Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 23/10/2016

கர்த்தருடைய பந்தியில் கலந்து கொள்கிறவர்கள் எப்படியிருக்க வேண்டும்?

(Bro. Edwin - Sohar, Oman)

பந்தியில் விளம்பப்பட வேண்டிய உணவு வகைகள்:

1.சத்தியத்தை அறிந்திருக்க வேண்டும்

2.பாவமன்னிப்பை பெற்றிருக்க வேண்டும்

3.மூழ்கு ஞானஸ்நானம் எடுத்திருக்க வேண்டும்

4.தன்னைத்தானே சோதித்து அறிய வேண்டும்

5.அபாத்திரமாய் கர்த்தருடைய போஜனத்தை புசிக்க கூடாது

6.உலகத்தின் ஜனங்களோடு கலந்திருக்க கூடாது.

.கர்த்தருடைய பந்தியைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது?

1கொரி 11: 23-30 நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக் கொண்டேன், என்னவெனில் கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து

ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு நீங்கள் வாங்கிப் புசியுங்கள் இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்

போஜனம் பண்ணின பின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது நீங்கள் இதைப் பானம்பண்ணும் போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்

ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.

இப்படியிருக்க எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து அவருடைய பாத்திரத்தில் பானம் பண்ணுகிறானோ அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்

எந்த மனுஷனும் தன்னைத் தானே சோதித்தறிந்து இந்த அப்பத்தில் புசித்து இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணக்கடவன்.

என்னதினாலெனில் அபாத்திரமாய்ப் போஜனம்பண்ணுகிறவன் கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால் தனக்கு ஆக்கினைத் தீர்ப்பு வரும்படி போஜனம்பண்ணுகிறான்

இதினிமித்தம் உங்களில் அனேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள், அனேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.

.கர்த்தருடைய பந்தி என்பது என்ன?

1.இயேசு கிறிஸ்துவின் பிள்ளையாக மாற்றப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட புது உடன்படிக்கை ஆகும்.

2.அதாவது ஆதாம் செய்த பாவத்தினால் பாவி என்று நியாயப்பிரமாணத்தினால் அழைக்கப்பட்ட நம்மை இவ்வுலக பாவத்திலிருந்து விடுதலை செய்யும்படியாக தம்முடைய சரீரத்தையும், இரத்தத்தையும் சிலுவை மரணத்தின்போது ஒப்புக் கொடுத்தார் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. இந்த மரணத்தை நினைவுகூரும்படியாக அப்பத்தை அவருடைய சரீரமாகவும், திராட்சரசத்தை இயேசு கிறிஸ்துவின் இரத்தமாகவும் பாவித்து செய்யப்படும் இத்தகைய சடங்கே கர்த்தருடைய பந்தி என்னப்படும். [ சிலுவை மரணத்தை நினைவுகூறுதல் ]

.முன்னுரை:

கர்த்தருடைய பந்தியில் ஒவ்வொரு கிறிஸ்தவனும் கலந்து கொள்ள வேண்டும். இத்தகைய காரியத்தையே தேவன் புது உடன்படிக்கையாக விசுவாசிகளுக்கு தந்திருக்கிறார். இந்த மகத்துவமுள்ள பந்தியில் கலந்து கொள்ளாதவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது

யோவான் 6:53 அதற்கு இயேசு அவர்களை நோக்கி நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சதைப் புசியாமலும் அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே [நித்திய] ஜீவன் இல்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

அடுத்ததாக இந்த பரிசுத்தமான பந்தியில் கலந்து கொள்கிறவர்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதை வேதத்தின் மூலம் பின்வருமாறு பார்க்கலாம்.

யோவான் 6:54,55,56,57[பிப] என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தைப் பானம்பண்ணகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்

என் மாம்சம் மெய்யான போஜமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது

என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்

என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.

ஆகவே இந்த பந்தி கிறிஸ்தவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து கொண்டோம். அதுமட்டுமல்லாமல் இந்த பந்தியை நாம் ஒரு சாதாரணமான பந்தியை போல எடுத்துக் கொள்ளக் கூடாது

இப்படிப்பட்ட மகத்தான பந்தியில் கலந்து கொள்ளுகிறவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை வேத வசனங்களின் உதவிக் கொண்டு பின்வருமாறு பார்க்கலாம்.

1.பந்தியில் பரிமாறப்படும் முதல் உணவு: சத்தியத்தை அறிந்திருக்க வேண்டும்

வேதம் சொல்லுகிறது,

சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார் யோவான் 8:32

கர்த்தருடைய பந்தியில் கலந்து கொள்கிறவர்கள் முதலில் தேவனுடைய பிள்ளைகளாய் மாறியிருக்க வேண்டும். அவர்களுக்கே இந்த மகத்தான இராஜ பந்தி ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது.

தேவனுடைய பிள்ளைகள் ஆவதற்கு தேவன் எப்பொழுது அதிகாரம் கொடுக்கிறார் என்றால் அந்த மனுஷன் சத்தியத்தை அறிந்து அதை விசுவாசித்து தன்னுடைய கிரியைகளில் வெளிப்படுத்தும் போது மட்டுமே என்பதை ஒருபோதும் மறக்க கூடாது.

மேலே சொல்லப்பட்ட உண்மையான வாக்கியத்தை வேதம் நிரூபிப்பதை பின்வரும் வசனத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

யோவான் 1:12,13 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்

அவர்கள் இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல் தேவனாலே பிறந்தவர்கள்

ஆகவேதான் தேவன் இராக்காலத்தில் தம்மிடத்தில் வந்த நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயனை அதாவது போதகனைப் பார்த்து சொன்ன ஒரு காரியம் நீ போதகனாய் இருப்பதினாலும் நியாயப் பிரமாணத்தை நன்கு கற்று இருப்பதினாலும் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு செல்ல முடியாது. ஏனென்றால் இவைகள் எல்லாம் தேவ ராஜ்ஜியத்திற்கு போகிறவர்களைக் கட்டி வைத்திருக்கிறது. நீ எப்பொழுது ஆவிக்குரிய சத்தியத்தை அறிவாயோ அப்பொழுதே நீ தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு தகுதி உள்ளவனாய் மாறுகிறாய். ஏனென்றால் வேதம் சொல்லுகிறது

யோவான் 3:5 இயேசு பிரதியுத்தரமாக ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்

ஆகவே ஆவியினால் பிறக்கும் போது மட்டுமே அதாவது சத்தியத்தை அறிந்து இந்த உலக பாவத்திலிருந்து விடுதலை பெற்று சுதந்தரவாளியாக மாறும் போது மட்டுமே நாம் இந்த பந்திக்கு தகுதியுள்ளவர்களாய் மாறுகிறோம் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. எனவே நம்மை இயேசுவின் மரணம் முதலில் விடுதலை செய்திருக்கிறதா என்பதை சிந்தித்துப் பாருங்கள். நான் கிறிஸ்தவன் ஆகையால் இந்த பாத்திரத்தில் கலந்து கொள்கிறேன் என்று சொல்லும் விருதாகாரியத்தை விட்டு விடுவோம்.

ஏனென்றால் எப்படி ஒரு கல்யாண வீட்டில் நாம் பயப்படாமல் சாப்பிட வேண்டுமானால் நாம் அவர்களுடைய உறவினர்களாய் இருக்க வேண்டும் அல்லது அவர்களின் நண்பர்களாகவா இருக்க வேண்டும் அப்பொழுது மாத்திரமே நாம் அந்த கல்யாண வீட்டில் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற பந்திக்கு கலந்து கொள்வதற்கு தகுதியுள்ளவர்களாய் மாறுவோம். இதேபோலத்தான் இவ்வுலகச் சத்தியத்திற்கு அடிமையாயிருந்து கொண்டு தேவனுடைய பந்தியில் நிச்சயமாக கலந்து கொள்ள முடியாது. ஆகவே முதலாவது தேவன் சொன்ன மெய்யான சத்தியத்திற்குள்ளாக கடந்து வாருங்கள். அவர்களுக்கு மாத்திரமே இந்த பரிசுத்த பந்தி ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வளவு நாட்கள் காலத்தை வீணடித்துக் கொண்டிருந்து நம்மிடம் சத்தியத்தை சொன்னவர்களை பரியாசம் செய்து கொண்டு வந்தது போதும் காலம் சமீபமாயிற்று இப்பொழுதே தேவன் சொன்ன சத்தியத்திற்குள்ளாக வருவோம்.

2.பந்தியில் பறிமாறப்படும் இரண்டாவது உணவு: பாவமன்னிப்பை பெற்றிருக்க வேண்டும்

யோவான்ஸ்நானன் ஒவ்வொரு ஜனங்களையும் நோக்கி சத்தமிட்டு சொன்ன ஒரு காரியம் என்னவென்றால்

மனந்திரும்புங்கள் பரலோகராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது மத்தேயு 3:2

நாம் கர்த்தருடைய பந்தியில் இடம் பெறவேண்டுமானால் நம்முடைய பாவம் முதலாவதாக மன்னிக்கப்பட்டிருக்க வேண்டும் இந்த பாவ மன்னிப்பை நாம் பெறவேண்டுமானால் நம்முடைய பழைய மனுஷனிடம் இருந்த பழைய சுபாவத்தை மாற்றிக் கொண்டு புது தேவ மனுஷனாகிய இயேசுவின் சுபாவத்தை தரித்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது மாத்திரமே நாம் இந்த பந்திக்குரிய வஸ்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

பாருங்கள் இரண்டு குடும்பங்களுக்கு இடையில் பகைமை காணப்படுகிறது ஒருநாள் ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு திருமணம் ஆயத்தமாகிறது, அப்படிப்பட்ட நேரத்தில் இவர்களது திருமண வீட்டிற்கு அவர்களின் எதிரியாக இருக்கிற மற்ற குடும்பத்திற்கு திருமண அழைப்பிதழ் செல்லுமா? நிச்சயமாக  போகாது ஏனென்றால் இவர்களுக்கு இடையே இருக்கிற பகைமை இவர்களுக்கு இடையில் பிரிவினைச் சுவராக காணப்படுகிறது   .

இந்த பகைமை சுவர் உடைந்தால் மாத்திரமே இவர்கள் ஒன்று சேர முடியும் அதாவது இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஒரு மனந்திரும்புதல் நடக்குமானால் இவர்கள் தங்களுக்கு இடையே இருக்கிற கசப்பை மறந்து விடுவார்கள். இதனால் இவர்களது பகைமை மறைந்து அங்கு புதிய மனுஷர்கள் அதாவது புதிய நட்பு உண்டாவதை பார்க்க முடிகிறது.

வேதத்தில் இருந்து ஒரு மனுஷனை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் இந்த மனுஷனின் பெயர் சகேயு என்று வேதம் சொல்லுகிறது அதுமட்டுமல்லாமல் இந்த மனுஷன் வட்டித் தொழிலை நடத்திக் கொண்டு வந்தான் என்று பார்க்கிறோம் 

இதனிமித்தம் இந்த மனுஷன் தேவனுடைய பந்திக்கு தூரமாயிருக்கிறான் என்பது தெளிவாகிறது. ஆனால் இப்படிப்பட்ட மனுஷனுக்கும் தேவன் தம்முடைய பந்தியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கச் செய்தார்.

எப்படியென்றால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவனுடைய ஊருக்கு வந்த போது அந்த சகேயு இயேசுவை பார்த்தவுடனே மனந்திரும்பி தன்னுடைய பாவத்தையெல்லாம் அறிக்கை செய்தான் அத்தகைய காரியத்தை தன்னுடைய கிரியைகளிலும் காண்பித்தான். இதனால் தேவன் அவனுடைய பாவத்தையெல்லாம் மன்னித்தார். சகேயும் தேவனுடைய பந்தியில் ஒருவனாக மாறினான் என்று பார்க்கிறோம்.

வேதம் சொல்லுகிறது, தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான் அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான் [ இரட்சிக்கப்படுவான் ] நீதிமொழிகள் 28:13

எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே முதலாவது நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் அப்பொழுதுதான் நாம் நம்முடைய பழைய கட்டிலிருந்து எழும்பி புது கட்டிலுக்கு செல்ல முடியும் அதாவது பாவகட்டிலிருந்து விடுதலை பெற்று சுதந்தரமாக படுக்கிற கட்டிலுக்கு செல்ல முடியும். எப்படியென்றால் அந்த திமிர்வாதக்காரனின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட பிறகே அவன் புதுவாழ்க்கைக்கு கடந்து செல்ல முடிந்தது என்பதைப் பார்க்கிறோம்.   

3.பந்தியில் பறிமாறப்படும் மூன்றாவது உணவு: மூழ்கு ஞானஸ்நானம் பெற்றிருக்க வேண்டும்

இயேசு பிரதியுத்தரமாக,

ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

அதாவது ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் யோவான் 3:3,5

முதலாவது நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு காரியம் வேதத்தில் எத்தனை ஞானஸ் நானங்கள் உள்ளன. தேவன் சொன்ன ஞானஸ்நானம் எப்படி இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும், வேதம் சொல்லுகிறது, ஒரே ஒரு ஞானஸ்நானம் உண்டு என்று எபேசியர் 4:5 ல் வாசிக்கிறோம். ஒரே ஒரு ஞானஸ் நானம் என்பது ஜலத்தினாலும் ஆவியினாலும் அந்த ஞானஸ் நானம் நிறைந்திருக்க வேண்டும். இதில் சொல்லப்பட்டிருக்கிற ஜலத்தினால் ஞானஸ் நானம் என்பது தண்ணீரில் முழ்கி எடுக்கிற ஞானஸ் நானத்தையே வேதம் குறிப்பிடுகிறது. இத்தகைய ஞானஸ் நானத்தை பின்வருமாறு பார்க்கலாம்.

இயேசு ஞானஸ் நானம் பெற்று ஜலத்திலிருந்து கரையேறினவுடனே இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது தேவ ஆவி புறாவைப் போல இறங்கி தம்மேல் வருகிறதைக் கண்டார்.

அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி இவர் என்னுடைய நேசகுமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது மத்தேயு 3:16,17

பாருங்கள் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே மூழ்கி ஞானஸ் நானத்தை எடுத்து இருக்கும் போது நாம் வேறொரு ஞானஸ் நானத்தைப் பின்பற்றுவதும் போதிப்பதும் அதைக் குறித்து விளக்கம் கொடுப்பதும் பாவமான காரியம் ஆகும். அதுமட்டுமல்லாமல் இப்படிப்பட்ட ஞானஸ் நானத்தைப் பெற்று தேவன் கரையேறினவுடனே வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி இவர் என்னுடைய நேச குமாரன் என்று சொன்னதை நாம் பார்க்க முடிகிறது.

ஆகவே இந்த மூழ்கு ஞானஸ் நானத்தைப் பெற்றுக் கொள்ளாமல் வேறொரு ஞானஸ் நானத்தைப் பெற்றுக் கொண்டவரகள் பந்தியில் கலந்து கொள்ள முடியாது மற்றும் இந்த ஞானஸ் நானத்தையல்லாமல் வேறொரு ஞானஸ் நானத்தைப் போதிப்பவர்கள் பந்திக்கு தலைமை தாங்கவும் முடியாது மற்றும் தேவனுடைய ஊழியக்காரனாகவும் இருக்க முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்.

ஒருவேளை நாம் சொல்லலாம் வேதத்தில் அனேக ஞானஸ் நானங்கள் குறிக்கப்பட்டுள்ளதே என்பதாக, இவைகள் எல்லாம் தேவன் சொன்ன ஞானஸ் நானத்தின் விளக்கமும் இந்த ஞானஸ் நானம் எப்படியிருக்க வேண்டும் என்பதே ஆகும். உதாரணமாக இயேசுவுக்குள்ளாக ஞானஸ் நானம். இந்த ஞானஸ் நானம் பரிசுத்த ஆவியினால் பெறப் போகிற ஞானஸ் நானத்தையே குறிக்கிறது.

நான் மேலே உங்களுக்கு விளக்கி சொன்ன ஞானஸ் நானம் ஜலத்தினால் ஆன ஞானஸ் நானம் என்பதை மாத்திரம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

4.பந்தியில் பறிமாறப்படும் நான்காவது உணவு: தன்னைத் தானே சோதித்து அறிய வேண்டும்

சிம்சோனைப் பற்றி எல்லாருக்கும் நன்றாக தெரிந்திருக்கும் என்று விசுவாசிக்கிறேன், வேதம் சொல்லுகிறது

ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும் தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு

நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய் அவன் தலையின் மேல் சவரகன் கத்தி படலாகாது அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார் நியாயாதிபதிகள் 13:4,5

இதோ கர்ப்பத்திலே நசரேயனாக அதாவது தேவனுடைய பரிசுத்தமுள்ள ஊழியக்காரனாக மாற்றப்பட்டு கர்த்தருடைய பந்திக்கு முற்றிலும் தகுதியுள்ளவனாக மாறினான் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட ஒரு பாக்கியத்தை பெற்ற சிம்சோனைப் போல ஒருவனும் இல்லை என்று சொல்லலாம். ஆனால் என்ன நடந்தது, தான் ஒருதரம் சுத்தமாகிவிட்டேன் அதாவது தேவனால் பரிசுத்தமாக்கப்பட்டே பிறந்திருக்கிறவன் என்று நினைத்த சிம்சோன் உலகத்தில் உள்ள பாவம் தன்னுடைய வாழ்க்கையில் ஊடுருவதை அறியாமல், ஒவ்வொரு தடவையும் தன்னுடைய வலிமையை வெளிப்படுத்தி கர்த்தருடைய பிள்ளைகள் எவ்வளவு பலமுள்ளவர்கள் என்பதை மாத்திரம் உலகம் அறியச் செய்த சிம்சோன் தன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பதை ஒரு நாளும் அவன் சோதித்துப் பார்த்ததில்லை.

நிதானம் இல்லாமல் அலைந்து கொண்டிருந்த சிம்சோன் உலகம் விரித்த தெலீலாள் என்கிற இச்சை பந்தியில் விழுந்து போனான் இதனால் தேவனால் இலவசமாக கொடுக்கப்பட்ட நசரேயன் என்கிற விரதம் அசுசிப்பட்டது அதனால் அவன் தேவ சமுகத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்ட ஒரு சாதாரண மனுஷனைப் போல சங்கிலிகளினால் கட்டப்பட்டவனாய் உலகம் ஆயத்தப்படுத்திய பந்திக்கு கொண்டு போகப்பட்டான். இதனால் தேவனுடைய பந்திக்கு தூரமானான் என்று பார்க்கிறோம்.

எனக்கு அருமையான ஜனங்களே ஒவ்வொரு நாளும் நம்முடைய இரட்சிப்பு எப்படி இருக்கிறது என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும். துருப்பிடித்திருந்தால் உடனே அந்த துருவை எடுத்து போட தேவனிடம் மன்றாட வேண்டும் அப்படியில்லாத பட்சத்தில் இந்த உலக பாவம் என்கிற துரு நம்மை தேவ பந்தியில் கலந்து கொள்ளாதப்படிக்கு அழித்து போட்டுவிடும் என்பதை மறக்க வேண்டாம்.

வேதம் சொல்லுகிறது,

எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்து கொள்ளுங்கள்

பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்

-    1தெசலோனிக்கேயர் 5:21,22

5.பந்தியில் பறிமாறப்படும் ஐந்தாவது உணவு: அபாத்திரமாய் கர்த்தருடைய பந்தியில் புசிக்க கூடாது

வேதம் சொல்லுகிறது,

1கொரி 12: 27,29,30 [ வேதத்தை வாசிக்கவும் ]

மேலே சொல்லப்பட்ட வசனத்தின் அர்த்தம் என்னவென்றால், நம்முடைய பாத்திரம் பாவத்தால் நிறைந்து இருக்கும் போது அத்தகைய பாத்திரத்தை சுத்த செய்யாமல் அதை சுமந்து கொண்டு தேவனுடைய பந்தியில் கலந்து கொள்ளும் போது,

1.  நம்முடைய பாத்திரம் பலவீனம் ஆக மாறி விடுகிறது

2.  நம்முடைய பாத்திரத்தை நோய்கள் தாக்குகிறது

3.  நம்முடைய பாத்திரம் மரணத்தை சந்திக்க நேரிடுகிறது.

ஏனென்றால் வேதம் சொல்லுகிறது,

பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரை தரிசிப்பதில்லையே என்று எபிரெயர் 12:14ல் தேவன் பரிசுத்தமுள்ளவராக இருப்பதை அறிகிறோம். ஒரு காரியத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் நம்முடைய தேவன் இரக்கமுள்ளவர் அதேசமயத்தில் அவர் பரிசுத்தத்தை நேசிக்கிறவர் அதாவது பரிசுத்தத்தைக் குறித்து மிகவும் வைராக்கியமுள்ளவராய் இருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது.

சில உதாரணங்களை வேதத்தில் இருந்து பின்வருமாறு பார்க்கலாம்,

1.தேவ சமுகத்தில் கர்த்தருடைய ஊழியக்காரர்கள் தவிர மற்ற யாரும் நுழையக் கூடாது என்கிற கட்டளையை மீறி உசியா என்கிற ராஜா நுழைந்தது மட்டுமல்லாமல் தேவ காரியங்களை செய்யத் தொடங்கின போது நெற்றியில் வெண் குஷ்டம் என்கிற நோயை பெற்றுக் கொண்டான்.

2.அடுத்ததாக, ஆரோனின் மகன் அன்னிய தீயை தேவ சமுகத்தில் கொண்டு வந்து பரிசுத்த குலைச்சலை உண்டுபண்ணினதால் தேவனால் அடிக்கப்பட்டு தேவசமுகத்தில் மரணத்தைத் தழுவினான்.

3.சீமோன் என்கிற மனுஷன் தேவனுடைய சமுகத்தில் அபாத்திரமாய் நுழைய முயன்று பெலவீனமான மனுஷனாக மாறினான் என்று பார்க்கிறோம்.

எனவே தேவ பந்தியில் கலந்து கொள்கிற ஒவ்வொருவருக்கும் தேவனைக் குறித்ததான பயம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் அப்படியில்லாத பட்சத்தில் மேலே சொல்லப்பட்ட மூன்றில் ஒன்று நமக்கு நேரிடும் என்பதை மறக்க வேண்டாம்.

6.பந்தியில் பறிமாறப்படும் ஆறாவது உணவு: உலகத்தின் ஜனங்களோடு கலந்து இருக்க கூடாது

வேதம் சொல்லுகிறது,

உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும் படி ஜாக்கிரதையாயிரு 2தீமோ 2:15

மேலும், உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பு இல்லை என்று 1யோவான் 2:15 லும் நாம் எப்படியிருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்கிறோம்.

ஆகவே நமக்கு பிதாவின் பந்தியில் இடம் கிடைக்க வேண்டுமானால் நாம் செய்ய வேண்டிய ஒரு காரியம் நம்மை இந்த உலகத்தின் ஜனங்களை விட்டு விலக்கி வைப்பதாகும். நாம் தேவனுடைய பிள்ளைகள் ஆக மாற்றப்பட்ட பிறகு ஒருபோதும் பேலியாளின் பிள்ளைகளோடு தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது.

இத்தகைய காரியத்தை அப்.பவுல் கொரிந்தியரில் அழகாக பரிசுத்த ஆவியானவரின் துணை கொண்டு விளக்கி இருப்பதை பின்வருமாறு காணலாம்

2கொரி 6:14-18 அந்நிய நுகத்தில் அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது, ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?

கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?

தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?

நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவானாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று தேவன் சொன்னபடி நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே

ஆனபடியினால் நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து போய் அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்

அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொண்டு உங்களுக்குப் பிதாவாயிருப்பேன் நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

இனிமேலாவது நாம் இப்படிப்பட்ட ஜனங்களோடு கொண்டிருந்த நட்பை முறித்து விட்டு தேவனுடைய பிள்ளைகளோடு மாத்திரம் ஐக்கியம் வைத்துக் கொள்ளுவோம். பாருங்கள் தேவனுடைய சந்ததியில் வந்த சாலமோன் தேவனால் பல தடவைகள் எச்சரிக்கப்பட்ட பொழுதிலும் அவன் அன்னியரோடு கொண்டிருந்த நட்பை முறித்து கொள்ளவே இல்லை. இதனால் பெரிய பாவத்திற்குள்ளாக விழுந்து தேவ பந்திக்கு சிறிதும் பாத்திரமற்றவனாக மாறினான் என்பதை நாம் அறிகிறோம்.

எனக்குப் பிரியமான தேவனுடைய ஜனங்களே தேவனுடைய பந்தி மிகவும் சுத்தமானது இப்படிப்பட்ட பரிசுத்தமுள்ள பந்தியை உருவாக்க இயேசு கிறிஸ்து கொடுத்த வெகுமதிகள் எவ்வளவு தெரியுமா?

1.பொய் சாட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டார்

2.பரியாசம் செய்யப்பட்டார்

3.துன்மார்க்கரால் அடிக்கப்பட்டார்

4.சொந்த ஜனங்களால் அவமதிக்கப்பட்டார்

5.தாம் இலவசமாக தந்த வீதியிலே இழுக்கப்பட்டார்

6.நார் நாராக பிரிக்கப்பட்டார்

7.மிருகங்களின் இறைச்சியைப் போல் கொத்தப்பட்டார்

8.கள்ளகர்களின் மத்தியில் நிறுத்தப்பட்டார்

9.மெளனமாக்கப்பட்டார்

10.மாமிசமெல்லாம் கிழிக்கப்பட்டது

11.கசப்பினால் தாகம் தீர்க்கப்பட்டார்

12.வாரினால் அடிக்கப்பட்டார்

13.முட்களினால் கிரீடம் தரிக்கப்பட்டார்

14.அரை நிர்வாணமாய் தொங்கவிடப்பட்டார்

15.சிலுவையில் அறையப்பட்டார்

16.தம்முடைய பரிசுத்த இரத்தத்தையெல்லாம் பாவ பூமியில் சிந்தினார்

17.பெலவீனராக்கப்பட்டார்

18.அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்

19.நீதிமானாகிய தேவன் ஜனங்களின் பாவத்தை ஏற்றுக் கொண்டார்

20.மரணமே இல்லாத தேவன் மரணத்துக்கு தன்னை ஒப்புக் கொடுத்தார். இன்னும் அதிகம்

நமக்காக போடப்பட்ட இத்தகைய பெரிய பட்டியலை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஏற்றுக் கொண்டது எதற்காகத் தெரியுமா? நம்மை அவருடைய குடும்பமாக மாற்றி அவர் நமக்காக ஏற்படுத்தி வைத்திருக்கிற பந்தியில் அவரோடு கூட உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்பதற்காக எனவே இனிமேலாவது கர்த்தருக்குப் பிரியமில்லாத காரியங்களை நம்மை விட்டு எடுத்துப் போட்டுவிட்டு எப்பொழுதும் கர்த்தருடைய பந்திக்கு நம்மை தகுதியாக வைத்துக் கொள்வோம். ஏனென்றால் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எந்த நாழிகையில் வருகிறார் என்பதை அறியாததின் நிமித்தம் எப்பொழுதும் ஆவிக்குரிய வாழ்க்கையில் விழித்திருப்போம்.

தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்!