Tamil Christian Website

Tamil Christian Website

Posted on: 20/12/2013

Download / Open this article in PDF

வார்த்தை மாம்சமானது

யோவான் 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.      2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.   3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று;  உண்டானதொன்றும்  அவராலேயல்லாமல்  உண்டாகவில்லை.

14   அந்த வார்த்தை மாம்சமாகி,  கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய்,  நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு  ஏற்ற மகிமையாகவே  இருந்தது.

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு ! இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். வார்த்தை மாம்சமாகி இயேசு கிறிஸ்துவாக பிறந்த நிகழ்வை உலகமெங்கும் கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் அன்பு வாழ்த்துக்கள்.  இந்த சமயத்தில், வார்த்தை மாம்சம் ஆனதன் அர்த்தம், முக்கியத்துவம், பலன்கள், நிகழ்வுகள் போன்ற சத்தியங்களை சற்று படிப்போம். “அந்த வார்த்தை மாம்சமாகி” – இது உலக சரித்திரத்தில் நிகழ்ந்த ஒரு உன்னத நிகழ்ச்சி. பாவத்தில் வீழ்ந்த மனுக்குலத்தை மீட்டெடுக்க தேவன் செய்த மகாப்பெரிய காரியம். எப்படி சம்பவிக்கும் என்று தேவதூதரும் உற்றுப்பார்க்க ஆசையாக இருந்த காரியம் ( 1 பேதுரு 1:12 ). பாவத்தை பற்றிய அறிவு இருக்கிற அனைவரும் நித்திய நரகத்துக்குதான் செல்ல வேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி, இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிற யாரும் இனிமேல் நித்திய நரகத்துக்கு செல்ல தேவையில்லை என்ற ஒரு அற்புதமான நிலைமையை உருவாக்கிய காரியம் இது.

 

1 யோவான் 4:2 தேவஆவியை நீங்கள் எதினால் அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.

3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திகிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. ( 2 யோவான் 1:7; எபி 5:7; பிலி 2:6-8; 1 தீமோ 3:16 )

மற்ற எந்த ஒரு மத போதனைகளிலும் இல்லாமல், கிறிஸ்தவத்தில் இருக்கும் ஒரு மகா முக்கியமான வேறுபாடு, “ நமக்கு ஒரு இரட்சகர் “ இருப்பது. இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் இரட்சகராக ஆவதற்கான ஒரு முக்கியமான தகுதி - அவர் மாம்சத்தில் வெளிப்படுவது. இல்லையென்றால் அவர் மனுக்குலத்துக்காக சோதிக்கப்பட முடியாது, நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்பட்டிருக்க முடியாது, தண்டிக்கப்பட முடியாது, மரிக்க முடியாது – மனுக்குலத்துக்கான பிராயச்சித்த பலியாக முடியாது. அதனால்தான் இயேசு கிறிஸ்து மாம்சமானது சரித்திரத்தின் ஒரு அதி முக்கியமான சம்பவம்.

 

வார்த்தை

நாம் பொதுவாக தமிழில் “வார்த்தை” என்று கூறும் சொற்களுக்காக வேதாகமத்தில், முக்கியமாக புதிய ஏற்பாட்டில் இரண்டு கிரேக்க வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.

1. Logos. லாகோஸ். இவ்வார்த்தை ஒரு “கருத்தை” “எண்ணத்தை” குறிப்பிடுகிறதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது.   .ம். லூக்கா 7:7; 1 கொரி 14;9,19; யோவான் 15:25; 1 தெச 4:15; அப் 8:25.

 

2. Rhema ரேமா. ஒரு கருத்தை அல்லது எண்ணத்தை, முறையான, இலக்கணப்பூர்வமான, அறிவுப் பூர்வமான வடிவத்தில், வார்த்தைகளிலும் வாக்கியங்களிலும் வெளிப்படுத்துவதை குறிப்பிடுவதற்காக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.     .ம். மத் 12:36; 2 கொரி 12:4; எபி 12:19; யோவா 3:34; அப் 2:14.

 

உதாரணத்துக்கு, வேதாகமத்தை குறிப்பிடுவதற்காக லாகோஸ் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தலாம்; வேதாகமத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட வசனத்தை குறிப்பிடுவதற்காக ரேமா என்ற வார்த்தையை உபயோகப்படுத்தலாம் ( எபே 6:17 ).

 

யோவான் 1:1,14; 1 யோவான் 1:1; வெளி 19:13 ஆகிய இடங்களில் “வார்த்தை” என்று குறிப்பிடப் பட்டுள்ள சொல்லுக்கான கிரேக்க வார்த்தை “லாகோஸ்” ஆகும். இந்த இடங்களில் இவ்வார்த்தை, தேவனுடைய குமாரனுக்கு மாத்திரம் கொடுக்கப்பட்டுள்ள “தனிப்பட்ட முறையிலான வார்த்தை” என்ற பட்டப்பெயரை குறிப்பிடுகிறது.

 

மாம்சம்: இந்த வார்த்தைக்கான கிரேக்க வார்த்தை “சார்க்ஸ்” என்பதாகும். இவ்வார்த்தை “மாம்சம்” என்று  யோவான் 1:1,14; 1 தீமோ 3:16; 2 யோவா 7; எபி 5:7 ஆகிய இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வார்த்தை  இவ்விடங்களில், இயேசுகிறிஸ்துவின் “பரிசுத்த மனிதத்தன்மை” யையும் ஒரு மனிதன் என்று அழைக்கப்படுவதற்கு தேவையான அனைத்தையும் ( ஆவி, ஆத்துமா, சரீரம்) குறிப்பிடுகிறது. அதாவது தேவனுடைய குமாரன், பரிசுத்த மனிதத்தன்மையை முழுமையாக எடுத்துக்கொண்டு, ஆவி, ஆத்துமா, சரீரம் உள்ள ஒரு மனிதனாக ஆனார்.

 

வார்த்தை மாம்சமானது எதற்காக ?

“பாவத்தை போக்கும் பலியாக”

 ரோமர் 8:3 அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.

புசிக்கக்கூடாது என்று தேவன் சொன்ன கனியை ஆதாம் புசித்ததால், மொத்த மனுக்குலமும் பாவிகள் ஆக்கப்பட்டனர் ( ரோமர் 5:12-19 ). இதனால் பாவத்தை அறிகிற அறிவு வராமல் மரிக்கும் சிறு பிள்ளைகளை தவிர மற்ற அனைத்து மொத்த மனுக்குலமும் நித்திய நரகத்துக்கு செல்லுகிறவர்கள் ஆக்கப்பட்டார்கள். ஆனாலும் தேவன் தன் அநாதி தீர்மானத்தின் படி, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உலகத்தொடக்கத்துக்கு முன்பே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக இயேசு கிறிஸ்துவை வைத்திருந்தார்     ( யாக் 1:19-20; வெளி 13:8 ).  

 

'பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்' ( எசே; 18;4 ). இது வேதாகமத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எசே 18:4 இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்.

ஒரு மிருகமோ, அல்லது தேவ தூதனோ மனிதனுக்கு பதிலாக பாவத்தின் தண்டனையை அனுபவிக்க முடியாது.  மனிதனுடைய திரித்துவ சுபாவம் பாவம் செய்தது, எனவே அந்த மனிதனே சாக வேண்டும்; ஒரு மனிதனே மனிதனுக்காக பிராயச்சித்தம் செய்ய முடியும் ( லேவி 17:11; எபி 9:22 ). ஆனால், மொத்த மனுக்குலமும் பாவத்தில் இருப்பதால், எந்த ஒரு மனிதனுடைய மரணமும், அவனுக்காகவோ, மற்றவர் களுக்காகவோ, பிராயச்சித்தம் செய்ய முடியாது ( ரோமர் 3:10,23 ). மனிதன் தன் பாவத்துக்காக, சுய பிராயச்சித்தமும் செய்ய முடியாது.

எரே 13:23 எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப் பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்.

ஆகவே மனுக்குலத்தின் பாவத்துக்கு மரிப்பதென்றால், “மொத்த மனுக்குலத்தையும் தன்னுள் கொண்டிருக்கிற” ஆதாம் தான் மரிக்க வேண்டும். ஆனால் ஆதாம் பாவத்துக்கு மரித்தால் மொத்த மனுக்குலமும் அவனோடு அழிந்து போகும். அதனால் தேவனுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. இப்போது தேவனுக்கு இருக்கிற ஒரே வழி “மொத்த மனுக்குலத்தையும் தன்னுள் கொண்டிருக்கிற” மற்றோருவர் மனுக்குலத்தின் பிராயச்சித்த பலியாக மரிக்க வேண்டும் ( லேவி 17:11: எபி 9:22; 1 யோவான் 2:2 ). அப்படி மொத்த மனுக்குலத்தையும் தன்னுள் கொண்டிருக்கிறவர் இயேசு கிறிஸ்து மாத்திரமே.

கீழ்க்கண்ட வேத வசனங்கள் மூலமாக இதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

யோவான் 1: 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

கொலோ 2: 9 ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.

யோவான் 1:10 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.

கொலோ 1:15  அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். 16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. 17 அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. 18 அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.

19 சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும்,

1 கொரி 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

எபே 3:11 இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

 

நாம் எப்படி இயேசு கிறிஸ்துவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டோம் ?

தேவன் நம்மை இயேசு கிறிஸ்துவுக்குள் சிருஷ்டித்தார். இது நமது முயற்சியால் அல்லது விசுவாசத்தால் சம்பவிப்பது இல்லை. தேவன் தனது கிருபையால் செய்தது.

1 கொரி 1:30 அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக,

எபே 2:10 ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.

 

இயேசு கிறிஸ்து – “பிந்தின ஆதாம்” “இரண்டாம் மனுஷன்”

மொத்த மனுக்குலத்தையும் தன்னுள் கொண்டிருப்பதால்தான் இயேசு கிறிஸ்து “பிந்தின ஆதாம்”  என்றும் “இரண்டாம் மனுஷன்” என்றும் அழைக்கப்படுகிறார்.

1 கொரி 15:45 அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.   46 ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது.  47 முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.

 

மொத்த மனுக்குலத்துக்குமான பிராயச்சித்த பலியாக மரிக்கும்படியாக, மொத்த மனுக்குலத்தையும் தனக்குள் கொண்டிருக்கிற இயேசு கிறிஸ்துவாகிய வார்த்தை, மனிதனானார் – மாம்சமானார். அதாவது மனிதனானார்.

முந்தின மனுஷன், முந்தின ஆதாம் ( First Adam, First man ) - ஆதாம்

இரண்டாம் மனுஷன், பிந்தின ஆதாம் ( Last Adam, Second man ) – இயேசு கிறிஸ்து.

ஆதாமுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் உள்ள வேறுபாடு

 

ஆதாம்

இயேசு கிறிஸ்து

1. முந்தின (முதலாம்) ஆதாம்.

பிந்தின ( கடைசி ) ஆதாம்.

2. ஜீவாத்துமா.

உயிர்ப்பிக்கிற ஆவி.

3. ஜென்ம சரீரம்.

ஆவிக்குரிய சரீரம்.

4. மண்ணானவன்

கர்த்தர்.

5. பூமியிலிருந்து உண்டானவன்.

வானத்திலிருந்து வந்தவர்.

6. மனிதன்.

மனிதன்,கர்த்தர்.

7. முந்தின மனுஷன்.

இரண்டாம் மனுஷன்.

 

முன்பு எப்படி மாம்சமான ஆதாமினால் மனுக்குலம் முழுவதும் பாவிகள் ஆக்கப்பட்டார்களோ, அவ்வாறே, மாம்சமான வார்த்தையினால் மனுக்குலம் முழுவதும் நீதிமான்கள் ஆக்கப்பட முடியும். சகல சிருஷ்டிகளுக்கும் பிதாவான இயேசு கிறிஸ்து இப்போது மாம்சமான மனிதனாக ஆனார். மனித சுபாவத்தை, தன்மையை எடுத்துக்கொண்டார். ஆகவே அவரால் இப்போது மனுக்குலத்துக்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியும், மனுக்குலத்துக்காக பிராயச்சித்த பலியாக மரிக்க முடியும், ஒரு புதிய மறுபடியும் பிறந்த சந்ததியை உருவாக்க முடியும். இதற்காகத்தான் வார்த்தை மாம்சமானார்.

 

இரண்டு மனித இனம்

ரோமர் 6:5 ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.

கொலோ 1:13 இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.

 

வார்த்தை மாம்சமானதனால் இயேசு கிறிஸ்து “ பிந்தின ஆதாம் Last Adam” ஆனார். கடைசி ஆதாமாக அவர் மனுக்குலம் முழுவதையும் தன்னுள் கொண்டிருந்தார். வார்த்தை மாம்சமாகி, மரித்து உயிர்த்தெழுந்ததால் அவர் “இரண்டாம் மனுஷன்” என்று அழைக்கப்படுகிறார். ஆக இங்கே இரண்டு மனித இனங்களை பார்க்கிறோம். ஒன்று ஆதாமில் தொடங்கிய மனித இனம். இது இயேசு கிறிஸ்து – வார்த்தை மாம்சமான போது – அவரில் தொடங்கி கல்வாரி சிலுவையில் முடிந்தது. மற்றொரு இனம் “புது சிருஷ்டி”, “மறுபடியும் பிறந்த இனம்”. உயிர்த்தெழுந்த இயேசுவில் தொடங்கி நித்தியம் வரையிலான மனித இனம். இந்த இனம்தான் இயேசுவோடு கூட நித்தியமாக உலகத்தை மீண்டும் ஆளுகை செய்யும்.

 

ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டபோது - நாம் அவருக்குள் இருந்தோம்.

ஆதாம் விலக்கப்பட்ட கனியை புசித்த போது – நாம் அவருக்குள் இருந்தோம்.

ஆதாம் கீழ்ப்படியாத போது நாம் – அவருக்குள் இருந்தோம்.

ஆதாம் பாவியான போது – நாம் அவருக்குள் இருந்தோம் -  பழைய மனித இனம்.

 

இயேசு கிறிஸ்து மரியாளின் கர்ப்பப்பையில் உருவானபோது – நாம் அவருக்குள் இருந்தோம்.

இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறந்த போது – நாம் அவருக்குள் இருந்தோம்.

இயேசு கிறிஸ்து தண்டிக்கப்பட்டபோது – நாம் அவருக்குள் இருந்தோம்.

இயேசு கிறிஸ்து மரித்த போது – நாம் அவருக்குள் இருந்தோம்.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த போது – நாம் அவருக்குள் இருந்தோம் - புதிய மனித இனம்.

 

தேவன் நமக்கு செய்வது எல்லாம் நமது ஆவியில் செய்கிறார்

சிருஷ்டிக்கப்பட்டவைகள் அனைத்தும் இயேசுகிறிஸ்துவின் மூலமாக சிருஷ்டிக்கப்பட்டது என்று எற்கனவே நாம் படித்தோம். அதாவது சகலத்தின் உற்பத்தி ஸ்தானம், மூலாதாரம் இயேசு கிறிற்து. ஒரு உதாரணத்துக்கு தண்ணீரை எடுத்துக்கொள்வோம். உலகத்தின் பல இடங்களில் தண்ணீர் இருக்கிறது. தண்ணீருக்கென்று பல குணங்களை தேவன் வைத்திருக்கிறார். தண்ணீரின் நிறம் என்ற குணத்தை எடுத்த்துக்கொள்வோம். தேவன் தண்ணீரின் நிறத்தை மஞ்சளாக மாற்ற வேண்டும் என்று நினைத்தால், உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு தண்ணீரையும் தேவன் மஞ்சளாக மாற்ற வேண்டியதில்லை, மாறாக இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கும் தண்ணீரின் மூலதாரத்தில் தண்ணீரின் நிறத்தை மஞ்சளாக மாற்றினால் போதும். உடனடியாக உலகத்தில் இருக்கும் அனைத்து தண்ணீரும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

இது போல்தான் நமது ஆவியிலும் தேவன் மாற்றங்களை செய்கிறார். நாம் ஆவி, ஆத்துமா, சரீரம் என்று மூன்று பாகங்களை உடையவர்கள் ( 1 தெச 5:23 ). இதில் நம்முடைய ஆவிதான் உண்மையில் “நாம்” ( ரோமர் 8:9 ). நமது பழைய மனிதன் இயேசுவோடு கூட சிலுவையில் அறையப்படுவது, மரிப்பது, உயிர்த்தெழுவது எல்லாம் நமது ஆவியில் சம்பவிப்பவை. இவைகள் அனைத்தும் நம் ஒவ்வொரு வருக்குமாக தனித்தனியாக சம்பவிப்பவை அல்ல. தேவன் இயேசு கிறிஸ்துவுக்குள் நமக்காக செய்யும் நிகழ்வுகள். நாம் விசுவாசித்தாலும், விசுவாசிக்காவிட்டாலும் இவற்றை தேவன் இயேசுவுக்குள் செய்தார். நாம் விசுவாசிக்கும்போது அந்த நிகழ்வுகள் நமக்கு உரியவனவாகின்றன. அதன் பலன்களும் நமக்கு உரியவனவாகின்றன.

 

வார்த்தை மாம்சமானது எப்போது ?

லூக்கா 1: 26 – 38 வரை உள்ள வசனங்களில், காபிரியேல் தூதனுக்கும் மரியாளுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், 35ம் வசனத்தில் வார்த்தையான இயேசு கிறிஸ்து எவ்வாறு மாம்சம் ஆவார் என்று காபிரியேல் விளக்குகிறார்.

லூக்கா 1:35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

அதைக்கேட்ட மரியாள் அதற்கு இப்படியாக பதில் கூறுகிறார்.

லூக்கா 1:38 அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.

மரியாள் “ நான் ஆண்டவருக்கு அடிமை” என்று தன்னை முழுமையாக ஒப்புக்ககொடுத்து, “உம்முடைய வார்த்தையின்படி” அதாவது “தேவனிடத்தில் இருந்து காபிரியேல் தூதன் மூலமாக அனுப்பப்பட்ட வார்த்தையின்படி” எனக்கு ஆகக்கடவது என்று விசுவாசத்தோடு சொன்ன போது, சொன்ன அந்த வினாடி “வார்த்தை மாம்சமானது” – அதாவது மரியாள் இயேசு கிறிஸ்துவை கர்ப்பம் தரித்தார்.

 

 

 

வார்த்தை மாம்சமானது – எவ்வாறு ?

தேவன் மனிதனை உருவாக்கியது தனது வார்த்தையின் மூலம் ( ஆதி 1:26 ). இப்பொழுது தேவன் இயேசுகிறிஸ்து வாசம் செய்யப்போகும் சரீரத்தை உருவாக்க வேண்டும். அந்த சரீரம் ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில்தான் உருவாக்கப்பட முடியும். ஏனென்றால் பூமியின் அதிகாரத்தை தேவன் மனிதனுக்கு கொடுத்து விட்டார் ( சங் 8:6; 115:16 ). இயேசுவின் சரீரத்தை உருவாக்க தேவையான தேவனுடைய வார்த்தைகளின் வெளிப்பாட்டை ஒரு தனிமனிதனால் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் ஏதேன் தோட்டம் தொடங்கி, தனது தீர்க்க தரிசிகள் மூலமாக பல நூற்றாண்டுகளாக தேவன் பேசிக்கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட சமயத்தில், அதாவது காலம் நிறைவேறின போது, மரியாள், இயேசுகிறிஸ்து வாசம் செய்யப்போகும் சரீரத்தை உருவாக்க தேவையான தேவனுடைய வார்த்தைகளின் வெளிப்பாட்டை முழுவதுமாக பெற்றுக்கொள்ள தகுதி உடையவராக இருந்தார்கள். உடனடியாக தேவனுடைய வார்த்தை அவர்களிடம் கொடுக்கப்பட்டது.

1 பேதுரு 1:23 அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.

தேவனுடய வார்த்தை அழிவில்லாத “வித்து” என்று குறிப்பிடப்படுகிறது. இந்த ‘வித்து’ என்ற வார்த்தைக்கான கிரேக்க வார்த்தை ‘ஸ்போரா’ (SPORA) என்பதாகும். அதாவது “விதைப்பது” “பெற்றோராக இருப்பது” என்ற அர்த்தத்தில். எப்படி ஒரு குழந்தை உருவாக ஒரு ‘வித்து, sperm  ஒரு மனிதனிடம் இருந்து வருகிறதோ, அதுபோல இயேசு கிறிஸ்துவின் சரீரம் உருவாக தேவையான ‘ வித்து, sperm தேவனுடைய வார்த்தையில் இருந்து மரியாளுக்கு கிடைத்தது. தேவனுடைய வார்த்தை ‘ வித்து ‘ ஆனது. இதன் மூலமாக மரியாள் கர்ப்பம் தரித்தார்கள்.  இது எல்லாம் சம்பவித்தது பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால்.

 

வார்த்தை மாம்சமானது – அது பரிசுத்தமுள்ளது

லூக்கா 1:35  தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டில் “பாவம்” என்ற வார்த்தைக்காக ஏராளமான இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை “ஹமர்ஷியா” என்பதாகும். இவ்வார்த்தை 4 விதமான அர்த்தங்களில் பல இடங்களிலும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.

1. பாவம் – கிரியைகளின் உற்பத்தி ஸ்தானமாக, ஒரு கோட்பாடாக. ரோமர் 3:9; 5:12.

2. பாவம் – ஆளுகை செய்கிற ஒரு கோட்பாடாக, சக்தியாக . ரோமர் 6:6. எபி 3:13.

3. பாவம் – பொதுவாக ஆனாலும் சில இடங்களில் உறுதியான தவறான செயல்களை குறிப்பிடும் விதமாக. யோவான் 8:21; ரோமர் 8:3.

4. பாவம் – ஒரு பாவச்செயலாக. மத் 12:31; அப் 7:60.

இயேசு கிறிஸ்து ஒரு “மனிதனின் வித்து” மூலமாக பிறந்திருந்தால் அவரிடம் பாவம் ஒரு கோட்பாடாக, சக்தியாக (1,2 ) இருந்திருக்கும். ஆனால் இயேசு கிறிஸ்து கன்னியிடம் பிறந்ததால் அவரிடம் பாவம் ஒரு கோட்பாடாக, சக்தியாக (1,2 ) இல்லாமல் இருந்தது. மேலும் அவர் பூமியில் மனிதனாக வாழ்ந்த காலம் முழுவதிலும் அவரிடம் தவறான செய்கைகளோ, பாவச்செயல்களோ (3,4 ) இல்லாமல் இருந்தது. (1 பேதுரு 2:22; 1 யோவான் 3:5 )

 

 

வார்த்தை மாம்சமானதால் மனிதருக்கு என்ன பயன் ?

ஒரு மனிதன் சாதாரணமாக ஒரு முறைதான் மரிக்க முடியும். அதாவது அவனது ஆவியும் ஆத்துமாவும் அவனது சரீரத்தை விட்டு பிரிந்து செல்லுதல்.

எபி  9:27  அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

ஆதாமுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, பாவியாக்கப்பட்டு, பாவியாய் மரிக்கும் மனிதன், பின் நியாயத்தீர்ப்பின் நாளில் நித்திய மரணத்துக்குள் தள்ளப்படுவான். இதுதான் அவனது முடிவு.

ஆனால் ஆதாமுக்குள் சிருஷ்டிக்கப்பட்ட மனிதன், இயேசு கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டு, அவரோடு மரித்து, அவரோடு மீண்டும் புதிய ஒரு மனிதனாக “மறுபடியும் பிறக்க முடியும்”. ( ரோமர் 6:1-12 )

யோவான் 3:3 இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

வார்த்தை மாம்சமானதன் மகாப்பெரிய ஆசீர்வாதம் இது. இப்போது எந்த மனிதனும் நித்திய நரகத்துக்கு செல்ல வேண்டியது இல்லை.

 

எப்படி மரியாள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்ட போது இயேசு கிறிஸ்து அவருக்குள் பிறந்தாரோ, அப்படியே நாமும் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளும் போது இயேசு கிறிஸ்து நமக்குள் பிறக்கிறார் – அதாவது இயேசு கிறிஸ்துவின் ஆவியை நாம் பெற்றுக்கொள்ளுகிறோம். மறுபடியும் பிறக்கிறோம்.

ரோமர் 8:9 தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.

இந்த ஆவிதான் நம்முடைய மறுபடியும் பிறந்த ஆவி. இந்த ஆவியை உடையவன்தான் இயேசு கிறிஸ்து யோவான் 3:3 ல் சொன்ன “மறுபடியும் பிறந்தவன்”. ( யாக் 1:18: 1 பேதுரு 1:23 ).

 

வார்த்தை மாம்சமானதனால் – இப்போது யாரும் தரித்திரனாக இருக்க வேண்டியதில்லை, யாரும் ஐசுவரியவானாக இருக்க முடியும் ( 2 கொரி 8:9 ).

வார்த்தை மாம்சமானதனால் – இப்போது யாரும் நோயாளியாக இருக்க வேண்டியதில்லை, யாரும் ஆரோக்கியமாக இருக்க முடியும் ( 1 பேதுரு 2:24 ).

வார்த்தை மாம்சமானதனால் – இப்போது யாரும் பிரச்சினைகளோடு இருக்க வேண்டியதில்லை, யாரும் சமாதானமாக இருக்க முடியும் ( ஏசாயா 53:5 )

வார்த்தை மாம்சமானதனால் – இப்போது யாரும் பாவியாய் இருக்க வேண்டியதில்லை, யாரும் ஞானியாக, நீதிமானாக, பரிசுத்தவானாக, மீட்கப்பட்டவராக இருக்க முடியும் ( 1 கொரி 1:30 ).

வார்த்தை மாம்சமானதனால் – இப்போது யாரும் பாவங்களுக்கான தண்டனையை தேவனிடம் இருந்து பெற வேண்டியதில்லை, யாரும் மன்னிக்கப்பட்டு தேவனுடைய மகனாக வாழலாம் ( ரோமர் 8:14 )

வார்த்தை மாம்சமானதனால் – இப்போது மறுபடியும் பிறந்த யாரும் பாவத்திடம் தோற்று வாழ வேண்டியதில்லை, இயேசுவைப்போல் எவ்விதத்திலும் பாவம் இல்லாமல் இருக்கலாம் ( 1 யோவான் 4:17; யோவான் 14:12 )

வார்த்தை மாம்சமானதனால் – இப்போது யாரும் பழைய மனிதனாக நரகம் செல்ல வேண்டியதில்லை, யாரும் இப்போது புதிய சிருஷ்டியாக பரலோகம் செல்லலாம் (யோவான் 3:3).

 

இது மனுக்குலத்துக்கான மகாப்பெரிய நற்செய்தி. இதை அனவருக்கும் அறிவிப்போம். மாம்சமான வார்த்தையை – இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அனைத்து ஆசீர்வாதங்களோடு இவ்வுலகத்தில் வாழவும், பரலோகம் செல்லவும், அனைவரையும் வழி நடத்துவோம்.

ஆமென்.

வார்த்தை மாம்சமானதின் அன்பு வாழ்த்துக்கள்.

 

Bro D. Vergin  Kumar

deeveekumar@yahoo.com  

 

Resources;  Dakes bible commentary, Andrew Wommack bible commentary, Strong's Bible concordance, Vine's expository dictionary of the New Testament, Vincent's New Testament Word Studies,  The Spiritual man - By Watchman nee, The Normal Christian life - by Watchman nee. Bible exposition commentary – New Testament.  All bible quotes are from King James Version bible, unless quoted otherwise. In Tamil Bible some verses may be up or down than the quoted verse.

 

-----------------------------------------