Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 29/09/2012

Download this article in PDF

Download Tamil Font

 

வேதாகம ஆட்சி முறைகளின் காலங்கள்  (  Biblical Dispensations  )

2 தீமோ 2:15 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.

நம் தேவன், “ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுடைய தேவன்” என்று அழைக்கப்படுகிறார் ( ஆதி 3:6; அப் 3:13 ). தேவன், அவர்களின் தேவன் என்று அழைக்கப்படுவதில் பெருமை அடைகிறார் ( எபி 2:11; 11:16 ). ஆபிரகாம், தேவனுடைய சிநேகிதன் ( யாக் 2:23 ) விசுவாசிகளின் தகப்பன் ( கலா 3:7 ) என்று அழைக்கப்படுகிறார்.

ஆனாலும், நாம் வேதாகமத்தில் பார்க்கும்போது, ஆபிரகாம் தனது தகப்பனாரது மற்றொரு மனைவிக்கு பிறந்த ( ஆதி 20:12 ), தனது ஒன்றுவிட்ட சகோதரியாகிய சாராவை மனைவியாக கொண்டிருந்தார். லேவி 18 ம் அதிகாரத்தின்படி இது மரணத்துக்கு ஏதுவான குற்றம்.  பின் சாரா, ஆகாரை ஆபிரகாமுக்கு மனைவியாக கொடுத்தார்கள். பார்வோனிடமும், அபிமலேக்கிடமும் சாராவை தன் சகோதரி என்று ஆபிரகாம் பொய் சொன்னார். ஈசாக்கும் இது போலவே பொய் சொன்னார் ( ஆதி 26:7 ). நியாயப்பிர மாணத்தின்படி இது ‘பொய் சாட்சி சொல்வது’, தண்டனைக்குரியது ( யாத் 20:16 ). ஆபிரகாமுக்கு இரண் டுக்கும் மேற்பட்ட மனைவிகள், மறுமனையாட்டிகள் இருந்தார்கள் ( ஆபி 16, 25 ). யாக்கோபுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்தார்கள் ( ஆதி 29:16-30:24 ).

இயேசு கிறிஸ்து, தாவீதின் குமாரன் என்று அழைக்கப்படுகிறவர். தாவீதுக்கும் சாலமோனுக்கும் ஏராளமான மனைவிகளும் மறுமனையாட்டிகளும் இருந்தனர் ( 1 சாமு 25:39 – 44; 2 சாமு 3:25; 5:13; 1 நாளா 14:3; 1 ராஜா 11:1-8 ).

 

இயேசு கிறிஸ்துவும், மற்ற அப்போஸ்தலர்களும்,  ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை திருமணம் செய்யக்கூடாது என்று மிகவும் தெளிவாக கட்டளை கொடுத்துள்ளனர் ( மத் 19:4-5; மாற்கு 10:2-8; 1 தீமோ 3:2,12; தீத்து 1:6; ).

 

நியாயப்பிரமாணத்தின் அனைத்து கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடந்தால் மாத்திரமே ஆசீர்வாதங்கள் என்று உபாகமம் 28 ம் அதிகாரம் சொல்கிறது.

ஆனால் ரோமர் 3:19 “இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.” என்று சொல்கிறது.

 

தேவனுடைய கட்டளை சொல்கிறது, யாத் 21: 23, 24 ……. ஜீவனுக்கு ஜீவன். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், ( லேவி 24:20; உபா 19:21 )

ஆனால், மத்தேயு 5:38-39 ல் இயேசு சொல்கிறார், “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு.”

 

மனிதனுடைய பாவங்களைப்பற்றி, மீறுதல்களைப்பற்றி, பல நூற்றாண்டுகளாக தேவன் பொறுமையாயிருந்தார். ஆனால் ஒரு காலகட்டத்தில் எல்லோரையும் மனந்திரும்ப வேண்டுமென்று அழைக்கிறார்.  ( அப் 14:16; ரோமர் 3:25: 5:13 ).

அப் 17:30 அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.

 

2 ராஜாக்கள் 1ம் அதிகாரத்தில், ராஜா அழைக்கிறார் என்று தன்னை அழைத்ததற்காக, தேவனுடைய அக்கினியை வானத்தில் இருந்து வரவழைத்து 102 பேரை எலியா கொல்லுகிறார்.

இயேசுவை ஏற்றுக்கொள்ளாத சமாரியருக்கும் இப்படி செய்யட்டுமா என்று யாக்கோபும் யோவானும் கேட்டபோது, இயேசு கிறிஸ்து அவர்களை அதட்டுகிறார் ( லூக்கா 9:51-56 )

 

1 சாமு 15:3 ல் தேவன் சொல்கிறார் “ இப்பொழுதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய்”.  ( உபா 7:2; 12:2; 20:17; யோசுவா 11:11-14; எண் 31:1,2; 9-35; நியா 21:11; எரே 50:21; 1 சாமு 18:26; சங் 136:10 ).

ஆனால் இயேசு கிறிஸ்து மத் 5:44 ல் சொல்லுகிறார் “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.”   ( மத் 22:37-39 ).

 

யாத் 20:8 ல் ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும் என்று தேவன் கட்டளை கொடுக்கிறார்.

“ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக

ஆனால், பவுல் அப்போஸ்தலன், ‘ஓய்வு நாட்களை குறித்து ஒருவனும் குற்றப்படுத்தாதிருப்பானாக, ஓய்வு நாள் வருங்காரியங்களின் நிழல்’ என்று சொல்கிறார்.

கொலோ 2:16 ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.”

17 அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.

 

இப்படிப்பட்ட வேறுபாடுகளுக்கு காரணம் என்ன? ஏன் தேவன் ஒரு இடத்தில் ஒருவருக்கு ஒருவிதமாகவும் இன்னொரு இடத்தில் வேறு ஒரு விதமாகவும் நியாயம் செய்கிறார் ? ஏன் இந்த மாற்றுக்கருத்துக்கள்? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் சரியான விதத்தில் விடை கண்டு அதன்படி போதிப்பதும், விசுவாசிப்பதும் மிகவும் அவசியமாகும். இதற்கு சரியான விடையளிக்கும் ஒரு வேதவசனம்…

2 தீமோ 2:15 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.

“சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாக… ஜாக்கிரதையாயிருக்கும்படி” தீமோத்தேயுவுக்கு பவுல் அப்போஸ்தலன் எச்சரிப்பு கொடுக்கிறார்.

இங்கே “பகுத்து போதித்தல்” என்ற வார்த்தைகளுக்கான ஆங்கில வார்த்தை “rightly dividing”. இந்த வார்த்தைக்கான கிரேக்க வார்த்தை “orthotomeo” என்பதாகும். இவ்வார்த்தையின் அர்த்தம் “சரியாக நேராக வெட்டுவது. சரியாக வெட்டி ( dissect ) ஆராய்வது. முறையாக பிரித்தறிவது”.

 

வேதாகமத்தை புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்யும்போது, அதை வெறும் மனித மூளையை உபயோகித்து, சுய அறிவினால் மாத்திரம் புரிந்து கொள்ள முடியாது. வேதாகமம் நமது இருதயத்துக்காக எழுதப்பட்டது. நமது மூளைக்காக எழுதப்பட்டது அல்ல. பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு யாரும் வேதாகமத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும் ( யோவான் 12:40; 1 கொரி 1:18; யாக் 3:17 ). இதில் ஒரு முக்கியமான காரியம், மக்களுக்கு வேதத்தை போதிக்கிறவர்கள் சரியான முறையில் வேதத்தை பகுத்து போதிக்க வேண்டும். பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் உள்ள வேறுபாடு, வேதாகம உடன் படிக்கைகள், நியாயப்பிரமாணத்துக்கும் கிருபைக்கும் உள்ள வேறுபாடு, நடந்து முடிந்த தீர்க்கதரிசங்கள் நடக்கப்போகிற தீர்க்க தரிசனங்கள், வேதாகமம் எழுதப்பட்ட கிரேக்க எபிரேய வார்த்தைகளுக்கான அர்த் தங்கள், வாக்குத்தத்தங்கள், உண்மைகள், இரட்சிப்பு, பாவமன்னிப்பு, மீட்பு,  கிருபைக்கும் விசுவாசத்துக்கும் உள்ள தொடர்பு போன்ற அடிப்படை காரியங்களை நன்கு அறிந்து கொண்டு பின்பு போதிக்க வேண்டும்.

1 தீமோ 5:17. நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.

1 Tim. 5:17 Let the elders that rule well be counted worthy of double honour, especially they who labour in the word and doctrine.

அப்போதுதான் விசுவாசிகள் சரியான முறையில் தேவனுடைய சித்தத்தின்படி விசுவாசிக்க முடியும். சரியான போதனை சரியான விசுவாசத்தை கொண்டு வரும். தவறான போதனை தவறான விசுவாசத்தை கொண்டு வரும் ( ரோமர் 10:17 ). இப்படி சரியான முறையில் வேதாகமத்தை மனதிலாக்கிக்கொள்வதற்கான ஒரு அடிப்படை காரியம் “ வேதாகம ஆட்சி முறைகளின் காலங்களை “ புரிந்து கொள்வது. இப்படி புரிந்து கொள்ளும்போது, நாம் மேலே குறிப்பிட்ட பலவித வேறுபாடுகளுக்கும் கேள்விகளுக்குமான பதில்களை புரிந்து கொள்ளலாம். இயேசுவின் முதலாம் வருகையைப்பற்றி நன்றாக அறிந்து கொள்ளலாம். வேதாகம காலங்களில் நாம் எங்கே இருக்கிறோம் என்று மனதிலாக்கிக்கொண்டு இயேசுவின் இரண்டாம் வருகைக்கு நம்மையும் மற்றவர்களையும் ஆயத்தப்படுத்தலாம்.

வேதாகம ஆட்சி முறைகளுக்கான ஆங்கில வார்த்தை "Dispensations" ஆங்கில வேதாகமத்தில் 4 முறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. 1 கொரி 9:17, எபே 1:10, எபே 3:2, கொலோ 1:25.

எபி 1:1  பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்,

தேவன் மனிதனோடு தொடர்பு கொண்டு நடத்திய விதம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையாய், விதமாய் இருந்தது என்று வேதாகமம் தெரிவிக்கின்றது. இதன் அடிப்படையில் வேதாகம ஆட்சி முறைகளின் காலங்களை 9 விதமாக வேதாகம பண்டிதர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வேதாகம ஆட்சி முறைகளின் காலங்கள்.
1. தூதர்களின் ஆட்சி காலம் ( ஆதி 1:1-2 ).
2. கபடற்ற ஆட்சி காலம் ( ஆதி 2:15-3:21 ).
3. மனசாட்சி ஆட்சி காலம் ( ஆதி 3:22-8:14 ).
4. மனித அரசாங்க ஆட்சி காலம் ( ஆதி 8:15-11:32).
5. வாக்குத்தத்த ஆட்சி காலம் ( ஆதி 12:1 - யாத் 12:37 ).
6. நியாயப்பிரமாண ஆட்சி காலம் ( யாத் 12:38 - மத் 2:23 ).
7. கிருபை ஆட்சி காலம் ( மத் 3:1 - வெளி 19:10 ).
8. தெய்வீக அரசாட்சி காலம் - ஆயிர வருட அரசாட்சி ( வெளி 19:11 - 20:15 ).
9. மீட்கப்பட்டவர், தேவனுக்கு உண்மையுள்ள தூதர்கள் ஆட்சி காலம் ( வெளி 21:1-22:5 ).

மனிதர்களுக்கான ஆட்சி முறைகள்
2 ல் இருந்து 8 வரை. மனிதர்களுக்கான 7 ஆட்சி முறைகளும், தூதர்கள் கால ஆட்சிக்கும் ( ஆதி 1:1; ஏசாயா 14:12-14 )  மீட்கப்பட்டவர்களுக்கும் தேவனுக்கு உண்மையுள்ள தூதர்களுக்குமான நித்திய ஆட்சிக் கும் ( வெளி 21-22; ஏசாயா 66:22-24; 2 பேதுரு 3:13 ) இடையில் அமைந்திருக்கின்றது. அதாவது பூமியின் சிருஷ்டிப்புக்கும் புதிய வானங்களுக்கும் புதிய பூமி க்கும் இடையில் இருக்கின்ற காலங்கள். இந்த வேத பாடத்தில் மனிதர்களுக்கான 7 ஆட்சி முறைகளைப்பற்றி படிப்போம்.  ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் உள்ள முக்கிய காரியங்களை 7 தலைப்புகளின் கீழ் பார்ப்போம். ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் மனிதன் தோற்று ப்போனதாலேயே தேவன் அடுத்த ஆட்சி முறையை நடை முறைப்படுத்தி தன் ஆதி திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டியதாயிற்று. ஒவ்வொரு ஆட்சி முறையிலும் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட குறிப்பிட்ட உடன்படிக்கைகள் நடைமுறையில் இருந்தன. சில குறிப்பிட்ட கட்டளைகளை தவிர மற்ற அனைத்து காரியங்களும் அந்தந்த குறிப்பிட்ட ஆட்சிக்காலத்துக்கு மாத்திரமே உட்பட்டவை. ஒரு காலத்தின் கட்டளையை, உடன்படிக்கையை, வாக்குத்தத்தத்தை  எடுத்து மற்றொரு காலத்துக்கு உபயோ

கப்படுத்தும்போது அவை அந்த காலத்துக்கு உட்பட்டதா? என்று நன்கு ஆராய்ந்து பின் எடுக்க வேண்டும். இவ்வாறு படிப்பதன், போதிப்பதன் மூலம், ஒரு குழப்பமும் தவறுகளும் இன்றி சரியான முறையில் பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலோடு வேதாகமத்தை மனதிலாக்கிக்கொள்ளலாம்.

1. கபடற்ற ஆட்சி காலம்.
ஆதி 2:15 - 3:21
1. சிறப்பு அம்சங்கள். மனிதன் கள்ளங்கபடற்றவனாக இருந்தான் ( ஆதி 2:8-25; 3:7 ). எல்லாம் பரிபூரணமாக, பாவமில்லாமல், மனிதனுடைய ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.
2. காலம். எவ்வளவு என்பது சரியாக தெரியாது. ஒருவேளை ஒரு வாரமாக இருந்திருக்கலாம், ஏனென்றால் தேவன் முதல் ஓய்வு நாளைக்கு பின் ஓய்ந்திருந்ததாக ஒரு குறிப்பும் இல்லை. இவ்வேளையில் மனிதன் தன் வீழ்ச்சிக்கு முன்பு இன்னும் ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்கவில்லை ( ஆதி 3:22-24 ). இந்த காலம் மனிதனுடைய சந்ததி பிறக்கு முன்பே முடிவடைந்தது ( ஆதி 2:21-25; 4:1 )
3. கட்டளை. நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்கக்கூடாது ( ஆதி 2:16-17; 3:6 ).
4. தேவனுடையை குறிக்கோள்: மனிதன் உலகத்தை தேவனுடைய சித்தப்படி ஆள வேண்டும். தேவனோடு நல்லுறவோடு இருக்க வேண்டும் ( சங் 8:6; 115:16; யோவான் 4:24 ).
5. தோல்வி: மனிதனின் வீழ்ச்சி ( ஆதி 3:1-24; ரோமர் 3:23; 5:12-21; 1 தீமோ 2:11-15).
6. பாவத்துக்கான தண்டனை: ( ஆதி 3:14-19, 23-24). பாவத்தினால் மனிதன் நோயை, வேதனையை, துன்பத்தை, துயரத்தை, குற்ற உணர்வை, மரணத்தை, இன்றைய உலகத்தின் அனைத்து துன்பங்களை அறுவடை செய்தான். உணர்வற்றவனானான் ( ரோமர் 1 ), அந்தகாரப்பட்டவனானான் ( எபே 4:18 ), மனதில் குருடானவனானான் ( 2 கொரி 4:4 ), மனசாட்சியில் களங்கப்பட்டவனானான் ( எபி 10:22 ), நிந்தனைக் காரனானான், கீழ்ப்படியாதவனானான் ( ஏசாயா 28:14; ரோமர் 8:1-13 ), மாம்ச இச்சையின் படி நடக்கிறவ னானான் ( எபே 2:1-3 ), பொல்லாத நினைவுகள் உடையவன் ஆனான் ( ஆதி 6:5 ), மகா கேடுள்ளவனானான் ( எரே 17:9 ), காணாமல் போனவன் ஆனான் - இதனால் தன் சந்ததியை இயற்கையாகவே பாவ சுபாவம் உள்ளவர்கள் ஆக்கினான் ( யோவான் 8:44: 2 கொரி 4:4; எபே 2:1-3; 1 யோவான் 3:8-10 ).

சிருஷ்டிக்கு கொடுக்கப்பட்ட 6 சாபங்கள்

1. சர்ப்பத்தின் மேல் சாபம் ( ஆதி 3:14-15 ).
2. சாத்தான் மேல் சாபம் ( ஆதி 3:15; ரோமர் 16:20 ).
3. ஸ்தீரியின் மேல் சாபம் ( ஆதி 3:16 ).
4. மனிதன் மேல் சாபம் ( ஆதி 3:17-19; ரோமர் 5:12-21 ).
5. பூமியின் மேல் சாபம் ( ஆதி 3:17-19 ).
6. எல்லா சிருஷ்டியின் மேல் சாபம் ( ஆதி 3:14-19; ஏசாயா 65:25; ரோமர் 8:19-23 ).

7. தேவனுடைய மீட்பின் ஏற்பாடு: ஒரு மீட்பர் வருவார், வந்து மனிதனின் ஆளுகையை மீண்டும் நிலை நிலைநிறுத்துவார். ( ஆதி 3:15-21; ஏசாயா 53; மத் 1:21; 26:28; எபே 1:7 ).

2. மனசாட்சி ஆட்சி காலம்
ஆதி 3:22-8:14
1. சிறப்பு அம்சங்கள்: மனிதன், நன்மை தீமை அறிந்த பிறகு, எது சரி எது தவறு என தீர்மானிப்பதில் தன் சொந்த மனசாட்சிக்கு கீழ்ப்படிந்து நடந்து கொள்ள வேண்டும் ( ஆதி 6:1-7; ரோமர் 2:12-16 ). எழுதப்பட்ட சட்டங்கள் ஒன்றும் இல்லை. மனிதன் தன் விருப்பப்படி நடக்க சுதந்திரமாக விடப்பட்டிருந்ததால் இந்த ஆட்சி காலத்தை "சுதந்திர காலம்" என்றும் அழைக்கலாம். ஆனாலும் ஒரு கால கட்டத்தில் தேவன் இடைபட வேண்டியதாயிற்று. மனிதனுக்கு தேவனைப்பற்றியும் புது உடன்படிக்கையை பற்றியும் சற்று அறிவு இருந்தது ( ஆதி 3:14-4:26 ).
2. காலம்: 1656 வருடங்கள். ஆதாமின் வீழ்ச்சியில் இருந்து நோவாவின் 600வது வருடம் வரை ( ஆதி 5:1-29; 7:6,11).
3. கட்டளை: எது சரி எது தவறு என்பதில் மனசாட்சி சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் ( ஆதி 3:22; 4:7,15; 6:1-7 ).
4. தேவனுடைய குறிக்கோள்: சரியானதை ஏற்றுக்கொண்டு தவறானதை ஏற்றுக்கொள்ளாததற்கு மனசாட்சியை உபயோகிப்பது எப்படி என்று மனிதனை வழிநடத்துவது. மனிதன், தான் தேவனுக்கு கீழ்ப்படிவதனால் மாத்திரமே, சாபத்தை நீக்கி தன் ஆளுகையை மீண்டும் நிலைநாட்ட முடியும் என்று அவனுக்கு கற்பித்துக்கொடுப்பது. அவன் தானாகவே சரியானதை தேர்ந்தெடுத்து தவறானதை விட்டு, சாத்தானை விட்டு தேவனை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்பது. அவன் தானாகவே செய்யா விட்டால், அவனுடைய நன்மைக்காக சட்டங்களையும் தண்டனைகளையும் கொடுத்து கீழ்ப்படிதலை கட்டாயமாக்குவது. மனிதன் தன் வீழ்ந்த நிலமையில் இருந்து கொண்டு அவனது சுய முயற்சியினால் மாத்திரம் அவனுக்கு நன்மையானது எது என்று தேர்ந்தெடுக்க முடியாது. மனிதன் தன் பாவத்தினால் உறவு நிலமைக்குள் வரவழைத்த அசுத்த ஆவிகளோடும் வீழ்ந்த தூதர்களோடும் எதிர்த்து நிற்க முடியாது என்று அவனுக்கு கற்றுக்கொடுப்பது. மனிதன் தன்னால் ஒரு இயலாத நிலமைக்குள் வந்து, பாவத்தோடும் சாத்தானோடும் துன்பங்களோடும் போராடுவதற்கு தேவனுடைய உதவியை நாடி வரவேண்டும். தேவன் மாத்திரமே மனிதனுக்கு நல்ல நண்பர் என்றும் அவர் மூலமாகவே பாவத்தில் இருந்தும் அதன் சாபங்களில், விளைவுகளில் இருந்தும் மீட்கப்பட்டு தன் உண்மையான நிலமைக்குள் வரமுடியும் என்றும் மனிதனை அறிந்து கொள்ள வைப்பது.
5. தோல்வி. ( ஆதி 4:1 - 8:7 ).
1. ஆதாமின் தோல்வி.
2. காயீனின் தோல்வி.
3. காயீனின் சந்ததியின் தோல்வி.
4. சேத்தின் சந்ததியின் தோல்வி.
5. விழுந்த தேவ தூதர்கள் மனுஷ குமாரத்திகளோடு உறவு கொண்டது, ஸ்தீரியின் வித்து ஆதாமிய பரம்பரையில் இருந்து வராமல் களங்கப்படுத்துவதற்காக.
6. பொதுவாகவே எல்லா மனிதர்களின் தோல்வி ( ஆதி 4:1-26; 6:1-7; மத் 24:37-39; 1 பேதுரு 3:20; 2 பேதுரு 2:4-5 ).
6. பாவத்துக்கான தண்டனை: நோவா காலத்து ஜலப்பிரளயம் ( ஆதி 6:8 - 8:14; மத் 24:37-39; 1 பேதுரு 3:18 - 21 ).
7. தேவனுடைய மீட்பின் ஏற்பாடு: தேவன் தன் கிருபையாலும் இரக்கத்தாலும் தனது அநாதி திட்டத்தில் தொடர்வதற்கான ஒரு வாய்ப்பை ஒரு முறை கூட கொடுத்தார் ( ஆதி 6:8-22; 7:1; 1 பேதுரு 3:18-21 ). சுத்தமான மிருகங்களை பலிக்காக பாதுகாத்தது, வரப்போகும் மீட்பர் மேல் வைக்கும் விசுவாசத்தை காண்பிக்கிறது ( ஆதி 7:2; 8:20-22 ). அக்காலத்து மக்கள் வரப்போகும் மேசியாவின் மேல் வைக்கும் விசுவாசத்தின் மூலம் கிருபையினால் இரட்சிக்கப்பட்டார்கள். இப்போது நாம் வந்த மேசியாவின் மேல் வைக்கும் விசுவாசத்தின் மூலம் கிருபையினால் இரட்சிக்கப்படுகிறோம் ( ஆதி 6:8; எபி 11; எபே 2:8-9 ).

3. மனித அரசாங்க ஆட்சிக்காலம்
ஆதி 8:15-11:32.
1. சிறப்பு அம்சங்கள்: ஒரு நீண்ட சுதந்திரமான மனசாட்சி காலத்துக்குப்பின் மனிதனுடைய வாழ்வை நெறிமுறைப்படுத்துவதற்காக மனித சட்டங்களும் அரசாங்கமும் ஏற்படுத்தப்பட்டது. தேவன் நோவாவுக்கு மனிதகுலத்தை ஆளுவதற்கான சில சட்டங்களை கொடுத்தார். மனிதன் சுய அரசாங்கத்தின் பொறுப்பாளி யாக்கப்பட்டான். பல சட்டங்களும் அரசாங்கமும் தேவனால் ஏற்படுத்தப்பட்டது. எல்லோருடைய நன்மைக்காகவும் ஆளுகிற பொறுப்பு மனிதன் மேல் விழுந்தது.
ஆதாமுக்கு பிறகு கொடுக்கப்பட்ட முதல் பொது சட்டங்கள்.
1.
பலுகிப்பெருகி பூமியை நிரப்புங்கள் ( ஆதி 9:1,7 ).
2. மிருகங்களை ஆண்டு கொள்ளுங்கள் ( ஆதி 9:2 ).
3. மிருகங்களையும் உணவாக கொள்ளுங்கள் ( ஆதி 9:3 )
4. மாம்சத்தை அதன் இரத்தத்தோடே புசிக்க வேண்டாம் ( ஆதி 9:4 ).
5. கொலை செய்யக்கூடாது ( ஆதி 9:6 ).
6. கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை ( ஆதி 9:6 ).
7. தேவனுடைய உடன்படிக்கையை நித்தியமாக கைக்கொள்ள வேண்டும் ( ஆதி 9:8-17 ).
இந்த கட்டளைகளில் சில, என்றென்றைக்கும் மனித அரசாங்க சட்டங்களின் அடிப்படையாக இருக்கின்றன. குற்றவாளிகளை தண்டிக்க, தேசங்களை பாதுகாக்க இந்த சட்டங்கள் மிகவும் அவசியம் ( ரோமர் 13:1-6; 1 பேதுரு 2:13-14; ஏசாயா 11:4-9; 65:20-25; தானியேல் 2:21; சகரியா 14; வெளி 19:11-21 ). மனித அரசாங்கங்கள் தேவனுடைய நீதி அரசாட்சியின் பாகங்களாக இருக்க வேண்டும், மனித சமுதாயத்தை பூமியில் பாதுகாக்கின்றனவைகளாக இருக்க வேண்டும்.
மனிதன் இப்போது அறிவிலும் அனுபவத்திலும் வளர்ந்தவனாக இருக்கிறான். புது சட்டங்கள், உண்மையான ஆராதனை, ஒரு புது உடன்படிக்கை, ஆசீர்வாதத்தின் வாக்குத்தத்தங்கள், பூமியின் மேல் ஆளுகை, தன்னைதான் ஆளுகிற பொறுப்பு உடையவனாக இருக்கிறான் ( ஆதி 8:15-9:17 ).
2. காலம்: நோவாவின் ஜலப்பிரளயத்தில் இருந்து ஆபிரகாமின் 75 வது வயதில் அவர் அழைக்கப்பட்டது வரை. சுமார் 427 வருடங்கள் ( ஆதி 11:10-32; 12:5 ).
3. கட்டளை: மனித அரசாங்கத்தின் சட்டங்களுக்கு கீழ்ப்படிந்திருங்கள், உண்மையாக ஆளுகை செய்யுங்கள், குற்றவாளிகளை தண்டியுங்கள், தேவனுக்கும் அவருக்கு ஆராதனை செய்வதற்கும் வேறுபடுத்தப்பட்டவர்களாக இருங்கள் ( ஆதி 8:20-9:17 ).
4. தேவனுடைய குறிக்கோள்: சட்டங்களும் அவற்றுக்கான தண்டனைகளும் இல்லாத போது முறையாக வாழ்வதற்கு மனிதன் தவறி விட்டான். மனிதன் இப்போது ஒரு புதிய நடத்தை நெறிமுறைகளின் கீழ் இருக்கிறான். இப்போது அவன் கண்டிப்பாக எது சரியோ அதற்கு கீழ்ப்படிய வேண்டும், எது தவறோ அதை விட வேண்டும். ( ஆதி 9:1-7 ).
5. தோல்வி: நான்கு விதத்தில் ( ஆதி 9:18-11:9 ).
1. நோவாவின் தோல்வி ( ஆதி 9:20-24 ).
2. காம் மின் தோல்வி ( ஆதி 9:22-27 ).
3. விழுந்த தூதர்கள் தொடர்ந்து மனுஷ குமாரத்திகளோடு உறவு கொண்டிருந்ததால் அவர்களிடம் இருந்து அரக்கர் இனம் பல தோன்றியது. ( ஆதி 9:1-6; ஆதி 11:1-9 ).
4. பொதுவாக அனைவரும் தோற்றார்கள். உலகம் முழுவது சென்று பலுகிப்பெருகுவதற்கு பதிலாக ஒரே இடத்தில் ஒரே மக்களாக இருந்து தேவனை எதிர்க்கிறவர்ளாக ஆகும்படி முயற்சித்தார்கள் ( ஆதி 11:1-9 ). தற்பெருமை, சுய விருப்பம், மனிதனை தெய்வமாக வணங்குவது போன்றவை இக்காலத்தில் பெருகிப்போயிற்று.
6. பாவத்துக்கு தண்டனை: தேவன் மனுஷருடைய பாஷைகளை தாறுமாறாக்கி அவர்களை பூமியெங்கும் சிதறிப்போகும்படி செய்தார் ( ஆதி 11:1-9 ). ஜலப்பிரளயத்துக்கு பின் சுமார் 340 வருடங்களுக்கு பிறகு தேவன் பூமியை இன்று இருக்கும் விதத்தில் தேசங்களாக, தீவுகளாக பிரித்தார். இதனால் மனிதர்கள் பூமியெங்கும் பிரிந்து இருப்பதற்கு வழி செய்தார் ( ஆதி 10:25; 1 நாளா 1:19 ).
7. தேவனுடைய மீட்பின் ஏற்பாடு: வரப்போகும் மேசியாவின் மேல் விசுவாசம், சுவிசேஷம், இந்த சத்தியங்களின் நிழலாக பலிகள் ( ஆதி 8:20: 12:8; கலா 3:8; எபி 4:2 ).

4. வாக்குத்தத்த ஆட்சி காலம்
ஆதி 12:1 - யாத் 12:37
1. சிறப்பு அம்சங்கள்: ஆபிரகாமோடும் அவரது சந்ததியோடும் வாக்குத்தத்தங்களும் உடன்படிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டது. ஒரு குறிப்பிட்ட ஜனத்தின் பிரிவு மூலமாக ஸ்தீரியின் வித்து வரப்போவதை தேவன் குறிப்பிட்டு சொல்ல ஆரம்பித்தார். இதன் முன்பாக இதைப்பற்றியதான சில காரியங்கள் சொல்லப் பட்டிருந்தன ( ஆதி 3:15; 4:25; 9:24-27). ஆனால் இப்போது ஆபிரகாமின் சந்ததியின் மூலமாகத்தான் இயேசு கிறிஸ்து வருவார் என்று குறிப்பிட்டு சொல்லப்பட்டது. இதன் சம்பந்தப்பட்ட பல வாக்குத்தத்தங்களும் வருங்கால உண்மைகளும் கொடுக்கப்பட்டன ( ஆதி 12:1-3; 17:7-8,19; 18:18; 21:12-13: 26:3-4; 49:10 ). இப்போது தேவன் தன் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஆபிரகாமின் சந்ததியோடு இடைபட தொடங்கினார். மேசியா அவர்கள் மூலமாகத்தான் வருவார் என்று வாக்குத்தத்தம் செய்தார். வாக்குத்தத்த தேசம் அவர்களுக்கு நித்தியமாக கொடுக்கப்படும் என்றும் அந்த தேசம்தான் உலக சுவிசேஷத்துக்கும் தேவனுடைய ஆட்சி காரியங்களுக்குமான தலைநகரமாக இருக்கும் என்றும் உறுதியளித்தார் ( ஆதி 12:1-3,7; 13:14-18; 15:18-21; 17:7-19 ). தேவனுடைய வெளிப்பாடு அவர்கள் மூலமாகவே வரவேண்டும் என்றும் உறுதியளித்தார் ( ஆதி 12:1-3; 15:13-21; 17:1-21; ரோமர் 3:1-2; கலா 3:8; எபி 11:8-19 ).
2. காலம்: ஆபிரகாம் 75 வயதாயிருந்த போது அவரது அழைப்பில் தொடங்கி எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து புறப்பட்டது வரை; சுமார் 430 வருடங்கள் ( ஆதி 12:40; கலா 3:14-17 ).
3. கட்டளை: தேவன் மேல் விசுவாசமாயிருக்க வேண்டும். அவருக்கு கீழ்ப்படிந்து இருக்க வேண்டும். மற்ற இனங்களில் இருந்து வேறுபட்டு இருக்க வேண்டும். உலகத்துக்கு சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் ( ஆதி 12:1-3; 15:4-6; 17:1-21; 26:3-4; 28:13-15 ).
4. தேவனுடைய குறிக்கோள்: மேசியா வருவதற்காக ஒரு மனிதனை தேர்ந்தெடுத்து, அவரையும் அவரது சந்ததியையும் தேவனுடைய பிரதிதியாக இந்த உலகத்தில் உபயோகிப்பது, அவர்களுக்கு கானான் தேசத்தை கொடுத்து கானான் தேசத்தை தேவனுடைய நித்திய ஆட்சியின் தலைநகரமாக வைப்பது. உலகத்தில்   இப்போது விழுந்த தேவதூதர்களுக்கும் மனுஷ குமாரத்திகளுக்கும் பிறந்த அரக்கர் இனம் ஏராளமானோர் இருந்தனர். அவர்கள் இப்போது தேவன் தன் வருங்கால தலைநகரமாக மேசியா பிறக்கப்போகிற இடமாக தீர்மானித்திருந்த இடத்தை நிரப்பிக்கொண்டிருக்கின்றனர் ( ஆதி 12:6 ). இவர்கள் அழிக்கப்படுவதற்காக இஸ்ரவேல் ஜனத்தை உபயோகிக்க தேவன் தீர்மானித்தார். அதற்காக ஆபிரகாமின் சந்ததியை ஒரு பெரிய ஜனமாக எகிப்தில் வளரும்படியாக செய்தார். இஸ்ரவேல் ஜனம் சரீரப்பிரகாரமாக, ஆவிக்குரியபிரகாரமாக, உலகப்பிரகாரமாக ஆசீர்வதிக்கப்பட்டு, அதன் மூலமாக மற்ற ஜனங்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனம் எப்படி இருக்கும் என்று அறிந்து தேவனை தேட வேண்டும். இதற்கு முன்பு இப்படி ஆசீர்வதிக்கப்பட்ட ஜனம் வேறு இருந்தது இல்லை ( ஆதி 12:1-3; 15:4-6; 17:1-21; 26:3-4; 28:13-15; கலா 3:8-14; உபா 7:6-9 ).
5. தோல்வி: ஐந்து விதத்தில் ( ஆதி 12:1 - யாத் 12:40).
1. ஆபிரகாமின் தோல்வி ( ஆதி 11:31- 12:6; 12:10-20; 16:1-16; 17:18; 20:1-18 ).
2. ஈசாக்கின் தோல்வி ( ஆதி 26:6-35; 27:1-4 ).
3. யாக்கோயின் தோல்வி ( ஆதி 25:27-34; 27:1-33; 31:1-42; 33:14; 37:3 ).
4. யாக்கோபின் மகன்களின் தோல்வி ( ஆதி 37:4-6: ஆதி 38:1-30 ).
5. யாக்கோபு, அவரது மகன்களின் மரணத்துக்கு பிறகு இஸ்ரவேலின் தோல்வி ( யாத் 2:11-14; யாத் 5:21 ).
6. பாவத்துக்கான தண்டனை: ( யாத் 1:7 - 6:30 ) - எகிப்தில் அடிமைத்தனம். இது மற்ற ஜாதிகள் இஸ்ரவேலை அடிமைப்படுத்த போவதன் தொடக்கம். இதை தொடர்ந்து 8 உலக ராஜ்யங்கள் இஸ்ரவேலை அடிமைப்படுத்தும். எகிப்தின் தண்டனை - 10 வாதைகள்.
7. தேவனுடைய மீட்பின் ஏற்பாடு: இஸ்ரவேலுக்கு கொடுக்கப்பட்ட சுவிசேஷம் ( கலா 3:8; எபி 4:2 ), மேசியாவால் வரப்போகும் மீட்பை ஒரு நிழலாக அவர்களுக்கு கற்றுக்கொடுத்த பலிகள் ( யாத் 12; 25:1-40:38; லேவி 1:1-10:20; 23:1-44 ).

நியாயப்பிரமாண ஆட்சிக்காலம்
யாத் 12:38 - மத் 2:23
1. சிறப்பு அம்சங்கள்: மோசே மூலமாக நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. மோசே தொடங்கி இயேசு கிறிஸ்து வரை நியாயப்பிரமாணம் விசுவாச வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதாக உபயோகப் படுத்தப் பட்டது. இந்த காலத்தில் சுவிசேஷமும் இருந்தது ( கலா 3:8; எபி 4:2 ). இஸ்ரவேல்  ஜனம், எகிப்திலும் வனாந்திரத்திலும் தேவனுடைய வல்லமையை அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் கண்டது. தேவன் பலமுறை அவர்களுக்கு தரிசனமானார் ( யாத் 24:9-11; யோசுவா 5:13-15 ). அவர்கள் காதுகள் கேட்கும்படியாக அவர்களோடு பேசினார் ( உபா 5:22-24 ). பகலிலும் இரவிலும் அவரது பிரசன்னத்தின் வெளிப்பாடு இருந்தது ( யாத் 14:19-21 ). தேவன் நோயை அவர்கள் நடுவில் இருந்து அகற்றிப்போட்டார்    

( யாத் 15:26; 23:25; சங் 105:37: 107:20 ). எகிப்தின் செல்வங்களை அவர்களுக்கு கொடுத்தார் ( யாத் 12:35; சங் 105:37 ). வெளிப்பாடுகளை, நியாயப்பிரமாணத்தை, சுவிசேஷத்தை கொடுத்தார். அவர்களோடு உடன்படிக்கைகளை ஏற்படுத்தினார் ( கலா 3:8; எபி 4:2 ).
தேவனுடைய மேசியா வருவதை தடுக்கும் அரக்கர் இனம் அழிக்கப்படுவதற்காக இஸ்ரவேல் ராஜ்யம் வாக்குத்தத்த நாட்டில் உருவாக்கப்பட்டது. தேவனை உண்மையாய் தொழுது கொள்ளும் ஜனம் எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்று காண்பிப்பதற்காக தேவன் இஸ்ரவேல் ஜனத்தை உபயோகிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
2. காலம்: எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து வெளியேறியது தொடங்கி யோவான் ஸ்நாபகன் பரலோக ராஜ்யத்தை பிரசங்கித்தது வரை. மோசேயில் இருந்து இயேசு கிறிஸ்து வரை. சுமார் 1718 வருடங்கள் ( மத் 11:12-13; லூக்கா 16:16 ).
3. கட்டளை: மோசேயின் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொள்ள வேண்டும் ( யாத் 19:8; 24:3,7 ).
4. தேவனுடைய குறிக்கோள்: இஸ்ரவேல் ஜனம் தேவனுக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டும். தேவன் தெரிந்தெடுக்கும் மனிதர்களால் ஆளப்படும் ஒரு ராஜ்யங்களின் கூட்டமைப்பும், இஸ்ரவேல் தேசம் அதற்கு தலைநகரமாகவும் ஏற்படுத்தப்பட வேண்டும். வரப்போகும் மீட்பரைப்பற்றியதான அனைத்து சத்தியங்களையும் விளக்கும் ஒரு ஆராதனை முறை ஏற்படுத்தப்பட வேண்டும். இஸ்ரவேல் ஜனங்களை கொண்டு அரக்கர் இனங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு, ஆதாமின் சந்ததியில் இருந்து மேசியா உலகத்துக்கு வருவதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். உலகம் முழுமைக்குமான தேவனுடைய வெளிப்பாடுகள் இஸ்ரவேலுக்கு கொடுக்கப்பட வேண்டும். தேவன் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு கொடுத்த வாக்குத்தத்தங்கள் படி இஸ்ரவேல் ஜனம் எல்லா தேசங்களுக்குமான ஆசீர்வாதமாக ஆக்கப்பட வேண்டும்.

தேவன் நியாயப்பிரமாணத்தை கொடுத்ததன் நோக்கம்: உலகம் முழுவதும் ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாக ஆகும்படி; எல்லா வாய்களும் அடைக்கப்படும்படி ( ரோமர் 3:19-20; 4:15; 7:5-14; கலா 4:21 - 31; 5:1 ). நியாயப்பிரமாணம் வரப்போகும் நற்காரியங்களின் நிழலாக கொடுக்கப்பட்டது. வாக்குத்தத்த சந்ததி வருமளவும், அக்கிரமங்களினிமித்தமாக அது கூடக்கொடுக்கப்பட்டது ( மத் 11:11-13: லூக்கா 16:16-17; கலா 3:12-25; கொலோ 2:14-17; எபி 8:5; 9:1-10; 10:1 ).
5. தோல்வி: 7 விதத்தில்:
1.
வனாந்திரத்தில் தோல்வி.
2.
யோசுவாவின் காலத்தில் தோல்வி ( யோசுவா 7-9 ).
3. நியாயாதிபதிகளின் காலத்தில் தோல்வி ( நியா 1-2 ).
4. ராஜாக்களின் காலத்தில் தோல்வி. இஸ்ரவேல் ஜனம் யூதா, இஸ்ரவேல் என்று பிரிந்த பிறகு, ஏறைக்குறைய அனைத்து ராஜாக்களும் தோற்றுப்போனார்கள். மக்கள் தேவனுடைய உபதேசங்களை முழுவதுமாய் கைவிட்டுப்போனதால் இஸ்ரவேல் தேசம் அடிமைத்தனத்துக்குள்ளானது ( 2 ராஜா 17; 2 ராஜா 25 ).
5. அடிமைத்தனத்தில் தோல்வி ( எசே 2:3-3:9; எரேமியா 1:1 - 22:30 ).
6.
அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டும் தோல்வி ( எஸ்றா 10; நெகேமியா 13; ஆகாய் 1; மல்கியா 1:1 - 4:6 ).
7. மேசியாவையும் சுவிசேஷத்தையும் ஏற்றுக்கொள்ளாததில் தோல்வி ( மத் 5:20; 6:1-18; 11:20-27; 15:1-20; யோவான் 5; அப் 2:11-38; 9:1-9; 12:1-19; 13:41-52; 22:1-28:24).
6. பாவத்துக்கான தண்டனை: இரு விதத்தில்.
(1).
இஸ்ரவேலின், உலகத்தின் பாவங்களுக்கான தண்டனை - இயேசுவின் சிலுவையில் ( யோவான் 12:27-33; 19:16-30; அப் 2:36; பிலி 2:5-11; கொலோ 2:14-17; 1 பேதுரு 2:24; 1 யோவான் 2:2 ).
(2). இஸ்ரவேலுக்கு ஒரு தேசமாக தண்டனை. தேவனுடைய ராஜ்யம் அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்டது   ( மத் 21:33-46). இஸ்ரவேல், இயேசுவின் இரண்டாம் வருகை வரையில் பாழாக்கப்பட்ட தேசமாக கைவிடப்பட்டது ( மத் 23:37-39 ). கி.பி 70ல் இஸ்ரவேல் தேசம் முழுமையாக அழிக்கப்பட்டு, எஞ்சி இருந்த ஜனம் மற்ற நாடுகளில் சிதறடிக்கப்பட்டார்கள் ( லூக்கா 21:20-24; உபா 28; லேவி 26 ).
7. தேவனுடைய மீட்பின் ஏற்பாடு: தேவன் இயேசுவின் சிலுவையின் மூலமாக மீட்பை கொடுத்தார்           ( 1 கொரி 1:18-24; கொலோ 1:12-20; 2:14-17; 1 பேதுரு 2:24). இந்த சமயம் வரை, கல்வாரியின் உண்மையான பலியின் நிழலாக, மக்கள் பிராணிகளை பலி கொடுத்து வந்தனர் ( எபி 8-10 ). தேவன் தன் ஒரே மகனை அனுப்பி, எல்லா மனிதர்களுக்காகவும் மரிக்க வைத்து, மனுக்குலம் முழுவதுமாக மீட்கப்பட்டு, தேவனோடு ஒப்புரவாகி, தங்களுடைய அசல் ஆளுகையை மீண்டும் பெற செய்தார் ( சங் 8; கலா 3:13; எபே 2:11-18; எபி 2:9-18; 1 பேதுரு 1:18-23 ).

கிருபை ஆட்சிக்காலம்
மத் 3:1 - வெளி 19:10
1. சிறப்பு அம்சங்கள்: கிருபையின் பரிபூரணம் இயேசுகிறிஸ்துவால் கொண்டு வரப்பட்டது ( யோவான் 1:16-17 ). சாத்தான் சிலுவையில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறான். தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை தரித்திருக்கும் எந்த ஒரு விசுவாசியையும் மேற்கொள்ள சாத்தானுக்கு இப்போது வல்லமை இல்லை ( எபே 6:10-18 ). மனிதனால் இப்போது சாத்தானை எதிர்த்து நிற்க முடியும் ( எபே 4:27; யாக் 4:7; 1 பேதுரு 5:7-9 ). இவ்விஷயத்தில் இப்போது யூதன் என்றும் புறஜாதியான் என்றும், ஆண் என்றும் பெண் என்றும் வேற்றுமை இல்லை ( அப் 2:16-21; 1 கொரி 12:13; கலா 3:28; கொலோ 3:11). கிருபை ஆட்சிக்காலம் வல்லமையான ஊழியங்களோடு தொடங்கியது. இயேசுவின் ஊழியம், யோவான் ஸ்நாபகனின் ஊழியம், அப்போஸ்தலர், மற்றவர் வல்லமை, அடையாளம், அற்புதங்களோடு ஊழியம் செய்தனர். இக்காலம் முழு கிருபையோடு ( யோவான் 1:16-17 ), பரிசுத்த ஆவியின் முழுமையின் வாக்குத்தத்தத்தோடு (யோவான் 7:37-39), தேவனுடைய பிரதிநிதிகளாக, இயேசு செய்த காரியங்களை விட மேன்மையான காரியங்களை செய்யும் படியான கட்டளையோடு ( மாற்கு 16:15-20; யோவான் 14:12 ) தொடங்கியது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட எதையும் தேவனிடம் இருந்து பெற்றுக்கொள்வதில் ஒரு விசுவாசிக்கு எந்த எல்கையும் இப்போது இல்லை. ஒவ்வொருவதும் தங்கள் தங்கள் விசுவாசத்துக்கேற்ப தேவனிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் ( மத் 8:13; 9:29;17:20; 21:21-22; மாற்கு 11:22-24; யோவான் 14:12-15; 15:7,16; எபி 11:6; 1 யோவான் 3:21-22; 5:13-14). சுவிசேஷம் பிரசங்கித்தல் ( மத் 28:19-20; மாற்கு 16:15-20;ரோமர் 1:16; 1 கொரி 1:18-24; 2 கொரி 4:4). இதற்காக தேவன் வரங்களை கொடுத்து மனிதர்களை உபயோகிக்கிறார் ( ரோமர் 12; 1 கொரி 12; எபே 4:7-11). தூதர்களை உதவிக்கு உபயோக்கிறார் ( எபி 1:14). பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி சுவிசேஷம் பிரசங்கிக்க இரட்சிக்கப்பட்ட மனிதர்களை உபயோகிக்கிறார் ( யோவான் 14:16-17,26; யோவான் 15:26; யோவான் 16:7-15; அப் 1:4-8; 2:38-39; 5:32 ).
2. காலம்: யோவான் பரலோகராஜ்யத்தை பிரசங்கித்த சமயம் முதல் இயேசுவின் இரண்டாம் வருகை வரை. நாம் காலத்தை கி.மு, கி.பி என்ற அடிப்படையில் பார்ப்பதால், யோவான் பிரசங்கித்த சமயத்தில் இயேசுவுக்கு சுமார் 30 வயது என்றால், நியாயப்பிரமாண ஆட்சி முடிந்து கிருபை ஆட்சிக்காலம் தொடங்கி கி.பி 2000 வரை 1970 வருடங்கள். இன்னும் எவ்வளவு வருடங்கள் செல்லும் என்பது தேவனை தவிர யாருக்கும் தெரியாது. பழைய ரோம சாம்ராஜ்யத்தின் ஆளுகைக்குட்பட்ட இடத்தில் பத்து ராஜ்யங்கள் ஸ்தாபிக்கப்பட்டு ( தானி 7:7-8, 19-24 ), சபை எடுக்கப்பட்டு, அந்திக்கிறிஸ்து இவ்வுலகத்தில் 7 வருடங்கள் இருந்த பிறகே இயேசுவின் இரண்டாம் வருகை இருக்கும் ( தானி 9:27; 2 தெச 2:7-8). இயேசுவின் வருகைக்கு முன்பு வெளி 4:1-19:10 ல் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பவங்கள் அனைத்தும் கடைசி 7 வருடங்களில் நடபெற வேண்டும். அதன் பிறகு இயேசு வந்து ( வெளி 19:11-21 ) ஆயிர வருட அரசாட்சி தொடங்கும் ( வெளி 20:1-10).
3. கட்டளை: சுவிசேஷத்தை அதன் முழு போதனைகளோடு விசுவாசித்து கீழ்ப்படிய வேண்டும் ( மாற்கு 16:16; யோவான் 3:16; ரோமர் 1:5, 16; 16:26; எபி 11:6; யாக் 1:5-8).
4. தேவனுடைய குறிக்கோள்: விசுவாசிக்கிற அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும், தேவனுடைய நாமத்துக்காக ஒரு ஜனத்தை அழைக்க வேண்டும், சபை கட்டப்பட வேண்டும் ( யோவான் 3:16; அப் 15:13-18; 1 கொரி 1:18-24; 12:12-31; எபே 2:14-22; 4:7-16; எபே 5:25-32; 1தீமோ 2:4; 2 பேதுரு 3:9; வெளி 22:17 ).
5. தோல்வி: மூன்று விதத்தில்.
(1)
இஸ்ரவேலின் தோல்வி. இஸ்ரவேல் யோவானை, இயேசுவை, அப்போஸ்தலர்களை ஏற்றுக்கொள்ள வில்லை. மேசியா இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றார்கள். ஆதி திருச்சபையை உபத்திரவித்தார்கள். சுவிசேஷம் முதலில் யூதர்களுக்கு கொடுக்கப்பட்டது ( மத் 10:5-6 ). ஆனால் அவர்கள் கீழ்ப்படியாமல் போனதால், சுவிசேஷம் அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்டு புறஜாதியாருக்கு கொடுக்கப்பட்டது ( மத் 21:33-46 ).
(2) ஆதி திருச்சபையின் தோல்வி. தொடக்கத்திலேயே திருச்சபையில் பல தோல்விகள் ( அப் 5-6; அப் 15 ). எல்லா நிருபங்களும் சபையில் இருந்த வேற்றுமைகளையும், சண்டைகளையும், துர் உபதேசங்களையும், பரிசுத்தமில்லாத வாழ்க்கையையும், கள்ள தலைவர்களையும், பின்மாற்றம் போன்றவற்றையும் பற்றி குறிப்பிடுகின்றன ( 1 கொரி 1:1; 3:1; 5:1; 1 கொரி 11; கலா 3; 5; எபே 4; கொலோ 3; 2 பேதுரு 2; யூதா 1:3; வெளி 2-3 ).
(3) அப்போஸ்தலருடைய காலத்துக்கு பின்பதான சபையிலும் தோல்வி. அவர்கள் உலகத்துக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கவில்லை, சத்தியத்தை முழுமையாக சொல்லிக்கொடுக்க வில்லை, இயேசு எதற்காக ஜெபித்தாரோ அதன் படி இல்லை ( யோவான் 17:21-23 ). சபை இருண்ட ஒரு காலத்துக்குள் பிரவேசித்தது. பின் ஒரு சமயம் சீர்திருத்தம் வந்தது. ஆனாலும் சபை முழுமையாக சுவிசேஷத்தின் முழு உபயோகங்களோடு இன்னும் வாழ வில்லை.
6. பாவத்துக்கான தண்டனை: யோவானை ஏற்றுக்கொள்ளாததற்கு ( மத் 3:7; 21:23-27), இயேசுவை ஏற்றுக்கொள்ளாததற்கு ( மத் 11:11-27; 12:1-50; 23:1-39), ஆதி சீஷர்களை ஏற்றுக்கொள்ளாததற்கு ( அப் 4:1-31; 6:8-7:59; 8:1-4; 9:1-8; 12:1-5; 16:19-38; 17:1-18:18; 22:1-28:31), இஸ்ரவேல் ஒரு தேசமாக இராத படி கி.பி.70 ல் முழுமையாக அழிக்கப்பட்டு உலகமெங்கும் சிதறடிக்கப்பட்டார்கள் ( மத் 24:1-3; லூக்கா 21:20-24). அவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகை வரையிலும் முழுமையாக மீண்டும் ஒரு முழுமையான நிலைக்கு வர மாட்டார்கள் ( ரோமர் 11:25-29 ). கிருபையின் காலம் மிகுந்த துர் உபதேசங்களோடு முடியும் ( மத் 24:4-41; 1 தீமோ 4:1-16; 2 தீமோ 3:1-13; 4:1-4; 2 தெச 2:1-12; 2 பேதுரு 2: யூதா 1:3-18).
லூக்கா 18:8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.

தண்டனையில் ஒன்று " உபத்திரவ காலம்". உலகம் இதுவரை கண்டிராத ஒரு உபத்திரவ காலத்தை தண்டனையாக காணும் ( மத் 24:15-24; வெளி 6:1-19:10; தானி 12:1 ). சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாத மனிதர் அழிக்கப்படும்படியாக கொடிய வஞ்சகத்தை அவர்களிடம் தேவன் அனுப்புவார் ( 2 தெச 2:8-12; வெளி 13; 16:13-16; 19:20 ).
7. தேவனுடைய மீட்பின் ஏற்பாடு: இக்காலத்துக்கும் மற்ற எல்லா காலத்துக்குமான மீட்பு - இயேசுவின் சிலுவை மரணம் ( 1 கொரி 1:18-24; கொலோ 1:12-20; 2:14-17; 1 பேதுரு 2:24). முந்தைய கால மக்கள் இயேசுவின் சிலுவை மரணத்தை விசுவாசத்தினால் முன்னோக்கி பார்த்து அதன் பலன்களை பெற்றுக்கொண்டார்கள். இப்போதைய கால மக்கள் இயேசுவின் சிலுவை மரணத்தை விசுவாசத்தினால் பின்னோக்கி பார்த்து அதன் பலன்களை பெற்றுக்கொள்கிறார்கள் ( ரோமர் 3:24-25; எபே 2:8-9); எபி 11 ). தேவன் மனுக்குலத்துக்கு பதிலாக மரிக்கும்படி தன் குமாரனை அனுப்பினார். அவரில் விசுவாசிக்கும் எவரும் முழுமையாக மீட்கப்படுவார்கள், ஒப்புரவாக்கப்படுவார்கள், மீண்டும் தேவனுடைய சித்தப்படி ஆளுகை செய்வார்கள் ( சங் 8; கலா 3:13; எபே 2:11-18; எபி 2:9-18; 1 பேதுரு 1:18-23).

தெய்வீக அரசாட்சி காலம்; ஆயிர வருட அரசாட்சி:
வெளி 19:11-20:15.
1. சிறப்பு அம்சங்கள்: மனித அரசாங்கங்களுக்கு பதிலாக தெய்வீக அரசாங்கம் ஏற்படுத்தப்படும். தேவன் பூமியை ஆளுவதன் தொடக்கமாக இந்த 1000 வருடங்கள் இருக்கும் ( வெளி 20:1-10 ). ஆதாமின் வீழ்ச்சிக்கு பின் முதன் முறையாக மனிதன் சுதந்திரமாக, எல்லா விதத்திலும் பரிபூரண சூழ்நிலைகளோடு இருப்பான். மரணதண்டனைக்கேற்ற பாவம் செய்தால் மாத்திரம் மரண தண்டனை கொடுக்கப்படும். இயற்கையில் மனிதனுக்கிருக்கிற உணர்வுகள், மனப்பாங்கு, இச்சைகள் இருக்கும். ஆனாலும் அவற்றை மேற்கொள்வ தற்கான வல்லமை அதிகமாக இருக்கும். ஏனெனில் சாத்தானின் வல்லமையோ, ஈர்ப்போ, நோயோ, மற்ற சரீர உபாதைகளோ இருக்காது. இயேசுவும், உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களும், ஆயிர வருட அரசாட்சியில் தொடங்கி, வரப்போகும் தலைமுறைகளை நித்தியமாக ஆளுகை செய்வார்கள். இக்காலத்தின் கடைசியில், இயேசுகிறிஸ்துவும், உண்மையான தூதர்களும், உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களும் வந்து பூமியில் கிளர்ச் சியை அடக்குவார்கள். மனித ஆட்சி காலங்கள் இத்துடன் நிறைவு பெறும். தேவன் அனைத்து சாபங்களை யும் நீக்கிப்போடுவார் ( மத் 24:29-31; 25:31-46; 1 கொரி 15:24-28; 2 தெச 1:7-10; வெளி 19:11-20:10; 22:3 ).
2. காலம்: இயேசுவின் இரண்டாம் வருகையில், அர்மகெதோன் யுத்தத்தில், சாத்தானுடைய கட்டப்படுதலில் ( மத் 24:29-31; 25:31-46; வெளி 19:11-20:3) இருந்து - சாத்தான் கட்டவிழ்க்கப்படுவது, இரண்டாம் உயிர்த்தெழுதல், மகா வெள்ளை சிங்கான நியாயத்தீர்ப்பு, வானமும் பூமியும் புதுப்பிக்கப்படுதல், புதிய வானங்கள் புதிய பூமியின் தொடக்கம் வரை; 1000 வருடங்கள் ( வெளி 20:1-15: 21:1; 2 பேதுரு 3:10-13 ).
3. கட்டளை: இயேசுவுக்கு, உயிர்த்தெழுந்து ஆளும் பரிசுத்தவான்களுக்கும், ராஜ்யத்தின் பொதுவான ஆவிக்குரிய கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும். தேவனுடைய சித்தத்துக்கு ஒப்புக்கொண்டு நடக்க வேண்டும் ( ஏசாயா 2:2-4; சக 14:11-21; வெளி 5:10; 11:15; 20:1-10 ).
4. தேவனுடைய குறிக்கோள்: பூமியில் எதிர்ப்பை முழுமையாக அடக்குவது; கடந்த காலத்தின் நித்திய உடன்படிக்கைகளை நிறைவேற்றுவது; இயேசுகிறிஸ்துவுக்கும் பரிசுத்தவான்களுக்கும் எதிரான செயல்களுக்கு எல்லாம் பழிதீர்க்கப்படுவது; உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களுக்கு எல்லாம் ஆசாரிய, ராஜ பொறுப்புகள் கொடுப்பது; தேசங்களை நீதியாக நியாயந்தீர்த்து, பூமியை அதன் அசல் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைப்பது; இஸ்ரவேலை மீண்டும் எல்லா தேசங்களுக்கும் தலைநகரமாக வைப்பது; இயேசுவின் எல்லா எதிரிகளையும் அவரது காலின் கீழ் ஆக்கி பூமியை மீண்டும் வீழ்ச்சிக்கு முன்பு இருந்த பரிபூரண நிலமைக்கு கொண்டு வருவது.
5. தோல்வி: இதற்கு முன்பு இருந்த காலங்களை போலவே இக்காலத்திலும் சிலர் தேவனையும் அவரது நீதியையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆயிர வருட அரசாட்சியின் முடிவில் சாத்தான் பாதாளத்தில் இருந்து கட்டவிழ்த்து விடப்படுவான். அப்போது தேவனை ஏற்காத பலர் அவனுடன் சேர்ந்து தேவனுடைய அரசாட்சியை முறியடிக்க முயற்சிப்பார்கள் ( வெளி 20:7-10 ).
6.
பாவத்துக்கான தண்டனை: வானத்தில் இருந்து அக்கினி இறங்கி எதிர்ப்பாளர்களை எல்லாம் அழிக்கும் ( வெளி 20:7-10 ). இப்படியாக தேவனை எதிர்த்த லூசிபருக்கும், உண்மையற்ற தூதர்களுக்கும், அசுத்த ஆவிகளுக்கும் முடிவு கட்டப்படும். மனித எதிரிகள் அனைவரும் உயிர்தெழுந்து தேவனால் நியாயந்தீர்க்கப்பட்டு மற்ற எதிரிகளோடு நித்திய நரகத்தில் தள்ளப்படுவார்கள்( ஏசாயா 66:22-24; மத் 25:41,46; வெளி 14:9-11; 19:20; 20:10; 21:15; 22:8 ). உண்மையுள்ள தேவ தூதர்களும், மனிதர்களும் தேவனுக்கு ஊழியம் செய்து, அகிலம் முழுவதையும் தேவன் பரிபாலிப்பதற்கு என்றென்றைக்கும் நித்தியமாக உதவியாக இருப்பார்கள் ( ஆதி 8:22; 9:12,16; தானி 2:44-45; 7:13-14,18,27; வெளி 1:5; 5:10; 22:4-5 ).
7. தேவனுடைய மீட்புக்கான ஏற்பாடு: இந்த பூமியில் வாழும்போது யார் எல்லாம் இயேசுவின் மூலம் கிடைக்கும் இரட்சிப்பை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களுக்கு தேவனுடைய மீட்பு நித்தியமாக இருக்கும். இயேசுவோடு கூட 1000 வருட அரசாட்சியில் ஆளும் உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்கள் இச்சமயத்தில் எல்லா பாவத்திலிருந்தும், தேவனை எதிர்ப்பதில் இருந்தும் முழுமையாக இரட்சிக்கப்பட்டிருப்பார்கள். பூமியில் கடைசியாக நடைபெறும் போரில் தேவனுக்கு உண்மையாக இருந்த அக்கால மக்கள் அனைவரும் இரட்சிக்கப்பட்டு தேவனுடைய நித்திய ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள். அவர்கள் அனைவரும் நித்தியமாக பலுகிப்பெருகி தேவன் ஆதியில் எந்த நோக்கத்தோடு மனிதனை சிருஷ்டித்தாரோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவார்கள். ( ஆதி 1:26-28; 8:22; 9:12,16; 17:1-8; 2 சாமுவேல் 7; ஏசாயா 9:6-7; தானியேல் 2:44-45; 7:13-14,18,27; எசே 43:7; லூக்கா 1:32-33; வெளி 11:15; 22:4-5.) மீட்பின் முழு பலன்களோடு நீதிமான்கள் நித்தியமாக சுகித்திருப்பார்கள் ( ரோமர் 8:21-24; வெளி 5:10; 22:1-5 ).
( குறிப்பு: இதன் தொடர்ச்சியாக – சபை எடுத்துக்கொள்ளப்படுதல் (Rapture), உபத்திரவக்காலம், இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை, ஆயிர வருட அரசாட்சி, வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு – போன்ற வேதபாடங்கள் வெளியிடப்படும். தயவு செய்து தொடர்ந்து படித்து பயனடையுங்கள்)


ஆமென்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஆசீர்வாதமாக இருங்கள்.

Bro D.Vergin Kumar.
If you need any clarifications, if you have any doubts kindly contact me at deeveekumar@yahoo.com             Ph: 968 25572195, 99663557. 99638328.


Resources; International Standard Bible Encyclopedia, The Bible Exposition commentary - New Testament, Dakes bible commentary, Andrew Wommack Bible commentary, Vine's Expository Dictionary of Old Testament Words, Vine's Expository Dictionary of New Testament Words, Strong's Bible Concordance, Vincent's Word Studies in the New Testament, Scofield's Bible Dispensational Plan. All Bible quotes are from King James Version. In Tamil Bible, some verses me be above or below than the mentioned English Bible verse.

--------------------------