Tamil Christian Website

Tamil Christian Website

Posted on: 03/05/2014

போவாஸின் போர்வை யாருக்கு ?

சகோ. எட்வின் - சோஹார்

இத்தகைய போர்வையை நீங்கள் சாதாரணமாக நினைக்க வேண்டாம், ஒருவேளை நீங்கள் நினைக்கலாம், இந்த போவாஸின் போர்வையினால் எங்களுக்கு என்ன பிரயோஜனம் என்று, ஆம் உண்மையில் போவாஸின் போர்வையினால் ஒருவேளை நமக்கு குளிர் மாறலாம் அல்லது நம்முடைய மாமிச சரீரத்தின் நிர்வாணத்தை மறைக்கலாம், ஆனால் நான் உங்களுக்கு காண்பிக்கப் போகிற போர்வை, அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால், போவாஸின் மூலமாய் ரூத்திற்குக் கொடுக்கப்பட்ட ஆவிக்குரிய வோர்வை ஆகும்.

இதன் மகத்துவம் என்ன, இது ஒரு சாதாரண போர்வையல்ல, இந்த போர்வையின் மூலம் சாபம் ஆசீர்வாதமாய் மாற்றப்பட்டது, தேவனுடைய சத்துருக்கள், நண்பர்களாக மாற்றப்பட்டனர், இப்படியாக அனேக காரியங்களைக் கூறிக்கொண்டே போகலாம்,

*** முன்னுரை :

பாருங்கள், இஸ்ரவேல் ஜனங்கள் ஒருவேளை நினைத்திருக்கலாம், நிச்சயமாக இந்த போர்வை நமக்குத்தான் கிடைக்கும், ஏன் அவர்கள் அப்படி நினைக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் நினைத்தனர் நாம் மாத்திரம் தான் தேவனுடைய சொந்த ஜனங்கள், நம்மையே அவர் தெரிந்துக் கொண்டார் என்று, ஆனால் நடந்தது என்ன, இஸ்ரவேலுக்கு கிடைக்க வேண்டிய போர்வை, மோவாபிய வம்சத்தாருக்குக் கொடுக்கப்பட்டது, என்ன ஆச்சரியமான ஒரு காரியம், இதுதான் தேவனின் திட்டம், பாருங்கள், வேதத்தில் தேவன் இந்தக் குலத்தைக் குறித்து எழுதிய காரியத்தை, அம்மோனியனும், மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது, பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது என்று உபா 23:3 ல் நாம் பார்க்க முடிகிறது. ஆனால் இத்தகைய சபிக்கப்பட்ட குலத்தில் வந்த ரூத்திற்கோ இந்த விலைமதிப்பெற்ற போர்வை கிடைத்தது என்று சொன்னால் மிகையாகாது, அப்படியென்றால், தேவன் தான் சொன்னதை மீறினாரோ, இல்லவே இல்லை.

வேதம் சொல்லுகிறது, துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தை விட்டு திரும்பும் போது, அவன் நீதிமானாய் தேவனுடைய பார்வையில் தெரிகிறான். எப்பொழுது என்றால், அவன் மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக் கொள்ளும் போது, பாருங்கள் ரூத்தும், இயேசுவை தெய்வமாக கொண்ட குடும்பத்துக்கு உதவி செய்ய முன்வந்ததால், அதாவது தன்னுடைய குடும்பமாக ஏற்றுக்கொண்டதால், இயேசுவின் பிள்ளையாக மாறினாள். இத்தகைய காரியத்தை நான் வேறுவிதமாக உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன், எப்படியென்றால், இந்த சிறியரில் ஒருவனுக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீகள் என்று நாம் சுவிசேஷ அதிகாரங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

இத்தகைய வெளிப்பாடு இல்லாத ஜனங்கள் இன்றும் எருசலேமிற்கு சென்று ஜெபம் செய்வோம் மற்றும் இஸ்ரவேலுக்காக ஜெபம் செய்வோம் அப்பொழுதுதான் இந்த போர்வை நமக்கு கிடைக்கும் என்று சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அதாவது எருசலேமையும், இஸ்ரவேல் ஜனங்களையும் விக்கிரகமாக மாற்றிக்கொண்டு இருக்கின்றனர். தேவன் சொல்லுகிறார், இனி இஸ்ரவேல் என்றும், யூதர் என்றும், புறஜாதியார் என்றும் வித்தியாசம் இல்லை, ஏனென்றால் அவர் சொல்லுகிறார் நான் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், தம்முடைய பரிசுத்த இரத்தத்தினால் எல்லாரையும் ஒரே ஜாதியாக மாற்றிவிட்டேன் என்றும், யாரெல்லாம் தம்முடைய [ இயேசுவின் ] இரத்தத்தினால் கழுவப்படுகிறார்களோ அவர்கள் மாத்திரமே தேவனுடைய பிள்ளைகள் ஆவர் என்றும் அதுமட்டுமல்லாமல், இனிமேல் ஒரே ஒரு சந்ததிதான் உலகத்தில் உண்டு, அது கிறிஸ்துவின் சந்ததியே என்றும் வேதம் நமக்கு தெளிவுப்படுத்துவதை அறிய முடிகிறது. [ வாசிக்கவும்- எபேசி 2:13-22, கலா 3:27,28,29, ரோமர் 2:11 ]

மேலும், தேவன் சொல்லுகிறார், நீங்கள் என் பரிசுத்த ஆலயமாயிருக்கிறீர்கள் என்றும் நான் உங்களுக்குள்ளே உலாவி உங்கள் தேவனாயிருப்பேன், அப்பொழுது நீங்கள் என் ஜனமென்று அழைக்கப்படுவீர்கள் என்று தம்முடைய தாசனாகிய பவுலின் மூலம் 2கொரி6:16 ல் தெளிவுபடுத்தி இருப்பதை நாம் அறிய முடிகிறது.

எனக்கு அருமையான ஜனங்களே உங்களுக்கு எந்த குழப்பமும் வேண்டாம், இன்று அநேகர் இயேசு கிறிஸ்துவின் போர்வை எங்களுக்குத்தான் என்று சொல்லிக்கொள்வதை பார்க்கமுடிகிறது, இவர்களுக்கெல்லாம் இந்த போர்வைக்கிடைப்பதில்லை,

ஏனென்றால் இவர்கள் தங்களை கிறிஸ்தவர் என்றும் நீதிமான் என்றும் சொல்லுகிறார்களே தவிர தங்கள் கிரியைகளில் ஒருபோதும் இவைகளை காண்பிப்பதில்லை. ஆகவேதான் தேவன் இப்படியாக எழுதிவைத்தார், ஆயக்காரரும், வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று நாம் மத்தேயு 21:31 ல் பார்க்கலாம். இந்த போர்வை நமக்கு கிடைக்கவேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் இந்த மாதத்தின் தெய்வ செய்தி ஆகும். வாருங்கள். உங்களை போர்வைக்குள்ளாக அழைத்துச் செல்கிறேன், இந்த போர்வையை வாங்குவதற்கு நாம் ஏழுவிதமான அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும்.

1.முதல் அர்ப்பணிப்பு : தேவனை எந்த சூழ்நிலையிலும் மறுதலிக்காதவர்களாய் இருக்க வேண்டும்.

ரூத்தின் சரித்திரம் நமக்கு பலவிதமான காரியங்களை கற்றுத் தருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது, பாருங்கள், தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததி என்று அழைக்கப்பட்ட இந்த இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய மகத்துவங்களையும், வல்லமைகளையும் நேரடியாக பார்த்தவர்கள்மட்டுமல்லாமல், தங்கள் பிதாக்களை தேவன் எவ்வாறு அழைத்துவந்தார் என்கிற செய்தியை நன்றாக அறிந்திருந்தனர். ஆனால் இப்படிப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்த எலிமெலேக்கு தன்னுடைய தேசத்தில் பஞ்சம் என்று அறிந்தவுடன், ஆசீர்வாதமான இடத்தைவிட்டு விட்டு சாபமான இடத்துக்குச் செல்வதை நாம் வேதத்தின் மூலம் அறியமுடிகிறது, அதாவது மெய்யான தேவனை அவன் மறுதலித்தான் என்றே சொல்ல வேண்டும், ஏனென்றால் அவன் தேவனிடம் எதையும் கேட்கவில்லை, தானாக முடுவு எடுத்தான், எப்படியென்றால் இந்த உலகத்தின் அற்ப வாழ்க்கையை மேலாகக் கருதியதால், தேவனை அவன் மறந்து போனான், அவன் தேவனைப் பார்ப்பதற்குப் பதிலாக, தன்னுடைய பிரச்சனைகளைப் பார்த்தான், இதனால் தேவன் அவன் பார்வைக்கு மிகச்சிறியவராக தெரிந்தார், பிறகு என்ன நடந்தது என்று வேதம் நமக்கு சொல்லுகிறது, அவன் சாபமாக மாறிப்போனான், எதற்கு நகோமியை மாத்திரம் தேவன் மீதியாக வைத்தார், தேவனைவிட்டு விலகிப் போகிறவர்களின் நிலைமை என்னவாக மாறும் என்பதை உலகத்துக்கு காண்பிப்பதற்காகவே என்று எண்ணுகிறேன்.  [ ரூத் 1 ம் அதிகாரத்தை வாசிக்கவும் ] இன்று அநேக ஜனங்கள் உலகத்திலுள்ள ஆசிர்வாதங்களைத் தேடி, மோவாப் தேசத்துக்கு சாபமாக செல்வதைப் பார்க்க முடிகிறது, ஏனென்றால் இவர்கள் எல்லாரும் ஒருநாள் அதாவது உலகவாழ்க்கையே இன்பம் என்று எண்ணிக்கொள்கிறவர்கள். தேவனாகிய இயேசு சொல்லுகிறார், இந்த உலகத்தில் எனக்கு தலைசாய்க்கவே இடமில்லை, அதுமட்டுமல்லாமல் தன்னுடைய ஊழியக்காரர்களைக் கொண்டு, நம்முடைய வீடு இருக்கிற விலாசத்தையும் அதாவது பரலோகத்தை சுட்டிக்காட்டுவதை அநேக இடங்களில் அறியமுடிகிறது, ஆனால் இதை அறியாத ஜனங்கள், உலகத்தில் உள்ள அழிந்துபோகிற செல்வத்தை சபைகளில் சாட்சியாக முன்வைப்பதை நாம் பார்க்க முடிகிறது, அதுமட்டுமல்லாமல் அநேக ஊழியுக்காரர்களும் கூட, வேத வசனங்களை தவறாக சுட்டிக்காட்டி, நம்மை நரகத்துக்கு வழிநடத்துவதை அறியமுடிகிறது. இதைக் குறித்து, அப்.பவுல் என்ன சொல்லுகிறார் என்பதைப் பர்க்கலாம், அவர் சொல்லுகிறார், இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம் 1கொரி 15:19 ல் வாசிக்கலாம். ஆனால் ரூத்தைப் பாருங்கள், அவள் அந்நிய ஜாதியாய் இருந்தபோதிலும் தேவனை மறுதலிக்காதவளாய், அதாவது தன்னுடைய மாமியாரின் தேவனை தன்னுடைய தேவனாக ஏற்றுக் கொண்டதை நாம் பார்க்கமுடிகிறது,

என் அருமை ஜனங்களே, நாம் ஏன் ஆவிக்குரிய ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளமுடியவில்லை, ஏனென்றால் நாம் தேவனைப் பின்பற்றுவதற்காகப் பதிலாக மனுஷரைப் பின்பற்றுவதினால் என்று சொல்லிக்கொள்கிறேன்.

தேவன் சொல்லுகிறார்,

என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன், என்னை அசட்டைப்பண்ணுகிறவர்கள் அதாவது மறுதலிக்கிறவர்கள் அவர்களாகவே கன ஈனப்படுவார்கள் என்று, 1சாமு 2:30 ல் எழுதி வைத்திருக்கிறதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.

குறிப்பு: மறுதலித்தல் என்பது தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாததும் மற்றும் அவருடைய வார்த்தையை விசுவாசியாததும் ஆகும்.

2.இரண்டாவது அர்ப்பணிப்பு: பிறருக்கானவைகளைத் தேட வேண்டும்

ரூத்தைப் பாருங்கள், தன்னுடைய சுகத்தையோ, தன்னுடைய வாழ்க்கையைக் குறித்தோ அவள் கவலைப் படவில்லை, மாறாக தனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த நகோமியின் குடும்பம் இப்படியாயிற்றே என்று சொல்லி, தன் மாமியாருக்கு உதவியாக, அவளோடு கூட செல்ல முடிவெடுத்தாள், ஆனால் ஒர்பாளோ நகோமி சொன்ன பதிலைக் கேட்டு இனிமேல் நகோமியால் தனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை தரமுடியாது என்று நினைத்து திரும்பி சென்றாள். இன்று அநேகர் இப்படித்தான், மாமிசத்தில் யோசனை செய்து ஆண்டவரை விட்டு திரும்பிச் செல்வதைப் பார்க்கமுடிகிறது, ஆனால் ரூத்தோ பிறருக்கானவைகளைத் தேட முயற்சி செய்தாள், ஆகவே அவள் இஸ்ரவேலின் குடையின் கீழ் வரமுடிந்தது. அதாவது மெய்யான ஆசிர்வாதத்திற்கு தகுதியுள்ளவளாய் மாற்றப்பட்டாள். [ரூத் 1:17]

வேதமும் இதையே நமக்குச் சொல்லுகிறது,

அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக என்று பிலிப்பியர் 2:4 ல் வாசிக்கலாம். இதைத் தான் இயேசு கிறிஸ்துவின் சிந்தை என்று பவுல் பிலி 2:5 ல் குறிப்பிட்டுள்ளதை நாம் அறியலாம், பாருங்கள் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, அவர் தெய்வமாக இருந்தபோதிலும், தன்னுடைய ஜனங்களை பாவத்திலிருந்து விடுவிப்பதற்காகவும், பரலோகம் சேர்ப்பதற்காகவும் பூவுலகம் இறங்கிவந்தார் அதாவது தம்மையே நமக்காக அடிக்கும்படி கொடுத்தார், என்பதை மறக்க வேண்டாம்[ யோவான் 3:16, 1திமோ 1:15, 1பேது 3:18 ], இத்தகைய சிந்தையே பவுலிடம் இருந்தது என்று சொன்னால் மிகையாகாது, எப்படியென்றால் அவர் சொல்லுகிறார், என்னுடைய சகோதரர்களுக்காக நான் சபிக்கப்பட்டுப் போனால் நலமாயிருக்கும்.

என் அருமை விசுவாசிகளே நாமும் பிறருக்கானவைகளைத் தேட முயற்சி செய்வோம், தேவன் சொல்லுகிறார், உன்னிடத்தில் நீ அன்பாயிருக்கிறதுபோல பிறனிடத்திலும் அன்பாயிருங்கள் என்று கற்பனையாக மத்தேயு 22:39 ல் எழுதிவைத்திருப்பதை நாம் அறியலாம்.

3.மூன்றாவது அர்ப்பணிப்பு: உபத்திரவத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்

வேதம் சொல்லுகிறது,

ஏனெனில், கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது என்று பிலி 1:29 ல் காணலாம், அதாவது தேவனுடைய ராஜ்யத்திற்கு போக வேண்டுமானால், அநேக உபத்திரவங்களை இந்த உலகத்தில் சகித்தே ஆக வேண்டும், ஆகவேதான் பவுல் சொல்லுகிறார், நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று, அப் 14:22 ல் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கமுடிகிறது. அதுமட்டுமல்லாமல், அவர் தீமோத்தேயுவைப் பார்த்து சொல்லுகிறார், நீயும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி என்று 11தீமோ 2:3 ல் வாசிக்கலாம், மேலும் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்றும்[ யோவான் 16:33 ], நீங்கள் என் நாமத்தினால் எல்லாரலும் பகைக்கப்படுவீர்கள் என்றும் [ மத் 24:9 ] நமக்கு சொல்லுவதைப் பார்க்கலாம்.

அடுத்ததாக, ஒரு முக்கியமான காரியத்தை சொல்லுகிறேன், நம்முடைய உபத்திரவம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும், இத்தகைய காரியத்தை தேவன் தம்முடைய சீஷனாகிய பேதுருவைக் கொண்டு விளக்குவதை பின்வருமாறு பார்க்கலாம், நீங்கள் குற்றஞ் செய்து அடிக்கப்படும்போது பொறுமையோட சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு, நீங்கள் நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும் என்று, 1பேது 2:20 மற்றும் 1பேது 3:17 லும் நாம் வாசித்து தெரிந்து கொள்ளலாம். அதாவது நம்முடைய உபத்திரவம் இயேசு கிறிஸ்துவின் நிமித்தமாக வந்தால் மாத்திரமே நாம் பாக்கியவான்கள் என்பதை மறக்க வேண்டாம் [ மத் 5:10,11 ]

ரூத்தும் இப்படியாகத்தான் பாடுகளை அநுபவிக்க முடிவு எடுத்தாள், அவள் பேசிக் கொண்டுமாத்திரம் இருக்கவில்லை, தான் பேசின வார்த்தைகளை கிரியைகளில் காண்பித்தாள், முதலில் நாம் அறிய வேண்டிய ஒரு விஷயம், அவள் ஒரு பெண் என்பதை மறக்க வேண்டாம், அடித்ததாக ஒருவேளை அவள் செழிப்பான குடும்பத்தில் இருந்து வந்திருக்கலாம், ஆனால் அவள் அதைக்குறித்து கவலைப்படாமல் தன்னுடைய மாமியாரை போஷிப்பதற்காக, தெரியாத வேலையை செய்வதற்கு தனியாக செல்ல முடிவெடுத்தாள், நமக்கு தெரியும் ஒரு பெண் தனியாக சென்றால் அவளைக்குறித்து என்னவெல்லாம் சொல்லுவார்கள் ஆனால் அவளோ அதைப்பற்றிக் கவலைப்படாமல் எல்லா உபத்திரவத்தையும் அநுபவிக்க முடுவு எடுத்தாள்,

 எதற்காக போவாஸின் போர்வைக்குள் வருவதற்காக என்று சொன்னால் மிகையாகாது, வேதம் சொல்லுகிறது, அவள் தங்களை மாம்சத்திலும் திடப்படுத்துவதற்காக கதிர் பொறுக்க சென்றாள் என்று ரூத் 2:2 ல் வாசிக்கலாம்,

என் அருமை விசுவாசிகளே,

கிறிஸ்தவர்களுக்கு துன்பம் இல்லையென்று சொல்வீர்களானால் நீங்கள் வாழ்கிற வாழ்க்கை ஒரு மாயமான, பொய்யான வாழ்க்கையாகும், ஏனென்றால் தேவன் சொல்லுகிறார், நீதிமானுக்கும் அநேக உபத்திரவங்கள் உண்டு என்று நாம் சங் 34:19 ல் வாசிக்கலாம், பயப்படவேண்டாம், உபத்திரவம் நம்மை ஒன்றும் செய்ய முடியாது, ஒரு வேளை மாமிசத்தில் பலவிதமான பாடுகளை கொண்டுவந்தாலும் நம்முடைய ஆத்துமாவை அவைகளால் ஒன்றும் செய்ய முடியாது, ஏனென்றால் உலகத்தை ஜெயித்தவர் நம்மோடு உண்டு என்பதை மாத்திரம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

4.நான்காவது அர்ப்பணிப்பு: தாழ்மையை அணிந்து கொள்ள வேண்டும்

தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் கிருபையளிக்கிறார் என்று யாக் 4:6 மற்றும் 1பேது 5:5 ல் நாம் வாசிக்கலாம், இன்று அநேக கிறிஸ்தவர்கள் அழிந்து போவதற்கு காரணம் இந்த தாழ்மை என்கிற குணம் இல்லாததே காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது, பாருங்கள் சபைகளில் ஊழியக்காரர்கள் இப்படியாக சொல்வதுண்டு, தேவன் எங்களைத் தெரிந்துகொண்டார் ஆகவே நீங்கள் விசுவாசிகளாய் இருந்து எங்கள் வெளிப்பாடுகள் இல்லாத கதையை கேட்டுக் கொண்டிருந்தால்மட்டும் போதும் என்று பேசுவதுண்டு, இதன் நிமித்தமாக அநேக விசுவாசிகளின் தாலந்துகள் அழிந்து போவதற்கு இப்படிப்பட்டவர்கள் காரணமாகி கொண்டிருக்கின்றனர், இவர்களையும் பிற ஊழியக்காரர்கள் இப்படியாக மட்டம் தட்டியிருந்தால். இவர்களால் ஊழியத்திற்கு வந்திருக்க முடியுமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும், மேலும் வேதம் சொல்லுகிறது,

பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார் என்று யாக் 4:6 ல் காணலாம்,

நாம் இன்னும் தேவனாகிய இயேசுவின் தாழ்மையை அறியாததினால் இப்படியாக பேசிக்கொண்டுத் திரிகிறோம், வேதம் சொல்லுகிறது, அவர் [இயேசு] தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்,

ஆகவேதான் தேவன் அவரை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தினார் என்று பிலி 2:6-11 வரை வாசிக்கும் போது இயேசு கிறிஸ்துவின் தாழ்மையை பார்க்கமுடிகிறது.

இத்தகைய தாழ்மையைத்தான் ரூத்தும் தன்னுடைய வாழ்க்கையில் காண்பித்தாள். பாருங்கள் போவாஸ் எல்லா வித சலுகையை கொடுத்த போதிலும், அதாவது தன்னுடைய கூடாரத்தின் வாசலைத் திறந்தபோதிலும், அவள் அதை பெருமையாக எண்ணாமல், தன்னை மிகவும் தாழ்மைப்படுத்தினாள், எப்படியென்றால் நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் செய்தீரே என்று அவள் நன்றி உணர்வை காண்பிப்பதை நாம் ரூத் 2:13 லிருந்து அறிந்து கொள்ளலாம். தாழ்மை வரும் போது மாத்திரமே அத்துடன் நன்றி உணர்வும் ஏற்படும் என்பதை மறக்க வேண்டாம்.

நாமும் ரூத்தைப் போல நம்மைத் தாழ்த்துவோம், அப்பொழுதுதான் தேவனுடைய கூடாரத்தில் நுழையும் தகுதியைப் பெறமுடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வேதம் சொல்லுகிறது,

அவர் [ இயேசு ] வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார் என்றும் [ சங் 113:6 ]  கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும் தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார், மேட்டிமையானவனையோ தூரத்திலுருந்து அறிகிறார் என்றும், [ சங் 138:6 ] நாம் வேதத்தில் வாசிக்க முடிகிறது.

5.ஐந்தாவது அர்ப்பணிப்பு: உண்மை பேசுகிறவர்களாய் இருக்க வேண்டும்

சத்திய வேதம் சொல்லுகிறது, உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசிர்வாதங்களைப் பெறுவான் என்று நீதி 28:20 ல் அறியலாம். அதுமட்டுமல்லாமல், மேலும் வேதம் சொல்லுகிறது உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாயிருக்கிறார். என்று சங் 145:18 ஐ படிக்கும் போது அறிய முடிகிறது.

பாருங்கள், ரூத்தின் பெருந்தன்மையை, அவள் தன் மாமியாரிடம் ஒன்றையும் மறைத்து வைக்கவில்லை என்று வேதம் நமக்கு சொல்லுகிறது, எப்படியென்றால் அவள் எந்தந்த இடத்தில் எல்லாம் வேலைப்பார்த்தாளோ மற்றும் என்னன்ன தவறுகள் [ ஒருவேளை ] செய்தாளோ எல்லாவற்றையும் தன் மாமியாரிடம் வெளிப்படையாகச் சொல்வதை வேதத்தின் மூலம் பார்க்க முடிகிறது. இது எதைக்காட்டுகிறது என்றால் அவள் தேவனுக்குப் பயந்து


 

நடந்ததையே நமக்கு வெளிப்படுத்துகிறது, ஒருவேளை அவள் இப்படியாக நினைத்திருக்கலாம் நாம் யாரை ஏமாற்றினாலும் தேவனை ஒருபோதும் ஏமாற்றமுடியாது, அவருடைய கண்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பதை நன்றாக அறிந்திருந்தாள் [ ரூத் 2:18 ]

ஒருவேளை நாம் நினைக்கலாம், நாம் மனுஷரைதான் ஏமாற்றுகிறோம் என்று, ஆனால் தேவன் சொல்லுகிறார் நீங்கள் மனுஷருக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்கிறீர்கள் என்றும், ஆகவே நீங்கள் மனுஷரிடம் பொய் சொல்லும் போது, என்னிடமே அதை சொல்லுகிறீர்கள் என்பதையும் மறக்க வேண்டாம், வேதம் சொல்லுகிறது,

உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள் என்று மத் 5:37 நாம் வாசிக்கலாம்.

6.ஆறாவது அர்ப்பணிப்பு: கற்புள்ளவர்களாய் இருக்க வேண்டும்

இந்த கற்பு நமக்குத் தேவைத்தானா? வேதம் என்ன சொல்லுகிறது என்பதை பின்வருமாறு பார்க்கலாம், அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச் சேராயாக, உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப் போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார். என்று யாத் 3:5 ல் வாசிக்கலாம்.

பாருங்கள் தேவன் மோசையைப் பார்த்து இவ்விதமாய் சொல்லுகிறார், மோசே நீ பார்க்கிற தேவனாகிய நான் [ கர்த்தர் ] கற்புள்ளவர் அதாவது பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்பதை மறக்க வேண்டாம், ஆனால் உன்னுடைய பாத்திரமோ முழுவதும் பாவத்தினால் நிறைந்திருக்கிறது, ஆகவே முதலில் உன் பாவசரீரத்தை கழற்றிப்போடு, பின்பு என்னிடம் வா என்பதே இந்த வசனத்தின் அர்த்தம், மோசேயும் தன்னுடைய பாவத்தை சுமந்துவந்த பாதரட்சையாகிய பாவசரீரத்தை கழற்றிப் போட்டான் என்று வேதம் நமக்கு காண்பிக்கிறது

மேலும் வேதம் சொல்லுகிறது,

பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிக்க முடியாது என்று எபி 12:14 ல் வாசிக்கலாம்.

உலகப்பிரகாரமான நாம் நம்முடைய பிள்ளைகள் ஒழுக்கமுடன் வாழவேண்டும் என விரும்பும் போது நம்மை உண்டாக்கின பரிசுத்தர் எவ்வளவு அதிகமாக நம்மிடம் எதிர்பார்ப்பார்,

ஆகவேதான் அப்.பவுல் சொல்லுகிறார்,

நாம் கற்புள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் கர்த்தராகிய இயேசு தம்மைதாமே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார் என்று எபே 5:27 ல் சுட்டிக் காட்டுகிறார், எதற்காக அவர் வரும் போது நாம் கைவிடப்பட்டு விடக்கூடாது என்பதற்காகதான் என்று சொல்லிக்கொள்கிறேன். 

பாருங்கள் ரூத்தும் இத்தகையக் காரியத்தில் மிகவும் கவனமுடன் இருந்தாள் என்று வேதம் நமக்கு சொல்லுகிறது, ரூத் ஒரு இளம்விதவையாக இருந்தபோதிலும் அவள் வாலிபர்களைத் தேடிப் போகவில்லை மற்றும் போவஸிடம் கிடைத்த தயவை தவறாகப் பயன்படுத்த முயலவும் இல்லை, மாறாக அவள் தன்னை கற்புள்ள கன்னிகையாக தேவனுக்கு முன்பாக காண்பித்ததை நாம் அறிந்து கொள்ள முடிகிறது, எப்படியென்றால் போவாஸ் புசித்து குடித்து இருந்த போதிலும், அவன் செல்வந்தன் என்றும் அறிந்தும் அவனிடம் அவள் மிகவும் நேர்த்தியாக நடந்து கொண்டாள் என்று வேதம் சொல்லுகிறது, இதை அறிந்த போவாஸ் இப்படியாக சான்றிதழ் கொடுக்கிறார், மகளே ,நீ கர்த்தரால் ஆசிர்வதிக்கப்படுவாயாக, நீ தரித்தரும், ஜசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப் பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது என்று சொன்னதாக நாம் ரூத்3:10 ஐ படிக்கும் போது அறியலாம்.

என் அருமை விசுவாசிகளே,

ஒருவேளை நீங்கள் நினைக்கலாம் நாம் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறந்தவுடனே பரலோகம் சென்றுவிடலாம் என்றும் அது தவறான கருத்தாகும், மாறாக நாம் பெற்ற இந்த இரட்சிப்பை கெட்டுப்போகாமல் கடைசிவரைக்கும் பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும், அதாவது கடைசி வரை கற்புள்ளவர்களாய் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் மாத்திரமே பரலோகம் செல்ல முடியும் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். வேதம் சொல்லுகிறது,

முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்- மத் 24:13

கவலைப்பட வேண்டாம் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மைப் பரிசுத்தப் படுத்துவார்.

7.கடைசி அர்ப்பணிப்பு: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களாய் இருக்க வேண்டும்.

வேதம் சொல்லுகிறது,

அவராலேயன்றி [ இயேசு கிறிஸ்து ] வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான் அப் 4:12

ரூத்தைப் பாருங்கள், அவளிடம் இத்தகைய குணநலன்கள் வருகிறதற்குக் காரணம் என்னவென்று சிந்தித்துப் பார்த்தால், அவள் அற்பமாக எண்ணப்பட்ட, தேவனால் வெறுக்கப்பட்ட சந்ததியைச் சார்ந்தவளாய் இருந்தபோதிலும், அவள் செய்த ஒருகாரியம், மனந்திரும்பி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டாள் எப்படியென்றால் அவள் நகோமியைப் பார்த்து இவ்விதமாய் சொன்னாள், உம்முடைய தேவன் என்னுடைய தேவன், இனி நான் உம்மை விட்டு திரும்பி போவதில்லை, உம்முடைய இரட்சிப்பின் கூடாரம்தான் என்னுடைய வீடு என்பதை அவள் வெளிப்படையாக சொல்வதை நாம் ரூத் 1:16,17 ஐ படிக்கும் போது அறிந்து கொள்ள முடிகிறது, அதாவது தன்னுடைய இருதயத்தில் விசுவாசித்து, வாயினாலே அறிக்கை செய்தாள் என்றுதான் சொல்ல வேண்டும், ரோமர் 10:9,10 ம் வசனங்களும் இந்த காரியத்தைத்தான் சுட்டிக் காட்டுகிறது என்பதை மறக்க வேண்டாம்.

இப்படியாக ஒரு மனுஷன் தேவனாகிய இயேசுவின் கீழ் வரும் போது, அவனுக்கு தேவனுடைய வழிகள் வெளிப்படுத்தப்படுகிறது, அதாவது இரட்சிப்பின் வீட்டிற்கு செல்வதற்கான பாதை அவனுக்குக் கொடுக்கப்படுகிறது. வேதம் இதைக் குறித்து என்ன சொல்லுகிறது, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார் என்று சங் 25:12 லும் மேலும், தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் என்று பிலி 2:13 லும் வாசித்து மேலே சொல்லப்பட்டதற்கான உண்மையை புரிந்து கொள்ளலாம்.

இப்படியாக ரூத் தன்னை தேவனுக்கு அர்ப்பணித்தாள், இதன் விளைவு அவள் தேவனுடைய இரட்சிப்பின் கூடாரத்தில் இருக்கிறவர்களின் பட்டியலில் இடம் பெற்றாள் என்பதை மத் 1 ம் அதிகாரத்தை வாசிக்கும் போது அறிந்து கொள்ளலாம்.

எனக்கு அருமையான சகோதர, சகோதரிகளே

போவாஸாகிய இயேசு கிறிஸ்துவின் போர்வை நமக்கு மூடப்படவேண்டுமா, ரூத்தைப் போல அர்ப்பணிப்புள்ளவர்களாய் மாறுங்கள், அல்லது இன்னும் இப்படியாக சொல்லிக் கொண்டிருக்க போகிறீர்களா? நான் எருசலேமிற்கு சென்று வாங்குவேன் அல்லது இஸ்ரவேல் ஜனங்களிடம் கடன் கேட்பேன் என்று, ஏமாந்து போய் விடாதீகள், ஏனெனில் இன்னும் இஸ்ரவேலில் அநேகருக்கு இந்த விலைமதிப்பெற்ற போர்வை இல்லை என்று சொல்லி முடிக்கிறேன்.


 

குறிப்பு:

இந்த விலைமதிப்பெற்ற போர்வையின் நோக்கம் எல்லாருடைய நிர்வாணத்தையும் மூடுவதுதான், அதற்காகத்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்தார் என்பதை மறக்க வேண்டாம், இந்த போர்வை உங்களுக்கு வேண்டுமானால் ஆணடவராகிய இயேசு கிறிஸ்துவிடம் மாத்திரம் செல்லுங்கள், ஏனென்றால் வேறு யாரிடம் சென்றாலும் இந்த போர்வையின் ஆசிர்வாதத்தைச் சொல்லி பணம் வசூலிப்பார்கள் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

SC என்றும் BC என்றும்  MBC என்றும்  OC என்றும் வித்தியாசமே இல்லை எல்லாரும் தேவனாகிய இயேசுவின் பிள்ளைகள் என்பதை மறக்க வேண்டாம். ஆகவே எல்லாருக்கும் இந்த போர்வைக் கிடைக்கும் என்று சொல்லி போவாஸின் போர்வையை முடிக்கிறேன்.

தேவனாகிய இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவரையும் இந்த செய்தியை வாசிப்பதின் மூலம் ஆசிர்வதிப்பாராக.