Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 24/12/2016

கிறிஸ்துவின் பிறப்பு நமக்கு தரும் நற்செய்தி

 

Bro. Edwin (Sohar- Oman)

 

கிறிஸ்துவின் பிறப்பை கிறிஸ்துமஸ் என்கிற பெயரில் இயேசு கிறிஸ்துவை சிறு பிள்ளையாக பாவித்து மனுஷனுடைய இஷ்டப்படி ஒவ்வொரு வருஷமும் கொண்டாடிக் கொண்டிருக்கிற நாம் கிறிஸ்து பிறப்பின் அர்த்தத்தை முதலாவது தெரிந்து கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் அந்த கொண்டாட்டத்திற்கு அர்த்தம் இருக்கும்.

வேதம் சொல்லுகிறது, எல்லாரும் பாவஞ் செய்து தேவ மகிமையற்றவர்களாகி ரோமர் 3:23

ஆதாம் என்கிற மனுஷன் அதாவது தேவனால் உலகத்தில் முதன்முதலில் படைக்கப்பட்ட மனுஷன் தான் இந்த ஆதாம். இவன் செய்த பாவத்தினிமித்தம் அந்த பாவ சுபாவம் அவனுக்குப் பின்வருகிற எல்லா சந்த்திகளுக்கும் வந்தது என்று வேதம் சொல்லுகிறது இதனால் உலகமே இருளுக்குள் மறைந்து கிடைந்தது என்று பார்க்கிறோம். இந்த இருளை அகற்றவே இயேசு கிறிஸ்து இந்த பாவமான உலகத்தில் மனுஷகுமாரனாக வெளிப்பட்டார் என்பதாக வேதம் நமக்கு தெளிவுப்படுத்துகிறது.

 

வேதம் சொல்லுகிறது, இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது ஏசாயா 9:2. இருளில் இருந்த ஜனங்கள் எப்படிப்பட்ட வெளிச்சத்தைப் பார்த்தனர் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

1.        பாவிகளுக்கு இரட்சிப்பு வந்தது [ மத் 1:21 ]

 

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள் அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்று மத் 1:21ல் இயேசு என்கிற நாமத்தின் அர்த்தத்தைப் பார்க்கிறோம்.

அதாவது ஆதாமின் மூலமாக பாவ சுபாவத்தைப் பெற்றிருந்த ஒவ்வொருவரையும் நீதிமானாக மாற்றுவதற்காக தேவன் அனேக தீர்க்கதரிசிகளையும் ஊழியக்காரர்களையும் மற்றும் கற்பனைகளையும் தந்தார் ஆனால் இவைகள் ஒன்றுக்கும் கீழ்ப்படியாமல் பிதாவுக்கு நாம் சத்துருக்களாய் மாறிப் போனோம் என்று வேதம் நமக்கு சொல்லுகிறது.

அதுமட்டுமல்லாமல் நாம் ஒருவேளை சொல்லலாம் ஏன் தேவன் இப்படிப்பட்ட ஜனங்களை அழிக்கவில்லை ஏனென்றால் உத்தமனாய் நடந்த தம்முடைய ஆபிரகாமிற்கு அவர் வாக்குத்தத்தம் செய்துக் கொடுத்திருக்கிறார், எப்படியென்றால் உன் நிமித்தம் உனக்கு பின்வரும் சந்ததிகளையும் ஆசீர்வதிப்பேன் என்பதாக, அதுமட்டுமல்லாமல் அவர் இரக்கமுள்ள தேவன் என்று வேதம் சொல்லுகிறது. இப்படிப்பட்ட இரக்கத்தை வெளிப்படுத்துவதற்காக தாமே இந்த உலகத்தின் பாவத்தை சுமந்து பாவிகளாகிய நம்மை நீதிமானாக மாற்றும் படியாக இப்படிப்பட்ட ஒரு அவதாரத்தை அவர் இந்த உலகத்தில் எடுக்கும்படியான சூழ்நிலை தேவனுக்கு வந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆகவேதான் யோவான்ஸ்நானன் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்று சொல்லுவதை நாம் யோவான் 1:29 ல் வாசிக்க முடிகிறது.

 

2.      நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து விடுதலை [ கலா 3:13 ]

 

மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி கிறிஸ்து நமக்காகச் சாபமாகி நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார் என்று வேதம் கலா 3:13 ல் கிறிஸ்துவின் வெளிப்பாட்டை நமக்குச் சொல்லுகிறது

இந்த நியாயப்பிரமாணம் ஜனங்கள் அதாவது இஸ்ரவேல் ஜனங்கள் பாவங்கள் பற்றிய தெரிந்து கொள்ளவும் அவைகளுக்குக் கீழ்ப்படியவில்லையென்றால் சாபம் ஏற்படும் என்பதை அறிவதற்காகவும் கொடுக்கப்பட்டது. இப்படியாக இந்த நியாயப்பிரமாணத்தின் படி செய்யாத ஒவ்வொரு இஸ்ரவேல் ஜனங்கள் மீதிலும் சாபம் குடியிருந்ததை நம்மால் பார்க்க முடிகிறது. இத்தகைய சாபத்தை ஆசீர்வாதமாய் மாற்றிக் கொடுக்கப்பதற்காக ஆசீர்வாதத்தை கொடுக்கிற இயேசு கிறிஸ்து சிலுவையில் சாப சின்னமாக மாறினார் என்று பார்க்கிறோம் ஆகவேதான் வேதம் சொல்லுகிறது,

எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே நீதிமானாக்கப்படுவதில்லை என்று ரோமர் 3:20ல் பார்க்கலாம்.

 

3.      புறகாதிகளுக்கு ஒளி வந்தது [ லூக்கா 2:30 ]

 

 

வேதம் சொல்லுகிறது, தேவன் யூதருக்கு மாத்திரமா தேவன் புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன் தான் ரோமர் 3:29

இதோ இஸ்ரவேல் ஜனங்கள் நாங்கள் தான் கர்த்தரின் பிள்ளைகள் அவர் எங்களை மாத்திரமே தெரிந்து கொண்டார் என்கிற ஒரு பட்சபாதத்தை வெளிப்படுத்தினர். ஆனால் தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்பதை வெளிப்படுத்துவதற்காக புறஜாதிகளாகிய நமக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் இடையில் இருந்த சுவரை உடைத்து நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் பண்ணினார்.

அதுமட்டுமல்லாமல் கர்த்தருடைய பலிபீடத்திற்கு செல்வதற்கும் அவருக்கு ஊழியம் செய்வதற்கும் தடையாக இருந்த எல்லா தடைகளையும் உடைந்தெரிந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆகவே முன்னே கர்த்தருக்கு தூரமாயிருந்த நம்மையும் அவர் இந்த உலகத்தில் மனுஷகுமாரனாய் பிறந்ததின் மூலமாய் சமீபமாய் மாற்றினார்.

இதனால் பலகாலமாய் நம்மை சூழ்ந்திருந்த மரண இருளின் திரையை கிழித்து பிதாவாகிய தேவனின் ஒளியை தம்முடைய பிறப்பின் மூலமாக புறஜாதிகள் மேலும் விழச் செய்தார் என்று சொன்னால் அது உண்மையாகும். ஆகவேதான் இத்தகைய காரியமானது ஏசாயா 9ம் அதிகாரத்தில் தீர்க்கதரிசினமாக சொல்லப்பட்டிருப்பதையும் நாம் பார்க்கலாம் எப்படியென்றால்? யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார் [ ஏசாயா 9:1 ]

 

4.      ஆபிரகாமின் ஆசீர்வாதம் எல்லாருக்கும் வந்தது [ கலா 3:14 ]

 

ஆதாம் இழந்து போன இடத்தை நிரப்புவதற்காக தேவன் ஒரு நீதிமானைத் தேடிக் கொண்டிருந்தார் இப்படியாக தேடிக் கொண்டிருக்கையில் ஆபிரகாமை அவர் தம்முடைய சினேகிதனாக தெரிந்து கொண்டதை நம்மால் பார்க்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல் அவர் தம்மோடு நடந்த ஆபிரகாமைப் பார்த்து சொன்ன காரியம் நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாக இரு என்பதாக [ ஆதி 17:1 ]. தேவன் சொன்னபடியே அவரும் உத்தமமாய் நடந்து காண்பித்தார் இதனிமித்தம் கர்த்தர் ஆபிரகாமையும் அவருக்கு பின்வரும் அவருடைய சந்ததியையும் ஆசீர்வதித்தார். இதனிமித்தம்  ஆபிரகாமின் ஆசீர்வாதத்திற்கு இஸ்ரவேல் ஜனங்கள் மாத்திரமே உரியவர்கள் என்று இவர்கள் நினைத்துக் கொண்டு இருந்தார்கள் ஆனால் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் அவதரித்த போது யாரெல்லாம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு அவருடைய பிள்ளையாக மாறுகிறோமோ அவர்களுக்கு மாத்திரமே சொந்தமாகிறது என்று வேதம் சொல்லுகிறது, ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும் என்று கலா 3:14 ல் படிக்கிறோம் அதுமட்டுமல்லாமல்

நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால் ஆபிரகாமின் சந்ததியாராயும் வாக்குத்தத்தின் படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள் கலா 3:29

 

5.      பூமிக்கு சமாதானம் வந்தது [ லூக்கா 2:14 ]

 

கிறிஸ்துவின் பிறப்பிற்கு பிறகுதான் பூமியிலே மெய்யான சமாதானமும் மற்றும் தேவனுக்கு மனுஷர்மேல் பிரியமும் உண்டானது என்பதை லூக்கா 2:14 லிருந்து அறிய முடிகிறது அப்படியென்றால் கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன்பு ஜனங்கள் மெய்யான சமாதானம் இல்லாமலும் மற்றும் தேவனுக்கு சத்துருக்களாகவும் இருந்ததையே வேதம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. பூமியிலே ஜனங்களை ஒழுங்கு செய்வதற்காக தேவனால் அனுப்பப்பட்ட மனுஷர்களால் மெய்யான சமாதானத்தை உருவாக்க முடியவில்லை.

ஆகவே தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு சொன்ன ஒரு ஆறுதல் என்னவென்றால்?

 

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன் என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்  உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக யோவான் 14:27. உண்மையாகவே நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு தெரியும் உலகத்தில் எந்த ஒரு மூலையிலும் எந்த ஒரு மனுஷனாலும் சமாதானத்தைப் பார்க்க முடியாது மற்றும் உருவாக்க முடியாது. ஒருவேளை உலகம் சமாதானத்தைத் தருவதாக இருந்தாலும் அவைகள் சிறிது நேரமே நிலைத்திருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம் இத்தகைய காரியத்தை நம்முடைய வாழ்க்கையிலும் பார்க்க முடிகிறது.

ஆகவே நிலையான சமாதானத்தை நம்முடைய சமாதான பிரபுவாகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் மாத்திரமே கண்டு பிடிக்க முடியும் என்பதை மறந்து விட வேண்டாம்.

எனவே ஒரு காரியத்தை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும் அது என்னவென்றால் நாம் கொண்டாடுகிற கிறிஸ்துமஸ் பண்டிகை நமக்கு சமாதானத்தை ஒருபோதும் தரமுடியாது ஆனால் கொண்டாட்டத்திற்கு காரணமான இயேசு கிறிஸ்துவால் மாத்திரமே நமக்கு சமாதானம் கிடைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

 

தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் சந்தோஷத்தினால் நிரப்புவாராக.