Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 30/07/2016

சாட்சியாயிருப்பீர்கள்

 

உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து பரலோகத்துக்கு ஏறி செல்வதற்கு முன்பு கடைசியாக தன் சீஷர்களைப் பார்த்து பேசின அற்புதமான ஒரு வார்த்தை பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள் அப் 1:8

அதாவது நீங்கள் சாட்சியாக வாழ்வீர்கள் உங்களுடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு சாட்சியாக இருக்கும். பரிசுத்த ஆவியானவர் கொடுக்கிற பெலன் என்னவென்றால் சாட்சியாக வாழ்வதற்குரிய பெலன். மேல் வீட்டு அறையில் பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்பட்ட பிறகு சீஷர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருந்த பல சம்பவங்களை பரிசுத்த வேதாகமத்திலே பார்க்க முடியும் இவர்களை பார்த்த புறஜாதி ஜனங்கள் இவர்கள் வித்தியாசமாக காணப்படுகிறார்கள் எவ்வளவு அன்பாக ஐக்கியமாக இருக்கிறார்கள் எவ்வளவு சாந்தமாக இருக்கிறார்கள், எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று சொல்லி அவர்களை மேன்மைப்படுத்தினார்கள்.

இன்றைக்கு நம்மை பார்க்கிற மக்கள் நம்மை மேன்மைபடுத்தும்படி நம்முடைய வாழ்க்கை இருக்க வேண்டும். நாம் வாழ்கிற வாழ்க்கையை பார்த்து மற்றவரக்ள் இயேசுவை அறிந்து கொள்ள வேண்டும் அதற்கு தான் ஆவியானவர் நமக்கு பெலன் கொடுக்கிறார்.

யோசேப்பு ஒரு பெரிய செல்வந்தனுடைய குமாரன் நல்ல வசதியாக வாழ்ந்த அவருடைய தகப்பனுடைய வீட்டிலிருந்து  பிரிக்கப்பட்டு அடிமையாக கொண்டு வரப்பட்டு ஒரு வீட்டிலே வேலைக்காரனாக வைக்கப்பட்டு இருக்கிறான். ஆனால் யோசேப்பு ஆண்டவர் ஏன் எனக்கு இப்படி செய்தார் ஏன் என்னுடைய தகப்பனை வீட்டு என்னை பிரித்தார் எவ்வளவு வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தேன் என்று முறுமுறுத்து கொண்டு ஆண்டவரை கேள்வி கேட்டு கொண்டிருக்கவில்லை. என் எதிர்காலம் என்னவாகும் என்று அழுது கொண்டிருக்கவில்லை ஆண்டவர் தன்னை வைத்திருந்த இடத்தில் அவருக்கு சாட்சியாக இருந்தார். போத்திபார் யோசேப்பை குறித்து சொல்லும் போது

ஆதி 39:3,4- கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்.

கர்த்தர் யோசேப்போடே இருக்கிறார் என்று அவனுடைய எஜமான் கண்டான் என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது. அதாவது யோசேப்பு சாட்சி சொல்லவில்லை சாட்சியாக வாழ்ந்தார். எப்படியென்றால் யோசேப்பை பார்த்த உடனே கர்த்தர் யோசேப்போடே இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டான் என்று வேதம் சொல்லுகிறது.

நாம் ஒரு சாட்சியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் அதை நம்முடைய இருதயம் வாஞ்சிக்க வேண்டும் அடுத்து எகிப்து தேசத்தில் ராஜாவாக இருந்த பார்வோன் யோசேப்பை குறித்து சாட்சி கொடுக்கும் போது

ஆதி 41:38-40 - அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான்.

பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை.

நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் என்றான்.

 

அதாவது யோசேப்பு தேவ ஆவியை பெற்ற ஒரு மனிதனாக இருக்கிறான் என்று பார்வோன் சாட்சி கொடுக்கிறான் ஆகவே என் தேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக வைக்கிறேன் என்றான். யோசேப்பு பேசின ஞானம் அவர் பேசின முறை அவருடைய தாழ்மை எல்லாவற்றையும் பார்த்து இவன் விசேஷித்த ஆவியை பெற்றவன் இவன் சாதாரண மனிதன் அல்ல என்று பார்வோன் அறிந்து கொள்கிறான். நம்முடைய பேச்சு நம்முடைய நடக்கை நம்முடைய செயல்கள் மற்றவர்கள் பார்க்கும் போது இவர்கள் தேவனுடைய பிள்ளைகள் என்று மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட சாட்சியான வாழ்க்கை நமக்குள்ளே காணப்பட வேண்டும்.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் எப்பொழுதும் வேத வசனத்தை பற்றியே ஓயாமல் பேசிக் கொண்டிருப்பார் ஆனால் வீட்டில் சாட்சியுள்ள ஜீவிதம் இல்லை யுத்தங்களும் யுத்தங்களின் செய்தியும் தான் வீட்டிலிருந்து வரும். இப்படி இருக்கும் போது சத்தியத்தை பேசி என்ன பயன்? ஒரு முறை ஒரு சகோதரர் ஒரு சபையிலே சாட்சி கொடுத்தார். அவர் ஒரு நடிகரை தெய்வமாக கொண்டிருந்தார் அவர் தான் எனக்கு உயிர் அவர் தான் எனக்கு தெய்வம் மற்றபடி எந்த தெய்வத்தையும் வணங்குவதே இல்லை அதுமட்டுமல்லாமல் யாராவது கடவுளைப் பற்றி பேசினால் எதிர் கேள்வி கேட்பது இப்படியாக இருந்தேன்.

ஒரு முறை வேலை தேடி சென்னை பட்டணம் வந்த போது என் நண்பர் ஒருவரோடு கூட சில மாதங்கள் தங்கினேன் அவர் ஒரு கிறிஸ்தவ நண்பர். மூன்று மாதங்கள் அவர் அறையில் தங்கியிருந்து வேலை தேடினேன். அப்பொழுது நான் அந்த நண்பருடைய அன்றாட வாழ்க்கையை பார்த்தேன். ஒரு நாள் கூட அவர் எனக்கு இயேசுவை பற்றி சொல்லவும் இல்லை என்னை ஆலயத்துக்கு அழைக்கவும் இல்லை.

தினமும் அவர் வேதம் வாசிப்பார் ஜெபம் செய்வார் அவருடைய பேச்சு அவருடைய தாழ்மை அவருடைய சுபாவம் அவருடைய அன்பு இவையெல்லாம் ஒவ்வொரு நாளும் நான் கவனித்து கொண்டே இருந்தேன். கொஞ்ச நாள்கள் நான் அவருடைய வாழ்க்கையை கவனித்த பிறகு இவர் வணங்குகிற இயேசு தான் மெய்யான ஆண்டவர் என்று அறிந்து கொண்டேன் ஏனென்றால் அவருடைய வாழ்க்கை என்னோடு கூட பேசியது. ஒரு மனிதனுடைய வாழ்க்கை ஒரு வாலிபனை இயேசுவுக்குள் கொண்டு வந்தது. அப்படிபட்ட ஒரு வாழ்க்கை வாழ தான் இயேசு நம்மை அழைத்திருக்கிறார்.

ஆண்டவரே என்னுடைய வாழ்க்கையை பார்த்து மற்றவர்கள் இயேசுவை ஏற்று கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட சாட்சியுள்ள வாழ்க்கை வாழ எனக்கு கிருபை தாரும் என்று சொல்லி நாம் ஆண்டவரிடத்தில் கேட்க வேண்டும்.

ஒரு சகோதரர் இப்படியாக சொன்னார் எங்கள் வீட்டில் எல்லாரும் என்னை கண்டால் நடுங்குவார்கள் நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்த போதிலும் பயங்கரமான முரடனாக வாழ்ந்து கொண்டிருந்தேன் என்னுடைய தாயார் யார் இவனுக்கு மனைவியாக வாய்த்து வேதனைப் பட போகிரார்களோ என்று சொல்வார்கள் என் மனைவியோ ரொம்ப பொறுமையாக அமைதியாக சாந்தமாக எப்பொழுதும் ஜெபம் பண்ணி கொண்டே இருப்பாள் அவளுடைய வாழ்க்கை எனக்குள்ளே ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. என் மனைவி என்னிடம் வந்து நீங்கள் செய்வது தவறு மனம் திரும்ப வேண்டும் என்று ஒரு நாள் கூட பேசியதில்லை.

ஒரு வேளை அவள் என்னிடம் எதிர்த்து பேசியிருந்தால் நான் இன்னும் முரடனாக மாறியிருப்பேன் அவளுக்குள்ளே காணப்பட்ட கிறிஸ்துவின் சுபாவம் என்னை மாற்றி விட்டது. உங்கள் கணவர் உங்களை குறித்து சாட்சி சொல்ல முடியுமா?

1பேதுரு 3:1-4 - அந்தப்படி மனைவிகளே, உங்கள்சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,

போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.

மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்,

அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.

 

ஆவியானவர் நமக்குள்ளே வரும் போது சாட்சியுள்ள வாழ்க்கை வாழ பெலன் கொடுக்கிறார். பிலிப்பியர் 4:5ல் உங்கள் சாந்த குணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

இன்றைக்கு நம்முடைய சாந்தகுணத்தை பற்றி அடுத்தவர்கள் சாட்சியிடுகிறார்களா? கணவனை குறித்து மனைவி சாட்சி கொடுக்க வேண்டும் மனைவியைக் குறித்து கணவன் சாட்சி கொடுக்க வேண்டும் வீட்டில் ஒருவருக்கொருவர் சாட்சியை வெளிப்படுத்த வேண்டும் வேலைஸ்தலத்தில் எஜமானைக் குறித்தும் நற் சாட்சி சொல்ல வேண்டும். ஒருமுறை டி.ஜி.யஸ் தினகரன் ஐயா வங்கியில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது சக ஊழியர் இவருக்கு போன் செய்து வேலை சம்பந்தமான ஒரு காரியத்தை குறித்து எனக்கு புரியவில்லை கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள் என்றார்.

சகோதரர் பொறுமையுடன் விளக்கி சொல்லி விட்டு போனை வைத்து விட்டார்கள். சிறிது நேரம் கழித்து அந்த சக ஊழியர் மீண்டும் போன் செய்து மறுபடியும் விளக்கி தரும்படி கேட்டுக் கொண்டாராம். சகோதரரும் விளக்கிச் சொல்லிவிட்டு போனை வைத்தார். மறுபடியும் அந்த சக ஊழியர் உண்மையிலே எனக்கு புரியவில்லை ஆகவே மறுபடியும் சொல்லித் தரும்படிக் கேட்டுக் கொண்டாராம். இதைக் கேட்ட சகோதரருக்கு கோபம் வந்து விட்டது. எனக்கே இங்கே நிறைய வேலை இருக்கிறது உங்களிடமே எப்போதும் பேசிக் கொண்டிருக்க முடியுமா போனை வையுங்கள் என்று சொல்லி அவர் போனை வைக்கும் முன்னே கட் பண்ணி விட்டார்கள்.

அடுத்த நாள் அந்த சக ஊழியர் சகோதரிடம் நீங்க சொன்ன மூன்று முறையும் எனக்கு புரியவில்லை. நீங்கள் இப்படி போனை கட் பண்ணுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் நீங்கள் பிரசங்கம் பண்ணுகிறீர்கள். இயேசுவுக்கு ஊழியம் செய்கிறீர்கள். இப்படி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்றார். அந்த வார்த்தை சகோதரனின் உள்ளத்தை உடைத்ததாம் ஆண்டவரே நானே இப்படி சாட்சியில்லாமல் போய் விட்டேனே இனி எப்படி அவரிடம் கிறிஸ்துவை பற்றி சொல்லுவேன். என் சாட்சியை கெடுத்து விட்டேனே என்னை மன்னியும் என்று சொல்லி தான் சொன்ன வார்த்தைக்காக 3 நாட்கள் உபவாசித்து ஜெபித்தார்களாம். இன்றைக்கு நம்மிடம் காணப்படுவது சாந்த குணத்திற்கு எதிரான கோபம் எரிச்சல் என்ற மாம்ச கிரியைகள்

எபேசியர் 4: 26. நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;

27.
பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.

29. கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.

30.
அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.

31.
சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.

32.
ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

 

கோபம் கர்த்தருக்கு விரோதமான பகை கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்க மாட்டாதே என்று வேதம் சொல்லுகிறது. நம்மிடம் இருக்கும் கோபத்தினாலே கெட்ட வார்த்தை பேசுகிறோம். பிறகு தூசிக்கிறோம். மூர்க்கமும் கூக்குரலும் தூஷணமும் நம் வாயில் வெளிப்படுத்தப்படுகிறது. இப்படி செய்து தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப் படுத்துகிறோம். ஒரு முறை ஒரு ஊழியக்காரர் ஒரு உபவாச ஜெபத்துக்கு சென்ற போது பிசாசு பிடித்த பெண்ணை விரட்டும்படி கொண்டு வந்தார்கள் இவர் அந்த பிசாசை விரட்ட அதிக பிரயாசம் எடுத்தும் அது போக மாட்டேன் என்று சொல்லி கொண்டிருந்தது.

இறுதியில் அந்த பிசாசு அவரை பார்த்து நீ இன்றைக்கு உன் மனைவிடம் சண்டை போட்டு கொண்டு வந்திருக்கிறாய் என்னை விரட்ட உனக்கு தகுதியில்லை என்று சொன்னது. தேவனுக்கு கீழ்ப்படியுங்கள் பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் என்று வேதம் சொல்லுகிறது.

அடுத்ததாக நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம் இருதயத்தில் ஊற்றப்படுகிறது. அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது, ரோமர் 5:5

இப்படி பரிசுத்த ஆவியினாலே நடத்தபடுகிறவர்கள், தான் தேவனுடைய புத்திரர்கள் [ ரோமர் 8:4 ] எனப்படுவார்கள் இவர்கள் மாத்திரமே ஆவியின் கனியை தங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்துவார்கள், 1தெச 3:5ல் கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக என்று பவுல் சொன்னது போல் இன்றைக்கு அனேகரிடம் கிறிஸ்துவின் நீடிய பொறுமை இல்லை ஏனென்றால் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் இல்லை. மேலும் பரிசுத்த ஆவியினாவரால் முழுவதும் ஆளுகை செய்யப்பட்டு இருப்பவர்கள் ஆவியின் கனியை எந்த சூழ்நிலையிலும் வெளிப்படுத்துவார்கள்

கலா 5: 22. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,

23.
சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

 

தேவனுடைய ஆவியால் நடத்தப்படுகிறவர்கள் அவர்களுடைய சாட்சியுள்ள ஜீவியத்தினால் அறிந்து கொள்ள முடியும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அவர்களுடைய கனிகளால் அவர்களை அறிவீர்கள் என்றார்.

மத் 7: 17. அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.
18.
நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.
19.
நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.
20.
ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.

 நீங்கள் நல்ல மரமா? கெட்ட மரமா? நல்ல கனிகளை கொடுக்கிறீர்களா? கெட்ட கனிகளை கொடுக்கிறீர்களா? என்பதை நீங்கள் நிதானித்து அறியுங்கள் உங்கள் கனிகளினால் உங்கள் ஆவிக்குறிய வாழ்க்கையை அறிந்து கொள்ளுங்கள். ஒரு சபையில் அன்னிய பாஷை பேசலாம் பரிசுத்த ஆவியினாலே நிறையலாம். ஆரவாரத்துடனே தேவனை துதிக்கலாம் ஆனால் அந்த சபையில் ஆவிக்குரிய அங்கீகாரம் ஜனங்கள் கனிக் கொடுப்பதை வைத்தே தீர்மானிக்க பட வேண்டும். ஒரு ஊழியக்காரனின் ஆவிக்குரிய அங்கீகாரம் அவனுடைய ஜீவியத்தில் வெளிப்படுத்தப்படும் கனியை வைத்தே தீர்மானிக்க வேண்டும். ஊழியம் செய்யாவிட்டால் அதன் மூலம் ஒருபோதும் தேவனுடைய நாமம் தூஷிக்கப்படாது. ஆனால் நீங்கள் கனிக் கொடுக்கவில்லையென்றால் தேவனுடைய நாமம் தூஷிக்கப்படும்.

ஊழியம் மற்றவர்களை பரலோகத்துக்கு தகுதிபடுத்தும். கனி கொடுக்கிற ஜீவிதமோ நம்மை பரலோகத்துக்கு கொண்டு செல்லும். ஊழியம் சிறப்பாக செய்தால் நம்முடைய வாழ்க்கை சிறப்பாகும் என்பது சரியல்ல. ஆனால் கனி கொடுக்கிற ஜீவியத்தால் ஊழியம் சிறப்படையும் என்பது நிச்சயம். ஊழியம் செய்ய தேவன் நம்மை அழைக்கவில்லை ஆனால் நாம் எல்லாருமே கிறிஸ்துவைப் போல உயர்ந்த சுபாவங்களோடு வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

ரோமர் 8:29 - தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

 நாம் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ வில்லையென்றால் பரலோகராஜ்ஜியத்திற்கு செல்ல முடியாது. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்று இயேசு கிறிஸ்து எச்சரிக்கிறார். இந்த வசனத்தை குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்

யோவான் 15: 2. என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.

4. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

8. நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.

 

ஆவியானவர் உங்களிடத்தில் வரும் போது கிறிஸ்துவின் சுபாவத்தை உங்களுக்குள் கொண்டு வருவார் அந்த மாற்றத்தை உங்களுக்குள் கொண்டு வர நீங்கள் உங்கள் இருதயத்தில் ஆவியானவரை வாஞ்சிக்க வேண்டும் இதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை

கிறிஸ்துவின் சுபாவம் உங்கள் மூலமாய் வெளிப்பட வேண்டும். நீங்கள் பெற்று கொண்ட ஆவிக்குரிய ஆசீர்வாதத்தின் விளைவு கனிகளாக வெளிப்பட வேண்டும். ஆவியின் கனி உங்களுக்குள்ளே உருவாக வேண்டுமானால் ஒரு காரியம் நடக்க வேண்டும்

ரோமர் 8:13 - மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.

 

மாம்சத்தின் சுபாவங்களான பெருமை, கோபம், எரிச்சல் வைராக்கியம், பகைகள், சண்டைகள் போன்ற பாவ சுபாவங்கள் நமக்குள் இருக்கிறது. அவைகள் அழிக்கப்பட்டால் தான் ஆவியின் கனி நமக்குள் உருவாக முடியும். பரிசுத்த ஆவியானவர் அக்கினியாக நமக்குள் இறங்கி வரும் போது நம்முடைய ஜென்ம சுபாவங்களை அழித்து போடுகிறார்.

ஏசாயா 4:3-அப்பொழுது, ஆண்டவர், சீயோன் குமாரத்திகளின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடும்போது..

 

வயல் வெளியில் பயிர் செய்யும் போது அறுவடை முடிந்த பிறகு பயிரின் கீழ் பகுதியில் வேர் மாத்திரம் இருக்கும் அடுத்து அந்த வயலை உழுவார்கள், மரமடிப்பார்கள், சமப்படுத்துவார்கள் அந்த வேர் பகுதியெல்லாம் மக்கி போகும் அந்த வேர் பகுதியை எரித்து விடுவார்கள். ஒருவேளை அந்த வேர்கள் எரிக்கபடவில்லையென்றால் புதிய பயிர் பயிரிடும் போது அது நல்ல பெலனை கொடுக்காது.

மனிதர்கள் பாவத்திலே பிறந்து பாவத்திலே வளர்ந்து வந்ததால் இரட்சிக்கப்பட்ட பிறகும் சில பாவ ஜென்ம சுபாவங்களான கோபம் எரிச்சல் வைராக்கியம் பகைகள் போன்ற வேர்கள் அவர்களுக்குள் இருக்கதான் செய்கிறது.

அனேகருடைய வாழ்க்கையில் அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டது. ஆனால் ஜென்ம சுபாவம் என்ற வேர் அவர்களிடத்தில் மறைந்து இருக்கிறது. அவ்வப்போது அது வெளிப்படுகிறது. ஆவியானவர் அதை சுட்டெரிக்க விரும்புகிறார். அப்படி சுட்டெரிக்கப்பட்டு விட்டால் ஆவியின் கனி உங்களுக்குள் உருவாகும் அப்பொழுது நீங்கள் இயேசுவுக்கு சாட்சியாய் இருப்பீர்கள் உங்களுடைய வாழ்க்கையில் இயேசுவை காண்பீர்கள்.

வாக்குத்தத்தங்களின் தேவனே பெலனடைந்து சாட்சிகளாயிருப்பீர்கள் என்று வாக்கு கொடுத்தீரே உமக்கு ஸ்தோத்திரம்.

நானும் உம்மைப் போல உமக்கு சாட்சியாய் வாழ என்னை அற்பணிக்கிறேன். கடைசி நாட்களில் யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று வாக்கு கொடுத்தீரே என் மீதும் உம் ஆவியை ஊற்றும் என்னையும் உம் ஆவியால் நிரப்பி என்னைப் பெலப்படுத்தும். உலர்ந்து போன என் ஆவிக்குரிய வாழ்க்கையை உயிர்ப்பியும் என்னில் நீர் மகிமைபட வேண்டும் என் வாழ்க்கையில் மற்றவர்கள் உம்மை காண வேண்டும். அதற்காக என்னை ஒப்பு கொடுக்கிறேன். ஆமென்.