Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 16/07/2016

பெயர் சொல்லி அழைக்கிற தேவன்

-         சகோதரி. அனு ஃபெஸ்லின் 

 

பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு சந்தோஷமும் சமாதானமும் எப்பொழுதும் உண்டாவதாக. நம்மை சிருஷ்டித்தவரும் உருவாக்கினவருமான இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் உன்னை பேர் சொல்லி அழைத்தேன், நீ என்னுடையவன். தாயின் கற்பத்தில் தோன்றும் முன்னமே நம்மை தெரிந்துக் கொண்ட தேவன் நம் பெயரையும் அறிந்திருக்கிறார். வேதத்தில் பல மனிதர்களை தேவன் பெயர் சொல்லி அழைத்திருக்கிறார். வேதம் கூறுகிறது இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்[ஏசாயா:48:10]. உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன் கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன் என்று சொன்ன ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்றும் நாம் உபத்திரவப்படும் போது ஜெய கிறிஸ்துவாக நம்மோடிருக்கிறார். எகிப்திலிருந்த இஸ்ரவேல் ஜனங்களின் உபத்திரவத்தை பார்த்த தேவன் நம் வேதனைகளையும் அறிந்த்திருக்கிறார். எப்படிபட்ட உபத்திரவத்தின் குகையில் இருந்த மனிதர்களை தேவன் பெயர் சொல்லி அழைத்தார் என்பதைக் குறித்து நாம் வேதவசனங்கள் வாயிலாக தியானிக்கலாம்

 

1.                  சோதனையில் ஆபிரகாமை அழைத்தார்

 

நூறாவது வயதில் தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த ஏக புத்திரனும் நேச குமாரனுமாகிய ஈசாக்கை சர்வாங்கதகன பலியிட சொல்லி  ஆபிரகாமின் விசுவாசத்தை சோதித்தார். ஆபிரகாம் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் விசுவாசத்தோடு தேவனுக்கு கீழ்ப்படிந்தான். சோதனையின் மத்தியில் ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படி கத்தியை எடுத்தப் போது தேவன் ஆபிரகாமே ஆபிரகாமே என்று கூப்பிட்டார்[ஆதியாகமம்:22:11]. ஆபிரகாமை பெயர் சொல்லி அழைத்த தேவன் நீ தேவனுக்கு பயப்படுகிறவன் என்பதை அறிந்துக் கொண்டேன் என்றார். வேதம் கூறுகிறது  தேவன் தேவபக்தியுள்ளவர்களை சோதனையினின்று இரட்சிக்கிறார் [II:பேதுரு2:9]. அன்பானவர்களே நாம் சோதனையான சூழ்நிலைகளில் விசுவாசத்தை பற்றிக்கொண்டு  பொறுமையோடிருக்க கற்றுக்கொள்ள வேண்டும். இருதயம் கடினப்பட்டு தேவனுக்கு எதிராக முறுமுறுக்க கூடாது. நம்  திராணிக்கு மேலாக சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக் கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்[Iகொரிந்தியர்:10:13]. சோதனையின் மத்தியில் தேவனுக்கு பயந்து கீழ்படிந்தமையால்  ஆபிரகாம் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறதை நாம் காண்கிறோம் அல்லவா! அன்பானவர்களே  அவர் நமக்கு செய்த உடன்படிக்கையை நம் வாழ்வில் நிறைவேற்றும்படி இன்று அழைக்கிறார். அவருக்கு  பயந்து நடக்க நம்மையும் ஒப்புக்கொடுப்போமா? 

 

2.                  குழப்பத்திலிருந்த யாக்கோபை அழைத்தார்

 

  யோசேப்பு எகிப்திலே உயிரோடிருக்கிறான் என்பதை அறிந்த இஸ்ரவேல் நான் மரணமடையு முன்னே அவனை போய் பார்ப்பேன் என்று சொன்னான். பின்பு தனக்கு உண்டான யாவற்றையும் சேர்த்துக் கொண்டு பெயர்செபாவுக்கு புறப்பட்டு தேவனுக்கு பலிசெலுத்தினான். இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி:யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்; நீ எகிப்து தேசத்துக்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன். நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன்; நான் உன்னைத் திரும்பவும் வரப்பண்ணுவேன் [ஆதியாகமம்:46:1-4]. எவ்வளவு அருமையான வாக்குத்தத்தம் பாருங்கள். கானான் தேசத்தில் கொடிய பஞ்சம். எகிப்து தேசத்தில் யோசேப்பு அதிகாரியாய் இருக்கிறான். எகிப்துக்கு தன் தகப்பன் குடும்பத்தாரை அழைத்துவர யோசேப்பு வண்டிகளை அனுப்புகிறான். ஆனாலும் யாக்கோபு தன் முற்பிதாக்களை  கானானுக்கு அழைத்து வந்த தேவனை விட்டு எகிப்துக்கு போகலாமா என குழப்பத்தோடு காணப்பட்டிருக்கலாம். தேவன் உன் பிரயாணத்திற்கு தடையில்லை என்பதனை தெளிவுபடுத்தி உன்னை பெரிய ஜாதியாக்குவேன் என்று சொல்லி தைரியப்படுத்துவதையும் நாம் காணலாம். வேதம் கூறுகிறது  நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்[சங்கீதம்:32:8]. அன்பானவர்களே எகிப்துக்கு சென்ற இஸ்ரவேலை பெருகச்செய்த தேவன் நம்மோடிருக்கும் போது நாம் எதற்கும் பயப்பட தேவையில்லை.

 

3.                  வனாந்தரத்தில் மோசேயை அழைத்தார்

 

பார்வோனுக்கு பயந்து மீதியான் தேசத்தில் வாழ்ந்த மோசே தன்  மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை வனாந்தரத்தில் மேய்த்து வந்தான். அவன் ஒரேப் மட்டும் வந்த போது எரிகிற முட்செடியின் நடுவிலிருந்து தேவன் மோசே, மோசே என்று அழைத்தார் [யாத்திராகமம்:3:4-12]. நாற்பது வருஷம் வனாந்தரத்தில் வாழ்ந்த மோசேயை தேவன் இஸ்ரவேல் ஜனங்களை மீட்கவும்  வழிநடத்தவும் தலைவனாக தெரிந்துக் கொண்டார். வேதம் கூறுகிறது உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படும் போது  வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும் [ஏசாயா 32:15]. ஒருவேளை உங்கள் வாழ்க்கை கூட வனாந்தரத்தை போல வறண்டு போய் காணப்படலாம். தேவன் சொல்லுகிறார் வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்டபூமியை நீர்க்கேணிகளுமாக்கி வனாந்தரத்திலே கேதுருமரங்களையும், சீத்திம்மரங்களையும், மிருதுச்செடிகளையும், ஒலிவமரங்களையும் நட்டு, அவாந்தரவெளியிலே தேவதாரு விருட்சங்களையும், பாய்மர விருட்சங்களையும், புன்னைமரங்களையும் உண்டு பண்ணுவேன் [ஏசாயா:41:18,19]. வனாந்தரத்தில் ஆறுகளையும் உண்டாக்க வல்ல தேவனாகிய கர்த்தர்  இன்று நம்மையும் அழைக்கிறார். நாம் அவருக்கு செவிகொடுக்கும் போது மோசேயை போல நம்மையும் உயர்த்துவார் என்பதில் ஐயமில்லை.

 

4.                  தூக்கத்திலிருந்த  சாமுவேலை அழைத்தார்

 

கர்த்தருடைய வசனம் அபூர்வமாய் இருந்து பிரத்தியட்சமான தரிசனம் இல்லாதிருந்த காலத்தில் தேவாலயத்தில் தூங்கிகொண்டிருந்த சாமுவேலைக் கூப்பிட்டார்[Iசாமுவேல்:3:10-11]. சாமுவேல் இன்னும் தேவனை அறியாதிருந்தான். மூன்றாம் முறை கர்த்தர் சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டு தாம் செய்ய போகிற காரியத்தை தீர்க்கத்தரிசனமாக உரைத்தார். இஸ்ரவேலிலே தாம் செய்ய போகிற காரியத்தையும் ஏலியின் குமாராரைக் குறித்தும் சிறுவன் சாமுவேலிடம் இரகசியமாய் கூறினார். அவர் சாமுவேலோடு இருந்து அவன் சொன்ன வார்த்தைகளில் ஒன்றும் தரையிலே விழுந்து போக விடவில்லை. தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள சகல இஸ்ரவேலருக்கும் தீர்க்கத்தரிசியாகவும் நியாதிபதியாகவும் ஆசாரியனாகவும் சாமுவேலை தேவன் அபிஷேகித்து  உயர்த்தினார். வேதம் கூறுகிறது கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது  இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார் [ஆமோஸ்:3:7]. இன்றைக்கும் ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் தேவனை முழுமையாய் அறியாமல்  தூங்கிக்கொண்டிருக்கலாம். நம்மையும் தம்முடைய இரகசியங்களை தெரிவிக்கவும் அழிந்து போகும் ஆத்துமாக்களுக்காய் மன்றாடவும்  தேவன் அழைக்கிறார். இந்த கடைசி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் தூக்கத்தை விட்டு எழும்பி விழிப்புள்ளவர்களாய்  செயல்படுவோம்.

 

5.                  கவலையோடிருந்த மார்த்தாளை அழைத்தார்

 

இயேசு கிறிஸ்து மார்த்தாள் மரியாள் வீட்டுக்கு சென்றிருந்த போது மரியாள் தேவனுடைய பாதத்தில் அமர்ந்திருந்து தேவனுடைய வசனத்தை கேட்டுக்கொண்டிருந்தாள். மார்த்தாளோ பற்பல வேலைகள் செய்வதில் வருத்தமடைந்து அநேக காரியங்களைக் குறித்து கவலைப்பட்டு கலங்குகிறதைக் இயேசு கண்டு மார்த்தாளே மார்த்தாளே என்று கூப்பிட்டார். மார்த்தாளே நீ உலகக்காரியங்களை குறித்து கவலைப்படுவதை நிறுத்திவிட்டு மரியாளைப் போல தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்துகொள் என்று அழைத்தார்[லூக்கா:10:41]. இன்று மார்த்தாளைப் போல நம்மில் அநேகர் இயேசுகிறிஸ்து நம்மோடு நம் அருகிலே இருப்பதை உணராமல் உலக காரியங்களைக் குறித்து கவலைப்பட்டு கலங்குகிறோம். ஆலயத்திற்கு வந்தால் கூட தேவனை ஆராதிக்க முடியாதபடி உலகக்கவலைகள் ஆத்துமாவை அமிழ்த்துகிறதல்லவா? வேதம் கூறுகிறது கவலைப் படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்[லூக்கா:12:25].அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்துவிடுங்கள். நம்முடைய தேவைகளை ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் அவரிடம் தெரியப்படுத்துவோம். கவலைப்படுகிற ஆத்துமாக்கள் தேவனுக்காய் கனி கொடுக்க முடியாது. உலகக்கவலையாகிய முட்செடி வேதவசனமாகிய விதையை வளரவிடாமல் தடுத்து பலனற்றதாக்கிவிடும். எனவே நாம்   ஒன்றுக்கும் கவலைப்படாமல் தேவன் கொடுத்திருக்கும் விலையேறப்பெற்ற  பொக்கிஷமாகிய  வேதத்தை அனுதினமும் தியானித்து அதின்படி நடந்து தேவனுடைய ராஜ்ஜியத்தில் நல்ல பங்கை தெரிந்துக்கொள்ளுவோம்.

 

6.                  வெறுமையில் சீமோனை அழைத்தார்

 

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய சிலுவை மரணத்தைக்  குறித்து சீஷர்களிடம் பகிர்ந்து கொண்டார். ஆனால் சீஷர்களின் இருதயம் அதை அறிந்துகொள்ளவில்லை. அப்பொழுது கர்த்தர் சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன் என்று சீமோனிடம் கூறினார். அதற்கு சீமோன் ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்[லூக்கா:22:31-33]. இப்படி  சொன்ன சீமோன் ஆண்டவாராகிய இயேசு கிறிஸ்துவை மறுதலித்தான். மனுஷரை பிடிக்க தேவனால் தெரிந்துக்கொள்ளபட்ட சீமோன் பேதுரு இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்த பின் மீண்டும் தன்னுடைய பழைய தொழிலுக்கு(மீன் பிடிக்க) செல்கிறான். இயேசு கிறிஸ்து இல்லாத வாழ்க்கை அவனுக்கு வெறுமையையும் எதிர்காலத்தைக் குறித்த பயத்தையும் உருவாக்கியது. இராமுழுதும் வலையை போட்டும் மீன்கள் ஒன்றும் அகப்படவில்லை. உயிர்த்த இயேசு கிறிஸ்து  அவர்களுக்கு தரிசனமாகி வலையை வலதுபுறமாக போடுங்கள் என்றார். அவன் கீழ்படிந்தபோது   நூற்று ஐம்பத்திமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையை கரையில் இழுத்தான்[யோவான்:21:1-18]. ஆம் பிரியமானவர்களே  கிறிஸ்து இல்லாத வாழ்க்கை வெறுமை; கிறிஸ்துவோடுள்ள வாழ்க்கை நிரம்பி வழிகிற ஆசீர்வாதம். மீன் பிடிக்க சென்ற சீமோன் பேதுருவை தேவன் நீ என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று சொல்லி மனிதரை தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு கூட்டிச் சேர்க்கும் உயர்ந்த உன்னத பணிக்கு மீண்டும் அழைத்தார். விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாக சீமோன் பேதுருவை தெரிந்தெடுத்தார். வெறுமையாய் இருக்கிற நம் வாழ்க்கையும் தேவனுக்கு கீழ்படியும் போது தேவ ஆசீர்வாதத்தினால் நிரம்பி வழியும் என்பதில் சந்தேகமில்லை. அன்று சீமோன் பேதுருவை அழைத்த தேவன் இன்று தம்முடைய ராஜ்யத்திற்கு ஆத்துமாக்களை ஆதாயம் செய்யும் உன்னத பணிக்கு நம்மையும் அழைக்கிறார். பேதுருவை போல வைராக்கியமாய் எழும்பி  ஆத்துமா ஆதாயம் செய்ய நம்மையும் ஒப்புக்கொடுப்போம்.

 

7.                  தன்னை துன்பப்படுத்தின சவுலை அழைத்தார்

கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடம் ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கி தமஸ்கு புறப்பட்ட மனிதனை  சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்? என்று சொல்லி கர்த்தர் அழைத்தார். இந்த சவுலை கர்த்தர் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் தம்முடைய நாமத்தை அறிவிக்கும் பாத்திரமாக தெரிந்துக் கொண்டார்[அப்போஸ்தலர்:9:1-22]. இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு கொடுத்த கடைசிக் கட்டளை நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்[மத்தேயு:28:19]. இயேசு கிறிஸ்து பரலோகம் எடுத்துக்கொள்ளுமுன் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது என்று  சீஷர்களிடம் கட்டளையிட்டார் [லூக்கா:46-51]. எனவே இரட்சிப்பின் சுவிசேஷம் அறிவிப்பது ஒவ்வொரு கிறிஸ்தவன் மேலும் விழுந்த கடமையாயிருக்கிறது. சவுலை பவுலாய் மாற்றி புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாக தெரிந்தெடுத்த தேவன் இன்று புறஜாதிகளுக்கு இயேசு கிறிஸ்துவை அறிவிக்க நம்மையும் அழைக்கிறார். நாமும் கூட புறஜாதியார் தேவனை அறிந்துக் கொள்ள தேவன் பயன்படுத்தும் பாத்திரமாய் சாட்சியான வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுபோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே தேவனுடைய அழைப்பு மிகவும் மேன்மையானது. உபத்திரவத்தின் குகையிலே நம்மை தெரிந்து கொண்ட தேவன் அவருடைய கனமான பணிக்கு நம்மையும் அழைக்கிறார். பவுல் கூறுகிறார் உபத்திரவத்தில் பொறுமையாயிருங்கள். தகுதியில்லாத சாதாரண மனிதர்களை அழைத்து உயர்த்துகிறவர் நம் தேவன்.  நாம் அவருடைய அழைப்பை அசட்டைபண்ணாமல் அவர் சமூகத்தில் நம்மை அற்பணிப்போம். பல்வேறு சூழ்நிலைகளில்  வாழ்ந்த  தேவ மனிதர்களாகிய ஆபிரகாம், யாக்கோபு, மோசே, சாமுவேல், சீமோன் பேதுரு, பவுல்  போன்றோரை  அழைத்தார். அவர்கள் தேவன் கொடுத்த அழைப்புக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் தேவனுக்கு கீழ்படிந்து உண்மையாய் அவருடைய பணிசெய்ய தம்மை அற்பணித்தனர். எந்த சூழ்நிலையில் நாம் வாழ்ந்தாலும் தேவனுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு அவருடைய சித்தத்திற்கு கீழ்ப்படிவோம். தேவன்  உபயோகப்படுத்தத் விரும்பும் பாத்திரமாய் மாறும்படி அவர் சேவைக்காய் நம்மை அவர் கையில் ஒப்புக்கொடுப்போம். வேதம் கூறுகிறது உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்[ஏசாயா:45:3-4].பெயர் சொல்லி அழைத்த தேவன் நம் ஒவ்வொருவரையும் மேன்மைப்படுத்தி பரிபூரணமாய் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

--------------------------------------------