டார்கள்.

சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும் வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். உபாகமம் 18:20

தேவன் சொல்ல சொன்ன காரியங்களை சொல்லாமல் தாங்களாகவே தேவன் சொல்ல சொன்னார் என்று சொல்லும் தீர்க்கதரிசிகள் மற்றும் ஊழியக்காரர்கள் வாழ்க்கையில் சாபங்கள் கடந்து வருகிறது. வேறே தெய்வங்களின் ஆவியினால் பேசும் தீர்க்கதரிசிகள் சாக்க்கடவர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். மேலும் அவர்களிடம் குறி கேட்க போகிறவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று வேதம் சொல்கிறது.

கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும் தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!. - எசே 13:3

தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள். 2பேதுரு 1:21

அனேக தீர்க்கதரிசிகள் மற்றும் ஊழியக்காரர்கள் தங்கள் சொந்த ஆவியினாலே ஏவப்பட்டு அனேக காரியங்களை பொய்யாக சொல்லி விடுகின்றனர். ஒரு உண்மையான தீர்க்கதரிசி பரிசுத்த ஆவியினாலே நிறைந்து ஆவியானவர் சொல்ல சொல்வதை மாத்திரம் சொல்ல வேண்டும். மற்றும் அனேக ஊழியக்காரர்கள் மற்றும் தீர்க்கதரிசின வரத்தை உடையவர்கள் தேவன் சபைக்கு மற்றும் விசுவாசிகளுக்கு பாவத்தை குறித்தும் நீதியைக் குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் வெளிப்படுத்திய காரியத்தை அவர்கள் சொல்லுவதில்லை.

ஏனென்றால் இழிவான ஆதாயத்துக்காக காணிக்கைக்காக அவர்கள் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தும் அதாவது சொல்ல சொன்ன காரியங்களை சொல்வதில்லை. அதற்கு பதிலாக அவர்களை பிரியப்படுத்தும் காரியங்களை பேசி விட்டு போகிறார்கள். இவர்கள் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய காரியத்தைக் குறித்து அப்.பவுல் கலா 1:10ல் நான் இன்னும் மனுஷரை பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே என்று சொல்லுகிறார். இப்படியாக பரிசுத்த ஆவியானவர் சொல்ல சொன்ன காரியங்களை சொல்லாமல் மனுஷரைப் பிரியப்படுத்த வேண்டும் என்று குறி சொல்லுகிறவர்கள் கள்ள தீர்க்கதரிசிகள் ஆவர்.

 ஒரு தீர்க்கத்தரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை, அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான், அவனுக்கு நீ பயப்படவேண்டாம். உபாகமம் 18 :22

ஒருவர் தேவ நாமத்தினால் தீர்க்கதரிசினம் சொன்னால் அது கண்டிப்பாக நிறைவேறும் அதற்கு மாறாக பல தேசங்களில் கர்த்தரின் நியாயத்தீர்ப்புகள் கோபாக்கினைகள் கடந்து வரும் போது அவைகள் நடக்காமல் இருக்கும் படியாக தேவ ஜனங்கள் திறப்பில் நின்று ஜெபிக்கும் போது கர்த்தர் இறங்கி அதை மாற்றி போடுகிறார்.

2இராஜாக்கள் 20ம் அதிகாரத்தில் எசேக்கியா ராஜா மரணத்துக்கு ஏதுவாக வியாதிபட்டிருந்தான் அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி அவரிடம் வந்து நீர் வீட்டுக்காரியத்தை  ஒழுங்குப்படுத்தும். நீர் பிழைக்க மாட்டீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். உடனே அவர் அழுது கண்ணீரோடு கர்த்தரிடம் விண்ணப்பம் பண்ணினான். தேவன் அவர் விண்ணப்பத்தை கேட்டு அவர் நோய்யை மாற்றினது மாத்திரமல்ல அவருடைய ஆயுசு நாட்களோடு 15 வருடங்கள் கூட்டிக் கொடுத்தார். நீர் மரித்து போவீர் என்று கர்த்தர் சொன்னார் என்று அறிவித்த ஏசாயா தீர்க்கதரிசி சில நிமிடங்களில் கர்த்தர் உன் வியாதியை நீக்கினார் அதுமட்டுமல்லாமல் உன் ஆயுசு நாட்களோடு 15 வருடங்களை கூட்டுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

கர்த்தர் யோனா தீர்க்கதரிசி மூலமாய் நினிவே அழிக்கப்பட்டு போகும் என்று சொன்னார். ஆனால் யோனா தீர்க்கதரிசி நினிவேக்காக விண்ணப்பித்த போது தேவன் அதை மாற்றினார். ஒருமுறை ஒரு தேசத்தில் ஒரு பெரிய அழிவு இயற்கையின் மூலமாக வரும் என்று கர்த்தர் பேசினார். அதைக் கேட்ட ஜனங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டு ஜெபித்தபோது தேவன் பெரிய அழிவிலிருந்து அந்த தேசத்தை பாதுகாத்தார்.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஒரு நாட்டில் ஒரு சபையில் இருந்த சாதாரண விசுவாசிக்கு தேவன் ஒரு தரிசனம் காண்பித்தார். குறிப்பிட்ட மாதத்தில்குறிப்பிட்ட நாளில் தண்ணீரினால் ஒரு பேரழிவு தேசத்தை அசைக்க போவதாகவும் நகரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாலங்கள் உடைந்து கிடப்பதாகவும் தேவன் தனக்கு காண்பித்ததாகவும் அவர் சொன்னார். அந்த நாட்டில் உள்ள அனைத்து பத்திரிகைகளிலும் அந்த செய்தி வெளியானது அந்த நாள் வந்த போது இதுவரை கண்டிராத ஒரு பெரிய புயல் தேசத்தை அசைத்தது. அவர் சொன்ன மாதிரியே காரியங்கள் நிகழ்ந்தது. அந்த இஸ்லாமிய தேசத்தில் இதன் மூலம் தேவனாகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. எனக்கு ஒரு சகோதரியை தெரியும் அவருக்கு வரன் பார்த்தார்கள் அவரை பார்க்க வந்தவரை இந்த சகோதரிக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. இப்படியிருக்கையில் அவரது சகோதரர் தீர்க்கதரிசன ஊழியத்தை செய்யும் ஒரு உண்மையான ஊழியக்காரரிடம் தேவ சித்தத்தை அறிந்து கொள்ளும்படியாக ஜெபிக்க சென்றார். அந்த ஊழியக்காரர் ஜெபித்து விட்டு இது தேவ சித்தமல்ல வேறு மாப்பிள்ளை பாருங்கள் என்றார். ஆனால் அந்த சகோதரியோ விடாபிடியாக நான் திருமணம் செய்தால் அவரை தான் திருமண செய்வேன் என்று பிடிவாதமாய் ஒற்றை காலில் நின்றார். திருமணம் முடிந்து கொஞ்ச நாட்களுக்குள் அவர்களுக்குள் பிரச்சனை வந்து இன்றைக்கு விவாகரத்து செய்து பிரிந்து வாழ்கிறார்கள்.

இன்றைக்கு பலர் சில காரியங்களை செய்யும் போது ஜெபித்து தேவ ஆலோசனையை பெற்று கொள்வது நல்லது. சிலர் தேவ ஆலோசனையை பெற்று கொள்ளாத நிலையில் தேவனிடம் தேவனே இந்த காரியத்தை உமக்கு சித்தமானால் மாத்திரம் வாய்க்கப்பண்ணும் உமக்கு சித்தமில்லையென்றால் தடையை உண்டு பண்ணும் என்று ஜெபித்து ஒப்புக் கொடுக்கிறார்கள். இதுவும் நல்லதுதான்.

இன்றைக்கு அனேக சபைகளில் சாதாரண விசுவாசிகள் மூலம் தேவன் பல வெளிப்பாடுகளையும் தீர்க்கதரிசனங்கள் மற்றும் தரிசனங்களையும் வெளிப்படுத்துகிறார். பல ஊழியக்காரர்கள் தீர்க்கதரிசன ஊழியங்களுக்கு எதிராகவே இருக்கிறார்கள். தீர்க்கதரிசன வரத்தை பெற்று கொள்ளாத அவர்கள் ஜனங்கள் தீர்க்கதரிசிகளிடம் ஜெபிக்க செல்வதை குறைத்து மதிப்பிடுகிறார்கள் ஜனங்களும் இந்த கடைசி காலத்தில் தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசிகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

விசுவாசிகள் தேவசித்தத்தை அறிந்து கொள்ள தீர்க்கதரிசிகளிடம் போவதை குறை சொல்ல வேண்டாம். விசுவாசிகளும் எப்பொழுதும் ஊழியக்காரர்களை சார்ந்து இருக்காமல் தேவனுடைய சித்தத்தையும் மற்றும் ஆலோசனைகளையும் அறிந்து கொள்ள தேவ சமுகத்தில் காத்திருந்து அவர் குரலை கேட்க பழகி கொள்ள வேண்டும். வேதாகமத்தில் தேவனால் அழைக்கப்பட்ட அனைவருமே தீர்க்கதரிசிகளாகவே இருந்தனர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சமாரிய ஸ்தீரியிடம் அவளை பற்றிய காரியங்களின் வெளிப்பாடுகளை கூறிய போது அவள் அவரை விசுவாசித்து ஜனங்களிடம் போய் அவரை பற்றி சொல்லி அதன் மூலம் அந்த ஜனங்கள் இரட்சிப்பை பெற்றுக் கொண்டார்கள்.

1சாமுவேல் 9ம் அதிகாரத்தில் காணாமல் போன கழுதையை தேடி சவுலும் வேலைக்காரனும் வந்த போது வேலைக்காரன் சவுலிடம் இந்த பட்டணத்தில் தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார். அவர் பெரியவர் அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும் அங்கே போகலாம் ஒருவேளை அவர் நாம் போக வேண்டிய நம்முடைய வழியை நமக்கு தெரிவிப்பார் என்றார். அவர்கள் தீர்க்கதரிசியான சாமுவேலை சந்தித்த போது கர்த்தர் அவர்களோடு சாமுவேல் மூலம் பேசுகிறதை பார்க்கலாம். இப்படி வேதாகமத்தில் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளிடம் ஆலோசனை கேட்கும் பலரை பார்க்கலாம்.

 ஒரு முறை ஒரு ஊழியக்காரர் ஒரு சபைக்கு பிரசங்கிக்க வந்தார்,தீர்க்கதரிசன வரத்தை உடைய அவர் அந்த சபையில் இருந்த 53 வயதுடைய ஒருவரை பார்த்து இந்த வருடத்துக்குள் கர்த்தர் உங்களுக்கு ஒரு குழந்தையை தரப்போகிறார் என்று சொன்னார்.திருமணமாகி பல வருடங்களாக குழந்தையே இல்லாமல் இருந்த அவரும் அவர் மனைவியும் இதைக் கேட்டவுடன் சபையை விட்டு வெளியே சென்று விட்டனர்.சபையிலிருந்த அனைவருக்கும் ஓருமாதிரி ஆகி விட்டது.அந்த ஊழியக்காரரும் தீர்க்கதரிசனம் சொன்ன இவரை பார்த்து இனி மேல் எந்த இடத்திலும் இப்படி பேசாதீர்கள் என்று கடிந்து கொண்டார்.இவரும் ஆவியானவர் சொல்ல சொன்னதை தானே சொன்னேன் என்று சங்கடத்தோடு அந்த இடத்தை விட்டு கடந்து சென்றார்.ஒரு வருடம் கழித்து அந்த தம்பதியினர் இவரை தேடி வந்து ஐயா நீங்க சொன்ன மாதிரியே கர்த்தர் எங்களுக்கு ஒரு குழந்தையை தந்தார் என்று சொல்லி குழந்தையை காட்டினார்கள்.உடனே இவர் அவர்களை பார்த்து ஏன் அன்றைய தினம் நான் தீர்க்கதரிசனம் உரைத்தவுடன் சபையை விட்டு வெளியேறினீர்கள் என்று கேட்க அதற்க்கு அவர்கள் ஜயா தேவன் எங்களை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை நாங்கள் உணர்ந்தவுடன் உடைந்து விட்டோம்.அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை.எனவே தான் சபையை விட்டு வெளியேறி வீட்டுக்கு சென்று பல மணி நேரமாக அழுது கொண்டே இருந்தோம் என்றனர்.இன்றைக்கும் உண்மையான தீர்க்கதரிசிகள் மூலம் தேவன் பேசுகிறார்,

எனது பிரியமானவர்களே தீர்க்கதரிசனங்களையும் தீர்க்கதரிசிகளையும் தீர்க்க தரிசின ஊழியக்காரர்களையும் தவறாக எண்ணி விமர்சிக்க வேண்டாம். கள்ள தீர்க்கதரிசிகளை அவர்களின் கனிகளினால் அறிந்து கொள்ளுங்கள் என்று இயேசு கிறிஸ்து சொன்னார். தீர்க்கதரிசனம் என்பது ஒரு கடலை போன்றது. அதை பற்றிய அனேக காரியங்களை வேதாகமத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள். தீர்க்கதரிசன ஆவி தீர்க்கதரிசன வல்லமை தீர்க்கதரிசன அலை தீர்க்கதரிசின அபிஷேகம் தீர்க்கதரிசன வரம் இன்னும் பல காரியங்கள் வேதாகமத்தில் இருக்கிறது. தீர்க்கதரிசனங்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் தீர்க்கதரிசனங்களை குறைத்து மதிப்பிட்டு குறை சொல்லாதீர்கள்.

கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள் உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள், உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள். அப்போஸ்தலர் 2:17

இந்த கடைசிகாலத்தில் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு முன்பாக மாபெரும் வெளிப்பாடு மற்றும் தீர்க்க தரிசன அபிஷேகம் அனேகர் மேல் ஊற்றப்படும். அனேகருடைய கண்கள் திறக்கப்பட்டு வரும் காரியங்களை பார்ப்பார்கள். அனேகருடைய செவிகள் திறக்கப்பட்டு கர்த்தரின் குரலை பிரத்தியட்சமாய் கேட்பார்கள். அனேகர் ஆவிக்குள்ளாய் எடுத்து கொள்ளப்பட்டு அழியாததும் எட்டாததுமான பெரிய அனுபவங்களை பெற்றுக் கொள்வார்கள்

எனவே பிரியமானவர்களே கடைசிகால வெளிப்பாடுகளின் அபிஷேகத்தை பெற்று கொள்ள நீங்கள் ஆயத்தப்படுங்கள். வேதாகமத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசின காரியங்களை தேடி வாசியுங்கள். கர்த்தர் சமுகத்தில் காத்திருங்கள்.