Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 11/06/2016

கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகிறான்?

 Bro. Edwin (Sohar - Oman)

 

1.தன்னுடைய கைகளின் பிரயாசத்தை சாப்பிடுவான்

2.பாக்கியமும் நன்மையும் பெருகும்

3.கனிதரும் திராட்சச் செடி உண்டாயிருக்கும்

4.ஒலிவமரக்கன்றுகள் உண்டாயிருக்கும்

5.சீயோனில் இருந்து ஆசீர்வாதம் உண்டாகும்

6.எருசலேமின் வாழ்வைக் காண்பாய்

7.பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பாய்

8.சமாதானத்தைக் காண்பாய்  சங் 128:1-6

முன்னுரை:

இன்று ஜனங்கள் எப்படியாவது இந்த உலகத்தில் பணக்காரனாய் வாழ வேண்டும் என்பதற்காக பலவிதமான காரியங்களை அவர்கள் மேற்கொள்வதை பார்க்க முடிகிறது. இன்னும் சிலர் அனேக கிறிஸ்தவ சாட்சிகளைக் கேட்டு விட்டு அதிக பணத்தை ஊழியக்காரர்களுக்கு காணிக்கையாக அனுப்புவதை நம்மால் பார்க்க முடிகிறது. இன்னும் சிலர் தங்களுடைய பணத்தை வட்டிக்கு கொடுத்து அதின் மூலமாய் எப்படியாவது அதிக பணத்தை ஈட்டி விட வேண்டும் என்று திட்டம் போடுவார்கள். மற்றும் சிலர் ஓடி ஓடி உழைத்து அதாவது தாங்கள் நல்ல ஆகாரங்கள் ஒன்றையும் சாப்பிடாமல் பணத்தை சேகரித்து வைப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இவர்களுடைய முடிவு என்னவாக இருக்கிறது என்று பார்ப்பீர்களானால்

1.இவர்கள் நேசிக்கிற உலகமே இவர்களை ஏமாற்றி விடுகிறது

2.தேவனுக்கு பகையாளியாக மாறி விடுகிறார்கள்

3.நோய்களை அதிகமாக சேர்த்து வைக்கிறார்கள்

இப்படியாக இன்றைய சமுதாயம் அழிந்து கொண்டிருப்பதை நம்மால் ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது.

ஆனால் உங்களுக்கு நான் காட்டப் போகிற ஆசீர்வாதம் என்னவென்று வேதத்தின் மூலம் பின்வருமாறு பார்க்கலாம்.

இதற்கு வேதம் நமக்கு காட்டுகிற நிபந்தனை என்னவென்றால்,

ஒவ்வொரு நாளும் கர்த்தருக்குப் பயந்து வாழ வேண்டும்

அப்பொழுது மாத்திரமே பின்வரும் ஆசீர்வாதங்கள் நம்முடைய வாழ்க்கையில் சொர்க்கத்தில் இருந்து மழையாக பெய்யும் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை.

கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்கு வரும்

1.முதல் ஆசீர்வாதம்: கைகளின் பிரயாசத்தைச் சாப்பிடுவான்

வேதத்தில் ஆபிரகாம் என்கிற ஒரு தேவ மனுஷனைக் குறித்துப் படிக்கிறோம், பாருங்கள் 75 ஆம் வயதில் தேவனைச் சார்ந்து எல்லாவற்றையும் அதாவது தனக்கு இருந்த எல்லா உலக செல்வங்களையெல்லாம் விட்டு விட்டு தேவனுக்குப் பயந்து வீட்டை விட்டு வெளியேறினான் . தேவனை நம்பி வெளியே வந்த ஆபிரகாமிற்கு என்ன நடந்தது, ஆசீர்வாதங்கள் வந்து குவிந்ததோ? இல்லை மாறாக ஒவ்வொரு நாளும் அவருடைய வாழ்க்கையில் வனாந்திரத்தை மட்டுமே பார்க்க முடிந்தது, எப்படிப்பட்ட வனாந்திரம்

1.பஞ்சம் வாழ்க்கையில் வந்தது [ ஆதி 12:10 ]

2.தேவன் விரும்பாத தேசத்திற்கு செல்ல நேர்ந்தது [ ஆதி 12:10 ]

3.எகிப்து தேசத்தில் பொய் சொல்ல நேர்ந்தது [ ஆதி 12:18 ]

4. தன் சகோதரரை இழக்க நேர்ந்தது

5.வயது சென்ற போதும் குழந்தை இல்லாதவராய் இருந்தார்

6.உலக ஜனங்களின் நகைப்புக்கு ஆளானான்

7.அடிமைப் பெண்ணின் நிமித்தம் பிரச்சனை

இப்படியாக பலவிதமான துன்பங்களை அவர் மேற்கொள்ள நேரிட்டது.

இன்று அனேகர் எந்தவிதமான பிரயாசமும் இல்லாமல் தங்கள் கைகளின் பிரயாசத்தை எடுக்க விரும்புவதுண்டு ஒரு காரியத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள், கிறிஸ்தவ வாழ்க்கையில் நிலையான ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். என்று விரும்புகிறவர்கள் அதற்கான பாடுகளுக்குள்ளாக கடந்து செல்ல வேண்டும். ஏனென்றால் பாடுகள் இல்லாமல் ஆசீர்வாதம் இல்லையென்று வேதம் நமக்கு சொல்லுகிறது. அதாவது நாம் இந்த உலகத்தில் முழுமையாக மரிக்க வேண்டும் அப்பொழுது மாத்திரமே மிகுந்த பலன் கிடைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

பாருங்கள் இப்படியாக பிரயாசத்தை அனுபவித்த ஆபிரகாம் நூறாவது வயதில் தேவனுடைய வாக்குத்தத்திற்கு அதிகாரியாக மாறினார். இதற்காக அவர் காத்திருந்த நாட்கள் 25 வருஷம் என்று ஆதியாகம் 12ம் அதிகாரம் முதல் 21 ஆம் அதிகாரம் வரை வாசிக்கும் போது அவர் பெற்ற ஆசீர்வாதத்தை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

தேவனுக்கு உண்மையாக வாழ்வதினால் பிரச்சனைகள் வருகிறது என்று கவலைப்பட வேண்டாம் இதற்குப் பின்னாடி 100 மடங்கு ஆசீர்வாதம் காத்திருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

2.பாக்கியமும் நன்மையும் உண்டாகும்

வேதம் சொல்லுகிறது, நோவா என்கிற மனுஷன் தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தார் [ ஆதி 6:9 ], எப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர் தேவனோடு சஞ்சரித்தார் என்று பார்ப்பீர்களானால் அது மிகவும் ஆச்சரியமானதாய் நமக்குத் தோன்றும் பாருங்கள்.

நோவாவின் காலத்து மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகியிருந்த காலம் அதுமட்டுமல்லாமல் அவன் இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததாக காணப்பட்ட காலத்திலே நோவா என்கிற மனுஷனுடைய இருதயமோ தேவனோடு இடைப்பட்டுக் கொண்டிருந்தது என்று வேதம் நமக்கு 6 ஆம் அதிகாரத்தில் தெளிவுப்படுத்துகிறது. இதனால் என்ன நடந்தது எல்லா மனுஷரும் பூமியிலே சாபமாக மாறினார்கள் அதுமட்டுமல்லாமல் அவர்கள் தேவனுக்குப் பயந்து வாழாததினால் தேவ கோபம் அவர்களை ஜலத்தினால் முற்றிலும் நிக்கிரகமாக்கிப் போட்டது என்று படிக்கிறோம். ஆனால் நோவாவுக்கோ தேவனுடைய கண்களில் தயவு கிடைத்தது. இதனால் அவர் பூமியிலே ஆசீர்வாதமான மனுஷனாக மாற்றப்பட்டார். என்று பார்க்கிறோம். மேலும் அவர் பூமியின் நன்மையினால் நிரப்பப்பட்டு வேதத்தில் சாட்சியாக எழுதப்பட்டிருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. எனவே நாமும் இந்த பூமியிலே மாத்திரமல்ல பரலோகத்திலும் ஆசீர்வாதமாய் மாறவேண்டுமானால் தேவனுக்குப் பயந்து நடக்கிற ஒரு வாழ்க்கைக்குள்ளாக நம்மை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் அப்பொழுது மாத்திரமே தேவன் தரும் நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

3.கனிதரும் திராட்சக் கொடி உண்டாயிருக்கும்

ஒரு ஆவிக்குரிய மனுஷனுடைய வாழ்க்கை கனி கொடுக்கிற ஒரு மரமாக வளரவேண்டும் அப்பொழுது மாத்திரமே அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் அவன் ஆவி வளர்ந்து கொண்டிருக்கிறது அதாவது தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான் என்பதாக அர்த்தமாகும். அவன் ஒவ்வொரு நாளும் தேவனோடு சஞ்சரிக்க வேண்டுமானால் எப்படி திராட்சச் செடியில் கனி வளருவதற்கு கொடி எவ்வளவு அவசியமோ அதேபோல அவனுடைய கனி வெளிப்பட வேண்டுமானால் அந்த மனுஷனுக்கு அபிஷேகம் என்கிற கொடி மிகவும் அவசியமானதாய் இருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இன்றைக்கு அனேகருடைய ஆவிக்குரிய வாழ்க்கை எப்படி ஆரம்பமானதோ அதேபோலவே இன்றும் எந்தவித மாற்றமும் இல்லாமல் காணப்படுகிறது இதற்குக் காரணம் அவர்களுடைய அபிஷேகம் என்கிற கொடி வளராததே ஆகும். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையி;ல் உருவாகிற கொடி வளரவேண்டுமானால் அந்த கொடி இயேசு என்கிற செடியோடு ஒட்டப்பட்டிருக்க வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் அது கனி கொடுக்காத ஒரு காட்டுக் கொடியாய் போய் விடும் என்பதை மறந்து விடாதீர்கள் [ யோவான் 15:5-8 ]

வேதம் சொல்லுகிறது, நானே திராட்சச் செடி நீங்கள் கொடிகள் ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால் அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான் என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக் கூடாது [ யோவான் 15:5 ]

பாருங்கள் லோத்தின் மனைவியை அவள் உலகம் என்கிற செடியோடு தன்னை ஒட்ட வைத்தாள் ஆகவே அவள் கனி கொடாத கொடியாய் மாறிப்போனதை நாம் ஆதியாகமம் 19:26ல் வாசிக்க முடிகிறது.

4.ஒலிவமரக்கன்றுகள் உண்டாயிருக்கும்

நாம் தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழும் போது மட்டுமே நம்முடைய பிள்ளைகள் நம்முடைய குடும்பம் எங்கிற தோட்டத்தில் ஒலிவமரக் கன்றுகளாக மாறுவார்கள். அப்படியில்லாமல் நாம் தேவனோடு உறவாடாமல் உலகத்தோடு ஒவ்வொரு நாளும் உறவாடிக் கொண்டிருப்போமானால் நம்முடைய பிள்ளைகள் நம்முடைய தோட்டத்தை கெடுத்துப் போடுகிற முள் செடியாய் மாறி விடுவார்கள் என்பதை மறந்து போகாதீர்கள்.

நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தார். ஆகவேதான் அவருடைய மகன் ஈசாக்கும் தன்னுடைய தகப்பனைப் போல தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ்ந்தார் அதாவது ஈசாக்கு தன்னுடைய தகப்பனுடைய தோட்டத்தை இன்னும் பெருக்குகிற ஒரு ஒலிவமரக்கன்றாக மாறிப் போனார் எப்படியென்றால் தன்னை பலியிடக் கொண்டு போன தகப்பனைப் பார்த்து ஈசாக்கு எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அவருக்குக் கீழ்ப்படிந்து தன் தகப்பனைப் போல தன்னையும் தேவனுக்கு உகந்த பலியாக ஒப்புக் கொடுத்தார். ஏனென்றால் ஆபிரகாமின் தேவன் என்று அழைக்கப்படுவது என்பது தேவன் ஆபிராகாமின் கீழ்ப்படிதலுக்கு கொடுத்த வெகுமதி ஆகும்.

ஆகவேதான் தேவன் தம்முடைய தாசன் தன் மகனால் தவறாக எண்ணப்படாதப்படிக்கு அவனுக்கு தேவன் ஒரு நல்ல இருதயத்தை கொடுத்தார் என்பதுதான் உண்மை ஆகும் [ ஆதியாகமம் 22 ]

இன்று நம்முடைய பிள்ளைகள் நாம் ஒன்று சொன்னால் அவர்கள் ஐந்தாக தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதற்குக் காரணம் நாம் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் வாழ்ந்துக் கொண்டிருப்பதே ஆகும். பாருங்கள் சாலமோன் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை ஆகவே அவருடைய மகன் ரெகொபெயாமும் கீழ்ப்படியாமல் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போனான் என்று நாம் 1இராஜாக்கள் 12 ஆம் அதிகாரம் 4 மற்றும் 14 ஆம் வசனங்களை வாசிக்கும் போது தேவனுக்கு பயப்பட்டாத மனுஷன் மற்றும் அவனுடைய சந்ததியும் எப்படியிருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

நம்முடைய பிள்ளைகள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று விரும்புகிற நாம் முதலாவது தேவனுக்குப் பயந்து அவருக்கு பிரியமான ஒரு வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்வோம்.

5.சீயோனியிலிருந்து ஆசீர்வாதம் உண்டாகும்

வேதம் சொல்லுகிறது,

கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும் அதனோடே அவர் வேதனையைக் கூட்டார் என்று நீதி 10:22ல் பார்க்கிறோம்.

நமக்கு எப்படிப்பட்ட ஆசீர்வாதம் வேண்டும் வேதனையைத் தருகிற ஆசீர்வாதமா அல்லது வேதனையில்லாத ஆசீவாதமா? பாருங்கள் சிலருடைய வாழ்க்கையில் ஆசீர்வாதங்கள் அதாவது உலக ஆசீர்வாதங்கள் குவிந்து கிடக்கும் ஆனால் இவைகளில் ஒன்றையும் அனுபவிக்காதப்படி அவர்களுடைய வாழ்க்கை அமைந்திருக்கும் எப்படியென்றால் சிலர் தங்களுடைய செல்வத்தை சந்தோஷமாக அனுபவிக்காதப்படி அவர்களுடைய வாழ்க்கையானது நோய் என்கிற சங்கிலியினால் கட்டப்பட்டு ஒரு மூலையில் இருந்து கொண்டு எல்லாவற்றையும் பார்த்து கண்ணீர் வடிப்பார்கள். இதற்குக் காரணம் இவர்கள் தங்களுடைய வாலிபப் பிராயத்தில் சிருஷ்டிகரை நினையாமல் தேவன் சிருஷ்டித்தவைகளை நோக்கி ஓடிக் கொண்டிருந்ததே இதற்குக் காரணம் ஆகும்.

வேதம் சொல்லுகிறது, முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தைத் தேடுங்கள் அப்பொழுது இவைகளெல்லாம் கூட கொடுக்கப்படும் என்று மத்தேயு 6:33 நமக்கு சொல்லுகிற இந்த விலையேறப் பெற்ற பொக்கிஷத்தை இருதயத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

பாருங்கள் இத்தகையை வசனத்தை நன்றாக உட்கொண்ட நம்முடைய பிதாவகிய ஆபிரகாம் செய்த காரியம் எல்லாருக்கும் நன்றாக தெரிந்த ஒரு சம்பவமாகும். எப்படியென்றால் அவர் தன்னுடைய சகோதரனாகிய லோத்தை அன்னிய ராஜாக்காள் சிறைப் பிடித்துக் கொண்டு போன போது ஆபிரகாம் அவர்களுக்கு விரோதமாக போராடி தன்னுடைய சகோதரனை மீட்டுக் கொண்டு திரும்பும் போது அவருக்கு எதிர் கொண்டு வந்த சோதோமின் ராஜா சொன்ன காரியம் எல்லாருக்கும் தெரிந்ததாகும்.

சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி ஜனங்களை எனக்குத்தாரும் பொருட்களை நீர் எடுத்துக் கொள்ளும் என்றான். அதற்கு ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதப்படிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சைகளின் வாரையாகிலும் உமக்கு உண்டானைவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக் கொள்ளேன் என்றும்

வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன் என்று சொன்னதாக நாம் ஆதியாகமம் 14:21-23 வரை வாசிக்கும் போது ஆபிரகாம் உலகத்தில் வருகிற ஆசீர்வாதத்தை விரும்பாமல் சீயோனியிலிருந்து வருகிற நிலையான ஆசீர்வாதத்தையே விரும்பினார் என்று வேதத்திலிருந்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

யாரெல்லாம் தேவனுக்குப் பயந்து வாழுகிறார்களோ அவர்களை பார்த்து வேதம் சொல்லுகிறது, கர்த்தர் சீயோனியிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார் என்பதாக சங்கீதம் 128:5 [முப]

6.எருசலேமின் வாழ்வைக் காண்பாய்

ஜீவனுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்புகிற நாம் ஜீவனில்லாத இடத்திலிருந்து குடிபெயர்ந்து ஜீவனைக் கொடுக்கிற எருசலேமிற்குள் நாம் குடியேற வேண்டும் இது எப்பொழுது நடக்குமென்றால், வேதம் சொல்லுகிறது,

என்னவென்றால் கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்

நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும் இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைப் பண்ணப்படும் ரோமர் 10:9,10

பாருங்கள் ரூத் என்கிற பெண்மணியானாவள் மோவாபிய குலத்தைச் சார்ந்தவள் வேதத்தின் படி இந்த சந்ததியார் தேவனால் சபிக்கப்பட்டவர்கள் என்று பார்க்கிறோம் [ உபாகமம் 23:3 ] ஆனால் அப்படிப்பட்ட சந்ததியில் வந்த ரூத்திற்கோ தேவனுடைய கண்களில் தயவு கிடைத்தது மாத்திரமல்ல அவருடைய சரீத்திரம் வேதத்தில் பதிக்கப்பட்டுள்ளதை நம்மால் எப்படி மறக்க முடியும் இத்தகைய காரியம் எப்படி நடந்தது. தன் கணவனை இழந்த நகோமி பிற்பாடு தன்னுடைய பிள்ளைகளையும் இழந்து போனாள் இதனால் பாதிக்கப்பட்ட நகோமி தன்னுடைய பிள்ளைகளின் மனைவிகளைப் பார்த்து சொன்ன ஒரு காரியம் நான் எருசலேமிற்கு போகப் போகிறேன் ஆகவே நீங்கள் என்னை விட்டு பிரிந்து சென்று உங்களுடைய வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதாக அவளுடைய மருமகளில் ஒருத்தியாகிய ஒர்பாளோ அவளை விட்டு பிரிந்து போனாள் ஆனால் ரூத் என்ன செய்தாள்

வேதம் சொல்லுகிறது, அதற்கு ரூத் நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மை விட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து என்னோடே பேச போவதைக் குறித்து என்னோடே பேச வேண்டாம். நீர் போகும் இடத்திற்கு நானும் வருகிறேன் நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன் உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம் உம்முடைய தேவன் என்னுடைய தேவன் என்று ரூத் 1:16ல் ரூத் எப்படி ஜீவனுள்ள எருசலேமின் வாழ்வைக் கண்டுக் கொண்டாள் என்பதை பார்க்க முடிகிறது.

நாம் ஏன் ஜீவனுள்ள இயேசு கிறிஸ்துவின் வாழ்வை பார்க்க முடியவில்லையென்றால் வேதம் சொல்லுகிற இரட்சிப்பிற்குள்ளாக நாம் இன்னும் வரவில்லை என்பதே அர்த்தமாகும்.

7. பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பாய்

ஆபிரகாம் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நடந்ததை நிரூபிக்கும்படியாக தேவன் ஆபிரகாமை சோதித்தார் என்று வேதத்தில் பார்க்கிறோம் ஆபிரகாமும் தேவனுடைய சோதனையில் வெற்றி பெற்றார் எப்படியென்றால்

அப்பொழுது அவர் பிள்ளையாண்டான் மேல் உன் கையை போடாதே அவனுக்கு ஒன்றும் செய்யாதே நீ அவனை உன் புத்திரன் என்றும் உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக் கொடுத்தப்படியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார் [ ஆஅதியாகமம் 22:12 ] இப்படியாக தேவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் காண்பித்த ஆபிரகாமிற்கு தேவன் செய்து கொடுத்த வாக்குத்தத்தம் என்னவென்றால் ஆபிரகாமே உன் சந்ததி ஈசாக்குடன் முடிந்து போவதில்லை நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும் உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள் என்று ஆதியாகம்ம் 22:17 ல் ஆபிரகாம் தன்னுடைய பிள்ளைகளையும் பிள்ளைகளின் பிள்ளைகளையும் பார்க்கப் போகிற பாக்கியத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டதையும் நம்மால் வேதத்தில் இருந்து அறிகிறோம்.

எனக்கு வருகிற என் சுதந்தரத்தையும் என்னுடைய சுதந்தரத்தின் பிள்ளைகளையும் பார்ப்பேன் என்று விசுவாசமாக சொன்னால் போதாது அத்தகைய விசுவாசத்தைக் காண்பிக்கும் பொருட்டாக நம்முடைய வாழ்க்கை தேவனுக்குப் பிரியமாய் இருக்க வேண்டும்.

8.சமாதானத்தைக் காண்பாய்

தேவன் சொன்னார்,

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன் என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக யோவான் 14:27

இன்று அனேகர் சமாதானத்தை தேடி நிலையில்லாத இடத்தை தேடி ஓடுவதுண்டு பாருங்கள் அநீதியின் நிமித்தம் சமாதானத்தை இழந்து போன ஜனங்கள் தங்களுக்காக இந்த உலகத்தில் நியமிக்கப்பட்டிருக்கிற காவலாளிகளிடம் சென்றால், தங்களுக்கு ஒரு நிலையான சமாதானம் கிடைக்கும் என்பதாக எண்ணுவார்கள் ஆனால் என்ன நடக்கிறது இந்த காவலாளிகள் இவர்களைக் காட்டிலும் பணம் வாய்ந்த மனுஷனிடம் இருந்து லஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு இவர்களுக்கு விரோதமாக எழும்புவதை நாம் பார்க்க முடிகிறது.

ஆனால் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார் என்னிடத்திற்கு வாருங்கள் நான் நிலையான பட்சபாதமில்லாத சமாதானத்தை தருவேன் என்பதாக அவர் வாக்குத்தத்தம் செய்கிறார் இப்படிப்பட்ட சமாதானம் நமக்கு வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்

வேதம் சொல்லுகிறது, துன்மார்க்கத்தை விட்டு மனந்திரும்பி தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ வேண்டும் எப்படியென்றால்

நீங்கள் மனம் பொருந்தி செவிக் கொடுத்தால் தேவனுடைய சமாதனாத்தைக் காண்பீர்கள் ஏசாயா 1ஆம் அதிகாரம்.

அதுமட்டுமல்லாமல் வேதம் சொல்லுகிறது, துன்மார்க்கனுக்கு சமாதானம் இல்லை ஏசாயா 57:21

நம்மிடத்தில் தெய்வீக சமாதானம் இல்லையென்றால் நாம் தேவனுக்குப் பிரியமில்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமாகும்

எனக்குப் பிரியமான ஜனங்களே நம்முடைய வாழ்க்கையில் மேலே சொல்லப்பட்ட எல்லா ஆசீர்வாதங்கள் காணப்படுகிறதா அல்லது வேதம் சொல்லாத காரியங்களை ஆசீர்வாதம் என்று சொல்லி நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமா? சிந்தித்துப் பாருங்கள். முதலாவது ஆசீர்வாதம் என்றால் என்ன? மெய்யான ஆசீர்வாதம் என்பது என்ன? இப்படிப்பட்ட ஆசீர்வாதம் எங்கிருந்து வருகிறது என்பதை தெளிவாக வேதத்திலிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.

வேதம் சொல்லுகிறது, கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் சங்கீதம் 128:1.

தேவனுக்கு முன்பாக பாகியவானாய் இருப்பதற்கு மறந்து விடாதீர்கள்.

தேவன் தாமே நம்வொருவரையும் பாக்கியவானாய் மாற்றுவராக. ஆமென்.