Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 20/08/2016

கீலேயாத்தின் பிசின் தைலங்கள்

        எரேமியா 8:22

Bro. Edwin (Sohar - Oman)

பிசின் தைலங்கள்:

     1.தேவனுடைய வார்த்தை

      2.தேவனுடைய தழும்புகள்

      3.தேவனுடைய இரத்தம்

      4.தேவனுடைய ஆவி

      5.தேவனுடைய அன்பு

      6.தேவனுடைய பரிசுத்தம்

 

முன்னுரை:

ஜனங்கள் தங்களுடைய நோயை குணமாக்குவதற்காக பலவிதமான மருந்துகளையும் மருத்துவர்களையும் தேடிச் செல்வதுண்டு. இவர்களில் சிலர் காடுகாடாக சென்று இலை தழைகளை சேர்ப்பதுண்டு, சிலர் பரிகாரம் செய்வார்கள் அதாவது தங்களுடைய முன்னோர்கள் செய்த பாவத்தின் நிமித்தமே இந்த நோயானது தங்களுக்கு வந்திருக்கிறது என்று சொன்ன பிசாசின் கூட்டத்தினரின் சொல்லை நம்பி இன்றும் அனேக கிறிஸ்தவர்கள் பலவிதமான பரிகாரங்களை செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இதனால் இவர்களுடைய நோய் மாறுகிறதா? என்று பார்ப்பீர்களானால் ஒருபோதும் இல்லவே இல்லை என்று என்னால் ஆணித்தரமாக கூற முடியும்.

அதுமட்டுமல்லாமல் இதனிமித்தம் இவர்கள் இழந்து போகும் பணத்தின் மதிப்பிற்கு அளவே இல்லை மேலும் இவர்களிடம் காணப்பட்ட கொஞ்ச சமாதானமும் பறிபோய் பித்து பிடித்தவர்கள் போல நிற்பதை நம்மால் அனேக ஜனங்களுடைய வாழ்க்கையில் பார்க்க முடிகிறது. ஆனால் வேதம் என்ன சொல்லுகிறது என்றால்,

கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ இரணவைத்தியனும் அங்கே இல்லையோ பின்னே ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?  -  எரேமியா 8:22

கீலேயாத்திலே காணப்படும் பிசின் தைலங்கள் ஒவ்வொன்றையும் பின்வருமாறு வேத விளக்கங்களுடன் பார்க்கலாம்.

1.முதல் பிசின் தைலம்: தேவனுடைய வார்த்தை

வேதம் சொல்லுகிறது, இயேசு தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார் என்று சங்கீதம் 107:20ல் வாசிக்கிறோம்.

மேலே சொல்லப்பட்ட வசனத்திலிருந்து ஒரு காரியத்தை நம்மால் உறுதிப்படுத்தமுடிகிறது. அதுஎன்னவென்றால் தேவனுடைய வார்த்தைக்கு குணமாக்குகிற ஒரு குணாதிசயமும் உண்டு என்பதாக. பாருங்கள் தங்களுடைய நோயிலிருந்து [ பாவ ] குணமாகாமல் வேதனையுடன் சுற்றித் திரிந்து கொண்டு இருந்த இஸ்ரவேல் ஜனங்களிடம் தேவன் எரேமியாவைக் கொண்டு சொன்ன வார்த்தையை பார்க்கலாம், என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களினால் நானும் காயப்பட்டேன் கரிகறுத்திருக்கிறேன். திகைப்பு என்னைப் பிடித்தது.

கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரண வைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னே ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்? எரேமியா 8:21,22

மேலே சொன்ன வசனத்தின் அர்த்தம் என்னவென்றால் நம்முடைய கையில் ஒளஷதமாகிய தேவ வார்த்தை இருக்கிறது நாமோ அந்த வார்த்தையின் மகிமையை அறியாததின் நிமித்தம் இன்னும் எடுத்துப் பயன்படுத்தாமல் நம்முடைய பாரம்பரிய வியாதிகளையும் பிசாசினால் கொண்டுவரப்பட்ட நோய்களையும் சுமந்து கொண்டு பிரயாணம் செய்கிறோம்.

பாருங்கள் தேவனுடைய வார்த்தையின் மகிமையை அறிந்திருந்த நூற்றுக்கு அதிபதி என்ன சொல்லுகிறார், அப்பொழுது இயேசு அவர்களுடனே கூடப் போனார் வீட்டுக்குச் சமீபமான போது நூற்றுக்கு அதிபதி தன் சினேகிதரை நோக்கி நீங்கள் அவரிடத்தில் போய் ஆண்டவரே நீர் வருத்தப்பட வேண்டாம் நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல.

நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்று அவன் சொன்னதாக நாம் லூக்கா 7:6,7 ல் வாசித்து தேவ வார்த்தையில் அடங்கியிருக்கிற மகிமையை, அவனுடைய வேலைக்காரன் இயேசுவின் வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் குணமடைந்ததின் மூலம் உணரமுடிகிறது.

ஜெபித்து விட்டு மருத்துவர்களையும் மருந்து கடைகளையும் தேடி ஓடாமல் தேவனுடைய வார்த்தையை பயன்படுத்துங்கள் அப்பொழுது நிச்சயமாக குணமாவீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.

2.இரண்டாவது பிசின் தைலம்: தேவனுடைய தழும்புகள்

வேதம் சொல்லுகிறது, இயேசு கிறிஸ்துவின் தழும்புகளால் குணமாகிறோம் ஏசாயா 53:5

பழைய ஏற்பாட்டில் ஜனங்கள் பாவத்தை அடையாளம் கண்டு கொள்ளவும் அதுமட்டுமல்லாமல் பாவம் செய்தால் அதினிமித்தம் வரும் தண்டனைகளையும் அறியும்படியாக நியாயப்பிரமாணத்தை தம்முடைய ஊழியக்காரனாகிய மோசேயின் மூலம் ஜனங்களுக்கு கொடுத்தார். அதில் என்ன எழுதியிருந்தது என்றால் கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் அதாவது ஒருவன் ஒருவனுடைய பல்லை உடைத்தால் அவனுடைய பற்களும் உடைக்கப்பட வேண்டும் என்பது நியமமாய் இருந்தது என்று பார்க்கிறோம். இப்படியாக பாவத்தின் நிமித்தமாக ஏற்பட்ட நோய்களின் அடையாளத்தை அதாவது நோயின் நிமித்தம் ஏற்படுகிற தழும்புகளை குண்மாக்குவதற்காக நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சரீரத்திலே நம்முடைய தழும்புகளை ஏற்றுக் கொண்டதை நாம் சுவிசேஷங்களை வாசிக்கும் போது அறிந்து கொள்ள முடிகிறது இன்று அனேகர் தங்களுடைய நோயின் தழும்புகளை மாற்றுவதற்காக பலவிதமான மருந்துகளை தேடியும் பலவிதமான உகல புகழ்பெற்ற மருத்துவர்கள் இருக்கும் தேசங்களுக்கும் பணம் செலவழித்து போவதை நாம் பார்க்கிறோம். இதோ எத்தனை அறுவை சிகிச்சை செய்தாலும் மாறாத உங்கள் தழும்புகளை குணமாக்க வேண்டுமானால் இயேசு கிறிஸ்துவின் சிலுவை தழும்புகளை நோக்கிப் பாருங்கள் அப்பொழுது நிச்சயமாக நம்முடைய சரீரம் ஒரு குழந்தையைப் போல மாறிவிடும் என்பதில் சிறுதும் சந்தேகமேயில்லை.

பாருங்கள் மற்றவர்களை துன்பப்படுத்தி அதினிமித்தம் தனக்கு ஏற்பட்ட பாவத் தழும்புகளை அப்.பவுல் எப்படி குணமாக்கினார். வேதம் சொல்லுகிறது,

கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக் கொண்டிருக்கிறேன் [ கலா 6:17 பிப ]

நாமும் இயேசு கிறிஸ்துவின் தழும்புகளை நம்முடைய சரீரத்தில் ஏற்றுக் கொள்வோம். அப்பொழுது நம்முடைய நோயின் வடுக்கள் சரீரத்தில் ஒருபோதும் இருக்காது என்பதை விசுவாசியுங்கள்.

3.மூன்றாவது பிசின் தைலம்: தேவனுடைய இரத்தம்

வேதம் சொல்லுகிறது, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் 1யோவான்1:7

நியாயப் பிரமாணம் எல்லா மனுஷர்களையும் பாவம் என்கிற சிறைகளில் அடைத்து வைத்திருந்தது. அன்றைய நாட்களில் இவர்களின் பாவத்திற்காக செலுத்தப்பட்ட மிருக ஜீவன்களின் இரத்தம் இவர்கள் பாவங்களை மூடி வைத்திருந்ததே தவிர இவர்களுடைய பாவங்களை மன்னிப்பதற்கு அதாவது பாவ நோயை குணமாக்குவதற்கான எந்த ஒரு தகுதியும் இல்லை என்பதே உண்மையாகும்.

தம்மால் எழுதப்பட்ட கூற்றை நிறைவேற்றுவதற்காக எப்படியென்றால் பாவ நோய் மாறவேண்டுமானால் இரத்தம் சிந்தியே ஆக வேண்டும் என்பதற்காக தாமே சொர்க்கத்திலிருந்து இறங்கி வந்து தம்முடைய இரத்தத்தை அளவில்லாமல் சிந்தி நம்முடைய சாபங்களையும் நோய்களையும் சிலுவையில் ஆணி அடித்தார் என்று வேதம் நமக்கு தெளிவுப்படுத்துவதை நம்மால் பார்க்க முடிகிறது.

இன்னும் அனேக ஜனங்கள் குணமாகாமலேயே இருக்கிறார்கள் இதற்கு காரணம் என்னவென்றால், ஒரு ஊழியக்காரரிடம் இப்படியாக கேள்வி கேட்டார்களாம், உங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்கு வல்லமை உண்டு என்று சொல்கிறீர்களே பின்னே ஏன் இன்னும் அனேக ஜனங்கள் தங்கள் நோயிலிருந்து குணமாகாமலேயே இருக்கிறார்களே என்று சொன்னார்களாம். உடனே அந்த ஊழியக்காரர் சொன்ன பதில் சோப்பு தயாரிக்கும் தொழுற்சாலைகளில் வேலை செய்கிறவர்கள் அந்த சோப்புகளின் மத்தியில் வேலை செய்வதினால் தானாகவே சுத்தமாகிவிடுவார்களோ இல்லவே இல்லை மாறாக அந்த சோப்பை எடுத்து தன்னுடைய சரீரத்தில் பயன்படுத்தும் போதே அதினுடைய தரம் நமக்கு புரிய வருகிறது. இதே போலத்தான் நாமும் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை எடுத்து நம்முடைய சரீரத்தில் பயன்படுத்தும் போது மட்டுமே சுகத்தை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான அர்த்தம் என்னவென்றால் நாம் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு அவருடைய பிள்ளையாக மாறும் போது மட்டுமே இந்த விடுதலை நமக்கு கிடைக்கிறது என்கிறதான விஷயத்தை மறந்து போக வேண்டாம்.

4.நான்காவது பிசின் தைலம்: தேவனுடைய ஆவி

வேதம் சொல்லுகிறது, கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என் மேல் இருக்கிறார், இருதயம் நொருங்குண்டவர்களுக்குக் காயங் கட்டுதலையும் சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும் கட்டுண்டவர்ளுக்கு கட்டவிழ்த்தலையும் கூறவும் ஏசாயா 61:1

தேவனுடைய ஆவியாகிய பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது என்பதை மறக்க வேண்டாம். இத்தகைய காரியத்தை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு தெளிவாக சுவிசேஷங்களில் தெளிவுப்படுத்தியிருக்கிறார். அவர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட பிறகே அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்யத் தொடங்கினார் என்று வாசிக்கிறோம். மேலும் இத்தகைய காரியத்தை உறுதிச் செய்வதை நம்மால் பின்வருமாறு காணலாம். வேதம் சொல்லுகிறது,

அந்த ஆவியினாலேயே [ பரிசுத்த ஆவி ] குணமாக்கும் வரங்களும் [ 1கொரி 12:9 ] அதாவது பரிசுத்த ஆவி நமக்குள் இருக்கும் போது மட்டுமே இந்த குணமாக்கும் வரம் கிரியை செய்கிறது என்று பார்க்கிறோம். இத்தகைய காரியத்தை ஒரு சிறிய உதாரணத்துடன் பார்க்கலாம்.

பாருங்கள் அப்.பேதுருவும் மற்ற சீஷர்களும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு சுற்றிக் கொண்டிருக்கிற வேளையில் ஒரு மனுஷன் ஊமையும் செவிட்டுமான ஆவி பிடித்த தன்னுடைய மகனை இயேசுவின் சீஷனாகிய பேதுருவிடம் கொண்டுவந்து குணமாக்கும்படி விரும்புகிறார். ஆனால் என்ன நடந்தது, பேதுருவால் அந்த மகனை குணப்படுத்த முடியாமல் போய் விடுகிறது. இத்தகைய காரியத்தை இயேசுவும் கடிந்து கொள்கிறார். ஆனால் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளுக்குப் பின் அவர் பரலோகம் செல்லும் போது பேதுருவிடம் சொன்ன ஒரு காரியம் நீ எருசலேமில் காத்திரு அப்பொழுது உன்னதத்தின் பெலத்தினால் நிரப்பப்படுவாய் அதற்கு பின் எனக்கு சாட்சிகளாய் மாறுவீர்கள் என்பதாக.

பேதுருவும் அவனோடுகூட இருந்தவர்களும் எருசலேமில் ஒருமனதோடு மேல் வீட்டு அறையில் காத்திருந்து பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்கிறார்கள் இதன்பின்பு என்ன நடந்தது, வேதம் சொல்லுகிறது, ஜெப வேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள் அங்கே தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய் பிறந்த ஒரு மனுஷனைப் பார்க்கிறார்.

உடனே பேதுரு வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலே இல்லை ஆனால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எழுந்து நட என்று சொன்ன போது அந்த வார்த்தையை கேட்ட அந்த முடவன் எழுந்து நடந்து குதித்து தேவனைத் துதித்து கொண்டு தேவலாயத்திற்கு சென்றதை நம்மால் அப்போஸ்தலர் 3:1-8 வரை வாசிக்கும் போது பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை உணர முடிகிறது.

அனேகருக்கு சுகத்தைப் பெற்றுத் தர வேண்டும் என விரும்புகிற நாம் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் அப்பொழுது மாத்திரமே நாம் அற்புதத்தை செய்ய முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு அபிஷேகம் இல்லாதவர்கள் அபிஷேகத்திற்காக ஒவ்வொரு நாளும் தாகத்தோடு ஜெபியுங்கள்.

5.ஐந்தாவது பிசின் தைலம்: தேவ அன்பு

வேதம் சொல்லுகிறது, நிறைவானது வரும் போது குறைவானது ஒழிந்து போம் 1கொரி 13:10

தேவனாகிய இயேசு கிறிஸ்து திரளான ஜனங்களைக் கண்ட போது அதாவது அவர்கள் பலவிதமான பிரச்சனைகளினாலும் பலவிதமான தேவைகளுடனும் மற்றும் சரியான மேய்ப்பன் இல்லாததினால் இங்கு அங்கும் சிதறடிக்கப்பட்டு இருப்பதையும் பார்த்து அவர்கள் மேல் மனதுருகினார் என்று வேதம் நமக்கு மத்தேயு 9:35,36 ல் சொல்வதைப் பார்க்க முடிகிறது. அன்பினால் ஒருவருடைய நோய் எப்படி குணமாகும் என்று நீங்கள் கேட்பீர்களானால் ஒரு காரியத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எங்கள் பாட்டி மிகவும் படுத்த படிக்கையாய் மாறினார்கள் அப்பொழுது அவர்கள் நேசித்த தன்னுடைய பேரப் பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். நாங்களும் அவரைப் போய் பார்த்தோம். பாருங்கள் வியாதியாய் இருந்த எங்கள் பாட்டி உடனே பெலன் பெற்று எழுந்து உட்கார்ந்தார்கள். இந்த இடத்திலே அன்பே இவர்களை குணமாக்கிற்று என்று சொன்னால் அது மிகையாகாது என்பதை மறந்து விடாதீர். பாருங்கள் மரித்த போன பிறகும் லாசரு மரணம் என்கிற வியாதிலிருந்து குணப்பட்டு உயிரோடு வருவதற்குக் காரணம் என்னவென்று பாருங்கள். வேதம் சொல்லுகிறது

லாசருவின் மரணத்தைக் கேட்டவுடனே அந்த இடத்தில் நின்று, இயேசு கண்ணீர் விடுகிறார். அப்பொழுது யூதர்கள் இதோ இவர் அவனை எவ்வளவாய்ச் சினேகித்தார் என்றார்கள் [ யோவான் 11:24,35,36 ] லாசருவின் மேல் வைக்கப்பட்ட இயேசுவின் அன்பே அவனை உயிரோடு எழுப்பிற்று என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆகவே தெய்வீக அன்பை அதாவது இயேசுவின் அன்பை தரித்து கொள்ளுங்கள் அப்பொழுது நம்முடைய நோய் மட்டுமல்லாமல் அனேகருடைய நோய்களையும் குணமாக்க முடியும்.

6.ஆறாவது பிசின் தைலம்: தேவனுடைய பரிசுத்தம்

வேதம் சொல்லுகிறதுஇயேசு கிறிஸ்து திமிர்வாதக்காரனை நோக்கி மகனே திடன் கொள் உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார் மத்தேயு 9:2 [ பிப ]

நாம் ஒரு காரியத்தை புரிந்து கொள்ள வேண்டும் எப்படியென்றால் சில நோய்கள் நம்முடைய பாவத்தினிமித்தமே உண்டாகிறது என்பதை மறக்க வேணடாம் அதாவது நம்மிடம் தேவன் எதிர்பார்க்கிற பரிசுத்தம் இல்லாததே இதற்குக் காரணம் ஆகும். ஆகவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அந்த மனுஷனைக் குணமாக்கி விட்டு பிறகு அவனைப் பார்த்து சொன்னது நீ இனிமேல் பாவம் செய்யாமல் பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்பதாக.

நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால் நாம் எப்பொழுதும் தேவனோடு சஞ்சரிக்க வேண்டும் தேவனோடு எப்பொழுதும் சஞ்சரிக்க வேண்டுமானால் நமக்கு பரிசுத்த வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது எப்படியென்றால்

பரிசுத்தமில்லாமல் கர்த்தரை ஒருவனும் தரிசிப்பதில்லையே [ எபிரெயர் 12:14 பிப் ]

உசியா ராஜாவைப் பற்றி எல்லாருக்கும் நன்றாக தெரிந்திருக்கும் என நினைக்கிறேன் பாருங்கள் அவன் மேட்டிமையடைந்து, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின் மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.

இதனால் கோபமடைந்த கர்த்தர் அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகத்தை கட்டளையிட்டார் ஏனென்றால் பரிசுத்தத்துடன் ஆசாரியர்கள் செய்ய வேண்டிய காரியத்தை பரிசுத்த குலைச்சலாக்கினப் படியினால் உசியா குஷ்டரோகம் என்கிற நோயைப் பெற்றுக் கொண்டான் என்பதை 11 நாளா 26:16 20 வரை வாசிக்கும் போது மேலே சொல்லப்பட்ட காரியத்தை நாம் உறுதி செய்ய முடிகிறது.

தேவனுடைய பரிசுத்தம் இருக்குமானால் பிசாசு மூலம் கொண்டுவரப்படுகிற எந்த வியாதியிலிருந்தும் குணமாகி விட முடியும் என்பதை யோபின் சரித்திரத்தை வாசிக்கும் போது அறிந்து கொள்கிறோம்.

எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே வேதத்தில் சொல்லப்பட்ட இந்த மகத்தான பிசின் தைலங்களை எடுத்துக் கொண்டு உங்களுடைய வாழ்க்கையில் பயன்படுத்துங்கள் அப்பொழுது எப்படிப்பட்ட நோயாக இருந்தாலும் அது உடனே குணமாகிவிடும் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை என்று வேதம் நமக்கு சொல்லுகிறது.

பாருங்கள், கர்த்தர் சொல்லுகிறார்,

நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து அவர் கட்டளைகளுக்குச் செவி கொடுத்து அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால் நான் எகிப்தியருக்கு வரப் பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்.

நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார் -    யாத்திரகாமம் 15:26.