Tamil Christian Website

Tamil Christian Website

Posted On: 09/10/2014

தேவனாகிய இயேசு கிறிஸ்து உண்டாக்கிய பேழை

[இரட்சிப்பின் பேழை]

இந்த பேழையின் மூலம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை விளக்க விரும்புகிறேன்.

இந்த பேழை இல்லாமல் நாம் ஒருபோதும் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை மறக்க வேண்டாம். ஏனென்றால் வேதம் சொல்லுகிறது இயேசு கிறிஸ்துவின் சொல் கேளாதவன் எவனோ அவன் அழிவுக்குத் தன்னை ஆயத்தப்படுத்துகிறான் என்பதை நாம் நோவாவின் வாழ்க்கையை குறித்து வாசிக்கும் போது அறிய முடிகிறது.

மறக்க வேண்டாம், ஒரு தடவை நாம் இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டால் பரலோகம் சென்றுவிடலாம் என்று கனவு காண வேண்டாம், ஏனென்றால் வேதம் சொல்லுகிறது,

முடிவு பரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான் என்று நாம் மத் 24:13 மற்றும் மாற்கு 13:13 ல் வாசிக்கிறோம், ஆகவே நம்முடைய பேழை எந்த ஒரு சூழ்நிலையிலும் மூழ்காமல் இருக்க வேண்டுமானால் நாம் பின்வருமாறு நம்முடைய பேழையை அமைப்போமாக.

பேழையைக் கட்டும்படி உங்களை அழைத்துச் செல்கிறேன்.

பேழையை அமைக்க வேண்டிய அதாவது உருவாக்க வேண்டிய விதம்

1.பேழை கொப்பேர் மரத்தில் செய்யப்பட வேண்டும்.

2.பேழையில் அறைகள் இருக்க வேண்டும்

3.பேழையில் உள்ளும் புறமும் கீழ் பூசியிருக்க வேண்டும்

4.பேழையின் நீளம் 300, அகலம் 50 மற்றும் உயரம் 30 முழமாக இருக்க வேண்டும்.

5.பேழையில் ஜன்னல் இருக்க வேண்டும் ஆதியாகமம் 6:14:22

முன்னுரை:

இதோ, அன்று நோவா வாழ்ந்த காலத்தில் அக்கிரமம் தலை விரித்தாடியது, தேவன் அழகாக படைத்த உலகத்தை மனுஷர்கள் அசுத்தப்படுத்திக் கொண்டேயிருந்தனர், ஆனால் தேவனோ எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு பொறுமையாக இருந்தார் ஆனால் ஒருநாள் இவர்களுடைய பாவப் பாத்திரம் நிரம்பி வழிந்து அவைகள் தேவனுடைய நகரத்துக்குப் பாயத் தொடங்கியது. ஆனால் இதை அறிந்த தேவன் உடனடியாக அவர்களை அழிக்க முடிவு எடுக்க வில்லை. மாறாக தனக்குப் பிரியமான மனுஷனாகிய நோவாவையும் அவருடன் சேர்ந்த கூட்டத்தையும் காப்பாற்ற விரும்பினார். அதற்காக தேவன் ஒரு பேழையை உருவாக்கும்படி கட்டளை கொடுத்தார், ஆனால் இந்த பேழையை கட்டி முடிக்க அநேக வருஷங்களை தேவன் நோவாவுக்கு கொடுத்தார். பாருங்கள் ஒரு நொடியில் இந்த பேழையை உருவாக்க தேவனால் நோவாவுக்கு பெலன் கொடுக்க முடியும், ஆனால் அப்படி செய்யாமல் அத்தகைய காரியத்தை அனேக நாள்கள் எடுத்து செய்யும் படிச் செய்தார், எதற்காகவென்றால் அந்த பாவ ஜனங்கள் மனம் மாறி தங்கள் பேழையை தமக்காக [தேவனுக்காக] மாற்றிக் கொள்வார்கள் என்று நினைத்தே அவர் அப்படிச் செய்தார் ஆனால் அவர்களோ தங்கள் பேழையை தேவனுக்குப் பிரியமாய் உருவாக்காமல் உலகத்துக்குப் பிரியமாகவே இன்னும் மாற்றிக் கொண்டே இருந்தனர், இதன் நிமித்தம் அவர்களுடைய பலவீனமான பேழை தண்ணீரில் மூழ்கியது ஆனால் தேவனுடைய விருப்பப்படிச் செய்த நோவாவின் பேழையோ அரராத் மலையை எட்டியது அதாவது பாதுகாப்பான இடத்தை அடைந்தது அதாவது அரராத் என்கிற தேவனுடைய ஸ்தலத்தை எட்டியது, நம்முடைய பேழையும் அரராத் என்னும் தேவனுடைய ஸ்தலத்தை எட்ட வேண்டுமானால் இதோ மேலே சொல்லப்பட்ட 5 பாகங்களை எடுத்து நம்முடைய பேழையை செய்வோமாக.

1.முதல் பாகம்: பேழை கொப்பேர் மரத்தால் செய்யப்பட வேண்டும்

ஏன் தேவன் பேழையை கொப்பேர் மரத்தினால் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார், ஏனென்றால் அது மிகவும் உறுதியான மரமாய் இருந்திருக்கலாம், ஆகவேதான் தேவன் குறிப்பாக கொப்பேர் என்கிற பெயரை தம்முடைய தாசனாகிய நோவாவுக்குக் காண்பித்தார். ஆனால் ஒரு காரியத்தை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தேவனுடைய வல்லமை உறுதியில்லாததை உறுதியாகயும், உறுதியாயிருப்பதை உறுதியில்லாததாகவும் மாற்ற முடியும் என்பதை மறக்க வேண்டாம் [1கொரி 1:24-28] இந்த கொப்பேர் மூலம் தேவ ஆவியானவர் வெளிப்படுத்தும் காரியம் என்னவென்றால்,

நம்முடைய பேழை இரட்சிப்பு என்கிற கொப்பேர் மரத்தினால் கட்டப்பட வேண்டும், அப்படியில்லாத பட்சத்தில் இந்த பேழை தேவனுடைய கோபத்தின் அழிவிலோ அல்லது பிசாசினுடைய தந்திரத்தினாலோ மூழ்கி, தேவனுடைய ராஜ்ஜியத்தை எட்டாமல் போய்விடும் என்று யோவான் 3:4-5 நமக்கு வெளிப்படுத்துகிறது. இந்த வசனத்தின் அர்த்தம் என்னவென்றால் ஒருவன் தன்னுடைய பேழையை ஜலத்தினாலும் ஆவியினாலும் கட்டவேண்டும். ஏன் ஜலம் என்றால் ஜலத்தின் மூலமாக நாம் தேவனுடைய பிள்ளைகள் என்கிற தகுதியைப் பெறுகிறோம் [ யோவான் 1:12 ] பிறகு ஆவியின் மூலமாக நம்முடைய பாவங்கள் அழிக்கப்பட்டு நாம் நீதிமான்கள் என்கிற பட்டத்தை பெறுகிறோம். அதாவது ஜலத்தின் மூலமாக நம்முடைய பாவ மனுஷன் சாகடிக்கப் பட்டு ஆவியின் மூலம் நாம் புதுபிக்கப்படுகிறோம் என்று வேதம் சொல்லுகிறது.

இந்த ஆவியின் பலத்தின் மூலமாகத்தான் நாம் கடைசி வரைக்கும் பேழையை பத்திரமாக பாதுகாக்க முடியும், அதுமட்டுமல்லாமல் நாம் தேவனுடைய வேலைக்காக இந்த உலகத்தில் ஓட முடியும், பாருங்கள் இத்தகைய காரியத்தை ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்தில் மனுஷகுமாரனாய் வந்த போது நமக்குச் சொல்லித் தருவதை நாம் பார்க்க முடிகிறது. எப்படியென்றால், வேதம் சொல்லுகிறது அவர் ஜலத்தினால் ஞானஸ்நானம் எடுத்தவுடனே தன்னுடைய வேலையை செய்யத் தொடங்கவில்லை, மாறாக அவர் பரிசுத்த ஆவியினால் எப்பொழுது நிரப்பப்பட்டாரோ அதன்பிறகுதான் தன்னுடைய  வேலையை அதாவது அதிசயங்களையும் அற்புதங்களையும் பிசாசுகளைத் துரத்தவும் செய்தார் என்று வேதம் நமக்கு காட்டுவதை நாம் மத், மாற், லூக், யோவான் சுவிசேஷங்களைப் படிக்கும் போது அறிய முடிகிறது.

ஆகவே ஞானஸ்நானம் பெற்றால் மட்டும் போதாது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த அபிஷேகத்தை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இத்தகைய காரியத்தை நாம் தாவீது ராஜா எழுதின சங்கீதத்தின் மூலம் அறிய முடிகிறது, எப்படியென்றால் அவர் சொல்லுகிறார்,

புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன் சங் 92:10

அதாவது, தன்னுடைய ஆவிக்குரிய பேழையை மேலும் மேலும் உறுதிப்படுத்தவே அவர் இப்படியாக தேவனிடம் கேட்கிறார். நாமும் இதேபோல் அதாவது மேலே சொல்லப்பட்ட எல்லாமே நம்முடைய வாழ்க்கையில் காணப்பட்டாலொழிய மாத்திரமே நாம் சபையை மற்றும் விசுவாசிகளை பலப்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல் திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்க முடியும். அத்துடன் அநேகரை தேவனாகிய இயேசுவுக்குள் நடத்த முடியும் என்று சொல்லிக் கொள்கிறேன்.

2.இரண்டாவது பாகம்: பேழையில் அறைகள் இருக்க வேண்டும்

இன்று அநேகர் ஒரே ஒரு அறைக்குள் தன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருவதை நாம் பார்க்கமுடிகிறது, ஏன் இப்படி நடக்கிறது என்றால் அவர்கள் தாங்கள் வாங்கின தாலந்தை மற்றவர்களுக்காக செலவழிக்க முன்வருவதில்லை. சில நேரங்களில் அவர்கள் இப்படியாக நினைப்பதுண்டு, இந்த தாலந்து நம்முடைய வீட்டிலே மட்டும் இருக்க வேண்டும், மற்றவர்களுக்கு போய்விடக் கூடாது, இதனிமித்தம் தனக்கு இருக்கிற அறையையும் இழக்க நேரிடும் என்பதை அவர்கள் இன்னும் அறியாமலேயே இருக்கிறார்கள். அது என்ன ஒரு அறைக்குள் வாழ்க்கை அதாவது எப்பொழுதும் தன்னை நீதிமானாகவும் தன்னுடைய குடும்பத்தை மாத்திரம் எப்பொழுதும் பெருமையாக பேசுகிறவர்களாகவும் காணப்படுகிறார்களே தவிர உலகத்தின் பிற ஆடுகளைப் பற்றி கவலையே இல்லாதவர்களாய் காணப்படுகிறார்கள். சபையில் இவர்களுடைய சாட்சியை மாத்திரம் பார்க்க முடிகிறது தவிர வேறு ஆடுகளை இவர்கள் தங்களுடைய அறைக்குள் கொண்டு வந்ததாக எந்த ஒரு சாட்சியையும் இவர்களுடைய வாழ்க்கையில் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் இவர்களுக்கு அனேக அறைகள் இல்லாததே காரணம் என்று சொல்லிக் கொள்கிறேன். பாருங்கள் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்தும் நீதிமான்களை மாத்திரம் பார்த்திருந்தால் இந்த உலகம் எப்படி இரட்சிக்கப்பட்டிருக்கும். வேதம் சொல்லுகிறது நாம் பாவிகளாயிருக்கையில் அவர் தம்முடைய உயிரை இந்த உலகத்திற்காக அர்ப்பணித்தார் என்று வேதம் சொல்லுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர் அப்.பவுலைக் கொண்டு இப்படியாக எழுதுகிறார், அதுஎன்னவென்றால்,

எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். என்று 1தீமோ 2:4 நமக்கு காண்பிக்கிறது. தேவன் நமக்கு ஒரு இரட்சிப்பின் அறையை கொடுத்தது எதற்காகவென்றால் இதன்மூலம் நாம் அனேக இரட்சிப்பின் அறைகளை உண்டு பண்ணவேண்டும் என்பதற்காகத்தான் என்பதை மறக்க வேண்டாம்.

பாருங்கள் ஆண்டவர் நோவாவுக்கு ஒரே ஒரு அறையைத்தான் கொடுத்தார் ஆனால் நோவா தன்னுடன் சேர்த்து அநேகர் இரட்சிக்கும்படியாக அறைகளை உண்டுபண்ணினார் என்பதை நாம் வேதத்தில் பார்க்கிறோம். இது எப்பொழுது முடியும், வேதம் சொல்லுகிறது

நோவா என்கிற மனுஷன், ஒவ்வொரு நாளும் தேவனோடு சஞ்சரித்தான், தேவன் சொன்ன காரியம் நம்ப முடியாததாக இருந்த போதிலும் அதை விசுவாசத்துடன் ஏற்றுக் கொண்டார். தேவனுடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்தார். உலக ஜனங்களின் கேலிப் பேச்சைப் பற்றி அவர் சிறிதும் கவலைப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் அவர் தன்னை மட்டும் பற்றிக் கவலைப்படாமல் அனேக ஜனங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர் பொறுமையின் சுவிசேஷத்தை வெளிப்படுத்தினார்.

இப்படியாக தன்னுடைய அறையை மாற்றிக் கொண்ட நோவாவுக்கு தேவன் இன்னும் தாலந்துகளை கொடுக்காமல் எப்படி இருப்பார் என்பதை சிந்தித்து பாருங்கள்.

நாமும் நோவாவைப் போல வாழ்ந்தால் அதாவது தேவனோடு சஞ்சரித்தால் நம்முடைய ஒரு அறை கொண்ட வீடு அநேகர் வசிக்கும் பல அறைகளை கொண்ட வீடாக மாறும் என்பதில் சந்தேகமேயில்லை என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்.

3.மூன்றாவது பாகம்: பேழையில் உள்ளும் புறமும் கீழ் பூசியிருக்க வேண்டும்

இன்று அநேகருடைய வீடுகளைப் பார்ப்பீர்களானால் அவைகள் சரியாக கட்டப்படாமல், அனேக துவாரங்களும் மற்றும் இன்னும் அனேக குறைபாடுகளும் இருப்பதை நாம் பார்க்கிறோம். இந்த துவாரத்தின் வழியாக தேவையில்லாதவைகள் நுழைந்து வீட்டை சேதப்படுத்துவதை நாம் பார்க்க முடிகிறது. சில நேரங்களில் வீடானது உடைந்து போகும் அபாய நிலைக்குச் செல்வதையும் நம்மால் பார்க்க முடிகிறது, ஏனென்றால் இந்த வீடு தரமான முறையில் கட்டப்படாததே காரணம் என்பதை முதலில் அறிய வேண்டும். ஆகவேதான் வீட்டைக் கட்டும் போது அதற்கு கொடுக்கப்பட்ட வரைப்படத்துடன் தகுந்த ஆளைக் கொண்டுதான் வீட்டைக் கட்ட வேண்டும்.

இதேபோலத்தான் நம்முடைய ஆவிக்குரிய வீடும் சரியாக கட்டப்படவில்லை என்றால் நம்முடைய முந்தின நிலைமையைப் பார்க்கிலும் பிந்தின நிலைமை அதிகக் கேடாக இருக்கும் என்று வேதம் சொல்லுகிறது. ஆகவேதான் அப்.பவுல் சொல்லுகிறார்,

நம்முடைய அஸ்திபாரம் இயேசு கிறிஸ்து என்கிற கல்லின் மேல் இருக்க வேண்டும். அதன் மேலே நம்முடைய வீட்டைக் கட்டும் போது மட்டுமே நாம் நிலைத்திருக்க முடியும். அப்படியென்றால் இந்த கல்லின் விசேஷம் என்ன வேதம் சொல்லுகிறது, இந்த கல் மிகவும் சோதிக்கப்பட்டு கடைசியில் இந்த கல்லுக்கு தேவனால் அக்மார்க் முத்திரை கொடுக்கப்பட்டது.[ இந்த அக்மார்க் முத்திரையை உலகத்தோடு ஒப்பிடாதீர் ] அதாவது இந்த கல்லே உலகத்தில் மிகச்சிறந்த கல் என்று ஏசாயா 28:16ஐ வாசிக்கும் போது அறிந்து கொள்ள முடிகிறது.

ஆகவே நம்முடைய வீட்டை இயேசு என்கிற கல்லின் மேல் எழுப்பி வீட்டை சுற்றிலும் உள்ளும் புறமும் இயேசு கிறிஸ்துவின் கற்பனைகளாலும், கட்டளைகளாலும் கீழ் பூச வேண்டும். பாருங்கள் தேவன் ஆதாமுக்கு ஏதேன் என்கிற வீட்டைக் கொடுத்தது மாத்திரமல்ல அதைச்சுற்றிலும் வேலியடைத்துப் பாதுகாக்கச் சொன்னார் என்று வேதத்தில் பார்க்கிறோம். ஆனால் இதன் வெளிப்பாடு என்னவென்றால் தேவன் ஆதாம் என்கிற வீடு அதாவது அவனுடைய சரீரம் திறந்து கிடப்பதைப் பார்க்கிறார் ஆகவேதான் அதைச் சுற்றிலும் கீழ்ப்பூச வேண்டிய அவசியத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார்.

இன்று அனேகர் தங்களுடைய வீட்டை சுற்றிலும் பலவிதமான பாதுகாப்பை வைத்திருக்கிறார்களே தவிர தங்களுடைய சரீரமாகிய வீட்டை கீழ்ப்பூச மறந்து விடுகிறார்கள். இதன் நிமித்தமாக பிசாசானவன் இந்த வீட்டை இடித்து தரைமட்டமாக மாற்றிவிடுவதை நாம் அனேகருடைய வாழ்க்கையில் பார்க்க முடிகிறது. ஆகவேதான் தேவன் சொல்லுகிறார் பாதுகாக்க வேண்டியது உங்களுடைய அழிந்து போகிற வீட்டையல்ல என்றென்றும் அழியாமல் இருக்க வேண்டிய நம்முடைய சரீரமாகிய வீட்டையே அவர் அனேக இடங்களில் சுட்டிக் காட்டுகிறார். நம்முடைய வீட்டை எப்படி கீழ் பூச வேண்டுமென்றால்,

1.பரிசுத்தத்தின் மூலம்

2.எப்பொழுதும் ஜெபம்

3.உபவாசம்

4.ஸ்தோத்திரம் [ துதி ]

5.அன்பு

6.கீழ்ப்படிதல்

7.தேவனுடைய வார்த்தை, இவைகள் எல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் நடக்க வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய வீட்டில் எந்த துவாரமும் உண்டாகாது என்று அப்.பவுல் தன்னுடைய நிரூபங்களில் விளக்கியுள்ளார்.

இப்படிப்பட்டவர்களுக்கே தேவன் சொல்லுகிறார்,

வெள்ளம் போல் சத்துரு வரும் போது கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார் என்று ஏசாயா 59:19 [பிப] எழுதிவைத்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

4.நான்காவது பாகம்: பேழையின் நீளம் 300, அகலம் 50 மற்றும் உயரம் 30 முழமும் இருக்க வேண்டும்

தேவன் நோவாவைப் பார்த்து நீ எப்படி வேண்டுமானாலும் பேழையை அமைத்துக் கொள்ளலாம் என்று சொல்லவில்லை, தேவன் சொன்னார் பேழையின் நீளம் 300 முழமும் அகலம் 50 முழமும் மற்றும் உயரம் 30 முழமும் இருக்க வேண்டும் என்று சொன்னதாக நாம் ஆதி 6:15 ல் வாசிக்கிறோம். அப்படியென்றால் இதில் எந்த அளவையும் கூட்டவோ அல்லது குறைக்கவோ கூடாது என்பது தான் அர்த்தம். வேதமும் அப்படியே சொல்லுகிறது,

அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே கூட்டினால் அவர் உன்னைக் கடிந்து கொள்வார், நீ பொய்யனாவாய் என்று நீதி 30:6 லும் ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால் ஜீவபுஸ்தகத்திலிருந்தும் பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும் அவனுடைய பங்கைத் தேவன் எடுத்துப் போடுவார் என்று வெளி 22:19 லும் நாம் வாசித்து மேலே சொல்லப்பட்ட அளவு எந்த விதத்திலும் மறக்கக் கூடாது என்பதை நாம் அறிய முடிகிறது.

ஆகவேதான் அப்.பவுல் சொல்லுகிறார் முன்பு என்னுடைய அளவின்படியே இந்த சரீரத்தைக் கட்டிக் கொண்டு வந்தேன். ஆகவே அது சரியாக வராமல் கோணலாக இருந்தது ஆனால் இப்பொழுதோ நான் இயேசு கிறிஸ்துவின் அளவின்படியே நான் என்னுடைய சரீரத்தை கட்டி வருகிறேன், ஏனென்றால் என்னுடைய கட்டடத்தை கட்டும் பணி என்னிடத்திலிருந்து தேவனிடத்திற்கு கைமாற்றம் செய்யப்பட்டது என்பதை நாம் அப்.பவுல் எழுதின பல நிரூபங்களின் வழியாக பார்க்க முடிகிறது.

நாமும் நம்முடைய ஆவிக்குரிய வீட்டை இந்த அளவின்படியே அதாவது 300 முழ நீளமுள்ள தேவ அன்பினாலும், 50 முழ அகலமுள்ள விசுவாசத்தினாலும், 30 முழ உயரமுள்ள பரிசுத்தத்தாலும் கட்ட வேண்டும். அதாவது 300 முழ நீளமுள்ள கற்பனையின் மூலமும் 50 முழ அகலமுள்ள கட்டளையின் மூலமும் மற்றும் 30 முழ உயரமுள்ள பிரமாணம் மூலமும் கட்ட வேண்டும் என்பதே இதன் அர்த்தம். இந்த அளவின் படியே கட்டாமல் இதை மீறிகட்டும் போது நம்முடைய கட்டடம் இடிந்து போகிறது என்பதை நாம் வேதத்தின் மூலம் பார்க்க முடிகிறது.

ஆகவேதான் வேதம் சொல்லுகிறது,

கன்மலையின் மேல் கட்டப்பட்ட வீடு ஒருபோதும் இடிந்து போவதில்லை, ஏனென்றால் இந்த கன்மலை இயேசு கிறிஸ்துவே என்பதை மறக்க வேண்டாம். இந்த இயேசு கிறிஸ்துவுக்குள் எல்லா கற்பனைகளும் கட்டளைகளும் பிரமாணமும் அடங்கியிருக்கிறது என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.

இப்படியாக தன்னுடைய வீட்டைக் கட்டாத அதாவது இந்த அளவைத் தாண்டி கட்ட முயன்ற அனேக ராஜாக்களின் வீடுகள் இடிந்து தரமட்டமானதை நாம் வேதத்தில் பார்க்க முடிகிறது, [ இராஜாக்கள், நாளாகமம் படிக்கவும் ]

எனக்கு அருமையான ஜனங்களே,

தேவனிடத்தில் அன்பு செலுத்துகிறேன் என்று சொல்லுகிறவர்கள் தேவனுடைய கற்பனைகளை கைக்கொள்ள வேண்டும், அதாவது இந்த அளவின் நிறைவு நம்முடைய வாழ்க்கையில் இடம் பெற வேண்டும். அப்போதுதான் நாம் எதிரிகள் கொண்டு வருகிற பிரச்சனைகளில் மிதித்து நடக்க முடியும் என்பதை சொல்லிக் கொள்கிறேன், இன்று அனேகர் இந்த அளவின்படி கட்டாதநிமித்தம் அடிக்கடி தங்களுடைய வீட்டை இடிக்கும் சூழ்நிலை உலக மனிதர்கள் மூலம் உண்டாகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நோவாவின் வீடு இந்த அளவிற்குள் இருந்ததின் நிமித்தம் எந்த இடத்திலும் இடிப்படாமல் நித்திய ஜீவனை எட்டியது என்பதை எப்படி மறக்க முடியும்

5.ஐந்தாவது பாகம்: பேழையில் ஜன்னல் இருக்க வேண்டும்

எதற்காக இந்த ஜன்னல் பேழையில் இடம் பெற வேண்டும். வாசலையோ தேவன் அடைத்து விட்டு தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் அதன் திறவுகோலை வைத்திருந்தார், இதன் நிமித்தம் நோவாவால் தேவனுடைய கோபம் குறைந்து விட்டதா அல்லது தேவனின் கோபத்தின்  நிமித்தம் வந்த வெள்ளம் குறைந்து விட்டதா என்பதை எப்படி பார்க்க முடியும். ஆகவேதான் தேவன் இந்த ஜன்னலை வைக்க அனுமதிக் கொடுத்ததை நாம் பார்க்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல் ஜன்னலுடன் ஒரு அடைப்பையும் கொடுத்திருந்தார், ஏனென்றால் இந்த அடைப்பு இல்லை என்றால் தேவையில்லாதவைகள் எல்லாம் உள்ளே நுழைந்துவிடும் என்பதற்காக என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் இந்த ஜன்னல் ரொம்ப முக்கியமாய் தேவைப்படுகிறது ஏனென்றால் நம்முடைய வாசலை தட்டுகிறது தேவன்தானா என்பதை ஊர்ஜிதம் படுத்துவதற்காக, அதுமட்டுமல்லாமல் ஜன்னலுடன் அடைப்பையும் பொருத்திக் கொள்ள வேண்டும். அனேகருடைய வாழ்க்கையில் இந்த ஜன்னல் உண்டு ஆனால் அடைப்பு இல்லை. ஆகவே ஒரு வாசல் வழியாக தேவன் வருவதும், ஜன்னல் வழியாக பிசாசு வருவதுமாக இருக்கிறது, ஆகவே அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கை அடிக்கடி சோர்வுக்குள் போவதை நாம் பார்க்க முடிகிறது. சிலர் சொல்லுவார்கள் நாங்கள் எவ்வளவு ஜெபம் பண்ணினாலும் அடுத்த நேரமே சோர்ந்து போகிறோம். அதற்கு காரணம் அந்த வீட்டில் சரியான ஜன்னல்கள் இல்லை. இன்னும் சிலருடைய வீட்டிலே இந்த ஆவிக்குரிய வெளிச்சம் இல்லாத நிமித்தமாக வாசல் வழியாக அடைக்கப்பட்ட உலகமும், மாமிசமும் சேர்ந்து அவர்களை மூச்சு திணறச் செய்து சாகடிப்பதை நாம் பார்க்க முடிகிறது. ஆகவேதான் அப்.பவுல் சொல்லுகிறார்

திருவசனம் செல்லும்படியான வாசலைத் தேவன் திறந்தருளும் படி எங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள் என்று, கொலோ 4:4ல் நமக்கு சொல்லுவதை அறியலாம்.

ஏன் அவர் ஒரு வாசல் திறக்கப்பட வேண்டும் என்று சொல்லுகிறார்? அப்படியென்றால் இவர்களிடம் வாசல் இல்லவே இல்லையா? ஒரு காரியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களுடைய வீட்டில் வாசல் உண்டு. ஒருவேளை அந்த வீட்டின் வாசல் வழியாக நியாயப்பிரமாணமும், உலகத்தைச் சார்ந்ததான வழிபாடுகளும் நிறைந்து போய் காணப்பட்டிருக்கலாம், ஆகவே இதை நன்றாக உணர்ந்த அப்.பவுல் இனிமேல் இந்த வாசல் வழியாக நாம் நுழைய முடியாது, அதாவது இயேசு கிறிஸ்து என்கிற சத்தியத்தை கொண்டு செல்ல முடியாது, ஆகவேதான் அவருக்கு ஒரு வழி தேவைப்பட்டது அதாவது ஒரு ஜன்னல் அந்த ஜனங்களுக்குள் உருவாகும்படியாக வேண்டிக்கொண்டார்.

ஜன்னல் நம்முடைய வீட்டில் இல்லையென்றால் அதை இப்பொழுதே தேவனாகிய இயேசுவிடம் கேளுங்கள் எப்படியென்றால் அன்று ஒரு ஜன்னலை உருவாக்க நோவா பேழையில் ஒரு சிறிய பாகத்தை உடைக்க வேண்டியதாயிருந்திருக்கும், அதே போலத்தான் நம்முடைய ஆவிக்குரிய வீட்டின் இருதமும் உடைந்தே ஆக வேண்டும். அதற்குத் தேவையான கருவிகள்

1.சத்தியத்தை உண்மையாக அறிய வேண்டும்

2.சத்தியத்தை கிரியைகளில் காண்பிக்க வேண்டும்

3.புதிய புதிய அபிஷேகத்தைப் பெற்று கொள்ள வேண்டும்

4.ஆவிக்குரிய பிள்ளைகளுடன் ஐக்கியம் இருக்க வேண்டும்

5.தேவன் மேல் தாகமாயிருக்க வேண்டும்

6.மாமிசத்தில் எந்த காரியத்தையும் யோசிக்க கூடாது

7.எந்த மனுஷரையும் குறை சொல்லக்கூடாது

8.ஆவிக்குரிய மனுஷர்களின் செய்திகளை கேட்க வேண்டும்

9.தேவனுடைய வார்த்தையை நன்றாக சாப்பிட வேண்டும்.

10.உலகத்தை மறக்க வேண்டும்

11.நம்முடைய சாட்சி எப்பொழுதும் ஆவிக்குரிய சாட்சியாக இருக்க வேண்டும்

12.பிசாசுக்கு எதிர்த்து நிற்க வேண்டும்

13.எல்லாவற்றிலும் தேவனுடைய வார்த்தையை மாத்திரம் வேச வேண்டும்

14.அதிக நேரத்தை தேவனுடன் செலவிட வேண்டும்

இப்படியாக செய்வோமானால் தேவன் நிச்சயமாக தன்னுடைய காற்றை சுவாசிக்க ஒரு ஜன்னலை உருவாக்கித் தருவார் என்பதில் சந்தேகமேயில்லை என்பதை மறக்க வேண்டாம்.

எனக்கு அருமையான விசுவாசிகளே

தேவனுடைய வருகைக்குக் காத்திருக்கிறேன் என்று சொல்லுகிற நீங்களும் நானும் இப்படிப்பட்ட பேழையை உருவாக்கி வைத்திருக்கிறோமா அல்லது உருவாக்கிக் கொண்டிருக்கிறோமா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

அன்று தேவன் சொன்னபடியே பேழையை அமைத்ததால் நோவாவும் அவருடைய குடும்பமும் அரராத் என்கிற தேவனுடைய கோட்டையை அடைந்தது. இப்படியாக நாமும் நம்முடைய பேழையை செய்வோமானால் தேவன் ஊற்றுகிற அபிஷேகம் என்கிற தண்ணீரினால் நாம் பரம எருசலேமை நிச்சயமாக அடைந்துவிடுவோம் என்று விசுவாசமாய் சொல்லிக் கொள்கிறேன்.

நம்முடைய பேழையை இப்படியாக மாற்றுவோம் ஏனென்றால் உலகத்தில் நடக்கிற காரியங்களை நாம் பார்க்கும் போது தேவனாகிய இயேசுவின் வருகை மிக சீக்கிரமாய் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

வேதம் சொல்லுகிறது,

நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள் எபேசியர் 5:16

தேவன் தாமே இந்த பேழையின் மூலம் நம்மை ஆசீர்வதிப்பாராக.

- சகோ. எட்வின் (சோஹார்)