Tamil Christian Website

Tamil Christian Website

Posted on: 03/06/2014

தேவனில் நிலைத்திருப்பவன்

சகோதரி. அனு ஃபெஸ்லின் இப்ரா தமிழ் சபை

 

யோவான்: 15: 4 என்னில் நிலைத்திருங்கள் நானும் உங்களில் நிலைத்திருப்பேன்.கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்

 

நிலைத்திருத்தல் என்றால் ஒத்துபோவது, பின்பற்றுவது அல்லது கட்டளையை கைகொள்ளுதல் எனப்படும். நாம் தேவனில் நிலைத்திருத்தல் என்பது அவரை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவரை பின்பற்றி அவர் நம்மிலும் நாம் அவரிலும் வாழும் வாழ்க்கையாகும்.செடியிலிருந்து வெட்டி எறியப்பட்ட கொடி காய்ந்து போகும் கனி கொடுப்பதில்லை. அதுபோல நாமும் தேவனில் நிலைத்திருந்தால் மட்டுமே கனி கொடுக்க முடியும்.மேலும் மத்தேயு 10:22 ம்வசனத்தில் இயேசு முடிவு பரியந்தம் நிலைத்திருக்கிறவனே இரட்ச்சிக்கப் படுவான் என்று சொல்லுகிறார். நிலைத்திருக்கிறது என்பது கிறிஸ்த்தவ வாழ்வில் முக்கியம் என்று நாம் காண முடியும். நாம் தேவனில் நிலைத்திருக்கிறோமா என்று வேதத்தின் மூலம் நம்மை ஆராய்ந்து பார்க்கலாம்.

 

அவரில் நிலைத்திருக்கிறவன் அவர் நடந்த படியே தானும் நடப்பான்

1 யோவான்2 அதிகாரம்6 ம்வசனம் சொல்லுகிறது, அவருக்குள் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவன் அவர் நடந்த படியே தானும் நடக்க வேண்டும். இயேசு தன்னுடைய ஊழியத்தின் பாதையில் நாம் வாழ மாதிரியை காண்பித்து சென்றார்.(யோ13: 15). இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் நமக்கு பல காரியங்களை செய்து மாதிரியாய் வாழ்ந்தார். அவரது அடிச்சுவடுகளை பின்பற்றுவது தான்  வேதம் நமக்கு போதிக்கும் வழி. இயேசுதன் வாழ்வில் தாழ்மையாய் பிறந்தார், தாழ்மையில் வாழ்ந்தார், சிலுவை பரியந்தம் தம்மை தாழ்த்தி உயிர் துறந்தார்.சிறுவயதிலே எருசலேம் தேவாலயத்தில் தேவனுகேற்ற காரியங்களை அறிய முற்பட்டார்.பாரம்பரியங்களை விட்டு தேவனுடைய சித்தம் செய்ய போதித்தார் (மத் 12:1-8). மற்றவர்களை குற்றப்படுத்தாமல் வாழ்ந்தார்.அதேப்போல நம்முடைய வாழ்விலும் நாம் எந்த சூழ்நிலையிலும் நாம் அவர் செய்த படி நாமும் செய்து நம் பேச்சிலும் செயலிலும், வாழ்விலும் அவரை பிரதிபலிக்க வேண்டும்.

 

அவரில் நிலைத்திருக்கிறவன் அவருடைய சித்தத்தின் படி செய்வான்

1 யோ2:17 சொல்லுகிறதுதேவனுடைய சித்தத்தின் படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். நாம் தேவனில் நிலைத்திருக்கிறவர்களாயிருந்தால் அவர் சித்தம் அறிந்து அதன் படி நம் வாழ்வை நடத்தி செல்ல வேண்டும். எபேசியர்5 ம் அதிகாரம்17 ம் வசனம்சொல்லுகிறதுநீங்கள் மதியற்றவர்களாய் இராமல் தேவனுடைய சித்தம் இன்னதென்றுஅறிந்துகொள்ளுங்கள். தேவனுடைய சித்தத்தின் படி செய்கிறவர்களை இயேசு தாயும் சகோதரனும் என்று நெருங்கிய உறவு வைத்திருக்கிறதை நாம் மத்தேயு 12:50 ல் பார்க்கலாம். சத்துரு நம்மை பல சூழ்நிலைகளில் உலகத்தின் சித்தமாகியமாம்சத்தின் இச்சைக்கும் கண்களின்இச்சைக்கும்ஜீவனத்தின் பெருமைக்கும்  நம்மை தள்ள முற்படுவது உண்டு. பல சூழ்நிலைகளில் கோபம், எரிச்சல் பொறாமை போன்ற நம்முடைய தவறான உணர்வுகள் நம்மை பாவத்துக்கு நேராக தள்ளுவது உண்டு. அழகானவற்றை பார்ப்பது, ஐசுவரியத்தை பார்த்து ஏங்குவது போன்ற கண்களின் இச்சைகளும் நம்மை இழுப்பதுஉண்டு. கை தட்டல்களுக்கும், கனமான உலக பெருமைகளுக்கும் ஏங்கி நாம் நம்மை பாவத்திற்கு இடம் கொடுப்பது உண்டு.எபேசியர்6:6 ல்பவுல் சொல்லுகிறார் மனுஷருக்கு பிரியமாய் இருக்கிரவர்களாக பார்வைக்கு ஊழியம் செய்யாமல் கிறிஸ்துவின் ஊழியக்காரராக மனப்பூர்வமாய்தேவனுடைய சித்தத்தின் படி செய்ய வேண்டும். நாம் எதை செய்தாலும் அதை தேவனுடைய நாம மகிமைக்கென்று அவர் சித்தத்தின் படிசெய்யும் பொது நாம் அவரில் நிலைத்திருக்க முடியும்.

 

அவரில் நிலைத்திருக்கிறவன் பாவம்செய்கிறதில்லை

தேவன் நம்மை இந்த உலகத்தில் ஒரு நோக்கத்தோடு படைத்திருக்கிறார். மனிதன்தன் சுய வழியை தேடி பாவத்திற்குள்ளாக விழுந்து போனான். பாவத்தின் பாரத்தை சுமக்க பிரயாசப்படும் மனுக்குலத்தை மீட்க தம் ஒரே புத்திரனை இந்த உலகத்தில் தந்து பாவ சுமைகளை போக்கினார். அந்த அனுபவத்திற்குள் வந்து இரட்சிப்பை விசுவாசத்தால் சுதந்தரித்த விசுவாசி அந்த பாவ வழிகளில் இருந்து தம்மை காத்துக்கொள்ளும் போது அவன் தேவனில் நிலைத்திருக்கிறான். 1 யோ3: 6 சொல்லுகிறது, அவரில் நிலைத்திருக்கிறவன் எவனும் பாவம் செய்கிறது இல்லை. மனிதனுடைய இச்சைகள் அவனை பாவத்திற்குள்ளாக இழுப்பதுண்டு என்று யாக்கோபு தன் நிருபத்தில் எழுதுகிறார். சுய இச்சை என்று சொல்லும்போது தீமையான ஆசை அல்லது தகுதியற்ற பொருளுக்கு ஆசைப்படுவது என்று நாம் புரிந்து கொள்ளலாம். நம்மை தாயின் கருவில் தெரிந்து கொண்ட தேவன், நம்மை பெயர் சொல்லி அழைத்த தேவன் நம்மை இவ்வளவாய் ஆசீர்வதித்திருக்கும்போது நாம் வாழும் உலகத்தின் தீமையான அழிவுள்ள பொருட்கள் மேல் இச்சை வைத்து நம் இரட்ச்சிப்பை வீணாக்காமல் நம்மை பாதுகாக்க வேண்டும். இயேசு நமக்காக செய்த நன்மைகளை நினைத்தவர்களாக பரிசுத்தத்தை தேடி பாவத்தை விட்டு விலக வேண்டும். தேவன் தங்கும் ஆலயமாகிய நம் சரீரத்தை பரிசுத்தமாய் எல்லா காவலோடும் காத்துக்கொள்ள வேண்டும்.

 

 

அவரில் நிலைத்திருக்கிறவன் அவர் கட்டளைகளை கைகொள்ளுவான்

நாம் தேவனுடைய கட்டளைகளை கைக்கொள்ளும்போது நாம் அவரில் நிலைத்திருக்கிறோம் என்று 1 யோ3: 24 ல் நாம் பார்க்கலாம். இயேசு சொல்லுகிறார், ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் என் வசனத்தை கைக்கொள்ளுவான். அவனில் தேவன் அன்பாய் இருப்பார். தேவன் மனிதனை படைத்தபோது அவனுக்கு ஒரு கட்டளையை கொடுத்தார். மனிதன் சத்துருவினால் வஞ்சிக்க பட்டு கட்டளையை மீறி தேவ உறவை விட்டு தன்னைமறைத்துக்கொள்ள முயற்ச்சிக்கிறான். மனிதனை சீர்படுத்த தேவன் பல தேவ மனிதர்கள் மூலம் கட்டளைகளை கொடுத்தார். மனிதன் தேவ கட்டளைகளை மீறி வழி தவறி போனான். ஒரு கட்டத்தில் மனிதன் தேவ கட்டளைகளை விட்டு தன் கற்பனைகளைமற்றவர்களுக்கு போதித்து தனக்கு சாதகமான மார்க்கங்களையும் பிரிவுகளையும் கூட்டங்களையும் ஏற்ப்படுத்திகொள்ள முயற்ச்சித்தான்(மத்7: 7,8).  பல இடங்களில் வெற்றியும் கண்டு கொண்டான். நாம் எச்சரிக்கையாய் இருக்க தேவன் நம்மை உனர்த்துகிறார். சகரியாவைகுறித்து வேதத்தில் பார்க்கும்போது அவன் கர்த்தரிட்ட எல்லா கற்பனைகளின் படியும் நியமங்களின் படியும் குற்றமற்றவனாய் நடந்தான். அதன் மூலம் இந்த உலகத்தின் இரட்சகருக்கு வழியை ஆயத்தம் பண்ணும் ஒரு வித்து அவன் குடும்பத்தில்உருவாகும் பாக்கியம் பெற்றான். அவருடையவார்த்தைகளின்படி செய்கிறவனை இயேசு கற்பாறையின் மேல் அஸ்திபாரம் போட்டுவீடு கட்டும் புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிட்டு சொல்லுகிறார். அந்த வீடு எந்த சூழ்நிலையிலும் அழியாமல் நிலைத்திருக்கும் என்று நாம் அறிய முடியும்.நாமும் அவர் கற்பனைகளின் படி நடக்கும்போது தேவனில் நிலைத்திருந்து கனி தர முடியும்.

 

அவரில் நிலைத்திருக்கிறவன் அன்பில் நிலைத்திருப்பான்

அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான்.(1 யோ 4: 16) . இயேசு எல்லா சூழ்நிலைகளிலும் அன்பை போதித்தார். இப்பொழுதும் அந்த தெய்வீக அன்பு பரிசுத்த ஆவியினால் நமக்கு ஊற்றப்படுகிறது என்று ரோமர் 5:5 ல் அறிந்து கொள்ள முடியும்.நாம் தேவனுடைய கற்பனைகளில் நிலைத்திருப்பதே அன்பு.யோசேப்புதன் சகோதரர்களால் துன்பப்படுத்தி விற்கபட்டான். தேவன் அவனை இராஜாவாக உயர்த்தினார். தன்னை துன்புறுத்தி அடிமையாய் விற்ற சகோதரர்கள் பஞ்ச காலத்தில் தன்னை தேடி வந்த போது கூடதன் அன்பை வெளிப்படுத்தினதை நாம் காண முடியும்.நம்அன்பு மாயமற்றதாக இருக்க கடவது என்று வேதம் போதிக்கிறது. பல மனிதர்கள் இந்த காலங்களில் மாயமுள்ள அன்பு வைப்பதை பார்க்க முடியும். நம் முகம் காணும்போது அன்பும் மற்ற நேரங்களில் வெறுப்பும் காட்டும் மனிதர்கள் ஏராளம். அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் தேவனில் நிலைத்திருக்க முடியாது என்று 1 யோ 4: 16 ம் வசனத்தில் நாம் புரிந்து கொள்ள முடியும். ஆதலால் நாம் இயேசு நமக்காக தம்மை சுகந்த வாசனையாய் கொடுத்து அன்பு கூர்ந்தது போல நாமும் ஒருவருக்கொருவர் அன்பு கூறவேண்டும்.

 

அவரில் நிலைத்திருக்கிறவன் இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைப் பண்ணுவான் இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்று லூக்காவின் சுசிஷேஷத்திலே நாம் பார்க்கலாம். உண்மையாய் தேவனை ஏற்றுக்கொண்டவர்களுடைய இருதயம் தேவ சிந்தையால் நிறைந்திருக்கும். எந்த சூழ்நிலைகளிலும் அந்த சிந்தை தங்கள் நாவில் வெளிப்படும். அப்படி அறிக்கை செய்யும் ஒரு மனிதன் இரட்சிக்க படுகிறான்என்று ரோமர் 10:9 ல்படிக்கிறோம். தேவனில் நிலைத்திருக்கிறான் என்று சொல்லுகிறவன் நிலையாய் அவரை அறிக்கை செய்கிறவனாய் இருக்க வேண்டும். அப்படி அறிக்கை செய்கிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறான். தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார் என்று1 யோ4:15 ல் வாசிக்கலாம்.

 

இந்த காலத்தில் அறிக்கை என்பது ஒரு கடமைக்காக மனிதர்கள் முன்பாக சொல்லுவது என்று பல கிறிஸ்த்தவர்கள் கூட தவறான அர்த்தம் கொண்டிருப்பது வேதனைக்குரிய காரியம். அறிக்கை செய்வது என்றால் நம் வாழ்வை முழுவதும் அர்ப்பணித்து இனி வரும் காலங்களை அவர் சித்தப்படி செய்ய நாம் ஒப்புக்கொடுப்பது என்று புரிந்து கொள்ளவேண்டும்.இராஜ சமூகத்திலே சமர்த்தராக காணப்பட்ட   சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ என்ற வாலிபர்களை அந்த இராஜா நிறுத்தின பொற்சிலையை வணங்க சொன்னபோது, நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைதப்புவிக்க வல்லவராய் இருக்கிறார் என்று செய்த அறிக்கை அவர்கள் தேவனில் நிலைத்திருக்கிறதை காண்பித்தது மட்டும் அல்லாமல் பலரை தேவனுக்கு நேராக நடத்தினதையும் நாம் அறிவோம். நாமும் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனை அறிக்கை செய்கிறவர்களாக இருக்கும்போது புது சிருஷ்டியாக அவரில் நிலைத்திருக்கலாம்.

 

அவருடைய மாம்சத்தை புசித்து இரத்தத்தை பானம் பண்ணுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான்

யோ6:56  வசனத்தில் இயேசு சொல்லுகிறார் என் மாம்சத்தை புசித்து என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவன் என்னில் நிலைத்திருக்கிறான்; நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். இயேசு அப்பத்தை கொடுக்கும்போது என்னை நினைவு கூறும்படி கொடுக்கும் சரீரம் என்றும் இரசத்தை கொடுக்கும்போது புதிய உடன்படிக்கையின் அடையாளமான இரத்தம் என்றும் சொன்னார். அவருடைய மாம்சத்தை புசித்து அவருடைய இரத்தத்தை பானம் பண்ணுகிற நாம் அவருடைய மரணத்தினால் நமக்கு உண்டான நன்மைகளை நாம் நினைவு கூர்ந்தவர்களாகவும்,அவர் நமக்கு ஏற்படுத்தின புதிய உடன்படிக்கையை நாம் ஏற்று கடைபிடிக்கிரவர்களாகவும் இருக்கவேண்டும்.


 

நாம் கிறிஸ்தவர்களாய் ஒருவேளை பல ஆண்டுகளாக வாழ்ந்திருக்கலாம். கிறிஸ்துவை பற்றி நாம் பலமுறை பேசியிருக்கலாம். இயேசு ராஜாதிராஜாவாய் வரும் நாள் மிகவும் சமீபமாய் இருக்கிறது.அன்று நம் இருதயங்களையும் செய்கைகளையும் அவர் ஆராய்ந்து அறிவார். ஒருவேளை நாம் உண்மை கிறிஸ்தவ வாழ்க்கையில் நிலைத்திருக்காமல் போனால் மின்னலைப்போல அவர் வரும் நாளில் நாம் எப்படி அவரை சிந்திப்போம்? ஒருவேளை அவர் உன்னை அறியேன் என்று நம்மை பார்த்து சொல்லுவாரானால் நாம் எங்கு செல்லுவோம்? நம்மை நாமே ஆராய்ந்து அறிந்து அவரில் நிலைத்திருக்கநம்மை ஒப்புக்கொடுப்போமா? நம் வாழ்வில் என்றும் வேதம் வாசித்து அவர் வழிகளை அறிந்து, அவர் நம் வாழ்வில் வைத்திருக்கும் சித்தம் அறிந்து, பாவத்தை வெறுத்து பரிசுத்த பாதை தேடி, அவர் கட்டளைகளை பின்பற்றி அதில் நடக்க முயர்ச்சிப்போமா? கிறிஸ்து அன்பாய் இருந்தது போல நாமும் மற்றவர்களிடம் அன்பாய் இருந்து நாள்தோறும் அவரை அறிக்கை செய்கிறவர்களாகவும் அவரை நினைவிகூர்ந்தவர்களாகவும் வாழ நம் வாழ்வை இப்பொழுதே ஒப்புக்கொடுப்போமா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அமென்!